Moral and Cultural Benefits of Hajj
ஹஜ்ஜின் தார்மீக மற்றும் கலாச்சார நன்மைகள்
ஹஜ் யாத்திரையின் தத்துவத்தின் மிக முக்கியமான அம்சம் யாத்ரீகரின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை சிறப்பாக மாற்றுவதாகும். இஹ்ராமின் சடங்குகள் (ஹஜ் சடங்குகளைச் செய்யத் தயாராகுதல்) யாத்ரீகர்களை பொருள்சார் ஆர்வங்கள், மேலோட்டமான வேறுபாடுகள் மற்றும் ஆடம்பரமான ஆடைகளிலிருந்து விலக்குகின்றன. சிற்றின்ப ஆசைகளைத் தடைசெய்து, இன்றியமையாத கடமையாகக் கருதப்படும் சுய ஒழுக்கத்தில் பயணிக்க முஹ்ரம் (இஹ்ராம் கடைப்பிடிக்கும் யாத்ரீகர்) நிர்பந்திக்கப்படுவதால், ஒரு முஹ்ரம் பொருள்முதல்வாத உலகத்திலிருந்து தன்னைத் தூர விலக்கி, ஒளி மற்றும் ஆன்மீக உலகில் நுழைகிறார்.
இஹ்ராம் மற்றும் பின்பற்றப்படும் பிற சடங்குகள் ஒரு யாத்ரீகர் தனது படைப்பாளனுடனான ஆன்மீக உறவை ஏற்படுத்தி, தனது கடந்த கால தவறுகளிலிருந்தும் முற்றிலும் விலகி, தெளிவான மற்றும் தூய்மையான எதிர்காலம் வரை வழிகாட்டும் ஒளி மற்றும் தூய்மையுடன் நீண்டுள்ளது.
ஹஜ் சடங்குகள் குறிப்பாக ஒரு யாத்ரீகர் செய்யும் ஒவ்வொரு கடமையும் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டுகின்றது: போலி கடவுள்களை அழித்தவரான இப்ராஹிம் (அலை) அவர்களை நினைவுபடுத்தல்; (அவரது மகன்) இஸ்மாயில் (அலை) இறைவனின் தலையீட்டால் காப்பாற்றப்பட்ட மகத்தான சம்பவம்; அவரது தாயார் ஹாஜரா (அலை) தாகத்துடனும் பசியுடனும் பிறந்த தனது குழந்தைக்கு உதவி, தண்ணீர் மற்றும் உணவைத் தேடி காபாவின் அருகே சஃபா மற்றும் மர்வா ஆகிய இரு மலைகளுக்கு இடையே பலமுறை ஓடி வந்ததை நினைவு கூரல். காபாவை சுற்றி வரும் தவாஃப், முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்றும் இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் அனைத்து முஸ்லிம்களின் மாபெரும் ஸஹாபாக்கள் செய்த தியாகம் மற்றும் ஜிஹாத் பற்றிய ஆன்மீக நினைவூட்டலும் அழைப்புமாகும்.
இஸ்லாத்தின் உன்னத நபி (ஸல்) அவர்கள் தனது பாரம்பரியங்களில், ஹஜ்ஜை முழுமையாகவும் சரியாகவும் நிறைவேற்றுபவர்கள் “அன்று பிறந்த பாலகர் போல அவர்களின் தீய செயல்களிலிருந்து முற்றிலும் தூய்மைப்படுத்தப்படுவார்கள்” என்று நமக்கு நினைவூட்டுகிறார். இதன் பொருள் ஒரு முஸ்லிமுக்கு ஹஜ் இரண்டாவது பிறப்பு. இது ஒரு புதிய வாழ்க்கையின் ஆரம்பம்.
