ஏழாம் அமர்வு – தொடர் 04

(நபிமார்களை விடவும் அலீ சிறந்தவரா? என்ற வாதத்தின் தொடர்…)

மேலே கூறிய வசனத்தின்படி, ஹஸரத் அலீ (அலை) அவர்கள், விசேட நுபுவ்வத் மற்றும் வஹி அருளப்படல் ஆகிய குறிப்பான அம்சங்களைத் தவிர ஏனைய எல்லா சிறப்பம்சங்களிலும் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களோடு ஒன்றுபடுகிறார் என்பதை நிரூபித்துக் காட்டியபோது, அந்நேரத்தில், சிறப்பம்சங்கள், அந்தஸ்துகள், விசேடத்துவங்கள் ஆகிய எல்லாவற்றிலும் ஹஸரத் அலீ ஏனைய ஸஹாபா பெருமக்கள் மற்றும் உம்மத்தினர் ஆகியோரைவிடவும் சிறந்தவராக இருக்கிறார் என்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம். ஹஸரத் அலீ ஸஹாபா பெருமக்களையும், உம்மத்தாரையும்விட சிறந்து விளங்குகிறார் என்பது மட்டுமன்றி, மேலே கூறிய வசனத்தின்படியும், ரிவாயத்துக்கள் மற்றும் அறிவுபூர்வ விளக்கங்களின்படியும் நபிமார்கள், ஏனைய எல்லா உம்மத்தினர் மற்றும் ஸஹாபாக்களை விடவும் எவ்வாறு பெருமானார் (ஸல்) அவர்கள் சிறந்து விளங்குகிறார்களோ அவ்வாறுதான் ஹஸரத் அலீயும் சிறந்து விளங்குகிறார் என்பதும் தெளிவாகிறது.

பெருமானார் (ஸல்) நபிமார்களைவிட சிறந்தவர் என்பதால், பெருமானாரைப் போன்ற ஹஸரத் அலீயும் அவர்களைவிட சிறந்தவராக இருக்கிறார்

நீங்கள் உங்களுடைய ஏற்றுக்கொள்ளப்பட்ட கிரந்தங்களான இமாம் கஸ்ஸாலி அவர்களின் இஹ்யாஉல் உலூம், இப்னு அபில் ஹதீத் அவர்களின் ஷரஹு நஹ்ஜில் பலாகா, இமாம் பஹ்க்ரு ராஸி அவர்களின் தஃப்ஸீர், இமாம் ஸமஹ்க்சரி அவர்களின் தஃப்ஸீர், இமாம் பைழாவி அவர்களின் தஃப்ஸீர், இமாம் நைஷாபூரி அவர்களின் தஃப்ஸீர் மற்றும் ஏனை உலமாக்களின் கிரந்தங்கள் முதலானவற்றை ஆராய்ந்து பார்ப்பீர்களானால், இவர்கள் ‘எனது உம்மத்திலுள்ள உலமாக்கள் பனூ இஸ்ராயீலர்களின் நபிமார்களைப் போன்றவர்கள்’ எனும் நபிகளார் மொழிந்த ஹதீஸை பதிவுசெய்துள்ளார்கள்.

علماء أمّتي کأنبیاء بنی إسرائیل

மற்றொரு அறிவிப்பில் ‘எனது உம்மத்தில் இருக்கும் உலமாக்கள், பனூ இஸ்ராயீலர்களின் நபிமார்களைவிடவும் சிறந்தோராவர்’ என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியிருக்கிறார்கள்.

علماء أمّتي أفضل من أنبیاء بنی إسرائیل

பெருமானாரின் அறிவூற்றிலிருந்து தமது அறிவைப் பெற்றதன் மூலமாக இவ் உம்மத்தில் இருக்கும் அறிஞர்கள் பனூ இஸ்ராயீலர்களின் நபிமார்களைப் போன்றவர்களாக அல்லது அவர்களைவிடவும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற பெருமானாரின் அருள்வாக்கு, நிச்சயமாக ஹஸரத் அலீ (அலை) அவர்களைத்தான் குறித்து நிற்கிறது.

