சத்தியத்தின் வழிகாட்டல்

டியூனிஸியாவின் தெற்கில் சிறியதொரு கிராமத்தில், ஒரு திருமண வைபவத்தின் போது, பெண்களின் கூட்டமொன்றுக்கு மத்தியில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, ஒரு தம்பதியரைப் பற்றிப் பேசப்படுவதைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார். தான் செவிமடுத்தவற்றைப் பற்றிய தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்திய அந்த மூதாட்டியிடம், ஏனென்று வினவப்பட்டபோது, அவ்விருவருக்கும் – அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது – தான் பாலூட்டியிருந்ததாகத் தெரிவித்தார். இந்தச் செய்தியை, பெண்கள், தமது கணவர்மார்களுக்கு மத்தியில் உடனடியாகப் பரப்பிவிடவே, அவர்களும் குறிப்பிட்ட விடயத்தைப் பற்றி விசாரித்தனர். குறிப்பிட்ட பெண்ணின் தந்தை, அந்த மூதாட்டி, தனது மகளுக்கு, உண்மையாகவே பாலூட்டியிருந்ததாக சாட்சி பகர, தனது மகனும், அதே மூதாட்டியின் மூலம் பாலூட்டப்பட்டதாக, குறிப்பிட்ட ஆணின் தந்தையும் சாட்சியமளித்தார்.
இந்த தகவலின் மூலம் கொதிப்படைந்த இரண்டு கோத்திரங்களும், ஒருவருடனொருவர் வெளிப்படையாகவே சண்டையிட்டுக் கொள்ள ஆரம்பித்தோடு, அல்லாஹ்வின் கோபத்தைத் தம்மீது கொண்டு வரக்கூடிய இந்த அனர்த்தத்துக்குக் காரணமாக இருந்ததாக, ஒவ்வொரு கோத்திரமும் மற்றையதைக் குற்றம் சுமத்தினர். குறிப்பிட்ட திருமணம், பத்து வருடங்களுக்கு முன்பே இடம்பெற்று, மூன்று பிள்ளைகளையும் தந்திருந்தது என்ற உண்மையே, பிரச்சினையை மேலும் மோசமாக்கியது. செய்தியைச் செவியுற்றதுமே, குறிப்பிட்ட பெண், அவளுடைய தந்தையின் வீட்டுக்கு விரைந்து சென்று விட்டதோடு, எதையும் சாப்பிடவோ அல்லது பருகவோ மறுத்து விட்டாள். தான் – தன்னுடைய சகோதரருக்கே மணம் செய்து வைக்கப்பட்டதாகவும், அவர் மூலம் மூன்று குழந்தைகளையும் பெற்றெடுத்ததாகவும் கூறப்பட்ட செய்தியின் அதிர்ச்சியைத் தாங்க முடியாததால்; யதார்த்தமான சூழ்நிலையை அறியாமலேயே, அவள் தற்கொலைக்கு எத்தனித்திருந்தாள்.
இரு கோத்திரங்களுக்குமிடையிலான மோதல்களின் விளைவாக ஏராளமானோர் காயமுற்ற நிலையில், அங்கு சமுகமளித்த ஒரு ஷெய்க், சண்டையை நிறுத்தியதுடன், கற்றறிந்த அறிஞர்களை அணுகி, இந்த விடயத்தில் அவர்களுடைய அபிப்பிராயங்களைக் கேட்குமாறும்; ஒரு தீர்வை அடைந்து கொள்ள எதிர்பார்க்க முடியுமென்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தமது பயணத்தை ஆரம்பித்த சம்பந்தப்பட்டவர்கள், கற்றறிந்தவர்களிடம், தமது பிரச்சினைகளுக்குரிய ஒரு தீர்வை வேண்டியவர்களாக, பெரிய நகரத்தைச் சுற்றிலும் பவனி வந்தனர். எவ்வாறேனும் அவர்கள் அணுகிய கற்றறிந்த அறிஞர்கள் அனைவரும் அந்த விவாகம் செல்லுபடியற்றதென்றும், இனி தம்பதியர் பிரிந்தே இருக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியதுடன், இதற்குப் பிராயச்சித்தமாக, ஒரு அடிமையை விடுதலை செய்வது அல்லது இரண்டு மாதங்களுக்கு நோன்பு நோற்பது போன்ற பல்வேறு வகையான சட்ட அபிப்பிராயங்களையும் கூறினர்.
இறுதியாக கஃப்ஸாவுக்கு வருகை தந்த அவர்கள், அங்கிருந்த கற்றறிந்தவர்களிடமும் கேட்டனர். ஆனால், பதில் ஒன்றாகவே இருந்தது. ஏனெனில், ஒரே பெண்ணிடமிருந்து பாலின் ஒரே ஒரு துளியேனும் ஊட்டப்பட்டிருந்தாலும், அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தை, மாலிகி மத்ஹபைச் சேர்ந்த அனைத்து அறிஞர்களுமே தடை செய்கின்றனர். பாலையும், மதுவையும் ஒரே தரத்தில் பாவித்து, ‘ஏதாவது உங்களுக்கு, அதிகளவு பருகுவதைத் தடைசெய்யும்போது, அதன் சிறிதளவும் தடைசெய்யப்பட்டே இருக்க வேண்டும்’ என்று கூறிய இமாம் மாலிக்கைப் பின்பற்றுவதாலேயே, அவர்கள் அவ்வாறு செய்கின்றனர். இவ்வாறே, ஒரே பெண்ணிடமிருந்து, ஒரே ஒரு துளி பாலூட்டப்பட்டிருந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணமும், தடைசெய்யப்பட வேண்டியது அவசியம். வழக்கு விசாரணையில் சமுகமளித்திருந்தவர்களில் ஒருவர், தனிப்பட்ட முறையில், வந்து என்னைச் சந்திக்குமாறு அவர்களிடத்தில் கூறியுள்ளார். அவர், அவர்களிடம் கூறியதாவது, ‘இந்த விடயங்களைப் பற்றி, அல்தீஜானியிடம் கேட்டுப் பாருங்கள். ஏனெனில் அவர், எல்லா மத்ஹபுகளையும் அறிந்து வைத்துள்ளார். மேலும் அவர், இந்த கற்றறிந்த அறிஞர்களுடன் வாதித்ததையும், தனது தர்க்க ரீதியான காரண வாதங்களினால் இவர்களைத் தோற்கடித்ததையும், நான் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறேன்.’
