இமாம் ஹுஸைனைக் கொன்றவர்கள் ஷீஆக்களா?

உண்மையை ஏற்றுக்கொள்வோம்

இமாம் ஹுஸைனைக் கொன்றவர்கள் ஷீஆக்களா?

நச்சுப்பிரசாரம்

முஹர்ரம் மாதம் வந்துவிட்டால் பெருமானார் (ஸல்) அவர்களின் பரிசுத்த குடும்பத்தினருடன் பரம்பரை பரம்பரையாக பகைமை பாராட்டிவரும் உமையாச் சண்டாளர்களின் எச்சசொச்சங்களான வஹ்ஹாபியர்கள் அப்பரிசுத்த குடும்பத்தினருக்கு எதிராக மீண்டுமொரு கர்பலாப்போரை ஆரம்பித்து விடுவார்கள். இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் கர்பலா எழுச்சிப் போராட்டத்தை அக்கால கலீபாவுக்கு எதிரான கிளர்ச்சியென்றும், கலகம் என்றும் மக்களுக்கு மத்தியில் பிரிவினையை உருவாக்குவதற்காக ஹுஸைனால் மேற்கொள்ளப்பட்ட குழப்பமென்றும் நச்சுப்பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஹுஸைன் ஆட்சி மோகத்தினால் யுத்தம் செய்து தன்னை மாய்த்துக் கொண்டார், யசீது பெருமானாரின் வாளாலே ஹுஸைனைக் கொன்றான் என்றெல்லாம் கூறி, கொலைகாரன் யசீதுக்கு வக்காலத்து வாங்கவும், ஆதரவு தேடவும் முனைந்து விடுவார்கள். அவர்கள் இவ்வாதத்திற்கு ஆதாரம் வேறு, காண்பிப்பதும் விந்தையிலும் விந்தையாக இருக்கும். இது மாத்திரமின்றி, ஷீஆ தரப்பு நூற்களை பிழையாக மேற்கோள்காட்டியும், அவற்றில் வந்துள்ள கர்பலாப் படுகொலைகள் தொடர்பான விடயங்களை பிழையாக வியாக்கியானப்படுத்தியும், இமாம் ஹுஸைனின் படுகொலையை மலினப்படுத்தி வருகின்றனர்.
கூஃபா வாசிகள் இமாம் அலீயினதும், இமாம் ஹுஸைனினதும் ஷீஆக்கள் என்றும், இந்த ஷீஆக்கள்தான் ஹுஸைனைக் கொன்றவர்கள் என்றும் குற்றம் சுமத்துகின்றனர். இவ்ஆய்வில் இது தொடர்பான ஐயங்களையும், அவற்றுக்கான பதில்களையும் ஆராய்கிறோம்.
இமாம் ஹுஸைன் யாரை சபித்தார்கள்?

எழுத்தாளர் அஹ்மத் அல்-காதிப் அவர்களும் அவரின் சிந்தனை முகாமைச் சேர்ந்தவர்களும் பின்வருமாறு கூறுகிறார்கள். ஹுஸைனை ஈராக் நோக்கி வருமாறு அழைத்துவிட்டு, பின்னர் அவருக்கு உதவாமல் கைவிட்டுவிட்ட ஷீஆக்களைத்;தான் ஹுஸைன் சபித்துள்ளார். அவர் தனது சாபத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

اللهم إن متّعتهم إلی حین ففرّقهم فرقاً، واجعلهم طرائق قدداً، ولا تُرض الوُلاة عنهم أبداً، فإنهم دعونا لینصرونا، ثم عدوا علینا فقتلونا.

‘இறைவா! இவர்களை சொற்பகாலம் வாழ அனுமதிப்பதாக இருந்தால் இவர்களை பிரித்து சின்னாபின்னப் படுத்திவிடு!. ஆட்சியாளர்களை இவர்கள் விடயத்தில் திருப்திப்படாமலாக்கிவிடு! இவர்கள் எமக்கு உதவுவதாகக் கூறி எம்மை அழைத்துவிட்டு, பின்னர் எம்மை எதிர்த்து, எம்மைக் கொன்றும் விட்டனர்’. (அல்-இர்ஷாத், ஷைய்க் முபீத் 2,110)

இமாம் ஹுஸைனின் இச்சாபத்தை அடிப்படையாகக் கொண்டு கர்பலாவுக்கு ஹுஸைனை வரவழைத்துக் கொன்றவர்கள் ஷீஆக்கள்தான் என இவர்களின் வாதம் அமைந்திருக்கிறது. இக்குற்றச்சாட்டுக்கான பதிலை இங்கு ஆராய்வோம்.

