The Signs of God in our Daily Life
1. இறையியலும் அறிவியல் வளர்ச்சியும்
உங்களது நண்பர்களில் ஒருவர் பிரயாணமொன்றை மேற்கொண்டுவிட்டு மீண்டுவரும்போது உங்களுக்காக ஒரு புத்தகத்தை அன்பளிப்பாகக் கொண்டு வந்திருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ‘இது மிகவும் உயர்வான புத்தகமாகும். ஏனெனில், அதன் ஆசிரியர் ஒரு அறிஞர். அவர் மிகவும் கற்றுத் தேர்ந்தவர். அதிகமான தகவல்களைக் கொண்டுள்ளார். மேலும், அவர் நுணுக்கமானவர், திறமையானவர், தன்னுடைய துறையில் தேர்ச்சி பெற்றவர். சொல்லப்போனால் ஒரு பேராசிரியர்’ என்று உங்களிடம் அவர் கூறுகிறார்.
இந்நிலையில், நிச்சயமாக நீங்கள் இப்புத்தகத்தை அலட்சியமாக வாசிக்கப் போவதில்லை. மாறாக, அப்புத்தகம் தன்னகத்தே கொண்டுள்ள வாக்கிய அமைப்புகள், கருத்தோட்டங்கள் மற்றும் அதனுடைய சொற்பிரயோகம் உட்பட அனைத்தையுமே மிகவும் நுணுக்கமாக நோக்குவீர்கள். அவற்றுள் ஒரு வாக்கியத்தையேனும் தங்களால் புரிந்துகொள்ள முடியாது போனால், பல மணிநேரங்கள், சில சமயங்களில் உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அடுத்துவரும் தொடர்நாட்களிலே தங்களுக்கு அதன் அர்த்தம் தெளிவாகப் புரியும்வரை அதை மீண்டும் மீண்டும் ஆராய்ந்துகொண்டே இருப்பீர்கள். ஏனெனில், அதன் எழுத்தாளர் ஒரு சாதாரணமானவரல்ல. எந்தவொரு வார்த்தையையும் எவ்வித கணிப்புமின்றி எழுதியிருக்க முடியாத மிகப்பெரும் அறிஞராக உள்ளார்.
என்றாலும், அதற்கு மாற்றமாக உங்களுக்குக் கூறப்பட்டிருந்தால், அதாவது இப்புத்தகத்தின் வெளித்தோற்றம் அழகாகத் தென்பட்டாலும் கூட, அதன் ஆசிரியர் குறைவான அறிவைப் பெற்றவர். அவரிடமிருந்து எவ்வித அறிவுப்பயனையும் பெறமுடியாது. அவருடைய காரியத்தில் எவ்விதப் பெறுமதியும் கிடையாது.
இந்நிலையில் அப்புத்தகத்தை அலட்சியத்தோடு மட்டுமே நோக்குவீர்கள். அதிலே எந்தவொரு சிறிய பகுதியையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது போனால், ‘அது நூலாசிரியருடைய அறிவின்மை காரணமாக இவ்வாறுள்ளது, அப்புத்தகத்தை வாசிப்பதற்காக மனிதன் தன்னுடைய நேரத்தை வீணடிப்பது கைசேதத்துக்குரியது’ என்பதாக நீங்கள் கூறுவது வெளிப்படையானதே.
இப்பிரபஞ்சமும் கூட மிகப்பெரும் புத்தகத்தைப் போன்றது. அதிலே இருப்பவைகள் ஒவ்வொன்றும், அதில் நின்றுமான வார்த்தையை அல்லது வாக்கியத்தை ஒத்தமைந்துள்ளன.
இறைவழிபாட்டாளர் ஒருவரின் பார்வையில் பிரபஞ்சத்தின் அனைத்து அணுக்களும், மிக நுணுக்கமாக ஆக்கப்பட்டுள்ளன. இறைவழிபாட்டின் பிரகாசத்தினூடாக ஈமான் எனும் விசுவாசத்தைப் பெற்ற மனிதர், விசேட தேடலின் மூலமாக படைப்பின் இரகசியங்களை ஆய்ந்தறிய முற்படுகிறார். இவ்விடயமே மானுட கற்கைகள் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு உந்துதல் அளிக்கிறது. ஏனெனில், இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தா எல்லையற்ற அறிவையும், சக்தியையும் கொண்டிருப்பவன். அவனது அனைத்துக் காரியங்களும் மதிநுட்பத்தினாலும், தத்துவத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ளன என்பதை அவர் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார். இதனால், அதை நுணுக்கமாக ஆராய்வதற்கு முற்படுகிறார். அதனுடைய இரகசியங்களை ஆழமாக நன்கறிந்து விளங்கிக் கொள்வதற்காக ஆய்வை மேற்கொள்கிறார்.