அவர்கள் என்னிடம் வந்தனர். அவர்களை நான் என்னுடைய நூலகத்துக்கு அழைத்துச் சென்றபோது, முழு வழக்கையும் விபரமாக விளக்கிய அப்பெண்ணின் கணவர், என்னிடம் கூறியது இவ்வளவுதான். ‘கனவானே! என்னுடைய மனைவி தற்கொலை செய்ய விரும்புவதோடு, எமது பிள்ளைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினையை, எம்மால் எப்படித் தீர்க்க முடியுமென்றும் எமக்குத் தெரியவில்லை. எமது பிரச்சினைக்குரிய தகுந்ததொரு பதில், தங்களிடம் இருக்கக் கூடும் என்று நம்பியவர்களாக – மக்கள் எம்மை தங்களிடம் வழிகாட்டியுள்ளனர். விசேடமாக, என்னுடைய வாழ்க்கையில், நான் இதற்கு முன்பு பார்த்தேயிராத, இந்த நூல்கள் அனைத்தும் தங்கள் வசமிருப்பதைப் பார்த்ததிலிருந்து எனக்கு நம்பிக்கை ஏற்படுகின்றது.’
அவருக்காகக் கொஞ்சம் தேநீரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, வழக்கைப் பற்றி சிறிது நேரம் சிந்தித்த நான், அந்த மூதாட்டியிடமிருந்து அவர் பாலூட்டப்பட்டிருந்த தடவைகளின் எண்ணிக்கையைப் பற்றி அவரிடம் வினவினேன். அவர், ‘எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னுடைய மனைவி, அம்மூதாட்டியால், இரண்டு அல்லது மூன்று தடவைகள் பாலூட்டப்பட்டுள்ளாள். மேலும் அவளுடைய தந்தை, அவளை அந்த மூதாட்டியிடம், இரண்டு அல்லது மூன்று தடவைகள் அழைத்துச் சென்றுள்ளதாக சாட்சியமளித்துள்ளார்.’ என்று கூறினார்.
நான் கூறினேன்: ‘அது சரியானால், அங்கே எந்த பிரச்சினையுமே கிடையாது. உங்களுடைய திருமணம் சட்டபூர்வமானதும் செல்லுபடியானதுமாகும்.’ என்னுடைய கைகளையும் நெற்றியையும் முத்தமிட்டவாறு, என் மீது விழுந்த, அந்த ஏழை மனிதர் கூறினார், ‘எனக்கு அமைதியின் கதவுகளைத் திறந்துவிட்ட தங்களுக்காக, அல்லாஹ் நன்மைகளை வழங்குவானாக!’. தேநீரைக் குடித்து முடிப்பதற்குக் கூட அல்லது இந்தத் தீர்ப்பு பற்றிய ஆதாரங்களைக் கேட்பதற்குக் கூட அவர் தாமதிக்காது, எனது வீட்டிலிருந்து விடைபெற்று, அந்த நல்ல செய்தியைப் பற்றி அவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிப்பதற்காக, மிக விரைவாக வெளியேறிச் சென்று விட்டார்.
ஆனால் மறுநாள், ஏழு பேரோடு திரும்பி வந்த அவர், ‘இவர் என்னுடைய தந்தையார், இவர் என்னுடைய மாமனார், மூன்றாமவர் கிராமத்தின் மேயர், நான்காமவர் வெள்ளிக்கிழமை தொழுகையின் இமாம், ஐந்தாமவர் மார்க்க ஆலோசகர், ஆறாமவர் கோத்திரத்தின் தலைவர், ஏழாமவர் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர். இவர்கள் அனைவரும் பாலூட்டும் வழக்கையும், தாங்கள் எவ்வாறு அந்தத் திருமணத்தை செல்லுபடியானதாகக் கருதுகிறீர்கள் என்பதையும் விசாரிப்பதற்காக வந்துள்ளனர்’ என்று கூறியவராக, அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவர்களோடு மிகவும் நீளமான ஒரு வாதப்பிரதிவாதத்தை எதிர்பார்த்ததால், மொத்தக் குழுவினரையும் நூலகத்துக்கு அழைத்துச் சென்ற நான், அவர்களுக்கு முகமன் கூறியதோடு தேநீரும் வழங்கினேன்.
அவர்கள் கூறினார்கள்: ‘ஒரே பெண்ணிடமிருந்து பாலூட்டப்பட்டிருந்த சோடியின் திருமணமொன்றை நீங்கள் எப்படி சட்டபூர்வமாக்கினீர்கள் என்பதைப் பற்றி, உங்களுடன் கலந்துரையாடுவதற்காகவே நாம் வந்துள்ளோம். அல்லாஹ்வால் குர்ஆனிலும்; (சகோதர – சகோதரி) உறவுமுறையைக் கொண்ட ஒரு சோடிக்கிடையில் தடைசெய்யப்பட்டதைப் போன்ற அதே வழியில், ஒரே பெண்ணின் மூலம் பாலூட்டப்பட்டிருக்கும் ஒரு சோடிக்கிடையிலும் திருமணம் தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள இறைத்தூதர் அவர்கள் மூலமாகவும், அவ்வாறான ஒரு திருமணம் தடைசெய்யப்பட்டுள்ளது. இமாம் மாலிக் அவர்கள் கூட அதைத் தடுத்துள்ளார்கள்.’
நான் கூறினேன், ‘கனவான்களே, நீங்கள் எட்டுப்பேர் நான் ஒரே ஆள். உங்கள் அனைவருடனும், நான் பேசினால்; என்னால் உங்களை வலியுறுத்த இயலாமல் போய்விடுவதோடு, கலந்துரையாடலும் அதன் நோக்கத்தை இழந்து விடலாம். விடயத்தைப் பற்றி என்னுடன் கலந்துரையாடுவதற்காக, உங்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்குமாறு, நான் உங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன். மேலும், நீங்கள் எமக்கிடையில், ஓர் இடையீட்டாளரைப் போல் செயற்படுவீர்கள்.’
எனது கருத்தை ஏற்ற அவர்கள், அறிவிலும் இயலுமையிலும் மிகைத்தவர் என்று எண்ணிய காரணத்தால், மார்க்க ஆலோசகரையே தமது பிரதிநிதியாகத் தெரிவு செய்தனர். அல்லாஹ்வாலும் அவனுடைய தூதர் அவர்களாலும் மற்றும் எல்லா இமாம்களாலும் தடைசெய்யப்பட்டிருந்த ஒரு விடயத்தை, நான் எப்படி அனுமதித்தேன் என்று வினவியதன் மூலம், அம்மனிதர் தன்னுடைய பிரதிபலிப்பை ஆரம்பித்தார்.