‘நான் அறிவின் பட்டினம், அலீ அதன் நுழைவாயில்’

أنا مدینة العلم و عليّ بابها

‘நான் ஞானத்தின் இல்லம், அலீ அதன் நுழைவாயில்’

أنا دار الحکمة وعليّ بابها

மேலே குறிப்பிட்ட, தங்களது பெரும் அறிஞர்கள் பதிவுசெய்துள்ள ஹதீஸ்களுக்கு அமைவாக ஹஸரத் அலீ (அலை) நபிமார்களைவிடவும் சிறந்தவராக இருக்கிறார். இவ்விடயத்தில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம். இது தொடர்பாக ஹஸரத் அலீ (அலை) அவர்களிடத்தில் சிலர் வினவியபோது, தனது சிறப்பம்சங்களின் சிலவற்றை சுட்டிக்காட்டியுள்ளார்.

நபிமார்களைவிடவும் சிறந்தவராக இருப்பதற்கான காரணம் தொடர்பில் ஹஸரத் அலீயிடம் முன்வைக்கப்பட்ட ஸஃஸஆவின் கேள்விகள்

பெருமானார் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளபடி, முன்-பின் சென்றோர்களில் மிகவும் துரதிஷ்டசாலியான அப்துர் ரஹ்மான் இப்னு முல்ஜம் முராதி என்பவனின் நஞ்சு பூசப்பட்ட வாளின் வெட்டுக்கு ஆளாகி, ஹிஜ்ரி நாற்பதாவது வருடம் ரமழான் மாதம் 20ம் நாளில் மரணக்குறி தென்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், இமாம் அலீ (அலை) அவர்கள், தனது மகனார் இமாம் ஹஸன் (அலை) அவர்களிடத்தில் தன்னை தரிசிப்பதற்காக வீட்டு வாயிலில் கூடியிருந்த ஆதரவாளர்களை உள்ளே அனுமதிக்குமாறு கூறினார். அப்போது, அவர்கள் உள்நுழைந்து இமாம் அலீயின் படுக்கையைச் சுற்றிநின்று, இமாமின் நிலையைக் கண்டு அழத்தொடங்கினார்கள்.

‘என்னை இழந்துவிடுவதற்கு முன்னர், நீங்கள் வேண்டியதை கேட்டறிந்து கொள்ளுங்கள். என்றாலும், தங்களுடைய கேள்விகளை சுருக்கமாகவும், குறுகியதாகவும் அமைத்துக்கொள்ளுங்கள்’

سلوني قبل أن تفقدوني ولکن خفّفوا مسائلکم

என்று இமாம் அலீ (அலை) குறிப்பிட்டார். பலரும் பல கேள்விகளைக் கேட்டு அறிந்துகொண்டனர். கேள்வி கேட்டோரில் ஸஃஸஆ இப்னு சூஹான் என்பவரும் காணப்பட்டார். இவர் ஷீஆக்களைச் சேர்ந்த பெரும் ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவர். கூஃபா நகர குத்பா பிரசங்கிகளில் ஒருவர். ஷீஆ அறிஞர்களிடத்தில் மட்டுமின்றி, தங்களது சுன்னி அறிஞர்களிடத்திலும் கூட குறிப்பாக ஸிஹாஹு சித்தா கிரந்தங்களில் கூட இமாம் அலீ (அலை) மற்றும் ஹஸரத் இப்னு அப்பாஸ் (ரழி) ஆகியோரிடமிருந்து அவர் அறிவித்துள்ள ஹதீஸ்கள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரும் ‘ராவி’யாகக் காணப்படுகிறார்.

தங்களது பெரும் அறிஞர்கள் அவரைப் பற்றிய நிலைப்பாட்டை பதிவுசெய்கையில், இப்னு அப்தில் பிர் அவர்கள் ‘அல்-இஸ்தீஆப்’ கிரந்தத்தில், இப்னு ஸஅத் அவர்கள் ‘அத்-தபகாத்’ கிரந்தத்தில், இப்னு குதைபா அவர்கள் ‘அல்-மஆரிஃப்’ கிரந்தத்தில் மற்றும் ஏனையோர் அவரைப் பற்றி குறிப்புகளை வழங்கி, அவர் ஒரு அறிஞர், சிறந்தவர், உண்மையாளர், மார்க்கப்பற்றுள்ளவர், ஹஸரத் அலீயின் விசேட தோழர்களில் ஒருவர் என்பதாக உறுதிசெய்துள்ளனர்.

