அபூ ஆஷிக் ஹுஸைன்
சமாதான ஒப்பந்தமா? சத்தியப் போராட்டமா?
இமாம் ஹஸன் (அலை) அவர்கள், அப்போதிருந்த சூழமைவுகளுக்கு ஏற்ப உமையா ஆட்சிக்கு எதிராகப் போராடாது, நிபந்தனைகளின் அடிப்படையிலான ஒரு ஒப்பந்தத்தின் மூலமாக தமது ஆட்சியை விட்டுக் கொடுத்திருந்தார். என்றாலும், அதைப்போன்று இமாம் ஹுஸைனும் விட்டுக் கொடுக்காது, இந்த போராட்டத்தில் இறங்கினார் என்றால் நிச்சயமாக தீர்க்கதரிசியின் வாரிசான அவர், பல நலவுகளை அதிலே உறுதியாகக் கண்டிருந்தார்.
இமாம் ஹஸன் (அலை) அவர்கள், தமது ஆட்சியை முஆவியாவுக்கு விட்டுக்கொடுத்தார் என்பதன் மூலம் ஆட்சிக்குத் தகுதியானவராக முஆவியாவைக் கண்டார் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். உண்மையில், ஒருவரை ஆட்சிக்குத் தகுதியானவராகக் காணும்போது, எவ்வித நிபந்தனைகளும் இன்றியே ஆட்சியை அவரிடம் வழங்கிவிட வேண்டும். எப்போது நிபந்தனையின் அடிப்படையில் ஒருவருக்கு அதனைக் கொடுக்கிறோமோ, அப்போது அவரைத் தகுதியானவராகக் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் அர்த்தமாகும். ஏனெனில், ஒருவருடைய தகுதியே அப்படியான நிபந்தனைகளை மீறாமல் இருப்பதிலேயே தங்கியிருக்கிறது.
இமாம் ஹஸன் (அலை) அவர்களால் இடப்பட்ட நிபந்தனைகள், முற்றிலும் முஆவியாவினால் மீறப்பட்ட ஒன்றாகவே இருந்துவந்தன. ஆம், பனூ ஹாஷிம்களை துன்புறுத்தக்கூடாது, அவர்களைக் கொலை செய்யக்கூடாது என்பதே அந்நிபந்தனைகளாக இருந்தன. ஏனெனில், பெருமானாரின் காலத்திலே நிகழ்ந்த யுத்தங்களில் உமையாக்கள் எதிர்கொண்ட மரணங்களுக்கான பலியெடுப்பாகவே, பனூ ஹாஷpம்களின் விடயத்திலே முஆவியாவின் ஆட்சி அமைந்திருந்தது. இதனால்தான், இமாம் ஹஸன் (அலை) அவர்கள், நிபந்தனைகளின் அடிப்படையில் தமது ஆறு மாதகால ஆட்சியையடுத்து, அதனை முஆவியாவுக்கு விட்டுக்கொடுத்தார்.
உண்மையில் இமாமவர்கள் மிகவும் சங்டகமான நிலையில்தான் தமது ஆட்சியிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். ஏனெனில், அப்போதைய சூழமைவுகளைக் கவனிக்கும் போது, தமது தந்தையார் இமாம் அலீ (அலை) அவர்கள் கொலை செய்யப்பட்டிருந்த காலம். இஸ்லாமிய சமுதாயத்தின் கேடயமாக இருக்கும் ‘அரசு’க்கு எதிரிகளாலும், நயவஞ்சகர்களாலும் பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருந்த காலம். முஸ்லிம்களுக்குள்ளே இரு அரசுகளும், அதனால் மோதல்களும் தோன்றியிருந்த காலம். எனவே, மென்மேலும் பிரச்சினைகள் உருவாகிக்கொண்டு போனால், அது காத்திருக்கும் வெளி-எதிரிகளுக்கு மிகவும் சாதகமான சந்தர்ப்ப சூழலை அமைத்துக் கொடுத்துவிடும் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார். மேலும், இமாம் ஹஸன் (அலை) அவர்களுக்கு, அவரது தந்தையார் இமாம் அலீ (அலை), தமது கடைசி நேரத்தில் மிகவும் காத்திரமான உபதேசங்களைப் புரிந்திருந்தார்.
