நஜ்ரான் நகர கிறிஸ்தவர்களுடனான இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கலந்துரையாடல்
இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் பால் நஜ்ரான் நகர கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்ததும், சையித், ஆகிப், ஜாஷிலீக் மற்றும் எழுபதுக்கும் அதிகமான அம்மதப் பெரியார்கள், சுமார் முன்னூறு பேர்கள், தமது ஆதரவாளர்களுடன் மதீனா நகருக்கு வந்திருந்தனர். இவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடனான அறிபூர்வமான உரையாடலில் ஈடுபட்டபோது, அண்ணலாரின் விரிவான, காத்திரமான நிரூபணங்களின் முன்னே பதிலற்றுப் போய்விட்டனர்.
ஏனெனில், கிறிஸ்தவர்களின் கையிலிருந்த அதிகாரபூர்வமான கிரந்தங்களிலிருந்தே இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், தாம் சத்தியத்தில் இருப்பதை நிரூபிப்பதற்கு ஆதாரங்களை முன்வைத்திருந்தார். ஹஸரத் முஹம்மத் (ஸல்) அவர்களின் நபித்துவம் குறித்த அடையாளங்களையும், அத்தாட்சிகளையும் ஹஸரத் ஈஸா (அலை) அவர்கள், வழங்கியிருந்தமையால், அத்தகைய முன்னறிவிப்புக்களின்படி, மக்காவிலுள்ள ஃபாரான் மலைகளுக்கிடையில் ஒட்டகையில் பயணிக்கக் கூடியவராக வெளிப்பட்டு, மதீனாவிலுள்ள ஈர் மற்றும் உஹத் மலைகளுக்கிடையில் ஹிஜ்ரத் செய்யக்கூடிய அப்படியான ஒருவரின் வருகைக்காக கிறிஸ்தவ சமூகம் காத்திருந்தமை மிகப்பெரும் சான்றாக இருந்தது. இதனால் தாம் சரணடைவதையன்றி, அவர்களிடத்தில் வேறு பதிலிருக்கவில்லை.
எனினும், பட்டம் பதவி ஆகியவற்றின் மீதான மோகமானது, அவ்வாறு சரணடைவதற்கு அவர்களை அனுமதிக்கவில்லை. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்ததனால், அல்லாஹு தஆலாவின் கட்டளைப்படி பொய்மையாளரிலிருந்து உண்மையாளரை பிரித்தறியும் பொருட்டு, விவாதம் புரிவதற்கான ஆலோசனையை இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். இதனை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டதும், மறுநாளே இது நிகழ்வதாக இரு தரப்பினாhலும் தீர்மானிக்கப்பட்டது.
விவாதத்திற்காக கிறிஸ்தவர்கள் தயாராகுதல்
வாக்களித்தபடி மறுநாள், மதீனா நகரின் நுழைவாயிலின் வெளிப்புறத்திலே இருந்த ஒரு மலையடிவாரத்தில் சுமார் எழுபது கிறிஸ்தவ அறிஞர்களுடன் குறித்த அனைத்துக் கிறிஸ்தவர்களும், தம்மை தோற்கடிப்பதற்காக பெரும் படை, பட்டாளங்களுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருவார்கள் என்று எண்ணிக் காத்துக் கொண்டிருந்தனர்.
திடீரென மதீனா நகரின் தலைவாயில் திறக்கப்பட்டது. இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்களோடு வலப்புறம் ஒரு இளைஞரும், இடப்புறம் திரையிட்ட பெண்ணொருத்தியும், அத்தோடு முன்னால் இரு சிறுவர்களும் வந்துகொண்டிருந்தனர். அனைவரும் ஒன்றாக, கிறிஸ்தவர்களுக்கு முன்னால் இருந்த ஒரு மரத்தடியில் வந்தமர்ந்துகொண்டனர். அங்கே அவர்களோடு வேறெவரும் வந்திருக்கவில்லை.
அவர்களின் அறிஞர்களுள் உயர் அறிஞராக இருந்த கிறிஸ்தவ ஆண்டகையொருவர் ‘முஹம்மத் (ஸல்) அவர்களுடன் வந்துள்ள இவர்கள் யார்?’ என மொழிபெயர்ப்பாளரிடம் வினவினார். அந்த இளைஞர் அவரது சிறிய தந்தையின் மகனும், அவரது மருமகனுமான அலீ இப்னு அபூதாலிப் ஆவார். அப்பெண் அவரது மகளான ஃபாத்திமா ஆவார். மேலும், அச்சிறுவர்கள் அவரது பேரப்பிள்ளைகளான ஹஸனும், ஹுஸைனும் ஆவார்கள் என்பதாக அவர் குறிப்பிட்டார்.