இப்படியான ஸஃஸஆ அவர்கள், இமாம் அலீ (அலை) அவர்களிடத்தில் ‘நீங்கள் சிறந்தவரா அல்லது ஹஸரத் ஆதம் (அலை) சிறந்தவரா? என்பதை எனக்கு அறிவியுங்கள்’ என்று வினவினார். ‘ஒரு மனிதன் தன்னைப் பற்றி விரித்துரைப்பது இழிவானதாகும். என்றாலும், “உமது இரட்சகன் வழங்கியுள்ள அருளைப் பற்றிக் கூறுவீராக” (و أمّا بنعمة ربّک فحدّث) என்ற திருக்குர்ஆனிய வசனத்திற்கு அமைவாகக் கூறுகிறேன். நான் ஹஸரத் ஆதம் (அலை) அவர்களைவிடவும் சிறந்தவன்’ என்றார். ‘எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமீருல் முஃமினீன் அவர்களே?’ என்று அவர் வினவினார். இமாம் வழங்கிய பதிலுரையின் சுருக்கம் பின்வருமாறு,

‘ஹஸரத் ஆதம் (அலை) அவர்களுக்கு சுவனத்தில் எல்லா வகையான ஆசியும், அருளும், வசதியும் தயார்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு கோதுமைத் தாவரம் மட்டும் தடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரால் முடியவில்லை. இறுதியில் அவர் அதனைப் புசித்தார். அதனால், அல்லாஹுவின் அருள் நிறைந்த சுவனத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார். ஆனால், அல்லாஹு தஆலா கோதுமையை புசிப்பதிலிருந்து என்னைத் தடுக்கவில்லை. இருந்தும், நான் இவ்வுலகை அலட்சியப்படுத்தியதன் காரணமாக, எனது சுயாதீன சித்தத்துடனும், எண்ணத்துடனும் கோதுமையைப் புசிக்கவில்லை’ என்பதாக இமாம் குறிப்பிட்டார்.

இமாமின் கூற்றப்படி, அல்லாஹு தஆலாவிடத்தில் ஒரு மனிதனுடைய சிறப்பும், சங்கையும் இறைபக்தி, துறவறம், பற்றற்றநிலை ஆகியவற்றின் அடிப்படையில் அமையப் பெறுகின்றன. இவ்வுலம் மற்றும் அதன் பொருள்பண்டங்களைவிட்டும் யார் ஒருவரின் ஆசைநீங்கிவிடுகிறதோ, அல்லாஹு துஆலாவிடத்தில் அவருடைய நெருக்கமும், அந்தஸ்தும் அதிகரித்துவிடுகின்றது. துறவறத்தின் இறுதிநிலை, தடுக்கப்படாத ஹலாலானதைக் கூட தவிர்ந்துகொள்வதாகும்.

தொடர்ந்தும் ஸஃஸஆ அவர்கள் ‘நீங்கள் சிறந்தவரா அல்லது ஹஸரத் நூஹ் (அலை) அவர்களா?’ என்று வினவினார். ‘தானே சிறந்தவன்’ என்று இமாம் பதிலுரைத்ததும், காரணம் வினவப்பட்டது. அதற்கு இவ்வாறு குறிப்பிட்டார்.

‘ஹஸரத் நூஹ் (அலை) அவர்கள் தமது கூட்டத்தாரை அல்லாஹுவின் பால் அழைத்தபோது, அவர்கள் மறுத்ததோடு, அவருக்கு அநியாயமும் துன்புறுத்தலும் புரிந்தனர். அப்போது, “எனது இரட்சகனே பூமியின் மீது இக்காஃபிர்களில் ஒருவரையும் வசித்திருக்க விட்டு விடாதே” (ربّ لا تذر علی الأرض من الکافرین دیّارا) எனப் பிரார்த்தித்தார்கள். ஆனால் நானோ இறுதித்தூதர் ஹஸரத் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பிறகு, இவ் உம்மத்தாரிடமிருந்து எத்தனையோ துன்புறுத்தல்கள், இன்னல்கள் பலவற்றையும் கண்ணுற்றுங்கூட ஒரு போதும் இவர்களை நான் சபித்தது கிடையாது. முழுவதுமாக மௌனம் காத்தேன்’ என்பதாகக் குறிப்பிட்டார்.

இமாமின் கூற்றுப்படி, படைப்புகளில் அல்லாஹுவின் பால் நெருக்கமானவர், துன்பங்களின் போது அதிகமாகப் பொறுமை காப்பவர் ஆவார்.
(இது தொடர்பில் நஹ்ஜுல் பலாகாவில் வந்துள்ள ஷக்ஷகிய்யா உரையில், ‘கண்களில் புழுதியும், தொண்டைக்குழியில் எலும்பும் சிக்கிக்கொண்ட நிலையில் பொறுமை காத்தேன்’ என்பதாக இமாம் குறிப்பிட்டுள்ளார்).