நான் கூறினேன், ‘இறைவன் பாதுகாப்பானாக! அவ்வாறான ஒரு விடயத்தை, நான் ஒருபோதும் செய்யவில்லை. அல்லாஹ், (பொதுவான பாலூட்டலின் விடயத்தில்) திருமணத்தை, ஒரு குர்ஆனிய வசனத்தில், அதைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு தடைசெய்துள்ளான், விபரங்களைக் குறிப்பிடவில்லை. அது எவ்வாறு, எத்தனை தடவைகள் போன்றவற்றை விளக்குவதை, அவனுடைய தூதரிடமே அல்லாஹ் விட்டு விட்டான்.’
அவர் கூறினார், ‘இமாம் மாலிக் அவர்கள், பாலூட்டலூடாக – பாலின் ஒரே ஒரு துளி உள்ளெடுக்கப்பட்டிருக்கும் போதும் – அந்தத் திருமணத்தைத் தடைசெய்திருக்கிறார்கள்.’
நான் கூறினேன், ‘நான் அதையறிவேன். ஆனால் இமாம் மாலிக் அவர்கள், அனைத்து முஸ்லிம்கள் மீதும் முழுமையான அதிகாரம் படைத்த ஒருவர் அல்ல. மேலும், ஏனைய இமாம்களின் அபிப்பிராயங்களைப் பற்றி, தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’
அவர் கூறினார், ‘அல்லாஹ் அவர்களோடு பொருத்தம் கொள்வானாக, அவர்கள் அனைவருமே, அல்லாஹ்வின் தூதரது அடிச்சுவடுகளைப் பின்பற்றினார்கள்.’
நான் கேட்டேன், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களால் மொழியப்பட்ட ஒரு வாசகத்துடனேயே இமாம் மாலிக் அவர்கள் முரண்பட்டு நின்றதன் பிற்பாடு, அல்லாஹ்வின் முன்னிலையில், அவரைப் பின்பற்றுவதைப் பற்றிய, தங்களுடைய காரண வாதம் என்ன?’
குழப்பத்துடன் பார்த்த அவர் கூறினார், ‘புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! இமாம் மாலிக் அவர்களால், நபிமொழியின் வாசகங்களுடன் முரண்பட முடியுமென்பதை நான் அறியவில்லை.’
மென்மேலும் புதிருக்காட்பட்டவர்களாகப் பார்த்த ஏனையோர், இதற்கு முன்பு, தாம் ஒருபோதுமே செவியுற்றிருக்காத – இமாம் மாலிக் மீதான என்னுடைய தைரியமான குற்றச்சாட்டால் ஆச்சரியத்துக்குட்பட்டனர். ‘இமாம் மாலிக், ஸஹாபாக்களில் ஒருவராக இருந்தவரா?’ என்று வினவியதன் மூலம், நான் தொடர்ந்தேன்.
அவர், ‘இல்லை!’ என்று பதிலளித்தார். நான் கேட்டேன், ‘அவர், (ஸஹாபாக்களை) பின்பற்றியவர்களில் ஒருவராக விளங்கியவரா?’ அவர், ‘இல்லை. ஆனால் அவர், (ஸஹாபாக்களைப்) பின்பற்றிய ஆரம்ப காலத்தவர்களைப் பின்பற்றினார்.’ என்றார். நான், ‘மிகவும் நெருக்கமானவர் யார், அவரா அல்லது அலீ இப்னு அபூதாலிப் அவர்களா?’ என்று கேட்க் அவர், ‘இமாம் அலீ இப்னு அபூதாலிப் அவர்கள் நேர்வழியில் நடத்தப்பட்ட கலீஃபாக்களில் ஒருவராகத் திகழ்ந்தார்கள்.’ என்று பதிலிறுத்தார். அவர்களில் ஒருவர் ‘எமது தலைவர் – அலீ (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், அறிவுடைய பட்டணத்தில் வாயிலாவார்கள்!’ என்று சேர்த்துக் கொண்டார். நான் கேட்டேன், ‘அறிவுடைய பட்டணத்தின் வாசலை விட்டுவிட்டு, ஸஹாபாக்களில் ஒருவராகவோ அல்லது (ஸஹாபாக்களை) பின்பற்றியவர்களில் ஒருவராகவோ இல்லாத ஒரு மனிதரை, நீங்கள் எதற்காகப் பின்பற்றினீர்கள்? மேலும் இமாம் மாலிக் அவர்கள் எப்போது பிறந்தார்? உள்நாட்டு யுத்தங்களுக்குப் பிறகு, அல்லாஹ்வின் தூதர் அவர்களது பட்டணம், ஸஹாபாக்களில் சிறந்தவர்களைக் கொன்றொழித்த, மனித விழுமியங்களுக்குரிய அனைத்து அம்சங்களையும் அப்பட்டமாக மீறிய, நபியவர்களது வழிமுறைகளை, தமது சொந்த ஆக்கமான, சில பாரம்பரிய கோட்பாடுகளாக மாற்றிய – யசீதின் படைகளால் துவம்சம் செய்யப்பட்ட பிற்பாடு அவர் பிறந்தார். ஆட்சியாளர்களுடைய கொள்கைக்கமைவாக போதித்து, அதிகார வர்க்கத்தினரைத் திருப்திப்படுத்திய இந்த இமாம்களில் எப்படி நாம் நம்பிக்கை வைக்க முடியும்?’
பேசத்துவங்கிய மற்றுமொருவர், ‘நீங்கள் ஒரு ஷீஆ என்றும் – நீங்கள் இமாம் அலீ அவர்களை வணங்குவதாகவும், நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம்.’ என்று கூற, அவருக்கடுத்து அமர்ந்திருந்த அவருடைய நண்பர், அவரைக் குத்தியதோடு கூறியதாவது, ‘அமைதியாக இரு! இதுபோன்று கற்றறிந்த ஒருவரிடம், இவ்வாறு கூறுவதற்கு, உனக்கு வெட்கமாக இல்லையா? என் வாழ்க்கையில், கற்றறிந்த ஏராளமான அறிஞர்களை எனக்குத் தெரியும். ஆனால் அவர்களில் எவருமே, இவரிடம் இருப்பதைப் போன்ற ஒரு நூலகத்தை வைத்திருப்பதாக நான் ஒருபோதுமே அறிந்திருக்கவில்லை. மேலும், இந்த மனிதரின் வாதம், அறிவின் அடிப்படையில் அமைந்துள்ளதோடு, தான் கூறுவதைப் பற்றி, நிச்சயமாக உறுதிப்படுத்திக் கொண்டவராகவே அவர் தெரிகின்றார்.’ நான் பதிலளித்தேன், ‘ஆமாம், அது சரிதான், நான் ஒரு ஷீஆ. ஆனால் ஷீஆக்கள், அலீ அவர்களை வணங்குவதில்லை. மாறாக அவர்கள், இமாம் மாலிக்கைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, இமாம் அலீ அவர்களைப் பின்பற்றி வருகிறார்கள். ஏனெனில் அவர்கள்தாம், தாங்களே கூறியதைப் போல, அறிவுடைய பட்டணத்தின் வாயிலாகத் திகழ்ந்தவர்கள்!’