ஷீஆக்கள் என்போர் யார்?

இமாம் ஹுஸைனைக் கொன்றவர்கள் ஷீஆக்கள்தான் என்பது அப்பட்டமான பொய்யும், நேர்முரணான கருத்தும் கூட. ஏனெனில், ஷீஆ என்ற சொல்லுக்கு ஒரு மனிதனின் தோழர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் என்பதாகவே பொருள்;கள் உள்ளன. ஒரு மனிதனின் தோழராக, ஆதரவாளராக நோக்கப்படும் ஒருவர், அதே மனிதரின் பகைவர் தரப்பு கொலையாளியாகவும் செயற்படுவது புத்திக்குப் புறம்பான கூற்று. இதனால், நட்பும் – பகையும், விருப்பும் – வெறுப்பும் ஒரே நேரத்தில் ஒருவரிடம், ஒரே விடயத்தில் ஒன்றாக இருக்காதல்லவா?

இது மாத்திரமின்றி, இமாம் ஹுஸைனின் ஆதரவாளர்கள் (ஷீஆக்கள்) தான் இமாமின் எதிரணியினரான உமர் பின் ஸஃத், உபைதில்லாஹ் பின் சியாத்தின் அணியில் சேர்ந்து கொண்டு, இமாம் ஹுஸைனைக் கொன்றார்கள் என வைத்துக் கொண்டாலும், கர்பலாக் களத்தில் இமாம் ஹுஸைனுடன் தோழோடு தோழ்நின்று போராடி உயிர்நீத்த ஷுஹதாக்களை என்னவென்று அழைப்பது? அவர்கள் ஷீஆக்கள் இல்லையா?

அல்லது ஷீஆக்கள்தான் இமாம் ஹுஸைனைக் கொன்றார்கள் என வைத்துக் கொண்டால், இத்தகைய கொலைகாரர்கள், இனி ஷீஆ என்ற நாமத்தால் அழைக்கப்படமாட்டார்கள். மாறாக, ஷீஆ என்ற நிலையிலிருந்து விடுபட்டு இமாமின் எதிரணியைச் சேர்ந்தவர் என்ற நாமத்திற்குள் உள்ளாகிவிடுவர். அந்நிலையில், அவரை ‘எதிரி’ என்ற சொல்லால் அழைப்பதே உகந்தது. இவ்விடத்தில் அல்லாமா செய்யித் முஹ்சின் அமீன் அவர்களின் கருத்து சாலச்சிறந்தது. அவர் பின்வருமாறு கூறுகிறார்.

‘இமாம் ஹுஸைனைக் கொன்ற கொலையாளிகள் ஷீஆக்கள் என்ற கூற்று காழ்ப்புணர்வோடு கூறப்படுகின்ற ஒரு கூற்று. அவரைக் கொன்றவர்கள் உலக பேராசை பிடித்தவர்கள். மார்க்கமில்லாதவர்கள். அவர்களில் சிலர் தீமையின் உறைவிடமாக இருந்தவர்கள், இமாம் ஹுஸைனைக் கொலை செய்யுமளவுக்கு உலக-ஆசை மிகைத்துப் போயிருந்த தமது தலைவர்களுக்குப் பின்னால் சென்றவர்கள்.

இமாம் ஹுஸைனைக் கொன்ற கொலையாளிகளின் பட்டியலில் இமாம் ஹுஸைனின் ஷீஆக்களோ, அவர்களின் நேசர்களோ இருக்கவில்லை. இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் ஷீஆக்களும், அவர்களின் உண்மையான நண்பர்களும் அவருக்காக அக்களத்தில் உயிர்த்தியாகம் செய்வதற்கு சற்றேனும் பின்னிற்காதவர்கள். அவர்கள், தமது இறுதி மூச்சுவரை இமாமுக்கு உதவிக்கரம் நீட்டினார்கள்.

கர்பலாப் போரில் இமாமுடன் இணைந்து கொள்ளாத அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர். அவர்களுக்கு இமாமின் பயணம் கொலையில் சென்று முடியும் என்பதை அறிந்திராதவர்கள். இமாமின்மீது பிரியம் கொண்டிருந்த கூஃபாதேசத்து நண்பர்கள் பலரும் இப்போரில் இமாமுக்கு ஆதரவு வழங்கியிருந்தார்கள். இத்தகைய நல்ல மனிதர்கள் கூஃபா நகரின் மீதிருந்த உபைதுல்லாஹ் பின் சியாதின் இரும்புக்கரங்களை உடைத்துக் கொண்டு இமாமுடன் இணைந்து கொண்டவர்கள்.