இஸ்லாமிய சமூக கலாச்சார பரிமாற்றத்தில் ஹஜ் ஒரு சிறந்த பங்கை வகிக்க முடியும், ஏனெனில் இந்த மாபெரும் ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகெங்கிலும் உள்ள அனைத்து மூலைகளிலிருந்தும் அனைத்து நாடுகளில் இருந்தும் ஈமான் கொண்ட மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். இவர்களில் பல மொழி பேசுபவர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் குறிப்பிட்ட பிரதேச முஸ்லிம்களின் பிரதிநிதிகள் ஆவர்.
ஹஜ்ஜின் நன்மைகளில் ஒன்று என தொடர்புடைய இஸ்லாமிய விளக்கங்கள் இவ்வாறு கூறுகின்றன. உதாரணமாக, முஸ்லிம்கள் தங்கள் இஸ்லாமியக் கடமைகளைக் கடைப்பிடிப்பதைத் தடைசெய்த கொடுங்கோல் ஆட்சியாளர்கள் மற்றும் சுல்தான்களின் அநீதிக்கு எதிரான தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு சரியான வழியை ஹஜ்ஜில் கண்டார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்களின் புனித குடும்பத்தைச் சேர்ந்த இமாம்களை (உலமாக்களை) சந்திப்பதன் மூலம் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்துத் தீர்ப்பார்கள்.
மேலும் மக்கா மற்றும் மதீனா ஆகிய இரண்டு ஆசீர்வதிக்கப்பட்ட நகரங்களில், குர்ஆன் மற்றும் நபியின் பாரம்பரியத்தின் தூய்மையான முதல் அறிவைப் பெற உலமாக்களை (முக்கிய முஸ்லிம் அறிஞர்கள்) அணுகுவார்கள்.
மறுபுறம், இஸ்லாமிய உலகத்தைச் சேர்ந்த பல சிந்தனையாளர்கள் கலந்துகொள்ளும் இஸ்லாமிய கலாச்சார மாநாடுமாகும். தங்களுக்கும் மற்ற சக முஸ்லிம்களுக்கும் இடையில் முஸ்லிம் உம்மத் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து உரையாடலில் ஈடுபடவும் புரிந்துகொள்ளவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவார்கள்.
இமாம் சாதிக் (அலை) ஹஜ்ஜின் தத்துவத்தையும் கஅபாவைச் சுற்றி (தவாப்) வருவதையும் இந்த வார்த்தைகளில் விவரிக்கிறார்: “உலகின் கிழக்கு மற்றும் மேற்கில் இருந்து வரும் மக்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் முடிவு செய்தான் மற்றும் தம் நிலைமைகள் பற்றி ஒருவருக்கொருவர் அறிந்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாரம்பரியத்தைப் பற்றி அறிந்து கொள்வதுடன் மற்றவர்களுக்கு அவற்றை அறிவிப்பதற்காக அவர்கள் எப்போதும் அதை மனதில் வைத்திருப்பார்கள். வெவ்வேறு ஊர்களுக்கு இடையே வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்.”
மறுபுறம், ஹஜ் முஸ்லிம்களின் ஒரு சிறந்த சர்வதேச கலாச்சார மாநாடாகும், அங்கு இஸ்லாமிய உலகின் புகழ்பெற்ற அறிஞர்கள் ஒன்றுகூடி அவர்களின் பாரம்பரிய மற்றும் அவை தொடர்பான எண்ணங்களையும் யோசனைகளையும் பகிரங்கமாக வழங்குதற்கான சந்தர்ப்பமுமாகும்.
ஹஜ் ஒரு தெய்வீக மாநாடு என்று இமாம் கொமெய்னி (ரஹ்) கூறுகிறார், ஹஜ்ஜுக்கான ஏற்பாட்டாளனாகவும் அழைப்பாளனாகவும் அல்லாஹ்வே இருக்கின்றான். மேலும் கூறுகிறார்: “ஹஜ் என்பது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் நெருக்கமான உறவின் சின்னமாகும்.
