ஏழாம் அமர்வு – தொடர் 01

புதன் இரவு, ரஜப் மாதம் 29ம் நாள், ஹிஜ்ரி 1345.

(இரவின் ஆரம்பத்தில் பிரமுகர்கள் பலர், வருகை தந்திருந்தனர். சாதாரண உரையாடல் மற்றும் தேநீர் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, பிரதான அமர்வு உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது)

செய்யித் அப்துல்ஹை: தாங்கள் சில இரவுகளுக்குமுன்; உரையாடிக் கொண்டிருந்தபோது, அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த மஸ்ஜித் இமாம் அவர்கள், ஒரு விஷயம் சம்பந்தமாக ஆதாரம் வேண்டியபோது, தட்டிக்கழித்ததனாலோ அல்லது வேறொரு பாஷையில் சொல்வதாயின் குதர்க்கம் புரிந்து எமது கவனத்தை திருப்பி விட்டதனாலோ, குறித்த விஷயம் பேசப்படாமல் தவறிப் போய்விட்டது.

அழைப்பாளர்: விஷயம் என்னவென்றும், தங்களது எந்த வினாவுக்கு விடை கொடுக்கப்படவில்லை எனவும் நினைவிலே இல்லை. அதனால், தயவு செய்து நினைபடுத்துமாறு பணிவாக வேண்டிக்கொள்கிறேன்.

செய்யித்: செய்யிதுனா அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களோடு ஆத்மார்த்தமான ஒருமைப்பாட்டைக் (إتحاد نفساني) கொண்டிருக்கிறார்கள். இந்தவகையில், அவர் ஏனைய நபிமார்களைவிடவும் சிறந்து விளங்குகிறார்கள் என்பதே அந்த விஷயமாகும்.

அழைப்பாளர்: உண்மைதான். இக்கூற்று, எனது நம்பிக்கையாகவே இருக்கிறது.

செய்யித்: அப்படியாயின், ஏன் எமது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காது விட்டீர்கள்?.

அழைப்பாளர்: இது மிகவும் தவறான கருத்தாகும். எல்லா இரவுகளும் செவியேற்றவர்களாக இருந்துவிட்டு, தற்போது தட்டிக்கழித்தல், குதர்க்கம் புரிதல் போன்றவற்றை என்னோடு சம்பந்தப்படுத்திவிட முயற்சிக்கிறீர்கள். தட்டிக்கழிப்போ, குதர்க்கமோ இங்கே நிகழவில்லை. மாறாக, பேசப்பட்ட விஷயங்களில் ‘பேச்சொன்று, மற்றொரு பேச்சுக்கு இழுத்துவிடும்’ என்பதுபோன்று, நமது பேச்சு மற்றொரு பேச்சைக் கொண்டுவந்துவிட்டது. நீங்கள் சரியாகக் கவனித்தால், நான் உண்மைக்குப் புறம்பான வார்த்தை எதனையும் கூறவில்லை. என்றாலும், இங்குள்ள பிரமுகர்கள் வினாக்களை எழுப்பினர். நானும், பதிலளிக்கக் கடமைப்பட்டிருந்தேன். தற்போது, என்ன கேள்வியானாலும் வினவலாம். அல்லாஹு தஆலாவின் உதவியால் விடையளிக்கத் தயாராகவுள்ளேன்.

செய்யித்: இரு நபர்கள் ஒருவொருக்கொருவர் ஒன்றுபட்டு, இருவரும் ஒருவரே எனுமளவுக்கு அவ்விருவருக்கும் இடையே ஆத்மார்த்தமான ஒருமைப்பாடு உருவாகுவது எவ்வாறு சாத்தியம்? என்பதை விளங்கிக்கொள்வதற்கு நாம் மிகவும் ஆவலோடுள்ளோம்.

