Ashura and Muharram rituals in Iran
முஸ்லிம் உலகம் முழுவதும் முஹர்ரம் சடங்குகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், ஈரானில் நீங்கள் காண்பது மற்றும் அனுபவிப்பது மத சடங்குகளுக்கு அப்பாற்பட்டது. ஈரான் இதை ஒரு மத நிகழ்வாக மட்டுமல்ல, மனதில் ஆழப்பதிந்த வரலாற்றின் ஒரு பகுதியை நினைவு கூறும் ஒரு மிகப்பெரிய தேசிய கலாச்சார நிகழ்வாக வருடம்தோறும் இதை நடத்திவருகிறது.
முஹர்ரம் மாதத்தில் ஈரானுக்கு பயணம் செய்வது முதலில் கவர்ச்சிகரமானதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஒரு பார்வையாளரை வியப்பில் ஆழ்த்தும் பல நிகழ்ச்சிகள் இடம்பெறும்; குறிப்பாக ஆஷுரா எனும் அதன் பத்தாம் நாள் உச்சக்கட்டத்தை நோக்கி நகரும்போது. நிச்சயமாக உங்கள் பயணம் ஏமாற்றமளிக்காது.
மதச் சடங்குகளை நடத்த உள்ளூர் மக்கள் கூடும் இடங்களில் உலகம் முழுவதிலுமிருந்து வரும் பயணிகள் வரவேற்கப்படுகிறார்கள். பலவிதமான செயல்பாடுகள் மற்றும் சடங்குகள் இடம்பெறும், அவற்றில் அவர்களும் பங்கேற்கலாம் அல்லது பார்வையாளராக இருக்கலாம்.
முஹர்ரம் மாதத்தில் ஈரானுக்கு விஜயம் செய்வது, மக்களிடையேயான வலுவான பிணைப்பு மற்றும் அவர்களின் மத மற்றும் கலாச்சார அடையாளங்கள் குறித்து வேறுபட்ட கண்ணோட்டத்தைப் பெற ஒருவருக்கு வாய்ப்பளிக்கிறது. “முஹர்ரம் காலத்தில் ஈரானில் உங்கள் நேரத்தை எப்படி செலவிடுவது” என்பதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் சில தகவல்கள் இங்கே உள்ளன.
Muharram and the Story of Karbala
முஹர்ரம் மற்றும் கர்பலா சம்பவம்
ஒவ்வொரு ஆண்டும், முதல் சந்திர மாதமான முஹர்ரம் மாதத்தின் ஆரம்ப நாட்கள் நெருங்கி வருகையில், மக்கள் வீதியில் திரள்வார்கள், கருப்பு நிற ஆடைகளை அணிந்துகொண்டு, நபிகள் நாயகத்தின் பேரன் ஹுசைன் இப்னு அலி (அலை) மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், கர்பலா போரில் கலந்துகொண்ட 72 ஸஹாபாக்களுக்கும் நடந்த அநியாயம் பற்றி நினைவுகூர்கின்றனர். முஹர்ரம் மாதமும் அதன் 10 வது நாளான ஆஷுரா ஆகியவை ஈரானில் மிக முக்கியமான நிகழ்வுகளைக் கொண்ட காலமாகும்.
றஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்குப் பிறகு முஸ்லிம்களை சகல துறைகளிலும் வழிநடத்தும் பொறுப்பு இமாம்களுக்கு உரியது என்று ஷியா முஸ்லிம்கள் நம்புகிறார்கள். குலபாயே ராஷிதூன் காலத்தைத் தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றிய உமையாக்கள் அடக்குமுறை ஆட்சி நடத்தினர், உமையா கலீபாக்களுக்கு விசுவாச பிரமாணம் செய்ய றஸூலுல்லாஹ்வின் பேரர்களான இமாம்கள் நிர்பந்திக்கப்பட்டனர். முஆவியா இப்னு அபு சுஃப்யான் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரணாக, தனது மகனான யஸீதை தனது ஆட்சிக்கான வாரிசாக நியமித்தார். (இன்றளவிலும் தொடரும் இஸ்லாத்துக்கு முரணான பரம்பரை ஆட்சி எனும் சாபக்கேட்டின் மூலகர்த்தா முஆவியா ஆகும்) இமாம் ஹுசைன் (அலை) நடத்தைக்கெட்ட யஸீத் பின் முஆவியாவுக்கு விசுவாச பிரமாணம் செய்ய மறுத்துவிட்டார்; ஆகவே, கி.பி 680 இல் ஈராக்கிய நகரமான கர்பலா சமவெளியில் கர்பலா போர் நடந்தது.
