மீட்பாளரின் வருகைக்கான நிபந்தனைகளும், அடையாளங்களும் (நூல்) 01

நூலின் முன்னுரை

மானுட சமூகத்தின் வாக்களிக்கப்பட்ட மீட்பாளர் பற்றிய குறிப்புகள் பல்வேறு சமய நூற்களில் காணப்பட்ட போதிலும், அது குறித்த விளிப்புணர்வு அச்சமயங்களைப் பின்பற்றுவோரிடம் மிக அரிதாகவே காணப்படுகின்றது. இஸ்லாமிய சன்மார்க் கத்திலும் கூட இது, ஷீஆ-சுன்னி கிரந்தங்களில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுன்னி சமூகத்தில் இரண்டாம் நிலை நம்பிக்கைசார்ந்த விடயங்களுள் இது உள்ளடக்கப் பட்டுள்ளது.

ஆனால், ஷீஆ சமூகத்தில் அவ்வாறல்ல, இது ஷீஆக்களாகிய எமது முதல்நிலை நம்பிக்கைசார்ந்த விடயங்களுள் ‘இமாமத்’ பற்றிய நம்பிக்கையோடு தொடர்புபட்டதாகும். ‘இமாமத்’ கோட்பாட்டில், பன்னிரு இமாம்களுள் இறுதியானவராக நம்பப் படுகின்ற இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களே மானுட சமூகத்தின் வாக்களிக்கப்பட்ட மீட்பாளர் என்பது நமது நம்பிக்கையாகும்.

எவ்வாறு இறைவன் பற்றிய நம்பிக்கையை கோட்பாட்டளவில் சரியாகப் புரிந்துகொண்டு, செயற்பாட்டுரீதியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள முயற்சிக்கின்றோமோ, அவ்வாறுதான் இதனையும் ‘கோட்பாடு’ மற்றும் ‘செயற்பாடு’ என்ற இரு அம்சங்களில் நாமும் வகுத்துக்கொள்வதற்கு கடமைப் பட்டுள்ளோம்.

வாக்களிக்கப்பட்ட மீட்பாளரான இமாம் மஹ்தி அலைஹிஸ் ஸலாம் அவர்கள், மனிதர்களாகிய எமக்கு இறைவன் வழங்கிய அருட்கொடையாக இருக்கிறார்கள். எனவே, இவ் அருட்கொடையை இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்வதில் எமது ஆர்வத்தை வெளிப்படுத்தவும், அதனை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் நாம் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வகையில் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையோடு தொடர்புபட்ட விடயங்களை ‘ஷீஆ கண் ணோட்டத்தில்’ நாம் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இமாமின் வருகைக்கான நிபந்தனைகள் மற்றும் அதன் அடையாளங்கள் பற்றி ஷீஆ ஹதீஸ் கிரந்தங்களின் ஒளியில் இந்நூல் ஆராய்கின்றது. இது ஷீஆ அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்துக்களிலிருந்து அமையப் பெற்ற ஒரு தொகுப்பாகும்.

தமிழ்பேசும் ஷீஆ உலகில் இதுபோன்ற விடயங்களை அறிந்து கொள்வதற்கான போதுமான தமிழ் நூற்கள் கிடையாது என்பதைக் கருத்திற்கொண்டு, இதனை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.

‘நினைவுகூர்ந்த பின்பு, ஸபூர் வேதத்தில், இப்பூமியை நமது நல்லடியார்கள் வாரிசாகப் பெறுவார்கள் என்று எழுதியிருந்தோம்’
(அல்-அன்பியா, 105)
—————————
அபூ முதஹ்ஹரி
மே, 2017.

இமாமின் வருகைக்கான நிபந்தனைகள்

வாக்களிக்கப்பட்ட நாளின் துவக்கம் மற்றும் அந்நாளில் ஏற் படுகின்ற நீதியின் உலகளாவிய விரிவாக்கம் என்பவற்றுடன் தொடர்புபட்ட நிபந்தனைகளையே இமாம் மஹ்தி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வருகைக்கான நிபந்தனைகள் என்போம். அவையாவன,

01. மெய்யான, தூய நீதித்துவத்தை உட்கொண்டதா கவும், அதன் மூலம் மனிதகுலத்திற்கு சுபீட்சத்தையும், சந்தோஷத்தையும் நல்கி, ஈருலோக வெற்றியை அளிக்கக் கூடியதாகவும் அமையப் பெற்ற ஒரு சம்பூரண நிகழ்ச்சித்திட்டம் இருப்பது அவசியம். மேலும், இத்திட்டம் எக்காலத்திலும், எவ்விடத்திலும் நடைமுறைப் படுத்தக் கூடியதாக அமைந்து இருப்பதும் அவசியம். இவ்வாறான சம்பூரண நிகழ்ச்சித் திட்டமின்றி நீதி, நியாயம், தர்மம், சத்தியம் முதலான வற்றை இவ்வுலகில் நிலைநாட்ட முடியாது.