கர்பலாப் போரில் இமாமுக்கு எதிராக அவர்களின் ஷீஆக்களே செயற்பட்டார்கள் என்பதில் எந்த உண்மையுமில்லை. இமாமை நேசித்து அவர்களின்மீது பிரியம் கொண்டிருந்;த அவர்களின் ஷீஆ எவரும் இமாமைக் கொல்லும் எதிரணியில் பங்கேட்பது என்பது ஏற்க முடியாதது. எக்காலத்திலும் உண்மைக்கு உதவுவோர் மிக சொற்பமாகவே இருப்பர்’. (அஃயானுஷ் ஷீஆ 1, 585)

யார் இந்த கூஃபா வாசிகள்?

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களைக் கொலை செய்வதற்காக கர்பலாவுக்கு வந்தவர்களில் அதிகமானவர்கள் கூஃபா தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆயினும், அம்மனிதர்களில் ஷீஆ என்ற நாமத்தை யதார்த்தமாகக் கொண்டிருந்த ஷீஆக்கள் எவரும் இருக்கவில்லை என்பதுதான் உண்மை. ஏனெனில், கலீபா முஆவியா அவர்கள் தனது கூஃபா ஆளுநராக சியாத் பின் அபீஹி என்பவனை நியமித்திருந்தார். அவன் ஷீஆ விரோத போக்குடையவனாக இருந்தான். கூஃபா நகரில் இமாம் அலீயின் ஷீஆ என இனங்காணப்பட்டவர்களைக் பின்தொடர்ந்து, தேடித்தேடி அவர்களைக் கொலை செய்தான். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தான். அவர்களில் எஞ்சியவர்களைக் கைதுசெய்து சிறைகளுக்கு அனுப்பினான். இக்கெடுபிடிகளின் நிமித்தம் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஈராக் நோக்கி வருகின்றபோது கூஃபா நகரில் உண்மையில் அஹ்லுல்பைத்தினருக்கு தம்மை அர்ப்பணிக்கின்ற ஷீஆ என்று எவரும் எஞ்சியிருக்கவில்லை.

வரலாற்று நூற்களில் பதிவாகியிருப்பதற்கு அமைய இமாம் அலீ (அலை) அவர்களின் ஆட்சிக்குப் பின்னரான முஆவியாவின் காலப்பகுதியில் கூபா நகரில் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை காரணமாக ஷீஆக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே காணப்பட்டது. அவர்களில் பலர் கொலை செய்யப்பட்டு, இன்னும் பலர் சிறைபிடிக்கப்பட்டனர். இன்னும் சிலர் நாடுகடத்தப்பட்டனர். அவர்களில் இன்னும் பலர் கூஃபாவில் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி, அவைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கூஃபாவை விட்டும் திறந்து மூசல், குராசான், கும் போன்ற பிரதேசங்களுக்குச் சென்று குடியேறினர்.

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் கர்பலாவுக்கு வந்துள்ளார்கள் என்பதை அறிந்த கூஃபா நகரத்து ‘பனீகாழிரா’ கோத்திரத்தினர் இமாமுக்கு உதவ முனைந்தனர். அவர்கள் கர்பலா நோக்கிப் புறப்படவே யசீதினால் கூஃபாவுக்குரிய கவர்னராக நியமிக்கப்பட்டிருந்த உபைதுல்லாஹ் பின் சியாத் என்பவனால் தடுக்கப்பட்டனர். இப்னு அபில் ஹதீது முஃதசிலி பின்வருமாறு கூறுகிறார்.

‘முஆவியா தனது கவர்னர் ஒருவருக்கு மடலொன்றை பின்வருமாறு எழுதினார், ‘உனது பிரதேசத்தைச் சேர்ந்த யாராவது அபூதுறாப் (இமாம் அலீ) அவர்களினதோ அல்லது அவரது குடும்பத்தினரதோ மாண்புகளைக் கூறினால், அவர் விடயத்தில் உனக்கு எப்பொறுப்பும் கிடையாது (அதாவது, அவரை நீ ஒழித்துக்கட்ட அனுமதி பெறுவாய்)’ இதன்பிறகு, இமாம் அலீயையும், அவரது குடும்பத்தினரையும் பள்ளி மிம்பர்களில் திட்டத்தொடங்கினார்கள்’.