ஆனால், சடவாதி ஒருவரோ படைத்தலின் தத்துவங்களை ஆழமாக அறிந்துகொள்வதில் எவ்வித நாட்டமும் கொண்டிராது காணப்படுகிறார். ஏனெனில், எவ்வித உணர்ச்சியுமில்லாத இயற்கையை அதன் சிருஷ்டிகர்த்தாவாகக் கருதுகிறார். அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் தொடர்வரிசையிலே சடவாத அறிஞர் சிலர் காணப்பட்டாலும் கூட, அவர்கள் பெரும்பாலும் இறைவனை (படைப்பாளனை) ஏற்றுக்கொண்டவர்களே. என்றாலும், அதன் பெயரை ‘இயற்கை’ என்றழைக்கின்றனர். ஏனெனில், இயற்கையின் காரியத்திற்கு சீர்மை, கணிப்பு, திட்டமிடல் என்பவை இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். முடிவாகக் கூறுவதாயின், இறைவழிபாடானது அறிவியல் வளர்ச்சிக்கு வாயிலாக அமைந்திருக்கிறது.
2. இறையியலும் தன்னம்பிக்கையும் முயற்சியும்
மனித வாழ்வில் சிக்கலான, கஸ்டமாக நிகழ்வுகள் சம்பவிக்கும் தருணங்களில், அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான சகல வாயில்களும், எல்லா வகையிலும் வெளிப்படையாக மூடப்பட்டுக் காணப்பட்டால், பிரச்சினைகளின் எதிரிலே பலவீனத்தையும், தனிமையையும் மனிதன் உணர்கிறான். அந்நேரத்தில், இறைவனின் மீதுள்ள நம்பிக்கை ஒன்றுமட்டுமே, அவனுக்குக் கைகொடுக்க விரைந்துசென்று, அவனுக்கு வலிமை சேர்க்கிறது.
இப்படியானோர், இறைநம்பிக்கையின் மூலமாக தங்களை தனிமையிலும், இயலாமையிலும் இருப்பதாகக் கருதுவதில்லை. அவநம்பிக்கையைக் கொண்டிருப்பதில்லை. அவ்வாறே இயலாமையை உணர்வதுமில்லை. ஏனெனில், இறைவனின் வல்லமையானது, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அப்பாலானதாக இருக்கிறது. அவன் முன்னிலையில் எல்லாமே இலகுவானதாகவும், எளிதானதாகவும் அமைந்து விடுகின்றன.
அவர்கள் படைப்பாளனின் கருணை, ஆதரவு மற்றும் உதவி ஆகியவற்றின்பால் கொண்டுள்ள நம்பிக்கையுடன் பிரச்சினைகளோடு போராடுவதற்கு துணிந்தெழுகிறார்கள். தமது அனைத்து சக்திகளையும் செயற்படுத்தி, தன்னம்பிக்கையுடன் தம் விடாமுயற்சியைத் தொடர்ந்துவண்ணம், கஸ்டங்களை வெற்றி கொள்கிறார்கள்.
ஆம், இறைநம்பிக்கையானது மனிதர்களுக்கு மிகப்பெரும் அடைக்கலமாகும். இறைநம்பிக்கை உறுதிப்பாட்டிற்கும், விடயாமுயற்சிக்குமான மூலகாரணியாகும். இறைநம்பிக்கையானது, எப்போதும் தன்னம்பிக்கையின் பிரகாசத்தை உள்ளங்களிலே ஜீவனுள்ளதாகப் பாதுகாத்து வருகிறது. இதனால் இறை விசுவாசிகள் ஒருபோதும் தற்கொலைக்கு முயல்வதில்லை. ஏனெனில், தற்கொலை என்பது முழுமையான அவநம்பிக்கையிலும், தோல்வி மனப்பான்மையிலுமே ஊற்றெடுக்கிறது. இறைவிசுவாசிகளோ ஒருபோதும் அவநம்பிக்கையை அடைந்துகொள்ள மாட்டார்கள். அவ்வாறே தோல்வியையும் உணரமாட்டார்கள்.
3. இறையியலும் கடமையுணர்ச்சியும்
நாம் சில மருத்துவர்களை அறிந்திருக்கிறோம். வறிய நோயாளிகள் அவர்களை அணுகும்போது மருத்துவரை சந்திப்பதற்கு வழங்கப்படும் பணத்தையே நோயாளிக்கு மீளக்கொடுத்து விடுகின்றனர். அதேபோன்று, தமது நோயாளிக்கு ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், இரவு தொடக்கம் காலைவரை அவ்வறியவரின் வீட்டிலேயே அவரின் தலையணையின் அருகே விழித்திருப்பார்கள். இவர்கள் இறைவழிபாட்டாளர்களும், இறைவிசுவாசிகளும் ஆவார்கள்.
