இமாம் அலீ (அலை) அவர்கள் கஃபாவின் பிறப்பு பற்றிய ஆய்வு
–முஹம்மத் அஜ்மீர்–
பெயர்: அலீ இப்னு அபீ தாலிப் இப்னு அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம்.
புனைப் பெயர்கள் : அபுல் ஹஸன் , அபுல் ஹூஸைன், அபு ஷிப்தைன் , அபு துராப் , சித்தீக்குல் அக்பர்,…..
சிறப்புக் பெயர்கள் : அமீருல் மூஃமினீன் , யஃஸூபுத்தீன் , ஸவ்ஜூல் பதூல்.
தந்தை : அபு தாலிப் , நபிகள் (ஸல்) அவர்களை சிறுவயதிலிருந்து தனது மரணம் வரை பாதுகாத்து வந்த மூஃமினாவார்.
தாய் : பாத்திமா பிந்த் அஸத் பின் ஹாஷிம் , நபிகள் (ஸல்;) அவர்களை தனது பிள்ளைகளை விட முதன்மையாவதாக கவணித்து வந்தவர்.
பிறந்த இடம்: மக்காவில் கஃபாவினுள்.
பிறந்த திகதி : ரஜப் ,பதிமுன்றாம் பிறை, யானை வருடம் முப்பது ஆண்டு கழித்து .
மனைவிகள் : பாத்திமா ஸஹ்ரா (அலை) , உலகப் பெண்களின் தலைவியும் சுவனத்தில் பெண்களின் தலைவியுமாவார்.ஹிஜ்ரி 11 அன்னவரின் ஸஹாதத்திற்குப்பின் வேறு திருமணங்கள் முடித்துள்ளார்கள். குறிப்பாக உம்முல் பனீன் ,ஹஸ்ரத் அபுல் பழ்ல் அப்பாஸ் (அலை) அவர்களின் தாயாவர்கள்.
பிள்ளைகள்: இமாம் அலீ(அலை) அவர்களின் பிள்ளைகளின் பெயர்களை சிலர் 25 ஆகவும் சிலர் அதைவிட அதிகமாகவும் பதிவுசெய்துள்ளார்கள். அதில் அன்னை பாத்திமா (ஸலா) அவர்களின் மூலம் இமாம் ஹஸன்(அலை) , இமாம் ஹூஸைன் (அலை) , அன்னை ஸைனப் , அன்னை உம்மு குல்தும் மற்றும் ஹஸ்ரத் முஹ்ஸின் ( ஆறு மாத சிசுவாக அன்னையின் கருவில் வைத்தே அன்னை பாத்திமா அவர்கள் மீது நடந்தேறிய அட்டூழியங்களின் போது ஸஹீதாக்கப்பட்டார்கள்) .அதே போன்று உம்முல் பனீன் அவர்கள் மூலம் ஹஸ்ரத் அபுல் பழ்ல் அப்பாஸ் (அலை) , அப்துல்லாஹ் , ஜஃபர் மற்றும் உதுமான் என்பவர்களும் இருந்தார்கள் . அந்நால்வரும் கர்பலாவில் வைத்து ஸஹீதாக்கப்பட்டார்கள். அதே போன்று மற்றுமோர் மனைவியின் மூலம் முகம்மது ஹனபிய்ய அவர்களும் இருந்தார்கள்.
இமாம் அவர்களின் புகழ்கள் : இமாம் அவர்களின் வாழ்க்கை பூரணமாக புகழ்களே உள்ளன். உதாரணமாக கூறுவதாயின் கஃபாவினுள் பிறப்பு , நபியவர்களினால் வளர்க்கப்பட்டு பயிற்றுவிக்கப்படல் , முதலாவது முஸ்லிம் , இஸ்லாத்தின் மிகப்பெரும் பாதுகாவலர் , பத்ர் ,உஹத் , ஹந்தக் , கைபர் போன்ற யுத்த களத்தின் கதாயாநகர் , யுத்த களங்களில் இஸ்லாமிய கொடி பிடித்த படைத்தளபதி , நபியவர்கள் ஹிஜ்ரத் செல்லும் பொழுது நபியவர்களின் படுக்கையில் படுத்து தன்னுயிரை அர்பணிக்க துணிந்தவர் , சுவர்க்கத்து பெண்களின் தலைவியின் கணவர் , சுவனத்து வாலிபர் தலைவர்களின் தந்தை , நபிகள்(ஸல்) அவர்களோடு இணைந்து முதலாவதாக தொழுதவர் , ரஸூலுல்லாஹ் அவர்களின் சகோதரர் , நபியவர்களின் பிரதிநிதி இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம் .
ஸஹாதத் : ஹிஜ்ரி நாற்பதாம் வருடம் , ரமழான் மாதம் , பிறை 19 இல் மஸ்ஜிதுல் கூபா வில் வைத்து அப்துர்ரஹ்மான் பின் முல்ஜிம் என்பவனினால் வெட்டப்பட்டு பிறை 21 இல் ஸஹீதானார்கள்.அன்னவர்களின் உடல் ஈராக்கின் ஓர் நகரமான நஜபில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுகம்
இறைவன், மனிதர்களுக்கு வழிகாட்டியாக நபிமார்களையும் ரஸூல்மார்களையும் அனுப்பிவைத்துள்ளான். அவர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்கள் ஆவர்கள் . அவர்களோடு நபித்துவம் முற்றுப்பெறுகின்றது. இருப்பினும் மனிதர்களின் வழிகாட்டிக்காகவும் இஸ்லாத்தினை பாதுகாப்பதற்காகவும் இறைவனின் மூலம் நபியவர்களின் பிரதிநிதியாக அறிமுகப்படுத்தப்பட்டவர்களே அஹ்லுல்பைத்துக்ளைச் சார்ந்த இமாம்களாவார்கள்.
மனிதன் , தன் வாழ்க்கையில் பூரணத்துவத்தினை அடைவதற்கு எப்பொழுதும் தன்க்கென்றோர் முன்மாதிரியினை தேர்ந்தடுப்பதும் அவர்களின் வழிமுறையினை பின்பற்றுவதும் வரலாற்றின் சான்றாகும். அந்த வகையில் மனித சமூகத்தின் தலைசிறந்த முன்மாதிரிகளாகவும் அவர்களின் வழிகாட்டிகளாகவும் இறைவனினால் நியமிக்கப்பட்டவர்களே , நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அவர்களது பிரதிநிதிகளான பன்னிரு இமாம்களுமாவார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரதிநிதிகளில் முதலாமவரே இமாம் அலீ இப்னு அபீதாலிப் (அலை) ஆவார்கள். அவர்களின் சிறப்புக்களில் ஒன்றே புனிதமிகு கஃபாவினுல் இடம்பெற்ற அன்னவரின் பிறப்பாகும்.
இமாம் அவர்களின் பிறப்பு
புனிதமிகு கஃபா, இறை சந்நிதானமாகும். இதன் அமைவிடம் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களின் காலத்தில் தெரிவு செய்யப்பட்டு ஹஸ்ரத் இப்றாஹீம்(அலை) மற்றும் அன்னவரின் மகன் ஹஸ்ரத் இஸ்மாஈல் (அலை) ஆகியோரின் மூலம் கட்டப்பட்டது. அதுவே , இன்று முஸ்லிம்களின் கிப்லாவாக காணப்படுகின்றது.
இவ் இறைவில்லம் பலங்காலம் தொட்டே சங்கைக்குறியதாக திகழ்ந்துவந்துள்ளதுளூகுறிப்பாக அறபு மக்களிடம். அதிலும் மக்காவாசிகளிடம் மிகவும் கண்ணியமிக்கதாகவும் அவர்களின் புகழ்களில் ஒன்றாகவும் விளங்கிவந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முப்பாட்டனார்களின் ஒருவரான குஸை என்பவர் கஃபாவின் பாதுகாவலராக விளங்கிவந்தார். கஃபாவினுள் நுழைதலோ அல்லது அதிலிருந்து வெளிவருதலோ இவரின் கட்டுப்பாட்டினுள்ளே இருந்து வந்துள்ளது. இவரைத் தொடர்ந்து இந்தப் பொறுப்பு இவரின் பிள்ளைகளுக்கே இருந்து வந்துள்ளது. இறுதியாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹிஜ்ரி எட்டில் மக்காவினை வெற்றிகொண்டவுடன் இந்தப்பொறுப்பினை உதுமான் இப்னு அப்துத்தார் , குஸை அவர்களின் பரம்பரையில் வந்தவரிடம் ஒப்படைத்தார்கள்.
இறையில்லம் கஃபா, இரவுகளில் அடைக்கப்பட்டு திங்கள் மற்றும் வியாழன் பகல் நேரங்களில் திறக்கப்பட்டது. அதனுள் சென்று வருவோரை கவனிப்;பதற்கும் காவலாளிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
யானை வருடம் இடம்பெற்று முப்பது ஆண்டுகளின் பின்னர் , இருபத்திமூன்று ஆண்டுகள் ஹிஜ்ரத்திற்கு முன்னர் , நுபுவத்திற்கு பன்னிரு ஆண்டுகளுக்கு முன் , ஹாஷிம் குலத்தினைச் சார்ந்த ஹஸ்ரத் அபூதாலிப் அவர்களின் மனைவியான அன்னை பாத்திமா பிந்த் அஸத் அவர்கள் ,ஒன்பது மாதம் முடிவுற்று கர்பிணியாக காணப்பட்டார்கள். சுpல அறிவுப்புக்களின் பிரகாரம் ஒன்பதாம் மாதத்தின் இறுதிநாளாக காணப்பட்டது. ஹஸ்ரத் அபீதாலிப் மிகவும் கவளை கொண்டவராக வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள். அப்பொழுது அம்மாரா பிந்த் உப்பாதா என்ற பெண் , அபீதாலிப் அவர்களிடம் என்ன ? என்று கேட்டார். அதற்கு அவர் ளூ பாத்திமா பிந்த் அஸத் பிரசவ வலியுள்ளார் என்றார்.
