திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01
கலாநிதி முஹம்மத் ஹுஸைனி பெஹெஷ்தி
தமிழில்: கலாநிதி முஹம்மத் அஸாம் (மஜீதி)
நூலின் அறிமுகவுரை
1978 ஆம் ஆண்டு, ஈரானின் இஸ்பஹான் நகரில் இடம் பெற்ற நேர்காணல் ஒன்றின்போது கலாநிதி ஷஹீத் பெஹெஷ்தி அவர்களிடம், ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் அலி அக்பர் அஷஅயி அவர்களால் வினவப்பட்ட விடயங்கள் உங்கள் முன்னால் ‘குர்ஆனை விளங்கும் வழி’ எனும் தலைப்பில் நூலுருப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்நேர்காணல், ஆரம்பத்தில் ஒலிநாடாவடிவில் வாசகர்களுக்காக வெளியிடப்பட்டிருந்தது. இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, ‘இஸ்லாமியக் குடியரசு’ எனும் பத்திரிகையால் அதனை எழுத்துப் பிரதியாக வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கலாநிதி பெஹெஷ்தீ அவர்களால் மீள்பரிசீலிக்கப்பட்டதன் பிறகு, நூல் வடிவில் வெளியிடப்பட்டது.
தற்போதும், இந்த உரையாடலை மீள்பதிப்புச் செய்யுமாறு பல்வேறு வேண்டுகோள்கள் பலமுறை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அதனை நாம் வெளியிடுகிறோம்.
திருக்குர்ஆன் விரிவுரை சார்ந்த விடயங்களைப் புரிந்து கொள்வதில் கலாநிதி அவர்களின் கருத்துரைகள் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நாம் இந்நூலை தங்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறோம்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
திருக்குர்ஆனின் விசேட தன்மை
கேள்வி: கடந்த இருபது ஆண்டுகளில், திருக்குர்ஆனைப் புரிந்து கொள்வதற்கான ஈடுபாடு பேரலையாகப் பெருக்கெடுத்துள்ளதோடு, அதனைப் புரிந்து கொள்வதில் பெருமளவில் வலுவான விருப்பத்தினையும் மக்களுக்கு மத்தியில் காண முடிகிறது. மேலும், ‘உங்களால் இத்திருக்குர்ஆனைப் புரிந்து கொள்ளவோ, விளங்கவோ முடியாது என்ற காரணத்தினால் அதன் பக்கம் நெருங்கிவிடாமல் இருப்பதோடு, அதை விட்டும் ஒதுங்கிவிடுங்கள்’ என்று கூறப்பட்ட இளைய தலைமுறையினர் சுயமாகவே திருக்குர்ஆனை அதிகமாக ஊகித்து புரிந்து கொள்வதோடு, அதிலிருந்து பல விடயங்களை ஆய்ந்தறிந்து கொள்கிறார்கள். அவர்கள் இம்முயற்சியினால் தற்காலத்துக்குப் பொருத்தமான விடயங்களையும் அதிலிருந்து புரிந்து கொள்கிறார்கள்.
அதேநேரம், சிலர் இவ்வாறான செயலில் ஈடுபடும்போது நேரான வழியிலிருந்து தவறிவிடுகிறார்கள். சிலர் இவ்வழியிலும், வேறு சிலர் வேறு வழியிலும் செல்கிறார்கள். எனவே, அவர்களின் இப்படியான செயல்களினால் குர்ஆனுக்கு பல்வேறு விரிவுரைகளும், விளக்கங்களும் முன்மொழியப்படுகின்றன. இருந்தும், வேறொரு புறத்தில் பார்க்கும்போது திருக்குர்ஆனைப் புரிந்துகொள்வதில் பல தடைகளும் உள்ளன. இப்படி பலவீனமான வசதிகளுடன் இளைஞர்கள் திருக்குர்ஆனை நன்கு பயன்படுத்துவதற்கு தாம் என்ன செய்ய வேண்டும்? அவ்வாறே, நீங்கள் இதற்காக எந்த முறையைப் பரிந்துரைக்கிறீர்கள்?