கிறிஸ்தவ ஆண்டகை, தமது அறிஞர்களை நோக்கி, ‘தமது நேசர்களிலும் நேசர்களாக இருக்கும் விஷேடமானோரை, தமது நெருங்கிய உறவுகளை, பிள்ளைகளை விவாதத்திற்கு அழைத்துவந்து, பேரழிவின் இடர்பாட்டிற்குள் ஆளாக்கிவிடும் அளவிற்கு, பாருங்கள் முஹம்மத் எந்தளவுக்கு மனத்திடகாத்திரம் கொண்டவராக இருக்கிறார். இவ்விடயத்திலே அவருக்கு சந்தேகமோ, அச்சமோ எழுந்திருப்பின் ஒருபோதும் இவர்களைத் தேர்வு செய்து, அழைத்து வந்திருக்க மாட்டார். மாறாக, நிச்சமாக விவாதத்திலிருந்து பின்வாங்கியிருப்பார். அல்லது, குறைந்தது தமது நேசத்திற்குரியோரை இந்நிகழ்வில் கலந்து கொள்ளாது செய்திருப்பார். எனவே, அவரோடு நாம் விவாதிப்பது அறவே பொருத்தமற்றது. ரோமானியப் பேரரசினால் அச்சுறுத்தல் இல்லாதிருப்பின் இவரை நான் ஈமான் கொண்டிருப்பேன். எனவே, அவர் எதை வேண்டுகிறாரோ அவ்விஷயத்தில் அவரோடு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு, நமது நகரத்திற்கு மீண்டுவிடுவதே சிறந்தது’ எனக் கூறினார்.
‘நீங்கள் கூறியதே மிகவும் பொருத்தமானது’ என்பதாக அங்கிருந்தோரும் ஒப்புக்கொண்டனர். அதனையடுத்து, ‘நாம் உங்களோடு விவாதிக்கப்போவதில்லை. மாறாக, சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள விரும்புகிறோம்’ என்று கிறிஸ்தவ ஆண்டகை செய்தி அனுப்பிவைத்தபோது, பெருமானாரும் அதனை ஏற்றுக்கொண்டார்.
இரண்டாயிரம் ஆபரணத் தட்டுக்கள் (ஒவ்வொரு தட்டும் நாற்பது திர்ஹம்கள் மதிப்புவாய்ந்தது), ஆயிரம் மிஸ்கால் தங்கம் (ஒரு மிஸ்கால் 4.608 கிராம்) என்பன இஸ்லாமிய அரசுக்குச் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலான சமாதான உடன்படிக்கை ஹஸரத் அலீ (அலை) அவர்களின் கைப்பட எழுதப்பட்டது.
அவற்றுள் பாதியை, அதாவது ஆயிரம் ஆபரணத் தட்டுகளும், ஐந்நூறு மிஸ்கால் தங்கமும் முஹர்ரம் மாதத்திலும், ஏனைய மீதியை ரஜப் மாதத்திலும் வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது. இரு தரப்பினரின் கையொப்பங்களுடன் இவ் உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டதும், கிறிஸ்தவர்கள் தமது வாழ்விடம் நோக்கிப் புரப்பட்டனர்.
மீளும் வழியிலே, கிறிஸ்தவ அறிஞர்களுள் ஒருவர் ஏனையோரை நோக்கி, ‘இறைவன் மீது ஆணையாக, முஹம்மது (ஸல்) அவர்கள் வாக்களிக்கப்பட்ட இறைத்தூதரே. அவர் குறிப்பிடுவது இறைவன் புறத்திலிருந்தே அமையப்பெற்றது என்பதை நானும், நீங்களும் அறிவோம். இறைவன் மீது ஆணையாக, சிறியவர், பெரியவர் என உயிர் பிழைக்காத விதத்தில் அனைவருமாக அழிந்தே தவிர, எவரும் எந்தவொரு இறைத்தூதருடனும் விவாதித்தது கிடையாது. நிச்சயமாக, நாமும் அவரோடு விவாதித்திருந்தால், அனைவருமாக அழிந்தே போயிருப்போம். பூமியில் எந்த கிறிஸ்தவரும் எஞ்சியிருக்க மாட்டார்கள்’ என்று குறிப்பிட்டார்.
மேலும், அவர் ‘இறைவன்மீது ஆணையாக, அவர் இறைவனிடம் வேண்டினால் மலைகளைக்கூட அவற்றின் இருப்பிடத்திலிருந்து நகர்த்திவிடக் கூடிய அடையாளக்குறிகளை அவரிடத்தில் நான் கண்டுகொண்டேன்’ என்பதாகவும் குறிப்பிட்டார்.
(தொடரும்…)