இந்த நேரத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். அபூதாலிப் அவர்களிடம் செய்தியினை கேட்டு தெரிந்து கொண்டார்கள். நபியவர்கள் அன்னை பாத்திமா பிநத் அஸத் அவர்களை கஃபாவிடம் அழைத்து வந்தார்கள்.அவரிடம் ‘இறைவனின் பெயரால் பிரசவத்திற்கா அமருங்கள்’ என்றார்கள்.
இமாம் ஸாதிக் (அலை) அவர்கள் ,தனது தந்தைகளின் வழியாக அறிவிக்கும் அறிவிப்பின் பிரகாரம் , ‘அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் , யஸீத் இப்னு கஃனப் மற்றும் சில பனீ ஹாஷிம்களும் அப்துல் இஸ்ஸாவும் கஃபாவின் அருகில் இருந்தார்கள். அப்பொழுது இமாம் அலீ(அலை) அவர்களின் தாய் அன்னை பாத்திமா பிந்த் அஸத் ,ஒன்பது மாத நிறைகர்பிணியாக இருந்தவராக அங்கு வந்தார்கள்.அப்பொழுது அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது.அப்பொழுது அவர் வானினை நோக்கி , இறைவா! நான் உன்மீதும் நீ அனுப்பிய நபிமார்கள் மீதும் உனது இறைவேதங்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன். எனது பாட்டனார் இப்றாகீம் நபியவர்களின் வார்த்தைகளை உண்மைப்படுத்துகின்றேன்.அவரே ,இந்த கஃபாவினை கட்டியவராவார்கள். உன்னிடம் வேண்டிக்கொள்கின்றேன் ளூ இந்த வீட்டின் மீது ஆணையாகவும் என் வயிற்றிலிருக்கும் இந்த குழந்தையின் மீது ஆணையாகவும் கூறுகின்றேன். இக்குழந்தை வயிற்றிலிருந்தே என்நோடு பேசுகின்றது. எனக்கு ஆறுதலாக இருக்கின்றது.நான் உறுதியாக உள்ளேன் இக்குழந்தை உனது அத்தாட்சிகளில் ஒன்றாகும். எனது பிரசவத்தினை இலகுவாக்கிவிடுவாயாக!’.
ஆப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் மற்றும் யஸீத் பின் கஃனப் கூறுகின்றார்கள்: ‘ பாத்திமா பிந்த் அஸத் இந்த துஆவினை கேட்டதும் கஃபாவின் சுவர் பிளந்து கொண்டது.பாத்திமா பிந்த் அஸத், கஃபாவினுள் நுழைந்தார்கள்.எங்களுடைய கண்களிலிருந்து அவர் மறைந்து கொண்டார்.பிளந்த சுவர் மீண்டும் மூடிக்கொண்டது. கஃபாவின் கதவினை திறக்க எவ்வளவோ முயற்சி செய்தோம் எம்மால் அதகை திறக்க முடியவில்லை.அப்பொழுது புறிந்து கொண்டோம் இது இறைவனின் சித்தம் என்று.’
பாத்திமா பிந்த் அஸத் , மூன்று நாட்கள் கஃபாவினுள் இருந்தார்கள். அவர்கள் கஃபவினுள் சென்ற அதிசயம் மக்கா முழுவதும் பரவியது.அவருக்கு பிரசவத்திற்கு எப்படி உதவுவது என்றும் அவருடைய உணவினைப் பற்றியும் அனைவரும் கவளை கொண்டார்கள்.
மூன்று தினங்களுக்குப் பின்னர் , கஃபாவின் சுவர் முன்பு பிளந்த பகுதி மீண்டும் பிளந்து கொண்டது. அவ்வழியாக பாத்திமா பிந்த் அஸத் ,குழந்தையோடு அதன் வழியாக வெளியில் வந்தார்கள்.
அப்பொழுது அவர்கள் மக்கனை நோக்கி ‘மக்களே! இறைவன் என்னை அவனது படைப்பினங்களுக்கு மத்தியில் தெரிவுசெய்துள்ளான்.எனக்கு முன்னர் இறைவனினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களை விட என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்.ஏனெனில் இறைவன் , ஆஸியா பிந்த் மஸாஹிம் (பிர்அவ்னின் மனைவி) அவர்களை தெரிவு செய்தான். அவரும் இறைவனை மிகவும் மறைவான இடத்தில் வைத்து வணங்கிவந்தார்கள். அதுவோ பிர்அவ்னின் மாளிகையாக இருந்தது.அதே போல் மர்யம் பிந்த் இம்றானினையும் இறைவன் தெரிவுசெய்தான்.அவருக்கு பிரசவவலியினை இலகு படுத்தி , பேரீத்தம் பழங்களை வழங்கினான். இறைவன் என்னையும் தெரிவு செய்தான்.மர்யம் அதே போல் என்முன்னர் சென்ற அனைத்து பெண்களை விடவும் என்னை சிறப்பித்தான்.ஏனெனில், நான் இறைவனின் மிகப் பலமைவாய்ந்த இல்லத்தில் என் குழந்தையினை பிரசவித்தேன். மூன்று தினங்கள் அதனுள் இருந்தேன்.சுவனத்து பழங்களை உண்டேன். அங்கு ஓர் சத்தம் ஒலித்தது. அது கூறியது -இக்குழந்தையின் பெயரினை அலீ என்று வைக்கவும். நானுமோ மிகவும் உயர்ந்தவனாவேன். இக்குழந்தையினை எனது சக்தியின் மூலம் படைத்துள்ளேன்…இக்குழந்தையின் பெயரினை எனது பெயரிலிருந்து வைத்துள்ளேன்.இக்குழந்தைக்கு அனைத்து அறிவுகளையும் கொடுத்துள்ளேன். அவரே முதல் முதலாக கஃபாவின் மேல் ஏறி அதான் சொல்வார். அவரே சிலைகளை உடைப்பார், என்னை தொழுவார் . இக்குழந்தை எனது நேசத்துக்குறிய எனது படைப்புக்களில் மிகவும் சிறந்த எனது நபி முகம்மது (ஸல்) அவர்களுக்குப்பின் அவரது பிரதிநிதியாவார். இக்குழந்தையினை நேசிப்பவர்களும் அவருக்கு உதவுவோர்களும் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள். இக்குழந்தையினை வெறுப்பவர்களும் அவரை பின்பற்றாதவர்களும் மிகவும் துர்பாக்கியசாளிகள் ஆவார்கள்.’
சில அறிவிப்புக்களின் பிரகாரம் ளூ பாத்திமா பிந்த் அஸத் அவர்கள், தொப்புல் கொடி வெட்டப்பட்டு எவ்வித அழுக்குகளுமில்லாமல் சுத்தமாக்கப்பட்ட மிக அழகிய குழந்தையோடு காணப்பட்டார்கள்.
இமாம் அலீ(அலை) அவர்களின் பிறப்பின் பொழுது நபியவர்களுக்கு முப்பது வயதாகும். அன்னை ஹதீஜா(அலை) அவர்களோடு வாழ்ந்து வந்த நேரமாகும்.இமாம் அலீ(அலை) மீத மிக அன்புடையவர்க நபியவர்கள் காணப்பட்டார்கள்.பாத்திமா பிந்த் அஸதுக்கு நபியவர்கள் ‘குழந்தையின் தொட்டிலினை எனக்கருகாமையில் வையுங்கள் ‘ என்றார்கள். நபியவர்களே அக்குழந்தையினை பயிற்றுவித்தார்கள்.அக்குழந்தையின் தொட்டிலினை ஆட்டிவிடுவார்கள்.
இமாம் அலீ(அலை) அவர்களின் பிறப்பும் நபிகள்(ஸல்) அவர்களின் சந்தோஷமும்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘இமாம் அலீ(அலை) அவர்களின் பிறப்பின் பொழுது –அதாவது நபித்துவத்திற்கு பத்தாண்டுகளுக்கு முன்னர்- ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து ளூ இறைவனின் நேசத்துக்குறியவரே! இறைவன் உங்கள் மீது ஸலாம் உரைத்தான்.மேலும் உமது சகோதரரின் பிறப்பினையும் உங்களுக்கு வாழ்த்துரைத்தான். மேலும் கூறினான் ,இது உங்கள் நபித்துவத்தின் ஆரம்ப கட்டமாகும், ஏனெனில் உம்மை, உமது சகோதரன் ,மருமகன்,உமது பிரதிநிதியாகவும் நான் நிச்சயப்படுத்தியுள்ளேன். அவரின் மூலம் எமது மகிமையினை உயர்த்தியுள்ளேன். எழுந்து சென்று அவருடைய வலக்கையினை பிடித்துக்கொளும்ளூ ஏனெனில் , அவர் வலப்புறத்தாவார். அவரைப்பின்பற்றுவேர் அவரை வெண்முகத்தோடு காண்பார்கள்’.
நபியவர்கள் கூறினார்கள் : ‘மிக விரைவாக பாத்திமா பிந்த் அஸதிடம் சென்றேன்.அலீயின் வலக்கரத்தினை பிடித்த பொழுது அக்குழந்தை இறைவனின் மீதும் என்மீதும் சாட்சியம் கூறியது.மேலும் என்னைப்பார்த்து ‘ரஸூலுல்லாஹ்வே! நான் ஓதவா? என்று கேட்டது’ நானும் ஆம் என்றேன்.அப்பொழுது ஹஸ்ரத் ஆதம்,நூஹ்,இப்றாஹீம் ஆகியோரின் ஏடுகளையும் ஹஸ்ரத் மூஸா மற்றும் ஈஸா ஆகியோரின் வேதங்களையும் படித்தது.பின்னர் அல்-குர்ஆன் இறங்குவதற்கு முன்னரே அல்-குர்ஆனினை ஓதியது.பின்னர் என்னோடு பேசியது. நானும் அக்குழந்தையோடு பேசினேன்.இவ்வாறே நபிமார்களோடு அவர்களின் பிரதிநிதிகள் உரையாடுவார்கள். பின்னர் அக்குழந்தை தன்னுடைய இயல்புநிலைக்கு வந்நது. இவ்வாறே அக்குழந்தையின் வாரிசுகளாக பதினோறு இமாம்களும் காணப்பட்டார்கள்’. தொட்டிலிலே குழந்தை பேசுவது ஆச்சரியப்படக்கூடிய ஓர் விடயமே அல்ல. இவ்வாறான செயல்கள் இறைவனின் சக்திக்கு இம்மியளவான சான்றுகளாகும்.
ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் குழந்தைப் பருவத்தில் பேசியது பற்றி அல்-குர்ஆன் தெளிவாக கூறுகின்றது.
இப்னு அபில் ஹதீத் கூறுகின்றார் : ‘ இமாம் அலீ(அலை) அவர்கள் பிறந்த ஆண்ட நபியவர்கள் மக்களைவிட்டு தூரமாகி ஹிரா குகையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.இந்நிலை அவர்கள் பகிரங்கமாக நபித்துவம் வழங்கப்படும் வரை நீடித்தது.இவ்வருடமே நபியவர்கள், கற்களினதும் மரங்களினதும் பேச்சுக்களை மெல்ல மெல்ல செடுமடுக்கத் தொடங்கினார்கள்.பார்வைத் திரைகள் நீக்கப்பட்டு மெய்ஞானப் பார்வை திறக்கப்பட்டது.இமாம் அலீ(அலை) அவர்கள் பிறக்கும் இரவிலே நபிகள் (ஸல்) அவர்கள் ,இறைவனின் அத்தாட்சிகளை காண்டார்கள்.இது ஓர் புது அனுபவமாக அவருக்கு இருந்தது.நபியவர்கள் கூறினார்கள்: ‘இன்றிரவு , மிக அழகிய ஒளியிழங்கும் ஓர் குழந்தை பிறக்கவுள்ளது,அக்குழந்தையின் பிறப்பினால் இறைவன் எமக்கு அவனுடைய பலஅ ருள்வாயில்களை திறக்கவுள்ளான்’மேலும் நபியவர்கள் அவ்வருடத்தினை அருள்மிகு வருடம் என பெயரிட்டார்கள்’.
சுpல அறிவுப்புக்களின் பிரகாரம் இமாம் அலீ(அலை) அவர்கள், தனது பிறப்புக்குப் பின்னர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் சூறா மூஃமினூனை ஓதினார்கள்.அதற்கு நபியவர்கள் : ‘அவர்கள் உன் மூலமே வெற்றிபெற்றார்கள். இறைவன் மீது ஆணையாக! நீரே அவர்களின் தலைவராவீர், உமது அறிவிலிருந்தே அவர்களுக்கு ஞன அறிவு புகுட்டுவீர்,நீரே அவர்களின் வழிகாட்டி ,உம் மூலமே அவர்கள் நேர்வழியில் செல்வார்கள்’ என்று கூறினார்கள்.
அதிசயம் என்னவென்றால் இமாம் அலீ(அலை) அவர்கள் பிறக்கும் பொழுது மண்ணில் சிரம் தாழ்த்தி சுஜூத் செய்தவராக ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குறியவன் வேறு யாருமில்லை என்றும் முகம்மது(ஸல்)அவர்கள் அவனது தூதர் என்றும் அலீ(அலை) முகம்மது நபியவர்களின் பிரதிநிதி என்றும் முகம்மது நபியவர்கள் மூலமே நபித்துவம் முற்றுப்பெறுகிறது ,நான் அமீருல் மூஃமினீன் என்றும் சாட்சி கூறுகின்றேன்.’என்றார்கள்.
இமாம் அலீ(அலை) அவர்கள் புனித கஃபாவில் பிறந்த அறிவிப்பு உறுதியானதாகும்.
இமாம் அலீ(அலை) அவர்கள் ,புனித மிகு கஃபாவில் பிறந்த விடயம் எந்த வகையிலும் நிராகரிக்கப்படக்கூடிய ஓர் விடயமல்ல. இருப்பினும் சில ஆதாரங்களை சுட்டிக்காட்டுகின்றோம்.
1.இமாம் அலீ(அலை) அவர்களின் பிறப்பினைப் பற்றி மூன்றாம் நூற்றாண்டு தொட்டு இன்று வரை ஷீஆ மற்றும் சுன்னி அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
2.இமாம் அவர்கள் கஃபாவில் பிறந்தது பற்றி நான்கு இமாம்கள் ளூ இமாம் அலீ(அலை). இமாம் ஹஸன் (அலை) , இமாம் ஷைனுல்ஆபிதீன்(அலை), இமாம் ஸாதிக்(அலை) ஆகியோர் கூறியுள்ளார்கள்.
3.இமாம் அவர்களின் பிறப்பு கஃபாவில் நிகழ்ந்தது பற்றி பல ஸஹாபாக்களும் தாபிஈன்களும் அறிவித்துள்ளார்கள்.ஸகாபாக்களில் உதாரணமாகளூஅப்பாஸ் பின் அப்துல் முத்தலிப், யஸீத் பின் கஃனப், இதாப் பின் உஸைத், உம்முல் மூஃமினீன் ஆயிஸா, அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ் அன்ஸாரி, உம்மு அம்மாரா. தாபிஈன்களில் உதாரணமாக ளூ மைதம் தம்மார், ஷயீத் இப்னு ஜூபைர், மூஸா இப்னு யஸார், அபூ ஹம்ஷா துமாலி.
4.சில ஷியாரத் துஆக்களிலும் வந்துள்ளது. உதாரணமாக இமாம் ஸாதிக் (அலை) அவர்கள் கூறிய ஷியாரத்.
5.இமாம் அலீ(அலை) அவர்கள் , கஃபாவில் பிறந்தது பற்றி அஹ்லுல்பைத்துக்களை கவிபாடும் கவிஞர்களின் கவிதைகளில் பலங்காலம் தொட்N;ட வந்துள்ளது.உதாரணமாக செய்யித் ஹூமைரி, இமாம் ஸாதிக்(அலை) மற்றும் இமாம் ஹாழிம்(அலை) அவர்களின் காலப்பகுதியில் வாழ்ந்தவர். அதே போன்று முகம்மது பின் மன்சூர் சுர்கீ. அதே போல் அபூ முகம்மது அல்-மன்சூர் பில்லாஹ். அதேபோல் தற்கால கவிஞர் அப்துல் மஸீஹ் அந்தாகீ , இமாம் அலீ (அலை) அவர்கள் பற்றி 5595 அடிகளைக் கொண்ட கவிதைத் தொகுப்பினை எழுதியுள்ளார்.
ஹதீஸ் அறிவிப்பாளர்கள் ஆய்வு
புல ஷீஆ மற்றும் சுன்னி அறிஞர்கள் இமாம் அலீ(அலை) அவர்கள் கஃபாவில் பிறந்த செய்தியினை அறிவிக்கும் அறிவிப்பினை தவாதூர் (ஹதீஸ் அறிவிப்பில் மிகவும் பலம் வாய்ந்தது) எனவும் மிகவும் பிரபல்யமானது என்றும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
1.அல்லாமா மஜ்லிஸி(மரணம்1111ஹி), இந்த செய்தியினை மிகவும் உறதிப்படுத்தியுள்ளார்கள்.அதே போல் இவ்வறிப்பு ஹதீஸ் கலை அறிஞர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களிடம் மிகவும் பிரபல்யமானது எனவும் கூறிவுள்ளார்கள்.
2.ஹதீஸ் கலை அறிஞர் செய்யித் ஹாஷிம் பஹ்ரானி இந்த அறிவிப்பினை தவாதூர் என்றுள்ளார்கள்.
3.ஹதீஸ்கலை அறிஞர் நூரி அவர்கள் கூறும் பொழுது : ‘இமாம் அவர்களின் இச்சிறப்பு மிக அதிகமான அறிவிப்புக்களிலும் அறிஞர்களின் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் மற்றும் கவிதைகளிலும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இவ்விடயத்தில் எந்த நபியுமே , எந்த வஸியிமோ இமாம் அலீக்கு நிகரில்லை.’
4.ஹாகிம் நைஷாபூரி (மரணம் 405ஹி) , அஹ்லுஸ்சுன்னாக்களிடம் மிகவும் மதிப்புக்குறிய அறிஞராவார். அவர் இது பற்றி கூறும் பொழுது ‘தவாதுரான அறிவிப்புக்கள் , பாத்திமா பிந்த் அஸத் அவர்கள் அமீருல் மூஃமினீன் அலீ பின் அபீ தாலிப் கர்ரம அல்லாஹ் வஜ்ஹஹூ அவர்களை கஃபாவினுல் பிரசவித்தார்கள் என்பதை உறுதிசெய்கின்றது.’
5.தகபீ ஷாபிஈ (மரணம்848ஹி), தல்கீஸூல் முஸ்தத்ரக் ,பாகம்3,பக்கம்550 இல் தவாதுர் என்ற இந்த அறிவிப்பினை உறுதிப்படுத்தியுள்ளார்.
6.இப்னு காவந் ஷாஹ் (மரணம்903ஹி) இது பற்றி கூறும் பொழுது ‘இந்த புகழினைக் உறுதிப்படுத்தும் வரலாற்றாசிரியர்களிடம் இவ்வறிவிப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஓர் விடயமாகும்.’
7.வலியுல்லாஹ் அத்தஹ்லவி ஹனபி (மரணம்1176ஹி) ‘முதவாதிரான அறிவிப்புக்கள் , பாத்திமா பிந்த் அஸத் அமீருல் மூஃமினீன் அலீ அவர்களை கஃபாவினுல்லேயே பிரசவித்தார்கள் என்பதை சான்று பகிர்கிறது.’
8.ஆலூஸி ,அப்துல் பாகி அவர்களின் பாவிற்கு விளக்கம் கூறும் பொழுதுளூ ‘அமீர் கர்ரம அல்லாஹூ வஜ்ஹூஹூ அவர்கள் கஃபாவினுள் பிறந்தது உலகறிந்த ஓர் விடயமாகும். அது ஷீஆ மற்றும் சுன்னா ஆகிய இரு தரப்பினரின் நூட்களிலும் பதியப்பட்டுள்ளது.’