பதில்: ‘(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் கருத்துறுதியான வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். அதில் இரு கருத்துடைய வேறு சில வசனங்களும் உள்ளன. இருந்தும், மனதில் கோளாறுடையோர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடைய வசனங்களைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (வேறெவரும்) அறிய மாட்டார்கள். இவர்களோ, இவையனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை என்றவகையில் இதை நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் எனக் கூறுகிறார்கள். அறிவுடையோரைத் தவிர (வேறெவரும் இது குறித்து) சிந்திப்பதில்லை.’ எனும் வசனம் தொடர்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, ஓரளவுக்கு விரிவான, பரந்த ஆய்வொன்றை வழங்கியிருந்தேன். முன்னேற்பாடோடு பல அமர்வுகளில் வழங்கப்பட்ட அவ்-ஆய்வின் ஒலிநாடாக்களை செவிமடுக்குமாறு பரிந்துரைக்கிறேன். நீங்கள் பொருத்தமானதாகக் கண்டால், அந்த விரிவான ஆய்வினை நேரான வழியைத் தேடுவோருக்கும், திருக்குர்ஆனைப் புரிந்துகொள்ள ஆர்வமுள்ளோருக்கு வழங்குங்கள். எவ்வாறாயினும், தற்போது எனது எவ்வித முன்னேற்பாடும் இன்றி, தங்களின் இக்கேள்விக்கு சுருக்கமான பதிலைக் கூறுவதற்கு என்னால் முடியும். இருந்தும், இச்சுருக்கமான பதிலில் அனைத்தையும் உள்ளடக்கியதாக என்னால் தங்களுக்குக் கூற முடியுமா என்ற சந்தேகமும் என்னை ஆட்கொள்கிறது. தங்களின் இக்கேள்விக்கான பதிலை வேறுபடுத்தி இரு பகுதிகளாகத் தருகிறேன்.
பகுதி 01
1- திருக்குர்ஆனை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்
ஒரு குறிப்பட்ட குழுவினருக்கு மாத்திரம்தான் இத்திருக்குர்ஆன்; என்று வகுக்கப்பட வில்லை என்ற கூற்றில் எவ்வித சந்தேகமுமில்லை. எவ்வித சந்தேகமுமின்றி, திருக்குர்ஆன் அனைவரின் பயன்பாட்டிற்கும் உரியதாகும். இறைவசனங்களும் இதைத்தான் சொல்கின்றன. முத்தகீன்களுக்கு (இறைபக்தர்களுக்கு) நேர்வழிகாட்டும் என்றே திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. திருக்குர்ஆன் ஒளியாகவும், பிரகாசிக்கக் கூடியதாகவும், தெளிவுபடுத்தக் கூடியதாகவும் மற்றும் எதார்த்தங்களையும் கடமைகளையும் விளக்கிக் கூறுவதாகவும் இருக்கிறது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களால் நேர்வழியின் பால் அழைப்பு விடுக்கப்பட்டோரின் நேரடிப் பயன்பாட்டில் இக்குர்ஆன் இருந்தது என்பது மிகத் தெளிவான விடயமாகும். முஸ்லிம் அல்லாதோரும், இஸ்லாத்திற்கு எதிராக இருந்தோரும் திருக்குர்ஆனின் சில வசனங்களை செவிமடுத்ததோடு, இஸ்லாத்தின் பக்கம் தாம் ஈர்க்கப்படுவதற்குக் காரணமான அதே இறைவசனத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டே அவர்கள் நேர்வழியை அடைந்துகொண்டார்கள்.
இஸ்லாமியத் தீர்ப்பு இறங்கியபோதும், போருக்கான கட்டளை வந்தபோதும் அவைகள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது இறைவசனமாகவே இறங்கின. அந்த இறைவசனத்தையே நபிகளார், மக்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள். மக்களும் அந்த இறைவசனத்தின் மூலமாக தம்மீது விதிக்கப்பட்ட கடமைகளைப் புரிந்து கொண்டார்கள். திருக்குர்ஆனின் அடிப்படையான பகுதியை அனைவரும் விளங்கிக் கொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. வரலாற்றையும், சரிதைகளையும் நன்கறிந்தோர் இவ்விடயத்தை ஏற்றுக் கொள்வார்கள். எனவே, திருக்குர்ஆனின் பெரும்பகுதி ஒரு குறிப்பட்ட குழுவினருக்கு மட்டும் உரியதல்ல. மாறாக, அதனை பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வார்கள்.