தொடர்ந்தும் ஸஃஸஆ அவர்கள், ‘நீங்கள் சிறந்தவரா அல்லது ஹஸரத் இப்றாஹீம் (அலை) அவர்களா?’ என்று வினவியதற்கு ‘தானே சிறந்தவன்’ என்று இமாம் பதிலுரைத்தார். காரணம் வினவப்பட்டபோது பின்வருமாறு குறிப்பிட்டார்.

‘ஹஸரத் இப்றாஹீம் (அலை) அவர்கள் மரணித்தோரை உயிர்ப்பித்தல் தொடர்பில், இறைவா மரணித்தோரை எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பி என்றார். அதற்கு, நீர் இதனை விசுவாசிக்கவில்லையா என்று இறைவன் வினவினான். அவ்வாறல்ல, என்றாலும் என்னுடைய மனம் அமைதி பெறுவதற்காக(1) என்று அவர் கூறினார். ஆனால், நானோ ‘(ஆன்மீகத்) திரை நீக்கப்பட்டாலும் கூட யகீனால் எதுவும் அதிகரிக்கப் போவதில்லை'(2) என்றேன். (இது, ஹக்குல் யகீனின் நிலையை அடைந்துவிட்ட ஹஸரத் அலீயுடைய ஈமானின் உயர்வான அந்தஸ்தை எடுத்துக் காட்டுகின்றது).

(1) ربّ أرني کیف تحي الموتی قال أولم تؤمن قال بلی ولکن لیطمئنّ قلبي – البقرة / 262
(2) لو کشف الغطاء ما إزددت یقینا

தொடர்ந்து, நீங்கள் சிறந்தவரா அல்லது ஹஸரத் மூஸா (அலை) சிறந்தவரா என்று வினவப்பட்டதற்கு, அவரைவிடவும் நானே சிறந்தவன் என்றார். என்ன காரணத்தின்படி நீங்கள் சிறந்தவராக இருக்கிறீர்கள் என்று வினவப்பட்டதற்கு, ஃபிர்அவ்னை நேர்வழியின்பால் அழைப்பதற்காக அல்லாஹ் நியமித்த நேரத்தில் ஹஸரத் மூஸா (அலை) ‘இறைவா நான் அவர்களில் ஒருவரைக் கொன்றுவிட்டேன். என்னை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன். என்னை விடவும் தெளிவாகப் பேசுகின்ற எனது சகோதரர் ஹாரூனை என்னோடு அனுப்பிவை. அவர் (எனக்கு சாட்சியாளராக இருந்து) என்னை மெய்ப்பிக்கட்டும். அவர்கள் என்னைப் பொய்ப்பித்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்'(1) எனக் குறிப்பிட்டார்கள். ஆனால், மக்கா நகருக்குச் சென்று கஃபாவின் மீது நின்று, குறைஷிக் காஃபிர்களுக்கு சூறதுல் பராஅதின் முதலாவது வசனத்தை ஓதிக்காண்பிப்பதற்கு, அல்லாஹுவின் புறத்திலிருந்து பெருமானார் (ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள். அப்போது மக்கா நகர குறைஷிக் காஃபிர்களின் சகோதரனோ, தந்தையோ, சிறிய தந்தையோ அல்லது மாமாவோ அல்லது நெருங்கிய உறவினர், சொந்தங்களில் யாராவது ஒருவரோ யுத்தங்களின் போது எனது கையால் கொலையுண்டிருந்தார். இவ்வாறான நிலையிலும் கூட ஒருபோதும் அச்சப்படாமல், கட்டளைக்கு அடிபணிந்து எனது பணியை நிறைவேற்றுவதற்காகச் சென்று, குறித்த வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்துவிட்டு, மீண்டுவந்தேன்.

(1) ربّ إنّي قتلت منهم نفسا فأخاف أن یقتلون و أخي هرون هو أفصح منّي لسانا فأرسله معي ردا یصدّقني إنّي أخاف أن یکذّبون – القصص/ 33

(இது, ஒருவருடைய சிறப்பு அல்லாஹுவின்மீது தவக்குல் வைப்பதில் உள்ளது என்பதை விளக்குகின்றது. யாருடைய தவக்குல் அதிகமாக இருக்கிறதோ, அவருடைய சிறப்பும் அதிகமானது. ஹஸரத் மூஸா (அலை) தனது சகோதரரில் தங்கியிருந்தார். ஆனால், ஹஸரத் அலீ (அலை) அல்லாஹு தஆலாவின்மீது பூரண தவக்குலைக் கொண்டிருந்தார். அவனது ஆழமான கருணையையும், கண்ணியத்தையும் நம்பியிருந்தார்).