ஹஜ் என்பது உணர்வற்ற செயல்கள், இயக்கங்கள் மற்றும் முழக்கங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை, ஏனென்றால் மனிதன் வெறும் வார்த்தைகளாலும், உயிரற்ற மற்றும் அர்த்தமற்ற அசைவுகளாலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை நெருங்க முடியாது; மாறாக, ஹஜ் என்பது தெய்வீக அறிவின் மையமாகும், இது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் ஹஜ் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆழமாக ஆராய வேண்டும். ஹஜ் என்பது ஒழுக்கக்கேடுகள் அற்ற மற்றும் தீமைகள் நீக்கப்பட்ட ஓர் உணர்வுபூர்வமான சமுதாயத்தை கட்டியெழுப்ப இறைவனால் ஏற்படுத்தித் தரப்பட்ட அருமையான சந்தர்ப்பமாகும்.
புனித குர்ஆனைப் போலவே, ஹஜ்ஜும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உத்வேகத்தின் பயனுள்ள ஆதாரமாக இருக்கிறது. மேலும் இஸ்லாமிய சிந்தனையாளர்கள் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) இஸ்லாமிய உம்மத்தின் துன்பங்களை உணரச் செய்ய இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டு..
ஹஜ்ஜின் சமூக மற்றும் கலாச்சார நன்மைகள்
ஹாஜிகள் அனைவரும் ஒன்றாக அல்லாஹ்வின் பெயரைத் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டு துதிப்பதன் மூலம், பிரார்த்தனை செய்வதன் மூலம், அவர்கள் செய்யும் பல்வேறு மனாஸிக் மூலம், அவர்களுக்கும் படைத்த இறைவனுக்கும் இடையே ஒரு வலுவான உறவைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். பாவ மன்னிப்பு கேட்பது, அல்லாஹ்வைப் புகழ்வது, மற்றும் لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيْكَ لَكَ லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்! லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக்! இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக்க வல் முல்க்! லாஷரீக்க லக்! (யாஅல்லாஹ் உன் அழைப்பை ஏற்று வந்துள்ளேன்! உனக்கு இணை யாருமில்லை. நிச்சயமாக அனைத்துப் புகழும், அனைத்து அருட்கொடைகளும் ஆட்சி அதிகாரமும் உனக்கே உரியன! உனக்கு இணை யாருமில்லை) என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படும் வார்த்தைகளால் இறைவனின் சந்நிதானத்தில் இருப்பதை வெளிப்படுத்துகிறார்கள்.
ஹஜ்ஜின் போது, யாத்ரீகர்கள் அனைவரும் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வரும் ஆயிரக்கணக்கான சக முஸ்லிம்களை நேரடியாகச் சந்தித்து, ஒருங்கிணைக்கப்பட்ட ஹஜ்ஜின் சடங்குகள் மற்றும் வழிபாட்டுக் கடமைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் துல்லியமான வழியொன்றை கடைபிடிக்கின்றார்கள்.
அவர்கள் நன்மையை ஏவுதல் தீயவற்றை விலக்குதல் அல்-மரூஃப்பைக் மற்றும் அல்-முன்கர் என்பதன் அர்த்தத்தை ஆழமாக புரிந்துகொள்கிறார்கள், இதைப் பற்றி புனித குர்ஆன் இந்த வார்த்தைகளில் வலியுறுத்துகிறது: “மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.”. (சூரா ஆல்-இ இம்ரான், வசனம் 104)
தங்கள் நாடுகளில் இருந்து வரும் ஹஜ் குழுக்களை வழிநடத்தும் அமைப்புகள், நிறுவனங்கள் தமது பொறுப்பின் ஒரு பகுதியாக, ஹஜ் கடமையின் போது நன்மையை ஏவுதல் தீமையைத் தடுத்தல் என்ற முக்கியமான இந்த இரண்டு இஸ்லாமிய கடமைகளை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
முஸ்லிம்களிடையே சகோதரத்துவ பண்பை வளர்த்தல்.