மார்க்க ஆலோசகர் கேட்டார், ‘இமாம் அலீ அவர்கள், ஒரே பெண்ணின் மூலம் பாலூட்டப்பட்டிருந்த இருவருக்கிடையிலான திருமணத்தை அனுமதித்தார்களா?’
நான் பதிலிறுத்தேன், ‘இல்லை. ஒரே பெண்ணின் மூலம் அல்லது மாமிசத்தையும் எலும்பையும் உற்பத்தி செய்யக்கூடிய கால அளவுக்கு பதினைந்து தடவைகள் முழுமையாகவும் நிரப்பமாகவும் அதே சமயம் தொடர்ச்சியாகவும்; அக்குழந்தைகளுக்கு பாலூட்டப்பட்டிருப்பின் மாத்திரமே, அவர்கள் அதைத் தடைசெய்கிறார்கள்.’
நான் கூறியவற்றைச் செவிமடுத்து மிகவும் திருப்தியுற்றிருந்த, பெண்ணின் தந்தையுடைய முகம் ஒளிர்ந்ததோடு, அவர் கூறினார், ‘புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! என்னுடைய மகள், அந்த மூதாட்டியின் மூலம், இரண்டு அல்லது மூன்று சந்தர்ப்பங்களில் மாத்திரமே பாலூட்டப்பட்டாள். இமாம் அலீ அவர்களது கூற்று, எமது நெருக்கடிக்கான ஒரு தீர்வாகவும், நாம் நம்பிக்கையை இழந்துவிட்ட பிற்பாடு அல்லாஹ்விடமிருந்து எம்மீது இறங்கிய ஓர் அருளாகவும் அமைந்து விட்டது.’
மார்க்க ஆலோசகர் கூறினார், ‘நாம் முழுமையான திருப்தியை உணர்வதற்காக, இமாம் அலீ அவர்களது கூற்றுக்கான ஆதாரபூர்வமான சான்றுகளை எமக்கு வழங்குங்கள்.’ அஸ்ஸெய்யித் அல் கூஈ அவர்களால் எழுதப்பட்ட – ‘மின்ஹாஜ் அஸ்ஸாலிஹீன்’ என்ற கிரந்தத்தை, நான் அவர்களுக்கு வழங்க, அவர், பாலூட்டல் மற்றும் அதன் அவசியப்பாடுகள் தொடர்பான அத்தியாயத்தை உரத்து வாசித்தார்.
அவர்கள் திருப்தியடைந்திருந்தனர். விசேடமாக, என்னிடம் சான்றாதாரம் இல்லாமலிருக்கலாமோ என்று அஞ்சிய அப்பெண்ணின் கணவர், அந்த நூலை தமது கிராமத்துக்கு எடுத்துச் சென்று, தமது காரண வாதத்துக்கு, அதை ஒரு சான்றாதாரமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்காக, அவர்கள் என்னிடம் அப்புத்தகத்தை இரவலாக வழங்குமாறு வேண்டினர். நான் இரவலாக வழங்கவே, அவர்கள் புகழ்ச்சிகளுடனும், மன்னிப்புக்களுடனும் என்னிடமிருந்து விடைபெற்றனர்.
என்னுடைய வீட்டிலிருந்து விடைபெற்றதுமே அவர்கள், தவறான சில மார்க்க அறிஞர்களிடம் அவர்களை அழைத்துச் சென்ற ஒரு தீய மனிதனைச் சந்தித்துள்ளனர். தமக்குரிய பங்கிற்கு அவர்களைப் பயமுறுத்திய அம்மார்க்க அறிஞர்கள், நான் ஓர் ‘இஸ்ரேலிய முகவராக’ இருந்தவரென்றும்; ‘மின்ஹாஜ் அஸ்ஸாலிஹீன்’ என்ற அந்த புத்தகத்தில் உள்ள அனைத்துமே பொய்கள் எனவும், ஈராக்கின் மக்கள் இணைவைப்பவர்களாகவும், முனாஃபிக்குகளாகவும் இருந்தவர்களென்றும், ஷீஆக்கள், சகோதர சகோதரிகளுக்கிடையிலான திருமணத்தை அனுமதித்த ‘மஜூஸிகள்’ என்றும், இதன் காரணமாகவே, அந்த மனிதரை, ஒரே பெண்ணால் பாலூட்டப்பட்ட அவருடைய ‘சகோதரியுடனான’, அவரது திருமணத்தைத் தொடர, நான் அனுமதித்ததாகவும் அவர்களை எச்சரித்துள்ளனர். இறுதியில் அம்மார்க்க அறிஞர்கள், அவர்களுடைய மனங்களை மாற்றியதோடு, அவருடைய விவாகரத்து தொடர்பில், கஃப்ஸாவின் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில், சட்டபூர்வமான நடவடிக்கையை எடுப்பதற்காக, கணவரை நிர்ப்பந்தித்துள்ளனர். தலைநகரமான டியூனிசுக்குச் சென்று, குடியரசின் முஃப்தியை அணுகுமாறும், பிரச்சினைக்குரிய ஒரு தீர்வு அவரிடம் இருக்கக் கூடும் என்றும் அவர்களை நீதிபதி வேண்டியுள்ளார். தலைநகரத்துக்குக் கிளம்பிய கணவர், முஃபதியை நேரடியாகச் சந்தித்துப் பேச அங்கே முழுமையாக ஒரு மாதம் காத்திருந்தார்.
முஃப்தியுடனான சந்திப்பின் போது, பெண்ணின் கணவர் விடயத்தை விபரமாக விளக்கியதன் பிற்பாடு, அந்தத் திருமணத்தைச் சட்டபூர்வமானதென ஏற்றுக் கொண்ட மார்க்க அறிஞர்களைப் பற்றி, அந்த முஃப்தி, அவரிடம் வினவியுள்ளார். அல்தீஜானி அஸ்ஸமாவி என்றழைக்கப்பட்ட ஒருவரைத் தவிர்த்து, அவர்களில் எவருமே அவ்வாறு நினைக்கவில்லை என்பதாக அவர் முஃப்தியிடம் கூறவே, என்னுடைய பெயரை, ஒரு குறிப்பில் எழுதிக் கொண்ட முஃப்தி, ‘உமது கிராமத்துக்கே திரும்ப செல்லுங்கள்; நான், கஃப்ஸாவிலுள்ள நீதிபதிக்கு எழுத வேண்டும்!’ என்று கணவரிடம் கூறியுள்ளார்.
