நாசகார ISISம் – தக்ஃபீரிசமும்

Disastrous ISIS and Takfirism

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 1

 

ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் சாதித்திருப்பது என்ன?

அனைத்துக்கும் முதலாக, அரச-சமூக மட்டத்தில் இஸ்லாமிய முன்மாதிரியை செயல்படுத்த வேண்டுமென உழைக்கும் முஸ்லிம்களுக்கு ISIS போன்ற தக்ஃபீரி குழுக்கள் மிகப்பெரிய பின்னடைவையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ போன்ற உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களை எல்லாம் சிதைக்கவும் பிழையாகச் சித்தரிக்கவும் ஏகாதிபத்திய சக்திகள் நெடுங்காலமாகவே முயன்று வருகின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், எதிரிகளின் அந்த நிகழ்ச்சிநிரலுக்கு ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்து குதித்திருக்கிறார்கள்.

ஏகாதிபத்திய சக்திகளுக்கு இதே விதமானவொரு இலவச சேவையை ‘சவூதி’ அரேபியா ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறது என்று நான் சொன்னால் ISIS ஆதரவாளர்கள் ஒப்புக்கொள்ளவா போகிறார்கள்?!

‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ என்பன போன்ற மேற்குறிப்பிட்ட வார்த்தைகள் யாவும் இன்று முற்றிலும் ‘கெட்ட வார்த்தைகளாக’, ‘வசவுச் சொற்களாக’ ஆக்கப்பட்டு விட்டதற்கு நாம் இந்த தக்ஃபீரிகளுக்கும் மிகப் பெருமளவு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

உலக மக்களின் மனங்களில் இஸ்லாத்தைக் குறித்த பிழையான சித்திரத்தை ஏற்படுத்துவதற்கு ஏகாதிபத்திய சக்திகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவற்றின் அசல் பாத்திரத்திற்கு மீளச் செய்வதற்கும் மௌலானா மௌதூதி, சையித் குதுப் உள்ளிட்ட கணக்கிலடங்கா முஸ்லிம் அறிஞர்களும் செயல்வாதிகளும் தம் வாழ்வையே அர்ப்பணித்து வந்திருக்கிறார்கள். இது முதல் வகையினர்.

எனினும், எதிரிகளின் மேற்கூறிய வகை தாக்குதலுக்கு முகம்கொடுக்க திராணியில்லாமல், தோல்வி மனப்பான்மையுடன், காலில் விழாத குறையாகக் கெஞ்சும் பாணியில் இஸ்லாமிய எண்ணக்கருக்களுக்கு சமாதான விளக்கங்கள் கூற முற்படுவோர் இரண்டாம் வகையினர்.

தக்ஃபீரிகளின் தோற்றத்திற்குப் பிறகுதான் இரண்டாம் வகையினர் முளைத்தனர் என்று நாம் வாதிடுவதாக தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். ஆரம்பத்திலிருந்தே இப்படியொரு வகையினரும் இருந்தே வந்துள்ளார்கள். எனினும் நாம் கூறவருவது இதனைத் தான்:

ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் இஸ்லாத்தையும் அதன் அமலாக்கத்தையும் குறித்த தம்முடைய குறுக்கல்வாத புரிதல்களாலும், கட்டற்ற வன்முறையையும் பலாத்காரத்தையும் அடிப்படையாகக் கொண்ட தமது அமலாக்க முயற்சிகளாலும் நிலைமையை மிக மோசமான சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.

இவை இஸ்லாமிய அடிப்படையில் ‘மிகச் சரியானவை’ என்று வேறு பெருமையாக நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக் கொள்கிறார்கள். தங்களுடைய ‘சாதனைகளை’ ஹாலிவுட் ரேஞ்சுக்கு வீடியோ எடுத்து விளம்பரமும் செய்து கொள்கிறார்கள். அவை எல்லாம் “முஃமின்களின் நெஞ்சங்களை குணப்படுத்தும்” என்றும், “குஃப்பார்களின் நெஞ்சங்களில் அச்சத்தை விதைக்கும்” என்றும் மொக்கையான வாதங்களை முன்வைக்கிறார்கள்.

இஸ்லாத்தை அதற்குரிய அசலான, பரந்த நோக்குடன் இவர்களால் ஒருபோதும் சிந்திக்க முடியாது என்பதை இவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். சித்தாந்த ரீதியிலும், செயல் அளவிலும் சமரசமற்ற முறையில் இஸ்லாத்தை உயர்த்திப் பிடிப்போரின் நிலைப்பாடு இவர்களால் பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம், சமரசம் செய்துகொள்ளவும் அடகுவைக்கவும் தயாராகவுள்ள போக்கினரின் நிலைப்பாடு அதிக கவனத்தையும் அதிக பின்பற்றாளர்களையும் வென்றெடுப்பதற்கு இவர்கள் வழிவகுத்துத் தந்துள்ளார்கள்.

இது தற்செயலாக நடந்திருக்கிறது என்று நான் கருதவில்லையென்றாலும், நடந்திருப்பது இதுதான் என்பதில் எவரும் பெரிதாக கருத்துமுரண்பட முடியாது என்பதாலேயே நான் இதற்கு அழுத்தம் கொடுப்பதுடன் போதுமாக்கிக் கொள்கிறேன். இது எப்படி எதிரிகளால் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது என்பதை விளக்க முற்பட்டால், முரண்பட்ட ஆதாரங்களின் சிக்கலுக்குள் சென்று சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதால் நான் அதனை அப்படியே கடந்து செல்ல விரும்புகிறேன்.

சமரசம் செய்துகொள்ள விரும்புவோரின் போக்கு எப்படி வளர்ந்து செல்கிறது என்பதைப் பற்றி சில வார்த்தைகளைச் சொல்வதுடன் இத்தொடரின் முதல் பதிவினை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

“அரசியலுடன் மதத்தை கலக்க மாட்டோம்”, “ஒரே தலைமையின் கீழ் முஸ்லிம்கள் ஒருங்கிணைவதென்பது பலவீனமான ஒற்றை ஹதீஸை அடிப்படையாகக் கொண்ட பகல் கனவு”, “இஸ்லாத்தில் மதக் குருத்துவம் கிடையாது”, “இஸ்லாமிய அரசு என்பது ஒரு கற்பிதம்” என்பன போன்ற ‘ஆய்வு முடிவுகளையும்’ ‘வாக்குறுதிகளையும்’ இஸ்லாமியவாதிகள் என்று அறியப்படுவோர் சமீபகாலமாக துரித கதியில் அள்ளிவீசிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கவே இல்லையா?!

இதை ஒரு ஆங்கிலப் பழமொழியின் உதவியுடன் கூட புரிந்து கொள்ளலாம்: Don’t throw the baby out with the bath water.

கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள்! இஸ்லாத்தைக் குறித்த முஸ்லிம்களின் புரிதலையும் சொல்லாடலையும் படிப்படியாக ‘மதச்சார்பற்றதாக’ மாற்றியமைக்கும் பாரதூரமான ‘ஆய்வுகள்’ இவை. இவற்றைப் புரிந்துகொள்வதற்கான சூட்சுமம் இப்பதிவில் இருக்கிறது. மீண்டுமொரு முறை பதிவை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்!

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 2

ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்களை நாம் ஏன் ‘தக்ஃபீரிகள்’ என்கிறோம் என்பது பற்றிய சுருக்கமான விளக்கத்தை தொடரின் இவ்விரண்டாம் பதிவில் காணலாம்.

“தக்ஃபீரிகள்” என்பதன் மூலம் நான் நாடுவது இதனைத்தான்:

இஸ்லாத்தின் சில அடிப்படையான விடயங்கள் தொடர்பாக தமது புரிதலுக்கு மாற்றமான புரிதல்களை கொண்டிருக்கும் பிற முஸ்லிம்களின் மீது “இறைநிராகரிப்பு” (குஃப்ரு) குற்றம் சுமத்தி, அவர்களின் உயிரையும் உடமைகளையும் ஆகுமாக்கிக் கொள்வதில் மிகத் தாராளமான போக்கினை கைக்கொள்ளும் மனநிலை கொண்டவர்களையும், அதை நடைமுறையில் செயல்படுத்த முனைபவர்களையும் குறித்தே நான் இங்கு ‘தக்ஃபீரிகள்’ என்று பேசுகிறேன்.

எனது மேற்கண்ட கூற்றிலிருந்து, தக்ஃபீரிகள் மீதான நமது ஆட்சேபணை இரண்டு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது என்பது விளங்கும்.

1. ‘ஈமானை முறிக்கும் பத்து விடயங்கள்’ எனும் வஹாபிச கோட்பாட்டை இக்குழுக்கள் மிகத் தளர்வாக, தாராளமாகப் பிரயோகித்து, அவ்விடயங்களில் தம்முடன் உடன்படாத ஏறக்குறைய பிற முஸ்லிம்கள் அனைவரும் “இறைநிராகரிப்பு” (குஃப்ரு) குற்றத்திற்கு ஆளானவர்கள் என்று நேரடியாகவோ மறைமுகவோ வலியுறுத்துகிறார்கள்.

2. அதன் தொடர்ச்சியாக மிகப் பலவீனமான, சப்பை காரணங்களை கூறிக்கொண்டு தம்முடன் கருத்து மாறுபடும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களின் இரத்தத்தை ஓட்டுவதற்கும் கூட இவர்கள் தயக்கம் காட்டுவதில்லை.

இப்பின்னணியில் தான் நாம் ISIS பாணி குழுக்களை ‘தக்ஃபீரிகள்’ என்கிறோம்.
இதனைப் புரிந்து கொள்வதில் எவருக்கேனும் ஏதேனும் சிரமங்கள் உண்டா?

இதில் முதலாவது அம்சத்தை மட்டும் (அதாவது அவர்களின் ‘தக்ஃபீரிச’ சித்தாந்தம் பற்றி மட்டும்) இப்பதிவில் சுருக்கமாகக் காண்போம்.

