மஷ்ஹத் நகரம்

MASH’HAD CITY

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைநகர் தெஹ்ரானுக்கு அடுத்து, முக்கிய நகரமாகக் கருதப்படுவது மஷ்ஹத் நகரமாகும். ஈரானின் கொராஸான் மாநிலத்தின் தலைநகராக மஷ்ஹத் கருதப்படுகின்றது. தலைநகரான தெஹ்ரானுக்கு அடுத்தபடியாக, ஈரானில் அதிக மக்கள்தொகையைக்கொண்ட இரண்டாவது பெரிய நகரமாக மஷ்ஹத் உள்ளது.

இந்நகரம் ஈரானின் வடக்கே இரண்டு மலைத் தொடர்களுக்கிடையில் ‘கஷஃப் ரூத்’ எனும் நதிப் பள்ளத்தாக்கில் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழித்தோன்றலும் (இத்னா அஷரிய்யா) ஷீஆக்களின் எட்டாவது இமாமுமாகிய அலீ இப்னு மூஸா அர்-ரிழா (அலை) அவர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதால் இது ஒரு புனிதத்தலமாகப் போற்றப்பட்டு வருகின்றது. மேலும், ஈரானுக்குக் கிழக்கே இருக்கும் நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்கான ஒரு மையமாக இது உள்ளது.

உலகப் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள கனாத்

பள்ளத்தாக்குகளில் உள்ள பல நகரங்களைப் போலவே, மனிதவாழ்வுக்கு அவசியமான நீர், மலைகளின் சரிவுகளில் கீழ்நோக்கி துளையிடப்பட்டு ‘கனாத்’ எனும் தொடர்ச்சியான கால்வாய்களின் ஊடாக பெறுக்கொள்ளப்படுகின்றது. இது ஈரானின் தனித்துவமான தொழில்நுட்பமாகத் திகழ்கின்றது.

இந்நகரம் ஓரளவு வட்டவடிவமான அமைப்பில் உள்ளது. நடுமத்தியில், இமாமின் அடக்கஸ்தலம் மற்றும் நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றைக்கொண்டு சுற்றச்சூழவுள்ள 12 சுற்றுப்புறங்களுக்கு ஒளியேற்றுவது போல் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

உலகம் முழுவதுமிருந்து வருடம்தோறும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள், குறிப்பாக அஹ்லுல்பைத் நேசம்கொண்ட முஸ்லிம்கள், புனிதஸ்தலமாகக் கருதி இவ்விடத்துக்கு யாத்திரை மேற்கொள்வதன் காரணமாக 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், இந்நகரம் ஒரு பெரிய நவீன மாநகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதனைச் சுற்றியுள்ள நிலப்பகுதியில் நான்கில் மூன்று இப்புனிதஸ்தலத்துக்கு உரியதாக ‘வக்ஃப்’ செய்யப்பட்ட நிலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மஷ்ஹத் நகரம், ஒரு பல்லின மக்கள் வாழும் நகரமாகும். இங்கு பெரும்பான்மையான பாரசீகர்களுடன் துர்க்கி மற்றும் குர்த்தி இன மக்களும் பலூச்சி, தரி, ஹர்ஜாதி, உஸ்பெக்கி, தாஜிக்கி மற்றும் லோரி ஆகிய இன மக்களும் வாழ்கின்றனர். 1979 முதல் 1989 வரையிலான ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் 2001ல் அந்த நாட்டின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, இலட்சக்கணக்கான ஆப்கானியர்கள் ஈரானுக்கு, குறிப்பாக கொராசான் மற்றும் மஷ்ஹதுக்கு அபயம் தேடி வந்ததோடு, இன்றும் அங்குதான் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்