இமாம் அலீ(அலை) அவர்களின் பிறப்பினை அறிவிக்கும் ஷீஆ அறிஞர்கள் குறிப்பிடும் அறிவிப்பாளர்கள் வரிசை
இமாம் அலீ(அலை) அவர்கள் கஃபாவினுள் பிறந்தமை பற்றி அறிவிக்கும் அறிவிப்பினை செய்க் ஸதூக்(ரஹ்) அவர்கள்(மரணம்381ஹி),தன்னுடைய மூன்று நூற்களில்ளூ அதாவது இலலுஷ் ஷராயிஃ , மஆனியுல் அக்பார், ஆமாலி ஆகிய நூட்களில் சயீத் பின் ஹபீர் அவர்கள் யஸீத் பின் கஃனப் மூலம் அறிவிப்பதை பதிவு செய்துள்ளார்கள்.
செய்க் தூஷி அவர்கள் (மரணம் 460ஹி)அவர்கள் ,தன்னுடைய நூலான ஆமாலியில் மூன்று வகையான அறிவிப்பாளர்கள் வரிசையினை பதிவு செய்துள்ளார்கள்.
இந்த அறிவிப்பினை பதிவு செய்திருக்கும் ஷீஆ ஹதீஸ்கலை அறிஞர்களும் மற்றும் ஏனைய துறைசார் வல்லுனர்களும்
1.இஸ்மாயில் இப்னு முகம்மதுளூசெய்த் ஹூமைரி என புகழ்வாய்ந்த அஹ்லுல்பைத் கவிஞர்(மரணம்173ஹி).
2.முகம்மது இப்னு அலீ இப்னு அல்ஹூஸைன்ளூ செய்க் ஸதூக்(மரணம்381ஹி) என பிரபல்யம் வாய்ந்த ஹதீஸ்கலை வல்லுனர்.தன்னுடைய ஹதீஸ் தொகுப்புக்களான ஆமாலி, இலலுஷ்ஷராயிஃ மற்றும் மஆனியுல் அக்பாரில் பதிவுசெய்துள்ளார்.
3.இப்னு அய்யாஸ் (மரணம்401ஹி).
4.முகம்மது இப்னு முகம்மதுளூ செய்க் முபீத் (மரணம்413ஹி)என பிரபல்யாமானவர்.தன்னுடைய அல்-இர்ஷாத் , மஸாருஷ் ஷீஆ மற்றும் அல்-முக்னஆ ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
5.அல்-ஹாருனுல் ஹூஸைனி (மரணம்424ஹி),ஷைதீய்யா மத்ஹபைச் சேர்ந்தவர்.தன்னுடைய நூலான அல்-இபாதது பீ தாரீகில் அயிம்மதிஸ் ஸாத்தா பதிவுசெய்துள்ளார்.
6.செய்யித் முர்தழா அலீ பின் அல்-ஹூஸைன் அலமுல் ஹூதா (மரணம்436ஹி)தன்னுடைய கஸீததுல் மத்கபிய்யாவில் பதிவுசெய்துள்ளார்.
7.ஷரீப் ரழி முகம்மது பின் அல்-ஹூஸைன் (மரணம்406ஹி)தன்னுடைய கஸாயிஸூல் அயிம்மாவில் பதிவுசெய்துள்ளார்கள்.
8.செய்க் ஹூஸைன் பின் அப்துல்வஹ்ஹாப் ,தன்னுடைய நூலான உயூனுல் முஃஜிஸாத்.
9.இப்னுஸ் ஷூபி அலீ பின் அபீ அல்-கனாயிம்(மரணம்460ஹி), தன்னுடைய நூலான அல்-மஜ்;தியில் பதிவுசெய்துள்ளார்.
10.செய்க் அல்-கராஜிகி அபூல் பத்ஹ்(மரணம்449ஹி) தன்னுடைய நூலான கன்ஸூல் பவாயிதில் பதிவுசெய்துள்ளார்.
11.செய்க் தூஸி முகம்மது பின் ஹஸன்(மரணம்460ஹி), தன்னுடைய நூற்களான ஆமாலி, தஹ்தீபுல் அஹ்காம், மிஸ்பாஹூல் முதஹஜ்ஜித் ஆகியவற்றில் பதிவுசெய்துள்ளார்.
12.பத்தால் நைஷாபூரி முகம்மது பின் ஹஸன்(மரணம்508ஹி) தன்னுடைய ரௌலதுல் வாயிழீனில் பதிவுசெய்துள்ளார்.
13.தபரஸி அபூ அலீ பழ்ல் பின் ஹஸன் (மரணம்548ஹி) தன்னுடைய இஃலாமுல் வராவில் பதிவுசெய்துள்ளார்.
14.இமாதுத்தீன் தபரி(மரணம்553பின்னர்)தன்னுடைய பஷாரதுல் முஸ்தபா(ஸல்)இல் பதிவுசெய்துள்ளார்.
15.குதுபுத்தீன் ரவான்தீ(மரணம்573ஹி)தன்னுடைய அல்-கராயிஜ் வல் ஜராயிஜ்ஜில் பதிந்துள்ளார்.
16.இப்னு ஷஹ்ர் ஆஷூப் மாஸந்தரானி (மரணம்588ஹி)தன்னுடைய மனாகிப் ஆல அபீதாலிபில் பதிவுசெய்துள்ளார்.
17.இப்னு பத்ரீக் ஹில்லி(மரணம் 600ஹி),தன்னுடைய நூலான
அல்-உம்தாவில் பதிவுசெய்துள்ளார்.
18.ஹூமைத் பின் அஹ்மது அல்-மஹல்லி (மரணம்652ஹி), தன்னுடைய நூலான அல்-கதாயிகுல் வர்திய்யாவில் பதிவுசெய்துள்ளார்.
19.இப்னு ஷாதான் கும்மி (மரணம்660ஹி),தன்னுடைய நூலான அல்-பழாயிலில் பதிவுசெய்துள்ளார்.
20.செய்யித் இப்னு தாவூஸ்(மரணம்664ஹி),தன்னுடைய நூலான இக்பாலுல் அஃமாலிலும் மற்றும் அல்-யகீனிலும் பதிவுசெய்துள்ளார்.
21.அபுல்ஹஸன் அலீ பின் ஈஸா(மரணம்693ஹி),தன்னுடைய நூலான கஷ்புல் கிம்மாவில் பதிவுசெய்துள்ளார்.
அதேபோல் ஹிஜ்ரி 14ஆம் நூற்றாண்டுவரை மிகப்பெரும் ஹதீஸ்கலை அறிஞர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் இமாம் அலீ(அலை)அவர்கள் கஃபாவினுள் பிறந்த செய்தியினை பதிவுசெய்துள்ளார்கள்.உதாரணமாக அல்லாமா ஹில்லி(மரணம்726ஹி)தன்னுடைய கஷ்புல் யகீன் வ நஹ்ஜூல் ஹக்கிலும் ,முகம்மது பின் மக்கி ஆமுலி (ஷஹாதத்786ஹி) தன்னுடைய அல்-மஸாரிலும், இப்னு இனபா (மரணம்828ஹி)தன்னுடைய உம்ததுத் தாலிபிலும் , செய்யித் ஹாஷிம் பஹ்ரானி (மரணம்1107ஹி)தன்னுடைய காயத்துல் மராமிலும் , அல்லாமா மஜ்லிஸி (மரணம்1111ஹி) தன்னுடைய பிகாருல்அன்வார் பாகம்35இல் பக்கம்7தொடக்கம்23 வரையிலும் பதிவுசெய்துள்ளார்கள்.
இந்த அறிவிப்பினை பதிவு செய்திருக்கும் சுன்னி ஹதீஸ்கலை அறிஞர்களும் மற்றும் ஏனைய துறைசார் வல்லுனர்களும்
1.பாகிஹி(மரணம்275ஹி) அக்பாருல் மக்காவில்.
2.மஸ்ஊதி (மரணம்346ஹி)முரூஜூத் தஹபில்.
3.அபூ பக்ர் அல்-குப்பால் ஷாஷி (மரணம் 365ஹி) பழாயிலுல் அமீருல்மூஃமினீல்.
4.ஹாகீம் நைஷாபூரி(மரணம்405ஹி),முஸ்தத்ரக்கில் பதிவுசெய்துள்ளார்.அவர் இந்த ஹதீஸினை முதவாதிர் என கூறியுள்ளார்.
5.அபுல் காஸிம் புஸ்தி(மரணம்420ஹி),கிதாபுல் மராதிப் பீ பழாயிலில் அமீரில் மூஃமினீன் வ செய்யிதில் வஸிய்யீன் அலீ பின் அபீதாலிப் ஸலாவாதுல்லாஹி அலைஹில் பதிவுசெய்துள்ளார்.
6.இப்னு மகாஸலி (மரணம்483ஹி),தன்னுடைய மனாகிபுல் இமாம் அலீ பின் அபீதாலிபில் பதிவு செய்துள்ளார்.
7.முகம்மது பின் சுஜாஆஉத்தீன் (மரணம்464ஹி),தன்னுடைய அந்-நயீமுல் முகீமில் பதிவுசெய்துள்ளார்.
8.ஸிப்த் இப்னு ஜளஸி (மரணம்654ஹி)தன்னுடைய தத்கிரதுல் கவாஸ்ஸில் பதிவுசெய்துள்ளார்.
9.கன்ஜி ஷாபியி(மரணம்658ஹி)தன்னுடைய கிபாயத்துத் தாலிபில் பதிவுசெய்துள்ளார்.
10.ஜூவைனி ஷாபிஈ(மரணம்730ஹி)தன்னுடைய பராயிதுல் ஸம்தீனில் பதிவுசெய்துள்ளார்.
11.தஹபீ ஷாபிஈ(மரணம்848ஹி),தன்னுடைய தல்கீஸூல் முஸ்தத்ரகில் இமாம் அலீ(அலை) அவர்கள் கஃபாவில் பிறந்த செய்தியினை முதவாதிர் என பதிவுசெய்துள்ளார்.
12.ஸரந்தி ஹனபி(மரணம்750ஹி),நழ்மு துரரிஸ் ஸம்தீனில்.
