ஐரோப்பிய விஞ்ஞான மறுமலர்ச்சியில் இஸ்லாத்தின் செல்வாக்கு

The Influence of Islam on the Re-emergence of European Science

 

உலக வரலாற்றின் மத்திய காலப்பகுதியில் ஐரோப்பாவின் மீது மிகவும் செல்வாக்கு மிக்கதாக இஸ்லாம் திகழ்ந்தது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்கும், விஞ்ஞானப் புரட்சிக்கும் கூட இந்த இஸ்லாமியச் செல்வாக்குதான் வித்திட்டது என்று கூறினால் அது மிகையாகாது. இந்த மத்திய காலப்பகுதியில் இஸ்லாமும், முஸ்லிம்களும் பல்வேறு விதத்தில் ஐரோப்பா மீது செல்வாக்கு செலுத்தினர். இதில் மிகவும் பிரதானமானதும், குறிப்பிடத்தக்கதுமாக அமைந்தது விஞ்ஞானமாகும். அல்லது அறிவியல் ஆகும்.

இஸ்லாம் தோற்றம் பெற்றது முதல், விஞ்ஞான முன்னேற்றத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானதாகவே காணப்பட்டது. பக்தாத், டமஸ்கஸ், கய்ரோ, மற்றும் கொர்டோபா நகரங்கள் நாகரிகத்தின் கேந்திர நிலையங்களாகத் திகழ்ந்தன. இந்த நகரங்கள் செழுமை மிக்க நகரங்களாகத் திகழ்ந்தன. தத்துவார்த்த விஞ்ஞானம், தொழில்நுட்பம், பிரயோக விஞ்ஞானம் என விஞ்ஞானத்தின் முக்கிய பரிவுகள் அனைத்திலும் முஸ்லிம்கள் அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். ஆனால் இதே காலப்பகுதியில் ஐரோப்பாவில் நிலைமை மிகவும் மோசமானதாகவே இருந்தது. ஐரோப்பா இதே காலப்பகுதியில் இருண்ட யுகத்துக்குள் சிக்குண்டு இருந்தது. அதே நேரம் சீனா முதல் ஸ்பெயின் வரை இஸ்லாமிய நாகரிகம் படரத் தொடங்கியது. இந்தக் காலப் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்புகள் மிகவும் குறைவானதானவே இருந்தன. இந்தக் காலப்பகுதியில் சிலுவை யுத்தத்தில் குறியாக இருந்த கிறிஸ்தவர்கள் பற்றி ஏ.லூலிஸ் என்ற வரலாற்றியலாளர் குறிப்பிடுகையில் ‘சிலுவை யுத்தக் காரர்கள் செயற்பாடு மிக்கவர்களாக இருந்தார்களே தவிர, அவர்கள் எதையும் கற்றுக் கொள்பவர்களாக இருக்க வில்லை’ என்று கூறுகின்றார். முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் வந்த ஸ்பெயினில் தான் உண்மையான கருத்துப் பரிமாற்றங்களும், விஞ்ஞானப் புரட்சிகளும், மறுமலர்ச்சியும் தோற்றம் பெறலாயின.

முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்பெயினில் தலைநகரம் தான் கொர்டோபா, அறிவொளியின் மத்திய நிலையமாகவும், ஒட்டு மொத்த ஐரோப்பிய அறிவியலின் கேந்திர நகரமாகவும் முஸ்லிம்களின் தலைமையில் மிக விரைவாகவே கொர்டோபா நகரம் பிரபல்யமடையத் தொடங்கியது.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து மட்டுமன்றி உலகின் ஏனைய பாகங்களில் இருந்தும் அறிவைத் தேடி அன்றைய காலகட்ட மக்கள் கொர்டோபா நோக்கி அணி அணியாக வர ஆரம்பித்தனர். அந்தக் காலப்பகுதியில் அறிவுத் தேடலில் கொர்டோபா நகரின் முக்கியத்துவத்தை ஒரே ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கிவிடலாம். அன்றைய கால கட்டத்தில் ஒன்பதாவது நூற்றாண்டில் ஐரோப்பாவின் மிகப் பெரிய நூலகமாகப் போற்றப்பட்டது அன்றைய அரச பரம்பரைக்குச் சொந்தமான புனித கால் நூலகமாகும். அப்போது அங்கிருந்தது வெறும் 36 நூல் தொகுதிகள் தான. ஆனால் அதே காலப்பகுதியில் கொர்டோபா நூலக்தில் ஐந்து ஐந்து இலட்சம் நூல் தொகுதிகள் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன.