(அதனை நடைமுறைப்படுகிறோம் என்ற பெயரில் அவர்கள் எப்படியெல்லாம் வரம்பு மீறிச் செல்கிறார்கள், நாசகார விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள் என்பதை அடுத்த பதிவுக்கென ஒதுக்கி வைப்போம், இன்ஷா அல்லாஹ்.)

‘ஈமானை முறிக்கும் பத்து விடயங்கள்’ என்று வஹாபிசம் குறிப்பிடும் அம்சங்களுள் சில மிக இலகுவாக துஷ்பிரயோகம் செய்வதற்கான வாசல்களைத் திறந்து விடுபவை. அவற்றை துஷ்பிரயோகித்தே இந்த ISIS போன்ற தக்ஃபீரி குழுக்கள் பிற முஸ்லிம்களின் மீது சகட்டுமேனிக்கு ‘குஃப்ரு’ குற்றம் சுமத்தி வருகின்றனர். இதைத் தான் நாம் ‘தக்ஃபீரிசம்’ என்கிறோம்.

அவர்களின் தக்ஃபீரி சித்தாந்தம் எங்கிருந்து ஊற்றெடுக்கின்றது என்பதற்கு இரு உதாரணங்களை மட்டும் நான் இங்கு தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.

‘ஈமானை முறிக்கும் மூன்றாவது விடயம்’:

அதாவது, “எவரொருவர் இணைவைப்பாளர்களின் இறைநிராகரிப்பை (குஃப்ரு) பிரகடனம் செய்யவில்லையோ; அல்லது, அவர்களுடைய குஃப்ரு குறித்து சந்தேகத்தில் உழல்கிறாரோ; அல்லது, அவர்களுடைய வாழ்க்கை முறையை / மார்க்கத்தை சரியானதென்றோ ஏற்புடையதென்றோ கருதுகிறாரோ அவரும் -அறிஞர்களின் ஏகோபித்த அபிப்பிராயத்தின் அடிப்படையில்- குஃப்ரில் விழுந்தவராகிறார்.”

[என் குறிப்பு: இக்கோட்பாடு வெளிப்படையில் “இணைவைப்பாளர்களின் இறைநிராகரிப்பை” குறித்துப் பேசினாலும், இதற்கு தக்ஃபீரி குழுக்கள் வழங்கும் விளக்கங்களை படிப்பீர்களாயின், அவர்களுடைய புரிதலை விட்டு மாறுபட்ட புரிதல்களைக் கொண்ட பிற முஸ்லிம்களையும் அது உள்ளடக்கும் என்பது தெளிவாகப் புலப்படும்.

இதில் “அறிஞர்களின் ஏகோபித்த அபிப்பிராயம்” என்று அவர்கள் குறிப்பிடுவது, பல்வேறு சிந்தனைப் பள்ளிகளையும் சேர்ந்த சகல இஸ்லாமிய அறிஞர்களையும் சேர்த்துதான் என்று நீங்கள் நினைப்பீர்களாயின், உங்களைக் காட்டிலும் வெகுளி யாரும் இருக்க முடியாது. தக்ஃபீரிகள் ஏற்றுக்கொள்ளும் “அறிஞர்கள்” மட்டும்தான் அவர்களைப் பொறுத்தவரை அறிஞர்கள்.

இக்கோட்பாட்டை தக்ஃபீரி குழுக்கள் எப்படி துஷ்பிரயோகம் செய்கின்றன என்பதற்கு ஒரேயொரு உதாரணத்தை வழங்குவதோடு போதுமாக்கிக் கொள்கிறேன்:

அதாவது, “அல்லாஹ் அருளியதைக் கொண்டு” ஆட்சி செய்யாதவொரு ஆட்சியாளரை ‘காஃபிர்’ என்று பிரகடனப்படுத்திடத் தயங்கும் அறிஞர்களும் பொதுமக்களும் கூட இவர்களில் பெரும்பாலானோரின் விளக்கத்தின் படி காஃபிர்களாகவே கொள்ளப்பட வேண்டும்.

பிறகு ஏதேனும் சில மொக்கை காரணங்களை கூறிக் கொண்டு இவர்கள் அனைவரின் இரத்தத்தையும் ஓட்டலாம், ஒரு பிரச்சினையும் இல்லை. இத்தக்ஃபீரிகளை நாம் ஏன் “நாசகரமானவர்கள்” என்று அழைக்கிறோம் என்பதற்கு இதுவுமொரு காரணம்.]

‘ஈமானை முறிக்கும் நான்காவது விடயம்’:

அதாவது, “நபிகளாரின் வழிகாட்டுதலைக் காட்டிலும் வேறொரு வழிகாட்டுதல் அதிக பூரணமானது என்று நம்புவது; அல்லது, நபிகளாரின் தீர்ப்பைக் காட்டிலும் வேறொரு தீர்ப்பினை சிறந்ததாக நம்புவது; [அல்லது, அல்லாஹ் அருளியதை விடுத்து வேறு தீர்ப்புகளை ஏற்புடையதாகக் கொள்வது]”.

[என் குறிப்பு:  ஒருவர் நன்கு அறிந்த நிலையில் அல்லாஹ்வுடைய, நபியுடைய தீர்ப்புகளை விட மற்ற தீர்ப்புகளை அதிக பூரணமானவை என்றோ, சிறந்தவை என்றோ, ஏற்புடையவை என்றோ கொள்வது மிகத் தெளிவாக இறைநிராகரிப்பு தான் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.

எனினும் அறியாமையின் காரணத்தாலோ, குறித்தவொரு விடயத்தில் இறைவன் மற்றும் நபியுடைய தீர்ப்பு இன்னதுதான் என்று ஏகோபித்த அபிப்பிராயம் இல்லாதிருக்கும் நிலையிலோ, வேறு வகையில் புரிந்து கொள்வதற்கான முகாந்திரங்கள் இருக்கும் நிலையிலோ ஒருவர் இதனைச் செய்யும் போது, அவரை ‘காஃபிர்’ என்று பிரகடனப்படுத்துவது பற்றி இத்தக்ஃபீரி குழுக்கள் விதந்தோதும் வஹாபி அறிஞர்களே கூட கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

எனினும், இத்தக்ஃபீரிகள் ஏதேனும் மொன்னையான சாக்குபோக்குகளை கூறி, தம்முடன் கருத்துமுரண்பாடு கொள்ளும் பிற முஸ்லிம்களை ‘குஃப்ரை’ கொண்டு குற்றம் சுமத்துவதில் எப்போதும் வரம்புமீறிய போக்கையே கைக்கொண்டு வருகிறார்கள்.]

இவை போன்ற கோட்பாடுகளை பிரயோகித்து அல்லது துஷ்பிரயோகித்தே இந்த ISIS போன்ற தக்ஃபீரிகள், தம்முடைய புரிதலை விட்டு மாறுபட்ட புரிதல்களைக் கொண்ட பிற முஸ்லிம்களை காஃபிர்கள் என்று பிரகடனப்படுத்தி, அவர்களின் இரத்தத்தை ஓட்டுவதற்கு காரணங்களை தேடி அலைகின்றனர்.

அவற்றின் அடிப்படையில் தாம் நிகழ்த்தும் அட்டூழியங்களை ‘இஸ்லாமிய அடிப்படையில் மிகச் சரியானவை’ என்று வேறு பெருமையாக பீற்றிக் கொள்கிறார்கள். ஹாலிவுட் ரேஞ்சுக்கு வீடியோ எடுத்து பரப்பித் திரிகிறார்கள்.

இஸ்லாத்தையும் அதன் அமலாக்கத்தையும் மிகத் தீவிரமாக உருச்சிதைக்கிறார்கள்.
தம்முடன் கருத்து முரண்படும் முஸ்லிம்களையும் கூட ‘காஃபிர்கள்’ என்று பிரகடனப்படுத்தி அவர்களின் உயிர்களையும் உடமைகளையும் ஆகுமாக்கிக் கொள்வதே தக்ஃபீரிசத்தின் இரண்டாவது அம்சம்.

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 3

தக்ஃபீரிகள் எவ்வாறு தமது அரசியல் நிலைப்பாடுகளை பிரதானமாக ‘தக்ஃபீரின்‘ (குஃப்ரு குற்றம் சுமத்துவதன்) மீதே அமைத்துக் கொண்டுள்ளார்கள் என்றும், அதற்கான ஊற்று எங்கிருக்கிறது என்றும் சென்ற பதிவில் சுருக்கமாக தொட்டுக் காட்டியிருந்தோம்.

தக்ஃபீரின் அடியாக அமைந்த தமது நிலைப்பாடுகளை அவர்கள் எவ்வாறு நாசகரமான முறைமையைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதையும், திருகலான மொக்கை வாதங்களை கொண்டுவந்து எப்படி அவற்றை நியாயப்படுத்த முயல்கிறார்கள் என்றும் இப்பதிவில் சுருக்கமாகக் காண்போம்.

இவர்களின் குதர்க்கமான வாதங்களை நாம் கேள்விக்குட்படுத்தினால், நாம் “அல்லாஹ்வின் ஒளியை வாய்களால் ஊதி அணைக்க” முயல்வதாக கொக்கரிக்கிறார்கள். போகட்டும் என்று விடுவோம். சரி, மேலும் தாமதிக்காமல் பதிவுக்குள் நுழைவோம் வாருங்கள்.

இத்தக்ஃபீரிகள் தாம் நிகழ்த்தும் பச்சைப் படுகொலைகளையும், மனிதகுலத்துக்கு எதிரான மாபெரும் குற்றங்களையும் இரண்டு கட்டங்களாக அரங்கேற்றுகிறார்கள்.