ஈரானிய முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த போரானது இரண்டு முஸ்லிம் துருப்புகளிடையே ஏற்பட்ட போர் அல்ல; அது சத்தியத்துக்கு அசத்தியத்துக்கும் இடையிலான போராகும். ஒருபுறம் சிறப்புமிக்க மகோன்னத தலைவரான இமாம் ஹுசைன் மற்றும் அவரின் சத்தியத்தின் பக்கம் நின்ற இதயத்தில் வீர துணிச்சல்மிக்க, அவரைப் பின்பற்றுபவர்கள், மறுபுறம் உமையாத் கலீபா யாசித்தின் கொடுங்கோன்மை மற்றும் கொடுமையின் ஆதிக்கத்திற்கான இராணுவம் நூற்றுக்கணக்கான துருப்புக்களுடன் அசத்தியத்தின் பக்கம் நின்றது.
கர்பலா களத்தில் இமாம் ஹுசைன் தோற்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட போதிலும், அந்த பத்து நாட்களின் துயர சம்பவங்கள் சத்திய பாதையில் மேற்கொள்ளப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டம் மற்றும் தியாகத்தின் சிறந்த உதாரணங்களாக, படிப்பினையாக இன்றளவிலும் இருந்துவருகின்றன.
இந்த குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வின் நினைவாக, ஈரான் மக்கள் தங்கள் உயர்ந்த உணர்ச்சிகளை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறார்கள். ஆண்கள் தங்கள் மார்பில் அடித்துக்கொள்கிறார்கள், பெண்களின் கண்கள் இமாம் ஹுசைனைப் பற்றிய வேதனையையும் துக்கத்தையும் வெளிப்படுத்த கண்ணீரை நிரப்புகின்றன.
Ta’zieh
தா’ஸியே
2010 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் மானுட கலாச்சாரத்தின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள “தா’ஸியே” என்பது இஸ்லாத்திற்கு முந்தைய காலத்திற்கு உரிய பாரம்பரிய பாரசீக வீதி நாடகத்தின் புதுப்பிக்கப்பட்ட ஒரு கலை வடிவமாகும். புராண பாரசீக இளவரசரும் அநியாயமாக கொல்லப்பட்ட சியாவாஷின் ஞாபகார்த்தமாக ஈரானியர்களால் நடத்தப்பட்டு வந்த இந்த வகை நாடகங்கள் இதுகாலவரை தொடர்கிறது. இருப்பினும், இஸ்லாத்தின் வருகைக்குப்பிறகு மார்க்கத்துக்கு முரணான அம்சங்கள் நீக்கப்பட்டு மத அடையாளங்களுடன் இணைத்து இடம்பெறுகின்றன.
இப்போதெல்லாம், கர்பாலா போரின் துயரமான கதைகளை சித்தரிக்கவும் நினைவுகூரவும் மக்கள் அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் தா’ஸியே யை அரங்கேற்றுகிறார்கள். நிகழ்ச்சிகள் முஹர்ரமின் முதல் நாளில் தொடங்கி, தாசுஆ, மற்றும் ஆஷுராவில் (முஹர்ரம் 9-10 வது நாட்கள்) நிகழ்ந்த துயர்மிகு மற்றும் உணர்ச்சிபூர்வமான பகுதிகளுக்கு செல்கின்றன.
தெஹ்ரான், இஸ்ஃபாஹான், கொமெய்னி ஷாஹர், யஸ்த், நடான்ஸ், மற்றும் அராக் போன்ற நகரங்கள் உணர்வூட்டும் தா’ஸியே நிகழ்ச்சிகளுக்கு பிரபலமானவை. இக்காலத்தில் நீங்கள் இங்கு இருப்பின் ஒரு Ta’zieh ஐப் பார்க்கும் வாய்ப்பை நழுவ விட வேண்டாம். இந்த நிகழ்ச்சிகளில் இடம்பெறுபவை எல்லாம் ஒன்றல்ல என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்; வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில் அரங்கேற்றப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, கூடாரங்கள் தீயில் பொசுங்கும் இதன் உச்சக்கட்டம் பார்ப்போர் மனதில் இருந்து ஒருபோதும் அகலாத அற்புத காட்சியாய் இருக்கும்.