புறநிலை ஒருமைப்பாடு, மெய்நிலை ஒருமைப்பாடு ஆகியவற்றின் வேறுபாடுகள்

அழைப்பாளர்: இரு வஸ்துகளுக்கு இடையிலான மெய்நிலை ஒருமைப்பாடு (اتحاد حقیقی) என்பது அறவே முடியாததாகும் . அது அசாத்தியமானதும் , அதன் பிழை தெளிவானதுமாகும் . அவ்வாறு முடியாது என்பது, தனக்கே உரிய நிலையிலே நிரூபணமாகியிருப்பினும் கூட, அதன் அசாத்தியத்தன்மையானது முதல்நிலை அடிப்படைக்கூற்றுகளில் நின்றுமானதாகும். எனவே, புறநிலை மற்றும் மிகையான பேச்சு என்றவகையிலேயே ஒருமைப்பாடு குறித்த வாதமானது இங்கே முன்வைக்கப்படுகிறது.

அறபு மற்றும் அந்நிய மொழிகளையுடைய பெரும் இலக்கிய மேதைகள் மற்றும் கவிஞர்களின் கூற்றுக்களில் இவ்வகை மிகைப்படுத்தல்கள் அதிகமாகவே உள்ளன. இதைவிடவும் இறைநேசர்களின் கூற்றுக்களில் கூட இது தெளிவாகவும், வெளிப்படையாகவும் வந்துள்ளது. மௌலானா அமீருல் முஃமினீன் அலீ அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம், தம்முடைய தீவானில் இவ்வாறு நவின்றுள்ளார்.

هموم رجال في أمور کثیرة وهمي في الدنیا صدیق مساعد
یکون کروح بین جسمین قسمت فجسمهما جسنان والروح واحد

உலக மாந்தரின் முயற்சிகள், பலவற்றி(ன்பா)லேயே அமைந்துள்ளன. இவ்வுலகில் என் முயற்சியோ (மற்றவருக்கு) உதவிடும் நேசனாய் உள்ளது. அது ஈருடலில் பங்கிடப்பட்ட ஓருயிர் போன்று ஆகியிருக்கிறது. ஆக, அவ்விரண்டின் உடலும் ஈருடலே, அவ்வுயிர் ஒருயிரே.
ஒருமுறை மஜ்னூனின் இரத்தத்தை ஓட்டுவதற்கு முயன்றார்கள். அப்போது, மஜ்னூன் ‘எனது இரத்தத்தை ஓட்டிவிடாதீர்கள். ஏனெனில், எனது நாடி, நரம்புகளில் நிறைந்திருக்கும் என் லைலாவை வாளின் கூர்முனை தீண்டிவிடுமென அஞ்சுகிறேன்’ என்றதை புலவர்கள் ஈருடல், ஓருயிர் எனும் புறநிலைப் பொருளில் பின்வருமாறு புனைந்து பாடியுள்ளனர்.

لیک از لیلی وجود من پر است என்றாலும், எனது இருப்பு லைலாவினால் நிறைந்து காணப்படுகிறது
این صدف پر از صفات آن در است இந்த சிப்பி, அதன் குணாதசியங்களால் நிறைந்து காணப்படுகிறது
داند آن عقلی که آن دل روشنی است தெளிவான இதயமாய் இருக்கும் புத்தியே அதனை அறியும்
در میان لیلی و من فرق نیست எனக்கும், லைலாவுக்கும் இடையே வித்தியாசமில்லை
ترسم ای فصّاد چون فصدم کنی இரத்தம் ஓட்டுவோனே! எனது இரத்தத்தை ஓட்டுவதை அஞ்சுகிறேன்
نیش را ناگاه بر لیلی زنی கூர்முனையால் திடீரென லைலாவின்மீது வெட்டிவிடுவாயே!
من کیم لیلی و لیلی کیست من நான் யாரெனில் லைலாவாகும், லைலா யாரெனில் நானாகும்
ما یکی روحیم اندر دو بدن நாம் ஈருடலிலே ஓருயிராவோம்

இலக்கிய மேதைகளின் நூல்களை நாடுவீர்கள் என்றால், மிகைப்புனைவு என்றவகையில் புறநிலையிலான இதுபோன்ற கூற்றுக்களை நிச்சயமாகக் கண்டுகொள்வீர்கள். மற்றொரு கவிஞர் இவ்வாறு பாடியுள்ளார்.

