ஷீஆ வைரஸ் (முகநூல் மற்றும் இணையத்தளம்)
எமது பதில்
இதனோடு இணைக்கப்பட்டுள்ள கீழ்வரும் விளம்பரம் தொடர்பாக…
இது மட்டுமல்ல, இவ்வாறான எத்தனையோ விளம்பரங்கள் தமிழ் மொழி உட்பட பல்வேறு மொழிகளிலும், பல்வேறு நாடுகளிலும் மேற்கொண்டு வருவதனூடாக இஸ்லாத்தின் எதிரிகள் ஷீஆ-சுன்னி ஒற்றுமையை சீர்குலைத்து வருகின்றனர். ஷீஆ முஸ்லிம்களோடு ஒன்றாக வாழக்கூடிய சுன்னி முஸ்லிம்கள், ஷீஆக்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர். ஆனால், தன்னை விளம்பரப் படுத்திக்கொள்ளாது தானும், தன்பாடும் என்று வாழக்கூடிய ஷீஆ முஸ்லிம்கள் வாழும் இடம்களில் இவ்வாறான பழிப்புரைகளும், தூற்றுதல்களும், அவப்பெயர் கற்பித்தல்களும் நடைபெற்றுவருவதைக் காணமுடிகிறது.
தமிழ்பேசுகின்ற உலகில் குறிப்பாக, தமிழ் நாட்டிலும், ஸ்ரீலங்காவிலும் தம்மை சமூகமயப்படுத்திக் கொண்ட இரு ஷீஆ முஸ்லிம் சமூகங்கள் காணப்படுகின்றன. அவை, தமிழ் நாடு ஷீஆ இஸ்லாமிய ஜமாஅத் மற்றும் ஸ்ரீலங்கா அஹ்லுல்பைத் ஜமாஅத். இவ்விரண்டும் தமது பணிகளை எவ்வித ஒழிவுமறைவுமின்றி மேற்கொண்டு வரக்கூடியவை. ஷீஆக்கள் பற்றிய உண்மையான தகவல்களைப் பெறவிரும்பும் எந்தவொருவரும் இவ்விரு ஜமாஅத்துகளையும் நாடி பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறான விளம்பரங்கள், போஸ்டர்கள், புகைப்படங்களின் மூலமாக சாதிக்க முடிந்தது என்ன? உயிருக்கும், உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்துவதையே அன்றி வேறு என்ன செய்ய முடிந்துள்ளது. கருத்தை கருத்தால் வென்றெடுத்தல் என்ற போலிக்கோசங்களை எழுப்பக் கூடியோரே, ஷீஆ முஸ்லிம்களின் விடயத்தில் இன்று தீவிரவாத, நாசகாரச் செயல்களில் ஈடுபடுவதைக் காணமுடிகிறது.
எமது கேள்வி 01: தமிழ் பேசும் உலகில், ஷீஆக்களை குறைகூறுவோர் ஏன் இவ்விரு (தமிழ் நாடு ஷீஆ இஸ்லாமிய ஜமாஅத் மற்றும் ஸ்ரீலங்கா அஹ்லுல்பைத் ஜமாஅத்) ஜமாஅத்துகளின் குறைகளையோ, தவறுகளையோ இன்னும் சுட்டிக்காட்டவில்லை?. சுன்னி ஜமாஅத்துகளில் ஏதாவது ஒன்று குற்றம் செய்தால், ஒட்டுமொட்ட சுன்னி முஸ்லிம்களையும் ஷீஆக்கள் எங்காவது குற்றம் சுமத்தியுள்ளார்களா?. ஆனால், ஏன் எங்காவது, ஏதாவது ஷீஆக்குழுவொன்று செய்கின்றதை ஒட்டுமொத்த ஷீஆ முஸ்லிம் சமூகத்தின் மீதும் சுன்னிகளில் சிலர், குற்றம் சுமத்திவிடுகின்றனர்…! சிந்திக்கமாட்டீரா ஷீஆவைரஸ் இணையத்தள நண்பரே…!! நீங்களும் இஸ்லாமிய விரோதிகளின் கைகூலியாக செயற்படும் ஒருவரோ…!!!