02. காலத் தேவைகளுக்கேற்ப எல்லாத் தகைமை களையும் உள்ளடக்கிய, தகுதிவாய்ந்த மேலான ஒரு தலைவர் இருப்பது அவசியம். மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதிலும், அதனை மேற்பார்வை செய்வதிலும் அவர் திறன்கொண்டவராகக் காணப்படுவது அவசியம்.

03. குறிப்பிட்ட மேலான இலட்சியங்களை சர்வதேச ரீதியில் அடைந்து கொள்வதற்கான தூயபணியில் அத்தலைவரின் வழிநின்று, கருத்தொருமைப்பாடு மற்றும் ஒத்திசைவுடன் செயற்படக்கூடிய உதவியாளர்கள் இருப்பது அவசியம். கருத்தொருமைப்பாடு, ஒத்திசைவு என்பன இத்தகை யோரின் விசேடப் பண்புகளாகும். இப்பண்புகளைப் பெற்றிருப்போரினால் மட்டுமே இப்பணியை சிறப்பாகச் செய்யமுடியும். அன்றி, செயலற்ற வெறும் ஆதரவுகளும், பக்கச்சார்புகளும் போதுமானதாக இருக்க முடியாது.

04. இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெளிப் பட்டு வருகின்ற ஆரம்ப கட்டங்களிலேயே அவரைப் பின்பற்றும் முன்னணிக் குழுக்களாக தங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய மக்கள் குழுக்கள் இருப்பது அவசியம். இவர்கள் தியாகவுணர்வு, சமூக சிந்தனை மற்றும் கலாசாரப்பணி முதலானவற்றில் போதிய தகைமை களைப் பெற்றிருக்க வேண்டும். இருந்தும், மூன்றாம் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டோர், இவர்களைவிடவும் இமாமுக்காக சர்வதேசளவில் களமிறங்கி மும்முரமாகச் செயற்படுவோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நான்கு நிபந்தனைகளும், வாக்களிக்கப்பட்ட நாளில் நீதியைப் பரிபூரணமாக நடைமுறைப் படுத்துவதுடன் தொடர்பு பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்நிபந்தனை களை இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெளிப்பட்டு வருவதற்கான நிபந்தனைகளுடன் ஒப்பிடும் போது, அந்நாளில் இமாமே தலைவராக இருப்பார் என்பதால், இரண்டாவது நிபந்தனையான ஒரு தலைவரின் தேவைக்கு அப்போது அவசியம் இருக்காது. எனினும் ஏனைய மூன்று நிபந்தனைகளும் அடிப்படையானவை.

அதேபோன்றுதான், இமாம் வெளிப்பட்டு வருவதற்கான சூழலை உருவாக்குவதற்கும், அதுவரையில் இமாமின் பிரதிநிதியாக இருந்து உலக மக்களை வழிநடாத்துவதற்கும் தகுதியான ஆன்மீகத் தலைவர் தற்காலத்தில் இருப்பது அவசியமானது. இவ்வகையில், இமாமி ஷீஆக்கள் ‘விலாயதுல் பகீஹ்’ (இஸ்லாமியப் பேரறிஞரின் பிரதிநிதித்துவம்) எனும் கோட்பாட்டை நம்புவதன் ஊடாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தற்போதைய ஆன்மீகத் தலைவர் ‘பேரறிஞர் ஆயதுல்லாஹ் செய்யித் அலீ காமெனெயீ’ (அல்லாஹுதஆலா அவரின் ஆயுளை நீடித்தருள்வானாக) அவர்களை தமது ஆன்மீகத் தலைவராக ஏற்றுச் செயற்படுகின்றனர்.

இமாமின் வருகைக்கான அடையாளங்கள்

இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெளியாகும் காலத்தைப் பற்றி அல்லாஹுவையன்றி வேறெவராலும் அறிய முடியாது. அக்காலத்தை திட்டவட்டமாகக் கணித்துக் குறிப்பிட முயற்சிப்போர், ஷீஆ அறிஞர்களின் ஏகோபித்த முடிவின் பிரகாரம் ‘பொய்யர்கள்’ என்பதாகக் கருதப்படுவர்.

இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெளிப்பட்டு வருவதற்கான அடையாளங்கள் பற்றி ஹதீஸ் கிரந்தங்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ் அடையாளங்கள் இருவகையாக அமைந்துள்ளன. ஒன்று, நிச்சயத்தன்மையானது. மற்றது நிச்சயத்தன்மை அற்றது. ஒரு ரிவாயத்தில், இமாம் பாகிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருளியதாக, புழைல் பின் யஸார் என்பவர் குறிப்பிடுகிறார்:

‘மீட்பாளர் வெளிப்படுவதற்கான அடையாளங்கள் இருவகை. ஒன்று நிச்சயத்தன்மையானது. மற்றது நிச்சயத்தன்மை அற்றது. நிச்சயத்தன்மையான அடையாளங்களில் ஒன்றாக அமையப்பெற்ற சுஃப்யானின் வருகை தவிர்க்க முடியாதது.’

நிச்சயத்தன்மையான அடையாளங்கள் என்பன எவ்வித நிபந்தனையோ, விதிவிலக்கோ அற்றவை. இமாமின் வருகைக்கு முன்னர் நிச்சயமாக நிகழக்கூடியவை. நிச்சயத்தன்மையற்ற அடையாளங்கள் என்பன நிபந்தனைகளுடன் நடந்தேறுபவை. குறித்த நிபந்தனைகள் அமையப்பெறும்போது, இவ் அடையாளங் களும் நிகழும்.

நிச்சயத்தன்மையற்ற அடையாளங்கள் பல உள்ளன. இவற்றுக்கு உதாரணமாக, இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ள ஹதீஸ் ஒன்றைப் போதுமாக்கிக் கொள்கிறோம். இதில் குறிப்பிடப்படுகின்ற இமாமின் தீர்க்க தரிசனங்கள் 13ம் அல்லது 14ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்திற்குரியவை அல்ல. மாறாக அவற்றில் அதிகமானவை இன்றும்கூட நடந்தேறிக்கொண்டிருப்பது எம்மை பிரமிக்கச் செய்கின்றது.

இவ் அறிவிப்பில் இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 119 அடையாளங்களைக் குறிப்பிட்டுள்ளார். இருந்தும் விரிவையஞ்சி அவற்றில் சிலதை மட்டும் தருகிறோம்.

1.சத்தியம் அழிவதுடன், அதன் ஆதரவாளர்களும் மரணித்து விடுவர்.

2.அநீதிகள் உலகெங்கும் ஓங்கிநிற்கும்.

3.திருக்குர்ஆன் மானுடவாழ்விலிருந்து களையப்பட்டு, அதன் வழிகாட்டல்களைப் புறக்கணித்த நிலையில், மனோ இச்சைகளால் தோற்றுவிக்கப்பட்ட புதுமைகளே மானுடவாழ்வைக் குடிகொள்ளும்.

4.இஸ்லாமிய சன்மார்க்கம் வெறுமை நிலையை அடையும். வெற்றுப் பாத்திரம் போன்று அதனை மாற்றிவிடுவர்.

5.பாவகாரியங்கள் பகிரங்கமாகவே புரியப்படும். அவை தடுக்கப் படமாட்டாது. அதில் ஈடுபடுவோரும், அதிலிருந்து தம்மை விலக்கிக்கொள்ள மாட்டார்கள்.

6.ஆண்கள் ஆண்களையும், பெண்கள் பெண்களையும் போது மாக்கிக் கொள்வார்கள்.

7.தீயவன் பொய்யுரைக்கும்போது, எவரும் அதனை மறுக்க மாட்டார்கள்.

8.சிறியோர், பெரியோரை மதிக்கமாட்டார்கள்.

9.குடும்ப உறவுகள் துண்டிக்கப்படும்.

10.மக்கள் தீயவனைத் தூற்றாது, போற்றுவார்கள். இதனால் அவன் மகிழ்வுறுவான்.

11.இளைஞர்கள் பெண்களைப் போன்று நடப்பார்கள்.

12.பெண்கள் பெண்களை மணந்து கொள்வார்கள்.

13.மனிதர்கள் தம்செல்வங்களை பாவத்தில் செலவிடுவார்கள். அதனை யாரும் தடுக்கமாட்டார்கள்.

14.முஃமினுக்குரிய எவ்வித தகுதியோ, முயற்சியோ தம்மிடம் இல்லாதநிலையில் மனிதர்கள் இறைவனிடம் தஞ்சம் தேடு வார்கள்.

15.பொய்களைப் புகழ்ந்துபாடுவோர் மக்களில் அதிகரிப்பார்கள்.

16.அயல்வீட்டார் அயல்வீட்டாரை துன்புறுத்துவார்கள். அதனை யாரும் தடுக்கமாட்டார்கள்.

