knowing the Creator of the universe
ஏன் உலகின் சிருஷ்டிகர்த்தாவை அறிந்து கொள்வதற்கு நாம் சிந்திப்பதும், ஆராய்வதும் அவசியம்?
1. இருப்பைக் கொண்டமைந்த இப்பிரபஞ்சத்தை அறிவதற்கும், தெரிந்து கொள்வதற்குமான ஆத்ம-ஈடுபாடு எங்கள் அனைவரிடத்திலேயும் இருக்கிறது.
உண்மையில் நாம் அனைவரும் அறிந்துகொள்ள விரும்புதெல்லாம், அழகிய நட்சத்திரங்களுடன் உயர்ந்து தென்படும் ஆகாயம், மனதைப் பறிக்கும் காட்சிகளைப்பெற்று விரிந்து காணப்படும் இப்பூமி, பலவண்ணமயமான படைப்புக்கள், அழகிய பறவைகள், பல்வேறு மீன் இனங்கள், கடல்கள், மலைகள், பூஞ்செடிகள், வானைத் தொட்டு நிற்கும் பல்வகை மரங்கள் மற்றும் பல என இவையனைத்தும் தாமாகவே தோன்றினவா? அல்லது இவ்வதிசய சித்திரங்கள் ஆற்றல் மிகுந்த, கைதேர்ந்த, திறன்படைத்த ஓவியன் ஒருவனின் கையினால் தீட்டப்பட்டனவா?
இவை ஒருபுறம் இருக்கட்டும். நம் அனைவரினதும் வாழ்க்கையில் எழுகின்ற முதன்மையான கேள்விகள் இவைகளே.
நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே இருக்கிறோம்? மீண்டும் எங்கே செல்லவுள்ளோம்? நாம் இம்மூவகைக் கேள்விகளுக்குமான விடைகளை அறிந்துகொண்டால் எவ்வளவு ஈடேற்றம் பெற்றவர்களாக மாறிவிடுவோம்?
அதாவது, எமது வாழ்க்கையின் தொடக்கம் எங்கிருந்து ஆரம்பமானது? இறுதியில் எங்கே செல்ல இருக்கிறோம்? என்பவைதான் அக்கேள்விகள்.
நம்முள்ளே இருக்கின்ற தேடலார்வம் கொண்ட ஆன்மா, இக்கேள்விகளுக்கான சரியான பதில்களைக் கண்டுகொள்ளும் வரைக்கும் அமைதியாக இருக்காதே என்று எமக்குக் கூறிக்கொண்டே இருக்கிறது.
ஒரு சந்தர்ப்பத்திலே, வாகனம் ஓட்டுகின்றபோது திடீரென ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயமுற்று, மயங்கிவிடுகிறார். மருத்துவ சிகிச்சைகளுக்காக அவரை வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றுவிடுகின்றனர். அவர் சில நாட்களுக்குப் பின்னர், அவருடைய நிலை சற்றுத் தேறியதும், சுயநினைவுக்கு வருகிறார். அப்போது தன்னைச் சுற்றியுள்ளோரிடம் அவர் வினவும் முதலாவது விடயம் இதுதான், இது என்ன இடம்? ஏன் என்னை இங்கே கொண்டுவந்திருக்கிறீர்கள்? எப்போது இங்கிருந்து நான் செல்லப்போகிறேன்?
மனிதன் இவ்வாறான கேள்விகளின் முன்னால் அமைதியாக இருக்கமாட்டான் என்பதையே இச்சந்தர்ப்பம் சுட்டிநிற்கிறது.
எனவே, இருப்பைக் கொண்டமைந்த இப்பிரபஞ்சத்தின் படைப்பாளனைத் தேடி அறிந்து கொள்வதன்பால் என்மைத் தூண்டும் முதலாவது காரணி நம்மிடமுள்ள தேடலார்வமும், தாகமும் கொண்ட அதே ஆன்மாதான்.
2. நன்றி பாராட்டும் உணர்வு:
உங்களை ஒருவர் விருந்துக்கு அழைத்திருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். எல்லா வகையான விருந்துபசாரங்களும் உங்களுக்காக, தாராளமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. என்றாலும், இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட உங்களது மூத்த சகோதரனுக்குப் பதிலாகவே நீங்கள் இவ்விருந்துக்குச் சென்றிருக்கிறீர்கள். உண்மையில் நீங்கள், உங்களுக்கு விருந்தளிக்கும் அந்நபரை சரியாக அறியாத நிலையிலே மனங்கவரும் இந்நிகழ்வில் நுழையும்போது முதலாவதாக உங்களுக்குத் தோன்றுவது என்ன? உண்மையில் தங்களுக்கு விருந்தளிப்பவரை முதலில் அடையாளம் கண்டு அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதே.
நாமும் கூட, பரந்து விரிந்த இப்பிரஞ்ச விரிப்பை நோக்கும்போது, நமது சுயாதீனத் தெரிவிலே பல்வேறு அருட்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. பார்க்கும் கண்கள், கேட்கும் காதுகள், நிறைவான பகுத்தறிவும்-புத்தியும், உடலும் – உள்ளமும் சார்ந்த பல்வேறு திறன்கள், வாழ்க்கைக்கான பல்வேறு அம்சங்கள், தூய்மையும் – சுத்தமும் கொண்ட உணவுகள் முதலானவற்றை பரந்து விரிந்த இவ்விரிப்பிலே பார்க்கிறோம். இதனால், எம்மை அறியாமலேயே இவ்வனைத்து அருட்கொடைகளையும் அருளியவனை அறிந்துகொள்ளும் சிந்தனையில் வீழ்ந்து விடுகிறோம். என்னதான் அப்படியான ஒருவனின் முன்னிலையிலே நாம் நன்றி கூறும்விடயத்தில், எமது நன்றி அவனுக்குத் தேவையுடையதாக இல்லாதிருக்கும் போதிலும் நாம் அதனைச் செய்யாதவரையில் மனநிம்மதியை அடைந்து கொள்ளமாட்டோம். இது இறைவனை அறிந்து கொள்வதன்பால் என்மைத் தூண்டிவிடுகின்ற மற்றொரு காரணியாகும்.