ஷீஆவைரஸின் வாதம் 01: ஷீஆ மதத்தவர்கள் அலி (ரழி) அவர்களை ”இமாம் மஃசூம்’ (பாவங்கள், தவறுகளை விட்டும் பாதுகாக்கப் பட்டவர், பாவங்கள் தவறுகள் அறவே நிகழ முடியாதவர்) என நம்புகின்றனர். அதாவது நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் அந்தஸ்த்தை வழங்குகின்றனர்.
எமது பிரதிவாதம்: முதலில் ஒருவருடைய கொள்கை என்ன என்பதை, அவரேதான் சொல்ல வேண்டும். ஆனால், இங்கே விசித்திரமான விடயம் என்னவென்றால், ஷீஆக்களின் கொள்கைகள் என்னவென்பதை ஷீஆக்கள் அல்லாதோரே அதிகமாகப் பேசி வருகின்றனர். மேலும், இதுதான் ஷீஆ கொள்கைகள் என்று ஷீஆக்களிடம் இல்லாதபொல்லாத பல்வேறு விடயங்களையும் வலிந்துரைத்து, இட்டுக்கட்டிப் பாடுவதன் மூலம் சம்பாதித்து வருகின்றனர்.
சுன்னி முஸ்லிம்களின் நம்பிக்கைசார்ந்த விடயங்களைக் கூறுவதற்கு, தனியான அகீதா நூற்கள் உள்ளன. அவ்வாறுதான் ஷீஆ முஸ்லிம்களின் நம்பிக்கைசார்ந்த விடயங்களைக் கூறுவதற்கு, தனியான அகீதா நூற்கள் உள்ளன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஷீஆ முஸ்லிம்களின் அகீதா இதுதான் என்று இட்டுக்கட்டுவோர் எவரும், இதுவரையில் ஷீஆ முஸ்லிம்களின் அகீதா நூற்களை ஆதாரமாகக் காட்டியதே கிடையாது. அகீதாவை, அகீதா நூலிருந்துதான் எடுத்துக்காட்ட வேண்டுமே தவிர, பிக்ஹ் நூலிலோ அல்லது தப்ஸீர் நூலிலோ அல்லது வரலாற்று நூலிலோ இருந்தல்ல.
ஸஹீஹ் புகாரியில் வந்துள்ள ஏதோவொரு ஹதீஸை முன்வைத்து இதுதான் சுன்னிகளின் அகீதாவென்று எம்மால் கூறமுடியுமா? ஸஹீஹ் புகாரி, சுன்னிகளின் கிரந்தமாக இருக்கலாம். அதற்காக அந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதுதான் அவர்களது அகீதாவென்று எவ்வாறு கூறிவிடமுடியும்? முதலில் அந்த ஹதீஸை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ? இல்லையோ? என்றல்லாவ கவனிக்க வேண்டியிருக்கிறது.
இவ்வாறு எத்தனையோ விடயங்கள் உள்ளன. ஷீஆ முஸ்லிம்களுக்கு தனியான ஹதீஸ் கிரந்தங்கள் உண்டுதான். அதற்காக, அவற்றில் வருகின்ற அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று அர்த்தமா? அல்லது அவற்றில் வந்துள்ள அனைத்தும்தான் அவர்களுடைய கொள்கையாகிவிடுமா? இவ்வாறு சிந்திக்க வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன.
ஹஸரத் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள், பாவம் செய்யாத மஃஸும் என்பது உண்மைதான். அதற்காக, எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுடைய அந்தஸ்தில் இருக்கிறார் என்று அர்த்தம் கிடையாது. இதை விளங்கிக் கொள்வதற்கு, பின்வரும் உதாரணத்தை நன்றாகக் கவனியுங்கள்.
