முஸ்லிம்களின் மீது நிராகரிப்புக் குற்றஞ்சுமத்தல் ஹராம் – இமாம் காமெனெயி
Takfir on Muslims is Haram – Imam Khamenei
ஆன்மீகத் தலைவர், அதிமேதகு ஆயதுல்லாஹ்
செய்யித் அலீ ஹுஸைனி காமெனெயீ (دامت برکاته)
அவர்களின் ஃபத்வா:
கேள்வி:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹுவின் திருப்பெயரால்…
தற்போதைய நிலையில் முஸ்லிம்களின் ஒற்றுமையின் அவசியத்தை வழியுறுத்தக்கூடிய தெளிவான, உறுதியான ஆதாரங்கள் இருப்பதை கருத்திற்கொண்டு, இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை ஏற்றுக்கொண்ட அஹ்லுல் சுன்னாக்களின் நான்கு மத்ஹபுகள் உட்பட சைதிய்யா, ழாஹிரிய்யா, இபாழிய்யா மற்றும் இவை அல்லாதவை போன்ற இஸ்லாமிய இயக்கங்களுக்கு ‘இஸ்லாமிய உம்மத்’ என்ற பெயரை வழங்குவது பற்றிய தங்களது கருத்து என்ன?, மேற்கூறிய இயக்கங்களுக்கு குஃப்ர் பட்டம் சுமத்துதல் ஆகுமா? அல்லது இல்லையா? மற்றும் தற்காலத்தில் ஏனைய இயக்கங்களுக்கு குஃப்ர் பட்டம் சுமத்துவதற்கான வரையறையும், அளவீடும் என்ன?
இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் குறிப்பாக அஹ்லுல்பைத்தை பின்பற்றும் உலகிற்கு பணிபுரிவதற்கான நீண்ட ஆயுளை, மாண்புமிகு தங்களுக்கு அருளவென அல்லாஹு தஆலாவிடம் பிரார்த்திக்கிறோம்.
ஆன்மீகத் தலைவருக்கான பணிமனையின் பதில்:
இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும், இஸ்லாமிய உம்மத்தின் ஒரு அங்கமாகக் கருதப்படுவதோடு, அவை இஸ்லாத்தின் அனைத்து தகைமைகளையும் தம்மீது கொண்டுள்ளன. இஸ்லாமிய இயக்கங்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துதல், திருக்குர்ஆனின் போதனைகளுக்கும், நபி முஹம்மத் (صلی الله علیه وآله) அவர்களின் சுன்னாவிற்கும் முரணாகும். மேலும், இது முஸ்லிம்களை பலவீனப்படுத்தி, இஸ்லாமிய எதிரிகளின் கைகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதாக அமைந்து விடும். இந்த வகையில் குறிப்பிடப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களுக்கு குஃப்ர் பட்டம் கட்டுதல் எந்த விதத்திலும் ஆகுமானதல்ல.
அஹ்லுல் சுன்னாக்களின்
இயக்கங்களை அவமதித்தல் ஹராம் என்பது பற்றிய
ஆன்மீகத்தலைவரின் ஃபத்வா:
இறைத்தூதர் (صلی الله علیه وآله) அவர்களின் மனைவி உம்முல் முஃமினீன் ஹஸரத் ஆயிஷா அவர்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தல் மற்றும் தூற்றுதல் தொடர்பில் தங்களது கருத்தை வெளியிடுமாறு, சஊதி அரேபியாவின் இஹ்ஸாப் பகுதி ஷீஆ முக்கியஸ்தர்கள் மற்றும் அறிஞர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆன்மீகத் தலைவர் அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:
இஸ்லாமியத் தூதுவர் முஹம்மத் (صلی الله علیه وآله) அவர்களின் மனைவியைத் தூற்றுவது உட்பட அஹ்லுல் சுன்னா சகோதரர்களின் இயக்கங்களை இழிவுபடுத்துவது ஹராமாகும். இவ்விடயம் எல்லா நபிமார்களது மனைவியரையும், குறிப்பாக நபிமார்களின் தலைவர் ஹஸரத் முஹம்மத் (صلی الله علیه وآله) அவர்களது மனைவியரைச் சாரும்.
