குடும்பத்திற்கான பொது செயற்திட்டங்கள்பற்றி அதிமேத கு ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனெயீ அவர்களின் வழிகாட்டல்கள்
ஆஷிகே மஃசூமீன்
இஸ்லாமிய சமூகத்திற்கு மைல்கல்லாகத் திகழ்கின்ற குடும்பத்தை கட்டியெழுப்புவதற்கான பொது செயற்திட்டங்கள் பற்றி, ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தற்போதைய தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனெயி அவர்கள் அந்நாட்டு முத்துறைகளின் தலைமைபீடத்திற்கு தான் அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
‘சமூகத்தின் மைல்கல்லும், அடிப்படை நிறுவனமும் என்றவகையில், குடும்பமானது, விருத்தியின் உறைவிடமாகவும்;, மானுடத்தின் உன்னதமாகவும், நல்வாழ்விற்கும் செழிப்பிற்கும், அருந்திறனுக்கும் மூலமாகவும், தேசத்திற்கும் – அரச தாபனத்திற்கும் ஆன்மீக ஊக்குவிப்பை வழங்கக் கூடியதாகவும் இருக்கிறது.’
இவ்வறிக்கையிலே, ஆன்மீகத் தலைவரால் ‘குடும்பம் சார்ந்த சமூகம்’ எனப் பெயரிடப்பட்டு, அது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள நல்வழிகாட்டல்கள் எமது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியவை. இவ்வகையில், குறித்த வழிகாட்டல்களை உங்களுக்குத் தருகிறோம்.
1. ‘குடும்பம் சார்ந்த சமூகம்’ ஒன்றை நிறுவுதல் வேண்டும். இதற்காக, குடும்பத்தினுடைய ‘இஸ்லாமிய மாதிரி’யின் அடிப்படையில் குடும்பத்தையும், அதன் முக்கிய செயற்பாட்டையும் வலுப்படுத்துவதற்கும் வலிமைப்படுத்துவதற்கும் முயற்சிக்க வேண்டும்.
2. பொதுவாக சட்டவிதிகள், ஒழுங்குகள், நிர்வாகக் கொள்கைகள், கல்வி, கலாசார, சமூக, பொருளாதார முறைமைகளிலும் குறிப்பாக, வீட்டு வசதிகள் மற்றும் நகர அபிவிருத்தியிலும் ஓர் முக்கிய நிறுவனமாக குடும்பத்தைக் கருதுதல் வேண்டும்.
3. இஸ்லாமிய மற்றும் தேசிய அடையாளத்தையும், அதேபோன்று குடும்பம் மற்றும் சமூகத்தையும் பாதுகாத்து ஊக்குவிக்கும் வகையில் குடும்பம் மற்றும் மஸ்ஜித் ஆகியவற்றிற்கு இடையிலான இணைப்புகளின் செயற்பாடுகளை முன்னுரிமைப்படுத்தல் வேண்டும்.
4. உதவித்திட்டங்கள் மற்றும்; கலாசார அமைப்பாக்கல் ஆகியவற்றை அமுலாக்குவதன் ஊடாக ஆண்கள், பெண்கள் மற்றும் திருமண வயதை அடைந்த அனைவருக்கும் வெற்றிகரமான திருமனத்தை எளிதாக்குவதற்கும், பரவலாக்குவதற்குமான தேசிய அளவிலான இயக்கமொன்றை நிறுவுதல் வேண்டும்.
5. நேர்மை, திருப்தி, நட்பு மற்றும் மரியாதை போன்றவற்றின் அடிப்படையில் குடும்பத்தை பலப்படுத்தி, அதன் சமுதாய மூலதனத்திற்கு ஊக்குவித்தல் வேண்டும்.
6. மேற்குறிப்பிட்ட குடும்பத்தின் ‘இஸ்லாமிய மாதிரி’ வடிவத்திற்கு அப்பாலும் செயற்பட வேண்டியுள்ளது. ஈரானிய – இஸ்லாமிய வாழ்க்கை முறையை உயர்வடைய செய்தல் வேண்டும்.
7. குடும்பம் தொடர்பான நீதிமுறைமைகள் மற்றும் அது சார்ந்த செயல்முறைகள் முதலானவற்றை திருத்தியமைத்து, சரி செய்து, பூரணப்படுத்தல் வேண்டும்.
8. ஆரோக்கியமான சூழலொன்றை உருவாக்கி, ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு இடையேயான தொடர்புகளில் இஸ்லாமிய நெறிமுறைகள் குறித்து கண்காணித்தல் வேண்டும்.
9. வேலைவாய்ப்பு, திருமணம் மற்றும் வீட்டுவசதி ஆகியவை தொடர்பான எதிர்கால கவலைகளைக் குறைப்பதற்கான ஆற்றலை அவர்களுக்கு வழங்குவதன் ஊடாக குடும்பங்களின் பொருளாதார, வாழ்வாதார நிலைகளை மேம்படுத்தல் வேண்டும்.
10. ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கு முன்னரும், அதற்குப் பின்னருமான சேவைகளை வழங்குவதற்காக நாட்டின் உளவளத்துறை முறைமையை ஏற்படுத்தி, அதனை அணுகுவதற்கு வழிவகுத்தல் வேண்டும்.
11. கலாசார, பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளிலான நாட்டின் இலக்குகளோடும், திட்டங்களோடும் தம்மை இணைத்துக்கொண்டு செயலாற்றும் வகையில் நாட்டிற்கு உதவுவதற்காக குடும்பத்தை வலுப்படுத்தவும், ஊக்குவிக்கவும் வேண்டும்.
12. தாம்பத்தியத்தின் கண்ணியம், தாய்மை, வீட்டு முகாமைத்துவம், தந்தையின் தன்மை மற்றும் ஆணின் பொருளாதார பங்குகள் ஆகியவற்றிற்கு ஆதரவளித்தல் வேண்டும்.
13. குடும்பத்தின் அடித்தளங்களைத் தளர்க்கக்கூடிய, குறிப்பாக விவாகரத்து தொடர்பான பிரச்சனைக்குத் தூண்டுகின்ற சமூக ரீதியிலான அசாதாரண நிலைமைகளையும், காரணிகளையும் தடுத்தல் வேண்டும்.
14. நிதி, பொருளாதார, கலாசார ரீதியாக பெண்ணைத் தலைமையாகக் கொண்ட ஒற்றைப் பெற்றோர்களுக்கு ஆதரவளித்தல் வேண்டும். மேலும், அப்படியானோர் மீளவும் திருமணம் செய்துகொள்வதற்கும் ஊக்கப்படுத்தல் வேண்டும்.
15. குடும்பத்தில் உள்ள மூத்தவர்களை கண்ணியப்படுத்தும் வகையில், ஆதரவான – உற்சாகப்படுத்தக் கூடிய வழிமுறைகளை மேற்கொண்டு, அவர்களின் உடல், உணர்வு ரீதியிலான அக்கறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும்.
16. பொதுவாக குடும்பங்களின் சுகவாழ்வையும், குறிப்பாக கருவுருதலுக்கான சுகவாழ்வையும் ஊக்கப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கையாளுதல் வேண்டும். மேலும், ஆரோக்கியமான இயங்கக் கூடிய ஒரு இளைஞனைப் பெற்றிருக்கும் வகையில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்யவும், அத்தோடு, சமுதாயத்தை செழிப்படையச் செய்யவும் வேண்டும்.