சுன்னிகளில் சிலர், குறிப்பாக வஹ்ஹாபிகள் பெருமானார் அவர்களை எங்களைப்போன்ற சாதாரணமான ஒருவர்தான் என்று கூறுவார்கள். அதற்காக, தங்களை பெருமானாரின் அந்தஸ்தில் வைத்துப் பார்ப்பதில்லை. அதாவது, தங்களை நபியாகவோ அல்லது ரஸுலாகவோ அவர்கள் கருதுவதில்லை. ஒப்பிடும் கோணத்தில் இவ்விடயம் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
அவ்வாறுதான் ஹஸரத் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாவம் செய்யாத மஃஸும் என்று நம்புவதால் அவரை நபியாகவோ அல்லது ரஸுலாகவோ அல்லது அதற்குரிய அந்தஸ்தில் இருப்பதாகவோ ஷீஆ முஸ்லிம்கள் கூறுவதில்லை. இது எந்தக்கோணத்தில் அமைந்துள்ளது என்பதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.
ஹஸரத் அலீ அவர்கள், எம்பெருமானார் அவர்களால் சிறுவயதிலிருந்தே வளர்க்கப்பட்டவர். எவ்வாறு நபித்துவத்திற்கு முன்னரும் கூட பெருமானார் அவர்கள் இறைவனுக்கு இணைவைக்கவில்லையோ, அவ்வாறுதான் ஹஸரத் அலீயையும் அவ்வாறான விடயங்களிலிருந்து விலகியவராகவே பயிற்றுவித்திருந்தார்கள். எனவே, தனது சொந்த பராமரிப்பில் இருந்த ஹஸரத் அலீயைப் போன்ற ஒருத்தரையாவது அறவே பாவம் செய்யாத ஒருவராக பெருமானாரால் பயிற்றுவிக்க முடியாமலா போயிருக்கும்? சிந்திக்க வேண்டாமா?
மேலும், இரத்தபந்தம், பால்குடி, திருமணம் ஆகிய முறைகளில் பல உறவுகளும், குடும்பங்களும் பெருமானாருக்கு இருந்தபோதிலும், அவர்களில் அல்லாஹு தஆலாவினால் பரிசுத்தப்படுத்தி வைக்கப்பட்ட ‘அஹ்லுல்பைத்’ என்ற பெருமானாரின் பரிசுத்த குடும்பத்தில் ஒருவராக இருப்பவர் ஹஸரத் இமாம் அலீ அவர்கள். இது சூறதுல் அஹ்ஸாப், 33வது வசனத்தில் இவ்வாறு வந்துள்ளது.
اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ۚ
அஹ்லுல்பைத்தினரே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடுவதையே அல்லாஹ் எப்போதும் நாடுகிறான்.
மேற்படி வசனம் இறக்கியருளப்பட்டதோடு சம்பந்தப்பட்ட ஹதீஸ்களில் அல்லாஹு தஆலாவினால் பரிசுத்தப்படுத்திவைக்கப்பட்ட அஹ்லுல்பைத்தினரில் ஒருவராக ஹஸரத் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஸஹீஹ் புகாரியில் பதிவாகியுள்ள கீழ்வரும் ஆதாரபூர்வமான ஹதீஸை கருத்திற்கொள்ளவும்.
மேலும், ஹஸரத் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்தஸ்து குறித்து ஷீஆ முஸ்லிம்கள் கூறுகின்ற விடயமானது மிகத்தெளிவானதாகும். பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுடைய உண்மையான பிரதிநிதி ஹஸரத் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களே. பெருமானாரின் மறைவிற்குப் பின்னர், ஹஸரத் இமாம் அலீ அவர்கள்தான் பிரதிநிதியாக இருக்கிறார்கள். இது ஹஸரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு, ஹஸரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வாறு பிரதிநிதியாக இருந்தார்களோ, அவ்வாறான ஒரு அந்தஸ்தில்தான் பெருமானாருக்கு, ஹஸரத் இமாம் அலீ அவர்கள் இருக்கிறார்கள் என்பது ஷீஆ முஸ்லிம்கள், பெருமானாரின் சுன்னாவிலிருந்து நம்புகின்ற ஒரு ஆதாரபூர்வமான நம்பிக்கையாகும். இது குறித்து வந்துள்ள கீழ்வரும் ஆதாரபூர்வமான ஹதீஸை கருத்திற்கொள்ளவும்.