Nazri
நஸ்ரி
இந்த காலங்களில் நீங்கள் செல்லும் இடமெல்லாம் காய் கனிகள், பழச்சாறு வகைகள், இனிப்பு பானங்கள், காப்பி, தேநீர் அல்லது உள்ளூர் உணவு அன்பளிப்பாக கிடைக்கும். மக்கள் மற்றும் குறிப்பாக ஏழைகள் இறைவனின் பெயரால் இமாம் ஹுசைன் ஞாபகார்த்தமாக (நஸ்ரி) உணவு விநியோகிப்பதாக மக்கள் உறுதியளிப்பது பாரசீக இஸ்லாமிய கலாச்சாரத்தில் நிலையானது. இறை பொருத்தம் நாடி செய்யப்படுவதால் இதனால் பல நன்மைகள் உண்டாகும் என்று ஈரானியர்கள் நம்புகின்றனர்.
விருந்தோம்பும் பண்பில் உயர்ந்து நிற்கும் ஈரானின் மக்கள் உங்களை தங்கள் வீடுகளுக்கும் மசூதிகளுக்கும் வற்புறுத்தி அழைப்பர், அவர்கள் உங்களுக்கு முஹர்ரமில் மிகவும் பிரபல்யமான உணவுகளில் ‘நஸ்ரி’ எனப்படும் உணவை கட்டாயம் தருவார்கள். அரிசி மற்றும் பட்டாணி ஆகியவற்றுடன் செம்மறி ஆட்டிறைச்சி கலந்து சமைக்கப்படும் உணவே இந்த ‘நஸ்ரி’ ஆகும். அதன் சுவையே அலாதி.
Nakhl Gardani (carrying the palm)
நக்ல் கர்தானி ஊர்வலம்
ஈரானில் பல நகரங்களில் உள்ள மக்கள் பின்பற்றும் சடங்கு மரபுகளில் ஒன்று நக்ல் கர்தானி எனும் ஊர்வலம் ஆகும். இந்த ஊர்வலத்தில், மக்கள் ஒரு பெரிய மரக்குட்டி ஒன்றில் ஈத்தம் ஓலைகளால் ஆன கட்டில் போன்ற ஒன்றை தோள்களில் சுமந்து செல்வர். இது ஆஷூராவில் இமாம் ஹுசைனின் தலை துண்டிக்கப்பட்ட உடல் சுமந்து செல்லப்பட்டதை நினைவூட்டும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கர்பலா போருடனான அதன் தொடர்பைக் குறிக்கும் கருப்பு மற்றும் பச்சை துணிகள், வாள்கள் மற்றும் கொடிகளால் மக்கள் நக்லை அலங்கரித்திருப்பர். இந்த நக்ல் கர்தானி சடங்கில், நூற்றுக்கணக்கான ஆண்கள் கலந்துகொள்வர்.
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவரும் மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் இந்த புகழ்பெற்ற நக்ல் கர்தானியைக் கண்டுகளிக்க யாஸ்த் நகருக்கு வருகின்றனர்.
Sham-e Ghariban
ஷாம்-ஏ கரீபான்
ஷாம்-ஏ கரிபான் என்பது ஆஷுராவின் மாலை மற்றும் இரவைக் குறிக்கிறது. மேலும் இது “கைவிடப்பட்ட இரவு” என்ற பொருளையும் கொண்டுள்ளது. குழந்தைகள் மற்றும் மக்களுடன் நீங்கள் நடந்து செல்லும் இடமெங்கும் மெழுகுவர்த்திகளின் ஒளிரும் மங்கிய ஒளியைப் பற்றி சற்று சிந்தனை செய்து பாருங்கள். கர்பலா களத்தில் எதிரிகளால் கூடாரங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, இருளில் விடப்பட்ட அனாதைக் குழந்தைகளுக்காக மக்கள் புலம்பும் காட்சி உள்ளத்தை உருக்கிவிடும். இந்த கொடிய சம்பவத்தை நினைவுகூர்வதற்காக முஹர்ரம் 10 வது நாளில் ஒரு கூடாரத்தை எரிப்பதும், ஷஹீதுகாக்கப்பட்ட குழந்தைகளின் ஞாபகார்த்தமாக மெழுகுவர்த்திகள் எரிக்கப்படுவதும் ஈரானில் ஒரு பாரம்பரியமாகிவிட்டது.
Gel Mali (rubbing mud on the body)
ஜெல் மாலி (உடலில் சேற்றைத் தேய்த்தல்)
லொரெஸ்தான் மாகாண மக்கள் இமாம் ஹுசைனின் ஷஹாதத்தை நினைவுகூரும் முகமாக தனித்துவமான பல மத சடங்குகளுக்கு மிகவும் பிரசித்தமானவர்கள். தாம் அன்பு வைத்துள்ள ஒருவரின் மரணத்திற்கான விரக்தியையும் துக்கத்தையும் வெளிப்படுத்த தலை மற்றும் தோள்களில் மண் மற்றும் புழுதியை தேய்த்துக் கொள்வது அவர்களின் கலாச்சாரத்தில் உள்ள ஒன்றாகும்.
