‘சர்வதேச குத்ஸ் தினம்’ – மே 22 (ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை)

International Quds’ Day

22nd May, 2020 (Last Friday of Ramadan)

 

இறைவனால் அருள்பாலிக்கப்பட்ட புனித பூமியும், இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக யாத்திரை ஆரம்பிக்கப்பட்ட தளமும், உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமுமான ‘பைத்துல் முகத்தஸ்’ பள்ளிவாசலும் – பலஸ்தீன பூமியும் 1947வது வருடம் முஸ்லிம் உம்மத்திடமிருந்து அபகரிக்கப்பட்டு இன்றைக்கு 73 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை ஆக்கிரமித்துள்ள சியோனிஸவாதிகளின் எல்லா விதமான அநீதிகளும் – அக்கிரமங்களும் அரங்கேறும் ஒரு கொலைக்களமாக பலஸ்தீன் மாற்றப்பட்டிருக்கின்றது.

என்றாலும் 1979 ஆம் ஆண்டில் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஸ்தாபகர் காலஞ்சென்ற அதிமேதகு இமாம் ரூஹுல்லாஹ் கொமைனி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் முன்னெடுத்த இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியை அடுத்து வந்த ரமழான் மாதத்தின் முதலாம் நாளான 1979ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி பைத்துல் முகத்தஸையும், பலஸ்தீனத்தையும் மீட்டெடுப்பதற்கான ‘சர்வதேச குத்ஸ் தினம்’ முதன் முதலில் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையும் சர்வதேச முஸ்லிம்களால் ‘சர்வதேச குத்ஸ் தினமாக’ அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்தவகையில் இவ்வருடமும் சர்வதேச குத்ஸ் தினம் மே 22ம் திகதி உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களாலும், சுதந்திரத்தை வேண்டுவோராலும் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சர்வதேச தினத்தைப் பிரகடனப்படுத்திய இமாம் ரூஹுல்லாஹ் கொமைனி அவர்கள், ‘குத்ஸ் தினம் என்பது வலிமை குன்றிய, அடக்கியொடுக்கப்பட்ட மக்கள், அதிகாரச் செருக்கு கொண்ட சக்திகளை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்கான ஒரு நாள்’ என்று குறிப்பிட்டார்கள். அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் உலகம் முழுவதிலும் குத்ஸ் தின நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருவதை நாம் காணக் கூடியதாயிருக்கின்றது. வாழ்க்கை வசதிகளை இழந்த மக்களின் பசிக் கொடுமையையும், தாகத்தையும் ஏறத்தாழ ஒரு மாத காலம் நோன்பு நோற்பதன் மூலம் உணர்ந்துகொண்டோர், இப்போது தங்களின் பார்வைகளை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பூமியின் பக்கம் திருப்புவதற்கும் – அவ்வாறே குரலெழுப்ப முடியாது நசுக்கப்பட்டிருக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக ஓங்கி குரலெழுப்புவதற்கும் இந்நாளில் கிளர்ந்தெழுகிறார்கள். இதன் காரணமாக, முஸ்லிம் உம்மத்திற்கு மத்தியில் ஒரு முழுமையான உயிர்த்துடிப்பிற்கான இணைப்பை உருவாக்கிவிட முடிகிறது.

என்றாலும் சிலர் குறிப்பிடுவதைப் போன்று குத்ஸ் தினம் என்பது ஷீஆக்களுக்கு மட்டும் உரிய ஒரு ஒன்றுகூடல் அல்ல. மாறாக, அது இஸ்லாத்தின் எல்லாப் பிரிவினரும், ஏன் மனித மாண்புகளைப் போற்றும் முஸ்லிமல்லாத சமூகத்தினரும் கூட இத்தினத்தை அனுஷ்டித்துவருவதைக் காண முடியும். குத்ஸ் தினம் அடையாளப்படுத்தும் இந்த ஐக்கிய உணர்வு, அத்தினத்தில் உலகெங்கிலும் இடம் பெறும் கூட்டங்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்படுகின்றது, உலகளாவிய ரீதியில் இஸ்லாத்தின் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளையும் எடுத்து நோக்கினால் கூட குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் ஷீஆ முஸ்லிம்;களை விடவும் சுன்னி முஸ்லிம்களே அதிகமாகப் பங்கு கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த குத்ஸ் தின நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள், அந்த பூமியில் இரத்தம் சிந்தப்படுவதையும், சட்டவிரோத குடியிருப்புகள் அங்கே முன்னெடுக்கப்படுவதையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதையே கோருகின்றனர். ஆயினும், அவர்கள் இஸ்ரேலின் அடக்குமுறையும், ஆக்கிரமிப்பும் சியோனிஸக் கொள்கையிலிருந்தே வேர்பிடித்து எழுந்திருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சியோனிஸம் என்பது மிகப்பெரும் இனவாதம் என்பதை முஸ்லிம்கள் மட்டுமல்ல, பழைமைவாத யூதர்களின் நெடுரீ கார்டா குழுவினர் மற்றும் அமெரிக்க அறிஞர் நோர்மன் ஃபிங்கள்ஸ்டீன் போன்ற யூத உலகின் அறிஞர்கள் பலரும், சியோனிஸத்தை ஓர் இனவாத மற்றும் சட்டவிரோதக் கொள்கை எனப் பகிரங்கமாகக் குற்றஞ் சாட்டுகின்றனர். நோர்மன் ஃபிங்கள்ஸ்டீன் என்பவரின் பெற்றோர் நாஸிகளின் யூதப் படுகொலைகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். என்றாலும் இவரே சியோனிஸத்தை மிகபெரும் பயங்கரவாதம், இனவாதம் என்று குறிப்பிட்டுள்ளமை அதன் முகமூடியைக் கிழித்தெரிந்து உண்மையான முகத்தை உலகுக்குப் புலப்படுத்தியுள்ளது.

