Not fearing the enemy and standing firmly against him are important commands of the Qur’an
புனித ரமழான் மாதத்தின் முதல் நாள், ‘இமாம் குமைனி’ ஹுஸைனிய்யா கலாசார மண்டபத்திலிருந்து இமாம் செய்யித் அலீ காமினி அவர்களுடைய நேரடி ஒளிபரப்போடு, குர்ஆனிய வசந்தம் மற்றும் தெய்வீக விருந்தின் பருவம் எனும் திருக்குர்ஆனின் பாராயண தொடக்க விழா தெஹ்ரானில் அமைந்திருக்கும் ‘முஸல்லா’ மண்டபத்தில் இடம்பெற்றது.
அப்போது, குர்ஆனிய ஓதுநர்கள் ‘ஆயாதுன் நூர்’ வசனங்களை ஒன்றாய் ஓதி ஆரம்பித்தனர்.
விழாவின் போது, இஸ்லாமியப் புரட்சியின் அதிஉயர் தலைவர் இமாம் செய்யித் அலீ காமினி அவர்கள், திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதமான புனித ரமழான் மாதத்தை வாழ்த்தி வரவேற்று, மானுட வாழ்வில் தனிப்பட்ட – கூட்டு உறவுகள் மற்றும் நடைமுறை விதிகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான திருக்குர்ஆனின் நடைமுறை சார்ந்த மற்றும் ஈடேற்றமளிக்கிற போதனைகளைப் பற்றி உரையாற்றினார்.
‘அடக்குமுறை, பாகுபாடு, போர், பாதுகாப்பின்மை, விழுமியங்களை ஒதுக்குதல் ஆகியவற்றிலிருந்து மனித சமுதாயத்தை மீட்பதற்கும், அவ்வாறே பாதுகாப்பு, சுகாதாரம், நிம்மதியாக வாழுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்குமான ஒரே வழி திருக்குர்ஆனின் போதனைகளைப் பின்பற்றுவதாகும்’ என்று இமாம் காமினி அவர்கள் சுட்டிக்காட்டியதோடு, ‘திருக்குர்ஆனின் நடைமுறை சார்ந்த போதனைகளின் ஒரு தொகுதி வாழ்க்கையில் விதிகளை உருவாக்குவது எவ்வாறு என்பதாகும். விதிகளை உருவாக்குவது அதிகாரம், பணம் மற்றும் மோகம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையுமானால், மனிதன் இம்மை மற்றும் மறுமை வாழ்க்கையில் மகிழ்ச்சியற்றவனாக மாறிவிடுகிறான். ஆனால், மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை நன்மை மற்றும் சிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைத்துக்கொண்டால், உலக நலன்களுக்கு மேலதிகமாக அவர்கள் நிச்சயமாக வாழ்க்கையின் இம்மை மற்றும் மறுமை நோக்கங்களையும் அடைந்துகொள்வார்கள்’ எனக் குறிப்பிட்டார்.
‘அதிகாரம் மற்றும் செல்வம் போன்ற தெய்வீக அருட்கொடைகளை ஏனை மனிதர்களின் வாழ்க்கையை அபிவிருத்தியடையச் செய்வதற்கும், தேவையுடையோரைக் காப்பதற்கும், சகமனிதர்களுக்கு நலவை நாடவும் அமைத்துக்கொள்வது திருக்குர்ஆனின் மற்றொரு போதனையாகும்’ என ஆன்மீகத் தலைவர் குறிப்பிட்டார்கள்.
‘குர்ஆனிய வசனங்கள் மற்றும் நடைமுறை சார்ந்த போதனைகளின் மற்றொரு தொகுதியை நடைமுறைப்படுத்துவது சமூக உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்குக் காரணமாகும்’ என்பதை சுட்டிக்காட்டிய ஆன்மீகத் தலைவர், ‘இப்போதனைகளில் சமுதாயத்தில் புறம்பேசுவதைத் தவிர்ந்துகொள்ளல் மற்றும் எதிரிகளுக்கும் பகைவர்களுக்கும் கூட நீதியைக் கடைபிடிப்பது என்பனவும் உள்ளடங்கும்’ எனக் குறிப்பிட்டார்.
