பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களிடத்தில், நோன்பு நோற்றிருந்த நிலையில் பெண்ணொருவர் வந்தார். அப்போது, பெருமானார் அப்பெண்ணுக்கு பாலை (அல்லது வேறொன்றை) பரிமாறி, ‘எடுத்து அருந்துங்கள்’ என்றார்கள். ‘இறைத்தூதரே…! நான் நோன்பு நோற்றிருக்கிறேன்’ என்றார் அப்பெண். அதற்கு பெருமானார், ‘இல்லை, நீங்கள் நோன்போடு இல்லை, எடுத்து அருந்துங்கள்’ என்றார்கள். ‘இல்லை, இறைத்தூதரே…! நான் நோன்புதான் நோற்றிருக்கிறேன்’ என்றார் அப்பெண்.
மீண்டும் பெருமானார் அவர்கள், அருந்துமாறு வலியுறுத்தி வேண்டிக்கொண்டார்கள். ‘இல்லை. நான் நோன்போடு இருக்கிறேன், உண்மையில் நோன்புதான் நோற்றிருக்கிறேன்’ என்றார் அப்பெண். (உண்மையில் அப்பெண் நோன்போடுதான் இருந்தார். என்றாலும், எமது நோன்புகளைப் போன்றுதான் வெளிரங்கத்தில் அவருடைய நோன்பு இருந்தது)
‘நீங்கள் சற்றுநேரத்திற்கு முன்புதானே முஃமினான உமது சகோதரரின் (அல்லது சகோதரியின்) இறைச்சியை சாப்பிட்டுவிட்டு, எவ்வாறு நோன்போடு இருக்கிறீர்?’ என்று பெருமானார் வினவினார்கள்.
‘நீங்கள் இறைச்சி சாப்பிட்டிருக்கிறீர் என்பதை உங்களுக்குக் காண்பிக்கட்டுமா? வாந்தி எடுங்கள்’ என்று பெருமானார் கூறினார்கள். அந்நேரத்தில், அப்பெண் வாந்தி எடுத்தார். இறைச்சித் துண்டுகள் அவருடைய வாயிலிருந்து வெளியே வந்தன.
ஒரு மனிதன் நோன்பை நோற்றிருக்கும் நிலையில் புறம் பேசினால், அவன் தனது உடலின் வாயை ஹலாலான உணவிலிருந்து மூடிக்கொண்டாலும், தனது ஆன்மாவின் வாயை ஹராமான உணவுக்காக திறந்து வைக்கிறான்.
மனிதன் கூறுகின்ற ஒரு பொய்யினால், அவனுடைய வாயிலிருந்து எழும் துர்நாற்றம், ஏழு வானங்கள்வரைக்கும் சென்று மலக்குகளை நோவிக்கின்றன என்று ஏன் எமக்குக் கூறியுள்ளார்கள்? அவ்வாறே, மனிதன் நரகில் இருக்கும்போது நரகம் மிகவும் புழுத்திருக்கும் என்றும் கூறியுள்ளார்களே!.
நரகின் புழுக்கையானது, இவ்வுலகில் நாமே உருவாக்கிக்கொண்ட புழுக்கைகளே. நாம் கூறிய பொய்களே அவைகள்.
-ஷஹீத் முதஹ்ஹரி-
சம்பூரண மனிதன் நூலிலிருந்து…