‘மகனே! எனக்குப்பின் இந்த சமூகத்தில் ஆட்சிக்காக உம்மை எதிர்பார்ப்பார்கள். அவர்களோடு மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும் நடந்து கொள்வீராக. நானும், உமது பாட்டனார் முஹம்மத் (ஸல்) அவர்களும் இந்த இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதில் பல துன்பங்களை அனுபவித்துள்ளோம். ஒரு உள்ளத்தை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்காக பல சிரமங்களைக் கண்டுள்ளோம் மகனே!. அதனால், ஒவ்வொரு உயிரும் மிகப்பெறுமதி வாய்ந்ததாகும்’
இவ்வாறு, நீண்டதொரு உபதேசத்திலே மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளுமாறு உபதேசித்திருந்தார். அதன்வழியில் இமாம் ஹஸன் (அலை), அப்போதைய சூழமைவுகளைக் கருத்திற்கொண்டு தமது ஆட்சியை விட்டும் ஒதுங்கிவராக, தமது ஆன்மீக வழிகாட்டலை மக்களுக்கு வழங்கிவந்தார்.
மேலும், முஆவியா தனக்குப்பின் தனது ஆட்சிக்கு, யசீதை நியமிக்கக்கூடாது என்றும், மாறாக தமது சகோதரர் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களுக்கே அதனை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளை இட்டிருந்தார். எனவே, இமாம் ஹஸன் (அலை) அவர்கள் அப்போதைய சூழமைவுகள் காரணமாகவும், நிபந்தனைகளின் அடிப்படையிலுமே முஆவியாவிடம் தமது ஆட்சியை விட்டுக்கொடுத்திருந்தார் என்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆனால், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், முஆவியாவுடைய விடயத்திலே இமாம் ஹஸன் (அலை) அவர்கள் நடந்துகொண்டதைப்போன்று, யசீதுடைய விடயத்திலே நடந்துகொள்வதற்கு முன்வரவில்லை. முஆவியாவைப் போலல்லாது புறத்திலேனும் இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதற்குக் கூட யசீத், தயாராக இல்லாதபோது, எவ்வாறு? எந்த நிபந்தனையின் அடிப்படையில் அவனுக்கு இமாம் ஹுஸைன் பைஅத் செய்வார்?
உண்மையில், நபிகளாரும், ஹஸரத் அலீயும், அன்னை ஃபாத்திமா ஸஹ்றாவும் கர்பலா நிகழ்வை நினைவுகூர்ந்து அழுதிருக்கிறார்கள். இமாம் ஹுஸைனுக்கு எதிராக செயற்படுவோரை நோக்கி எச்சரித்தும் இருக்கிறார்கள். இந்த சமூகத்தில் மிகக்கொடியதொரு கூட்டம், சத்தியத்திற்கு எதிராக உம்மை அநியாயமாகக் கொலை செய்யும் என்றும், அவர்களுக்கு எதிராக நீங்களும் போராடுவீர்கள் என்றும் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
ஆனால், முஆவியாவோ இடப்பட்டிருந்த நிபந்தனைகளுக்கு மாற்றமாக, தனக்குப்பின் ஆட்சிக்கு தனது புதல்வனாக இருந்த யசீதை நியமித்து, அஹ்லுல்பைத்தினருடன் கொண்டிருந்த ஒப்பந்தத்தை மீறிவிட்டார். இதன்போதும், இதன்முன்னரும் முஆவியா தனது தந்திரத்தின் மூலம் பல காரியங்களை சாதித்திருப்பதைக் காண்கிறோம். அதாவது, அந்த தந்திரபுத்திக்கும், ஏமாற்று வேலைக்கும் பின்னால் பனூ ஹாஷpம்களை பலியெடுக்கும் எண்ணமே இருந்து வந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