1. முதற்கட்டமாக, அவர்கள் யாரைக் கொலை செய்யப் போகிறார்களோ அல்லது யார் மீது தாக்குதல் நடத்தப் போகிறார்களோ அவர்கள் மீது ஒன்று வெளிப்படையான தக்ஃபீரை பிரகடனம் செய்கிறார்கள்; அல்லது, அவர்களைக் கொலை செய்வது ஆகுமானதே என்பதற்கு மிகத் தளர்வானதும் நீதியற்றதுமான சாக்குபோக்குகளை முன்வைக்கிறார்கள். இதன் மூலம் அவர்களைக் கொலை செய்வதற்கான ‘சட்டபூர்வ ஏற்பினை’ மோசடியாக உருவாக்குகிறார்கள்.

2. அடுத்த கட்டமாக, அந்தக் கொலைகளையும் தாக்குதல்களையும் ஆகக் கொடூரமானதும் வக்கிரமானதுமான வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து நடத்தி முடிக்கிறார்கள். அவற்றை அணு அணுவாக இரசித்து வீடியோ பதிவுகள் எடுத்து, ஸ்பெஷல் எஃபக்டுகள் சேர்த்து பொது வெளியில் பரப்புகிறார்கள். அவற்றுக்கு உரிமைகோரி அகங்காரத்துடன் அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். உலகெங்குமுள்ள தமது ஆதரவாளர்களும் ஆங்காங்கே இதே போன்று படுகொலைகளையும் தாக்குதல்களையும் நிகழ்த்த வேண்டுமென உசுப்பேற்றி விடுகிறார்கள்.  இதுவெல்லாம் “இஸ்லாமிய அடிப்படையில் சரியானவை” என்றும், “இன்னும் சொல்வதானால் இதுதான் உண்மை இஸ்லாம்” என்றும் மூளைச்சலவை செய்கிறார்கள்.

இவ்விரு கட்டங்களையும் ஒரு முடிவுறாத நச்சுச் சுழற்சியில் மீண்டும் மீண்டும் அரங்கேற்றுகிறார்கள். தக்ஃபீரிகளின் முறைமையைப் புரிந்து கொள்வதற்கான சரியான சட்டகம் இதுதான். இதனை நன்கு மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.
ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் பல்வேறு காரணங்களைக் கூறி மக்களையும், போரில் பிடிபடும் கைதிகளையும் ‘சட்ட பூர்வமாகவே’ கொலை செய்கிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொண்டு கடந்து செல்வோம்.

அவர்கள் நிகழ்த்தும் கொலைகளும் தாக்குதல்களும் “இஸ்லாமிய அடிப்படையில் சட்டபூர்வமானவை” என்ற அவர்களின் வாதத்திலுள்ள அபத்தத்தை எளிதில் விளக்குவதற்காக, அவர்களே மிகவும் பெருமையுடன் உரிமைகோரும் சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு பரிசீலிப்போம்.

முதலாவதாக, தக்ஃபீரிகளின் “இமாம்” அபூ முஸ்அப் அல்-ஸர்காவி (ரஹ். ????) அவர்களின் லட்சணத்தைப் பார்ப்போம்.

// நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த “sectarian war” தான் ஈராக் ஆக்கிரமுப்புப் படைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது. இந்த sectarian war இன் காரண கர்த்தாவான இமாம் (Anyhow I am going to call him Imam, you like it or not) ஸர்காவி (ரஹி) அவர்கள் ஈராக்கில் இருந்த முழு சுன்னி மக்களுக்கு எதிராக ஷீயாக்களும் இதர ஆயுத குழுக்களும் யுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ஷீயாக்களின் கோயில்கள் மீதும் அவர்கள் கூடுமிடங்களிலும் குண்டு வைத்து தகர்த்தார். அதன் மூலம் முழு ஈராக்கையும் “political unrest” நிலைக்கு கொண்டு வந்ததன் மூலமே ஈராக்கில் அமெரிக்காவின் கைபொம்மைகளான எந்த தாகூத் அரசாலும் சிறிது காலம் கூட நிலைத்து நிற்க முடியவில்லை.//

மேற்கோள் காட்டப்பட்ட இப்பத்தியில் நீங்கள் சில முக்கிய பகுதிகளை உற்று கவனிக்க வேண்டும்.

// இந்த sectarian war இன் காரண கர்த்தாவான இமாம் (Anyhow I am going to call him Imam, you like it or not) ஸர்காவி (ரஹி) அவர்கள் ஈராக்கில் இருந்த முழு சுன்னி மக்களுக்கு எதிராக ஷீயாக்களும் இதர ஆயுத குழுக்களும் யுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ஷீயாக்களின் கோயில்கள் மீதும் அவர்கள் கூடுமிடங்களிலும் குண்டு வைத்து தகர்த்தார்.//

“ஷியாக்கள் ஈராக்கிலும் சிரியாவிலும் சுன்னி முஸ்லிம்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கிறார்கள்; எனவே, இஸ்ரேலிய ஸியோனிஸ்டுகளை விடவும் இந்த ஷியாக்கள்தான் நமது முதன்மை எதிரிகள்” என்று முஷ்டியை முறுக்கும் எனது இலங்கை அஹ்லுஸ் சுன்னா சகோதரர்களும் ‘மத்திய கிழக்கு அரசியல் நிபுணர்களும்’ இவ்வார்த்தைகளை கொஞ்சம் காதுகளை அகலத் திறந்து கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

//இந்த sectarian war இன் காரண கர்த்தாவான இமாம் ஸர்காவி (ரஹி)//

//ஈராக்கில் இருந்த முழு சுன்னி மக்களுக்கு எதிராக ஷீயாக்களும் இதர ஆயுத குழுக்களும் யுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக//

//வேண்டுமென்றே ஷீயாக்களின் கோயில்கள் மீதும் அவர்கள் கூடுமிடங்களிலும் குண்டு வைத்து தகர்த்தார்//

உலகின் அப்பகுதியில் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் (உங்கள் வார்த்தைகளில் கூறினால்) ‘உட்பிரிவுவாதப் போர்’ இயற்கையாக உருவான ஒன்றா அல்லது ஏகாதிபத்தியவாதிகளும் தக்ஃபீரிகளும் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கியதா என்பதைப் புரிந்து கொள்வதற்கான அதிமுக்கிய சூட்சுமத்தை மேற்காணும் மேற்கோள்கள் சுருக்கமாக விளக்குகின்றன. புரிந்துகொள்ள மனமுள்ளோர் புரிந்து கொள்ளுங்கள்.

“இல்லை, நாங்கள் ஷியா-சுன்னா என அடித்துக் கொண்டுதான் சாவோம்” என்று அடம்பிடிப்பீர்கள் என்றால் அதற்கு நான் என்ன செய்வது, எக்கேடும் கெட்டுப் போங்க…!

சரி, மீண்டும் தக்ஃபீரிகள் முன்வைக்கும் தர்க்கத்தின் பக்கம் திரும்புவோம். ஷியா “கோயில்கள்” என்று குறிப்பிடுவதை கேட்டு யாரும் குழம்ப வேண்டாம்; ஷியாக்களின் பள்ளிவாசல்கள் தான் அவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. அதுதான், ஏற்கனவே ஷியாக்களை ‘காஃபிர்கள்’ என்று அறிவித்தாயிற்றே!

பிறகு அவர்களின் பள்ளிவாசல்களையெல்லாம் ‘கோயில்கள்’ என்று தானே அழைக்க முடியும்.  ச்சே…. எல்லாவற்றையும் விவரமாக விளக்கிச் சொன்னால்தான் உங்களுக்குப் புரிகிறது. என்னவோ போங்க.

“அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளை முறியடிக்க வேண்டுமென்றால், ஷியாக்களையும் சுன்னாக்களையும் வேண்டுமென்றே மோதவிட வேண்டும்.”

உங்கள் யாருக்கும் இராணுவ தந்திரம் பற்றி ஆனா ஆவன்னா கூடத் தெரியவில்லை. ஞான சூனியங்கள்! உங்களை எல்லாம் வைத்துக் கொண்டு ஒரு கொலை கூட செய்ய முடியாது… வெளங்கிரும்…

அறுபது எழுபது வருடம் பழையதாகி பாழடைந்து கிடக்கும் கட்டிடங்களை, மக்களை எல்லாம் தூர விலகிப் போகச் சொல்லிவிட்டு குண்டு வைத்து தகர்ப்பது போல் கொஞ்சமும் உறுத்தலின்றி மிக எளிதாகக் கூறுகின்றனர், “இமாம்” ஸர்காவி ஷியாக்களின் “கோயில்களையும்” ஒன்று கூடுமிடங்களையும் வேண்டுமென்றே குண்டுவைத்து தகர்த்ததார் என்பதாக.

நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் மக்கள் நிறைந்திருக்கும் நிலையில் மிகச் சக்தி வாய்ந்த கார் அல்லது மனித வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட “ஷியா காஃபிர்களை” கொன்று குவித்து நடத்தப்பட்ட “இஸ்லாமிய” இராணுவ தந்திரோபாய நடவடிக்கைகள் அவை.

இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் உங்களுக்கு “ஈமானை முறிக்கும் பத்துக் கோட்பாடுகள்” பற்றி தெரிந்திருக்க வேண்டும்; அடுத்து, இவையெல்லாம் எப்படி ‘இஸ்லாமிய ரீதியில் மிகச் சரியானவை’ என்பதற்கான ஆதாரங்கள் தெரிந்திருக்க வேண்டும்; இறுதியாக, கொஞ்சமாவது இராணுவ உத்திகள் பற்றிய ஞானம் வேண்டும்.”

இவை எதையுமே அறியாத நம்மைப் போன்ற மூடர்கள், “அல்லாஹ்வின் ஒளியை வாயால் ஊதி அணைத்துவிட முடியுமா”? நிச்சயம் முடியாது!

“இஸ்லாமிய அடிப்படையில் மிகச் சரியான, ஆதாரபூர்வமான தாக்குதல்கள்” என்று ISIS உரிமை கோரிய இன்னும் சிலவற்றை தொடரின் நான்காவது பதிவில் அலசுவோம்.