அக்காலத்தில் வாழ்ந்த கூஃபா மக்கள் மிகவும் நிர்க்கதிக்கு உள்ளானவர்களாகக் காணப்பட்டனர். இமாம் அலீயின் ஷீஆக்களும் அங்கு வாழ்ந்து வந்தனர். முஆவியா, சியாத் பின் சுமையா என்பவனை கூஃபா மற்றும் பசராவின் ஆளுநராக நியமித்தார். அவன் ஷீஆக்களை நன்கு தெரிந்தவராக இருந்ததனால் அவர்களைத் தேடித்தேடி கொலைசெய்யலானான். இதன் பின்னர் கூஃபாவில் ஷீஆக்கள் என்று எவரும் காணப்படவில்லை.’ (ஷரகு நஹ்ஜில் பலாகா, பா 11, பக் 44 – அந்நசாயிகுல் காபியா, பக்: 72)

கூஃபா நகரில் உமையா ஆட்சியாளர்கள், ஷீஆக்களுக்கு எதிராக புரிந்த அக்கிரமங்கள் பலவரலாற்று நூற்களில் பதிவாகியுள்ளன. சான்றுக்கு கீழ்வருவனவற்றைப் பார்வையிடலாம்.

• சிய்ரு அஃலாமிந் நுபலா, 3, 496
• அல்காமில் பித்தாரீஹ், இப்னு அதீர், 3, 450
• லிசானுல் மீஸான், இப்னு ஹஜர், 2, 495

மேற்கூறப்பட்ட சான்றுகள் மற்றும் அம்சங்களின் அடிப்படையில் கர்பலாப்போர் நடக்கின்றபோது அப்போரில் இமாம் ஹுஸைனைக் கொல்லுகின்ற அணியில் ஷீஆக்களே இருந்தார்கள் என்பதற்கு, கூஃபா நகரத்தில் ஷீஆக்கள் என்ற பெயரில் எவரும் இருக்கவில்லை. ஆதலால், ஷீஆக்களே இமாம் ஹுஸைனைக் கொன்றார்கள் என்பது பொய்யான மற்றும் போலியான குற்றச்சாட்டாகும். நீதி, நேர்மையுள்ள எவராலும் இக்குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஏனெனில், இமாம் ஹுஸைனை ஈராக் நோக்கி வருமாறு மடல்களை எழுதிய முக்கியஸ்தர்களான ஷிப்து பின் ரப்யீ, ஹஜார் பின் அப்ஜர், அம்ர் பின் ஹஜ்ஜாஜ் …போன்ற எவரும் ஷீஆக்களாக இருக்கவில்லை என்பதை வரலாறு படித்த எவராலும் மறுக்க முடியாது.

ஷீஆக்களில்லாத கூஃபா நகரம்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களைக் கொலைசெய்த கொலைக்காரர்களின் பட்டியலில் முதன்மை இடத்தை வகிப்பவர்களாக பின்வருவோர் காணப்படுகின்றனர். உமர் பின் ஸஃத் பின் அபீவக்காஸ், ஷிம்ர் பின் தில்ஜுஷன், ஷிப்து பின் அபீரப்யீ, ஹரார் பின் அப்ஜர், ஹர்மலா பின் காஹில், சனான் பின் அனஸ்… இவர்களில் எவரும் அஹ்லுல்பைத் ஆதரவாளர்களான ஷீஆக்களாக இருந்ததில்லை.

அபூசுப்யானின் ஷீஆக்கள்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் கர்பலாக் களத்தில் தம்மைக் கொல்ல வரிந்து கட்டிக்கொண்டு வந்தவர்களைச் சபித்தும், கண்டித்தும் ஆங்காங்கு சில உரைகளை நிகழ்த்தியுள்ளார்கள். அவற்றில் எங்கேயும் அவர்கள் தமது ஷீஆக்களைச் சாடியதாக, சான்றுகள் எதுவுமில்லை. ஷீஆக்கள்தான் இந்த அநியாயத்தின் சூத்திரதாரிகள் என்றிருந்தால், இமாமவர்கள் தனது உரைகளில் அவர்களை விளித்துப் பேசியிருக்க வேண்டுமல்லவா? கொல்ல வந்தவர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ‘நீங்கள் என்மீது பிரியம் கொண்ட எனது ஷீஆக்கள் அல்லவா? அல்லது எனது தந்தையை நேசித்த ஷீஆக்களல்லவா? ஏன் என்னைக் கொல்ல முன்வந்திருக்கிறீகள்? என்று விளித்து கூறியிருக்க வேண்டுமல்லவா? இப்படி அவர்கள் கூறாதுவிட்டதே, இமாமைக் கொன்றவர்கள் ஷீஆக்களல்ல என்பதற்கான சான்றாகும்.