أنا من أهوی ومن أهوی أنا نحن روحان حللنا بدنا
فإذا أبصرتنی أبصرته وإذا أبصرته کان أنا

நான், அவர் விரும்பும் நபராவேன். அவர் விரும்பும் நபர் நானாவேன். நாம் ஓருடலில் ஊடறுத்த ஈருயிர்களாவோம். எனவே என்னை நீ கண்டால், அவரையே கண்டுகொண்டாய். அவரை நீ கண்டால், அவர் நானாக இருந்திருப்பேன்.

பெருமானார் மற்றும் ஹஸரத் அலீ ஆகியோரின் ஆத்மார்த்தமான ஒருமைப்பாடு
முன்னோட்டத்திற்கென்றே பிரமுகர்களின் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளாது, இப்போது முடிவுக்கு வருகிறேன். ஹஸரத் அலீ (அலை) அவர்கள், சங்கையான இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களோடு ஆத்மார்த்தமான ஒருமைப்பாட்டைக் கொண்டுள்ளார் என்பதை நான் கூறியிருந்தால், அதனை மெய்நிலை ஒருமைப்பாடு என்று கருதிவிடலாகாது. யாரும் இவ்வாறான மெய்நிலை ஒருமைப்பாடு பற்றிய வாதத்தை முன்வைக்கவில்லை. அப்படி யாராவது இவ்வாறான மெய்நிலை ஒருமைப்பாட்டை நம்பிக்கை கொண்டிருந்தால், நிச்சயமாக அது தவறானதும், பிழையானதுமாகும். மேலும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, இவ் ஒருமைப்பாடு புறநிலையானதேயன்றி, மெய்நிலையானதல்ல. இதன் மூலம் நாடப்படுவது ஆத்மரீதியிலும், குணாதிசயங்களிலும் சமம் என்பதாகும். மாறாக உடல்ரீதியில் அல்ல. நிச்சயமாக ஹஸரத் அலீ (அலை) அவர்கள், குர்ஆனும், சுன்னாவும் விதிவிலக்காக்கி உள்ளவற்றைத் தவிர, ஏனைய அனைத்து நல்லொழுக்கங்கள், பரிபூரண பண்புகள் மற்றும் குணாதிசயங்கள் ஆகியவற்றிலே சங்கைமிகு இறைத்தூதர் (ஸல்) அவர்களோடு சமமாக இருக்கிறார்.

ஹாபிழ்: அப்படியானால், நீங்கள் கூறியதன்படி ஹஸரத் முஹம்மது (ஸல்) மற்றும் ஹஸரத் அலீ (அலை) ஆகிய இருவரும் நபியாக இருக்க வேண்டுமே!. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு சமமாக ஹஸரத் அலீ (அலை) இருந்தார் என்பதையும், இந்த ஒருமைப்பாட்டின்படி இருவரின் மீதும் வஹி அருளப்படுவது அவசியமாக இருந்தது என்பதையுமே தங்களின் கூற்று தெரிவிக்கின்றது.

அழைப்பாளர்: உண்மையில் நீங்கள் குதர்க்கம் புரிகிறீர்கள். நீங்கள் கூறியதுபோன்று அல்ல. நாமோ அல்லது ஷீஆக்களில் வேறு எவருமோ இப்படியான நம்பிக்கையை உடையவராக இல்லை. முன்னர் கூறப்பட்டவை மீண்டும் மீட்டப்படும் வகையில் சபையோரின் நேரத்தை விதண்டாவாதம் புரிவதற்கு எடுத்துக்கொள்வீர்கள் என்பதை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.