நபிகளார் (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரசாரத்திற்கு முன்னர், அறேபிகளிடத்திலும், அறேபியாவின் கோத்திரங்களிடத்திலும் எல்லாவகையான செல்வாக்கையும், அதிகாரத்தையும் பெற்றவர்களாக, அபூசுப்யானின் பரம்பரையினர் காணப்பட்டனர். அதாவது, முஆவியாவும், அவரது தந்தையான அபூசுப்யானும் கோத்திரத்தால் பனூ உமையா ‘உமையாக்கள்’ என்று அழைக்கப்பட்டனர். உண்மையில், நபிகளார் (ஸல்) அவர்களின் இஸ்லாமியப் பிரசாரத்தின் மூலமாக இந்த செல்வாக்கு குறைந்துபோனது. முஸ்லிம்களின்மீது திணிக்கப்பட்ட யுத்தங்களிலே நபிகளார் (ஸல்) அவர்களின் பிரசாரத்திற்கு எதிராகவும், அச்சுறுத்தலாகவும் இருந்தோரை இமாம் அலீ (அலை) போன்றோரின் வாள்கள் பதம் பார்த்தன. இதன் மூலமாக அபூசுப்யானின் வம்சத்தினர் வலுவிழந்து ஒரு அதிகாரமற்ற சந்ததியாக மாறினர். அபூ சுப்யானின் குடும்பத்தினர், ‘மக்கா’ வெற்றியின்போது எவ்வித நிபந்தனையுமின்றி, பயந்து நடுங்கியவர்களாக இஸ்லாத்தில் நுழைந்தனர்.
அதுவரைக்கும் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பேரச்சுறுத்தலாக இருந்துவந்த அபூசுப்யானின் வீட்டையே ‘அபயத்தலமாக’ பெருமானார் அறிவித்திருந்தார். உண்மையில், இது நபி மூஸா (அலை) அவர்களுடைய விடயத்தில், அவர் குழந்தையாக இருக்கும்போது அவருக்கு மிகப்பெரும் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்த ஃபிர்அவ்னின் மாளிகையையே அவருக்கு ‘அபயத்தலமாக’ அல்லாஹு தஆலா ஆக்கிக் கொடுத்திருந்ததை நினைவு படுத்தியது.
இஸ்லாத்தின் வெற்றியை, தமக்கெதிரான பனூ ஹாஷிம்களின் வெற்றியாக உமையாக்கள் கருதினர். இதனால், எப்போது மீளவும் அதிகாரத்தை அடைந்து கொள்கிறார்களோ அப்போது பனூ ஹாஷிம்களை பலியெடுப்பதற்குத் தயாராக இருந்தனர். இஸ்லாமிய மயப்படுத்தப்பட்ட அரேபியாவில் மீளவும் அதிகாரத்திற்கு வருவதாயின், முதலாவது நிபந்தனை ‘முஸ்லிமாயிருத்தல்’ என்பதைப் புரிந்துகொண்டனர். இதற்கான சந்தர்ப்பத்தை, பெருமானாரின் மறைவிற்குப்பிறகு, உருவாக்கிக் கொண்டனர். இதன் தொடக்கமே சிரியாவின் கவர்னராக முஆவியா ஆனார். பின்னர், ஏற்கனவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட இமாம் அலீ (அலை) கலீஃபாவாக இருந்தபோதும் கூட முஆவியா, அவராகவே தன்னை ‘கலீஃபா’ எனப் பிரகடனப்படுத்திக்கொண்டார். இமாம் அலீயின் மறைவிற்குப்பிறகு, முழுமையாக அனைத்து அதிகாரங்களும் அவரின் கைவசமானது.