நீங்கள் சிறந்தவரா அல்லது ஹஸரத் ஈஸா (அலை) அவர்களா? என்று வினவப்பட்டதற்கு, ஹஸரத் அலீ, நானே என்றார்கள். காரணம் வினவப்பட்டதற்கு, இவ்வாறு பதிலளித்தார்கள்.

ஹஸரத் மர்யம் (அலை) அவர்கள், அல்லாஹ் அவருடைய கருவறையில் ஹஸரத் ஜிப்ரீல் (அலை) அவர்களின் மூலமாக ஊதியபோது கருவுற்றார். அப்போது, வீட்டைவிட்டு வெளியேறுமாறு வஹியறிவிக்கப்பட்டது. ஏனெனில், அந்த வீடு இபாதத்திற்கு (வழிபாட்டிற்கு) உரிய வீடாக இருந்தது. மாறாக விலாதத்திற்கு (பிரசவத்திற்கு) உரிய வீடாக இருக்கவில்லை. எனவே, அவர் வீட்டை விட்டும் வெளியேறி, பாலைவனத்தின் நடுவே ஒரு வரண்ட ஈத்தம் மரத்தடியில் ஹஸரத் ஈஸாவை பிரசவித்தார். ஆனால், எனது தாயார் ஃபாத்திமா பின்த் அஸத் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் இருக்கும்போது, பிரசவ வேதனை ஏற்படவே, இறைவா! இக்கஃபாவின் அந்தஸ்தைக் கொண்டு, இதனைக் கட்டியோரின் அந்தஸ்தைக் கொண்டும் என்னுடைய பிரசவ வேதனையை இலகுபடுத்திவிடு என்று பிரார்த்தித்தார். உடனே, கஃபாவின் சுவர் பிளந்துகொள்ள, ‘உள்ளே வாருங்கள்’ என்று ஒரு மறைவான சத்தம் எழுந்தது. எனது தாயார் உள்ளே சென்றார். நானோ கஃபாவினுள் பிறந்தேன்.

(இது எல்லா வகையிலும் தூய்மாக இருக்கும் ஒருவருடைய சிறப்பை விளக்குகின்றது. யாருடைய உடலும், ஆன்மாவும் மிகவும் தூய்மானதோ அவர் மிகவும் சிறந்தவராக இருக்கிறார். மேலும், பைத்துல் முகத்தஸைவிடவும் கஃபாவின் சிறப்பு மேலானது என்பதைக் கருத்திற்கொள்ளும் போது, பைத்துல் முகத்தஸின் அமைவிடத்தில் பிரசவிப்பதற்கு ஹஸரத் மர்யம் அவர்களுக்கு அனுமதியளிக்கப்படாமையும், அதேநேரம் கஃபாவில் பிரசவிப்பதற்கு ஹஸரத் ஃபாத்திமா பின்த் அஸத்திற்கு அனுமதியளிக்கப்பட்டமையும் ஹஸரத் மர்யம் அவர்களைவிடவும் ஹஸரத் ஃபாத்திமா பின்த் அஸத் சிறப்பானவராகவும், ஹஸரத் ஈஸா அவர்களைவிடவும் ஹஸரத் அலீ சிறப்பானவராகவும் இருப்பது தெளிவாகின்றது).

(தொழுகையுடைய நேரம் வந்ததும், எல்லோரும் தொழுகைக்காக தயாராகி, ஃபர்ழான தொழுகையை முடித்துவிட்டு, சற்று ஓய்வெடுத்து, தேநீர் அருந்தியதன் பிறகு, அழைப்பாளர் தனது உரையாடலைத் தொடர்கிறார்).

அலீ அனைத்து நபிமார்களின் விம்பமாகக் காணப்பட்டார்

ஆழைப்பாளர்: மேலே கூறப்பட்ட விடயங்களுக்கு அப்பால், ஹஸரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிமார்களின் எல்லாப் பண்புகளின் விம்பமாக இருக்கிறார் என்றும், அப்பண்புகளை தன்னகத்தே பெற்றவர் என்றும் தங்களுடைய அறிஞர்களின் ஆதாரபூர்வமான, ஏற்றுக்கொள்ளப்பட்ட நூற்களில் கூறப்பட்டுள்ளன.