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 4

இத்தக்ஃபீரிகள் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்கள் சிலவற்றில் தம்முடன் கருத்து மாறுபடும் பிற முஸ்லிம்களையும் கூட ‘காஃபிர்கள்’ என்று பிரகடனப்படுத்துவதில் துவங்கி, பிறகு கொஞ்சமும் ஏற்கத்தகாத வறட்டுத்தனமான நியாயங்களைக் கூறிக் கொண்டு அம்முஸ்லிம்களையும் கூட எவ்வாறு உறுத்தல் எதுவுமின்றி கொத்துக் கொத்தாக படுகொலை செய்வதில் ஈடுபடுகிறார்கள் என்பதையும், அதற்கு அவர்கள் முன்வைக்கும் வாதங்களில் உள்ள ‘அறிவார்ந்த’ அபத்தத்தையும் கடந்த பதிவில் “இமாம்” அபூ முஸ்அப் அல்-ஸர்காவியின் (ரஹ் ????) உதாரணத்தின் வழியாகக் கண்டோம்.

இத்தக்ஃபீரிகள் செய்யும் அக்கப்போரினால் உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களான ‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஷரீஆ’, ‘ஜிஹாது’ போன்றவையெல்லாம் மிகத் தீவிரமாக உருச்சிதைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டே நாம் இத்தொடரை துவங்கியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர்கள் நியாயமான அடிப்படைகளின் மீது நின்றுதான் ‘இஸ்லாத்தின் எதிரிகளுடன்’ போரில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், போருக்கென்று இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள நியமங்கள் அனைத்தையும் இவர்கள் துச்சமென கால்களுக்கடியில் போட்டு மிதித்திருக்கிறார்கள் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் வேண்டாம்.

அது பற்றி சில உதாரணங்களைப் பயன்படுத்தி சுருக்கமாக தொட்டுக் காட்டுவதே இப்பதிவின் நோக்கம்.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் தம்முடைய உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும், தமது கள்ளக் குழந்தையாம் ஸியோனிச இஸ்ரேலைப் பாதுகாக்கவும் வேண்டி, ஒன்றையடுத்து ஒன்றாக ஓயாமல் முஸ்லிம் நாடுகளின் மீது போர் தொடுத்து இப்பதினைந்து ஆண்டுகளுக்குள்ளாக மட்டும் இருபது இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் பொதுமக்களை கொன்றுகுவித்து இருக்கிறார்கள். எண்ணிக்கை இன்னும் முடிந்துவிடவும் இல்லை.

‘இதற்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்லர்’ என்று கிளம்பியிருக்கும் இத்தக்ஃபீரிகள், ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதற்கு ‘அவசியமான’ Political Unrest நிலைமையை உருவாக்குகிறோம் என்ற ‘அதிநுட்பமான’ இராணுவ-வியூக நியாயத்தைக் கூறிக்கொண்டு, முஸ்லிம் நாடுகளையெல்லாம் வாழத்தகுதியற்ற பிணக்காடாக்கி வருகிறார்கள். தமதிந்த செயற்பாடுகள் அனைத்துக்கும் ‘மிக வலுவான’ இஸ்லாமிய அடிப்படைகள் இருக்கின்றன என்று வேறு குமட்டல் ஏற்படுத்தும் விதத்தில் வாதிடுகிறார்கள்.

ஏகாதிபத்திய எதிரிகள் முஸ்லிம் நாடுகளைத் தாக்கி நாசக்காடாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அநியாயக்கார ஆக்கிரமிப்பாளர்களை அவர்களின் கோட்டையில் வைத்தே தாக்கி நிலைகுலையச் செய்ய வேண்டுமென்று வாதிடுவது ஒரு வகையில் நியாயம்தான். எனினும், இத்தக்ஃபீரிகள் செய்வது என்ன?

தம்முடைய ‘ஃகிலாஃபாவுடன்’ போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் கேளிக்கை விடுதிகள், கடற்கரை போன்று பெருந்திரளாக மக்கள் கூடும் இடங்களைத் தெரிவுசெய்து, துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், வாகனங்களை ஓட்டி நசுக்கியும் இயன்றளவு அதிக எண்ணிக்கையில் பொதுமக்களை கொன்று குவிப்பதில் உள்ள இவர்களின் ‘நியாயத்தை’ புரிந்துகொள்ளாத நாமெல்லாம் ‘மேற்கத்திய விபச்சார ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு’ பலியாகி உள்ளவர்களாம்!

“என்னடா உங்கள் பொல்லாத நியாயம்?” என்று அழுத்திக் கேட்டால், ‘அவர்கள் நம்மைத் தாக்குவது போல் நாம் அவர்களைத் தாக்குவது இறைவனின் கட்டளை’ எனும் அரிய முத்தினை உதிர்க்கிறார்கள்.

திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்களை இவர்களைக் காட்டிலும் அதிகம் யாரும் கேவலப்படுத்திவிட முடியாது (நஊது பில்லாஹ்).

“எதிரிகள் நமது குடும்பத்துப் பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி கொலை செய்வார்களேயானால், நாம் அவர்களின் குடும்பத்துப் பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி கொலை செய்வது முற்றிலும் நியாயம்!” என்றாகி விடுமா?

இஸ்லாத்தைக் குறித்து இவர்களுக்குள்ள ‘ஆழமான’ புரிதலை நினைக்கும்போதே நம் மனம் அப்படியே புளகாங்கிதம் அடைகிறது!

இவ்வாறு பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் கோழைத்தனமான தாக்குதல்களுக்கு கீழ்வரும் கூற்றுதான் ‘இஸ்லாமிய’ நியாயமாம்; நாம் இதிலுள்ள ‘நியாயத்தை’ ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்:

//சன்பேர்டினோ, ஒர்லேண்டோ, பெல்ஜியம் போன்ற இடங்களில் தாக்குதல்களை நடத்திய “தீவிரவாதிகள்” யாருமே ஷிரியாவில் இருந்தோ, ஈராக்கில் இருந்தோ பயிற்சி அளிக்கப்பட்டு அனுபப்பட்டவர்களல்ல. மாறாக இவர்கள் ஐஸிஸ் இன் கொள்கையை ஏற்றுக்கொண்டு, ஐஸிஸை ஒரு தனி அரசாங்கமாக ஏற்றுக்கொண்டதனால், தங்கள் அரசுடன் (கிலாபத்) யுத்தம் செய்து கொண்டிருக்கும் நாடுகளில் காபிர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்துகின்றனர். தாக்குதல்களுக்கு முன்னர் ஏதோ ஒரு வகையில் இவர்கள் பையத் செய்தது தெரிந்ததும் ஐஸிஸ் தனது உத்தியோகபூர்வ செய்தித் தளங்கள் மூலமாக இப்படியான தாக்குதல்களை உரிமை கோருகின்றனர். அதில் ஈடுபடுவோரை knights என அழைக்கின்றனர்.//

[குறிப்பு: இவர்களால் உருச்சிதைக்கப்பட்டுள்ளதாக நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள இஸ்லாமிய எண்ணக்கருக்களுடன் இப்போது ‘பைஅத்’ என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.]

இவ்வாறு தாக்குதல் நடத்தும் யாருக்கும் இவர்கள் பயிற்சி கொடுப்பதில்லையாம்; “எந்தவொரு அறிஞரின் அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை, உலகெங்குமுள்ள சிலுவை ஆதிக்க வீரர்களை தாக்கி அழியுங்கள்” என்று உசுப்பேற்றி மட்டும்தான் விடுவார்களாம்; பிறகு, இந்த Knights-கள் தம்முடைய ‘புனிதத் தாக்குதல்களை’ நடத்தியவுடன், அவர்களின் முகநூல் பதிவுகளின் வழியாக ‘இஸ்லாமிய அரசுக்கு’ பைஅத் செய்துள்ளார்களா என்று உறுதிசெய்து கொண்டபிறகு, ‘ஃகிலாஃபத்தின்’ செய்தித் தொடர்பாளர்கள்’ இத்தாக்குதல்களுக்கு உரிமைகோரி அறிக்கை விடுவார்களாம்.

‘நபிகளார் இப்படிச் செய்திருக்கிறார்கள்; இன்ன நபித்தோழரின் இன்ன சம்பவம் உங்களுக்குத் தெரியுமா?’ என்று இவர்களின் ஆதரவாளர்கள் இந்நடவடிக்கைகளுக்கான ‘வலுவான ஆதாரங்களை’ முன்வைத்து நம்மை மடக்கும்போது, நாம் பேந்தப் பேந்த முழிக்கிறோமாம். நாம் திருக்குர்ஆனை ஒரு முறையேனும் அதன் விளக்கத்துடன் படித்துத் தெரிந்து கொண்டவர்கள் இல்லையாம். அதனால்தான் இப்படியாம்!

ஷ்ஷப்பா…. இப்பவே கண்ணைக் கட்டுதே…..

சரி, நாங்கள் வடிகட்டிய அறிவீனர்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம்! திருக்குர்ஆனையும் நபிகளாரின் சீறாவையும் கரைத்துக் குடித்திருக்கும் ISIS ஆதரவு ‘அறிஞர்களாகிய’ நீங்களாவது, இக்கொலைகளும் தாக்குதல்களும் “இஸ்லாமிய ரீதியில் எப்படி மிகச் சரியானவை?” என்பதற்கும், “அவை எவ்வகையில் நபிகளாருடைய முன்மாதிரியின் அடியொற்றி அமைந்தவை?” என்பதற்கும் வண்டி வண்டியாக ஆதாரங்களை கொண்டுவந்து கொட்டி எங்களைப் போன்ற பாமரர்களை ‘ஜாஹிலிய்யாவிலிருந்து’ மீட்பீர்களா?

“செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?”

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 5

ISIS எனும் தக்ஃபீரிச நாசகாரக் கும்பல் ஈராக்கிலும் சிரியாவிலும் ஏற்படுத்தியிருப்பது ‘இஸ்லாமிய ஃகிலாஃபத்’ எனும் மாயையில் சிலர் இருக்கின்றனர். எனவே தான், அந்தக் கும்பல் செய்யும் அட்டூழியங்களை எல்லாம் ‘இஸ்லாத்தின் உண்மை அமலாக்கம்’ என்று வலிந்து நியாயப்படுத்த முனைவதுடன், அதுவே ‘சமரசம் செய்துகொள்ளாத உறுதியான ஈமானின் அடையாளம்’ என்று கற்பிதம் செய்துகொள்கிறார்கள்.

“ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகள் இன்னின்ன வகையிலெல்லாம் இஸ்லாத்தையும் அதன் அமலாக்கத்தையும் பற்றி மிக மோசமானவொரு சித்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்” என்று தொடரின் முதற் பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.

அதைப் பார்த்த சில சகோதரர்கள், “வெறுமனே விளைவுகளை வைத்து மட்டும் ஒன்றை சரி அல்லது தவறு என்று தீர்மானிப்பது சரியாகுமா?” என்ற ரீதியில் சந்தேகம் எழுப்பியிருந்தார்கள்.

அதற்கடுத்து வந்த பதிவுகளில், தக்ஃபீரிசமே இவர்களின் அடிப்படை சித்தாந்தமாக இருக்கிறது என்பதையும், அது எங்கிருந்து ஊற்றெடுக்கிறது என்பதையும் தொட்டுக் காட்டியிருந்தோம்.

அதைத் தொடர்ந்து, தமது தக்ஃபீரிச சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு, போரில் கடைபிடிக்க வேண்டிய இஸ்லாத்தின் கட்டளைகளை எல்லாம் கால்களுக்கடியில் போட்டு மிதிக்கும் வகையில் குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்ளிட்ட பொதுமக்களை குறிவைத்து பள்ளிவாசல்களிலும் கடைவீதிகளிலும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்திக் கொன்றுவிட்டு, அதனை தமது ‘இராணுவ தந்திரம்’ என்று கொஞ்சமும் உறுத்தலின்றி பீற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் அவர்களின் கூற்றுக்களில் இருந்தே அம்பலப்படுத்தியிருந்தோம்.

‘இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான மன்ஹஜ் (முறைமை)’ என்றும், ஆக்கிரமிப்புப் படைகளை முறியடிப்பதற்கான இராணுவ தந்திரம் என்றும் இவர்கள் முன்வைக்கும் மாபாதகங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதை அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாகவே இப்பதிவில் பேசவிருக்கிறோம்.

‘இதுதான் சரியான மன்ஹஜ்’ என்று இவர்களின் குற்றங்களைச் சரிகாண முனையும் எவரும் உண்மையில் இறைகட்டளைகளையும் நபிகளாரின் இருபத்தி மூன்றாண்டுகால தூதுத்துவப் புரட்சியையும் கேவலப்படுத்துகிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்கிறேன்.

அவர்களின் ‘இஸ்லாமிய ஆட்சி’ உருவான அழகினை அவர்களின் வாயாலேயே கேட்டு மகிழுங்கள்:

(கீழ்வரும் வரிகள் ISIS-ன் ஆங்கில வெளியீடான Dabiq-ன் முதலாவது இதழில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்கவும்.)

“(அபூ முஸ்அப் அல்-ஸர்காவி) ஃகிலாஃபத்தை நிறுவுவதற்கு அவசியமான மூலோபாயங்களையும் உத்திகளையும் கொஞ்சமும் தயக்கமின்றி நடைமுறைப்படுத்தினார். சுருக்கமாகச் சொல்வதென்றால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீர்குலைவை உருவாக்குவதற்காக அவர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டார்… எந்தவொரு தாகூத் அரசும் நிலைத்தன்மை அடைந்துகொள்ள விடாமல் தடுப்பதையே இச்சீர்குலைவு நடவடிக்கைகளின் நோக்கமாகக் கொண்டிருந்தார்… ஆகக் கூடுதல் சீர்குலைவை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக ஷைஃக் (அல்-ஸர்காவி) முஜாஹிதீன்களின் கைவசமிருந்த ஆகச் சிறந்த ஆயுதங்களான வாகன வெடிகுண்டுகள், IED-க்கள், உயிர்த்தியாகத் தாக்குதல்கள் என்பவற்றின் மீது கவனத்தைக் குவித்தார். ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான பகுதிகளில் டஜன் கணக்கான ‘நிகாயா’ தாக்குதல்களை (இயன்றளவு அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தாக்குதல்கள்) நடத்தும்படி ஆணையிடுவார். போலீஸ் படைகளையும் ராஃபிழாக்களையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் இத்தாக்குதல்கள் ஒவ்வொன்றிலும் சிலபோது நூற்றுக்கணக்கான முர்ததுகள் கொல்லப்படுவார்கள்…”

“இத்துடன் கூடுதலாக, ஈராக்கிலுள்ள எல்லா முர்தத் குழுக்களும் ஒட்டுமொத்தமாக அஹ்லுஸ் சுன்னாவின் மீது முழுவீச்சில் போரில் இறங்கும்படியான ஒரு நிர்பந்தச் சூழலை அவர் ஏற்படுத்த முயன்றார்… இதற்காகவே அவர் ஈராக்கிய முர்தது படையணிகள், ராஃபிழாக்கள், குர்திய மதச்சார்பின்மைவாதிகள் ஆகியோரைக் குறிவைத்துத் தாக்குதல்களை அரங்கேற்றினார்… இவை போன்ற முறைகளைப் பிரயோகித்து ஆகக் கூடுதலான சீர்குலைவை ஏற்படுத்தியதன் மூலமும், எல்லாப் பின்னணிகளைச் சேர்ந்த முர்ததுகளின் மீதும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதன் மூலமும், ஈராக்கை மாறாத அமைதியின்மையிலும் போரிலுமே வைத்திருந்து, எந்தவொரு முர்தத் குழுவும் ஒரு கணமேனும் பாதுகாப்பை உணர முடியாதபடி செய்வது முஜாஹிதுகளுக்குச் சாத்தியமானது…”

“அரசின் வீழ்ச்சியால் ஏற்பட்ட வெற்றிடத்தினுள் விரைவாக நுழைந்த முஜாஹிதீன்கள், …. அபூ உமர் அல்-ஹுசைனி அல்-பாக்தாதியின் தலைமையில் ஈராக்கில் இஸ்லாமிய அரசைப் பிரகடனம் செய்து நிறுவினார்கள்… சுருக்கமாகச் சொன்னால், பலவீனமான மைய அதிகாரமுள்ளவொரு நிலப்பகுதிக்கு புலம்பெயர்வது, அதனை நிலைத்தளமாகப் பயன்படுத்தி ஒரு ஜமாஅத்தை (கூட்டமைப்பை) உருவாக்குவது, அதற்கான உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது என்பவையே இச்செயல்முறையில் உள்ள வெவ்வேறு படிநிலைகளாகும்… அதன் பிறகு, சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பயன்படுத்தி அதிகமதிகம் சீர்குலைவு நடவடிக்கைகளை மேற்கொண்டு, எல்லாப் பிராந்தியங்களிலும் தாகூத்திய அரசு முற்றாக நொறுங்கி விழும்படியான நிலைமைக்கு இட்டுச்செல்ல வேண்டும்; இதனைச் சிலர் ‘தவஹ்ஹுஷ்’ (கட்டற்ற வன்முறையைப் பயன்படுத்தி அரசை முடமாக்குதல்) என்று அழைக்கின்றனர்… இதற்கு அடுத்த கட்டம் என்னவென்றால், உருவான வெற்றிடத்தை நிரப்பி ஒரு முழு வீச்சிலான அரசு அமைப்பதற்குத் தோதுவாக விவகாரங்களை முன்னெடுக்கவும், இன்னமும் தாகூத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிராந்தியங்களையும் படிப்படியாக வென்று விரிவடைந்து செல்லவும் வேண்டும். எல்லாக் காலங்களிலும் ‘ஃகிலாஃபத்தை நோக்கிய பயணத் திட்டமாக’ முஜாஹிதீன்களிடம் இருந்து வந்திருப்பது இதுதான்.”

சீறாவைக் குறித்த இக்கும்பலின் புரிதலை நினைத்தால் புல்லரிக்கிறது. இவர்களுடைய தர்க்கத்தின்படி பார்த்தால், நபியவர்கள் இதைத் தான் செய்திருக்கிறார்கள் போலும் (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக!):

அதாவது, மைய அதிகாரம் பலவீனமாக இருந்த மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து, உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, மாபாதக சீர்குலைவு நடவடிக்கைகளையும் பச்சைப் படுகொலைகளையும் நிகழ்த்தி அங்கிருந்த நிலைமையை வேண்டுமென்றே மோசமாக்கி, அதனால் உருவாகும் அதிகார வெற்றிடத்தின் மீது தனது இஸ்லாமிய அரசை நிறுவி, தொடர்ந்து வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கிச் சென்றிருக்கிறார்கள் (நஊதுபில்லாஹ்!) என்பது போன்றது இவர்களின் வாதம்.

அல்லது, நபியவர்கள் மதீனாவுக்கே சென்றிருக்கத் தேவையில்லை. மக்காவிலும் கூட மைய அதிகாரம் என்ற ஒன்று வலுவாக இருக்கவில்லை என்பதை நுணுகியுணர்ந்து, படுகொலைகளை நிகழ்த்தி, நிலைமையை சீர்குலையச் செய்து, அதிகார வெற்றிடத்தை உருவாக்கி, மக்காவிலேயே இஸ்லாமிய அரசை நிறுவியிருக்கலாம். தேவையில்லாமல் ஹிஜ்ரத் செய்து மெனக்கெட்டிருக்கிறார்கள் என்று கூட சொல்வார்கள் போலும். (நஊதுபில்லாஹ்!) என்னவொரு அபத்தம் இது!

காருண்ய நபிகளாரின் தூதுத்துவப் பணியை இஸ்லாமிய எதிரிகள் கூட இந்தளவு தூரம் திரித்துப் புரிந்துகொள்ள துணிந்ததில்லை.