குர்ஆனும், சுன்னாவும் விதிவிலக்காக்கி உள்ளதைத் தவிர, ஏனைய அனைத்து பரிபூரணத்துவங்களிலும் இருவரும் சமமானவர்கள் என்பதை தற்போதுதான் குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு குர்ஆனும், சுன்னாவும் விதிவிலக்காக்கி இருப்பது, முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரித்தான விஷேட நபித்துவமும், அதற்கான நிபந்தனைகளும் ஆகும். இவற்றுள் வஹி அருளப்படுவதும், ஷரீஅத் சட்டங்கள் வழங்கப்படுவதும் உள்ளடங்கும்.

சென்ற இரவுகளிலே நிகழ்ந்த உரையாடல்கள் மறந்துவிட்டதா? அவ்வாறு தாங்கள் மறந்திருந்தால், இது குறித்து வெளியிடப்பட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகள் முதலியவற்றை நாடினால், அமீருல் முஃமினீன் இமாம் அலீ (அலை) அவர்கள், நபித்துவத்திற்குரிய ஆன்மீக அந்தஸ்தைப் பெற்றிருந்த போதிலும், அஇறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஷரீஆவை, மார்க்கத்தைப் பின்பற்றுவதன் கீழேதான் அவர் காணப்பட்டார். இதனால், அவரின்மீது வஹி அருளப்படவில்லை. மேலும், அவருடைய ஆன்மீக அந்தஸ்தானது, ஹஸரத் மூஸா (அலை); அவர்களுடைய காலத்தில் ஹஸரத் ஹாரூன் (அலை) அவர்கள் கொண்டிருந்த நபித்துவ அந்தஸ்துக்கு மேலாக இருக்கவில்லை என்பதை ‘ஹதீஸுல் மன்ஸிலத்’ ஊடாக நாம் கடந்த இரவுகளில் நிரூபித்திருந்ததைக் கண்டுகொள்வீர்கள்.

ஹாபிழ்: எல்லாக் குணாதிசயங்கள், பரிபூரணத்துவங்களிலும் இருவரும் சமம் என்பதாக நீங்கள் கூறும்போது, நபித்துவத்திலும், அதற்குரிய நிபந்தனைகளிலும் இருவரும் சமம் எனும் நம்பிக்கையும் உறுதியாக எழுகிறதே?.

அழைப்பாளர்: புறத்தளவிலே, இவ்வாறு கருதுவது சாத்தியம் என்றாலும், சற்று ஆழமாகக் கவனித்தீர்களாயின், மேலே கூறப்பட்ட விஷயம் தாங்கள் கூறியதற்கு மாற்றமானது என்பதை ஏற்றுக்கொள்வீர்கள். அவ்வாறே, திருக்குர்ஆனிய வசனங்களின் கூற்றுப்படி, நபித்துவத்திற்கு படித்தரங்கள் உள்ளன. அப்படித்தரங்களை உடையோரில் சிலர், சிலரைவிடவும் மேலான அந்தஸ்தைக் கொண்டுள்ளனர். திருக்குர்ஆன் இது குறித்து வெளிப்படையாகவே இவ்வாறு குறிப்பிடுகிறது,

تلك الرسل فضلنا بعضهم على بعض منهم

நாம் இத்தூதர்களில் சிலரை, சிலரைவிடவும் சிறப்பித்து வைத்துள்ளோம்.
இறைத்தூதர்களின் அனைத்துப் படித்தரங்களிலும் பரிபூரணமானது, நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடைய விஷேட நபித்துவத்தின் படித்தரமாகும். இந்தவகையில்தான், திருக்குர்ஆனிலே இவ்வாறு அல்லாஹு தஆலா குறிப்பிடுகிறான்,

ما كان محمَد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيَين

‘நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள், தங்களிலுள்ள ஆண்மக்கள் எவருக்கும் தந்தையில்லை. என்றாலும், அவர் அல்லாஹு தஆலாவின் தூதரும், நபிமார்களில் இறுதியானவரும் ஆவார்’.

