“இசுலாமிய வெறுப்பின் குடியரசு” – புத்தக விமர்சனம்

“Republic of Islamophobia” – Book Review

 

மத அடிப்படைவாத அரசுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவ்வரசுகள் எவ்வாறு தொழிற்படுகின்றன, தமது குடிமக்களை எவ்வாறு பொது மதவியல் கோட்பாடுகளின் நிழலில் பலாத்காரமாக வடிவமைக்க முயல்கின்றன போன்ற விடயங்களை கற்றிருக்கிறோம். ஆனால், மதச்சார்பற்ற அடிப்படைவாதம் (Seculer Fundermentlisam) பற்றிய உரையாடல்கள் எமது புலத்தில் நடைபெறுவது மிகவும் குறைவு.

இந்த வகையில், அவ்வாய்வு இடைவெளியை முன்வைத்து மதச்சார்பற்ற அடிப்படைவாத அரசுகள் எப்படி இயங்குகின்றன? அத்தகைய அரசுகள் தமது குடிமக்களை எவ்வாறு கையாள்கின்றன போன்ற மிக முக்கியமான கேள்விகளை இந்நூல் விவாதிக்கிறது. குறித்த விடயத்தை ஆய்வு செய்வதற்கான களமாக பிரான்ஸை நூலாசிரியர் தெரிவு செய்வதுடன், அங்கு இடம்பெறும் இஸ்லாமோபோபியா நிலவரங்களை, அதன் மூலங்களை, போக்குகளை விரிவாக பகுப்பாய்வு செய்வதன் ஊடாக பிரெஞ்சு அரசின் மதச்சார்பற்ற அடிப்படைவாத போக்கினை கோடிட்டுக் காட்ட முயல்கிறார் பேராசிரியர் ஜிம் வூல்ப்ரேஸ்.

குறிப்பாக, கடந்த பல பத்தாண்டுகளாக முதலாளித்துவம் மற்றும் அது உருவாக்கிய சமூக சமத்துவமின்மை பிரான்ஸினுடைய சமூகக் கட்டமைப்பை படுமோசமாக பாதித்து வந்திருக்கிறது. ஆனால், அதனை எதிர்கொள்ள முடியாத பிரெஞ்சு அரசு, சிறுபான்மை முஸ்லிம் சமூகங்களின் மீது பழியை சுமத்தி தப்பித்துக் கொள்ள முனைகிறது. அதற்காக, மதச்சார்பற்றவாதம் மற்றும் பிரெஞ்சு குடியரசு விழுமியங்கள் (Republican Values) போன்ற எண்ணக்கருக்களை சிறுபான்மைகளுக்கு எதிரான கருவியாக அரசு பயன்படுத்தி வருகிறது.

இந்நிலை காலப்போக்கில் பிரான்ஸை நவீன மதச்சார்பற்ற அடிப்படைவாத அரசு என்ற புள்ளியை நோக்கி இட்டுச் சென்றுள்ளதா என விவாதிக்கிறார் பேராசிரியர் வூல்ப்ரேஸ். அதாவது, மதச்சார்பற்றவாதம் மனிதர்களை விடுவித்தது. ஆனால், அதே மதச்சார்பற்றவாதம் பிரான்ஸில் மனிதர்களது சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அரச இயந்திரமாக மாறியிருக்கிறது என்பதே நூலாசிரியர் முன்வைக்கும் மையவிவாதமாகும். இக்கருத்தினை விரிவாக பகுப்பாய்வு செய்யும் வகையிலேயே நூலினுடைய அத்தியாயங்கள் தொகுக்கபபட்டிருப்பதும் நோக்கத்தக்கதாகும்.