பைத்துல்லாஹி ஹராம் ஹாஜிகளுக்கான
விஷேட தூதில் வழங்கப்பட்ட
ஆன்மீகத்தலைவரின் பரிந்துரை
இஸ்லாமிய உம்மத்தின் மீது அக்கறையுற்றோர் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் பலரைப் போன்று நானும் மீண்டும் ஒருமுறை தெரிவிப்பதாவது:
முஸ்லிம்களுக்கு மத்தியில் முரண்பாடுகளை சூடுபிடிக்கச் செய்யக்கூடிய, முஸ்லிம் அமைப்புக்களில் ஒவ்வொன்றினதும் புனிதத்துவங்களை இழிவுபடுத்துகின்ற அல்லது இஸ்லாமிய மத்ஹபுகளில் ஒன்றுக்கு குஃப்ர் பட்டம் சுமத்துவதாக அமைகின்ற எந்தவொரு சொல்லும், செயலும் நிராகரிப்பையும் இணைவைப்பையும் கொண்டுள்ள கூட்டங்களுக்கு பணிவிடை புரிவதாகவும், இஸ்லாத்திற்கு மோசடி செய்வதாகவும் மற்றும் இது ஷரீஆவின் பார்வையில் ஹராமானதாகவும் உள்ளது.
ஈரானிய குர்திஸ்தான் மாநில
ஷீஆ-சுன்னி மக்கள் மத்தியில்
ஆன்மீகத் தலைவரின் உரை:
2010ம் ஆண்டு, குர்திஸ்தான் மாநிலத்திற்கு தாம் மேற்கொண்ட பயணத்தில் ஆன்மீகத் தலைவர் முஸ்லிம்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தல், இஸ்லாமிய மத்ஹபுகளின் புனிதத்துவங்களை இழிவுபடுத்துவதை இகழ்ந்துரைத்தல் முதலானவை தொடர்பில் தாம் வழங்கிய பெறுமதியான உபதேசத்திலிருந்து…
சில வருடங்களுக்கு முன், குர்தி பிராந்தியத்தில் நன்னோக்குடைய ஆலிம் ஒருவர் ஜும்ஆ பிரசங்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஷீஆ ஒருவரிடம் வந்து சுன்னிகளுக்கு எதிரான விரோதத்தையும், குரோதத்தையும் அவரது உள்ளத்தில் ஏற்படுத்தி, அதேபோன்று சுன்னி ஒருவரிடம் சென்று ஷீஆக்களுக்கு எதிரான விரோத்தையும், குரோதத்தையும் அவரது உள்ளத்தில் தோற்றுவிப்போர்… இவர்கள், ஷீஆவுமில்லை, சுன்னியுமில்லை. ஷீஆவை விரும்புவதுமில்லை, சுன்னியை விரும்புவதுமில்லை. இவர்கள் இஸ்லாத்தின் விரோதிகளாவர். இருந்தும், இது அவர்களுக்குப் புரிவதில்லை. அவர்களுள் அதிகமானோர் விளங்கிக்கொள்கிறார்களில்லை. ஏன் விளங்கிக் கொள்கிறார்களில்லை என்பதே கைசேதப்படுவதற்கான காரணியாகும்’.
இன்று, இந்த வஹ்ஹாபிய ஜமாஅத்தினர் ஷீஆக்களை காஃபிர் என்கின்றனர். அஹ்லுல்பைத்தினரை நேசிக்கின்ற சுன்னிகளையும் காஃபிர் என்கின்றனர். சூஃபிஸ, காதிரியா தரீக்காகளை பின்பற்றும் சுன்னிகளை காஃபிர் என்கின்றனர். இப்பிழையான சிந்தனை எங்கிருந்து வெளிப்பட்டதோ?. இத்தகையோரின் பார்வையில், அஹ்லுல்பைத்தினரை நேசிக்கின்ற, அவர்களின் மீது அன்பு செலுத்துகின்ற உலக வாழ் அனைத்து ஷீஆக்களும், வடஆப்ரிகா ஷhஃபிஈ சுன்னி மக்களும், மத்திய ஆப்ரிகா நாடுகளில் வசிக்கும் மாலிகீ மத்ஹபினர் இவர்கள் காஃபிர்களாவர்; ஏன்?. கெய்ரோவிலுள்ள இமாம் ஹுஸைன் பின் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மர்கத்திற்கு மரியாதை செய்கிறார்கள் என்பதற்காகவா?. ரஃஸுல் ஹுஸைன் மஸ்ஜிதை புனிதமாகக் கருதுகிறார்கள் என்பதற்காகவா?. இந்தவகையில்தான் இவர்கள் காஃபிர்கள் என்பது வியக்கத்தக்கது. சக்கஸீ, சனன்தஜீ மற்றும் முரீவானீ முதலிய சுன்னிகளும் காதிரியா அல்லது நக்ஷபந்தியா தரீக்காகளுடன் தொடபுற்றிருந்தால் அவர்களும் காஃபிர்கள்தான் என்பதும் வியக்கத்தக்கதே. இச்சிந்தனை, எப்படியான சிந்தனை? ஏன் இப்பிழையான, தீய சிந்தனையினூடாக முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்துகிறார்கள்?. ஷீஆக்களில் சிலருங்கூட அறியாமையின் காரணமாக அல்லது பிரிவினைகளைத் தோற்றுவிக்கும் நோக்கத்திற்காக அஹ்லுல்சுன்னாக்களின் புனிதத்துவங்களை இழிவுபடுத்துகிறார்கள்.