உற்பத்தி மற்றும் வணிகம்
மஷ்ஹத் நகரின் பிரதான தொழில்களில் இயற்கை எரிவாயு மற்றும் உணவு பதனிடுதல் மற்றும் ஜவுளி, கம்பளங்கள், வால்வுகள், குழாய்கள், பொருத்திகள், நீர் சூடாக்கி, காற்று குளிரூட்டிகள் மற்றும் மட்பாண்ட உற்பத்தி போன்றவை காணப்படுகின்றன. இவைபோக பழங்கள், தாவர விதைகள் மற்றும் கம்பளி போன்ற விவசாய மற்றும் விலங்கு பொருட்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. ஆப்கானிஸ்தான், இந்தியா, பாக்கிஸ்தான், சீனா மற்றும் மத்திய ஆசியா ஆகிய நாடுகளுடன் ஈரானின் வர்த்தகம் பெரியளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது, மேலும், அந்த வர்த்தகத்தில் சில, கிழக்கு எல்லைக்கு அருகே அமைந்துள்ள பெரிய ஈரானிய நகரங்களில் ஒன்றான மஷ்ஹத் வழியாகவே செல்கின்றன. மஷ்ஹதின் ஏற்றுமதியாக மின்சாரம், எரிவாயு, தாதுப் பொருட்கள், கால்நடை, பருத்தி நார், குங்குமப்பூ, தானியங்கள், சர்க்கரை பீற்றுகள், சீமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் என்பன காணப்படுகின்றன.

சேவைகள்

நகரில் ஒரு நட்சத்திர ஹோட்டல்

மஷ்ஹ்தின் சேவை வருவாயில் பிரதான பங்குவகிப்பது யாத்திரிகர் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையால் கிடைப்பதாகும். 1970க்குப் பின் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளால் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நகரத்துக்கு ஆண்டுதோறும் 10 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். இவர்கள் தங்கிச்செல்ல சாதாரண விடுதிகளிலிருந்து நட்சத்திர ஆடம்பர ஹோட்டல்கள் வரை உள்ளன. பயணிகளுக்கு சிறந்த சேவைகள் வழங்கப்படுகின்றன.

போக்குவரத்து

உள்கட்டமைப்பு-மேம்பாட்டு முயற்சிகள் மஷ்ஹதில் உள்ள சாலை மற்றும் இரயில் சேவை அமைப்புகளை கணிசமாக விரிவாக்கியது.

இந்த நகரம் தெஹ்ரான் மற்றும் பிற ஈரானிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆப்கானிஸ்தானில் ஹெராட் நகருக்கும் மஷ்ஹதுக்கும் இடையில் சொகுசு இரயில் சேவை ஒன்றும் நடத்தப்படுகிறது. மஷ்ஹதில் மெட்ரோ போக்குவரத்து அமைப்பும் உருவாக்கப்பட்டதில் இருந்து போக்குவரத்து சேவை மேலும் முன்னேற்றமடைந்துள்ளது. மஷ்ஹத் சர்வதேச விமான நிலையம் நாட்டிலுள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகும். ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மற்றும் பல ஈரானிய நகரங்களுக்கும் விமாச்சேவைகள் தினசரி இடம்பெறுகின்றன.

உலகக்கவிஞர் பிர்தவ்ஸி பல்கலைக்கழகம்

மஷ்ஹதிலுள்ள பிர்தவ்ஸி பல்கலைக்கழகம் நாட்டிலுள்ள உயர் கல்விக்கான ஒரு முக்கிய நிறுவனமாக விளங்குகிறது. மானுடவியல், கணிதவியல், இயற்கை அறிவியல், இறையியல், கலை, விஞ்ஞானம், தொழில் நுட்பம், இயற்கை விஞ்ஞானம் மற்றும் கால்நடை மருத்துவம் போன்ற துறைகளுக்கு பிரபல்யம் பெற்ற இடமாகவும் அது உள்ளது.

இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்த மருத்துவ பீடம் 1989 இல் தனியாக பிரிக்கப்பட்டு, ஒரு சுயாதீனமான மருத்துவ கல்லூரி நிறுவனமாக மாறியது. இதுபோக, இன்னும் 6 பல்கலைக்கழகங்களும் பல கல்விக்கல்லூரிகளும் அங்குள்ளன. இவை தவிர பாரம்பரிய சன்மார்க்க மதராசாக்களும் இயங்கிவருகின்றன. இவை உலகம் முழுவதிலும் இருந்து மாணவர்களை ஈர்த்துள்ளன.

வாழ்வும் கலாசாரமும்

மஷ்ஹத் மக்களின் வாழ்க்கை இமாம் றிழாவின் ஸியாரத்துடன் பின்னிப்பிணைந்ததாகும். ஈரானிலிருந்து மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் இருந்து மில்லியன் கணக்கான முஸ்லிம்கள், விசேடமாக ஷீ’ஆ முஸ்லிம்கள், இமாம் றிழாவுக்கு கண்ணியம் செலுத்துமுகமாக இவ்விடத்துக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். இங்குள்ள பிரமாண்டமான ஜும்மா மஸ்ஜித் 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பதாகும். பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் நகருக்கு மேலும் அழகு சேர்க்கிறது. ‘ஷாஹ் நாமெஹ்’வைத் தந்த உலகமகா கவிஞர் பிர்தவ்ஸியின் அடக்கஸ்தலமும் மஷ்ஹத் நகருக்கு வெளியே அமைந்துள்ளது..

வரலாறு

முந்தைய காலங்களில் மஷ்ஹத் ‘சனாபாத்’ என்றும் ‘நூகான்’ என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமமாக இருந்தது. காலப்போக்கில் பெரும் நகரமாக வளர்ச்சி கண்டது. றஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் வழித்தோன்றலும் (இத்னா அஷரிய்யா) ஷீஆக்களின் எட்டாவது இமாமுமாகிய இமாம் அலீ இப்னு மூஸா அர்-ரிழா (அலை) அவர்கள் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதன் பிறகு, அவரது புனித உடல் இங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. 10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இமாம் மரணித்து ஒரு நூற்றாண்டுக்கு பிறகு, சனாபத் என்ற கிராமத்தை அல்-மஷ்ஹத் அல்-ரழவி (அதாவது, இமாம் ரிழாவின் உயிர்த்தியாகத் தளம்) என்று அழைக்கலாயினர். 1330ம் ஆண்டு இந்நகரத்தை அடைந்த உலகப்புகழ்பெற்ற சஞ்சாரி இப்னு பதூதாவும் இந்நகரத்தை அந்தப் பெயர்கொண்டே அழைத்தார் என்று வரலாறு குறிப்பிடுகிறது. அப்பெயரே சுருக்கமாக இன்று மஷ்ஹத் என்று அழைக்கப்படுகின்றது.

உஸ்பெக் மற்றும் ஆப்கானிய படையெடுப்புகளால் இந்நகரம் பலமுறை அழிவுக்குள்ளாகின. ஜும்மா மஸ்ஜிதும் இமாமின் ஸியாரமும் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டன. பொதுமக்கள் மீது அவர்கள் மேற்கொண்ட தாக்குதல்களின் காரணமாக, அந்நகரை விட்டும் மக்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஆயினும் ஆக்கரமிப்பு படைகளினால் நீண்ட காலத்திற்கு அந்நகரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

இமாம் ரிழா ஸ்டேடியம்
அதன் பிறகு இப்புனிதஸ்தலம் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. ஈரான் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் (1978 – 79) இமாம் கொமைனி (ரஹ்) அவர்களது ஆட்சியின் போதும் அதனைத் தொடர்ந்து இமாம் காமெனயி அவர்களது ஆட்சியிலும் அப்புனிதஸ்தலத்தின் கௌரவம் காக்கப்படும் முறையில் நகரின் பொதுவான கலாச்சார, கல்வி, மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Scroll to Top
Scroll to Top