அபூ முதஹ்ஹரி
2008ம் ஆண்டு ஒரு விடயமாக இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, மெய்யியல் இளமானிக் கற்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த ‘அரசியல் மெய்யியல்’ பாடத்திற்கான கையேடு எனக்குக் கிடைத்தது. அதில் அரசியல் மெய்யியல் வரலாறு குறித்து பேசப்பட்டிருந்தது. அரசியல் மெய்யியல் துறைக்கு இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பை விளக்கியவிதம் சற்று அழுத்தமாக அமைந்திருந்தது. மேலும், அரசியல் மெய்யியலுக்குப் பங்காற்றிய உலக அறிஞர்களின் தொடரில் ‘இப்னு கல்தூன்’ சுட்டிக்காட்டப்பட்டிருந்தார்.
அதிலிருந்து, சுமார் ஆறு வருடங்கள் கழித்து (2014ஆம் ஆண்டு) இஸ்லாமிய அரசியல் கோட்பாடுகள் பற்றிய நூலொன்றை வாசித்துக்கொண்டிருந்தபோது, அதிலே ‘இப்னு கல்தூன்’ அவர்கள், தமது ‘முகத்திமா’ என்ற நூலில் குறிப்பிட்டிருந்த முக்கியமானதொரு வாசகம் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டிருந்தது.
‘தலைமைத்துவமும், அரசியலும் ஒரு நாகரீகத்தின் இன்றியமையாக் கூறுகளாகும். மக்கள் ஒரு தலைவனுக்கு ஆதரவளிக்காவிட்டால் நாகரீகமும், அபிவிருத்தியும் சாத்தியப்படமாட்டாது’
இப்போது, 2019ஆம் ஆண்டாகிவிட்டது. அண்மையில் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய நாகரிகத்துறையின் முன்னால் முதுநிலை விரிவுரையாளர் எம்.ஐ.எம் அமீன் அவர்கள் எழுதி வெளியிட்ட ‘சீஆக் கோட்பாடுகள் ஒரு பகுப்பாய்வு’ எனும் நூலை வாசிக்கக் கிடைத்தது. அதிலே, ஏழாவது அத்தியாயமான ‘இஸ்னா அஷரிகளின் அரசியற் கோட்பாடு’ என்ற கட்டுரையைப் பார்த்தேன். அது ஷீஆக்களின் அரசியல் சிந்தனையை விளங்கிக்கொள்வதற்கு வரையறுக்கப்பட்டிருந்த ஒரு பிரதான அத்தியாயமாகக் காணப்பட்டது. இருந்தும், ஏனைய அத்தியாயங்களை விடவும் மிகவும் குறுகியதாக அதாவது மூன்று பக்கங்கள் மாத்திரமே அதற்காக ஒதுக்கப்பட்டிருந்தன.
சத்தியத்திலிருக்கும் ஒரு பிரிவாக அஹ்லுல் சுன்னாவையும், அதன் எதிரே அசத்தியத்திலிருக்கும் ஒரு பிரிவாக ஷீஆவையும் கருதுகின்ற ஏனைய சாதாரண மிம்பர் பிரசங்கிகளைப் போன்றே எழுத்தாளரின் மனோபாவம் அக்கட்டுரையில் வெளிப்பட்டிருந்தது. ஷீஆக்களின் அரசியல் சிந்தனையை ‘அகீதா’ கோணத்தில் மட்டும் விளங்கிக்கொள்வதற்கான ஒரு பகுப்பாய்வாக அக்கட்டுரையை அவர் முன்வைத்திருந்தார். அதாவது, மீண்டும் மீண்டும் ‘இமாமத்’ எனும் எண்ணக்கருவே அதிலே ஒலித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன்.
எழுத்தாளர் விளக்குவதற்கு முற்பட்டிருப்பதன்படி பார்க்கப்போனால், ஷீஆக்களின் இறுதி இமாமாகிய மஹ்தி (அலை) அவர்களின் தலைமறைவைத் தொடர்ந்து ஷீஆ சமூகத்தில் ‘இஸ்லாமிய அரசு’ பற்றிய எண்ணக்கரு இன்று வரைக்கும் இல்லாது போயிருக்க வேண்டும். அவ்வாறே, இமாம் மஹ்தி (அலை) அவர்கள் வரும்வரைக்கும் அரசியல் விவகாரங்களிலிருந்து ஒதுங்கிய ஒரு ‘சமயசார்பின்மைவாத’ (Secularist) சிந்தனையாக ஷீஆ சிந்தனை இருந்திருக்க வேண்டும். அல்லது இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் கர்பலாப் போராட்டம் ஒரு ஜனநாயகப் போராட்டம் என்ற சுலோகங்களையும், கோசங்களையும் ஷீஆக்கள் ஆஷுறா தினத்தில் எழுப்பாமல் விட்டிருக்க வேண்டும். அல்லது அஹ்லுல்பைத் இமாம்களின் நிலைபெறாத அரசியல் தலைமைத்துவக் கனவுகளைக் கருத்திற்கொண்டு ஷீஆ அறிஞர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் சுன்னி இஸ்லாத்தைத் தழுவியிருக்க வேண்டும்.