இவைதொடர்பில் நான் தெரிவித்துக் கொள்வதாவது: இரு குழுக்களின் இச்செயலானது, ஷரீஆரீதியில் ஹராமானதும், ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் அரசியல் சட்டத்திற்கு எதிரானதுமாகும்.
(2009.05.13)
குர்திஸ்தான் மாநிலத்தில்
ஷீஆ – சுன்னி ஆன்மீக மாணர்வகள் மற்றும் அறிஞர்களுடனான சந்திப்பில்
ஆன்மீகத்தலைவரின் உரை
எங்களில் சிலர், எங்களது நண்பர்களுக்கு தீயை மூட்டுகிறோம், எதிரிக்கு தீயை மூட்டுவதாக நினைத்தக்கொள்கிறோம். மத்ஹபுகளுக்கிடையிலான முரண்பாடுகளைத் தோற்றுவித்தலானது, நாங்கள் எங்களுக்குள் முரண்பட்டுக்கொள்வதற்காக எதிரிகளின் திட்டம் என்பதை எங்களில் பலர் மறந்துவிடுகிறோம். ஷீஆ ஒருவரின் முழுமுயற்சியானது, சுன்னிகளை வீழ்த்துவதாகவும், சுன்னி ஒருவரின் முழுமுயற்சியானது, ஷீஆக்களை வீழ்த்துவதாகவுமாக அமைந்துள்ளது. ஆம், இது மிகவும் கைசேதப்படத்தக்கதாக உள்ளதோடு, எதிரியும் இதனையே வேண்டுகிறான்.
பலஸ்தீனுக்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் எந்தவொரு நாடோ, எந்தவொரு அரசோ ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உச்சத்தை எட்டவில்லை. இதனை அனைத்துலகும் மெய்ப்படுதியுள்ளது. இருந்தும், அரேபிய நாடுகளில் சில, வேதனையினால் தங்கள் கூக்குரலை எழுப்பி, ஈரான் தனது இலக்குகளை அடைந்துகொள்வதற்காக முயற்சிக்கிறது சொன்னன. ஆனால், பலஸ்தீனர்கள் இவ்வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குறிப்பாக, காஸாப் போர் மற்றும் 23நாள் யுத்தம் முதலானவற்றில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு அதன் எல்லாத் தரப்பிலிருந்தும் ஆன்மீகத்தலைவர், ஜனாதிபதி அரசியல் அதிகாரிகள், மக்கள், பணம் உதவி மற்றும் இவைபோன்ற எல்லாமும் இஸ்லாமிய, அநீதியிழைக்கப்பட்ட பலஸ்தீன சகோரர்களுக்கு பணிவிடைபுரிவதில் அமையப்பெற்றன.
இவ்வார்த்தைகளின் தொடரில் வைரஸ் பெருகுவதை ஒருமுறை கண்டோம். இவர்கள், தொடர்ச்சியாக சில பெரியோரிடம், சில அறிஞர்களிடம், சில கண்ணிமிக்கோரிடம் சென்று, ஜனாப்…! நீங்கள் யாருக்கு உதவிக்கொண்டிருக்கிறீர்கள்? காஸா மக்கள் நாஸிபி ஆவார்கள்…!. நாஸிபி என்றால் அஹ்லுல்பைத் விரோதியாகும். இது தொடர்பில், குறிப்பிட்ட சிலரும் நம்பினர்…!. இவர்கள் நாஸிபி என்று கூறுகிறார்கள் என்ற செய்தியை எம்மிடம் கொண்டு வந்தனர். நாம் கூறினோம்: ‘தவக்கல்து அலல்லாஹ், இழிவான சபிக்கப்பட்ட iஷத்தானின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். காஸாவில் அல்-இமாம் அமீருல் முஃமினீன் அலீ இப்னு அபீதாலிப் எனும் பெயரில் மஸ்ஜித் உள்ளது. அல்-இமாம் அல்-ஹுஸைன் எனும் பெயரில் மஸ்ஜித் உள்ளது. இந்நிலையில் எவ்வாறு இவர்கள் நாஸிபியாக இருக்க முடியும்’. ஆம், இம்மக்கள் சுன்னிகளாவர். ஆனால், நாஸிபிகளில்லை. இவ்வாறு கதையாடினர், இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர், இவ்வாறு செயற்பட்டனர். இதற்கு மாற்றமாகவும் சில நடந்துள்ளன.