2- குர்ஆனை விளங்கிக் கொள்வதற்கான நுட்பங்கள்
திருக்குர்ஆனுடைய முக்கியமான இப்பகுதியானது பெரும்பாலானோருக்கு விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஏனெனில், முதலாவது இது அறபு மொழியில் உள்ளது. இரண்டாவது, நபிகளாரின் காலத்து அறபு மொழியாக இருக்கிறது. மூன்றாவது, இது ஆரம்பத்தில் எழுத்துருவில் இருக்காமல் ஒலிவடிவில் உரையாக மட்டுமே இருந்தது. அதாவது, தற்போது நான் பேசுவது போன்று அந்த உரைவடிவம் அமைந்திருந்தது. படிப்படியாக, மக்கள் எதிர்கொண்ட பல்வேறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ஒலிவடிவில் மட்டும் உரையாகக் கூறப்பட்டது. ஒரு எழுத்தாளர் ஆரம்பத்திலிருந்து இறுதிவரைக்கும் ஏற்பாடு செய்திருக்கும் ஒரு நூலைப் போன்று திருக்குர்ஆன் நூல்வடிவில் இருக்கவில்லை. நபிகளாரின் மீது ஒரு குறித்த விடயம் பற்றி இறைவாக்கு இறங்கியபோது, நபிகளார் அதனையே மக்களுக்கு எத்திவைத்தார்கள். அதன் பிறகு மக்கள் குறித்த இறைவசனங்களை மனனம் செய்துவந்ததோடு, அதனை ஏடுகளிலும் எழுதி வைத்துக்கொண்டார்கள்.
எனவே, இம்மூன்று விடயங்களையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். 1. திருக்குர்ஆன் அறபு மொழியில் உள்ளது. 2. நபிகளாரின் காலத்து அறபு மொழியாக இருக்கிறது. 3. திருக்குர்ஆன் ஆரம்பத்தில் ஒலிவடிவில் நபிகளாருக்கு அருளப்பட்டது. அதன் பிறகு மனனமிடப்பட்ட நிலையில், ஏனையோருக்கு எற்றிவைக்கப்பட்டதோடு அவை எழுதப்பட்டு, பிரதியிடப்பட்டது. திருக்குர்ஆனை விளங்கிக் கொள்ள ஆர்வமுள்ளோர் இம்மூன்று விடயங்களுக்கும் கூடுதலாக தமது கவனத்தைச் செலுத்த வேண்டும்.
முதலில், அறபு மொழியை அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், திருக்குர்ஆன் அறபு மொழியில் உள்ளது. எனவே, அறபு மொழியிலான இறைவசனத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின், அறபு மொழியை நன்கு கற்றிருக்க வேண்டும். அறபு மொழியை நன்கு கற்றிருத்தல் என்பது, திருக்குர்ஆனை நேரடியாக விளங்கிக்கொள்ள முனைவோருக்கான முதற்கட்ட நிபந்தனையாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அறபு மொழியில் போதிய தேர்ச்சியைப் பெறாமல், ஆரம்ப இலக்கண – இலக்கிய அறிவோடு மாத்திரம் சமீபத்தில் எழுதப்பட்ட அறபு – பாரசீக குர்ஆனிய அகராதிகளையும், ஏனைய அறபு அகராதிகளையும் பயன்படுத்தி திருக்குர்ஆனின் வசனங்களை விளங்க முற்படுவதை எனது அன்பான, நற்குணமுள்ள, நல்ல நண்பர்கள் மத்தியில் பல தடவைகள் பார்த்திருக்கிறேன். சில நேரங்களில், அவர்கள் வேடிக்கையான தவறுகளையும் செய்கிறார்கள். ஆனால், இப்படியான நற்குணமுள்ள, நல்ல நண்பர்கள் எங்களை சந்திக்கின்றபோது அவர்களின் செயற்பாடுகளில் காணப்படுகின்ற குறைகளை அவர்களுக்கு நாங்கள் சுட்டிக் காட்டுகின்றபோது, மிக எளிதாக அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். திருக்குர்ஆனை புரிந்துகொள்வதற்கு, ஒருவர் நிச்சயமாக அறபு மொழியில் முழுமையான, சரளமான தேர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு அறேபியரைப் போலவே இம்மொழியை ஒருவர் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், திருக்குர்ஆன் அறபு மொழியில் உள்ளது. எனவே, அறபு இலக்கண – இலக்கியத்தில் போதியளவு அறிவினைப் பெற்றிருப்பதோடு, அறபு சொற்களை அறிந்திருப்பதும் அவசியம். மேலும், அகராதிகளைப் பயன்படுத்தும் திறனையும் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், சில நேரங்களில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருக்கலாம். இந்நேரத்தில் பொருத்தமான கருத்தைக் கண்டு பிடிப்பதற்கு அகராதிகளைப் பயன்படுத்துவதற்கான போதிய தேர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும்.