நபியவர்கள் அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்களுக்கு நடுவிலிருந்த பகைமைகளைத் தீர்க்க முனைவதற்குப் பதிலாக, தாமே இரகசிய சீர்குலைவு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பகைமையை மேலும் முற்றச் செய்து, ரணகளத்தையும் ரத்தக் களறியையும் வேண்டுமென்றே உக்கிரப்படுத்தி, மதீனாவை சீர்குலையச் செய்து, அதனால் தோன்றும் அதிகார வெற்றிடத்தை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி தனது இஸ்லாமிய அரசை நிறுவினார்கள் என்பது போல் அல்லவா இருக்கிறது இவர்களின் புரிதல்?! (அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான சரியான மன்ஹஜ் (முறைமை) இதுதான் என்கிறார்கள் இந்த ‘முஜாஹிதுகள்’.

இதை நடைமுறைப்படுத்தி இவர்கள் உருவாக்கியுள்ளதற்குப் பெயர் ‘இஸ்லாமிய அரசாம்!’ இயலுமானவர்கள் அனைவரும் அதற்குப் புலம்பெயர்ந்து செல்வது (ஹிஜ்ரத் செய்வது) கட்டாயக் கடமையாம்! இதனை அம்பலப்படுத்தினால், நம்முடைய முகத்திரை கிழிகிறதாம்!

இத்தொடரின் முதல் பதிவில், ISIS உள்ளிட்ட நாசகார தக்ஃபீரிகள் இஸ்லாத்தையும் அதன் அமலாக்கத்தையும் மிகத் தீவிரமாக உருச்சிதைக்கிறார்கள் என்று நாம் குறிப்பிட்டதைக் கண்டு மனம்கொதித்த மகாகனம் பொருந்திய ‘இஸ்லாமிய அறிஞர்களும்’ ‘சீறா ஆய்வாளர்களும்’ இங்கு வந்து திருவாய் மலர்ந்தருளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்வதுடன் இப்பதிவை (தொடரை அல்ல) நிறைவு செய்கிறேன்.

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 6

மக்களை ‘காஃபிர்கள்’ என்று அழைப்பதில் மிகவும் தளர்வான, தாராள போக்கினை கைக்கொள்வதே ‘தக்ஃபீர்’ என்றும், அதனைச் செய்பவர்களே ‘தக்ஃபீரிகள்’ என்றும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம்.

மிக வெளிப்படையாகவே இறைவனை நிராகரிப்பவர்களுடன் இணைத்து, முக்கியமான சில விடயங்களில் தமக்கு மாற்றமான புரிதலைக் கொண்ட முஸ்லிம்களையும் சகட்டுமேனிக்கு ‘காஃபிர்கள்’ என்று அழைப்பதே இத்தக்ஃபீரிகளின் பொதுப் பண்பாக இருந்து வருகிறது.

இவ்வாறு கட்டற்ற விதத்தில் பெருந்திரளான மக்களை ‘காஃபிர்கள்’ என்று பிரகடனப்படுத்துவதில் இந்த ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகள் வரலாற்றிலேயே புதியதொரு உச்சத்தை எட்டியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். தம்மைத் தவிர ஏறக்குறைய அனைவர் மீதும் இவர்கள் தக்ஃபீரை பிரகடனம் செய்கிறார்கள்.

இத்தொடரின் ஆரம்பப் பகுதியில், ISIS ஆதரவாளர்கள் சிலர் “அப்படி யார் யாரையெல்லாம் ISIS தக்ஃபீர் செய்திருக்கிறது என்று சொல்ல முடியுமா?” என்ற மிகவும் ‘கடினமானதொரு’ கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

(நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் எந்தக் கேள்விக்கு, எப்போது பதிலளிப்பது என்ற தெரிவினை நாம் தீர்மானிப்பதை வைத்து, ஒருவேளை இந்தக் ‘கொள்கைவாதிகள்’ குறைந்தபட்சம் சில கேள்விகளேனும் தப்பியதே என்று உள்ளுக்குள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கக் கூடும். பாவம், உங்கள் நிம்மதிக்கு ஆயுள் குறைவு. ஒன்று மட்டும் நிச்சயம். இத்தொடரின் முடிவில், ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகளின் ‘வலுவான’ வாதங்கள் ஒன்று கூட தப்பிப் பிழைத்திருக்காது என்பதை எல்லோரும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! )

“அப்படி யார் யாரையெல்லாம் ISIS தக்ஃபீர் செய்திருக்கிறது என்று சொல்ல முடியுமா?” என்ற கேள்விக்கு எப்போதும் எளிமையான பதில் இதுவாகத்தான் இருக்க முடியும்:
அதாவது, “ISIS-ஐப் போன்றே சிந்திக்காத, அவர்கள் ஏற்படுத்தியுள்ள ‘இஸ்லாமிய’ ஆட்சியை சட்டபூர்வமானதென்று ஏற்காத அனைவரையும் அது நேரடியாகவோ மறைமுகமாகவோ ‘காஃபிர்கள்’ என்றே சித்தரிக்க முனைகிறது.”

“இது அவதூறு; ஆதாரம் தர முடியுமா?” என்று அவசரப்பட்டு கர்ஜித்து, அவமானப்பட வேண்டாம் என்று பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

‘நாங்கள் இன்ன இன்ன வகையினரை மட்டும்தான் ‘காஃபிர்கள்’ என்கிறோம்; அதில் எங்களுக்கு ‘மிகத் தெளிவான கொள்கை வழிப்பட்ட நிலைப்பாடு’ இருக்கிறது’ என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் ஒரு நாற்பது அம்ச பட்டியலை போட்டு வைத்துக் கொண்டு திரிகிறார்கள் இவர்கள்.

அந்தக் கொள்கைத் தெளிவின் அழகினை நாம் இத்தொடரின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே தோலுரித்துக் காட்டியுள்ளோம். அதுவும் போக, தமக்கு ஆகாத முஸ்லிம்களை எல்லாம் இவர்கள் ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி ‘காஃபிர்கள்’ என்று பட்டம் கட்டிவிடுகிறார்கள் என்பதே நடைமுறை யதார்த்தம்.

முஸ்லிம்கள் தமக்கிடையே கருத்து வேறுபடுவதற்கும், ஒருவரையொருவர் மிகக் கடுமையாக விமர்சித்துக் கொள்வதற்குமான உரிமையை இஸ்லாம் மறுத்துவிடவில்லை. ஆனால் இத்தக்ஃபீரிகளின் பிரச்சினை என்னவென்றால், தமக்கு மாறுபட்ட புரிதல்கள் கொண்ட முஸ்லிம்கள் அனைவரையும் இவர்கள் ‘தக்ஃபீர்’ எனும் கண்ணாடி வழியே மட்டும்தான் பார்க்கிறார்கள்.

அதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அவர்களை ‘முர்தத்’ என்றும் பிரகடனம் செய்து கொலை செய்வதற்கான சூழலை உருவாக்குகிறார்கள்.
‘ரித்தா’ என்றால் என்ன? ‘முர்தத்’ என்றால் யார்? என்பன பற்றியும், அது குறித்து நிலவும் சட்டவியல் தப்பபிப்பிராயங்கள் பற்றியும் பிறகொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன், இன்ஷா அல்லாஹ்.

இவர்களின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ‘Dabiq’-ன் ஒரேயொரு வெளியீட்டில் (இதழ் 12, 1437 சஃபர்) இடம்பெற்றுள்ள இரண்டு கட்டுரைகளுக்குள் மட்டும் இவர்கள் எத்தனை பேருக்கு ‘காஃபிர்’ என்றும், ‘முர்தத்’ என்றும், ‘தாகூத்’ என்றும் பட்டம் கட்டியிருக்கிறார்கள் என்பதை இப்பதிவில் சுருக்கமாகத் தொட்டுக் காட்டவிருக்கிறேன்.

இக்கட்டுரைகளில் ‘காஃபிர்’ என்றும், ‘முர்தத்’ என்றும், ‘தாகூத்’ என்றும் புகழாரம் சூட்டப்பட்ட தனிநபர்களில் இருந்து துவங்குவோம்:

1. ஸைத்தூனா கல்வி நிலைய நிறுவனர் ஹம்சா யூசுஃப்
2. யாசிர் காழி
3. சுஹைப் வெப்
4. நக்ஷ்பந்தியா சூஃபி தலைவர் ஹிஷாம் கப்பானி
5. பிலால் ஃபிலிப்ஸ்
6. அப்துல்லாஹ் ஹாக்கிம் குவிக்
7. வலீத் பஸ்யூனி
8. ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனியா
9. துருக்கி அதிபர் தையிப் அர்துகான்
10. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் சையித் அலி காமினயி

பட்டியல் முடிந்துவிடவெல்லாம் இல்லை, எனினும் இத்துடன் போதுமாக்கிக் கொள்கிறேன் (அண்ணன் டயர்ட் ஆகிட்டேன்!).

மேற்கூறிய முஸ்லிம் தலைவர்கள் மீதும், அவர்களின் கருத்துக்கள் மீதும், செயற்பாடுகள் மீதும் கடுமையான விமர்சனங்களை எவரொருவரும் முன்வைக்க முடியும்.

எனினும், ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகளின் பிரச்சினை என்னவென்றால், இவர்கள் தம்முடன் முரண்படும் எல்லோரையும் ‘காஃபிர்’ என்றும், ‘முர்தத்’ என்றும், ‘தாகூத்’ என்றும் பட்டம் கட்டி அவர்களைக் கொலை செய்ய வேண்டுமெனத் தூண்டுகிறார்கள்.
அதில் முதல் கட்டுரைக்கு தலைப்பு என்ன தெரியுமா?!

“Kill the Imams of Kufr in the West”.

“மேற்குலகிலுள்ள காஃபிர் இமாம்களைக் கொல்லுங்கள்!”