இதற்கு மாற்றமாக, இமாம் தன்னைக் கொல்ல வந்தவர்களை ‘ஷீஅது ஆலி அபீசுப்யான்’ (அதாவது, அபூசுப்யானின் வம்சத்து ஆதரவாளர்கள்) என்றும் அறிமுகப்படுத்தியுள்ளார். கர்பலாக் களத்தில் இறுதிநேரத்தில் இமாம் இவ்வாறு கூறினார்கள்.

و یحکم یا شیعة آل أبی‌سفیان! إن لم یکن لکم دین، و کنتم لاتخافون المعاد، فکونوا أحراراً فی دنیاکم هذه،

‘அபூசுப்யானின் வம்சத்தினரின் ஷீஆக்களே! (கூட்டத்தாரே!) உங்களுக்கு கேடுதான். நீங்கள் மறுமைக்கு அஞ்சாதவர்களாகவோ அல்லது இஸ்லாத்தைப் பின்பற்றாதவர்களாhகவோ இருப்பினும் இருந்து கொள்ளுங்கள். எனினும், இவ்வுலகில் சுதந்திர மனிதர்களாக இருங்கள். (மக்தலுல் ஹுஸைன், குவாரஸ்மீ, பா 2, பக் 38 – பிஹாருல் அன்வார், பா 45, பக் 51 – அல்லுஹுஃப் பீ கத்லித் துஹூஃப், பக் 45)

வெறிபிடித்த கொலையாளிகள்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களைக் கொன்ற கொலையாளிகள் எப்பிரிவைச் சேர்ந்தவர்கள்?. அவர்கள் இமாமின் ஷீஆக்களா? அல்லது இமாமின் பரமஎதிரிகளா? என்பனவற்றை, அக்கொலையாளிகளின் வாயினாலேயே கர்பலாக்களத்தில் வெளிப்பட்ட வார்த்தைகள் மிகத்துல்லியமாகச் சான்று பகர்கின்றன.

அக்கொலையாளிகள் இமாமைப் பார்த்து இவ்வாறு கூறினர்:

• ‘ஹுஸைனே! உன்னை எதிர்த்துப் போரிடுவதற்குக் காரணம், உனது தந்தை அலீ பின் அபீதாலிபுடன் உள்ள பகையே’ إنما نقاتلک بغضاً لأبیک. (யனாபீஉல் மவத்தாஃ, கந்தூசி ஹனபீ, பக் 346)

• یا حسین، یا کذّاب ابن الکذّاب ‘பொய்யனின் மகனான பொய்யன் ஹுஸைனே! (அல்காமில், இப்னு அதீர், பா 4, பக் 67)

• یا حسین أبشر بالنار! ‘ஹுஸைனே! உனக்கு நரகத்தைக் கொண்டு நன்மாராயம் கூறுகிறேன்’ (அல்பிதாயது வந்நிஹாயா, பா 8, பக் 183)

இதே மாதிரியான, பலவசனங்கள் இந்த அக்கிரமக்காரர்களின் வாய்களினால் வெளிப்பட்டன. இவர்களின் மனங்களில் இமாம் அலீ (அலை), இமாம் ஹுஸைன் (அலை) மற்றும் அஹ்லுல்பைத்தினருடன் எத்தகைய பகையையும், வெறுப்பையும் கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாகிறது. இத்தகையவர்கள் இமாமின் ஷீஆக்களல்ல. இவர்கள் அபூசுப்யானின் கொலைகாரக் கும்பல்கள் என்பதை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.