இலண்டனில் அமைந்துள்ள கிங்ஸ் கல்லூரி பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை ஆய்வாளர் மற்றும் பிரெஞ்சு அரசியல் ஆய்வுகளில் தேர்ச்சி பெற்றவர் வூல்ப்ரேஸ். இந்நூல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘தொடர்ந்து, பிரெஞ்சு சமூகப் பெறுமானங்களை முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். மேலும், முஸ்லிம்கள் தங்களது அடையாளத்தை முன்னிறுத்தி மதச்சார்பற்ற விழுமியங்களை ஓரங்கட்ட முற்படுகிறார்கள். தொடர்ந்து, பிரான்ஸினுடைய மதசார்பற்றவாதமும், நவீனத்துவ சிந்தனையும் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது அதனுடைய மதச்சார்பற்றவாதத்தை பாதுகாத்துக் கொள்ளும் போராட்டமே அரச நிகழ்ச்சிநிரலில் முன்னுரிமை பெறவேண்டும்.’

இதுபோன்ற கருத்தாடல்களை சமூகமயப்படுத்துவதே பிரெஞ்சு அரசாங்கங்களுடைய முழுநேர வேலையாய் போய்விட்டது எனக் கூறும் பேராசிரியர், கிறிஸ்துவ ஆதிக்க கருத்தியலை ஒழித்து நவீனத்துவ விழுமியங்களை நிறுவி மனித சமூகத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த பிரெஞ்சு குடியரசு, தற்போது இஸ்லாத்தை எதிர்ப்பதனை மொத்த இலக்காகக் கொண்டு செயற்படும் மதச்சார்பற்ற அடிப்படைவாத குடியரசாக உருவாகியிருக்கிறது என்கிறார். எனவேதான், தற்போதைய பிரான்ஸை ‘Republic of Islamophobia’ என்று தான் அழைப்பதாகவும் அவர் சொல்கிறார்.

உதாரணமாக, ‘பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் குளிக்கும் போது தங்களுடைய மதத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார்களா அல்லது பிரான்ஸினுடைய மதச்சார்பற்றவாதத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார்களா’ என்ற விடயம் தொடர்பாக பல மணித்தியாலங்கள் ஒதுக்கி அரசினுடைய மேல்மட்ட மற்றும் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் அரசியல்வாதிகள், கொள்கை வகுப்பாளர்கள் பேசும் அளவுக்கு பிரெஞ்சு அரசியல் கலாச்சாரம் தாழ்ந்த நிலைக்கு சென்றுள்ளதாக நூலினுடைய ‘The State of Emergency’ என்ற அத்தியாயம் குறிப்பிட்டுச் சொல்கிறது.. இவ்வத்தியாயம் பிரான்ஸினுடைய அரசியல் தளத்திலும் , பொதுவுரையாடல்களிலும் இஸ்லாமிய அடையாளங்கள் பெற்றுள்ள கவன ஈர்ப்பையும் , எந்த அளவு தீவிரமாக, மதச்சார்பற்றவாதத்திற்கு சவாலானதாக உயர்மட்ட கொள்கை வகுப்பாளர்கள் அதனை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும் விரிவாக முன்வைக்கிறது.

பிரான்ஸினுடைய முதலாளித்துவம் தோற்றுவித்த சமூக சமத்துவமின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டதும் ஒதுக்கப்பட்டதும் ஆன சமூகம் அங்கு வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் தான். ஆனால், தற்போது அதற்கான பழியை சுமப்பதும் அவர்களே. ஏற்கனவே சமூக சமத்துவமின்மையாலும், திட்டமிடப்பட்ட ஒதுக்கல் கொள்கைகளாலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சமூக புலத்தில் தமது மத அடையாளத்துடன் நிற்பதனையும் மதச்சார்பற்றவாதத்தின் பெயரால் பிரெஞ்சு அரசு தாக்கியழிக்க முற்படுவதாக நூல் வாதிடுகிறது. இந்த வகையில், பிரான்ஸினுடைய மதச்சார்பற்றவாதம் பற்றிய புரிதல் எவ்வாறு பிரெஞ்சு இனமேலாண்மைவாதமாக, சிறுபான்மைகளை ஒடுக்குவதற்கான கருவியாக, பொதுச் சமூகங்களை பிளவுபடுத்தும் ஊடகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதனை நூலினுடைய ‘Moral Panic Secularism’ என்ற அத்தியாயம் பேசுகிறது.

