ஏன் நாம் துக்கம் அனுஷ்டிக்கிறோம் !
ஆஷூரா தினம்
‘ஹிஜ்ரி வருடம்’ என்று அழைக்கப்படுகின்ற இஸ்லாமிய வருடக்கணிப்பீடு முஹம்மது நபிகளார் (ஸல்) அவர்கள் அறபு தேசத்தின் மக்கா நகரிலிருந்து மதீனா நகருக்கு புலம்பெயர்ந்து சென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்குகிறது. அவ்வருடத்தின் முதலாவது மாதம் முஹர்ரம் என்றழைக்கப்படும். இம்மாதத்தின் பத்தாவது நாள், ‘ஆஷூரா’ ஆகும். என்றாலும், ஷீஆ முஸ்லிம்கள் இந்த நாளை முக்கியத்துவப்படுத்தி ‘ஆஷூரா தினம்’ என்ற பெயரில் அத்தினத்தை ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது.
ஹிஜ்ரி வருடம் 61, முஹர்ரம் மாதம், 10வது நாளில் (அதாவது ஆஷூரா தினத்தில்) முஹம்மது நபிகளார் (ஸல்) அவர்களின் பேரரான ‘இமாம் ஹுஸைன்’ (அலை) அவர்கள் ‘யசீத்’ என்பவனின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தமது உயிரைத் தியாகம் செய்தார்கள். இப்போராட்டத்தில் தமது பிள்ளைகள், குடும்பத்தார், சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் என மொத்தமாக 73 பேர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இத்தும்பியல் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் வருடாவருடம் எல்லா ஷீஆ முஸ்லிம்களும், அதேபோன்று பாரம்பரிய சுன்னி முஸ்லிம்களும் இந்நாளை துக்க தினமாக அனுஷ்டித்து வருகிறார்கள். இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் உயிர் தியாகத்தைக் கூறும் சம்பவம், ஈராக் நாட்டிலுள்ள ‘கர்பலா’ எனும் நகரின் பேரில் ‘கர்பலா போர்’ அல்லது ‘கர்பலா வரலாறு’ என்று அழைக்கப்படுகின்றது. எனவே, ஆஷூரா தின துக்க-அனுஷ்டானங்கள், கர்பலா வரலாற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அவ்வரலாற்றைத் தெரிந்து கொள்ளவது, ஆஷூரா தினத்தின் துக்க-அனுஷ்டானங்களின் தத்துவத்தை விளங்கிக்கொள்வதற்கு ஏதுவானதாக இருக்கும்.
கர்பலா வரலாறு
முஹம்மது நபிகளார் (ஸல்) அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் தலைமைத்துவ சிக்கல்கள் அறேபியாவில் இஸ்லாமிய இராஜ்ஜியம் இரண்டாகப் பிளவுபடக் காரணமானது. இஸ்லாமிய இராஜ்ஜியத்தின் மூன்றாவது ஆட்சியாளரின் மரணத்தைத் தொடர்ந்து நபிகளாரின் மருமகனார் இமாம் அலீ (அலை) அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, ஈராக் நாட்டின் ‘கூஃபா’ நகரைத் தலைமையாகக் கொண்டு இஸ்லாமிய இராஜ்ஜியத்தை ஆண்டு வந்தார். என்றாலும், சிரியாவில் இருந்த முஆவியா இப்னு அபூசுஃப்யான் தன்னை அப்பிராந்தியத்தின் ஆட்சியாளராக தாமாக அறிவித்து, தமஸ்கஸ் நகரைத் தலைமையாகக் கொண்டு மற்றொரு இராஜ்ஜியத்தை அமைத்துக்கொண்டார். இது இஸ்லாமிய நடைமுறைக்கு முரணாக அமைந்திருந்தது. இமாம் அலீ (அலை) அவர்களின் மரணத்தை அடுத்து, அவரது மகனார் இமாம் ஹஸன் (அலை) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். என்றாலும், முஆவியா இப்னு அபூசுஃப்யானை எதிர்த்து நல்லாட்சி புரிவதற்கான மக்கள் வளம் அவருக்கு கிடைக்காமல் போகவே, அந்த இராஜ்ஜியமும் முஆவியாவின் கைகளுக்குப் போனது. இமாம் ஹஸனின் மரணத்தைத் தொடர்ந்து, ஹிஜ்ரி வருடம் 60 இல் (கி.பி. 678ஃ679) முஆவியா தனது இராஜ்ஜியத்தின் வாரிசாக யசீதை நியமித்து விட்டு மரணித்து விட்டார்.