குறிப்பிட்ட சிலர், எழுந்து கும் நகருக்குச் சென்று ஷீஆ நூற்களை பார்த்துவிட்டு, ஜனாப்…! பாருங்கள் இவைகள் ஷீஆ நூற்கள் என்கின்றனர். அல்லது, முட்டாளான, அலட்சியக்காரனான, சுயநோக்கையுடைய ஒரு பேச்சாளன், மிப்பரில் நின்றுகொண்டு அஹ்லுல் சுன்னாக்களின் புனிதத்துவங்கள் தொடர்பில் மூடலான, கெட்ட வார்த்தையை உபயோகிக்கையில், அதனை பதிவுசெய்துகொண்டு, இருவட்டுகளாக மாற்றி, அதனை அங்குமிங்குமாக பரப்பிவிட்டு, ஜனாப்…! பாருங்கள், இவர் ஒரு ஷீஆ என்கிறார்கள். இது தொடர்பில் அவரிலும், அவர் தொடர்பில் இதனிலும் தீய அபிப்பிராயத்தை ஏற்படுத்துகின்றனர். இதன் பொருள் என்ன?.
திருக்குர்ஆனில் வந்துள்ள அல்லாஹ்வின் கூற்றான ‘உங்களது வர்ணம் நீங்கிவிடுகிறது’ என்றால், முரண்பாடு எழும்போது, பிரிவினை தோன்றும்போது, தங்களுக்கிடையில் தப்பான அபிப்பிராயம் உருவாகும்போது, ஒருவரை ஒருவர் துரோகியாக நோக்கும்போது நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்போடு நடந்துகொள்ள மாட்டோம் என்பது இயல்புதான். அப்படி, ஒத்துழைப்போடு நடந்துகொண்டாலும், சினேகபூர்வமானோராக நாமிருக்க மாட்டோம். இவைகள்தான் எதிரிகள் வேண்டிக்கொண்டிருப்பவை. ஒரு ஷீஆ அறிஞரும் சரி, ஒரு சுன்னி அறிஞரும் சரி, இதனை அவசியம் விளங்கிக்கொள்ளல் வேண்டும். இதனை உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களில் சிலவற்றிலும், அதன் உபரியான விடயங்களில் சிலவற்றிலும் இரு மத்ஹபுகள் முரண்படுதல் இயல்பானதே. இருந்தும் அனேக விடயங்களில் அவை ஒன்றிணைகின்றன. ஆனால், இது பகைமை எனும் பொருளில் இல்லை. குறிப்பிட்ட சில விடயங்களில் ஷீஆ அறிஞர்களின் ஃபத்வாக்களும் 180 பாகையளவு ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றன. அனேக விடயங்களில் அஹ்லுல்சுன்னா (மத்ஹபுகளுடைய) இமாம்களின் ஃபத்வாக்கள் ஒன்றோடு ஒன்று வித்தியாசப்படுகின்றன. இருந்தும், முரண்பாடுகள் இருக்கும் போது, மனிதர்கள் ஒருவரையொருவர் இழிந்துரைத்து, தூசிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மிகவும் நல்லது, அவருடைய மத்ஹபு இதுவாகவும், இவருடைய மத்ஹபு அதுவாகவும் இருக்கட்டும்… நபி (صلی الله علیه وآله) அவர்களுடைய குடும்பத்தினர் ஷீஆக்களுக்கு மட்டும் உரியோர் என்று யாரும் கருதிவிடக் கூடாது. அவ்வாறில்லை, இஸ்லாமிய உலகிலுள்ள அனைவருக்கும் சொந்தமானோர் ஆவர். பாத்திமா ஸஹ்றா (அலைஹா அஸ்ஸலாம்) அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் யார் இருக்க முடியும். சுவனத்து வாலிபர்களின் தலைவர்களான இமாம் ஹஸன் மற்றும் இமாம் ஹுஸைன் (علیهما السلام) ஆகியோரை ஏற்றுக்கொள்ளாது யார் இருக்க முடியும்?. இருந்தும், ஒருவர், அவர்களை இமாம் என்றும், எங்களால் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டியோர் என்றும் நம்புகிறார். மற்றொருவர் நம்புவதில்லை. இருந்தும் அவர்களை ஏற்றுக்கொள்கின்றனர். இவைதான் யதார்த்தங்களாக உள்ளன. அவசியம் இவற்றை விளங்கிக் கொள்ளல் வேண்டும். அவசியம் இவற்றை வலுப்படுத்தல் வேண்டும். இருந்தும், சிலர் இதனை விளங்கிக் கொள்ளாது, தாம் சரியான வேலையைதான் செய்வதாக கருதிய நிலையில் எதிரிகளின் தூண்டுதலால் நகர்த்தப்படுகின்றனர்.
قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا
‘(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க, தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களே அவர்கள் தான்.
எதிரிகளுக்குக்காக செயற்படுகிறார்கள் என்பதை மறந்து தாம் நற்காரியம் புரிவதாக நினைக்கின்றனர். இது நமது காலத்தின் தன்மையாகவுள்ளது.