இமாம் பாக்கிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஸஃதுல் கைர் என்பவருக்கு மடலொன்றை பின்வருமாறு எழுதியனுப்பினார்.
‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். உம்மை தக்வா எனும் இறையச்சத்தைக் கொண்டு உபதேசிக்கின்றேன். அழிவிலிருந்து ஈடேற்றமும், இறைவன் பக்கம் மீளக்கூடிய வழியும் அதிலே இருக்கிறது.’
(அல்-காபி, பாகம் 8, பக்கம் 52)
ஆன்மீகத் தலைவர் இமாம் காமினியின் விளக்கவுரை:
ஸஃத் இப்னு அப்துல் மலிக் என்பவர், ‘ஸஃதுல் கைர்’ என்று பிரபல்யமானவர். பரிசுத்த இமாம்களின் ஐந்தாவது இமாமாகிய இமாம் பாக்கிர் (அலை) அவர்கள் தக்வாவினைக் கடைப்பிடிக்குமாறு ஸஃதுல் கைருக்கு உபதேசம் செய்து எழுதிய மடலே இதுவாகும்.
தக்வா என்பது மனிதனை அழிவிலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும். மனித வாழ்வினை வீணாகாமல் பாதுகாக்கும் ஓர் பாதுகாப்புக் கேடயமாகும். மனித வாழ்விலே, அவனுடைய வாழ்நாளின் பெருமளவு வீணாகிப் போய்விடுகிறது. அவனது வாழ்நாள் முழுவதும் நெடிக்குநெடி வீணாகி விடாமல் பாதுகாக்கும் கருவியே தக்வா ஆகும்.
தக்வா என்பது இல்லாதிருப்பின், சூரியக் கதிர் பட்டதும் கரைந்து போய்விடுகின்ற பனிக்கட்டி போன்று மனிதவாழ்வு மாறியிருக்கும்.
ஆனால், தக்வாவோ அப்பனிக்கட்டியானது கரைந்து விடுவதற்கு முன்னமே, அதனை விற்பனை செய்து எமக்கு இலாபத்தை ஈட்டித்தந்து விடுகின்றது. (மனிதவாழ்வு எனும்) பனிக்கட்டியானது, அவனது கையைவிட்டும் நழுவிச் சென்றுகொண்டே இருக்கிறது. இருப்பினும், அவன் அப்பனிக்கட்டியினை விற்பனை செய்து இலாபம் தேடிக்கொண்டான். தக்வாவுடன் சேர்ந்த வாழ்க்கையும் இவ்வாறே!… வாழ்நாள் முழுவதும் எவ்வாறாகினும் எம் கையைவிட்டும் சென்றுவிடுகின்ற ஒரு அம்சமே. ஆனால், தக்வாவுடனான வாழ்வு, எமக்காக எமது வாழ்நாளின் ஒவ்வொரு நொடியினையும் நமக்குரிய மறுமை வாழ்க்கைக்காக சேமிக்கின்றது.
தக்வா இல்லாத வாழ்க்கை எவ்வித பிரயோசனமும் அற்றது. மறுமைக்கான மிகச்சிறந்த பொக்கிஷமே தக்வாவேதான்.
மீளுதல் என்பது மறுமையினை குறிக்கின்றது. தக்வாவுடன் பிணைந்த மீளுதலே மிகச்சிறந்த மீட்சியாகும்.