13.இப்னுஸ் சிபாஃக்(மரணம்855ஹி),அல்-புஷூஷூல் முஹிம்மாவில்.
14.அஸ்ஸபூரி ஷாபிஈ(மரணம்894ஹி),நுஸ்கதுல் மஜாலிஸில்.
15.இப்னு காவந் ஷாஹ்(மரணம்903ஹி),ரௌலதுஸ் ஸபாவில்.
16.முகம்மது பின் தல்கா(மரணம்652ஹி),மதாலிபுஸ் ஸஊல் பீ மனாகிபில் ஆல ரஸூல்(ஸல்) இல் பதிவுசெய்துள்ளார்.
17.அலீ அல்-காரி(மரணம்1014ஹி), ஷரகுஷ் ஷிபாவில்.
18.வலியுல்லாஹ் திஹ்லவி(மரணம்1176ஹி),இஸாலதுல் குப்பா வில் இந்த அறிவிப்பினை தவாதுர் என கூறிவுள்ளார்.
19.செய்யித் மஹ்மூது ஆலூஸி(மரணம்1270ஹி), ஷரகுல் கரீதா பீ ஷரகுல் கஸீதாதுல் ஐனிய்யாவில் பதிவுசெய்துள்ளார்.
இமாம் அலீ(அலை)அவர்கள் கஃபாவினுள் பிறந்ததினைப் பற்றி அறிவித்துள்ள இமாம்கள்
1.அமீருல்மூஃமினீன் அலீ இப்னு அபீதாலிப்(அலை).
2.இமாம் ஹஸன்(அலை).
3.இமாம் ஸாதிக் (அலை).
4.இமாம் ஷைனுல்ஆபிதீன்(அலை).
இமாம் அலீ(அலை)அவர்கள் கஃபாவினுள் பிறந்ததினைப் பற்றி அறிவித்துள்ள இமாம்கள் தவிர்ந்த ஏனையோர்கள்
1.அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்.
2.யஸீத் பின் கஃனப்.
3.இதாப் இப்னு உஸைத்.
4.உம்முல் மூஃமினீன் ஆயிஸா நாயகி.
5.மைதம் தம்மாரி.
6.ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அன்ஸாரி.
7.அனஸ் பின் மாலிக்.
8.ஸயீத் பின் ஹபீர்.
9.மூஸா பின் யஸார்.
10.அபூ ஹம்ஸா துமாலி.
11.உம்மு அம்மாரா.
இமாம் அலீ(அலை) அவர்கள், கஃபாவில் பிறந்ததினை நிராகரித்தல்
இவ்வனைத்து திடமான ஆதாரங்கள் இருந்த பொழுதும் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இப்னு அபில் ஹதீத் முஃதஸலி என்ற இமாம் அலீ(அலை) அவர்களின் நஹ்ஜூல்பலாகாவிற்கு விளக்கவுரை எழுதிய அறிஞர் இமாம் அலீ(அலை) அவர்கள் கஃபாவினுள் பிறந்ததை நிராகரிப்பதே ஆகும்.இது பற்றி அவர் கூறும் பொழுது ‘இமாம் அலீ அவர்களின் பிறந்த இடம் பற்றி கருத்து வேறுபாடுகள் உள்ளன.அதிகமான ஷீஆ அறிஞர்கள்,அவர் கஃபாவினுள் பிறந்தார் என்கின்றார்கள்.ஆனால், ஹதீஸ்கலை அறிஞர்கள் இதனை நிராகரிக்கின்றார்கள்.ஹதீஸ்கலை வல்லுனர்களின் கருத்து என்னவெனில் ஹகீம் பின் ஹிஸாமே கஃபாவினுள் பிறந்தார் என்பதாகும்.’
குhழி பழ்ல் இப்னு ரூஸ்பஹான் ஹனபீ கூறும் பெழுது ‘இந்தக்கூற்று ஷீஆக்களிடம் பிரபல்யமானதாகும்.ஆனால் வரலாற்றாசிரியர்கள் இதனை புறக்கணிக்கின்றார்கள்.அவர்களிக் கருத்தின் பிரகாரம் ஹகீம் பின் ஹிஸாம் மாத்திரமே கஃபாவினுள் பிறந்துள்ளார் என்பதாகும்.’
இவ்விருவர்களின் கூற்றும் இருவிடயங்களை உள்ளடக்கியுள்ளது.
1.ஹதீஸ்கலை வல்லுனர்களும் வரலாற்றாசிரியர்களும் இமாம் அலீ(அலை) அவர்கள் கஃபாவில் பிறந்நதினை ஏற்றுக்கொள்ளவில்லை.ஷீஆக்களிடம் மாத்திரமே அது பிரபல்யமானதாகும்.
2.ஹகீம் பின் ஹிஸாம் மாத்திரமே கஃபாவினுள் பிறந்துள்ளார்.
இதில் முதலாவது விடயம் மிகவும் ஆச்சரியப்படக்கூடிய ஒன்றாகும். நாம் மேலே இமாம் அலீ(அலை) அவர்கள் கஃபாவினுள்தான் பிறந்தார்கள் என்பது பற்றிய அறிவிப்பினை ஷீஆ மற்றும் சுன்னா அறிஞர்கள் தங்களது நூல்களில் பதிவுசெய்துள்ளதை சுட்டிக்காட்டியிருந்தோம்.அதிலும் ஹாகிம் நைஷாபூரி மற்றும் தஹபீ போன்ற அஹ்லுஸ்சுன்னா ஹதீஸ்கலை வல்லுனர்கள் அவ்வறிவிப்பினை முதவாதிர் என்று கூறியிருப்பதினையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.இவ்வாறு இருக்கையில் இவ்விருவரின் கூற்றுக்கள் மிகவும் ஆச்சரியமான ஒன்றாக தோன்றுகின்றது.அதே போல் அஹ்லுஸ்சுன்னா வரலாற்றாய்வாளர்களும் இமாம் அலீ(அலை) அவர்கள் கஃபாவினுள் பிறந்ததினை தங்களது நூல்களில் குறிப்பிட்டுள்ளதினையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.எனவே, முதலாவது விடயம் அர்த்தமற்ற ஓர் வாதமாக அமைகின்றது.
ஆனால் , இரண்டாவது விடயமான ஹகீம் பின் ஹிஸாம் கஃபாவினுள் பிறந்த விடயமாகும்.ஹகீம் பின் ஹிஸாம் பின் குவைலித் பின் அஸத் என்பவர் உம்முல்மூஃமினீன் அன்னை கதீஜா(அலை) அவர்களின் சகோதரரின் மகனாவார்.ஓர் சில அஹ்லுஸ்சுன்னா அறிஞர்கள் அவரின் பிறப்பு கஃபாவினுள் இடம்பெற்றது என்று கூறுகின்றனர்.உதாரணமாக அஸ்ரகீ அபுல் வலீத் முகம்மது பின் அப்துல்லாஹ் பின் அஹ்மது மூன்றாம் நூற்றாண்டை சார்ந்த இவர், ஹகீம் பின் ஹிஸாமின் தாய் பாக்தே பிந்த் சுஹைர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுது கஃபாவினுள் நுழைந்தார் மேலும் ஹகீமை கஃபாவினுள்ளே பிரசவித்தார் என கூறுகின்றார்.
சுபைர் பின் பகார்(மரணம்256) தன்னுடைய நூலான ஜம்ஹிஸதுந் நஸபில் ஹகீம் அவர்கள் கஃபாவில் பிறந்ததாக அறிவித்துள்ளார்.
அபூ ஜஃபர் முகம்மது பின் ஹபீப் (மரணம்279) அவர்களும் இவ்வறிவிப்பினை பதிவுசெய்துள்ளார்.
பாகிஹி அபூ அப்தில்லாஹ் முகம்மது பின் இஸ்ஹாக் (மரணம்275) அவர்கள் உம்மு காலிதின் வழியாக அறிவிக்கும் செய்தி என்னவெனில் கஃபாவினுள் முதன் முதலாவதாக பிறந்தவர் ஹகீம் பின் ஹிஸாம் ஆவார்.அதே போல் பனீஹாஷீம்களில் முதன் முதலாவதாக கஃபாவினுள் பிறந்தவர் அலீ பின் அபீதாலிப் ஆவார் என்பதாகும்.
அதேபோல் ஹாகிம் நைஷாபூரி(மரணம்405) தன்னுடைய முஸ்தத்ரகில் இரு இடங்களில் ஹகீம் பின் ஹிஸாம் கஃபாவினுள் பிறந்ததினை சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் இவ்வறிவிப்பினை அறிவிக்கும் யாவரும் இதனை மேற்கூறிய நபர்களிடமிருந்த அறிவிக்கின்றார்கள்ளூ அதிலும் குறிப்பாக ஹாகிம் நைஷாபூரியின் அறிவிப்பினையே அதிகமானோர் தங்களது நூற்களில் பதிவுசெய்துள்ளனர்.
இவ்விரு கூற்றுக்கும் விடையளிக்கும் பொழுது…..
முதலாவதாகளூ இமாம் அலீ(அலை) அவர்கள் கஃபாவினுள் பிறந்துள்ளார்கள்.அதேபோல் அவருக்கு முன்னரோ அல்லது பின்னரோ வேறுயாரும் கஃபாவினுள் பிறந்துள்ளார்களா? என்ற விடயங்களாகும். இதில் இமாம் அலீ(அலை) அவர்கள் கஃபாவினுள் பிறந்தது பற்றி வந்துள்ள முதவாதிரான அறிவிப்புக்களை இப்னு அபில் ஹதீத் மற்றும் பழ்ல் பின் ரூஸ்பஹான் பார்க்கவில்லை.அதேபோல் அவ்விருவரும் கற்பனையில் பேசுவதுபோல் உள்ளது அவர்களின் கூற்றுக்கள்.