மேற்படி ஹதீஸின்படி, ஹஸரத் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அந்தஸ்து தெளிவாக இருக்கிறது. அதேநேரம், ஒரு நபிக்குரிய அந்தஸ்தில் ஹஸரத் இமாம் அலீ அவர்கள் இல்லை என்பதும் மேற்படி ஹதீஸிலிருந்N தெளிவாகிறது. ஏனென்றால், பெருமானாருக்குப் பின்னர், எந்தவொரு நபியுமில்லை என்பது மேற்படி ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று. எனவே, நபியாகவோ அல்லது நபிக்குரிய அந்தஸ்திலோ ஹஸரத் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருக்கமாட்டார்கள். மாறாக, நபியின் பிரதிநிதி என்ற அந்தஸ்தில் இருக்கிறார்கள். இது ஆதாரபூர்வமான ஹதீஸின் மூலம் மிகத்தெளிவாகக் கூறப்பட்ட விடயமாகும்.
ஆனால், பெருமானாரின் மறைவிற்குப் பின்னர் கலீஃபாவாக வந்த எந்தவொரு நபருடைய விடயத்திலும், இவ்வாறு தெளிவாகக் குறிப்பிட்டு அமைந்த எந்தவொரு ஆதாரமும் கிடையாது, அதேநேரம் ஊகிப்பதற்கும், கற்பனை செய்வதற்கும் இடம்பாடானவை மட்டுமே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால்தான், மேற்படி ஹதீஸைப் புறக்கணிக்கும் வகையில், ஷுறாவின் மூலம் பிரதிநிதியைத் தெரிவு செய்வதையே இன்று அழுத்தமாக பேசி வருகின்றனர்.
எமது கேள்வி 02: ஹஸரத் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விடயத்தில் வந்துள்ள ஹதீஸ்களைப் புறக்கணிக்கின்றவர்கள் உண்மையில் ஷீஆ முஸ்லிம்களா? அல்லது நீங்களா? பதில் கூறுங்கள் ஷீஆவைரஸ் இணையத்தள நண்பரே…!
ஷீஆவைரஸின் வாதம் 02: அதே நேரம் அலி (ரழி) அவர்கள் தனது மகளார் ”உம்மு குல்தூம்’ (ஹசன், ஹுசைன் (ரழி) இருவரின் உடன் பிறந்த சகோதரி) அவர்களை ”உமர்’ (ரழி) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இதை ஷீஆ மத நூற்களே ஏற்றுக் கொண்டுள்ளன.
குறிப்பு: உமர் (ரழி) யை ஷீஆ காபிர்கள் காபிர் என்கின்றனர்.
எனவே ஷீஆ மதத்தினர் இரண்டில் ஒன்றுக்கு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர் :
1.அலி ரழி அவர்கள் மஃசூம் (பாவங்கள், தவறுகளை விட்டும் பாதுகாக்கப்பட்டவர், பாவங்கள் தவறுகள் அறவே நிகழ முடியாதவர்) அல்ல. காரணம் ஒரு காபிருக்கு தனது மகளாரைத் திருமணம் செய்து வைத்தது. இது ஷீஆ மத அடித்தளங்களை, அடிப்படைகளை தூள்தூளாக உடைக்கும் ஒரு விடயம்.