வல்ல இறைவனின் ஹஜ்ஜுக்கான அழைப்பு முஸ்லிம்களிடையே ஒற்றுமையைக் காண விசுவாசிகளை ஒன்று சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்னும் ஹஜ்ஜின் நோக்கம் அல்லாஹ்வை நெருங்கி, மனித மற்றும் ஜின் ஷைத்தான்களின் தீமைகளிலிருந்து கூட்டாக தங்களை விடுவித்து, இஸ்லாமிய உம்மத்தில் ஒற்றுமையை வளர்ப்பதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் கண்டுபிடிப்பதாகும்.
ஆலோசனை மற்றும் ஒப்பந்தம்;
ஒருவரையொருவர் சந்திப்பதற்கும், ஆலோசனைகளில் ஈடுபடுவதற்கும், ஒப்பந்தங்களை செய்வதற்கும், உறுதிமொழி கொடுப்பதற்கும் ஹஜ் சரியான இடமாகும்.
கொடுங்கோலர்களான தலைவர்களின் கட்டுப்பாடுகள் மற்றும் அடக்குமுறைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமான நிலையில் தங்கள் நாடுகளின் விவகாரங்கள் பற்றி விவாதிக்கவும், கருத்துக்களையும் அறிவையும் பரிமாறிக்கொள்ளவும் இது ஓர் அற்புதமான வாய்ப்பாகும்.
இஸ்லாமிய உலக ஒற்றுமையை கட்டியெழுப்புதல் மற்றும் ஆணவம், அநீதி மற்றும் அடக்குமுறை போன்ற சித்தாந்தத்திற்கு எதிராக இஸ்லாமிய பொதுக் கருத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற பொதுப் பரிமாணங்கள், முஸ்லிம்களிடையே ஒற்றுமை மற்றும் நெருங்கிய உறவு ஆகியவற்றை கலந்தாலோசிக்காத எந்த ஒரு ஹஜ்ஜும் பூரணமற்ற ஹஜ்ஜாகவே கருதப்படும்.
மனித மற்றும் ஜின் எதிரிகளிடமிருந்து தன்னைத்தானே மீட்கும் கலாச்சாரம்.
இப்லீஸுக்கு (சாத்தான்) கல் எறியும் சடங்கானது உண்மையில் அனைத்து மனித மற்றும் ஜின் ஷைத்தான்கள் மீதும் கல்லெறிதல் ஆகும் (தீமைக்கு எதிரான போராட்டமாகும்). இது திமிர்பிடித்த சக்திகளுக்கு எதிராக போராடுவதையும், இஸ்லாமிய நாடுகளில் இருந்து அவர்களை துரத்துவதையும் குறிப்பதாகும்.
இஸ்லாமிய உலகம் இன்று அமெரிக்காவினால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். ஹஜ்ஜாஜிகள் அனைவரும் உலகின் பல்வேறு கண்டங்களில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்விடமிருந்து ஒரு செய்தியை எடுத்துச் செல்கிறார்கள், அது என்னவென்றால், அடிமைத்தனம் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று வலியுறுத்தும் செய்தியாகும்.
இஸ்லாத்தினதும் மனித குலத்தினதும் பொல்லாத எதிரியான சியோனிசத்தின் பாதங்களில் இருந்து பாலஸ்தீன முஸ்லிம் நிலத்தை எப்படியாவது விடுவிக்க முஸ்லிம்கள் வழிவகை செய்ய வேண்டும், மேலும் பாலஸ்தீனத்தை விடுவிக்க எதிர்ப்புக் கொடியை உயர்த்தும் இந்த தியாக மாவீரர்களுக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்க வேண்டும்.
தனிநபர்களுக்கான நன்மைகள்
இறைவனிடம் மீளும் கலாச்சாரம்;
இஹ்ராம் என்பது ஹஜ் சடங்குகளை தொடங்குவதற்கான அடையாளமாக, தைக்கப்படாத ஆடைகளை அணிவதாகும், மற்ற நேரங்களில் வழக்கமாக அனுமதிக்கப்படும் விஷயங்கள் இஹ்ராம் இருக்கும் காலகட்டத்தில் ஒரு யாத்ரீகருக்கு அனுமதிக்கப்படவில்லை. பல சாதாரண செயல்கள், ஆசைகள் மற்றும் இச்சைகள் தடைசெய்யப்பட்டுள்ளன; ஏனெனில் ஹஜ், மனிதனின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ‘தெய்வீக’ பயிற்சிப் பட்டறையாகும்.