ஹாகிம் நைஷாபூரி ,ஹகீமின் பிறப்பினை முஸ்அப் பின் அப்துல்லாஹ் மூலம் அறிவித்துவிட்டு அதைத்தொடர்ந்து கூறும் பொழுது முஸ்அப் தன்னுடைய அறிவிப்பின் இறுதிப்பகுதியில் பிழைவிட்டுவிட்டதாக கூறுகின்றார்.ஏனெனில், பாத்திமா பிந்த் அஸத் ,அமீருல் மூஃமினீன் அலீ பின் அபீதாலிபினை கஃபாவினுள் பிரசவித்தார் என்று முதவாதிரான ஹதீஸ்கள் உள்ளன என்று கூறுகின்றார்.
இரண்டாவதாகளூ ஹகீம் பின் ஹிஸாம் கஃபாவினுள் பிறந்ததாக அறிவிக்கப்படும் அறிவிப்பு பலவீனமானதாகும்.ஏனெனில் அஸ்ரக்குடைய அறிவிப்பாளர்கள் வரிசையில் அப்துல் அஸீஸ் பின் இம்றான் என்பவர் உள்ளார்.இவர் பற்றி யஹ்யா பின் முயீன் கூறும் பொழுது ‘நம்பத்தகுந்தவர் அல்ல, அவர் ஓர் கவிஞர் மாத்திரமே.’ என்றும் புகாரி , அவர் பற்றி குறிப்பிடும் பொழுது ‘அவருடைய அறிவிப்புக்கள் பதிவுசெய்யப்படமாட்டாது மேலும் அவருடைய அறிவிப்புக்கள் பொருத்தமற்றது’ என்றுள்ளார்கள்.
ஆனால், சுபைர் பின் பகார் , தன்னுடைய பதிவினை முஸ்அப் பின் உதுமான் பின் முஸ்அப் பின் உர்வா பின் சுபைர் பின் அவாம் மூலம் அறிவிப்பு செய்துள்ளார்.
முஸ்அப் பின் உதுமான் அறியப்பட்ட ஒருவரல்லளூ அத்தோடு ஹகீமுடைய பிறப்பு இஸ்லாத்திற்க பல வருடங்களுக்கு முற்பட்டதாகும்.சிலரின் கூற்றின் பிரகாரம் இஸ்லாத்திற்கு அறுபது வருடங்கள் முன்னராகும்.அவ்வாரெனில் அவருடைய அறிவிப்பு முர்ஸலாகும். ஏனெனில், அவருக்கும் இச்சம்பவத்திற்கும்250 வருடங்கள் இடைவெளியுள்ளது.யார் அறிவார் இது பனீ உமையாக்களினால் கட்டப்பட்ட அறிவிப்புக்களாகவும் இருக்கலாம்.ஏனெனில், இவ்வறிவிப்பினை அறிவிக்கும் முஸ்அப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இமாம் அலீ(அலை) அவர்களின் வழியிலிருந்து மாறுபட்டுசென்றவர்கள் ஆவார்கள்.
அதேபோல் இப்னு ஹபீப் ,அல்-முஹ்பரில் அறிவிக்கும் அறிவிப்பும் முர்ஸலாகும். ஏனெனில், அவருக்கும் இச்சம்பவத்திற்கும் 340 வருடங்கள் இடைவெளி உள்ளது.
ஆனால், பாகிஹி அக்பாருல் மக்காவில் அறிவிக்கும் அறிவிப்பில் முதலாவது அறிவிப்பாளர்வரிசை முர்ஸலாகும்.அவரது இரண்டாவது அறிவிப்பாளர்கள் வரிசை இவ்வாறாகும்ளூ
ابو عبد الله محمد اسحاق بن العباس الفاكهي حدثنا احمد بن حميد عن الاصمعي عن ابي الزناد عن ابراهيم بن عقبة قال سمعت ام خالد بنت خالد بن سعيد بن العاص ……..
இந்த அறிவிப்பில் நாம் பல விடயங்களை கவணிக்க வேண்டியுள்ளது:
1.அஸ்மஈ என்பருடைய பெயர் அப்துல் மலிக் பின் கரீப் ஆகும். அவர் அறபு இலக்கியத்தில் பிரபல்யமானவராவார்.ஆனால் அவருடைய அறிவிப்பினை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதில் கருத்துவேறுபாடுகள் உள்ளன.சிலர் அவரை நம்பத்தகுந்தவர் என்றும் சிலர் அவரை உதாரணமாக அஸ்தி அவரை பலவீனமானவர் என்றும் அபூ ஷைய்த் அன்ஸாரி அவரை பெய்யன் என்றும் குறிப்பிடுகின்றார்.
2.அபூஸ் ஸினாத் அப்துல்லாஹ் பின் தக்வான்(மரணம்130), இவரை அதிகமான ஹதீஸ்கலை அறிவிப்பாளர்களை ஆய்வுசெய்யும் வல்லுனர்கள் நம்பத்தகுந்தவர் என்று கூறுகின்றனர். ஆனால், ரபீஆ அவரை நம்பத்தகுந்தவர் இல்லை என்கின்றார். அத்தோடு அவர் பனீஉமையாக்களுக்காக வேளைசெய்தவர் என்றும் தன்னுடைய இறுதிமூச்சுவரை அவர்களுக்காகவே வேளைசெய்தவர் என்பதற்காகவும் மாலிக் பின் அனஸ் அவரை ஏற்றுக்கொள்வதில்லை.
3.இப்றாஹீம் பின் உக்பா, இப்னு அய்யாஸ் அஸதி மவ்லா ஆல சுபைர் ஆக இருப்பின் நம்பத்தகுந்தவராவார். ஆனால், அவர் பற்றி கூறும்பொழுது அவர் அபூஸினாதிடமிருந்தே ஹதீஸ் அறிவிப்பவர் என்று வந்துள்ளது.ஆனால் இங்கு மாற்றமாக உள்ளது.
எனவே, இப்றாஹீம் பின் உக்பா அர்ராஸிபி அபூ ரஸ்ஸாமாக இருக்கலாம்.அவர் நம்பத்தகுந்தவரல்ல.
4.உம்மு காலித் ,அவருடைய பெயர் அமா ஆகும்.அவர் சுபைர் பின் அவாமின் மனைவியாவார்.தன்னுடைய இளமைப் பருவத்தில் தன் தந்தையோடு நபியவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவராவார்.ஆனால் ,நம்பத்தகுந்தவரல்ல.ஏனெனில் , அவர் ஹகீமின் பிறப்பினை யார் மூலமும் அல்லாமல் நேரடியாக அறிவிக்கின்றார். நாம் மேலே கூறியது போன்று ஹகீமின் பிறப்பு இஸ்லாத்திற்கு அறுபது வருடங்களுக்கு முன்பதாகும். எனவே, இந்த அறிவிப்பும் முர்ஸலாகும்.ஆனால், இமாம் அலீ(அலை) அவர்கள் மாத்திரமே கஃபாவினுள் பிறந்தார்கள் என்று அதிகமான அறிஞர்கள் அறிவிக்கின்றார்கள்.
முஸ்தத்ரகில் ஹாகிம் அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பும் முர்ஸலாகும்.ஏனெனில், ஹாகிம் அந்த அறிவிப்பினை இரு நபர்களினூடாக அலீ பின் அதாம் ஆமிரி (மரணம்228) மூலம் அறிவிக்கின்றார்.அவருக்கும் ஹகீமின் பிறப்புக்கும் 290 வருடங்கள் இடைவெளி உள்ளது.
அதேபோல் ஹாகிம் ,தன்னுடைய இரண்டாவது அறிவிப்பையும் இரு நபர்களினூடாக முஸ்அப் பின் அப்துல்லாஹ்(மரணம்236) மூலம் அறிவிக்கின்றார்.முஸ்அபிற்கும் ஹகீமின் பிறப்பிற்கும் 300 வருடங்களை விட அதிகமான இடைவெளியுள்ளது.எனவே, இவ்வறிவிப்பும் முர்ஸலாகும்.
இவ்வனைத்தினையும் விட முக்கியமானது என்னவென்றால் ஹாகிம் அவர்களின் அறிவிப்பு அவரின் கூற்றுக்கே முரணாக உள்ளது.அதாவது ஹாபிழ் கன்ஜி ஷாபிஈ (மரணம் 658) ஹாகீம் அவர்களிடமிருந்து ஓர் விடயத்தினை பதிவுசெய்துள்ளார்.அது என்னவெனில் ‘அமீருல் மூஃமினீன் அலீ பின் அபீதாலிப் அவர்கள் யானைவருடம் இடம்பெற்று முப்பது ஆண்டுகளுக்குப் பின், ரஜப் மாதம் பிறை 13, வெள்ளிக்கிழமை புனிதமிகு கஃபாவினுள் பிறந்தார்கள்.அவருக்கு முன்போ அல்லது பின்போ எந்தவோர் குழந்தையும் கஃபாவினுள் பிறக்கவில்லை.’
ஹகீம் பின் ஹிஸாமின் பிறப்பினை குறிப்பிட்டு வந்துள்ள ஏனைய நூற்கள் உதாரணமாக இப்னு அப்துல் பிர் ,இப்னு ஜௌஸி ,இப்னு அதீர் ,அல்-மஷீ ,இப்னு கதீர் ,இப்னு ஹஜர் ……இவ்வனைவரும் ஹாகிம் அவர்களிடமிருந்து இப்னு பகார் வழியாகவே இவ்வறிவிப்பினை பதிவுசெய்துள்ளனர்.
எனவே, இவ்வனைத்து அறிவிப்புக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செய்திகளல்ல.அதிலும் கஃபாவில் இமாம் அலீ(அலை) அவர்களைத் தவிர்ந்து வேறு யாரும் பிறக்கவில்லை என துறைசார் அறிஞர்களின் தெளிவான கருத்துக்கள் உள்ள பொழுது இவ்வாறான செய்திகளை எந்தவோர் அறிவாளியும் ஏற்றுக்கொள்ளவே மாட்டான்.
கஃபாவில் பிறந்தது இமாம் அலீ(அலை) அவர்கள் மாத்திரமே…
ஹகீம் பின் ஹிஸாம் கஃபாவில் பிறக்கவில்லை என்பதற்கு மிகவும் உறுதியான சான்று என்னவெனில் அதிகமான அறிஞர்கள், கஃபாவினுள் பிறந்தது இமாம் அலீ(அலை) அவர்கள் மாத்திரமே என்று கூறுவதாகும்.