ஆஷூரா நிகழ்வை அனுஷ்டிக்குமுகமாக லொரெஸ்தான் மக்கள் மூன்று தினங்களுக்கு முன்னரே கொராமாபாத் நகரின் பிரதான சதுக்கத்தில் சகதி கிடங்கை தயார் செய்வர். குறிப்பிட்ட தினங்களில் ஆண்கள் தலையிலும் உடலிலும் சகதியை தடவிக்கொள்வர். அங்கு இமாம் ஹுசைனின் தியாகம் தொடர்பாக பிரசங்கங்களும் கோஷங்களும் இடம்பெறும், அவ்வேளை மக்கள் தமது மார்பில் அடித்துக்கொண்டு தமது துக்கத்தை வெளிப்படுத்துவர். இந்த தனித்துவமான சடங்கு மூன்று நாட்களுக்கு நீடிக்கும்.
Mash’al Gardani (carrying the torches)
மஷால் கர்தானி (தீ பந்தங்களை ஏந்தல்)
அரபு சுற்றுப்புறங்கள் மற்றும் தெஹ்ரான் (தவுலதாபாத் மற்றும் ஷஹர்-இ-ரே போன்ற மாவட்டங்கள்), கோம், மஷாத் மற்றும் அர்தகன் போன்ற நகரங்களில் “மஷால் கர்தானி” பொதுவான ஒரு துக்க சடங்காகும். ஆண்கள் தீப்பந்தங்கள் பொருத்தப்பட்ட ஒரு சட்டத்தை சுமந்து, அதைத் தோள்களில் வைத்து சுழற்றுவார்கள். இந்த சடங்கில் கோஷமிடுவது மற்றும் மார்பில் அடித்து தமது துக்கத்தை வெளிப்படுத்துவது போன்ற சடங்குகள் பொதுவானவை
Tasht-Gozari (the Basin of Water)
தாஷ்ட்-கோஸாரி (தாண்ணீர் தொட்டி)
அர்தபில் நகரம் தஷ்த்-கோஸாரி என்ற தனித்துவமான துக்க வைபவத்துக்கு பிரபலமானது. இந்த விழாவில், தண்ணீர் நிரம்பிய வெண்கல அல்லது தாமிரத்தின் ஒரு பெரிய பாத்திரம் மசூதிகளைச் சுற்றி அல்லது பிரார்த்தனை மண்டபங்களைச் சுற்றி எடுத்துச் செல்லப்படும். அதிலிருந்து சிறிது தண்ணீர் குடிக்க அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வைபவம் ஈரானில் மிகவும் பழமையான ஒன்றாகும், மேலும் இமாம் ஹுசைனும் அவரது ஆதரவாளர்களும் தண்ணீர் இன்றி தாகத்தால் பட்ட அவஸ்தையை இந்த சடங்கு குறிக்கிறது. ஆஸரி மொழியில் எழுப்பப்படும் கோஷமும் நேர்த்தியும் இந்த வரலாற்று சிறப்புமிக்க சோக நிகழ்வின் மறக்க முடியாத அனுபவமாக அமைகின்றன.
=======================
· முஹர்ரம் மற்றும் ஆஷுராவின் போது ஈரானுக்கு பயணம் செய்வது ஈரானிய சமூகத்தின் மத மற்றும் கலாச்சார அடுக்குகளின் ஆழத்தில் மறக்க முடியாத பயணமாக இருக்கும் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
· கிட்டத்தட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் தாசுஆ மற்றும் ஆஷுரா தினங்களில் மூடப்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இருப்பினும் உணவைப் பெறுவதில் எந்தக்கஷ்டமும் இருக்காது. திறந்த உணவகங்கள் மற்றும் மளிகை கடைகளை கண்டுபிடிப்பது எளிது.
· இந்த நாட்களில் பெரும்பாலான மக்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்துமுகமாக கருப்பு அல்லது இருண்ட வண்ணங்களை அணிவார்கள். நீங்கள் விரும்பும் எந்த நிறத்தையும் அணிய உங்களுக்கு சுதந்திரம் உண்டு; இருப்பினும், உங்கள் மரியாதை மற்றும் சிந்தனைத்திறனைக் காட்ட சிவப்பு மற்றும் பிரகாசமான வண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது.
https://www.visitouriran.com/blog/ashura-and-muharram-rituals-in-iran/#