உண்மையில், ஒரு தேசத்தினுடய பொதுவெளி சகலருக்குமுரியது. நிற, மத, இன மற்றும் மொழி வேறுபாடுகள் இன்றி, சகலரும் பொதுவெளியில் இணைவதற்கான வியூகமாகவே மதச்சார்பற்றவாதத்தை மனித சமூகம் நோக்கியது. ஆனால், கலாச்சார, மத அடையாளங்களைக் கொண்ட சமூகங்களை பொதுவெளியிலிருந்து துரத்தியடிப்பதற்கான கருவியாக பிரான்ஸினுடைய மதச்சார்பற்றவாதம் புதியதொரு வடிவம் எடுத்துள்ளதாக பேராசிரியர் வூல்ப்ரேஸ் குறிப்பிடுகிறார். அதனால்தான் பிரான்ஸில் பலர் மதச்சார்பற்றவாதம் என்பதனை மதங்களை ஒழித்தல் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள்; வேறுசிலர் மதச்சார்பற்றவாதம் என்பது இஸ்லாமியர்களை ஒடுக்குதல் என்றும் புரிந்திருக்கிறார்கள் என பிரெஞ்சு பொதுபுலத்தில் மதசார்பற்றவாதத்தின் பல்வேறுபட்ட புரிதல்களை அடையாளப்படுத்திக் காட்டுகிறார் நூலாசிரியர்.

சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், மதச்சார்பற்றவாதம் பெண்களை விடுதலை செய்வதற்காக வந்தது எனக் கூறும் பிரான்ஸ், பாடசாலைகளில், பொதுஅரச கரும நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதனை தடை செய்ததற்கூடாக இஸ்லாமிய பெண்களை மதச்சார்பற்றவாதத்தின் பெயரால் வீட்டினுல் அடைத்து வைத்திருக்கிறது என்பதாகும். மறுபுறம், பாதிக்கப்பட்ட சமூகங்கள் தங்களுக்குரிய இடத்தை உறுதிப்படுத்த முற்படும் போது மதச்சார்பற்றவாத்தை தகர்க்கும் இஸ்லாமிய சமூக எழுச்சியாக அதனை அரசு காட்சிப்படுத்துகிறது.

இத்தகைய உதாரணங்களுக்கூடாக ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் எனச் சொல்லும் வூல்ப்ரேஸ், பிரான்ஸினுடைய மதச்சார்பற்றவாத சிந்தனையின் பிரயோகம் கலாச்சார, மத அடையாளங்களுடன் வாழும் சமூகங்கள் பொதுவெளிக்கு வரக் கூடாது மற்றும் அவர்களை மீண்டும் சமூகத்தின் எல்லைகளிலேயே (Margins of the Soceity) தொடர்ந்தும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்கை நோக்கி தெளிவாக நகர்த்தப்படுவதாக வலியுறுத்திச் சொல்கிறார். மொத்தத்தில், பிரான்ஸ் எத்தகையதொரு புறநடையானதொரு அரசியல் கலாசாரத்தைக் கொண்ட நாடு என்பதற்கு மதச்சார்பற்றவாதம் பற்றிய அதனுடைய புரிதலேயே போதுமான ஆதாரமாகும் என்கிறார் அவர்.