குறுகியதொரு காலத்துக்குப் பிறகு, குடியரசின் முஃப்தியிடமிருந்து வந்திருந்த ஒரு கடிதத்தை, வாசித்த கணவரது வழக்குரைஞர்; முஃப்தி, அந்த திருமணத்தைச் செல்லுபடியற்றதாகத் தீர்ப்பளித்திருப்பதைக் கண்டார்.
மிகவும் சோர்வடைந்தவராகவும் வெறுமையானவராகவும் தோன்றிய கணவருக்கு, அவருடைய வழக்குரைஞர் மூலம், கடிதத்தின் உள்ளடக்கத்தைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. பிறகு என்னைச் சந்திப்பதற்காக வந்த அவர், எனக்கு ஏற்படுத்திய எல்லாச் சிக்கல்களுக்காகவும், இடையூறுகளுக்காகவும் என்னிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
என் மீதான அவருடைய உணர்வுகளுக்காக, அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட நான், இவ்விடயத்தில், திருமணத்தைச் செல்லுபடியற்றதாகக் கருதிய முஃப்தியுடைய தீர்ப்பு தொடர்பில், என்னுடைய வியப்பையும் வெளிப்படுத்தினேன். முஃப்தியின் கடிதத்தை, கஃப்ஸாவிலுள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு எடுத்து வருமாறும் அவரை நான் கேட்டுக் கொண்டேன். ஆகவே, டியூனீஸிய ஊடகங்களில் அதைப் பிரசுரித்து, குடியரசின் முஃப்தி உண்மையில், நான்கு இஸ்லாமிய மத்ஹபுகளையும் பற்றி அதிகமாக எதையுமே அறிந்திருக்கவில்லையென்பதையும்;, பாலூட்டல் மூலம் ஏற்படும் சகோதரத்துவப் பிரச்சினைகள் தொடர்பாக, அவற்றுக்கிடையில் காணப்படும் சட்ட ரீதியான வேறுபாடுகளைப் புரிந்திருக்கவில்லையென்பதையும் என்னால் காண்பிக்க முடியும்.
எவ்வாறாயினும், அவரால் அவருடைய வழக்கு தொடர்பான கோப்புக்களைக் காணமுடியவில்லையென்றும், ஆகையால் அந்தக் கடிதத்தைக் கொண்டுவர இயலாதெனவும், என்னிடம் கூறிய கணவர், பிறகு வெளியேறி விட்டார்.
ஒரு சில தினங்களுக்குப் பிற்பாடு, நீதிபதியிடமிருந்து எனக்கு அழைப்பிதழ் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில், ஒரே பெண்ணின் மூலம் பாலூட்டப்பட்ட இருவருக்கிடையிலான திருமணத்தை அனுமதிக்கும் நூலையும், ஏனைய சான்றாவணங்களையும் கொண்டுவருமாறு நீதிபதி என்னை வேண்டிக் கொண்டிருந்தார்.
நிரூபிக்கும் சான்றாவணங்களின் ஓர் எண்ணிக்கையைத் தெரிவு செய்த நான், ஆதாரங்களை என்னால் உடனடியாக சமர்ப்பிக்க முடியுமான வகையில், பாலூட்டல் மூலம் ஏற்படும் சகோதரத்துவம் தொடர்பான அத்தியாயங்களையும் தயார்படுத்தி வைத்துக் கொண்டேன்.
அங்கீகரிக்கப்பட்ட நேரத்தில், நீதிமன்றத்துக்குச் சென்ற நான், என்னை நீதிபதியின் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்ற இலிகிதர் மூலம் வரவேற்கப்பட்டேன். மாவட்ட மாஜிஸ்ட்ரேட் மற்றும் குடியரசின் சட்டப் பிரதிநிதி உட்பட ஏனைய மூன்று நீதிபதிகளையும் பார்த்து வியப்புக்குள்ளானேன். அவர்கள், தீர்ப்பளிப்பதற்காக அமர்ந்திருந்தவர்களைப் போலவே, தமது உத்தியோகபூர்வமான ஆடைகளை அணிந்திருந்ததை அவதானித்தேன். குறிப்பிட்ட பெண்ணின் கணவர், நீதிமன்ற அறையின் இறுதியில், நீதிபதிகளை முன்னோக்கியவராக அமர்ந்திருந்ததையும் கண்ணுற்றேன்.
அனைவருக்கும் நான், முகமன் கூறினேன். ஆனால் அவர்களோ, என்னை அலட்சியத்துடன் பார்த்தனர். நான் அமர்ந்து கொண்ட போது, தலைமை நீதிபதி என்னிடம் வினவினார், ‘அல்தீஜானி அஸ்ஸமாவி என்பவர் நீங்கள்தானா?’ நான், ஆம் என்று பதிலளிக்கவே, அவர் கேட்டார், ‘இந்த வழக்கில், திருமணத்தை சட்டபூர்வமாக்கும் வகையிலான தீர்ப்பொன்றை அளித்தவர் நீங்கள்தானா?’
நான் பதிலுறுத்தேன், ‘இல்லை. தீர்ப்பொன்றை நான் அளிக்கவில்லை. மாறாக, குறிப்பிட்ட திருமணம், சரியானதாகவும் சட்டபூர்வமானதாகவும் இருப்பதாக ஏற்றுக் கொண்டு அங்கீகரித்ததன் மூலம்; இமாம்களும், இஸ்லாத்தின் மார்க்க அறிஞர்களுமே அவ்வாறான ஒரு தீர்ப்பை அளித்துள்ளனர்.’
அவர் கூறினார், ‘அதற்காகத்தானே, நாம் உங்களை அழைத்துள்ளோம். மேலும், தாங்கள் தற்போது கட்டப்பட்டுள்ளீர். தங்களால் தங்களுடைய கோரிக்கையை, பொருத்தமான ஆதாரங்களுடன், ஆதரித்து நிரூபிக்க முடியாவிட்டால்;, பிறகு, நாம் தங்களைச் சிறைக்கு அனுப்ப வேண்டியிருக்கும். மேலும் நீங்கள் சுதந்திரமான ஒரு மனிதனாக, அங்கிருந்து ஒருபோதும் வெளியே வரவே மாட்டீர்.’