‘எந்தவகையான உறுதியும் இல்லாத விடயங்களைப் பின்பற்றக்கூடாது என்பது குர்ஆனியப் போதனைகளில் ஒன்று’ என்பதைச் சுட்டிக்காட்டிய ஆன்மீகத் தலைவர், ‘உலகளாவிய ரீதியல் பரவலாகக் காணப்படுகிற பத்திரிகைத்துறைப் பிரச்சினைகளில் ஒன்று, இப்போதனையை நடைமுறைப்படுத்தாமல், வதந்திகளைப் பரப்பவும், செய்திகளைப் புனையவும் முயற்சிப்பதாகும்’ எனக் குறிப்பிட்டார்.
மேலும், ‘துரதிர்ஷ்டவசமாக இப்படியான விடயங்கள் நமது சமூகத்திலும் காணப்படக்கூடியதாக உள்ளன’ என்று குறிப்பிட்டார்.
‘அநியாயக்காரர்களை நம்புவதையும், சாய்ந்திருப்பதையும் தவிர்ந்துகொள்ளல், வாழ்க்கையில் சமத்துவம், நீதி மற்றும் நேர்மையைக் கடைப்பிடித்தல் மற்றும் அமானிதத்திற்கு பங்கம் ஏற்படுத்தாமலிருத்தல் என்பன இஸ்லாத்தின் ஏனைய போதனைகளாகும்’ என்பதைச் சுட்டிக்காட்டி, ‘அமானிதத்திற்கு பங்கம் ஏற்படுத்தாமை அரச பொறுப்புகளுக்கும் உள்ளடங்கும்’ என்பதை வலியுறுத்தினார்.
‘பகைவருக்கு அஞ்சாமல், உறுதியாக எதிர்த்து நிற்பது திருக்குர்ஆனின் முக்கியமான போதனையாகும். மேலும், சில இஸ்லாமிய நாடுகளின் இன்றைய நிலையும், அநியாயக்கார சக்திகளினால் அவை இழிவுபடுத்தப்படுவதும் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு அவர்கள் அஞ்சுவதன் விளைவாகும்’ என ஆன்மீகத் தலைவர் குறிப்பிட்டார்.
ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அஞ்சாமை என்பதின் மீதான இமாம் குமைனி (ரஹ்) அவர்களின் வாழ்வியலும், போதனையையும் பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘அமெரிக்காவின் மீதான அச்சம், கசப்பான விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும், அமெரிக்காவை அஞ்சுவது எவ்வளவு கடுமையான பிரச்சினைகளுக்கு தள்ளிவிட்டது என்பதை கடந்த காலங்களில் நமது சில அரசாங்கங்களில் கண்டுகொண்டோம்’ எனக் குறிப்பிட்டார்.
‘கவனத்தோடும், இறைவனுக்காகவும் தொழுகையை நிலைநாட்டுதல், குறிப்பாக ரமழான் காலங்களில் இறைவனிடத்தல் பாவமன்னிப்புக் கேட்டல் என்பன ஆத்மீக முன்னேற்றத்திற்கான அடிப்படையாகும்’ எனக் கருதிய அவர், இறுதியில் ‘எல்லா சமுதாயங்களும், முஸ்லிம்களும், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளும், அதிகாரிகளும் திருக்குர்ஆனின் நடைமுறை சார்ந்த போதனைகளை அமுல்படுத்துவற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இது பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கும் வேதநூலாகும்’ எனக் குறிப்பிட்டார்.
ஒளிமயமான இவ்விழாவில், ஏராளமான குர்ஆனிய ஆசிரியர்களும், இளம் ஓதுநர்களும், பிரார்த்திப்போரும் தங்களது நிகழ்ச்சிகளை நடாத்தினர்.
https://www.irna.ir/news/83764505/%D9%86%D8%AA%D8%B1%D8%B3%DB%8C%D8%AF%D9%86-%D8%A7%D8%B2-%D8%AF%D8%B4%D9%85%D9%86-%D9%88-%D9%85%D8%AD%DA%A9%D9%85-%D8%A7%DB%8C%D8%B3%D8%AA%D8%A7%D8%AF%D9%86-%D9%85%D9%82%D8%A7%D8%A8%D9%84-%D8%A7%D9%88-%D8%A7%D8%B2-%D8%AF%D8%B3%D8%AA%D9%88%D8%B1%D9%87%D8%A7%DB%8C-%D9%85%D9%87%D9%85-%D9%82%D8%B1%D8%A2%D9%86