அதற்கு, இரத்தம் தோய்ந்த கத்தியுடன் கூடிய கிராஃபிக்ஸ் டிசைன் வேறு.
ஆனாலும், நாம் இவர்களை ‘தக்ஃபீரிகள்’ என்று சொல்லக் கூடாது, ஆமாம்!

அடுத்ததாக, 15 பக்கங்கள் கொண்ட ஒரு முழுநீளக் கட்டுரையை “The murtadd Brotherhood” என்ற தலைப்பில் இஃக்வான் அல்-முஸ்லிமூனுக்கு என்றே ஒதுக்கியிருக்கிறார்கள்.
இஃக்வான் அல்-முஸ்லிமூன் இயக்கத்தை அறிமுகப்படுத்தும் அக்கட்டுரையின் முதலிரு பத்திகளை நீங்கள் கண்டிப்பாக வாசித்தே தீர வேண்டும். (இல்லையென்றால் ISIS ஆதரவாளர்கள் கோபித்துக் கொள்வார்கள்):

“கடந்த சில பத்தாண்டுகளில் நாசகார புற்றுக்கட்டி ஒன்று தோன்றி, வளர்ந்து உருமாறி, பரவி இருப்பதுடன், முழு உம்மத்தையும் அது மதத்துறப்பில் (ரித்தத்) மூழ்கடிப்பதற்கு முயற்சி செய்து கொண்டுள்ளது. எகிப்திய நகரமொன்றில் கி.பி. 1928-ல் துவங்கிய அந்தப் புற்றுக்கட்டி விரைவில் எகிப்தையும் தாண்டி ஷாம், ஈராக் தேசங்களுக்கும், அறுதியில் தாகூத்திய முர்ததுகளின் ஆக்கிரமிப்பிலுள்ள நாடுகள் பலவற்றுக்கும் பரவியது. அதன் பிறகு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்குலகுக்கு உள்ளாகவும் பரவியது. எங்கெல்லாம் முஸ்லிம் சமூகங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் அது அவர்களின் விவகாரங்களை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாம் அல்லாதவொரு மதத்தை அவர்களிடம் விதைக்க முயற்சித்தது.

இந்தப் புற்றுக்கட்டியின் வழிகேடானது வரலாற்றில் தோன்றிய மிக மோசமான பிரபல வழிகேடுகளான ஜஹ்மிய்யா, முஃதஸிலா, மாதுரீதிய்யா, அஷரிய்யா உள்ளிட்ட அனைத்தையும் விஞ்சுவதாகும். அறிஞர்கள் மரணித்து விட்டதாலும்; பல நூற்றாண்டுகளாகவே ஃகலீஃபாக்கள் இல்லாது போய்விட்டதாலும்; உஸ்மானியர்களின் கரங்களால் சூஃபியிசம், கலாம் (வழிகேடான “இறையியல் விவாதங்கள்”), றஃயீ (ஹதீஸ்களுக்கு முரண்படும் பிழையான ‘ஃபிக்ஹு’ அபிப்பிராயங்கள்), கப்ரு வழிபாடு, நவீனத்துவம் போன்றவை பரவியதாலும்; பல முஸ்லிம் நாடுகள் மீதான சிலுவை காலனியாதிக்கத்தாலும் இந்தப் புற்றுக்கட்டி தான் சென்ற எல்லா நாடுகளிலும் எளிதாக காலூன்றிக் கொண்டது.

‘ஜமாஅத் இஃக்வான் அல்-முஸ்லிமூன்’ (முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு) என்றறியப்படும் அந்தப் புற்றுக்கட்டி கி.பி. 1928-ல் ஹசன் அல்-பன்னாவால் துவங்கப்பட்டது….”

இதன் பிறகு இஃக்வான்களின் வழிகேடு என்று பக்கம் பக்கமாக எழுதிக் குவித்திருக்கிறார்கள். கட்டுரையின் கடைசி வரிகளையும் வாசித்து விடுங்கள்:

“அதே போல் இஃக்வானிய முர்ததுகள், அவர்களின் சிலுவை எஜமானர்கள், இஃக்வான்களுடன் அணிசேர்ந்துள்ள றாஃபிழாக்கள் என எல்லோரும் இணைந்து இஸ்லாத்தை அழிக்க முனைகிறார்கள்; நவீன கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் நபி ஈசா (அலை) உரைத்த ஏகத்துவத்துடன் என்ன விதமான சம்பந்தம் இருக்குமோ, அதே விதமான சம்பந்தம்தான் இவர்கள் சொல்லும் இஸ்லாத்திற்கும் நபிகளாரின் இஸ்லாத்திற்கும் உண்டு. இவர்கள் தம்முடைய அந்த மதத்தைக் கொண்டு நபிகளாரின் இஸ்லாத்தைப் பதிலீடு செய்ய முனைகிறார்கள். இவர்களின் பாதையில் இருக்கும் ஒரே தடைக்கல்லான (ISIS-ன்) ‘ஃகிலாஃபத்துக்கு’ ஹிஜ்ரத் செய்துவர வேண்டியது எல்லா முஸ்லிம்களின் மீதும் கட்டாயக் கடமையாகும்.

“(ISIS உடைய) ஃகிலாஃபத்தின் ஜிஹாதின் ஊடாக இந்த வழிகெட்ட முர்ததுக் கட்சிக்கு அல்லாஹ் முடிவு கட்டுவானாக! ஆமீன்!”

இவ்வாறு சகட்டுமேனிக்கு முஸ்லிம் அறிஞர்களையும், தலைவர்களையும், இயக்கங்களையும் இவர்கள் ‘காஃபிர்’ என்றும், ‘முர்தத்’ என்றும், ‘தாகூத்’ என்றும் முத்திரை குத்துவதுடன், அவர்களைக் கொலை செய்யத் தூண்டுவது இஸ்லாத்தின் அடிப்படையில் எப்படி மிகச் சரியானது என்பதை அதன் ஆதரவாளர்கள் ஐயத்திற்கிடமின்றி நிறுவி, நம்மை எல்லாம் அறியாமையிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக நான் பதிவை மேலும் நீட்டிச் செல்லாமல் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 7

போரில் ஈடுபடாத பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், பொது மக்கள் என எந்தப் பாரபட்சமும் பாராமல் இந்த ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகள் தாமே முன்னின்று கணக்கின்றி சிந்தும் இரத்தம் போதாதென்று, ஆங்காங்கே இருக்கும் தம் ஆதரவாளர்களையும் இயன்றளவு இரத்தத்தை ஓட்ட வேண்டுமெனத் தூண்டி விடுகின்றனர்.

“இது ஃகலீஃபாவின் ஆணை… ஒன்று ஃகிலாஃபத்தின் ஆளுகைக்கு புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) வரவேண்டும். அல்லது, அவ்வாறு செய்ய இயலவில்லை என்றால் அவர் சிலுவையாதிக்க வீரர்களையும், அவர்களின் கூட்டணியினரையும், றாஃபிழாக்களையும், தாகூத்களையும், அவர்களின் முர்ததுப் படையணிகளையும் -எங்கிருந்த போதிலும் சரி- கிடைப்பதைக் கொண்டு தாக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு எவ்வித தயக்கமும் காட்டக் கூடாது. இந்தக் கடமையைப் பற்றி ‘அறிஞர்கள்’ என்று கூறப்படும் எவரிடமும் ஆலோசனை கேட்கக் கூடாது. ஜாஹிலிய்யாவின் நிலையில் மரணம் அடைந்துவிடக் கூடாது என்பதால், அவர் ஃகிலாஃபத்திற்கு விசுவாசப் பிரமாணத்தை (பைஅத்) பிரகடனப்படுத்தி விட்டு தாக்குதலை தொடுக்க வேண்டும்.” (Dabiq இதழ் 9)

‘ஃகலீஃபாவின்’ இக்கட்டளைக்கு செவிமடுக்கும் அதன் ஆதரவாளர்கள் தத்தமது பகுதிகளில் இயன்றளவு அதிகபட்ச உயிரிழப்பை ஏற்படுத்துவதற்கு வசதியாக பொதுமக்கள் கூடும் எளிய இலக்குகளைத் தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தி தமது விசுவாசத்தை நிரூபிக்கின்றனர். தாக்குதலுக்கு முன் மறவாமல் முகநூல் வழியே ISIS-ன் ஃகலீஃபாவுக்கு பைஅத் பிரமாணம் செய்கின்றனர்.

ISIS-ம் கொஞ்சமும் குற்றவுணர்வு இன்றி பொதுமக்கள் மீதான அப்படுகொலைகளுக்கு உரிமை கோரி, தமது Knights-களை உயிர்த்தியாகிகள் என்று புகழ்ந்து வீடியோக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டு குரூர மகிழ்ச்சி அடைந்து கொள்கிறது. இஸ்லாத்தைக் குறித்தும் அதன் அமலாக்கத்தைக் குறித்தும் உலக மக்கள் மனதில் வெறுப்பை விதைத்துவிட்ட திருப்தியில் அடுத்த தாக்குதலுக்கும் அடுத்த அறிக்கைக்கும் தயாராகின்றது.

பெல்ஜியம், சான்பெர்னார்டினோ, பாரிஸ், பங்களாதேஷ், துனீஷியா, ஒர்லாண்டோ என உலகெங்கும் பல்வேறு இடங்களில் ISIS ஆதரவாளர்கள் இத்தகைய தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

ஏகாதிபத்தியவாதிகளும் ஸியோனிஸ்டுகளும் முஸ்லிம் நாடுகளைத் தாக்கி அப்பாவி முஸ்லிம்களை அழித்து வருவதற்கு பழிவாங்கும் முகமாகவே தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தி, எதிரிகளின் பாதுகாப்பை உருக்குலைக்க முனைகிறோம் என்று கூறி, போரில் ஈடுபடாத பொதுமக்களின் மீது தாம் நடத்தும் படுகொலைகளுக்கு உலக முஸ்லிம்களின் மனங்களில் ஒருவித சட்டஏற்பினை ஏற்படுத்த முனைகிறார்கள்.