இரண்டாவதாக, திருக்குர்ஆன் நபிகளாரின் காலத்து அறபு மொழியில் அமைந்துள்ளது. ஒரு மொழியானது, அனைத்து நாடுகளிலும் மக்களுக்கு மத்தியில் பல மாற்றங்களைப் பெற்றுவருகின்றமை மொழியறிந்த அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். 1300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வார்த்தைக்கு, குறிப்பிட்ட அர்த்தம் இருந்திருக்கலாம். ஆனால், அதற்கு இன்று புதியதொரு அர்த்தம் காணப்படுவதற்கு சாத்தியமுண்டு. அல்லது, அக்குறித்த அர்த்தத்தினையும், புதிய அர்த்தத்தினையும் இன்று பயன்படுத்துவற்கு சாத்தியமுண்டு. இதனால், திருக்குர்ஆனின் வசனங்களிலுள்ள சொற்களின் அர்த்தத்தினை அறிய வேண்டுமாயின், குறித்த இறைவசனம் இறங்கிய காலத்தையும், அதற்குரிய பிரபலமான பொருள் – அர்த்தம் என்ன என்பதையும் கவனத்திற்கொள்வது அவசியம். இன்று, ஒரு சொல்லுக்கு புதிய கருத்தொன்று இருந்து, அக்கருத்தானது எங்களின் விருப்பத்திற்கு அமைவாக இருக்குமாயின், இறைவசனத்திலுள்ள குறித்த சொல்லுக்கு அக்கருத்தினை கொடுப்பதற்கு நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறான மொழிப்பயன்பாடு குறித்த இறைவசனம் இறங்கிய காலத்தில் இல்லை என்றிருந்தாலும் சரி, அச்சொல்லுக்கு இப்புதிய கருத்தினைக் கொடுப்பது உண்மையிலே தவறாகும். எனது நண்பர் ஒருவர், திருக்குர்ஆன் கூறும் இயற்கை அறிவியல் தொடர்பில் ஆராய்ந்து, அதனோடு தொடர்புடைய இறைவசனங்களை திருக்குர்ஆனிலிருந்து பிரித்தெடுத்தார். அவ்வசனங்களோடு புகைப்படங்களையும், சில விளக்கங்களையும் இணைத்ததன் பிறகு, அவை பற்றிய எனது கருத்தை தெரிந்து கொள்வதற்காக என்னிடம் கொண்டுவந்தார். சில சொற்களுக்குப் பொருத்தமான கருத்துகளைப் பயன்படுத்தாமல் இருந்ததைப் பார்த்தேன். உதாரணமாக, الم نجعل الارض کفاتا என்ற வசனமானது, பூமியின் இயக்கப்பாட்டைப் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால், அவர் அகராதிகளைப் பார்த்து کفاتاஎன்ற சொல்லுக்கான பொருளாக ‘கூர்மையாகப் பறக்கும் பறவை’ என்று மொழிபெயர்த்து மேலுள்ள வசனத்துக்கு ‘நாங்கள் பூமியை கூர்மையாகப் பறக்கும் பறவை போன்று ஆக்கவில்லையா?’ என்று மொழியாக்கம் செய்திருந்தார். திருக்குர்ஆனின் கண்ணோட்டத்தில் பூமி இயங்கிக் கொண்டிருக்கிறது என்று இவ்வசனத்தின் மூலம் ஆதாரம் கண்டுபிடித்திருந்தார்.