3. இவ்விடயத்தோடு நமது இலாபம், நஸ்டம் தொடர்பைக் கொண்டிருத்தல்:
கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்களுடைய பிரயாணத்தின் வழியில் நான்கு குறுக்குப்பாதைகளின் சந்தியை அடைகிறீர்கள். அப்போது, அங்கே நெரிசல் ஏற்பட்டுக் காணப்படுகிறது. அவ்விடத்திலே பேராபத்து இருப்பதாகவும், இந்த நாற்பக்க சந்தியில் நிற்கவேண்டாம் என்றும் அங்கிருந்த எல்லோரும் உங்களிடம் கூறுகின்றனர். என்றாலும் அங்குள்ள ஒவ்வொரு பிரிவினரும் ஏதோ ஒரு பக்கத்துக்கு வருமாறு உங்களை அழைக்கின்றனர்.
ஒரு குழுவினர், மிகச்சிறந்த பாதை கிழக்குப் பக்கமாகக் செல்வதே என்று கூறுகின்றனர். மற்றொரு குழுவினர், மேற்குப் பக்கமாகச் செல்வதையே மிகவும் பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர்.
மூன்றாவது குழுவினரோ, இவ்விரண்டிற்கும் மத்தியிலே இருக்கும் பாதையின்பால் உங்களை அழைக்கின்றனர். மேலும், ஆபத்திலிருந்து விடுபட்டு வெற்றியின் வாசலை அடைந்து கொள்வதற்கான ஒரே பாதையும், ஈடேற்றத்துக்கான சகல வழிமுறைகளையும் கொண்ட பாதுகாப்பான தலமும் இதுவே என்பதாகக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறே நான்காவது குழுவினரும்.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எவ்வித பரிசீலனையுமின்றி ஏதாவது ஒரு பாதையைத் தெரிவுசெய்து கொள்வதற்கு நாம் எம்மை அனுமதிப்போமா? மேலும், எந்தவொரு பாதையையும் தெரிவுசெய்யாது அவ்விடத்திலேயே தரித்திருப்பதை நமது பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளுமா? நிச்சயமாக முடியாது.
என்றாலும், விரைவாக இக்குழுக்களில் ஒவ்வொரு சாராருடைய கூற்றுக்களை நுணுக்கமாகச் செவிமடுத்து, ஆராய்ந்து எவரிடம் உண்மைக்கும், நம்பிக்கைக்குமான அடையாளமும், போதுமான ஆதாரங்களும் இருக்கின்றனவோ அவரை ஏற்றுக்கொண்டு, நம்பிக்கையான பாதையைத் தெரிவு செய்து முன்செல்லுமாறே நமது பகுத்தறிவு எம்மை வேண்டி நிற்கும்.
இவ்வுலக வாழ்க்கையிலும் கூட நாம் இவ்வாறான விடயங்களை அதிகமாகக் கண்டிருக்கிறோம். பல்வேறு இயக்கங்களும், பிரிவுகளும் தம்பக்கம் எம்மை அழைத்துக் கொண்டிருக்கின்றன. என்றாலும், நமது தலைவிதி, நமது ஈடேற்றமும் – வீழ்ச்சியும், நமது அபிவிருத்தியும் – பின்னடைவும் மிகச்சிறந்த பாதையை ஆராய்ந்து, தெரிவு செய்வதோடு தொடரபைக் கொண்டிருப்பதால், இவ்விடயத்திலே சிந்திப்பதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
மேலும், நமது அபிவிருத்திக்கும், பூரணத்துவத்திற்கும் காரணமாக அமையும் பாதையைத் தெரிவுசெய்து, நம்மை அழிவுக்கும் சீர்கேட்டிற்கும் தூண்டுகின்றவற்றிலிருந்து விலகிக்கொள்வதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
இது பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தா தொடர்பாக ஆராய்வதற்கு எம்மை தூண்டுகின்ற மற்றொரு காரணியாகும்.
திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
فَبَشِّرْ عِبَادِ ۙ الَّذِيْنَ يَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَيَتَّبِعُوْنَ اَحْسَنَهٗ ؕ
என்னுடைய அடியார்களுக்கு நன்மாராங் கூறுவீர்களாக. அவர்கள் எத்தகையோர் என்றால், அவர்கள் (பல்வேறு) கூற்றுக்களைச் செவியேற்று அவற்றிலே மிகச்சிறந்ததைச் தெரிவு செய்து கொள்வார்கள் (39: 18)
சிந்தித்து விடையளியுங்கள்
1. இறைவனை அறிவது தொடர்பாக தமது பெற்றோர்களிடமிருந்து கேள்விப்பட்டவைக்கு அப்பால், உண்மையில் இது தொடர்பாக இதுவரைக்கும் நீங்கள் சிந்தித்ததுண்டா?
2. இறைதேடலுக்கும், இறைவனை அறிதலுக்கும் இடையில் என்ன வித்தியாசம் உள்ளதென்று உங்களால் கூறமுடியுமா?
3. இறைவனை வழிபடும் நேரத்திலே ஆத்மரீதியில் ஒருவகை ஆழமான பேரின்பத்தை நீங்கள் உணர்ந்ததுண்டா?