இமாம் ஸைனுல்ஆபிதீன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் :
إِنَّ اَلْمُنَافِقَ يَنْهَى وَ لاَ يَنْتَهِي وَ يَأْمُرُ بِمَا لاَ يَأْتِي وَ إِذَا قَامَ إِلَى اَلصَّلاَةِ اِعْتَرَضَ
நயவஞ்சகன் தீமையைத் தடுப்பான், ஆனால் அவன் அதனை செய்வான். பிறருக்கு ஒரு நல்ல விடயத்தை செய்யும் படி ஏவுவான், ஆனால் அவன் செய்யமாட்டான். தொழுகைக்காக நின்றால் பல பக்கங்களும் திரும்புவான்.
📚 அல்-காபி : பாகம் 02, பக்கம் 396.
விளக்கவுரை :
நிபாக் எனப்படும் நயவஞ்சகம், அகம்-புறம், சொல்-செயல் என இரு வேறுபட்ட நிலையினைக் கொண்டுள்ளது.
தான் கூறும் விடயத்தில் நம்பிக்கை அற்றவன், அல்லது தனது நம்பிக்கைக்கு முரணாக செயற்படுபவன், அல்லது பிறருக்கு காண்பிப்பதற்காக தனது உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் வேறுவிதமாக நடந்து கொள்பவன் நயவஞ்சகன் ஆவான்.
இஸ்லாமிய வரலாற்றை நோக்கும் போது, நயவஞ்சகர்களினாலேயேதான் அதிகமான ஆபத்துக்களையும், பிரச்சினைகளும் இஸ்லாம் முகம் கொடுத்துள்ளதைக் காண முடிகின்றது. நயவஞ்சகர்கள் இஸ்லாத்தின் பாரிய எதிரிகளாவார்கள் ; அவர்களை நன்கறிந்து, இஸ்லாத்தின் முதுகுக்குப் பின்னிருந்து தாக்காமல் இருக்க நாம் எப்போதும் விழிப்போடே இருத்தல் வேண்டும்.
அல்குர்ஆனில் முனாபிகூன் (நயவஞ்சகர்கள்) என்ற ஓர் அத்தியாயமே உள்ளது. அதேபோல் அல்குர்ஆனில் பல வசனங்கள் நயவஞ்சகர்களை அறிமுகப்படுத்தி வைக்கின்றது.
இந்த ஹதீஸ் நயவஞ்சகர்களின் அடையாளங்களில் மூன்றினைப் பற்றி பேசுகின்றது :
1. தமைகளையும், கெட்ட விடயங்களையும் செய்ய வேண்டாம் என பிறரைத் தடுத்து விட்டு, தான் அச்செயல்களை செய்தல்.
2. நல்ல செயல்களை செய்யும் படி பிறருக்கு ஏவி விட்டு, தான் அவற்றை செய்யாமல் விடுதல்.
3. தொழும் போது அவர்களது சிந்தனைகளும், கவனமும் வேறு இடங்களில் இருக்கும். அதாவது அவர்கள் தொழுகையினை தங்களது நம்பிக்கையினால் தொழுவதில்லை. மாறாக, தன்னை முஸ்லிம் என்று பிறருக்கு காண்பிப்பதற்காகவே செய்கின்றனர். இதன் மூலம் பிற மனிதர்களை ஏமாற்றுகின்றனர். அவர்களது உள்ளத்தில் இறையச்சமுமில்லை, தொழுகையில் கவனமும் இல்லை.
ஓர் செயலின் பெறுமதி, அது மனத்தூய்மையோடு செய்வதிலேயே உள்ளது. செயல்களை பெறுமதியற்றதாக மாற்றுவது நயவஞ்சகமாகும்.