இது உண்மையில் பித்தலாட்டம். இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கூட அறியாத ஏமாளிகளிடமும், சாகச விரும்பிகளிடமும் மட்டுமே இவர்களின் இந்த அரைவேக்காட்டுத் தனமான வாதங்கள் எடுபடும். இதற்கு அவர்கள் பல்வேறு வித குயுக்திகளைப் பயன்படுத்துகிறார்கள்.

1. போரில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என திருக்குர்ஆனும் நபிகளாரின் சீறாவும் ஐயத்திற்கிடமின்றி நிறுவியுள்ள நியமங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, சில வரலாற்று நிகழ்வுகளை அவற்றின் சூழமைவிலிருந்து துண்டித்து, பிழையாகப் பொருள் கற்பித்து அவ்வொளியில் தமது குற்றச் செயல்களை நியாயமானவை போல் சித்தரிக்கின்றனர்.

2. எதிரிகள் வரம்பு மீறுவதால் நாமும் அவ்வாறு வரம்பு மீற வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது என்று பசப்புகின்றனர்.

3. எதிரி நாட்டு மக்கள் ‘காஃபிர்கள்’ என்பதால் அவர்களின் உயிருக்கு எந்தவொரு பெறுமானமும் இல்லை என்றும், அவர்கள் மீதான தாக்குதல்கள் முற்றிலும் நியாயம் என்றும் இஸ்லாத்தின் அரிச்சுவடி கூட தெரியாமல் பிதற்றுகின்றனர்.

4. எதிரி நாடுகளின் அரசுகளையும் தலைவர்களையும் அந்நாட்டு மக்கள்தான் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதால், அவ்வரசுகளின் குற்றங்களுக்கு அம்மக்களும் ஒருவகையில் பொறுப்பாளிகள்தான் என்றும்; அவர்களைத் தண்டிப்பது ஆகுமானதென்றும் உளறுகின்றனர்.

5. நவீன காலத்தில் போர்முறையும் ஆயுதங்களின் இயல்பும் மாறிவிட்டதால், போரில் ஈடுபடாத பொதுமக்கள் உயிரிழப்பதை தவிர்க்க முடியாது என அவர்களின் ஆதரவாளர்கள் நாடகம் ஆடுகின்றனர்.

தம்முடைய ‘ஃகிலாஃபா’ அரசுடன் போரில் ஈடுபட்டிருக்கும் நாடுகளின் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்வது இஸ்லாத்தின் அடிப்படையில் ஆகுமானதென்று இக்கிரிமினல் கும்பல் நம்மை நம்பச் சொல்கின்றது.

அதாவது, நபிகளாரின் மதீனா அரசுடன் மக்கத்து குறைஷிகள் போரில் ஈடுபட்டிருந்தனர். மக்காவிலிருந்த முஸ்லிம்கள் பலர் ஹிஜ்ரத் செய்ய முடியாமல் இறுதி (மக்கா வெற்றி) வரையும் கூட அங்கேயே தங்கியிருந்தனர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இவர்களின் தர்க்கத்தின் படி பார்த்தால் நபியவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?!மக்காவிலுள்ள முஸ்லிம்களுக்கு இப்படியொரு செய்தி அனுப்பியிருக்க வேண்டும்:

அதாவது, “ஹிஜ்ரத் செய்ய முடியாமல் மக்காவில் தங்கியிருக்கும் முஸ்லிம்கள் எல்லாம் கையில் கிடைக்கும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, சந்தைகளிலும் பொதுவிடங்களிலும் புகுந்து தாக்குதல் நடத்தி, இயன்றளவு உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி எதிரியை நிலைகுலையச் செய்யுங்கள்.”

அண்ணலார் அப்படிச் செய்தார்களா? இந்த அழகில் இவர்கள் ‘நபிகளாரின் முன்மாதிரியின் மீதமைந்த இஸ்லாமிய அரசை’ நிறுவியுள்ளார்களாமாம்!
இக்கிரிமினல் கும்பலின் மாபாதகங்களுக்கும் காருண்ய நபிகளாருக்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை சீறா குறித்த குறைந்தபட்ச புரிதலுள்ள எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

அடுத்ததாக, ‘காஃபிர்கள்’ என்றாலே நசுக்கி அழிக்க வேண்டிய விஷ ஜந்துக்கள் என்பது போன்று இத்தக்ஃபீரிகள் பேசுகிறார்கள். எனவே, காஃபிர்களான பொதுமக்கள் கொல்லப்படுவது பற்றி இவர்களுக்கு ஒரு துளியும் குற்றவுணர்வு இருப்பதில்லை. திருக்குர்ஆனையும் நபிகளாரையும் கற்ற எவரொருவரும் இப்படி நடந்துகொள்வது பற்றி கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்பது மட்டும் திண்ணம்.

‘குஃப்ரு’ என்பது இறைவனை நிராகரிக்கும் ஒரு சித்தாந்த நிலைப்பாடு. அது முற்றிலும் அசத்தியம் என்பதிலோ, ஈருலக வாழ்விலும் பெருநஷ்டம் விளைவிக்கும் ஒன்று என்பதிலோ எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும், அப்படியொரு நிலைப்பாட்டினை எடுக்கும் உரிமையை இறைவனே வழங்கியுள்ளான். இவ்வாறிருக்க, அதனைக் காரணம் காட்டி உயிரைப் பறிக்கும் இக்கயவர்கள் உண்மையில் இஸ்லாத்திற்கே தீங்கு விளைவிக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள நாம் பெரிய ஆய்வொன்றும் செய்யத் தேவையில்லை.

‘போர்முறை மாறிவிட்டது’, ‘ஆயுதங்களின் இயல்பு மாறிவிட்டது’ என அவர்களின் ஆதரவாளர்கள் கூறுவதெல்லாம் வெறும் சப்பைக்கட்டு. இவர்கள் என்னவோ இராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைப்பது போலவும், ஆயிரக் கணக்கான மக்களும் வேறு வழியின்றி கொல்லப்படுவது போலவும் இருக்கிறது இவ்வாதம்! மிக அதிகபட்ச உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கில், நன்கு திட்டமிட்டு பொதுமக்கள் கூடுமிடங்களின் மீது தாக்குதல் நடத்திக் கொன்றுவிட்டு, சும்மா நல்ல பிள்ளைகள் போல் நாடகமாடுகின்றனர்.

எதிரி அரசுகளின் குற்றங்களுக்காக, அவ்வரசுகளுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களை கொலை செய்யலாம் என்றால், காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அரசுகள் இழைத்து வரும் குற்றங்களுக்காக நம் அனைவரையும் கொல்லுவது நியாயமாகி விடுமா?! என்னேயொரு தர்க்க அறிவு?! மிடில…..

எதிரிகள் வரம்பு மீறுவதால் நாங்களும் வரம்பு மீறுவோம் என்று சொல்வீர்களாயின், “எதிரிகள் நமது குடும்பத்துப் பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி கொலை செய்வார்களேயானால், நாம் அவர்களின் குடும்பத்துப் பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி கொலை செய்வது நியாயமாகி விடுமா?!”

இஸ்லாத்தைக் கேவலப்படுத்துவதற்கு உங்களை விட வேறு யாரும் தேவையில்லை! இவர்களின் மூளைச் சலவைக்குப் பலியானவர்களை பார்த்து நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்:

இரத்த வெறிபிடித்த இக்கும்பலின் பின்னால் சென்று உங்களின் ஈருலக வாழ்வையும் நாசமாக்கிக் கொள்ளாதீர்கள்! உலக மக்களுக்கு ஒரு சாபக் கேடாக அமைந்து விடாதீர்கள்! திருக்குர்ஆனையும் நபி வாழ்வையும் ஆழக் கற்பதன் மூலம் இக்கும்பலின் அசத்திய இயல்பை விளங்கிக் கொள்ள முயலுங்கள்! இவர்களின் பெயரில் மட்டும் தான் ‘இஸ்லாம்’ இருக்கிறதேயொழிய, இவர்களுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நான் முன்பே கூறியிருந்தது போல், “வீட்டில் எவரேனும் பெரியவர்கள் இருந்தால்” அழைத்து வந்து, ‘ISIS-ன் அட்டூழியங்கள்’ என இத்தொடர் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு குற்றச்சாட்டையேனும் மறுத்து, அது எப்படி இஸ்லாமிய ரீதியில் சரியானது என்பதை நிறுவச் சொல்லுங்கள்.

தக்ஃபீரிகள் மட்டுமின்றி வேறு சில இயக்கங்களும் தனிநபர்களும் கூட கீழ்வரும் கேள்விகளின் விடயத்தில் முறையான புரிதலின்றித் தடுமாறுவதைப் பார்க்க முடிகிறது:

1. ‘ஜனநாயகம் என்பது குஃப்ரு அல்லவா? எனில், அதில் பங்கெடுப்பவர்கள் காஃபிர்கள் தானே?!’

2. ‘முர்ததுகள் கொல்லப்பட வேண்டும் என்பது தானே இஸ்லாமிய சட்டம்?!’

3. ‘போரில் சிறைபிடிக்கப்படும் பெண்களை அடிமைப் பெண்களாக ஆக்குவதும், அவர்களை பாலியல் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வதும், சந்தையில் விற்றுவிடுவதும் ஆகுமானது தானே?!’

இவை போன்ற கேள்விகள் பலரின் உள்ளங்களை அரித்துக் கொண்டுள்ளன என்பது யாவரும் அறிந்ததே.

இவை பற்றி விரிவாக தனிப் பதிவுகள் எழுதும் எண்ணமிருக்கிறது, இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு:

இத்தொடரில் பேசப்பட்ட எது குறித்தேனும் உங்களுக்கு கேள்விகள் இருப்பின் அறியத் தரவும். பின்னூட்டங்களின் வழியாகவோ, தனிப் பதிவுகளாகவோ பதிலளிக்க முனைகிறேன், இன்ஷா அல்லாஹ்.

Source: www.meipporul.in

Scroll to Top
Scroll to Top