முஆவியா தனக்குப் பிறகு தனது மகனாகிய யசீதிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்து, மீளப்பெற்றுக்கொண்ட தனது சந்ததியினரின் செல்வாக்கு மற்றும் அதிகாரத்தினூடாக பனூஹாஷpம்களை பலியெடுப்பதற்குக் களமமைத்துக் கொடுத்தார். இதனால், பரம்பரைவழிப் பகைமையின் இயல்பாகவே நபிகளாரின், அலீயின் குடும்பத்தாரின் கழுத்தை அறுக்கும் எண்ணத்தோடு யசீத் ஆட்சியைத் தொடங்கினான். அதன்மூலம் கர்பலாக் களத்திலே பனூ ஹாஷிம்களைக் கொன்று குவித்தான்.
ஏமாற்றமும், சோதனையும்
ஒருபோதும் ஏமாற்றங்களால் இறைநேசர்கள் பாதிக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு முஆவியாவால் ஆரம்பத்தில் ஏமாற்றப்பட்டவரே இமாம் ஹுஸைன். முதலில், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் கூஃபாவாசிகளால் ஏமாற்றப்படவில்லை. பேராசையினாலும், அச்சுறுத்தலினாலும் கூஃபாவாசிகள் இமாம் அவர்களை கைவிட்டிருந்த போதிலும், இமாம் அலீ (அலை) அவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்று, இமாம் ஹஸன் (அலை) அவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்று, முஆவியாவால் இமாம் ஹுஸைனும் ஏமாற்றப்பட்டார். செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி இமாமுக்கு வழங்க வேண்டிய ‘கிலாஃபத்’தை முஆவியா வழங்காது ஏமாற்றிவிட்டார் என்பதே கசப்பானதோர் உண்மையாகும். ஆனால், உண்மையில் இறைநேசர்களான அவர்கள் ஏமாற்றப்படுவதில்லை. மாறாக, சோதிக்கப்படுகிறார்கள். இங்கே, அவசியம் குறிப்பட வேண்டிய வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், ஏமாற்றப்பட்டவர்களை துரோகிகள் போலவும், ஏமாற்றியவர்களை அப்பாவிகள் போலவும் சித்தரித்துக்காட்டி பொதுமக்களை ஏமாற்றுவதற்கு முற்படுவதாகும்.
يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ ۚ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ
‘தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்;. (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறை வேற்றியவராக மாட்டீர்;. அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்குகளி)டமிருந்து காப்பாற்றுவான்;. நிச்சயமாக, அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்’. (அல்-மாயிதா, வசனம் 67)
மேற்படி வசனத்தையும் நாம் இங்கு இமாம் ஹுஸைனுடைய போராட்டத்தோடு ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. உண்மையில், உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு எஞ்சியிருந்த ‘இமாமத்’ பற்றி, இறைவன் புறத்திலிருந்து பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இறங்கியிருந்ததை மக்களுக்கு அறிவிக்குமாறே அக்கட்டளை அமைந்திருந்தது. இதனைச் செய்யாவிட்டால், ‘ரிஸாலத்’ எனும் பணியை நிறைவேற்றியவராக ஆகிவிடமாட்டார் என்பதே அவ்-எச்சரிக்கையாகும்.
மேலுள்ள வசனத்திலே, இமாம் அலீ (அலை) அவர்களுடைய இமாமத்தை மக்கள் மத்தியில் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்துமாறு அல்லாஹ் எச்சரிக்கிறான். இஸ்லாத்தின் எல்லாக் கடமைகளையும், சட்டம்சார்ந்த விடயங்களையும் முழுமையாக மக்களுக்கு எத்திவைத்து தெளிவுபடுத்தியிருந்த இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு, அல்லாஹ் இப்படியான ஒரு எச்சரிக்கையை விடுப்பதைக் காணலாம்.
இதனையடுத்து, இறைவனின் கட்டளைப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் உத்தியோக பூர்வமாக தனக்குப்பின் இமாம் அலீயை, இந்த உம்மத்திற்கான தனது பிரதிநிதியாக நியமித்தார்கள்.
இவ்வாறு, ‘இமாமத்’ பற்றிய பிரகடனம், ஒவ்வொரு காலத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். இதன்தொடரிலே, ‘இமாம்’ என்ற இஸ்லாமியத் தலைமைத்துவப் பொறுப்பை வகித்த இமாம் ஹுஸைன் அவர்கள், யசீதுடைய ஆட்சியை மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் எதிர்த்து தமது இமாமத் பற்றிய பிரகடனத்தை வெளிப்படுத்தினார்.