17.ஒரு முஃமினின் துன்பத்தில், காபிர் இன்பமுறுவான்.

18.இறைவனை அஞ்சாதநிலையில் மக்கள், குழுக்குழுவாக ஒன்றிணைந்து மது அருந்துவார்கள்.

19.நன்மையை ஏவுவோர் சமூகத்தில் இழிவாகக் கருதப் படுவார்கள்.

20.இறைவன் விரும்பாத விடயத்தில், தீயோன் பலமுள்ளவ னாகவும், போற்றத்தக்கவனாகவும் இருப்பான்.

21.திருக்குர்ஆனின் வழிநடப்போரும், அவர்களை நேசிப்போரும் இழிவாகக் கருதப்படுவார்கள்.

22.மக்கள் பொய்ச்சாட்சியத்தை நம்புவார்கள்.

23.பாவம் புரிவதற்கான தைரியம் மேலோங்கும்போது, யாரும் அப்பாவத்தை இரவில் புரிவதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருக்கமாட்டார்.

24.உள்ளத்தினாலன்றி, பகிரங்கமாக தீமையைத் தடுப்பதற்கு முஃமினால் முடியாதிருக்கும்.

25.அதிகாரிகள் மக்களின் காரிங்களை நிறைவேற்றிக் கொடுப் பதற்கு இலஞ்சம் பெறுவார்கள்.

26.அதிகாரிகளின் முக்கிய பதவிகள், தகைமையின் அடிப்படை யிலன்றி, ஏலத்திலே விற்கப்படும்.

27.மதிகேடு, அபவாதம் முதலானவற்றினால் மக்களைக் கொன் றொழிப்பார்கள்.

28.மக்களுக்கு உண்மையை செவிமடுப்பது கடினமாகவும், பொய்க்குக் காதுகொடுப்பது இலகுவாகவும் ஆகிவிடும்.

29.வாய்ப்பேச்சைப் பயந்தே அயல்வீட்டார், அயல்வீட்டாரை மதிப்பார்கள்.

30.இறைக்கட்டளைகளை கைவிட்டநிலையில், தமது மனோ இச்சையின்படி நடப்பார்கள்.

31.மனிதன் சொற்பஇலாபத்திலேயே தனது வாழ்வைத் தேடுவான்.

32.மனிதன் இலௌஹீக இலாபங்களுக்காக தலைவனாவான்.

33.தொழுகையை சாதாரணமாகக் கருதுவார்கள்.

34.மனிதன் செல்வத்தைச் சேர்த்துக் கொண்டே இருப்பான். மாறாக, ஆரம்பத்திலிருந்து இறுதிவரைக்குமான அதன் ஸகாத்தை வழங்கமாட்டான்.

35.மனித உள்ளங்கள் கனத்ததாகவும், கண்கள் வறட்சியுற்ற நிலையிலும், இறைநினைவு அவர்களுக்கு விலைமதிப் புள்ளதாகவும் இருக்கும். அவர்கள், அறவே அதைப் பெற்றிருக்க மாட்டார்கள்.

36.ஹராமான தொழிற்றுறைகளில் பகிரங்கமாகப் போட்டி யிடுவார்கள்.

37.முகத்;துதிக்காகவே தொழுவார்கள்.

38.பலமுள்ளோர் மற்றும் அதிகாரமுள்ளோரைச் சுற்றியே மக்களிருப்பார்கள்.

39.ஹலாலைத் தேடுவோர் இழிவுபடுத்தப்படுவதுடன், ஹராமைத் தேடுவோர் போற்றப்படுவார்கள்.

40.புனித மக்கா, மதீனா நகரங்களில் இறைவன் விரும்பாத பாவக் காரியங்களில் ஈடுபடுவார்கள். யாரும் அதனைத் தடுக்க மாட்டார்கள். அவர்களுக்கும், பாவகாரியங்களுக்கும் இடையில் தடையிருக்காது.

41.மற்றவர்கள் ஏழையைப் பரிகாசிக்கின்ற விதத்திலேயே, ஏதாவது அவனுக்கு வழங்கப்படும். மாறாக, இறைவன் விரும்பாத விடயத்தில் மட்டுமே பரிவு காட்டுவார்கள்.

42.பாலியல் விடயத்தில் மிருகங்களைப் போன்று நடந்து கொள்வார்கள். யாரும் மக்களைப் பயந்து அதனைத் தடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

43.பெற்றோரின் விடயத்தில் நன்றிகெட்டவர்களாக நடப்பார்கள். பிள்ளைகள், அவர்களுக்கு எவ்வித மரியாதையையும் வழங்கமாட்டார்கள். மற்றவரைவிடவும் தம்பிள்ளைகளிடமேயே கடுமையாக நடந்துகொள்வார்கள்.