நான் உண்மையாகவே கட்டப்பட்டிருப்பதை, அப்போதுதான் புரிந்து கொண்டேன். குறிப்பிட்ட அந்த வழக்கில், நான் தீர்ப்பொன்றை வழங்கியதால் அல்ல. ஆனால், அந்த தவறான மார்க்க அறிஞர்களில் சிலர், நான் இடையூறுகளை விளைவித்ததாகவும், ஸஹாபாக்களைச் சபித்ததாகவும், அஹ்லுல்பைத்தின் ஆதரவுக்காக இயக்கம் நடத்தியதாகவும், நீதிபதிகளிடம் கூறியிருந்தமையே அதற்கான காரணமாகும். எனக்கெதிராக இரண்டு சாட்சிகளைக் கொண்டு வருமாறு, அவர்களைப் பணித்த தலைமை நீதிபதி; பிறகே, என்னைச் சிறையில் தள்ளுவதற்குரிய அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
அதற்கு மேலதிகமாக, இவ்வழக்கில் எனது தீர்ப்பின் சாதகமான தன்மையை எடுத்துக் கொண்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர், நான், சகோதர சகோதரிகளுக்கிடையிலான திருமணத்தை சட்டபூர்வமாக்கியதாக வதந்திகளை பரப்பிவிட்டனர். மேலும் அதுவே, அவர்கள் கோரியதைப் போலவே, ஷீஆக்கள் நம்புவது!
தலைமை நீதிபதி, என்னைச் சிறையில் தள்ளப் போவதாக அச்சுறுத்திய போது, அதைப்பற்றி நான் உண்மையாகவே நிச்சயப்படுத்திக் கொண்டேன். ஆகையால் நான், அவருக்கே சவால் விடுத்து, என் ஊக்கங்கள் அனைத்தையும் திரட்டி, என்னைத் தற்காத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே அற்றவனாக விடப்பட்டேன். நான் தலைமை நீதிபதியிடம் கூறினேன், ‘என்னால், எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாக பேச முடியுமல்லவா?’
அவர் பதிலளித்தார், ‘ஆம். தங்களுக்காக வழக்குரைஞர்கள் எவரும் இல்லாததால், உங்களால் அவ்வாறு செய்ய முடியும்.’
நான் கூறினேன், ‘எல்லாவற்றுக்கும் முதலில், நான் உரைக்க விரும்புவதாவது, நான் என்னை, தீர்ப்பளிப்பதற்காக (ஃபத்வா வழங்குவதற்காக) நியமித்துக் கொண்டிருக்கவில்லை. குறிப்பிட்ட பெண்ணின் கணவர், தங்களுக்கு முன்பாகவே இருக்கின்றார். ஆகவே, அவரிடமே கேளுங்கள். என்னுடைய வீட்டுக்கு வந்த அவர், என்னிடமிருக்கும் தகவல் எதுவானாலும் – அதை அவருக்கு வழங்கியாக வேண்டியது, என்னுடைய கடமை என்றே என்னிடம் வேண்டிக் கொண்டார். நான் அவரிடம், அவருடைய மனைவி, அந்த மூதாட்டியின் மூலம், எத்தனை தடவைகள் பாலூட்டப்பட்டிருந்தாள் என்று வினவினேன். இரண்டு தடவைகள் மாத்திரமே அவ்வாறு நிகழ்ந்துள்ளதென்று, அவர் கூறியபோது, இஸ்லாமிய சட்டங்களுக்கு அமைவான பதிலையே, நான் அவருக்கு அளித்தேன். நான், இஸ்லாத்துக்கு விளக்கமளிக்க முனையவோ அல்லது உண்மையாகவே (தடுக்கப்பட்ட ஒரு விடயத்தை) சட்டபூர்வமாக்க முயலவோ இல்லை.
தலைமை நீதிபதி கூறினார், ‘என்னே ஓர் ஆச்சரியம்! தாங்கள் இப்போது, தங்களுக்கே இஸ்லாம் தெரியுமெனவும் எங்களுக்கு அது தெரியாதென்றும் கோருகின்றீர்கள்!’
நான் மறுமொழியளித்தேன், ‘இறைவன் பாதுகாப்பானாக! நான் அவ்வாறு அர்த்தப்படுத்தவில்லை. ஆனால், இங்கிருக்கும் அனைவருமே, மாலிகி மத்ஹப் இங்கேயே நின்று விடுவதை அறிவர். இந்த வழக்கிற்குரிய ஒரு தீர்வை, ஏனைய இஸ்லாமிய மதாஹிபுகளில் தேடிப்பார்த்துக் கண்டறிவதையே நான் செய்தேன்.’
தலைமை நீதிபதி கேட்டார், ‘எங்கே நீங்கள் தீர்வை கண்டீர்?’
நான் கூறினேன், ‘கனவானே! நான் பதிலளிப்பதற்கு முன்பாக, தங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கலாமா?’
அவர் மறுமழியளித்தார், ‘நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்.’
நான் கேட்டேன், ‘இஸ்லாமிய மத்ஹபுகளைப் பற்றி, தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’
அவர் பதிலளித்தார் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லம்) அவர்களது போதனைகளைப் பின்பற்றும் அவையனைத்துமே சரியானவைதான். மேலும், அவைகளுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளில், அருள் உள்ளது.’
நான் கூறினேன், ‘நல்லது, அவ்வாறாயின் இஸ்லாமிய மத்ஹபுகளில் ஒன்று, (குறிப்பிட்ட பெண்ணின் கணவரைச் சுட்டிக்காட்டி) இவருடைய பிரச்சினைக்குரியதோர் தீர்வைக் கொண்டிருக்கையில், கடந்த இரண்டு மாதங்களாக, தனது மனைவியையும் பிள்ளைகளையும் விட்டு தூர விலகியுள்ள இந்த ஏழை மனிதரின் மீது கருணை காட்டுங்கள்.’
தலைமை நீதிபதி கோபத்துடன் மறுதலித்தார், ‘உமது ஆதாரங்களை எம்மிடம் வழங்கிவிட்டு, வீணான இவையனைத்தையுமே நிறுத்திக் கொள்ளுங்கள். உம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே, நாம் உங்களை அனுமதித்தோம்; ஆனால் நீங்களோ, மற்றவர்களைப் பாதுகாக்கும் ஒரு வழக்கறிஞராகவே மாறிவிட்டீர்.’