இதேவேளை சியோனிஸவாதிகள் பல ஐரோப்பிய நாடுகளில் குத்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுவதைத் தடைசெய்ய வேண்டும் எனக் கோரிவருகின்றனர். குத்ஸ் தினத்தை ஸெமிதிய இனத்திற்கு எதிரான – ‘யூதர்களைக் கொல்லுங்கள்’ எனக் கூறும் ஒரு வெறுப்பு இயக்கமாகச் சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால், மேற்குலகில் நடைபெறும் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர்களிலும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிலும் யூதப் பிரமுகர்கள் ஏராளமாக பங்கெடுக்கின்றனர். இதன் ஊடாக சியோனிஸவாதிகளின் பொய்கள் படுதோல்வி கண்டுவிட்டமை குறிப்பிடத்தக்கது.

அவர்கள், குத்ஸ் தினத்தை ஆதரிக்கும் தீரமிக்க யூதர்களைப் பயமுறுத்தி அவ்வாறு செய்வதினின்றும் தடுத்து நிறுத்துவதற்காக பல நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆயினும், சியோனிஸத்திற்கு எதிரான யூத சமூகத்தின் பரந்ததொரு பகுதியினர், ‘பலஸ்தீனில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’ என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களுடன் கைகோர்த்து நின்றுவருவதால், அவர்களின் இம்முயற்சியும் தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது.

உலகெங்கிலுமுள்ள பல பிற்போக்குத்தனமான ஆட்சிகள், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் கூட, குத்ஸ் தினம் என்றாலே அஞ்சுகின்றன. ஏனெனில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான அழைப்பு பலஸ்தீனையும் தாண்டிச் செல்லக்கூடியது என்பதை அவை நன்கு அறிந்திருக்கின்றன. கடந்த காலங்களில், இந்த நாடுகள் பலவற்றில், குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் பங்குகொண்டோர் பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்தனர். சிறுவர்கள் உட்பட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகியும் உள்ளனர்.

குத்ஸ் தினம் என்பது, சியோனிஸவாதிகளின் நாசகார சூழ்ச்சித் திட்டங்களைப் பற்றிய உண்மையை முழுமையாக முன்னெடுத்து சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.

இஸ்ரேலை எதிர்கொண்டு தங்கள் தாய்நாட்டை தங்கள் பெறுமதி வாய்ந்த உயிர்களைத் தியாகம் செய்துகூட பாதுகாப்பதற்கு முன்வருவோரையும் – அவ்வாறே இஸ்ரேலின் நலன்களை பலஸ்தீனர்களின் உயிர்களை பலி கொண்டாவது பாதுகாப்பதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற மாபெரும் ஷைத்தான் அமெரிக்காவினதும், அதன் நேச நாடுகளினதும் பல்லாயிரம் கோடி டாலர்களைக் கண்டும் தங்கள் தைரியத்தை இழக்காமல் இருப்போரையும் பற்றி பேசுவதற்கும், கண்ணியப்படுத்துவதற்கும் இதுதான் தகுந்த நேரமும், இடமும் ஆகும்.

எனவே, இவ்வருடமும் சர்வதேச குத்ஸ் தினம் எதிர்வரும் மே 22ம் திகதி ரமழானின் இறுதி வெள்ளிக்கிழமை உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களாலும், சுதந்திரத்தை வேண்டி நிற்போராலும் அனுஷ்டிக்கப்படும்போது நாமும் அதில் பங்குகொண்டு எமது ஆதரவையும், ஐக்கியத்தையும் ஒரே தொணியில் ஓங்கியொலிக்கச் செய்வோம்.

3 thoughts on “‘சர்வதேச குத்ஸ் தினம்’ – மே 22 (ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை)”

  1. இன்ஷா அல்லாஹ் குத்ஸை மீட்ப்போம்..

    1. இன்ஷா அல்லாஹ். அந்த நாள் தொலைவிலில்லை.

Comments are closed.

Scroll to Top
Scroll to Top