கூஃபா மக்களின் ஆதரவையும், வேண்டுகோளையும் கண்டபிறகும், தாம் வகிக்கின்ற ‘இமாமத்’ பதவியின்படி, அவ்விடயத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தி, யசீதுடைய ஆட்சிக்கு எதிராக செயற்படவில்லை என்றால், மேற்படி வசனத்தின்படி தம்மிடமிருந்த ‘இமாமத்’ பொறுப்பையும் முழுமையாக நிறைவேற்றாதவராக ஆகிவிடுவேன் என்பதை நன்குணர்ந்திருந்தார்.
இமாம் ஹுஸைன், இமாம் ஹஸன் (அலை) அவர்களைப் போன்று, விட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்று ஒரு சாதாரண மனிதன் சிந்திப்பதைப்போல இறைத்தூதரால் நன்மாராயம் கூறப்பட்ட ஒரு ஈமானியத் தூய்மையுள்ள சம்பூரண மனிதராக இருந்த இமாம் சிந்திக்கவில்லை. தம்மை ஒரு சாதாரண மனிதனாகக் கருதாமல், பெருமானார் (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு ஆன்மீக மனிதராகவும், இமாம் அலீ (அலை) அவர்களால் அறிவூட்டப்பட்ட ஒரு தூரநோக்கை உடைய சிந்தனையாளராகவும், சுவனத்துப் பேரரசி ஃபாத்திமா (அலை) அவர்களால் பண்பிலும், பக்குவத்திலும் பரிபூரணமாக வளர்க்கப்பட்ட ஒரு தூய ஆத்மாவாகவும் தம்மைக் கருதினார். அவருடைய தூரநோக்குச் சிந்தனைகளும், ஆன்மீக அடைவுகளும் சாதாரணமான எமது சிந்தனைகளை விடவும் மிகவும் உயர்வானதாகவே காணப்பட்டன.
அஹ்லுல்பைத்தினர், தங்களுக்கான உரிமைகளை அவர்களுக்கே உரிய பண்புகளாலும், செயற்பாடுகளாலும் தெளிவுபடுத்தி அமைதியான முறையில் கேட்டனர். மறுக்கப்பட்ட நேரங்களில், தாங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ஒதுங்கி வாழ்ந்தனர். இமாம் அலீ (அலை) அவர்களுடைய ‘இமாமத்’ மறுக்கப்பட்டது. ஃபாத்திமா (அலை) அவர்களின் வாரிசுச் சொத்தான ‘பதக்’ பறிக்கப்பட்டது. இமாம் ஹஸன் (அலை) அவர்கள் ‘கிலாஃபத்’ விடயத்தில் ஏமாற்றப்பட்டார்.
இப்படியாக, அஹ்லுல்பைத்தினரின் உரிமைகளை மறுத்தலானது, தொடர்ந்து கொண்டே சென்றது. அவர்கள், நினைத்திருந்தால் மக்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சியை உண்டு பண்ணுவதன் மூலமாக தங்களது உரிமைகளை அடைந்து கொள்வதற்கு முயன்றிருக்கலாம். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அவர்களுடைய அந்தஸ்தையும், கௌரவத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி, மக்களைத் தூண்டிவிட்டு, அவர்கள் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு விரும்பவில்லை. மக்களாகவே, அவர்களது உரிமைகளை மதித்து, அவற்றை அவர்களுக்குப் பெற்றுக்கொடுத்து கௌரவிக்க வேண்டும் என்ற கடமை மக்களுக்கு இருந்தது. இந்நிலையில், தாம் மக்களைத் தூண்டிவிட வேண்டிய அவசியமில்லை என்பதால், தமது சமூகத்தில் குழப்பங்கள் நிகழ்ந்துவிடாத வகையில் மிகவும் அக்கறையோடும், கரிசனையோடும் நடந்து கொண்டனர்.
