உமது ஆத்மாவை விளித்து உபதேசிக்கிறேன்

உமது ஆத்மாவை விளித்து உபதேசிக்கிறேன்

 
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள், இமாம் அலீ அலைஹிஸ் ஸலாம் அவர்களைப் பார்த்து, ‘அலீயே! உமது ஆத்மாவை விளித்து உமக்கு நான் உபதேசிக்கிறேன். அவைகளை எனது அன்பளிப்பாகப் பாதுகாத்துக் கொள்வீராக!. இறைவன் அதற்கு உதவி புரிவானாக! அதில் முதன்மையானது உண்மையை உரைப்பதாகும். உமது வாயிலிருந்து ஒரு போதும் பொய் வரவே கூடாது’ என்று நல்லுபதேசம் புரிந்தார்கள்.
(அல்-காபி, பாகம் 8, பக்கம் 79)
முதலாவது, இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வஸிய்யத் என்பதை மனங்கொள்ள வேண்டும். இரண்டாவது, இது இமாம் அலீ (அலை) அவர்களுக்குக் கூறப்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இதிலிருந்து நாம் மிகவும் பாரியதொரு நிலையிலான படிப்பினைகளையும், வாழ்க்கைக்கான வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
நபியவர்கள் இந்த அறிவிப்பின் மூலம் முதலாவதாக இமாம் அலீ (அலை) அவர்களுக்குப் புரிந்திருக்கும் உபதேசம் ‘உண்மையை உரைப்பது’ பற்றியதாகும். அதேபோல் எவ்வித பொய்யும் வாயிலிருந்து வரக்கூடாது என்பதும் அந்த உபதேசமாகும். இதிலிருந்து விளங்குவது என்னவென்றால் மனிதவாழ்வில் (அவன் வாழும் காலமெல்லாம்) அவனது நாவிலிருந்து ஒரு பெய்யும் கூட வரக்கூடாது என்பதே ஆகும்.
இதன் மூலகாரணமானது, யாவரும் அறிந்த விடயமே. சமூகத்தில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் நம்பியே வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இவ்வாறான சூழலில் உண்மையை உரைக்காமல் எமது நாவுகளிலிருந்து பொய்யே வருமேயானால், அந்த நம்பிக்கை இல்லாது போய்விடும். இதனால், சமூக வாழ்க்கை சீரழிந்துவிடும் அபாயம் நூறு வீதம் காணப்படுகிறது. இதற்கு மாற்றமாக சமூகத்தில் யாவரும் உண்மையை உரைப்போராக இருந்தால், அச்சமூகம் அனைத்துக் கோணங்களிலும் முன்னேற்றப்பாதையை அடைந்து அல்குர்ஆன் கூறுகின்ற ‘கயாதுத் தய்யிபா’ என்கிற நறுமணம் வீசுகின்ற அழகிய முன்மாதிரியான வாழ்க்கையை வாழும் சமூகமாக மாறிவிடும்.
மாற்றமாக, பொய்யுரைத்தலே அங்கு காணப்படுமாயின் ஒருவரை ஒருவர் நம்பாது அவர்களது வாழ்வில் ஏற்படுகின்ற எதார்த்தமான நிகழ்வுகளைக்கூட மறுப்பவர்களாக மாறிவிடுவார்கள். அதே சமூகம் இதற்கு மாற்றமாக உண்மையை உரைப்போராக இருந்தால், ஒருவருக்கொருவர் அனைத்துவித நடவடிக்கைகளிலும் உதவி புரிவோராக அமைந்து விடுவார்கள்.
உதாரணமாக, பிறரோடு உரையாடும் போது அவரிடம் தனிமையாக அவரது குறைகளைச் சுட்டிக்காட்டி அவரை திருத்தியமைத்து அல்குர்ஆனிய வழிகாட்டளை பின்பற்றும் சமூகமாக மாறிவிட முடியும். அவ்வாறே பொய்யுரைப்போராக இருந்தால் எவ்வித சமூக மாற்றங்களோ, நன்மைகளோ ஏற்படாது, மாற்றமாக பின்னோக்கிய சமூகமாகவும், அழிவுப்பாதையில் பயணிக்கும் சமூகமாகவும் அச்சமூகம் ஆகிவிடும். எனவேதான், மார்க்க அறிஞர்கள் எப்போதும் சமூகத்தில் உண்மையே நிலைத்திருக்க வேண்டுமென பாடுபட்டு வருகிறார்கள்.
ஆன்மீகத் தலைவர் இமாம் செய்யித் அலீ காமினீ அவர்களின் உரையிலிருந்து…

Scroll to Top
Scroll to Top