இன்றைய நவீன உலகின் கல்லூரி முறை கூட முஸ்லிம்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்ட ஒரு எண்ணக் கருவாகும். கி.பி. 600களின் பிற்பகுதியிலும், 700களின் முற்பகுதியிலும் உலகில் முதன் முதலாக கல்லூரி முறையை நிறுவியவர்கள் முஸ்லிம்கள் தான், ஐரோப்பாவில் பாரிஸ் பல்கலைக்கழகம், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அவற்றின் கீழான கல்லூரி முறைகள் கூட 13ஆம் நூற்றாண்டின் பின் தோற்றம் பெற்றவைதான். இவை கூட ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய கல்லூரிகளுக்கான நிதி அமைப்பு முறைக்கு ஒத்த ஒரு நிதி அமைப்பின் கீழ் தான் செயற்பட்டுள்ளன. இந்த கல்லூரி நிதி அமைப்பு முறைகள் முற்றிலும் இஸ்லாமிய கல்லூரி நிதி அமைப்பு முறைக்கு இசைவானவை என்பதை சட்டத்துறை வரலாற்றியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த ஐரோப்பியக் கல்லூரிகளின் உள்ளக கட்டமைப்பு முறைகள் கூட முற்றிலும் இஸ்லாமிய அமைப்பு முறையைச் சார்ந்தவை என்றும் வரலாற்றியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பட்டதாரி (சாஹிப்) பட்தாரி மாணவன் (முத்தபக்கிஹ்) போன்ற முறைகள் கூட நேரடி இஸ்லாமிய வழி முறையிலிருந்து வரும் மரபுகளாகும்.

கணிதத்தைப் பொறுத்த மட்டில் பூச்சியத்தையும், தசமத்தையும் ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்தவர்களே முஸ்லிம்கள் தான். ஐரோப்பாவின் விஞ்ஞானப் புரட்சிக்கு இவை தான் அடித்தளமிட்டன. அரபு எண் இலக்கணமும் ஐரோப்பாவுக்குள் மெதுவாகப் புகுத்தப்பட்டது. இது அவர்களின் கணித இலக்குகளை மிகவும் இலகுவாக்கியது. இதன் மூலம் பல்லாண்டுகளாக அவர்களால் தீர்க்க முடியாமல் இருந்த கணிதப் பிரச்சினைகளுக்கு ஒரு சில நிமிடங்களில் தீர்வைத் தேடிக் கொண்டனர்.

கணித மேதை அல்குவாறஸ்மியின் படைப்புகள் இலத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. இவரின் கணிதப் பணிகளில் இருந்துதான் ‘அல்கோரிஸ்ம்’ என்ற சொல்லே உருவாகியது. பல கணித மற்றும் வானியல் அட்டவணைகளின் தோற்றத்துக்கு மூல காரணமாகவும் இதுவே அமைந்தது. அல்ஜிப்ரா என்ற கணிதக் கோட்பாட்டுக்கு அடித்தளம் இங்கிருந்துதான் உருவாகின்றது. சதுரங்களையும், வடிவங்களையும் கொண்ட சிக்கலான கணிதக்கோட்பாடுகளுக்கு விரைவாக தீர்வுகாணும் ஒரு வழிமுறையாக இது ஐரோப்பாவுக்கு முஸ்லிம்களால் வழங்கப்பட்டதாகும்.

புவியின் மேற்பரப்பை அளப்பதற்கான வழிமுறைகள், உருப்பெறுக்கக் கண்ணாடி முறை என்பன உட்பட பல ஆய்வுகளுக்கும் ஐரோப்பாவுக்கு வழிகாட்டியவர்கள் முஸ்லிம்களே. இவற்றுக்கு ஆதாரமாக அமைந்த அல்குவாறிஸ்மியின் பல கணித ஆய்வு நூல்களும், ஏனைய ஆய்வுப் படைப்புக்களும் ஐரோப்பாவின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. அதேபோல் அல்கிர்மாணி என்ற திரிகோணக் கணித மேதையின் பல நூல்களும் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டன. கேத்திர கணிதத்திலும் முஸ்லிம்களின் பங்களிப்பு இவ்வாறே அமைந்திருந்தது. கணிதத்தைப் போலவே பௌதீகம், இரசாயணம் ஆகிய இயற்கை விஞ்ஞானத்தின் ஏனைய கிளைகளிலும் முஸ்லிம்கள் ஆழமான அறிவுடையவர்களாகவே காணப்பட்டனர். இவை அனைத்தும் ஐரோப்பியர்களால் மிக நுணுக்கமாக உள்வாங்கப்பட்டன.