அஹ்லுல்பைத்தினர், தமக்கிருந்த அதிகாரத்தையும், சிறப்பையும் பயன்படுத்தி ஒரு சமூகத்தை தவறாக வழிநடாத்தியது கிடையாது. நபிகளாருக்குப்பின் அவர்களை விடவும் மிஞ்சிய அறிவாளிகள் யாருமே இருக்கவில்லை. இருந்தும், அந்த அறிவினால் பெருமை கொள்ளாது, பணிவோடு நடந்துகொண்டனர். அதேபோன்று, அவர்களை மிஞ்சிய வீரம் இருக்கவில்லை. இருந்தும், அவ்வீரத்தை தவறாகப் பயன்படுத்தி, கர்வத்தோடு உலாவந்ததும் கிடையாது. அவ்வாறே அவர்களை மிஞ்சிய நீதியும், நேர்மையும் யாரிடத்திலும் இருக்கவில்லை. இருந்தும், அந்நீதியையும், நேர்மையையும் எந்தவொரு தருணத்திலும் கைவிடவில்லை.
முடிவாக…
நபிகளாருடன் மிகவும் நெருக்கமாகவும், அஹ்லுல் பைத்தினரோடு மிகவும் நெருக்கமாகவும் இல்லாதவர்கள் அப்போதைய நிலையில், கர்பலாப் போராட்டம் குறித்த விடயத்திலே குழம்பிப் போயிருந்தனர். யாருடைய பக்கம் நீதியும், நேர்மையும் இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதற்கு முடியாதவர்களாய் தவித்தனர். சிலரோ, எதுவும் கூறாமல் ஒதுங்கிவிட்டனர். உண்மையில், கர்பலாக்களத்திலே நிகழ்ந்த இமாம் ஹுஸைனின் ஷஹாதத்திற்கு பின்னர்தான் மக்கள் உண்மையை உணரத் தொடங்கினர். அஹ்லுல் பைத் எனும் முற்றத்து மல்லிகையின் அருமையை புரிந்து கொண்டனர்.
நபிகளாரின் குடும்பத்தினர், இலௌகீக அரசியலுக்கு பேராசைப்பட்டு போராடுகின்றனர் என்று எதிரிகளால் இட்டுக்கட்டப்பட்டிருந்த குற்றச்சாட்டின் பின்னால் இருந்த சதியின் உண்மை நிலையை மக்கள் விளங்கிக் கொண்டனர். அவர்களின் போராட்டம், முற்றிலும் ஒரு ஆன்மீகப் போராட்டம் என்றும், இஸ்லாமிய சமூகத்தின் மறுமலர்ச்சிக்கான போராட்டம் என்றும் விளங்கிக் கொண்டனர்.
இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், யசீதுக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிபடுத்தாது இருந்திருந்தால் உண்மையான இஸ்லாமிய அரசியலும், ஆன்மீகமும் என்ன வென்பதை விளங்கிக்கொள்ளாத மக்கள், யசீது போன்றோரின் ஆட்சியை சரியானதாகவும், உயர்வானதாகவும் போற்றிப் புகழ்ந்திருப்பார்கள்.
கர்பலாப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர்தான் பலர், நாம் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தார்கள். அதே போன்று வெறுமனே பார்வையாளர்களாக மட்டும் இருந்து விட்டோம் என்பதை எண்ணிக் கைசேதப்பட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து அவர்கள், அஹ்லுல்பைத்தினரின் ஆன்மீகம், அறிவு, நீதி, நேர்மை ஆகியவற்றின் பாலான தமது தேவையை உணரத் தொடங்கினார்கள். அவ்வாறே, கர்பலாக் களத்திலே நிகழ்ந்த இமாம் ஹுஸைனின் ‘ஷஹாதத்’ ஆனது, ஏனைய இமாம்களின் ஷஹாதத்தையும், இமாமத்தையும் இஸ்லாமிய சமுதாயத்தில் உயிர்ப்பித்திருந்ததையும் கண்டுகொண்டனர்.