1.செய்யித் ரழி(மரணம்406): ‘நாம் இமாம் அலீ(அலை)அவர்களைத் தவிர்ந்து வேறு எந்தக்குழந்தையும் கஃபாவினுள் பிறந்ததாக அறியவில்லை’ .
2.செய்க் முபீத்(மரணம்413): ‘அமீருல் மூஃமினீன் அலீ பின் அபீதாலிப் அவர்கள் யானைவருடம் இடம்பெற்று முப்பது ஆண்டுகளுக்குப் பின், ரஜப் மாதம் பிறை 13, வெள்ளிக்கிழமை புனிதமிகு கஃபாவினுள் பிறந்தார்கள்.அவருக்கு முன்போ அல்லது பின்போ எந்தவோர் குழந்தையும் கஃபாவினுள் பிறக்கவில்லை.இது இறைவனினால் அவரின் அந்தஸ்தினை காட்டுவதற்காக அவருக்கு வழங்கப்பட்ட ஒரு விடயமாகும்.’
3.செய்யித் முர்தழா(மரணம்436): ‘அலீ (அலை) அவர்களின் இந்த சிறப்புக்கு நிகராக யாருமில்லை.’
4.இப்னு சூபி அலீ பின் அபீ கனாயிம்(மரணம்441க்கும் பின்) தன்னுடைய நூலான அல்-மஜ்தியில் ‘இமாம் அலீ(அலை)அவர்களுக்கு முன்னர் யாரும் கஃபாவினுள் பிறக்கவில்லை’ என்றுள்ளார்.
5.செய்க் தபரஸி(மரணம்548): ‘இமாம் அலீ(அலை) அவர்களைத் தவிர வேறு யாரும் கஃபாவினுள் பிறக்கவில்லை.இது இறைவனினால் அவருக்கு மாத்திரம் வழங்கிய ஓர் சிறப்பாகும்.’
6.இப்னு பத்ரீக் ஹில்லி(மரணம்600) இவ்விடயத்தினையே உறுதிப்படுத்தியுள்ளார்.
7.வரலாற்றாசிரியர் மஸ்ஊதி அவர்கள் இது பற்றி கூறும் பொழுது ‘இமாம் அலீ அவர்களுக்கு முன்போ அல்லது பின்போ வேறு யாரும் கஃபாவினுள் பிறக்கவில்லை’என்றுள்ளார்.
8.ஹாகிம் நைஷாபூரி(மரணம்405).
9.பஸ்தி மூஃதஸலி(மரணம்420).
10.கன்ஜி ஷாபிஈ(மரணம்658).
11.ஜூவைனி ஷாபிஈ(மரணம்720) பராயிதுஸ் ஸம்தீனில் ‘இமாம் அலீ அவரிகளைத் தவிர வேறு யாரும் கஃபாவினுள் பிறக்கவில்லை’ என்று பதிவுசெய்துள்ளார்.
12.இப்னு ஸபாக் மாலிகி(மரணம்855) புஸூஸூல் முஹிமாவில் கஃபாவில் அலீயினைத் தவிர வேறு யாரும் பிறக்கவில்லை,இச்சிறப்பு அலீக்கு மாத்திரமே உரிய தனிப்பட்ட ஓர் சிறப்பாகும் என்றுள்ளார்.
13.ஸபூரி ஷாபிஈ(மரணம்894)நஸ்கதுல் மஜாலிஸ் பாகம்2, பக்கம்204 இல் இச்சிறப்பினை இமாம் அலீ(அலை) அவர்களுக்கு மாத்திரமே உரியது என பதிவுசெய்துள்ளார்.
14.இப்னு காவந்த் ஷாஹ்(மரணம்903) ரௌலதுஸ் ஸபாவில் இச்சிறப்பு முதற்படைப்பிலிருந்து இறுதிப்படைப்பு வரை இமாம் அலீயைத் தவிர வேறு யாருக்கும் உரித்ததல்ல என்றுள்ளார்.
15.வலியுல்லாஹ் தஹ்லவி ஹனபீ(மரணம்1176)இஸாலத்துல் குலபாவில் இந்த அறிவிப்பினை தவாதுர் என்று பதிவுசெய்துவிட்டு இமாம் அலீயைத் தவிர இதற்கு முன்போ பின்போ யாரும் பிறக்கவில்லை என கூறிவுள்ளார்.
16.மஹ்மூத் ஆலூஸி (மரணம்1342) இமாம் அலீ(அலை) அவர்கள் கஃபாவினுள் பிறந்தது உலகறிந்த விடயம் என்று கூறிவிட்டு வேறு யாரும் அங்கு பிறந்ததாக பிரபல்யமில்லை என்றும் இமாம் அலீ அவர்களின் பிறப்பே மிகவும் பிரபல்யமானது என்றும் வேறு யாரும் பிறந்துள்ளார்களா என்பதில் ஒருமித்த கருத்து இல்லை என்றும் தன்னுடைய ஷரஹூல் கரீதா ஷரஹூல் கஸீததுல் ஐனிய்யாவின் 15ஆம் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
இமாம் அலீ(அலை) அவர்களின் பிறப்பின் அதிசயம்
இங்கு நாம் கவணிக்க வேண்டிய மிக முக்கியமான ஓர் விடயம் என்னவெனில் இமாம் அலீ(அலை)அவர்களின் பிறப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதாகும். நாம் ஹகீம் பின் ஹிஸாமின் பிறப்பு கஃபாவினுள் இடம்பெற்றது என்பதை ஓர் கர்பனைக்காக ஏற்றுக்கொள்வோமாயின் அவரின் தாய் கஃபாவினுள் இருக்கும் பொழுது எதிர்பாராமல் நடைபெற்ற ஓர் நிகழ்வாகவே அவரின் பிறப்பு அமைகின்றது.ஆனால், இமாம் அலீ(அலை) அவர்களின் பிறப்பு அவ்வாறல்ல.இமாம் அலீ(அலை) அவர்களின் பிறப்பு இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பாகும்.அதே போன்று இமாம் அவர்களின் பிறப்பு பல விடயங்களினால் அவருடைய சிறப்பினை எமக்கு எடுத்துக் கூறுகின்றது.
1.பாத்திமா பிந்த் அஸத் அவர்கள் கஃபாவிற்கு வெளியிலிருந்தார்கள்.அவருக்கு பிரசவவலி வந்ததுமே அவர்கள் இறைவனிடம் அதனை இலகுபடுத்தித் தருமாறு பிராத்தித்தார்கள் என்று ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
2.அவரின் துஆவின் பிரதிபலனே கஃபாவின் சுவர் பிளந்து கொண்டு அவர் அதன் வழியால் உள்ளே நுழைந்ததும் அது மீண்டும் மூடிக்கொண்டது.
3.இறை அத்தாட்சி என்னவெனில் ,கஃபாவின் கதவை வெளியிலிருந்தோர் திறக்க முயன்ற பொழுது அது தோல்வியிலேயே முடிந்தது.
4.மூன்று நாற்கள் இமாமின் தாயவர்கள் இறையில்லத்தினுள் இறைவனின் விருந்தாளியாக காணப்பட்டார்கள். அத்தினங்களில் அவர்கள் எவ்வாறு உபசரிக்கப்பட்டார்கள் என்பது பற்றி அவர்கள் மாத்திரமே அறிவார்கள்.
5.மூன்று தினங்களின் பின் ,மீண்டும் கஃபாவின் சுவர் பிளந்து கொண்டது .பாத்திமா பிந்த் அஸத் அவர்கள் தனது பிள்ளையோடு அதிலிருந்து வெளியில் வந்தார்கள்.
6.அக்குழந்தைக்கு அலீ என்ற பெயர் இறைவனால் சூட்டப்பட்டதாகும்.
இதுதான் இமாம் அலீ(அலை) அவர்களின் பிறப்பின் மகிமை.அறிஞர்கள் எல்லாம் இது இமாம் அலீக்கு மாத்திரம் உரிய சிறப்புஎன்று கூற இதுவே காரணமாகும்.இச்சிறப்பே பாத்திமா பிந்த் அஸத் அவர்கள் அவருக்கு முன் வாழ்ந்த பெண்களைவிட சிறப்பானர் என்பதற்கு காரணமாக உள்ளது.
இப்னு ஷஹ்ர் ஆஸூப் கூறுகின்ற பொழுது ‘தூய்மையான இடத்தில் தூய்மையான வம்சத்திலிருந்து தூய்மையான குழந்தை பிறந்தது.இந்த சிறப்பு வேறு யாருக்குண்டு?சிறப்புக்குறிய இடம் ஹரம், ஹரத்தின் சிறப்புக்குறிய மையம் தொழுமிடம்,தொழுமிடத்தில் சிறப்பான பகுதி கஃபாவாகும்.அந்த கஃபாவினுள் பிறந்த ஒரே ஒரு குழந்தை அலீ(அலை) ஆகும்.அக்குழந்தை மிகவும் சங்கைமிகு இடத்தில் சங்கைமிகு நாளில் சங்கைமிகு மாதத்தில் பிறந்ததாகும்.’
அனேகமான அறிஞர்கள் இச்சிறப்பினை இறைவன் இமாம் அலீ(அலை) அவர்களுக்கு வழங்கி அவர்களின் அந்தஸ்தினை பிறருக்கு தெரியப்படுத்தியுள்ளான் என்று கூறியுள்ளனர்.
ஹிஸ்ரி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞரான இப்னு ஜூபைர் அவர்கள் இமாம் அலீ(அலை) அவர்களுக்கும் ஹஸ்ரத் யூனுஸ்(அலை) அவர்களுக்குமிடையிலான ஒற்றுமைகளைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்: ‘ஹஸ்ரத் யூனுஸ் (அலை) அவர்கள் இறைவனை யாரும் காணமுடியாத இடத்திலிருந்து(மீனின் வயிற்றில்) வணங்கினார்கள் , அவ்வாறு எந்தவோர் மனிதனும் இறைவனை வணங்கவில்லை.அதேபோல் இமாம் அலீ(அலை) அவர்களும் யாரும் அவருக்கு முன்போ அல்லது பின்போ பிறந்திடாத இடத்தில் அதாவது கஃபாவில் பிறந்தார்கள்.’
