அல்லாஹ் அகிலத்தார்க்கு அளித்த அருள் வேதமான அல்குர்ஆனை அருஞ்சுவைத் தமிழில் முதலில் மொழிபெயர்த்தவர்கள், அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.
1930 இல் எழுதி வெளியிட்ட புத்தகம் இயற்கை மதம்.
அதற்குத் தந்தை பெரியார் தன் அற்புத வரிகளில் இவ்வாறு அணிந்துரை எழுதியுள்ளார்.
இயற்கை மதம் என்னும் அதன் பெயருக்கேற்ப, இஸ்லாமிய மதக் கொள்கைகள் இயற்கைத் தன்மைக்கு முற்றிலும் பொருந்தியவை என்பதை அதன் ஆசிரியர் தெளிவுபட விளக்கிக் காட்டியுள்ளார்.
இஸ்லாமிய மதச் சட்டங்கள் அறிவுக்கும்,ஆராய்ச்சிக்கும் பொருத்தமானவை. அனுபவ சாத்தியமானவை.
எத் தேசத்தில் உள்ளவர்களும் எளிதில் அனுசரிக்கக் கூடியவை என்பதை விளக்கிக் காட்டுகின்றார்.
தவிர தற்காலம் உள்ள தீவிர சீர்திருத்தவாதிகள் விரும்பும் சீர்திருத்தங்கள் யாவும் இஸ்லாம் மதத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டதாகவும் எடுத்துக் காட்டுகின்றார்.
இவைகளன்றி மக்களுக்கிடையில் தீண்டாமையை ஒழித்து, சமபந்தி போஜனத்தையும் கலப்பு விவாகத்தையும் அடிப்படையாகக் கொண்ட, மெய்யான சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உண்டு பண்ணி, ஆண்களுக்குச் சமமான உரிமைகளை பெண்களுக்கும் அவர்களின் இயற்கைக்குத் தக்கவாறு பூரணமாக அளித்து, அவர்களை இரட்சித்து, கள் காமம் சூது முதலிய தீய காரியங்களை மானிடவர்க்கத்திலிருந்து ஒழித்து, ஜீவகாருண்யமென்னும் ஜாதி பேதமற்ற நீதியையும் நியாயத்தையும் கைக்கொள்வது தான் இஸ்லாமிய மதத்தின் முக்கியக் கொள்கை என்பதாக எடுத்துக் காட்டுகின்றார்.
அரசியல் விஷயத்தில் பூரண சுயேச்சை தான் இஸ்லாத்தின் கொள்கை என்பதையும் தெளிவுபடுத்துகின்றார்.
இயற்கை மதம்என்னும் இந்நூல் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் என்ற சமய வித்தியாசமின்றி யாவரும் வாங்கி வாசித்துப் பார்க்க வேண்டிய நூலாகும்.
நம் போன்றவர்களுக்கும்,சிற் சில கொள்கைக்காரர்களுக்கும் மாறாக சில விஷயங்கள் அதில் காணப்பட்ட போதிலும், விஷய ஞானம் பெற வேண்டியவர்கள் அறிய வேண்டிய அநேக அரிய விஷயங்கள் இதில் இருக்கின்றன.
பொருளில் பெண்களுக்கு பாகம், பாகப் பிரிவினை, பலதார மணம், மேனாட்டுப் பெண்களின் நிலைமை, ஸோவியத் கொள்கை ஏற்பட்டதன் காரணம், பொதுவுடைமைக் கொள்கையின் நன்மை தீமைகள், பூமி வரி இவர்களைப் பற்றி இந்நூலிற் கூறப்பட்டுள்ள விஷயங்களைப் பார்ப்பது ஒவ்வொரு சீர்திருத்தக்கார்களுக்கும் மத விஷயத்திலோ தேசிய விஷயத்திலோ ராஜ்ஜிய விஷயத்திலோ
தங்கள் திட்டங்களைத் தயார் செய்வதில் மிக்க பயனளிக்குமென்றே அபிப்பிராயப்படுகின்றேன்.
ஒவ்வொரு மதத்தின் தத்துவங்களையும், தத்துவ சாஸ்திர முறைப்படி பரிசீலனை செய்யப்பெற்றுள்ளது.
26-10-1930 குடி அரசு நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியுள்ள நூல் அறிமுக உரையை, அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நூலில் அணிந்துரையாகவே இணைத்துள்ளார்கள்.