அந்நண்பர் அகராதிகளைப் புரட்டி ‘கிபாதா’ என்ற அறபுச் சொல்லுக்கு கூர்மையாகப் பறக்கும் பறவை என்று எழுதியுள்ளதை உங்களால் காண முடியும். ‘கிபாதா’ என்ற சொல் திருக்குர்ஆன் இறங்கிய காலத்திலும், சூழலிலும் இக்கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது இக்கருத்து படிப்படியாக பிற்காலத்தில் உருவாகியதா? என்பதைப் பார்க்க வேண்டும் என்று நான் அவரிடம் முதலில் சொன்னேன். பின்னர், இவ்வசனம் அடுத்துவரும் வசனத்தோடு தொடர்புடையதாக இருப்பதை நீங்கள் கவனத்திற்கொள்ள வேண்டும் என்றும் கூறினேன். الم نجعل الارض کفاتا احیاء و امواتا அதாவது உயிருள்ளோரையும், மரித்தோரையும் (ஒன்றாகச் சேர்த்து) அணைத்து (இடமளித்து)க் கொண்டிருப்பதாக பூமியை ஆக்கவில்லையா? احیاء و امواتا (அஹ்யாஅன் வ அம்வாதன்) என்ற இரு சொற்களும் کفاتا (கிபாதா) என்ற சொல்லை பின்தொடர்கிறது. எனவே, உயிருள்ளோர் மற்றும் மரித்தோர் என்பதற்கும், ‘கூர்மையாகப் பறக்கும் பறவை’ என்ற கருத்துக்கும் என்ன தொடர்பு உண்டு? இக்கருத்து தெளிவாக இருக்கிறதா? அறபு அகராதிகளைப் பார்க்கும் போது ‘கிபாதா’ என்ற சொல்லின் கருத்து ‘அணைத்துக் கொள்ளக் கூடியது’ என்று இருக்கிது. எனவே, அவ்வசனத்தின் கருத்து ‘உயிருடன் உள்ளோரையும், மரித்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை ஆக்கவில்லையா? என்பதாகும். முயல் மற்றும் ஏனைய உயிரினங்களைப் போல நிலத்தடிக்குள் கூடுகட்டும் உயிரினங்களும் உள்ளன. அவ்வாறே, உயிருள்ளவைகளின் சடலங்களும் வழக்கமாக பூமிக்குள் தான் அடக்கம் செய்யப்படுகின்றன. அல்லது, வெள்ளப் பெருக்கில் எழும் நீரடுக்குகள் இறந்த உடல்களை மறைக்க, அவற்றிலிருந்து அகழிகள் அமைந்துவிடுகின்றன. எனவே, ‘கிபாதா’ என்ற சொல்லுக்கு ‘கூர்மையாகப் பறக்கும் பறவை’ எனும் கருத்தும் பயன்படுத்துவதை கண்ணுற்ற மனிதன், பூமி சுற்றுகின்றது என்பதனை திருக்குர்ஆன் மூலம் நிரூபிப்பதற்காக, உடனடியாக இவ்-அர்த்தத்தை குறித்த சொல்லுக்கு வழங்கி விடுகிறான். ஆனால், இவ் அணுகுமுறை பிழையானதாகும். கட்டாயமாக இம்முறை தவிர்க்கப்பட வேண்டும். நபிகளாரின் காலத்தில் ‘கிபாதா’ என்ற சொல்லுக்கு, இக்கருத்து பயன்படுத்தப்பட்டதா? அல்லது இக்கருத்து புதிய வழக்கா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். இக்கருத்து முந்தைய அகராதிகளில் காணப்படவில்லை.
இதுவே, இக்கருத்து புதிய கருத்து என்பதற்கும், இக்கருத்து நபிகளாரின் காலத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதற்கும் சான்றாக இருக்கிறது. தற்போது, நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் சொற்களையும், சொற்றொடர்களையும் பயன்படுத்தியே பேசுகிறேன். இவைகளை தற்போது புரிந்து கொள்ளப்படும் அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறேன். நான் தற்போது பயன்படுத்தும் சொற்றொடர்கள் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பும் இருந்து வருகிறது. ஆனால், இவை வேறொரு அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டன. அச்சொற்கள் தற்போது பயன்படுத்தப்படும் கருத்தில் தான் பயன்படுத்தப்பட்டன என்று கூறுவது தவறானதாகும். எனவே, குர்ஆனியச் சொற்களைப் பயன்படுத்தும் போது அக்காலத்தில் பயன்படுத்தப்படும் அர்த்தத்தில்தான் பயன்படுத்த வேண்டும்.