பெருமானாருடைய விஷேட நபித்துவத்திற்குரிய பரிபூரணத்துவங்களே, தூதுத்துவம் முற்றுப்பெறுவதற்கு காரணமாயின. எனவே, இவ்விஷேட பரிபூரணத்துவங்களில் எவருக்கும் இடம் கிடையாது. எனினும், ஏனைய அனைத்து பரிபூரணத்துவங்களோ பொதுத்தன்மையான சட்டத்திலேயே அடங்கிவிடுகின்றன. இக்கருத்தை நிரூபிப்பதற்கு, அனேக ஆதாரங்களும், சான்றுகளும் உள்ளன.

செய்யித்: உங்களுடைய வாதத்திற்கு திருக்குர்ஆனிலே ஆதாரம் உண்டா?

‘ஆயதுல் முபாஹலா’ மூலம் நிரூபித்தல்

அழைப்பாளர்: இது மிகவும் வெளிப்படைய ஒன்று என்றாலும், நமது பலமான தெய்வீக சான்றாத் திகழ்கின்ற திருக்குர்ஆனிலே இருந்து எமது முதலாவது ஆதாரம் அமைந்துள்ளது. இவ்வாதத்திற்கான மிகப்பெரும் சான்றாக திருக்குர்ஆனிலே இருந்து அமையப்பெறும் ஆதாரம், ஆயதுல் முபாஹலாவாகும். அல்லாஹு தஆலா நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு வஹியை இறக்கியருளினான்.

فمن حاجك فيه من بعد ما جائك من العلم فقل تعالوا ندع أبنائنا وأبنائكم ونسائنا ونسائكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة ألله الكاذبين

(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: ‘வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று நாம் பிரார்த்திப்போம்!’ என நீர் கூறும்.

இமாம் பஹ்க்ரு ராஸி தனது தஃப்ஸீர் கபீரில், இமாம் அபூ இஸ்ஹாக் தஃலபி தனது கஷ்புல் பயானில், இமாம் ஜலாலுத்தீன் சுயூதி தனது துர்ருல் மன்தூரில், இமாம் காழி பைழாவி தனது அன்வாருல் தன்ஸீலில், இமாம் ஜாருல்லாஹ் ஸமஹ்க்ஷரி தனது கஷ்ஷாஃபில், இமாம் முஸ்லிம் பின் ஹஜ்ஜாஜ் தனது ஸஹீஹில், இமாம் அபுல் ஹஸன் ஃபகீஹ் இப்னு மகாஸிலி ஷாஃபியி வாஸிதி தனது மனாகிபில், ஹாபிழ் அபூ நயீம் இஸ்பஹானி தனது ஹில்யதுல் அவ்லியாவில், இமாம் நூருத்தீன் மாலிகி தனது ஃபுஸூசுல் முஹிம்மாஹ்வில், ஷைஹ்குல் இஸ்லாம் ஹமுவைனி தனது ஃபராயித்தில், அபுல் முஅய்யித் குவாரஸ்மி தனது மனாகிப்பில், ஷைஹ்க் சுலைமான் பல்ஹ்கி ஹனஃபி தனது யனாபீஉல் மவத்தாஹ்வில், ஸிப்து இப்னு ஜவ்ஸி தனது தத்கிராஹ்வில், முஹம்மது இப்னு தல்ஹா தனது மதாலிபுல் சுஆலில், முஹம்மது இப்னு யூசுஃப் கன்ஜீ ஷாஃபியீ தனது கிஃபாயதுத் தாலிபில் மற்றும் இமாம் இப்னு ஹஜர் மக்கீ தனது ஸவாயிகுல் முஹ்ரிகாவி;ல் என ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் துறைகளைச் சார்ந்த, புகழ்பெற்ற பல்வேறு அறிஞர்கள் தமது நூற்களில் ‘ஆயதுல் முபாஹலா’ அருளப்பட்ட விடயத்தில், இது துல்ஹஜ் மாதம் 24 அல்லது 25ம் நாளில் பின்வருமாறு நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Scroll to Top
Scroll to Top