அதனோடு இணைந்த வகையில், பிரெஞ்சு சட்டயாப்பு மற்றும் அதன் விழுமியங்கள் இனம், மதம், மொழி சார்ந்து சமூகங்களுக்கு இடையில் பாகுபாடு காட்டுவதனை அனுமதிக்கவில்லை. எனவே, வெளிப்படையாக பிரெஞ்சு இனமேலாண்மைவாதத்தை பொதுவெளியில் வெளிப்படுத்த முடியாது. இந்நிலையில், இனமேலாண்மைவாதத்தை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாக ‘மதச்சார்பற்றவாதம்’ கவனமாக பிரெஞ்சு அரசியல் செயற்பாட்டளார்களால் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, பிரெஞ்சு காரர்கள் அல்லாத ஏனையவர்கள் , முஸ்லிம்கள் மதச்சார்பற்றவாதத்தை சரியாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் பிற்போக்கு கலாசாரங்களை மற்றும் அதன் கருத்துக்களை சுமந்து வந்தவர்கள். எனவே, அவர்களிடமிருந்து பிரெஞ்சு மதச்சார்பற்ற பொதுவெளியைப் பாதுகாக்க வேண்டும் என்ற சுலோகத்தின் பின்னால் மறைந்து நின்று பேசுவதினுடாக பிரான்ஸினுடைய இனமேலாதிக்கவாதம் ‘Respectable Racism’ (மரியாதைக்குரிய இனமேலாண்மைவாதம்) ஆக மாறியிருக்கிறது என்கிறார் பேராசிரியர் வூல்ப்ரேஸ்.

இன்னொரு வசனத்தில் சொன்னால், அழகிய நவீனத்துவ சொல்லாடல்களை பயன்படுத்தி எவ்வாறு இனமேலான்மைவாதம் பேச முடியும் என்பதனை அறிந்து கொள்வதற்கு பிரானஸினுடைய அரசியல் செயற்பாட்டாளர்களது கருத்துக்களை நோட்டமிட்டாலே போதுமானது என அழுத்தமாகச் சொல்கிறார் நூலாசிரியர். நவீனத்துவ சிந்தனை தொடர்பாக அவர்களுடைய உரையாடல்களின் பின்புலத்தில் துலங்குவது சுத்த இனமேலாண்மைவாதம்தான். ஆனால், மரியாதைக்குரிய விதத்தில் அதனை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அவ்வளவுதான். எனவே, இத்தகையதொரு தோற்றப்பாட்டை கோடிட்டுக் காட்டும் வகையிலேயே நூலினுடைய கிளைத் தலைப்பு The Rise of Respectable Racism in France’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

நூலினுடைய மற்றொரு முக்கியமான அத்தியாயம் ‘Confronting Inequality’. அத்தியாயத்தினுடைய முதல் பகுதி பிரெஞ்சு சமூகத்தில் நிலவும் சமூக சமத்துவமின்மை அதிகரிப்பை விரிவாக தரவுகளுடன் முன்வைக்கிறது. தரவுகளுடைய மொத்த சுருக்கம் யாதெனில், மக்கள் தமது குழந்தைகளது எதிர்காலம் குறித்து அச்சப்படும் நிலைக்கு பிரான்ஸினுடைய சமூக-அரசியல் சூழல் மாறிச் சென்றுள்ளதாக நூலாசிரியர் சொல்கிறார். பிரான்ஸினுடைய முதலாளித்துவ ஒழுங்கினுடைய படுமோசமான விளைவுகள் தாம் இவ்வச்சத்தை தோற்றுவித்திருக்கிறது. ஆனால், இவ்வீழ்ச்சிக்கு ஏனைய நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களே பொறுப்புச் சொல்ல வேண்டும் என தொடர்ச்சியான அரசாங்கங்கள் சொல்லி வருகின்றன.

அதாவது பிரெஞ்சுகாரர்களுக்குரிய இடத்தை வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதே மக்கள்மயப்பட்டுள்ள செய்தியாகும்.. இந்த ஊகத்தை எவ்வித ஆய்வுத் தகவல்களும் உறுதிப்படுத்தவில்லை. மாறாக, சுதேச பிரெஞ்சுகாரர்களை விட பலமடங்கு பலவீனமான நிலையிலேயே ஏனைய சமூகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. தங்களுக்கு சமத்துவம் வேண்டும் என அவர்கள் போராட்டம் நடத்தும் போதெல்லாம், முதலாவது உங்களை தொழிலற்றவர்களாக மாற்றியிருக்கும் உங்களது பிற்போக்கான கலாச்சாரத்தை ஒதுக்கி விட்டு வாருங்கள் என பிரெஞ்சு அரசு பதில் சொல்கிறது. அதற்கூடாக, மீண்டும் அவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்.