நான் என்னுடைய பையிலிருந்து, அஸ்ஸெய்யித் அல் கூஈ அவர்களுடைய – ‘மின்ஹாஜ் அஸ்ஸாலிஹீன்’ என்று பெயரிடப்பட்ட, ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு கூறினேன்: ‘இதுவே, அஹ்லுல்பைத்தின் மத்ஹபாகும். மேலும் இதில் சத்தியமான ஆதாரம் உள்ளது.’
‘அஹ்லுல்பைத்தின் மத்ஹபைப் பற்றி மறந்துவிடும். எமக்கு அது தெரியாதென்பதோடு, நாம் அதில் நம்பிக்கை கொள்வதுமில்லை.’ என்று கூறியதன் மூலம் அவர் இடைமறித்தார். இதுபோன்ற ஒரு பதிலை எதிர்பார்த்திருந்த நான்; சில ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து, ஒரு தொகை சான்றாதாரங்களையும், என்னுடனேயே கொண்டு வந்திருந்ததோடு, அவற்றை நான் எனது அறிவுக்கு அமைவான முறையில் ஒழுங்குபடுத்தியிருந்தேன். முதல் வரிசையில், ஸஹீஹ் புஹாரியையும்; அடுத்து, ஸஹீஹ் முஸ்லிமையும்; பின்னால், மஹ்மூத் ஷல்தூத்தின் ‘அல்ஃபதாவா’ என்ற நூலையும், பிற்பாடு, இப்னு ருஷ்தின் ‘பிதாயதுல் முஜ்தஹித் வநிஹாயதுல் முக்தசித்’ என்ற புத்தகத்தையும், பிறகு, இப்னுல் ஜவ்ஸீயின் ‘ஸாத் அல்மஸீர் ஃபீ இல்ம் அல்தஃப்ஸீர்’ என்ற கிரந்தத்தையும்; இன்னும் ஏராளமான சுன்னி உசாத்துணைகளையும் வைத்திருந்தேன்.
அஸ்ஸெய்யித் அல் கூஈ அவர்களுடைய நூலை, தலைமை நீதிபதி பார்க்க மறுத்தபோது, அவர் எந்த நூல்களை நம்புகிறார் என்று அவரிடமே கேட்டேன்.
அவர் கூறினார், ‘புஹாரி மற்றும் முஸ்லிம்.’
ஸஹீஹ் புஹாரியை எடுத்து, அதன் குறிப்பிட்ட ஒரு பக்கத்தைத் திறந்து கொண்டு கூறினேன், ‘கனவானே, இதோ உங்களுக்காக இதை வாசித்துப்பாருங்கள்.’
அவர் கூறினார், ‘நீங்களே அதை வாசியுங்கள்.’
நான் வாசித்தேன், ‘முஃமின்களின் அன்னையான ஆயிஷா அவர்கள் கூறியதாக இன்னார் எம்மிடம் கூறினார், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லம்) அவர்கள் தமது வாழ்நாளில், தம்பதியர் ஒரே பெண்ணின் மூலம் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் பாலூட்டப்பட்டிருந்தால் மாத்திரமே திருமணத்தை தடைசெய்தார்கள்.’
என்னிடமிருந்து நூலைப் பெற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, அவரே வாசித்து விட்டு, அதை, சட்டப் பிரதிநிதியிடம் கையளித்தார். அவரும் அந்த ஹதீஸை வாசித்து விட்டு, நூலை ஏனைய நீதிபதிகளுக்குக் கைமாற்றினார். நான், தலைமை நீதிபதியிடம் ஸஹீஹ் புஹாரியைக் காண்பித்து, அதே ஹதீஸை அவருக்குச் சுட்டிக் காட்டிய அதே சமயம், ‘பாலூட்டல்’ சிக்கல் பற்றி, இமாம்களுக்கிடையில் காணப்பட்ட கருத்து வேறுபாடுகள் பற்றிக் குறிப்பிடும் – அல்அஸ்ஹரின் ஷெய்க் ஷல்தூத் அவர்களினால் எழுதப்பட்ட – ‘அல்ஃபதாவா’ என்ற நூலைத் திறந்தேன். அவர்களில் சிலர், பாலூட்டல் – பதினைந்து தடவைகள் நிகழ்ந்திருந்த பட்சத்தில், திருமணத்தைத் தடுத்திருந்தனர். ஏனையோர், ஏழு அல்லது ஐந்து தடவைகள் என்று கூறினர். தெளிவான வாசகங்களுடன் முரண்பட்டு நின்றதோடு, ஒரே பெண்ணிடமிருந்து, பாலின் ஒரே ஒரு துளியேனும், சோடிகளுக்கு ஊட்டப்பட்டிருப்பின், திருமணம் தடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து மாலிக் அவர்களுடையதாக இருந்தது. ஷல்தூத் மேலும் கூறியதாவது, ‘நடுநிலையான தீர்வை ஆதரிக்க விரும்பும் நான், ஏழு அல்லது அதற்கும் அதிகமான தடவைகள் என்றே கூறுகிறேன்.’
சான்றாவணங்களைப் பார்வையிட்ட பிறகு, குறிப்பிட்ட பெண்ணின் கணவரை நோக்கித் திரும்பிய தலைமை நீதிபதி, அவரிடம் கூறினார், ‘இப்போதே சென்று, உமது மாமனாரை அழைத்து வாருங்கள். உமது மனைவி, இரண்டு அல்லது மூன்று தடவைகள் மாத்திரமே, அம்மூதாட்டியால் பாலூட்டப்பட்டதாக உமது மாமனார் சாட்சியமளித்தால், பிறகு, உங்கள் மனைவியை, இன்றே உங்களோடு அழைத்துச் செல்ல முடியும்.’
அந்த ஏழை மனிதர், மிகவும் மகிழ்ச்சியடைந்தார். சட்டப் பிரதிநிதி மற்றும் ஏனைய நீதிபதிகள், தத்தமது வருத்தங்களைத் தெரிவித்ததோடு, நீதிமன்றத்தை விட்டு வெளியேறினர். நான், தலைமை நீதிபதியுடன் தனித்திருக்கையில்; என்னிடம் வருத்தம் தெரிவித்த அவர் கூறினார், ‘தங்களைப் பற்றி எனக்கு வழங்கப்பட்டிருந்த தவறான தகவல்களுக்காக என்னை மன்னியுங்கள். தங்களைக் காயப்படுத்த விரும்பும் அவர்கள், பக்கச்சார்பானவர்கள், பொறாமை பீடித்தவர்கள் என்பது, இப்போது எனக்குத் தெரிகிறது.’
சடுதியான அந்த மனமாற்றத்தைப் பற்றிச் செவியுறுவதில், மிகவும் மகிழ்ச்சியுற்ற நான் கூறினேன், ‘கனவானே, தங்களூடாக என்னை வெற்றி பெறச் செய்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!’
