இஸ்லாமியர்களின் கலாசாரத்திலும் ஆன்மீகத்திலும் நாற்பது எனும் எண்ணிக்கை தனித்துவம் பெற்றதாகக் கணிக்கப்படுகிறது. ஆன்மீக ரீதியில் உயரிய அந்தஸ்துகளை அடைந்து கொள்வதற்காக நாற்பது நாட்களை ஒதுக்கி வழிபாடுகளில் ஈடுபடுவது ஆன்மீக செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெற்றதோர் அம்சமாகும்.
அவ்வாறே 40 நபிமொழிகளை மனனம் செய்வது, 40 வயதில் அறிவு பக்குவம் அடைவது, 40 விசுவாசிகளுக்காக பிரார்த்திப்பது, 40 இரவுகள் விழித்திருப்பது போன்ற பல வழக்காறுகளை நாம் சமுதாயத்தில் காண்கிறோம்.
இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும் அவரது குடும்பத்தினரும் தோழர்களும் முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் ஈராக்கிலுள்ள கர்பலாவில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். எஞ்சிய பெண்களும் சிறுவர்களும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். ஆசூராவுடன் பின்னிப் பிணைந்த கலாசாரப் பின்புலத்தில் இவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாற்பதாம் நாள்தான் ‘அர்பயீன்’ எனப்படுகின்றது.
இது ஸபர் மாதம் இருபதாம் நாளில் இடம்பெற்றுள்ளது. அஹ்லுல் பைத் வழிமுறையைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கிடையில் இந்நாள் மிகவும் முக்கியத்துவமானது.
ஷீயா முஸ்லிம்களின் முக்கியமான நாட்காட்டிகளை துல்லியமாகக் கணிப்பிடுவதில் பெயர் பெற்ற ஷெய்க் தூஸீ ‘மிஸ்பாஹுல் முதஹஜ்ஜித்’ எனும் நூலை யாத்துள்ளார். அதில், கைது செய்யப்பட்ட நபிகளாரின் குடும்பத்தினர் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் மதீனாவுக்கு திரும்பி வந்த தினமென ஸபர் மாத இருபதாம் நாளைக் குறிப்பிடுகிறார்.
மேலும் அக்காலத்தில் உயிர் வாழ்ந்த வயது முதிர்ந்த ஒரு நபித்தோழரான ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அன்ஸாரீ , இத்தினத்தில் இமாம் ஹுஸைன் மற்றும் கர்பலாவில் உயிர்நீத்தோரின் அடக்கஸ்தலங்களைத் தரிசிக்கச் சென்றதை விபரமாக எடுத்தியம்பியுள்ளார்.
அவர் அப்போது கண்பார்வை குறைந்த முதிர்ந்த நிலையில் இருந்ததோடு, கூபா நகரின் முக்கியஸ்தரான அதீயா அவ்பீ எனும் தமது நண்பரின் துணையுடன் கர்பலாவுக்குச் சென்றுள்ளார். அங்கு புராத் நதியில் குளித்து நறுமணம் பூசிக் கொண்டு வெறுங்காலோடு மெதுவாக நடந்து ஷுஹதாக்களின் அடக்கஸ்தலத்தை அடைந்து தரிசித்துள்ளார். அவருடன் பலரும் இணைந்து சென்றுள்ளனர்.
அன்றில் இருந்து இன்று வரை ஸபர் மாதம் இருபதாம் நாளாகும் போது கர்பலாவை நோக்கி இமாம் ஹுஸைன் மற்றும் அவரது தோழர்களின் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதற்காக நடைபவனியில் மக்கள் பயணிக்கும் வழக்கம் தொடர்கிறது. இந்த அர்பயீன் பேரணியில் உலக நாடுகளில் இருந்து அஹ்லுல் பைத்தினர் மீது நேசம் கொண்டுள்ள முஸ்லிம்களும் நீதி, சுதந்திரத்திற்கான போராட்டத்தை மதிக்கும் ஏனைய மதத்தினரும் உற்சாகமாகக் கலந்து கொள்கின்றனர்.
உலகில் நடைபெறும் மிகப் பெரிய பேரணியாக அர்பயீன் பேரணி உள்ளது. சாதாரண காலங்களில் இரண்டு கோடிக்கு மேற்பட்ட யாத்திரிகர்கள் இப்பேரணியில் கலந்து கொள்வர். ஆனால் தற்போதைய பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை குறைந்த போதிலும், பெருந்தொகையான மக்களின் வருகை தவிர்க்க முடியாதுள்ளது.
ஈராக் நாட்டு மக்கள் தத்தமது இடங்களிலிருந்து பலநூறு கிலோ மீட்டர் தூரம் நடைபவனியாக கர்பலாவை நோக்கி கூட்டம் கூட்டமாக வருகை தர, பிற நாடுகளில் இருந்து வருவோர் நஜப் நகரிலிருந்து கர்பலா வரையான சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே பயணிக்கின்றனர்.
கடந்த காலங்களில் இஸ்லாம் பற்றிய குறுகிய, பிழையான வியாக்கியானங்களை வழங்கியதால் வன்முறையைப் போதிக்கும் குழுக்கள் உருவாகி இஸ்லாம் பற்றிய அச்சத்தைத் தோற்றுவித்ததோடு, தப்பெண்ணம் உலகெங்கும் பரவவும் அவை வழிவகுத்தன. அதற்கு முரணாக மதம், இனம், மொழி, தேசம் போன்ற வேறுபாடுகளுக்கு அப்பால் யாத்திரிகர்கள் கண்ணியமாக வரவேற்கப்படும் புனித அர்பயீன் யாத்திரையில் வெளிப்படும் விழுமியங்கள் இஸ்லாத்தின் கருணை, அன்பு, பரஸ்பர கரிசனை பற்றிய பரிமாணங்ளைப் பறைசாற்றுகின்றன.
அர்பயீன் மூலம் ஆசூராவில் உருவாகிய எழுச்சிப் பண்பாடு, சுதந்திரம் தியாகம் சீர்திருத்தம் மற்றும் நீதி பற்றிய வேட்கையின் பண்பாடு அர்பயீன் மூலம் உயிரூட்டப்படுகின்றது. இப்பண்பாட்டுப் புரட்சியானது மனித இனம் உயிர் வாழும் காலமெல்லாம் உயிர் வாழும் தன்மை பெற்றது.
–
-அர்பயீன் நாற்பதாம் நாள் இன்று (27.09.2021)