இன்னொரு புறத்தில், முதலாளித்துவத்தால் பாதிக்கப்பட்ட பிரெஞ்சுகாரர்களிடம் சென்று, குடியேறிய முஸ்லிம்கள்தான் உங்களது பொருளாதாரத்தை பறித்துக் கொண்டிருக்கிறார்கள் என அரசாங்கம் சொல்கிறது. இவ்வாறு, முதலாளித்துவத்தின் செல்வாக்கினால் இடிந்து வீழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு எவ்வித நீண்ட தூர சிந்திப்பையும் முன்வைக்காமல், ஒரு சமூகத்தை இன்னொரு சமூகத்துடன் மூட்டிவிடும் வியூகத்தையும், கலாச்சாரக் காரணிகளைச் சொல்லி வறுமைக்குட்பட்ட மக்களை இன்னும் ஒதுக்கித் தள்ளும் பொறிமுறையையுமே பிரெஞ்சு அரசு கையில் எடுத்துள்ளதாக இவ்வத்தியாயத்தில் பேராசிரியர் ஜிம் வூல்ப்ரேஸ் கோடிட்டுக் காட்டுக்கிறார்.

இறுதியாக, முதலாளித்துவம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சமூக சமத்துவமின்மை சமூகங்களை பிளவுபடுத்தியுள்ளது. பொதுச் சமூகங்களுக்கு மத்தியில் பேசுபொருளாக இவ்விடயம் மாறவும் கூடாது என அரசியல்வாதிகளும், உயர் மட்ட முதலாளிகளும் சிந்திக்கிறார்கள். எனவே, யதார்த்தத்தை மூடிமறைப்பதற்கான ஆயுதமாக சிறுபான்மைகளையும், அவர்களுடைய கலாச்சார அடையாளங்களையும் சூழ அரசியல் கருத்தாடல்களை கட்டமைப்பதற்கு அரசியல் செயற்பாட்டாளர்கள் முயற்சி செய்கிறார்கள். விளைவாக, சமூக சமத்துவத்தை வலியுறுத்தக் கூடிய ஒருமித்த சிவில் சமூக குரலொன்று தோற்றம் பெறுவதற்காக வாய்ப்புகள் கவனமாக திசைதிருப்பப்படுகின்றன என்பதே நூலினுடைய சாரம்.

அந்த வகையில், சமகால இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தின் பின்புலம் பற்றிய உரையாடலில் உள்வாங்கப்பட வேண்டிய முக முக்கியமான மற்றொரு பரிமாணத்தை இந்நூல் வெளிச்சமிட்டுக் காட்ட முனைகிறது எனலாம். அந்த வகையில், முதலாளித்துவம், பொருளாதாரம், சமூக சமத்துவமின்மை மதச்சார்பற்ற அடிப்படைவாதம், இஸ்லாமோபோபியா போன்ற தளங்களுக்கு இடையிலான இடைத் தொடர்பு பற்றிய கருத்தாடலொன்றை துவக்கி வைக்க இந்நூல் விரும்புகிறது.

இந்த அகன்ற கோட்பாட்டுப் பின்புலத்தில் நின்று நோக்கும் போது இஸ்லாமோபோபியா பிரச்சாரங்களை முன்னிறுத்தி முஸ்லிம்கள் தங்களது கலாச்சாரத்தை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வலிறுத்தும் புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பிரெஞ்சு சமூகத்தில் நிலவும் சமூக சமூகத்துவமின்மையை இன்னும் ஆழப்படுத்த மறைமுகமாக உதவுகிறார்களே அன்றி, பிரச்சினையின் ஆணிவேரை அடையாளம் கண்டு தீர்வு சொல்வதற்கு முனையவில்லை என்கிறார் பேராசிரியர் வூல்ப்ரேஸ்.

– ஜக்கி பவுஸ்

Source: www.aransei.com

Scroll to Top
Scroll to Top