ஸ்பெயினில் இருந்து உள்வாங்கப்பட்ட இந்த இஸ்லாமிய விஞ்ஞானப் பங்களிப்பு படிப்படியாக ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்டது. இப்னு ஹைஸம் என்பவர் கண்பார்வை சம்பந்தமாக செய்த சுமார் 50 வகையான ஆய்வுகள் பரவலாக ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. காலக் கணிப்புக்கான கடிகார வழிமுறைகளைக் கண்டறிந்தவர்களும் முஸ்லிம்களே. ஐசாக் நியூட்டனின் கோட்பாடுகள் பலவற்றுக்கு ஆதாரமாக இருந்தவை, அதற்கு முன்னரே இருந்த வந்துள்ள இந்த இஸ்லாமிய விஞ்ஞானப் பங்களிப்புக்களே என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரசாயனத்தைப் பொறுத்த மட்டில் எண்ணிலடங்காத முஸ்லிம் இரசாயன அறிஞர்களின் நூல்கள் இலத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இரசாயனத்தில் முஸ்லிம்களின் பிரதான பங்களிப்பு ‘அல்ஜெமி’ எனும் இரசவாதமாகும். இது ஒரு புராதன இரசாயன முறை. சாதாரண உலோகத்தை தங்கமாக மாற்றும் ஒரு வகை இரசாயன முறையாகும். முஸ்லிம் இரசாயனவியலாளர்கள் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி பொருட்களைப் பற்றிய சிறந்ததோர் புரிந்துணர்வை ஏற்படுத்தினர். முஸ்லிம் உலகில் தலைசிறந்த இரசாயனவியலாளராகக் கருதப்பட்டவர் ஜாபிர் இப்னு ஹய்யான். பல விடயங்களில் விஞ்ஞான முறைகளை உலகுக்கு அறிமுகம் செய்தவரே இவர்தான் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாகும். ஆங்கிலத்தில் இன்று பாவிக்கப்படும் இரசாயனச் சொற்களான ‘அல்கொஹோல், அலெம்பிக், அல்கலி, எலிக்ஸிர்’ என்பன இஸ்லாமிய மூலச் சொற்களில் இருந்து வந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும.

வரலாற்றுப் புகழ்மிக்க இஸ்லாமிய நகரங்கள் அனைத்திலும் ஒரு பிரதான ஆஸ்பத்திரியும் காணப்பட்டது. கெய்ரோ நகரில் இருந்த பண்டைய ஆஸ்பத்திரி கூட 8000 படுக்கைகளைக் கொண்டிருந்தது. காய்ச்சலுக்கு, கண்நோய்க்கு, சத்திர சிகிச்சைக்கு என தனித்தனிப் பிரிவுகளும், வார்ட்டுகளும் இங்கு காணப்பட்டன.

விஞ்ஞானத்தில் முஸ்லிம்கள் பிரதானமாகக் கவனம் செலுத்திய மற்றொரு பிரிவு மருத்துவமாகும். மருத்துவத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். முஸ்லிம்களிடையே மிகவும் பிரபலமான இஸ்லாமிய வரலாற்று ஆசிரியராகவும், வைத்தியராகவும் ‘அர்-ராஸீ’ திகழ்கின்றார். சின்னம்மைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து மனிதனுக்கு ஆயுளில் ஒரு தடவை தான் வரும் என்பதை நிரூபித்தவரும் இவரேதான். இதன் மூலம் மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அது தொழில்படும் விதத்தையும் அறிமுகம் செய்து வைத்தார். நோய்களின் பல்வேறு இயல்புகள் குறித்தும் முஸ்லிம் வைத்தியர்கள் அன்று அறிந்து வைத்திருந்தனர். முஸ்லிம் அறிஞர்களின் இவ்வாறான பல மருத்துவ ஆய்வுகள் அன்றே இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

முஸ்லிம்களிடமிருந்து பரிமாற்றம் செய்யப்பட்ட இந்த அறிவு மூலங்கள் தான் ஐரோப்பாவின் விஞ்ஞானப் புரட்சிக்கு வித்தாக அமைந்தன. முஸ்லிம்களிடமிருந்து இந்த அறிவுப் பிச்சை மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால், ஐரோப்பியர்களுக்கு மறுமலர்ச்சி என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும். முஸ்லிம்களுக்குச் சொந்தமான இன்னும் எத்தனையோ அறிவுப் பொக்கிஷங்கள் ஐரோப்பியர்களால் திருடப்பட்டு இன்று அவை அவர்களின் வாழ்வியலோடு கலந்து விட்டன.

Scroll to Top
Scroll to Top