இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்:
من زَارَ قَبْرَ أَبِي عَبْدِ اَللَّهِ كَتَبَ اَللَّهُ لَهُ ثَمَانِينَ حِجَّةً مَبْرُورَةً
🗣 யார் ஒருவர் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அடக்கஸ்தளத்தினை தரிசிக்கின்றாரோ , இறைவன் அவருக்கு என்பது அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜினை செய்ய நன்மையினை எழுதுகின்றான்.
📚 தவாபுல் அஃமால் வ இகாபுல் அஃமால்: பாகம் 01, பக்கம் 93
இதே போன்று இன்னும் சில ஹதீஸ்கள் உண்டு ; அவற்றில் சிலவற்றில் ஹஜ்ஜின் எண்ணிக்கை குறைந்தும் இன்னும் சிலவற்றில் கூடுதலாகவும் கூறப்பட்டு வந்துள்ளன. சிலவேளை ஹஜ்ஜின் எண்ணிக்கை இமாமை தரிசிக்கச் செல்கின்றவர், இமாம் பற்றிய ஞானம் எந்தளவிற்கு அவருக்கு உள்ளதோ அதை ஏற்ப அவருக்கு வழங்கப்படுகின்றது போல் உள்ளது.
இதே போன்று இன்னும் சில செயல்களை செய்யும் படியும் அதனை செய்வதிற்கு தூண்டுவதற்காக பல விதமான நன்மைகளை கூறியிருப்பதையும் காண முடிகின்றது. உதாரணமாக சிந்தித்தல் பற்றி வந்துள்ள ஓர் ஹதீஸை நோக்குவோம் :
🤔 ஒரு மணித்தியாலம் சிந்திப்பது ஒரு வருடம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதை விடச் சிறந்தது , மற்றுமோர் அறிவிப்பில் அறுபது வருடங்கள் என்றும் , இன்னும் ஒன்றில் எழுபது வருடங்கள் என்றும் வந்துள்ளது; இவ்வாறு சிந்தனையின் படித்தரத்திற்கேற்ப வருடங்களும் வித்தியாசப் பட்டு வந்திருப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது.
📚 மிர்ஆதுர் ரஷாத்: பக்கம் 33.
இமாம் ஜஃபர் பின் முஹம்மது அஸ்ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏன் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் ஹஜ்ஜினை தெரிவு செய்து கூற வேண்டும்?!🤔🤔
🔸 ஹஜ்ஜை நாம் பரிபூரணமான ஓர் வணக்கமாக கூற முடியும்; ஏனெனில், ஹஜ் செய்யச் செல்லும் மனிதன் இறைவன் தன் மீது கடமையாக்கியிருந்த ஏனைய அனைத்து கடமைகளையும் சரிவர செய்திருக்க வேண்டும். ஸகாத் , கும்ஸ் போன்று கடமைகளை நிறைவேற்றி , தனது குடும்பத்திற்கு தேவையான விடயங்களை நிறைவேற்றி விட்டு , தன்னால் யாருக்கும் அநீதி நிகழ்ந்திருந்தால் அவற்றை ஈடு செய்து விட்டே ஹஜ்ஜுக்காக புறப்படுகின்றான். பின்பு இஹ்ராம் உடை அணிந்து , தனது உள்ளம் எவற்றையெல்லாம் விரும்புகின்றதோ அவை அனைத்தையும் விட்டு விட்டு இறைவனின் கட்டளையினை தனது உள்ளத்தில நிலைநிறுத்துகின்றான். மேலும் , தொழுகை , நோன்பு போன்றவைக்கு இருக்க வேண்டிய பல நிபந்தனைகளை ஹஜ்ஜிலும் ஒன்று சேர கொண்டு செயல்படுகின்றான். உதாரணமாக; சுத்தம், இறைவனுக்கா என்ற எண்ணம்……
அதே போன்று ஹஜ்ஜில் , ஏகத்துவத்தின் முதன்மையானவர்களான ஹஸ்ரத் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள் மற்றும் ஹஸ்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரை ஞாபகப் படுத்தி அவர்களோடு இணைந்து ஹஜ் செய்கின்ற உணர்வினைப் பெறுகின்றான்.
இவைகளின் காரணமாகவே ஹஜ் அனைத்து இஸ்லாமிய கடமைகளையும் உள்ளடக்கிய பரிபூரணமான வணக்கமாகும்.
இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தரிசிப்பது கூட இவ்வாறான பண்புகளை கொண்டுள்ளது; ஏனெனில் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புரட்சி இஸ்லாத்தின் அனைத்து கடமைகளையும் உயிர்ப்பிப்பதாக அமையப்பெற்றது. இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புரட்சியினை ஞாபகம் செய்து அவர்களை தரிசிப்பது இஸ்லாத்தின் அனைத்து கடமைகளையும் உயிர்ப்பித்தது போன்றாகும்.
🔸 ஹஜ்ஜுடைய காலம் , மற்றும் அதன் கடமைகள் அனைத்தும் மனித சமூகத்தினையும் இஸ்லாத்தின் பக்கம் அவர்களது பார்வைகளை திரும்பச் செய்வது போன்று , முஹர்ரமும் இமாம் ஹுஸைனும் அவ்வாரே மனிதத்தினை நேசிக்கும் அனைவரையும் தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்கின்றனர்.
🔸 ஹஜ்ஜுடைய கடமைகளை சரிவர நிறைவேற்றியவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுகின்றது என்ற ஹதீஸினைப் போன்று இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தரிசித்தவரின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றது என ஆறாம் இமாம் , இமாம் ஜஃபர் பின் முஹம்மது அஸ்ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
مَنْ أَتَى قَبْرَ اَلْحُسَيْنِ عَلَيْهِ اَلسَّلاَمُ عَارِفاً بِحَقِّهِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَ مَا تَأَخَّرَ
📚 காமிலுஷ் ஷியாராத் : பாகம் 01, பக்கம் 139.