நியாயத் தீர்ப்பு நாளை நினைவு கூர்தல்;
காபாவில் அனைத்து மக்களும் ஒரே மாதிரியான, சாதாரணமான ஆடைகளை அணிந்து, வலம்வருதல், ஏழை, பணக்காரன் மற்றும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எந்த பாகுபாடும் அங்கு கிடையாது, இறைவன் மட்டுமே அவனது இலக்கு. அனைத்து மக்களும் சமமாக இருக்கும் பொதுவான காட்சியைப் பார்ப்பதன் மூலம் ஒருவன் குரோதம், சீற்றம் அல்லது அக்கிரமங்கள் மற்றும் சமூக வேறுபாடுகள் போன்ற அனைத்திலும் இருந்து முற்றிலுமாக விடுபடுகிறான். “அல்லாஹ்விடம் உங்களில் மிகவும் கண்ணியமானவர் (நம்பிக்கையாளர்) மிகவும் பயபக்தியுடையவர்.” பயபக்தியைத் தவிர வேறு எதுவும் இங்கு இல்லை, அனைத்து யாத்ரீகர்களும் கருணையாளனின் விருந்தினர்கள், மேலும் அனைவரும் அவனுடைய கவனிப்பிலும் பாதுகாப்பிலும் உள்ளனர்.
ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்..
இந்த அழைப்புக்கு பதிலளிப்பவர்கள்,
தங்கள் இறைவனின் அழைப்புக்கு சரியான நேரத்தில் பதிலளிக்க ஹாஜிகள் மக்காவுக்கு வருகிறார்கள். இது தெய்வீக, தார்மீக, ஆன்மீக அற்புதங்கள் மற்றும் வழிபாடுகளின் தேசத்தில் தனது இறைவனின் விருந்தோம்பலை ஹாஜிகள் ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது, இது இறைவன் மீதும் சமுதாயத்தின் மீதும் கொண்ட உறுதியான பொறுப்புணர்வுடன் ஒரு உண்மையான மனிதனை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.
கஅபாவைச் சுற்றி ஏழு சுற்றுகள் சுற்றுவது,
ஹஜருல் அஸ்வத் கல்லில் தொடங்கி, எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு கண்ணியம் செலுத்துவதைக் குறிக்கிறது, அவனுடைய ஏவல், விலக்கல் மற்றும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கும் பின்பற்றுவதற்கும் அவனுடனான உடன்படிக்கையைப் புதுப்பித்து, ஒருவருடைய கடந்தகால ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. பாவங்கள் மற்றும் காமத்தை தூண்டும் மனித சுயத்திற்கு எதிரான ஒரு புரட்சி அது.
தவாப் செய்தல்
இப்லிஸிடமிருந்து (சாத்தான்) மற்றும் அவனது சூழ்ச்சிகளில் இருந்து தப்பிப்பது என்ற அர்த்தம் சஃபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையே, விறுவிறுப்பான நடையில் பொதிந்துள்ளது, இது சாத்தானிடம் இருந்து விடுபட வேண்டும் என்ற தீவிர விருப்பத்தையும், மனிதர்களைத் தூண்டும் அவனது பொல்லாத தூண்டுதல்களையும் குறிக்கிறது.
இமாம் சாதிக் (அலை) இவ்வாறு கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது: “வேகமாக ஓடி, உங்கள் பேராசைகளில் இருந்து விரைந்து அப்பால் செல்லுங்கள். தாக்குதலை அவசரப்படுத்துங்கள், அதன் பின் ஓய்வு உள்ளது; சாத்தான் தோற்கடிக்கப்படும் வரை அவனைத் தாக்குங்கள், மேலும் தீமையை நாடும் சுயத்திலிருந்து பின்வாங்குங்கள்.”