ஹகீஸ்கலை அறிஞர் நூரி(ரஹ்)அவர்கள் குறிப்பிடும்பொழுது ‘இமாம் அலீ(அலை) கஃபாவினுள் பிறந்தது அவர்களின் தனிப்பட்ட ஓர்சிறப்பாகும். அது எந்த நபிக்கோ அல்லது நபிகளின் பிரதிநிதிகளுக்கோ இல்லவே இல்லை.’
அதேபோன்று அஹ்லுஸ்சுன்னா அறிஞர்களான ஹாகிம் நைஷாபூரி(கிபாயதுத்தாலிப்:406), இப்னு ஸப்பாக் மாலிகி(அல்-புஸூலுல் முஹிம்மா),ஸபூரி ஷாபிஈ(நஸ்கதுல் மஜாலிஸ்), இப்னு காவந்த் ஷாஹ் (ரௌலதுஸ்ஸபா), அல்லாமா மஹ்மூத் பின் முகம்மது செய்கானி காதிரி ஷாபிஈ(அஸ்-ஸிராத்துஸ் ஸிவா) , ஹாபிழ் பத்கஸானி (மிப்தாகுந்நஜா), லக்குனவி ஹனபி(வஸிலதுந்நஜாத்), ஆலுஸி ( ஷரஹூல் கரீதா)……அனைவரும் இமாம் அலீ(அலை)அவரகள் கஃபாவில் பிறந்தது மிகப்பெரும் சிறப்பு என்கின்றனர்.
இமாம் அலீ(அலை) அவர்களும் இதனை தன்னுடைய சிறப்பாக கூறியுள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது: ‘என் தாய் பாத்திமா பிந்த் அஸத் அவர்களுக்கு பிரசவவலி ஏற்பட்டபொழுது அவர் ஹரமில் இருந்தார்.அப்பொழுது கஃபாவின் சுவர் பிளந்து கொண்டது.அவர் அங்கிருந்த ஓர் அழைகுரலினை செவியுற்றார்.அது அவர்களை கஃபாவினுள் நுழையும் படி ஏவியது. அவரும் நுழைந்தார்.நான் கஃபாவினுள் பிறந்தேன்.என்னைத் தவிர இச்சிறப்பு வேறு யாருக்குமே கிடையாது.’ இமாம் ஹஸன்(அலை) அவர்களும் தனது தந்தை அவர்கள் ஷஹாதத் அடைந்த இரவில் ஆற்றிய உரையில் ‘இன்று எம்மைவிட்டு பிரிந்தவர் கஃபாவினுள் பிறந்தவராவார்.அவரைத் தவிர வேறு யாரும் அதனுள் பிறக்கவில்லை.’
இவ்வாறு பல அதிசயங்களையும் சிறப்புக்களையும் கொண்டுள்ள இமாம் அலீ(அலை) அவர்களின் பிறப்பினை மூடிமறைப்பதற்கு ஓர் சமூகம் முயற்சிப்பதைக் காணமுடிகின்றது. ஷீஆக்கள் கூறும் கூற்றை ஏற்க மறுத்தாலும் சுன்னிக்கள் போற்றும் பெரும் பெரும் ஸஹாபாக்கள் , அறிஞர்களின் கருத்துக்களையுமல்லவா மூடிமறைக்க முனைகின்றனர்.இது எவ்வாறென்றால் பூனை கண்களை மூடிக்கொண்டு உலகம் இருளாடைந்து விட்டது என்று கூறுவது போலாகும்.இறைவன் ,அவனது தூதரையும் அவனது இமாம்களையும் பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற்ற கூட்டத்தில் எம்மை ஆக்கி அருள்புரிவானாக!
ஆமீன்! யாரப்பல் ஆலமீன்.
உசாத்துணைகள்
அக்பாருல் மக்கா.
அத்துர்ருந்நழீம் : 234.
அத்துர்ருந்நழீம் : 225 , மனாகிபுல் இமாம் அலீ பின் அபீதாலிப் (அலை) : 58.
கஷ்புல் யகீன் , இர்ஷாதுல் குலுப் , கஷ்புல் கிம்மா , பிஹாருல் அன்வார் பாகம் 35.
அல்-உம்தா:27, மனாகிபுல் இமாம் அலீ இப்னு அபீதாலிப் : இப்னு மஃகாஸிலி பக்கம்58.
கஷ்புல் கிம்மா : பாகம்1 பக்கம்60.
மிஸ்பாஹூல் அன்வார், மதீனதுல் மஃஆஜிஸ்.
சூறா மர்யம்: 29,30.
ஷரஹ் நஹ்ஜூல் பலாகா:பாகம் 4,பக்கம்115, பிகாருல் அன்வார்:பாகம்29,பக்கம்328.
மனாகிபுல் ஆல முகம்மது:பாகம்2,பக்கம்174,ஆமாலி தூஷி:பாகம்2,பக்கம்319,
பிகாருல் அன்வார்:பாகம்35,பக்கம்18,37,38,217.
பிகாருல் அன்வார்: பாகம்39,பக்கம்48, மனாகிபுல் ஆல முகம்மது : பாகம்3 , பக்கம்38.
தீவான் செய்யித் ஹூமைரி:155.
மனாகிப் ஆல முகம்மது : பாகம்2, பக்கம்24.
அல்-கதீர்: பாகம்5,பக்கம்653.
அல்-இஃலாம்: பாகம்4,பக்கம்297.
பிகாருல் அன்வார்: பாகம்35.பக்கம்7-23.
ஜலாவுல் உயூன் வ காயதுல் மராம்.
லூஃலூஃ வ மர்ஜான்: 163.
அல்-முஸ்தத்ரக் : பாகம்3,பக்கம்550.
ரவ்லதுஸ் ஸபா.
இஸாலதுல் கபா அன் கிலாபதில் குலபா: பாகம்2,பக்கம்2512.
ஷரகுல் கரீதா பீ ஷரகுல் கஸீதாதுல் ஐனிய்யா : பக்15.
கதீர் அல்லாமா அமீனி : பாகம்6 .
இவர் சுன்னியா அல்லது இல்லையா என்பதில் கருத்துவேறுபாடுவுள்ளது.
அல்-அன்வாருல் நூஃமானிய்யா:பாகம்1,பக்கம்370.
அல்-கராயிஜ் வல் ஜராயிஜ்: பாகம்2,பக்கம்888.
மனாகிப் ஆல அபீதாலிப்: பாகம்2,பக்கம்22.
ரௌலதுல் வாயிலீன்: பாகம்1,பக்கம்200.
ஆமாலி ஸதூக்.
மிஸ்பாஹூல் முதஹஜ்ஜித்:819.
ஆமாலி தூஸி:980.
உயூனுல் முஃஜிஸாத்.
மனாகிப் ஆல அபீ தாலிப்: பாகம்2,பக்கம்21.
மனாகிப் ஆல அபீ தாலி;ப்: பாகம்2,பக்கம்22.
இலலுஷ் ஷராயீஃ.
ரௌலதுல் வாயிலீன்:பாகம்1,பக்கம்200.
துஹ்தீபுத் தஹ்தீப்: பாகம்2,பக்கம்7.
ஷரஹ் நஹ்ஜூல்பலாகா:பாகம்1,பக்கம்14.
இப்தாலுல் நஹ்ஜூல் ஹக்.
அக்பாருல் மக்கா : பாகம்1, பக்கம்174.
ஜம்ஹிஸதுந் நஸப் : 353.
அல்-முக்பிர்: 176.
அக்பாருல் மக்கா: பாகம்3, பக்கம்226.
அல்-முஸ்தத்ரக்:பாகம்3,பக்கம்549.
அல்-முஸ்தத்ரக்: பாகம்3,பக்கம்550.
அல்-ஜரஹ் வத் தஃதீல்:பாகம்2,பக்கம்390.
அதாவது அறிவிப்பாளர்களின் வரிசையில் ஓர் சில அறிவிப்பாளர்கள் அல்லது அனைத்து அறிவிப்பாளர்களும் துண்டிக்கப்பட்டிருக்கும் அறிவிப்புக்கள்.
அக்பாருல் மக்கா:பாகம்3,பக்கம்236.
மீஸாகுல் இஃதிதால்: பாகம்2,பக்கம்662.
மீஸானுல் இஃதிதால்: பாகம்2,பக்கம்418.
தஹ்தீபுத் தஹ்தீப்: பாகம்1,பக்கம்165.
தஹ்தீபுத் தஹ்தீப்: பாகம்1,பக்கம்165
கிபாயத்துத் தாலிப் : 407
அல்-இஸ்தியாப்:பாகம்1,பக்கம்320.
ஷிபத்துஷ் ஷப்வா: பாகம்1,பக்கம்725.
உஸ்துல் காபா: பாகம்2,பக்கம்40.
தஹ்தீபுல் கமால்: பாகம்13,பக்கம்363.
அல்-பிதாயா வந்-நிகாயா: பாகம்8,பக்கம்68.
அல்-இஸாபா :பாகம்1,பக்கம்349.
கஸாயிஸூல் அஈம்மா.
அல்-இர்ஷாத்:7.
அல்-கஸீததுல் மத்ஹபீய்யா:119.
இஃலாமுல் வரா: 153.
அல்-உம்தா:24.
இஸ்பாதுல் வஸிய்யா.
கிபாயத்துத் தாலிப்:406.
அல்-மராதிப்:59,60.
கிபாயத்துத் தாலிப்:406.
மனாகிபுல் ஆல முகம்மது:பாகம்2,பக்கம் 23.
கஷ்புல் கிம்மா:பாகம்1,பக்கம்60.
நஹ்ஜூல் ஈமான்: 660.
அல்-லுஃலு வல் மர்ஜான்: 163.
அல்-அன்வாருந் நுஃமானீய்யா: பாகம்1,பக்கம்370.
அல்-கராயிஜ் வல் ஜராயிஜ் ரவான்தி: பாகம்2,பக்கம் 888.