ஆனால், இவற்றில் எதுவும் நிகழவே இல்லை. மாறாக, ஷீஆக்கள் தங்களுக்கான ஒரு அரசியல் வரலாற்றை எப்போதோ படைத்து விட்டார்கள் என்பதை ஈரான் இஸ்லாமியப் புரட்சியும், மத்திய கிழக்கு அரசியல் நகர்வுகளும் பறைசாற்றிக்கொண்டிருப்பதைக் காணலாம்.
எனவே, இமாமத் தொடர்பில் எழுத்தாளர் பகுத்தாய்ந்து விளக்குவதற்கு முற்பட்டிருப்பதற்கு முற்றிலும் வித்தியாசமான ஒரு அரசியல் கண்ணோட்டத்தைதான் ஷீஆ இஸ்லாமிய சிந்தனை கொண்டிருக்க வேண்டும் என்பதை சாதாரணமாக விளங்கிக்கொள்ள முடியும்.
பொதுவாக மூடிய இஜ்திஹாத் பாரம்பரியத்துள் பயிற்றுவிக்கப்பட்ட எவருக்கும், இயங்கியல் நிலைப்பட்ட எதுவும் மரபை மீறிய ஒரு புதுமையாகவோ, பித்அத்தாகவோ இருக்கக் கூடும். இதே மனோபாவத்துடன் மூடப்படாத இஜ்திஹாத் பாரம்பரியத்தின் மூலம் என்றும் உயிர்ப்போடு பயணிக்கும் சமூக சிந்தனைகளை நோக்குவதும், அதனை அச்சமூகத்தில் எழுந்த பித்அத் என்பதாக கருதுவதும் தவறாகும். எனவே, ஷீஆ சமூகம் ஒரு போதும் இஜ்திஹாதின் வாயிலை மூடிக்கொள்ளவுமில்லை. அவ்வாறே, இயங்கா சிந்தனைகளுக்குள் தேங்கிக்கிடக்கவுமில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்னா அஷரிகளின் அரசியற் கோட்பாடு, ஒரு வலுவான அரசியல் மெய்யியலின்மீது கட்டியெழுப்பப்பட்டதாகும். அது இப்னு கல்தூன் போன்றோரது அரசியல் அபிலாஷைகளின் விம்பமாகும். அது எப்போதும் ‘அல்-மதீனதுல் பாழிலாஹ்’ என்ற அறபு சொல்லால் இஸ்லாமிய அரசியல் மெய்யியலாளர்கள் அழைத்துவந்த ‘இலட்சிய நகரம்’ (Ideal City) என்பதை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களது ‘மதீன அரசு’ ஒரு தற்செயலாக உருவான ஒன்றல்ல. அவ்வாறே, சமூகக் காரணிகளின் தூண்டுதல்களால் பெருமானார் அரசியல் வாழ்வைத் தேர்ந்தெடுக்கவுமில்லை. அவை அனைத்தும் திட்டமிடப்பட்ட, இறைவனால் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும்.
அல்லாஹு தஆலா, ஹஸரத் ஆதம் (அலை) அவர்களை தனது ‘கலீபா’வாக (பிரதிநிதியாக) தேர்ந்தெடுத்ததன் மூலமாக, மானுட சமுதாயத்திற்கான ‘தெய்வீகவுரிமை’ பெற்ற முதலாவது ஆட்சியாளர் அறிமுகப்படுத்தப்பட்டார். ஹஸரத் ஆதம் (அலை) அவர்களை வெறும் நபியாக மட்டும் பார்த்துப் பழகிப்போன பாரம்பரியத்தில் ‘கலீபா’ அல்லது ‘கிலாபத்’ என்பதற்குரிய உயரிய பொருண்மை வெளிப்படுத்தப்படவில்லை. இது பின்னாளில் எல்லோராலும் அறியப்படுகின்ற மக்கட்பிரதிநிதியை ஒரு போதும் குறித்து நிற்கவில்லை.