மூன்றாவதாக, திருக்குர்ஆன் ஒலிவடிவத்திலான உரையாகத்தான் கூறப்பட்டது. எந்தவொரு ஒலிவடிவிலான உரையும், எழுத்துருவிலான அனைத்து விடயங்களும் அவற்றிற்குரிய காலப்பகுதியில் காணப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் காரணிகளைக் கருத்திற்கொண்டுதான் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், ஒருவர் ஒரு சூழலுக்கு ஏற்றாற்போல் ஒரு விடயத்தைப் பேசுகிறார் அல்லது ஒரு விடயத்தை எழுதுகிறார். ஒரு பேச்சாளரின் அல்லது எழுத்தாளரின் விடயத்தைப் புரிந்து கொள்வதற்கு, அப்பேச்சாளர் கூறிய அல்லது அவ்வெழுத்தாளர் எழுதிய விடயத்தின் சூழ்நிலைகள் நெருங்கிய சான்றுகளாக இருக்கின்றன. உதாரணமாக, ‘உஹத்’ போரின் சூழ்நிலையைக் குறிப்பிட முடியும். உஹத் போர்வீரர்களை விளித்து சில இறைவசனங்கள் இறங்கின. இப்போர்வீரர்கள் யுத்தக்களத்தில் இருந்ததோடு, அனைத்து யுத்தக் காட்சிகளையும் தமது கண்களால் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறைவசனம் அதைப் பற்றி இறங்கியபோது, அல்லாஹ் கூறும் விடயத்தையும், அதன் நோக்கத்தையும் அவ்வீரர்கள் உடனடியாகப் புரிந்து கொள்கிறார்கள். இப்போது, அந்த யுத்தக்களத்தில் இல்லாத நான் அவ்வசனத்திலிருந்து இவ்விடயத்தைப் புரிந்துகொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?. வரலாற்றைப் படிப்பதன் மூலம் அக்களத்தில் என்னை நான் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். எனவே, குர்ஆனிய வசனங்களின் நோக்கத்தை சரியாகப் புரிந்து கொள்வதானது, இவ்வசனங்கள் அருளப்பட்ட போர்க்களத்தில் சமூகமளித்திருத்தல் என்பதோடு தொடர்புடையதாக இருக்கிறது. இந்த ‘சமூகமளித்திருத்தல்’ என்பது நபிகளாரின் காலத்து மக்களுக்குக் கிடைத்திருந்தது. ஆனால், அக்காலத்தில் அல்லது பிற்காலத்தில் வாழ்ந்த ஏனையோரும் அவ்வாறே, அக்களத்திற்குத் தொலைவிலிருந்தோரும், அக்களத்தில் ‘சமூகமளித்திருத்தலை’ எந்த வழியினூடாக அடைந்துகொள்ள முடியும்?. அவ்வழிதான், வரலாற்றை கற்பதாகும்.
வரலாற்றை ஆய்வுசெய்து, அதனைக் கற்று, திருக்குர்ஆன் அருளப்பட்ட சூழ்நிலைகளை விளக்கும் வரலாற்றினூடாக சமூகமளித்திருப்பதுதான் பல குர்ஆனிய வசனங்களை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதற்கான நிபந்தனைகளில் ஒன்றாகும். இத்துறையில், ‘அஸ்பாபுன் நுஸூல்’ என்ற தலைப்பில் கடந்தகால அறிஞர்கள் பல நூற்களை எழுதியுள்ளார்கள். அவற்றுள் இரு நூற்;கள் மிகவும் சிறந்தவையும், பிரபலமானவையுமாக இருக்கின்றன. இவ்விரண்டையும் பல்வேறு குர்ஆனிய விரிவுரையாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றுள் ஒன்று, இமாம் வாஹிதி (ரஹ்) அவர்களின் ‘அஸ்பாபுன் நுஸூல்’ கிரந்தமாகும். மற்றது, இமாம் சுயூதி (ரஹ்) அவர்களின் ‘அஸ்பாபுன் நுஸூல்’ கிரந்தமாகும். இத்தலைப்பில் வேறு கிரந்தங்களும், நூற்களும் உள்ளன. என்றாலும், அவை போதுமானதாக இல்லை. திருக்குர்ஆனின் பல்வேறு பகுதிகளைப் புரிந்து கொள்வதற்கு இஸ்லாமிய வரலாற்றினை ஒருமுறை உன்னிப்பாகவும், கவனமாகவும் வாசிப்பது அவசியம் என்பதே எனது கருத்தாகும்.
தொடரும்…
info@peace.lk
மிகவும் பிரயோசனமான பயனுடைய இக்கட்டுரையின் தொடர் மிக விரைவில் கிடைக்குமா?