அது மட்டுமன்றி அலி ரழி தவிர்ந்த ஷீஆக்கள் தூக்கிப் பிடிக்கும் ஏனைய இமாம்களும் மஃசூம்கள் (பாவங்கள், தவறுகளை விட்டும் பாதுகாக்கப் பட்டவர், பாவங்கள் தவறுகள் அறவே நிகழ முடியாதவர்) அல்ல என்பது தெளிவாகிறது.
2. உமர் (ரழி) யை ஒரு முஸ்லிம் என ஏற்க வேண்டும். இதன் மூலம் அலி (ரழி) உமர் (ரழி) யை மருமகனாக்கி கல்யாண உறவு வைத்துக் கொண்டதை சரி காண முடியும்.
இவையிரண்டும் ஷீஆக்களை தடுமாறி, நிலை குழைய வைக்கும் இரு பதில்களாகவேயுள்ளன.
எமது பிரதிவாதம்:
முதலாவது, உமர் (ரழி)யை எந்தவொரு ஷீஆ முஸ்லிமும் காஃபிர் என்று கூறியது கிடையாது. அவ்வாறு கூறுவதையோ அல்லது அதற்கு ஒப்பான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையோ ஷீஆ முஸ்லிம் அறிஞர்கள் ‘ஹராம்’ என்று நிலைக்கு ஃபத்வா வழங்கியிருக்கிறார்கள். இவ்வகையில், உமர் (ரழி)யை காஃபிர் என்று கூறுவதோ அல்லது கருதுவதோ, ஷீஆ முஸ்லிம்களின் நம்பிக்கையே கிடையாது. இவ்வாறு இருக்கையில் ஏன் வலிந்து இப்பொய்யை ஷீஆ முஸ்லிம்களின் மீது போடப் பார்க்கிறீர்கள்? ஷீஆவைரஸ் இணையத்தள நண்பரே…!
இரண்டாவது, ஹஸரத் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகளான உம்மு குல்தூம் ஸலாமுல்லாஹி அலைஹா அவர்களை, உமர் (ரழி)க்கு திருமணம் செய்து வைத்ததாக வந்துள்ள ரிவாயத்துகளில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் உள்ள நிலையில் இதனை திட்டவட்டமான ஒன்றாகக் கருதியே இங்கு இவ்வாறான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். ஆனால், உமர் (ரழி)யை திருமணம் செய்துகொண்ட உம்மு குல்தூம் என்பவர் அபூபக்ர் (ரழி)யின் மகள் என்பது உங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே…!
அபூபக்ர் (ரழி)க்கு ‘உம்மு குல்தூம்’ என்ற பெயரில் ஒரு மகள் இருந்திருக்கிறார். அவர், உமர் (ரழி)யை திருமணம் செய்துமிருக்கிறார். அதேநேரம், ‘உம்முல் குல்தூம்’ என்ற பெயரில் ஹஸரத் இமாம் அலீ அவர்களுக்கும் மகளொருவர் இருந்திருக்கிறார். இப்பெயரின் ஒற்றுமையின் காரணமாகவே, இந்த வரலாற்றுத்தவறு நிகழ்ந்திருக்கிறது. இது குறித்து வந்துள்ளதைப் பார்ப்போம்.
ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தின் பிரபல விரிவுரையாளர் இமாம் நவவீ (ரஹ்) அவர்கள், தமது தஹ்தீபுல் அஸ்மா என்ற கிரந்தத்தில், அபூபக்ர் (ரழி)க்கு அன்னை ஆயிஷா (ரழி) தவிர்ந்த வேறு இரு மகள்கள் இருந்தாகவும், அவர்களில் ஒருவர் அஸ்மா என்றும், மற்றவர் உம்மு குல்தூம் என்றும் குறிப்பிட்டுவிட்டு, ‘உம்மு குல்தூம் ஆகிய இவர் உமர் இப்னு கத்தாப் (ரழி)யைத் திருமணம் செய்தார்’ என்று கூறியுள்ளார். இது தொடர்பாக குறித்த கிரந்தத்தில் வந்துள்ள அறபு வாசகத்தையே இங்கு பதிவிடுகிறோம்.