என்றாலும், மற்றும் சில மருத்துவர்களையும் அறிந்திருக்கிறோம். பணம் பெறாமல் நோயாளிக்காக மிகச்சிறிய எட்டு ஒன்றைக்கூட எடுத்துவைக்க மாட்டார்கள். ஏனெனில், பலமான இறைநம்பிக்கையை அவர்கள் பெற்றிருக்கவில்லை. இறை விசுவாசத்தைக் கொண்ட மனிதன் எத்துறையில் இருந்தாலும்கூட தனக்குள்ள கடமையை நன்குணர்கிறான். கடமைப்பாட்டை அறிந்தவனாக இருக்கிறான். நல்லதைப் புரிவோனாகவும், மன்னிப்போனாகவும் இருக்கிறான். தன்னுடைய காரியங்களை கண்காணிக்கக் கூடிய ஒரு ஆன்மீக காவல்துறை அதிகாரி தன் அகத்தின் உள்ளே இருப்பதை எப்போதும் காண்கிறான்.
எனினும், ஈமானற்றோர் சுயநலவாதிகளாகவும், ஆபத்தானவர்களாகவும் இருக்கின்றனர். தமக்குள்ள எவ்விதக் கடமைப்பாட்டையும் அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. அநீதியிழைத்தல், பிறரின் உரிமைகளை மீறுதல் மற்றும் அறியாமையில் மூழ்கிக்கிடத்தல் என்பன அவர்களுக்கு மிகச் சாதாரணமானவை. நல்லவற்றைப் புரிவதற்கு மிகவும் குறைவாகவே முன்வருவார்கள்.
4. இறையியலும் உள-அமைதியும்
உளநோயும், மனஅழுத்தமும் ஏனைய காலங்களை விடவும் நமது காலப் பகுதியிலேதான் அதிகமாகக் காணப்படுவதாக உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், இந்நோய்க்குரிய காரணிகளில் ஒன்று, கவலையுணர்வாகும். அதாவது, எதிர்கால சம்பவங்கள் பற்றிய கவலை. மரணம் பற்றிய கவலை. யுத்தம் பற்றிய கவலை. அவ்வாறே வறுமையும், தோல்வியும் பற்றிய கவலை என்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.
மேலும், மனித உள்ளத்திலிருந்து கவலையைப் போக்கக்கூடியதான விடயங்களில் நின்றும் உள்ளதுதான் இறைநம்பிக்கையாகும். ஏனெனில், கவலையைத் தோற்றுவிக்கும் காரணிகள் மனித உள்ளத்திலே ஊடுறுவுவதற்கு எத்தனிக்கும் போதெல்லாம் இறைநம்பிக்கை அதனைப் புறந்தள்ளி விடுவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அவ்-இறைவன், கருணையாளனாக இருக்கிறான். அவ்-இறைவன் அருள்பாலிப்பவனாக இருக்கிறான். அவ்-இறைவன் தன் அடியார்களின் நிலையை நன்கறிந்தவனாக இருக்கிறான். அப்படியானவனின்பால் அடியார்கள் தம்மை அமைத்துக்கொள்ளும் போதெல்லாம், அவன் அவர்களுக்கு உதவியை வழங்கி, துன்பங்களிலிருந்து விடுவிக்கிறான்.
இவ்வகையில், மெய்விசுவாசிகள் எப்போதும் அமைதியை உணர்கிறார்கள். அவர்களின் உள்ளத்திலே எவ்வித கவலையுமில்லை. ஏனெனில், இறைவனுக்காகவே அவர்களுடைய காரியம் அமைந்துள்ளது. அப்படி அவர்கள் நஸ்டத்தை அடைந்தாலும், அதனை ஈடுசெய்யுமாறு அவனிடமே வேண்டுகிறார்கள். போர்க்களத்திலும் கூட, புன்னகையை உதட்டிலே ஏந்தி நிற்கிறார்கள்.
திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது,
ألذین آمنوا ولم یلبسوا إیمانهم بظلم أولئک لهم الأمن
ஈமான்கொண்டு, தம்முடைய விசுவாசத்தை அநியாயத்தோடு கலந்து விடாதிருக்கும் அத்தகையோருக்கு நிச்சமாக அமைதியும், பாதுகாப்பும் இருக்கிறது (அன்ஆம்:32)
சிந்தித்து விடையளியுங்கள்
1. மேலே குறிப்பிடப்பட்ட ஈமானின் பிரதிபலிப்புக்கள் மற்றும் வெளிப்பாடுகள் பற்றி விளக்கக் கூடியவாறு, முன்சென்றோரின் வரலாற்றிலே ஏதாவது சம்பவமொன்று உங்கள் நினைவில் இருக்கிறதா?
2. ஏன் இறைவிசுவாசத்தைக் கொண்டிருப்போரில் சிலர் பண்பாட்டுச் சீர்கேடுகளைக் கொண்டிருப்பத்தோடு, மேலே கூறப்பட்ட நான்குவகை ஈமானியப் பிரதிபலிப்புக்களும் அவர்களில் காணப்படுவதில்லை என்பதை அறிவீர்களா?