கொலைகாரர்களின் முகத்திரையை கிளிக்கும், அவர்களின் அநியாயங்கள்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களைக் கொன்றவர்கள் அவர்களின் ஷீஆக்களல்ல. மாறாக, அவர்களின் பரமவிரோதிகளும், எதிரிகளுமே என்பதை இக்கொலையாளிகள் இமாமுக்குப் புரிந்த அநியாயங்களின் தன்மையை வைத்துப் புரிந்து கொள்ளலாம். அதாவது, பால்குடிச் சிறார்கள் உட்பட இமாம் ஹுஸைனையும், அவரது குடும்பத்தினர், பிள்ளைகள் போன்றோரை பல நாட்களாகத் தாகத்தினால் பரிதவிக்க வைத்து அக்கிரமம் செய்து கொன்றார்கள்தான் இக்கொலைகாரக் கும்பல். கொலை செய்யப்பட்ட ஹுஸைனாரின் புனித உடல்மீது குதிரைகளை ஓடவிட்டார்கள். அவர்களின் தலைகளை உடலை விட்டும், நீக்கி அரச அரண்மனைக்கு எடுத்துச் சென்று தடிகளால் பற்களிலும், உதடுகளிலும் அடித்து வேடிக்கை பார்த்தார்கள். பெண்களையும், குழந்தைகளையும் சிறைபிடித்து, சங்கிலிகளால் கட்டி நடைபவணியாக வீதிவீதியாக இழுத்துச் சென்றார்கள். அவர்கள் கொண்டிருந்த உடமைகளையும், சொத்துக்களையும் அபகரித்து சூறையாடினார்கள். மனித இனமே வெட்கித்து, தலைகுனியும் அளவுக்கு, இவ்வகை அநியாயங்களை இமாமவர்களின் ஷீஆக்கள் செய்திருப்பார்களா? இல்லவே இல்லை. இது உமையாச் சண்டாளர்களின் அநியாயங்கள்தான் என்பதில் எவ்வளவும் சந்தேகிக்க முடியாது.
கொலையாளிகளின் அடையாளம்

இதுவரை கூறப்பட்ட விடயங்களிலிருந்து இமாம் ஹுஸைன் (அலை) அவர்களைக் கொன்றவர்கள் அவர்களின் ஷீஆக்களல்ல. மாறாக உமையாச் சண்டாளர்கள்தான் என்பதை மிகத்தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இல்லை! இல்லை! இமாம் ஹுஸைனைக் கொன்றவர்கள் அவர்களின் ஷீஆக்கள்தான் என அடம்பிடிக்கும் உமையா எச்சசொச்சங்களான வஹ்ஹாபி கடும்போக்காளர்கள் இமாம் ஹுஸைனைக் கொல்லுவதற்கு கட்டளை பிறப்பித்த ஆட்சியாளர்கள், படைத்தளபதிகள் விடயத்தில் என்ன சொல்லப் போகிறார்கள்? முஆவியாவின் மகன் யசீத், உபைதுல்லாஹ் பின் சியாத், ஷிம்ர் பின் தில்ஜூஷன், கைஸ் பின் அஸ்அஸ், அம்ர் பின் ஹஜ்ஜாஜ் சுபைதீ, அப்துல்லாஹ் பின் சுஹைர் அஸ்தீ, ஷிப்து பின் ரப்யீ யர்பூயீ, உர்வா பின் கைஸ் அஹ்மசீ, அப்துர்ரஹ்மான் பின் அபீசுப்ரா ஜூஃஃபீ, ஹசீன் பின் நமிர், ஹஜ்ஜார் பின் அப்ஜர் போன்றோர் இவர்கள் ஷீஆக்களா? இவர்கள் உமையா வம்சத்தின் ஆதரவாளர்கள் என்பது வெள்ளிடைமலை.

அதேபோன்று இமாம் ஹுஸைனில் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்ட சனான் பின் அனஸ் நக்யீ, ஹர்மலா காஹிலி, முன்கித் பின் முர்ரா அப்தீ, அபுல் ஹதூப் ஜூஃபீ, மாலிக் பின் நஸ்ர் கின்தீ, அப்துர்ரஹ்மான் ஜூஃபீ, கஷ்அம் பின் நதீர் ஜூஃபீ, பஹ்ர் பின் கஃப் பின் தைமுல்லாஹ், ஸர்அது பின் ஷரீக் தமீமி, சாலிஹ் பின் வஹப் முர்ரீ, கௌலி பின் யசீத் அஸ்பஹீ, ஹசீன் பின் தமீம் போன்றவர்களும் பனீஹாஷிம்களுடன் பரம-எதிரிகளாக வாழ்ந்து வந்தவர்கள்.