அவர் கூறினார், ‘தாங்கள், பாரியதொரு நூலகத்தைக் கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்டுள்ளேன். தங்களிடம், அல் தாமிரி அவர்களுடைய – ‘ஹயாத் அல் ஹய்வான் அல் குப்ரா’ என்ற நூல் இருக்கிறதா?’
நான் பதிலளித்தேன், ‘ஆம்.’
அவர் கேட்டார், ‘நான், கடந்த இரண்டு வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கும் அந்த நூலை, தங்களால் எனக்கு இரவலாக வழங்க முடியுமா?’
நான் கூறினேன், ‘தாங்கள் அதை எப்போது விரும்பினாலும், அது தங்களுக்குரியது கனவானே.’
அவர் கூறினார், ‘என்னுடைய நூலகத்துக்கு வருவதற்கான நேரத்தை, தாங்கள் சிலவேளை பெற்றுக் கொண்டால்; பல்வேறு வகையான பிரச்சினைகளைப் பற்றி, நாம் கலந்துரையாட முடியும். மேலும் தங்களிடமிருந்து, நான் பயன் பெறலாமென எதிர்பார்க்கிறேன்.’
நான் கூறினேன், ‘இறைவன் பாதுகாப்பானாக! தங்களிடமிருந்தே நான் பயன் பெற்றுக் கொள்வேன். வயது மற்றும் தகுதி ஆகிய இரண்டிலுமே, தாங்கள் எனக்கு மிகவும் சிரேஷ்டமானவர். எவ்வாறாயினும் எனக்கு, வாரத்தில் நான்கு நாள், பணி விடுப்புண்டு. அப்போது நான் தங்களுடைய சேவையில்.’
நாம், ஒவ்வொரு சனிக்கிழமையும் சந்திப்பதற்கு சம்மதித்தோம். ஏனெனில், அன்றைய தினத்தில் அவருக்கு நீதிமன்ற அமர்வுகள் இருக்கவில்லை. வழக்கில் சம்பந்தப்பட்ட வாசகங்களைப் பிரதியெடுப்பதற்காக புஹாரி மற்றும் முஸ்லிம் கிரந்தங்களையும், மஹ்மூத் ஷல்தூத்தின் ‘அல்ஃபதாவாவையும்’; தன்னுடன் விட்டுச் செல்லுமாறு என்னிடம் வேண்டிக் கொண்ட பின் எழுந்து நின்ற அவர், அவருடைய காரியாலயத்துக்கு வெளியே வந்தார்.
நான், மகிழ்ச்சியால் நிரம்பியவனாகவும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவனாகவும் வந்தேன். அந்த சத்திய வெற்றிக்கான புகழனைத்தும் அவனுக்கே உரியது. அச்சத்தால் நிரம்பியவனாக நீதிமன்றத்துக்குள் நுழைந்து, சிறைப்படுத்தல் மூலம் அச்சுறுத்தப்பட்ட நான், தலைமை நீதிபதியை, என்னுடைய நல்ல நண்பர்களில் ஒருவராகவும், என்னிடமிருந்து பயன் பெற்றுக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கையில், என்னுடன் கலந்துரையாட விரும்பும் ஒருவராகவும் ஆக்கிக் கொண்டேன். அஹ்லுல்பைத்துடைய பாதையின் அருளே இதுவாகும். தன்னைப் பின்பற்றியொழுகும் மக்களை, அப்பாதை வீழ்ந்துவிட அனுமதிப்பதேயில்லை. மேலும், தன்னிடம் வருபவர்களுக்கு, அது, மிகவும் பாதுகாப்பானதோர் அடைக்கலமாகும்.
குறிப்பிட்ட பெண்ணின் கணவர், நிகழ்ந்தவற்றைப் பற்றி, அவருடைய கிராமத்தைச் சேர்ந்த மக்களிடம் கூறினார். மனைவி அவளுடைய கணவரின் வீட்டுக்குத் திரும்பிய போது, அச்செய்தி அண்டைய கிராமங்களுக்கும் பரவிச் சென்றது. திருமணம் சட்டபூர்வமானதே என்ற இறுதியான தீர்ப்புடன் வழக்கு முடிவுக்கு வந்தது. வேறு எவரையும் விட, குடியரசின் முஃப்தியையும் விட, அறிவில் மிகைத்திருந்தவன் நானே என்று மக்கள் கூறத் துவங்கினார்கள்.
பெரியதொரு கார் மூலம் என்னுடைய வீட்டுக்கு வந்த கணவர்; என்னையும், என் குடும்பத்தவரையும், தனது கிராமத்துக்கு அழைத்து, அங்குள்ள மக்கள் எனக்காகக் காத்திருப்பதாகவும், அவர்கள், நிகழ்வைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக, மூன்று கன்றுகளை விருந்துக்காக அறுக்கவுள்ளதாகவும் என்னிடம் கூறினார். கஃப்ஸாவில் எனக்கிருந்த பணிச்சுமையின் நிமித்தம், அவருடைய அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தமைக்காக, நான் அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டதோடு, அல்லாஹ் நாடினால், வேறொரு சந்தர்ப்பத்தில் அங்கு விஜயம் செய்வதாகவும் அவரிடம் கூறினேன்.
தலைமை நீதிபதியும் அவருடைய நண்பர்களிடம் பேசியதோடு, வழக்கும் பிரபலமானது. அல்லாஹ், அந்தத் தீயவர்களின் தந்திரங்களை இவ்வாறே முறியடித்தான். அவர்களில் சிலர், வருத்தம் தெரிவிப்பதற்காக வந்திருந்தனர். ஏனையோர், அல்லாஹ்வின் மூலம் அறிவூட்டப்பட்டதோடு, நம்பிக்கை கொண்டவர்களில் ஒருவராகவே மாறினர். உண்மையில் இது, அல்லாஹ்வின் அருளேயாகும்;. அதை அவன் தான் விரும்புபவர்களுக்கு வழங்குகிறான். அல்லாஹ்வே நிகரற்ற அன்புடையவன்.
நாம் கூறவேண்டிய இறுதி வார்த்தைகளாவன: படைப்புக்களின் தலைவனான அல்லாஹ்வுக்கே நன்றிகள் அனைத்தும் உரியன. அல்லாஹ் எங்கள் நாயகம் முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லம்) அவர்களுக்கும் அன்னவர்களது பரிசுத்தக் குடும்பத்தினருக்கும் அருள்புரிவானாக.

Scroll to Top
Scroll to Top