இமாம் இப்னு அபில் ஹதீத் அவர்கள் தனது ஷரஹு நஹ்ஜில் பலாகாவில் 2ம் பாகம் 449ம் பக்கத்திலும், இமாம் அஹ்மத் இப்னுல் ஹுஸைன் பைஹகி அவர்கள் தனது மனாகிபிலும், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் அவர்கள் தனது முஸ்னதிலும், இமாம் பஹ்க்ரு ராஸி அவர்கள் தனது தப்ஸீர் கபீரில் ‘ஆயதுல் முபாஹலா’ பற்றிய வியாக்கியானத்திலும், இமாம் முஹியுத்தீன் இப்னு அறபி அவர்கள் யவாகீத் வ ஜவாஹிர் கிரந்தத்திலும், ஷேய்க் சுலைமான் பல்ஹ்கி ஹனபி அவர்கள் சுனனு பைஹகி, முஸ்னத் அஹ்மத், ஷரஹுல் மவாகிஃப் மற்றும் அத்தரீகதுல் முஹம்மதிய்யா ஆகியவற்றிலிருந்து அறிவிக்கின்ற யனாபீஉல் மவத்தா கிரந்தத்தின் 40வது பாபின் ஆரம்பத்திலும், இமாம் நூருத்தீன் மாலிகி அவர்கள் பைஹகியிலிருந்து அறிவிக்கின்ற ஃபுஸூலுல் முஹிம்மா கிரந்தத்தின் 121வது பக்கத்திலும், இமாம் முஹம்மத் இப்னு தல்ஹா ஷாஃபியி அவர்கள் மதாலிபுல் சுஆல் நூலின் 22வது பக்கத்திலும், இமாம் முஹம்மத் இப்னு யூசுஃப் கன்ஞி ஷாஃபியி அவர்கள் கிஃபாயதுத் தாலிப் நூலின் 23வது பாபுவிலும் வார்த்தை மற்றும் வாசக வித்தியாசங்களோடு இதனை அறிவிப்புச் செய்திருக்கின்றனர்.

பெருமானர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்:

من أراد أن ینظر إلی آدم في علمه وإلی نوح في تقوائه (في حلمته) وإلی إبراهیم في خلّته (في حلمه) وإلی موسی في هیبته وإلی عیسی في عبادته فلینظر إلی علیّ بن أبي طالب.

யாராவது ஒருவர் ஹஸரத் ஆதம் (அலை) அவர்களை அவருடைய அறிவு விடயத்தில், ஹஸரத் நூஹ் (அலை) அவர்களை அவருடைய தக்வா விடயத்தில் (அவருடைய ஞான விடயத்தில்), ஹஸரத் இப்றாஹீம் (அலை) அவர்களை அவருடைய கருணை விடயத்தில் (அவருடைய அன்பு விடயத்தில்), ஹஸரத் மூஸா (அலை) அவர்களை அவருடைய தெய்வீக லயிப்பில், ஹஸரத் ஈஸா (அலை) அவர்களை அவருடைய தெய்வீக வழிபாட்டில் கண்டுகொள்ள விரும்பினால் ஹஸர் அலீ (அலை) அவர்களைக் கண்டுகொள்ளட்டும். (நபிமார்களின் விசேட பண்புகளைக் காணவும், கற்றுக்கொள்ளவும் விரும்பினால் அவற்றை ஹஸரத் அலீ அவர்களிடம் காணவும், கற்றுக்கொள்ளவும் முடியும் என்பதை இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது).

அறிஞர் அலீ ஹமதானி ஷாஃபியி அவர்கள் தனது மவத்ததுல் குர்பா கிரந்தத்தில் 8வது மவத்தாவில் மேற்படி ஹதீஸை மேலதிய வாசகத்தோடு ஹஸரத் ஜாபிர் (ரழி) அவர்களிடமிருந்து பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்.

பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:

فإنّ فیه تسعین خصلة من خصال الأنبیاء جمعها ألله فیه ولم یجمعها في أحد غیره

அவரில் (ஹஸரத் அலியில்) நபிமார்களின் பண்புகளில் நின்றுமான தொன்னூறு பண்புகள் இருக்கின்றன. இவற்றை அல்லாஹு தஆலா அவரில் ஒன்றிணைத்துள்ளான். அவரையன்றி வேறு எவரிலும் அவற்றை ஒன்றிணைக்கவில்லை.

peace.lk

Scroll to Top
Scroll to Top