இமாம் ஹுஸைனைக் கொன்றவர்கள் யார்? என்பதைக் கூறும் யசீத்

இமாம் ஹுஸைனைக் கொன்ற பழியை தம்மீதே போடுகிறார்கள் என்பதைக் கண்ணுற்ற யசீத் ‘அதை, தான் செய்யவில்லை. ஹுஸைனின் ஷீஆக்களே செய்தார்கள்’; என்று கூற முற்படவில்லை. இத்தகைய பொய்யைக் கூறினால் சமூகம் ஏற்காது என்பது யசீதிற்கு தெரிந்திருந்த உண்மை.

மாத்திரமின்றி அப்பொய்யைக் கூறினால், அதனை ஏற்கும் ஒரு சமூகம் இருந்திருந்தால் நிச்சயம் யசீத் அதைக் கூறாமல் விட்டிருக்கமாட்டான். ஆயினும், யசீத் ஹுஸைனைக் கொன்ற பழியை, தனது கூஃபா கவர்னரான உபைதுல்லாஹ் பின் சியாத் என்பவன் மீதே போட்டான். இப்பழியை உபைதுல்லாஹ்மீது போடுவதன் மூலம் தன்மீதுள்ள பழிச்சுமையை ஓரளவுக்குக் குறைத்துக் கொள்ளலாம் என எண்ணினான்.

கொலையாளிகளின் அணி

கர்பலாக் களத்தில் இமாம் ஹுஸைனின் அணியில் சேர்ந்து கொண்டவர்கள் இமாமின் ஷீஆ என அழைக்கப்பட்டனர். அதற்கு மாற்றமாக, இமாமின் எதிரணியில் இணைந்து கொண்ட எவரும் ஷீஆ என்று அழைக்கப்படவில்லை. உதாரணமாக, சுஹைர் பின் கெய்ன் என்பவர் ஆரம்பத்தில் எதிரணியில் ஒருவராகக் காணப்பட்டார். பின்னர், அவர் இமாம் ஹுஸைனுடன் சேர்ந்து கொண்டதனால் அவரை ஹுஸைனின் ஷீஆ என்றே அழைத்தனர். (தாரீகுத் தபரீ, பா 4, பக் 316)
இமாம் ஹுஸைனை வரவழைத்து கடிதம் எழுதியவர்கள் ஷீஆக்களா?

இமாம் ஹுஸை (அலை) அவர்களுக்கு பைஅத் செய்து கூஃபாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தவர்கள், அவர்களின் ஷீஆக்களே! என்பது சிலரது குற்றச்சாட்டு. ஒருவர் பைஅத் பிரமாணம் செய்து கடிதம் எழுதுகிறார் என்பதை வைத்து, அவர் ஷீஆ என்பதாகக் கூறமுடியாது. அவ்விரண்டும் அவர் ஷீஆ என்பதற்கான அடையாளமாக அமையாது. மூன்றாம் கலீபா ஹஸரத் உஸ்மான் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து இமாம் அலீ (அலை) அவர்களை கலீபாவாக ஏற்றுக்கொண்டு, பைஅத்து செய்த அனைவரையும் இமாம் அலீயின் ஷீஆக்கள் என்று யாரும் கூறியது கிடையாது. இமாம் அலீக்கு பைஅத் செய்துவிட்டு, பிறகு எதிரணியில் இணைந்துகொண்டு அவருக்கு எதிராகப் போரிட்டோரையும் வரலாறு பதியத் தவறவில்லை. அவர்களை ஷீஆக்கள் என்று யாரும் கூறியதுமில்லை.

இமாம் ஹுஸைனை ஈராக்குக்கு வருமாறு அழைப்பு விடுத்தவர்கள், இமாம் ஹுஸைனை நபிகளாரின் ஸஹாபாக்களில் ஒரு சிறந்தவரென்றும், அண்ணளாரின் பேரரென்றும் மாத்திரமே பார்த்தவர்கள். அவரை (ஷீஆக்கள் பார்ப்பது போன்று) ஷீஆக்களின் மூன்றாவது இமாமாகப் பார்த்தவர்கள் அல்லர். அவரால் மாத்திரமே யசீதின் நயவஞ்சக முகத்தின் திரையை கிழித்தெறிய முடியும் என்று கருதிய பொது மக்கள்தான், அவரை ஈராக்கிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்கள்.
வஹ்ஹாபிஸத்தின் தந்தையாக வர்ணிக்கப்படும் இப்னு தைமிய்யா கூஃபாவாசிகள் பற்றிக் கூறும்போது, ‘கூஃபாவாசிகள் முதலாம் கலீபா ஹஸரத் அபூபக்கரின் கிலாபத்தையும், இரண்டாம் கலீபா ஹஸரத் உமரின் கிலாபத்தையும் ஏற்றவர்களாகவே காணப்பட்டனர். மூன்றாவது கலீபா யாரென்பதில் ஹஸரத் உஸ்மானை ஏற்பதா? அல்லது இமாம் அலீயை ஏற்பதா? என்பதிலே கருத்துப்பேதம் கொண்டிருந்தார்கள்’ எனக் கூறுகின்றார். (மின்ஹாஜுஸ் ஸுன்னா)