குர்ஆனும், சுன்னாவும் கூறுகின்ற மானுட வரலாற்றில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அல்லது சர்வாதிகாரத்தின் மூலமாக உருவெடுத்த எந்தவொரு அரசினாலோ, ஆட்சியாளனாலோ நபிமார்களும், ரஸுல்மார்களும், அல்லாஹு தஆலாவின் ஏனைய பிரதிநிதிகளும் ஆளப்படவில்லை என்பது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். அல்லாஹு தஆலாவின் பிரதிநிதிகளை ஆளுகின்ற அதிகாரம் மக்கட்பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. ஹஸரத் இப்றாஹீம் (அலை), ஹஸரத் யூசுப் (அலை), ஹஸரத் மூஸா (அலை), ஹஸரத் தாவூத் (அலை), ஹஸரத் சுலைமான் (அலை) போன்றோரின் வரலாறுகள் இவற்றையே எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
இவர்கள் அனைவரும் தமது காலத்திற்குரிய ஆட்சியை மாற்றியமைத்து ‘தெய்வீக அரசை’ பூமியில் நிறுவினார்கள். இதனால் மக்களின் மனங்களில், ஆட்சியாளன் ‘தெய்வீகவுரிமை’ பெற்றவன் என்ற மனப்பதிவை ஏற்படுத்திவிட்டது. குறிப்பாக ஹஸரத் தாவூத், ஹஸரத் சுலைமான் ஆகியோரைத் தொடர்ந்து வந்த நபிமார்களின் ஆட்சியின் போது, யூத சமுதாயத்தில் இவ்வலுவான சிந்தனை வெளிப்பட்டது. இதனால், யார் தன்னை நபியாகப் பிரகடணப்படுத்துகிறாரோ அவர் தன்னை ஆட்சிக்குத் தகுதியானர் என்று பிரகடணப்படுத்துவதாகக் கருதப்பட்டார். இதனால்தான், யூத சமுதாயத்தில் தோன்றிய இறுதி நபியான ஹஸரத் ஈஸா (அலை) தன்னை நபியாகப் பிரகடணப்படுத்திய போது, அவர் அரசாட்சிக்கு ஆசைப்படுவதாகும், ரோமாபுரியைக் கைப்பற்றப் போவதாகும் அவருக்கு எதிராக யூத மதகுருக்கள் ரோமாபுரி மன்னனுக்கு தகவலளித்து, அவரைக் கொன்றுவிட திட்டமிட்டனர். இவ்வாறு, ‘கிலாபத்’ எனும் அல்லாஹு தஆலாவின் பிரதிநிதித்துவமும், மானுட அரசியலும் இரண்டறக் கலந்த ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அது பெருமானர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மதீனா அரசினூடாகத் தொடர்ந்து, ஷீஆ-சுன்னி சமூகத்தால் எதிர்பார்க்கப்படுகின்ற இமாம் மஹ்தி (அலை) அவர்களின் நீதியான ஆட்சியில் நிறைவுற இருக்கின்றது.
குர்ஆன், சுன்னா கூறுகின்ற மானுட வரலாற்றில் ஆட்சி செய்த அல்லாஹு தஆலாவின் பிரதிநிதிகள், எவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்படவில்லையோ அவ்வாறுதான் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களும் மக்களால் ஆட்சியாளராகத் தெரிவு செய்யப்படவில்லை. அந்தந்த சமூகம் தெய்வீகப் பிரதிநிதிகளை ஏற்றுக்கொண்டதைப் போன்று, பெருமானாரையும் அந்த சமூகம் ஒரு ‘தெய்வீகப் பிரதிநிதி’யாகவே ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அவ்வாறுதான், இன்றைய சமுதாயம் வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி (அலை) அவர்களை ஒரு ‘தெய்வீகப் பிரதிநிதி’யாக ஏற்றுக்கொள்ளப் போகின்றது. மாறாக, ஒரு ஜனநாயகத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கட்பிரதிநிதியாக இமாம் மஹ்தி (அலை) இருக்கமாட்டார் என்பது உறுதியானதே.
இந்த தெய்வீகப் பாரம்பரியத்திற்கு முரண்பட்ட சிந்தனையாக, ஆட்சியாளன் ‘இஜ்மா’ அல்லது ‘ஷுறா’ போன்றவை மூலமாக மக்களால் தெரிவு செய்யப்படும் முறை இருப்பதைப் பார்க்கலாம். ‘கலீபா’ தெரிவில் இஜ்மாவுக்கோ அல்லது ஷுறாவிற்கோ எந்தவொரு வகிபாகமும் கிடையாது. அவை அல்லாஹு தஆலாவினால் வரையறுத்துத் தரப்படாதவற்றில் மனிதனின் சுயநிர்ணயத்திற்கான அனுமதிகளாகும். ஆனால், ‘கலீபதுல்லாஹ்’ என்பது, அது தாங்கிநிற்கும் பொருளில் ஒரு போதும் மக்களின் சுயநிர்ணயத்திற்குள் அடங்கியிருக்கவில்லை. அதவாது, ‘கலீபதுல்லாஹ்’ எனும் அல்லாஹுவின் பிரதிநிதியை மக்களால் தெரிவு செய்ய முடியாது. அதற்கான அனுமதியும் மனிதனுக்கு வழங்கப்படவில்லை.
ஹஸரத் ஆதம் (அலை) அவர்களை வெறும் நபியாக மட்டும் பார்த்துப் பழகிப்போன பாரம்பரியத்தில் ‘கலீபா’ அல்லது ‘கிலாபத்’ என்பதன் உயரிய பொருண்மை வெளிப்படுத்தப்படுவதில்லை என்பதை மீண்டும் நினைவுகூற விரும்புகிறேன்.
(தொடரும்…)