أختا عائشة: اللتان أرادهما أبو بكر الصديق، رضى الله عنه، بقوله لعائشة: إنما هما أخواك وأختاك، قالت: هذان أخواى، فمن أختاى؟ فقال: ذو بطن بنت خارجة، فإنى أظنها جارية. ذكر هذه القصة فى باب الهبة من المهذب، وقد تقدم بيانهما فى أسماء الرجال فى النوع الرابع فى الأخوة، وهاتان الأختان هما أسماء بنت أبى بكر، وأم كلثوم، وهى التى كانت حملاً، وقد تقدم هناك إيضاح القصة، وأم كلثوم هذه تزوجها عمر بن الخطاب، رضى الله عنه.
النووي، أبو زكريا محيي الدين يحيى بن شرف بن مري (متوفاي676 هـ)، تهذيب الأسماء واللغات، ج 2، ص630، رقم: 1224، تحقيق: مكتب البحوث والدراسات، ناشر: دار الفكر – بيروت، الطبعة: الأولى، 1996م.
எனவே சர்ச்சைக்குரிய ஒன்றை, திட்டவட்டமாக நடந்த ஒன்றாக கற்பனை செய்து இவ்வாறான கேள்வியை எழுப்பியதானது, அடிப்படையில் ஒரு அறிவீனமும் பலவீனமுமாக இருக்கின்றது.
எனவே, உமர் (ரழி)யை காஃபிர் என்று ஷீஆ முஸ்லிம்கள் கருதுவதுமில்லை. ஹஸரத் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் தமது மகளார் உம்மு குல்தூமை அவருக்கு திருமண முடித்துக் கொடுக்கவுமில்லை. மேலும், இவ்வாறான ஆதாரபூர்வமற்ற சம்பவத்தினால், இமாம் அலீயின் மஃஸுமான நிலைக்கு எவ்வித கலங்கமும் ஏற்படவுமில்லை. அதேநேரம், ஹஸரத் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பரிசுத்த நிலை, திருக்குர்ஆனின் மூலமாக நிரூபணமான ஒன்றாக இருக்கும்போது, கற்பனையான கேள்விகளால் ஏன் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்?
எமது கேள்வி 03: ஸஹீஹ் புகாரியில் ஹதீஸ் இல:3706, ஸஹீஹ் முஸ்லிமில் ஹதீஸ் இல:2304, சுனனுத் திர்மிதியில் ஹதீஸ் இல:3724, சுனனு இப்னுமாஜாவில் ஹதீஸ் இல:115 மற்றும் முஸ்னது அஹ்மதில் பா:01 பக்:177யில் இவ்வாறு ஹதீஸ்கள் வந்துள்ளன.
قال رسول الله (ص) لعليّ : أنت منّي بمنزلة هارون من موسی، إلا أنه لا نبيّ بعدي
‘(அலீயே) நீர் என்னைப் பொருத்தமட்டில், மூஸாவில் நின்றும் ஹாரூனுடைய அந்தஸ்தில் இருக்கிறீர். எனக்குப் பிறகு எந்தவொரு நபியும் கிடையாது என்பதைத் தவிர’
ஸஹீஹான இந்த ஹதீஸில் வந்துள்ளதன்படி, ஹஸரத் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுக்கும் இடையிலான உறவும், அந்தஸ்தும் என்ன என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. சுன்னாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறும் நீங்களே, உங்கள் கிரந்தங்களில் இருக்கின்ற இவ்வாறான விடயங்களை மக்கள் மத்தியில் ஏன் குறிப்பிடுவதில்லை? இதனைக் குறிப்பிட்டால், இவ்வாறான ஒரு அங்கீகாரம் அபூபக்ர் (ரழி)க்கு பெருமானார் கொடுக்கவில்லை என்ற கசப்பான உண்மையை ஜீரணிக்க முடியாது என்பதற்காகவா? விடைதாருங்கள் ஷீஆவைரஸ் இணையத்தள நண்பரே…!