44.தந்தையின் விடயத்தில் மகன் பொய்சொல்வான். தனது பெற்றோரைச் சபிப்பான். மேலும், அவர்கள் மரணித்தால் மகிழ்வான்.

45.மனிதன் எவ்வித பெரும்பாவமும் செய்யாது, அந்நாளைக் கழிப்பதனூடாகத் திருப்தியுறமாட்டான்.

46.அதிகாரிகள், மக்களின் உணவுகளைக் கையாடல் செய்வார்கள்.

47.நபியின் குடும்பத்திற்கே உரிய ‘கும்ஸ்’ வரி, பிழையான வழியில் பங்கிடப்பட்டு, அதன் மூலம் சூதாட்டமும், மதுவருந்தலும் இடம்பெறும்.

48.மக்களின் முயற்சியும், இலக்கும் அவர்களின் வயிற்றையும், இச்சையையும் முதன்மையாகக் கொண்டே இருக்கும்.

49.இறைவனின் திருப்பொருத்தத்தை நாடாமல், மக்கள் வேண்டியதற்காக, இரண்டாம் தரப்பினரின் மூலமே காணிக்கைகளை வழங்குவார்கள்.

50.சத்தியத்தின் மகத்தான சின்னங்கள் அழிந்துவிடும்.

‘இவை நிகழ்வதைக் கண்டால் அந்நேரத்தில் உன்னைக் காத்துக்கொண்டு, பாவத்தின் விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு இறைவனிடம் வேண்டிக்கொள்’ என இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.

நிச்சயத்தன்மையான அடையாளங்கள்

இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெளிப்பட்டு வருவதற்கான நிச்சயத்தன்மையான அடையாளங்கள் எவ்வித நிபந்தனையோ, விதிவிலக்கோ அற்றவை. அவரின் வருகைக்குமுன் நிச்சயம் நிகழக்கூடியவை. இவ் அடையாளங்களை ஹதீஸ்களின் மூலம் அறியமுடிகின்றன. அவைகளை பின்வருமாறு நோக்குவோம்.

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருளி யுள்ளார்கள்:
‘வாக்களிக்கப்பட்டவரின் வருகைக்குமுன் ஐந்து அடையாளங் கள் நிச்சயமாக நிகழும். அவை,

1.சுஃப்யானியின் வருகை
(இவன், அபூசுஃப்யானின் வம்சத்தைச் சேர்ந்தவன்)

2.யமானியின் வருகை
(இவர், யமன் தேசத்தைச் சேர்ந்தவர்)

3.ஆகாய அழைப்பொலி எழுதல்

4.புனித ஆன்மாவின் ஷஹாதத் நிகழ்தல்

5.பாலைநிலத்தில் பூகம்பம் ஏற்படல் என்பனவாகும்’.

வேறொரு இடத்தில் இவ்வாறு அருளியுள்ளார்கள்:

‘ஆகாய அழைப்பொலி எழுதல், சுஃப்யானி மற்றும் யமானியின் வருகை, பரிசுத்த ஆன்மாவின் படுகொலை மற்றும் நடுவானில் துண்டிக்கப்பட்ட கையின் தோற்றம் என்பன நிச்சயம் நடந்தேறும் அடையாளங்களாகும்’.

மேலும் அருளியுள்ளார்கள்:

‘உறங்கியவரை விளிக்கச் செய்திடும், விளித்தவரை பீதியில் ஆழ்த்திடும், திரையிட்ட கன்னியரின் திரையை நீக்கிடும் ஒரு பயங்கரம், ரமழான் மாதத்தில் நிகழும்’.

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்:

‘பத்து விடயங்கள் வாக்களிக்கப்பட்ட நாளின் துவக்கத்திற்கு முன்பே நிகழும். அவை, சுஃப்யானி, தஜ்ஜால் மற்றும் தாப்பதுல் அர்ழ் எனும் பிராணி முதலானவற்றின் வருகை, புகையெழும்புதல், மீட்பாளரின் வருகை, மேற்கில் சூரியோதயம், ஹஸ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை, கிழக்கிலும் அறபு தீபகற்பத்திலும் கிரகணங்கள் ஏற்படுதல் மற்றும் ஈடன் தலைநகரில் தொடங்கிய தீப்பரவல் மஹ்ஷர் பாலைநிலத்திற்கு மக்களை விரட்டிச் செல்லுதல்.

(தொடரும்)

peace.lk

Scroll to Top
Scroll to Top