இவரின் கூற்றுக்கமைய, கூஃபாவாசிகள் ஷீஆக்களல்ல என்பது புலனாகிறது. ஏனெனில், ஷீஆக்களின் நம்பிக்கையில் கிலாபத்தும், இமாமத்தும் அஹ்லுல்பைத்தினருக்கே உரித்தானது. பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களைத் தொடர்ந்து, இமாம் அலீ அவர்களே முதலாவது கலீபதுல்லாஹ் என நம்பிக்கை கொண்டவர்கள்தான், ‘ஷீஆக்கள்’ என்ற பெயரில் உள்ளடங்குவர்.
இமாம் அலீ (அலை) மற்றும் இமாம் ஹுஸைன் (அலை) ஆகியோரின் காலங்களில் வாழ்ந்த கூஃபாவாசிகளை ‘ஷீஆ’ என்ற வார்த்தையின் மூலம் அழைப்பதாயின் இருவகையான மொழிப்பிரயோகத்தில் பிரித்து நோக்கலாம்.

1. தனிப்பிரயோகம்: உண்மையில் ஒரு ஷீஆவாக இருந்தவர்கள். அஹ்லுல்பைத்தினர் மீது நேசம் வைத்து அவர்களின் எதிரிகளுடன் பகைமை கொண்ட ஷீஆக்கள். இத்தகைய ஷீஆக்கள் எவரும் இமாம் ஹுஸைனைக் கொலை செய்வதற்கு கர்பலாக் களத்தில் படையெடுத்து நின்ற உமர்பின் ஸஃத்தின் அணியில் காணப்படவில்லை. இவ்வகை ஷீஆக்களில் ஒரு பகுதியினர் கர்பலாக் களத்தில் இமாமுடன் இணைந்து, யசீதிய சண்டாளர்களுக்கு எதிராகப் போரிட்டு தமது உயிரைத் தியாகம் செய்தவர்கள். அவர்களில் மற்றுமொரு பகுதியினர் உபைதுல்லாஹ், யசீத் போன்றவர்களின் சிறைகளில் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள். அவர்களில் இன்னும் சிலர் கர்பலாவுக்குச் சென்று இமாமுடன் இணையவிடாமல் உமையாச் சண்டாளர்களால் தடுக்கப்பட்டிருந்தார்கள். இன்னும் சிலர் இமாம் கர்பலாவுக்கு வந்துவிட்ட செய்தி தெரியாதிருந்து இமாமின் கொலைக்குப் பின்னர் தான் கர்பலாவுக்கு வந்து சேர்ந்தார்கள்.

2. பொதுப்பிரயோகம்: பெயரளவில் ஷீஆக்கள். அஹ்லுல்பைத்தினர் மீது நேசம் கொண்டிருந்தாலும் அவர்களின் எதிரிகளை வெறுத்திருக்காதவர்கள். இவர்கள் அஹ்லுல்பைத்தினரின் இமாமத்தை நம்பிக்கை கொள்ளாதவர்கள் மாத்திரமின்றி, ஒரு உண்மையான ஷீஆ கொண்டிருக்கும் பண்புகளையோ, குணாம்சங்களையோ கொண்டிராதவர்கள். இத்தகையவர்கள் யசீதின் படையணியில் சேர்ந்து இமாம் ஹுஸைனுக்கு எதிராகச் செயற்பட்டிருக்கலாம் என்பது சாத்தியமானது.

ஆகவே, இமாம் ஹுஸைனைக் கொன்றது அவர்களின் ஷீஆக்கள் தான் என குற்றம் சுமத்தும் வஹ்ஹாபி மேதாவிகள், இமாம் ஹுஸைனின் ஷீஆக்கள் யார்? என்பதையும், இமாம் ஹுஸைனின் எதிரிகள் யார்? என்பதையும் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் என்பதுதான் உண்மை.

தொடர்புகளுக்கு:

info@peace.lk


Facebook


Twitter


Google-plus


Instagram


Dribbble


Youtube

Scroll to Top
Scroll to Top