இஸ்லாமிய சன்மார்க்கம் போதித்துவந்த அறநெறிகளுக்கும், மனிதாபிமானங்களுக்கும் மதிப்பளியாத முஆவியாவின் மகன் யசீத், தனது கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக இருந்தவர்களை தனக்கு அடிபணிய வைக்கவும், அப்படியல்லாத பட்சத்தில் அவர்களை ஒழித்துக்கட்டவும் விரும்பினான். இந்தவகையில், தனது தந்தைக்கு எதிராக இமாம் அலீ (அலை) மற்றும் இமாம் ஹஸன் (அலை) ஆகியோர் இருந்ததைப் போன்று, இமாம் அலீ (அலை) அவர்களின மற்றொரு மகனாரும், முகமது நபிகளாரின் பேரரருமான இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் தனக்கும், தனது கொடுங்கோல் ஆட்சிக்கும் எதிராக செயற்படுவதை அறிந்த யசீத், இமாம் ஹுஸைனை தனக்கு அடிபணிய வைக்கவும் அல்லது கொன்றுவிடவும் திட்டமிட்டான். என்றாலும், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் அவனுக்கு அடிபணிய மறுத்துவிட்டதோடு அல்லாமல், அவனது கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான சமூக விளிப்புணர்வுப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இந்தவகையில், இமாம் அலீ (அலை) அவர்களின் ஆட்சியின் போது, அவருக்கு ஆதரவளித்திருந்த கூஃபா நகர மக்கள், இமாம் ஹுஸைன் (அலை) அவர்களுக்கும் ஆதரவை வழங்க முன்வந்து, இமாமை கூஃபா நகருக்கு வருமாறு அழைத்தார்கள்.
இமாம் ஹுஸைன் தமக்கிருந்த உயிர் ஆபத்தைக் கருத்திற்கொண்டு மதீனா நகரிலிருந்து மக்கா நகருக்கும், மக்கா நகரிலிருந்து ஒரு பாதுகாப்பான, ஆதரவுமிகுந்த இடமொன்றுக்குச் சென்றுவிடத் தீர்மானித்திருந்தார். இந்தவகையில், கூஃபா நகர மக்களிடமிருந்து தமக்கு வந்த ஆயிரக்கணக்கான ஆதரவு மடல்களினால் கூஃபாவுக்குப் புலம்பெயர்ந்துவிடத் தீர்மானித்தார்.
கூஃபா மக்களின் அழைப்பை ஏற்று இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், தமது பிள்ளைகள், குடும்பத்தார், சகோதரர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என சுமார் 313 நபர்களோடு அந்நகரை நோக்கிப் பயணமானார். என்றாலும், இச்செய்தியை அறிந்த யசீத் தனது படைகளை அனுப்பி, கூஃபா நகரை அடைந்துவிடாமல் ‘கர்பலா’ எனும் வரண்ட நிலத்தில் வைத்து இமாம் ஹுஸைனையும், அவரோடு வந்தவர்களையும் முற்றுகையிட்டான். யசீதினால் அனுப்பி வைக்கப்பட்ட படையில் சுமார் 30000 போர்வீரர்கள் காணப்பட்டன. ஆனால், இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் குழுவில் இருந்த 313 பேரில் வெறும் 50 ஆண்கள்தான் சண்டையிடுவதற்கு வலிமை பெற்றிருந்தனர். இமாம் ஹுஸைன் (அலை) கூஃபா நகரை அடைந்திருந்தால் தமக்காக சண்டையிடும் ஆயிரக்கணக்கானோரை திரட்டி, யசீதுக்கு எதிரான ஒரு பெரும் படையை உருவாக்கியிருப்பார். ஆனால், எதிரிகள் இது நடைபெறக்கூடாது என்பதற்காக கர்பலாவிலேயே அவரையும், அவரோடிருந்தவர்களை முற்றுகையிட்டு மிகவும் கொடூரமாகத் தாக்கினர்.
கி.பி. 680, அக்டோபர் 10ம் நாளில் இப்போரின் உக்கிரமம் உச்சத்தை எட்டியது. இமாம் ஹுஸைன் (அலை) அவர்களோடு, குழந்தைகள், குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் என சுமார் 72 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். கர்பலா வரண்ட பூமியில் ஒன்பது நாட்கள் குடிநீரும், உணவுமின்றி தவித்துக்கொண்டிருந்த முஹம்மது நபிகளாரின் குடும்பத்தார் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் யசீதுடைய படையினர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
கர்பலாவின் வரலாறு ஒரு தும்பியலாக முடிந்த போயிருந்தாலும் கூட, யசீதுடைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் எழுச்சிப் போராட்டம் உலக மக்களின் மனங்களில் இடம்பிடித்து வெற்றி கண்டுள்ளது. இன்று பல்வேறு நாடுகளில் குறிப்பாக ஷீஆ முஸ்லிம்களால் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் உயிர் தியாகம் நிகழ்ந்த நாளான ‘ஆஷூரா தினம்’ பெரியளவில் அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மனிதாபிமானத்திற்கும், மானுடநீதிக்குமான இமாம் ஹுஸைனின் அழைப்பு இன்றும் நம் மனங்களில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. வாருங்கள் நாம் எல்லோரும் இமாம் ஹுஸைனை நினைவு கூர்வதில் ஒன்றிணைவோம். மனிதாபிமானத்தையும், மானுடநீதியையும் மேலோங்கச் செய்வோம்.
‘ஆஷூரா தினம்’
ஏன் நாம் துக்கம் அனுஷ்டிக்கிறோம் !
ஆஷூரா தினம்
ஷீஆ முஸ்லிம்கள் இந்த நாளை முக்கியத்துவப்படுத்தி ‘ஆஷூரா தினம்’ என்ற பெயரில் அத்தினத்தை ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது.