உரமான உதிரங்கள்

கர்பலாக்களத்தில் உயிர்நீத்த இறைத்தூதரின் உறவுகள்

உஸ்தாத் மர்ஸுக்

1.இமாம் ஹுஸைன் பின் அலீ (அலை)

இமாம் அலீ (அலை) அவர்களுக்கும், ஹஸரத் பாத்திமா (அலை) அவர்களுக்கும் ஹிஜ்ரி நான்காம் வருடத்தில் ஷஃபான் மாதத்தின் மூன்றாம் நாளில் ஆண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தைக்கு, அதன் பாட்டனார் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘ஹுஸைன்’ என்று பெயரிட்டார்கள்.

மேலும், செய்யிதுஷ் ஷுஹதா, அபூஅப்தில்லாஹ் என்ற சிறப்புப் பேரையும் கொண்டவராக இமாம் ஹுஸைன் (அலை) திகழ்ந்தார். இறைத்தூதரின் மிகவும் பிரியத்திற்குரியவராக இமாம் ஹுஸைன் காணப்பட்டார். இதன் வெளிப்பாடாக ‘ஹுஸைன் என்னில் நின்றும் உள்ளார். நான் ஹுஸைனில் நின்றும் உள்ளேன்’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் ஹுஸைன் நபிகளாரின் மடியிலே வளர்ந்தார். நபிகளாரின் வபாஅத்தின் போது அவருக்கு வயது ஆறாகும்.

தமது தந்தையான இமாம் அலீ (அலை) அவர்களின் காலத்திலே உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவராகவும், நபிகளாரின் குடும்பத்தை நேசித்த அனைவரினதும் நன்மதிப்பைப் பெற்றவராகவும் இமாம் ஹுஸைன் காணப்பட்டார். அறிவு, தயாளம், பெருந்தன்மை, பணிவு, ஏழைகளுக்கு உதவுதல், மன்னிக்கும் மனப்பாங்கு, வீரம் போன்ற பல்வேறு நற்பண்புகளை நிறைவாகக் கொண்டிருந்தார். தந்தை இமாம் அலீ (அலை) அவர்களின் ஷஹாதத்தைத் தொடர்ந்து சகோதரர் இமாம் ஹசன் (அலை) அவர்களுடன் வாழ்ந்தார். இமாமாக இருந்த தனது சகோதரருக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடந்ததோடு, அவருக்கு உதவியும், ஒத்தாசையும் புரிந்துவந்தார். இமாம் ஹஸன் (அலை) அவர்களுக்கும், முஆவியாவுக்குமிடையில் நடைபெற்ற ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமது சகோதரர் இமாம் ஹசன் உட்பட, அனைத்து அஹ்லுல்பைத் சகோதரர்களுடனும் மதீனா நகருக்கு வந்தார். இமாம் ஹஸன் (அலை) அவர்கள் ஹிஜ்ரி 49 இல் கொல்லப்பட்டதன் பிறகு, புனித இமாமத் பொறுப்பு இமாம் ஹுஸைன் (அலை) அவர்களுக்குச் சென்றது.

ஹிஜ்ரி 60ம் வருடம் முஆவியாவின் மரணத்தையடுத்து, அவரது தனயன் யசீத் இமாம் ஹுஸைனிடம் பைஅத் பிரமாணம் பெறுமாறு மதீனா கவர்;னருக்குக் கட்டளையிட்டான். யசீதின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகளைக் கண்ட இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் யசீதிக்கு பைஅத் செய்ய மறுத்தார்கள். யசீதின் துர்நடத்தைகளின் காரணமாக இஸ்லாம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுக் கொண்டருந்தது. யசீதின் பிடியிலிருந்து இஸ்லாத்தை விடுவிப்பதற்கு, இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் பல்வேறு போராட்ட வழிமுறைகளை முன்னெடுத்தார். மதீனாவிலிருந்து மக்காவுக்கு ஹிஜ்ரத்தை மேற்கொண்டார்.

இந்நிலையில் இஸ்லாமிய உம்மத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் படியும், அதற்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் ஈராக்கின் கூஃபாவாசிகளிடமிருந்து பல்லாயிரக்கணக்கான மடல்கள் இமாமை வந்தடைந்து கொண்டிருந்தன. தம்வரவுக்கான சம்மதத்தூதை தமது உற்ற நண்பரும், சகோதரருமான முஸ்லிம் பின் அகீல் மூலமாக கூஃபாவுக்கு அனுப்பிவைத்தார். அதனையடுத்து, ஹிஜ்ரி 60ம் வருடம் துல்ஹஜ் எட்டாம் தினத்தில் மக்காவிலிருந்து ஈராக்கை நோக்கிப் புறப்பட்டார். இமாமை வரவழைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக வாக்களித்த கூஃபா நகரமக்கள் முஸ்லிம் பின் அகீல் எனும் இமாமின் தூதுவரை அனாதரவாக்கி, அவருக்கு ஆதரவு வழங்குவதற்கு மறுத்துவிட்டனர். இதன் விபரீதமாக யசீதின் கையாட்களால் முஸ்லிம் பின் அகீல் கொல்லப்பட்டார். கூஃபா நோக்கி வந்துகொண்டிருந்த இமாம், கர்பலா எனும் இடத்தில்வைத்து யசீதின் படையினரால் முற்றுகையிடப்பட்டு பைஅத் பிரமாணம் செய்யும்படி வற்புறுத்தப்பட்டார். அதனை மறுத்த இமாம் ஹுஸைனும், அவர்களது 72 உத்தம தோழர்களும், குடும்ப உறவுகளும் கர்பலா பாலைவனத்திலே தாகத்தால் பரிதவிக்க பரிதவிக்க மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யட்டனர்.

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் உடல் தலை வேறாக, உடல்வேறாக துண்டிக்கப்பட்டது. ஏதிரிகள், அவர்களின் புனித உடல் மீது குதிரைகளை ஓடவிட்டு, உடலிலிருந்து ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்தினர். பின்னர், அவர்களின் புனித தலையை, உபைதுல்லாஹ் பின் சியாத்திடம் கொண்டு சென்று, அவனது தர்பாரிலே தடிகளால் அடித்து கேவலப்படுத்தினர்.

2.ஹஸரத் அபுல் பழ்ல் அப்பாஸ்

இவர் அபுல்பழ்ல் (சிறப்பின் தந்தை), கமர் பனீஹாஷிம் (பனீ ஹாஷிம் குலத்தாரின் சந்திரன்), அலம்தார் (தளபதி), சக்கா (தாகம் போக்குபவர்;) எனும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் ‘அப்பாஸ்’ ஆவார். இவர், இமாம் அலீ (அலை) அவர்களின் மகனாக இருக்கிறார். இவரின் தாயார் உம்முல்பனீன் அம்மையார். மிகவும் அழகிய மனங்கவரும் சாந்தமான முகத்தையும், உயரமான உடலமைப்பையும் கொண்டவர். கர்பலாப்போரில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் படையின் கொடியைச் சுமந்து படைத்தளபதியாக பணியாற்றினார். கர்பலாப்போரில் இமாமின் வலக்கரமாக செயற்பட்ட அப்பாஸ் அவர்களுக்கு அப்போது வயது 34. இமாம் ஹுஸைனை நேசிக்கும் அனைவரினதும் உன்னத பிரியத்தைப் பெற்றவரே ஹஸரத் அப்பாஸ் ஆவார்.

ஹஸரத் அப்பாஸ் அவர்கள், இமாம் ஹுஸைனின் படைத்தரப்பைச் சேர்ந்த பலர் படுகொலை செய்யப்பட்டு பூமியில் வீழ்ந்து கிடப்பதைக்கண்டார். உடனே தனது தாய்வழிச் சகோதரர்களை உதவிக்கு அழைத்து ‘இறைவனுக்காகவும், இறைத்தூதருக்காகவும் உதவிக்கரம் நீட்ட விரைந்து வாருங்கள்’ என்றார். பலநாட்களாக அருந்துவதற்கு நீர் இல்லாமல் தாகத்தால் வதைக்கப்பட்டு வாடியிருந்த நபிகளாரின் குடும்ப உறவுகளுக்கு நீரை எடுத்துவருவதற்காக இமாம் ஹுஸைன் (அலை) அவர்களுடன் ‘ஃபுராத்’ நதியை நோக்கி விரைந்து சென்றார். உமர் பின் ஸஃத் என்பவனின் படையினர், அவரை குறுக்கிட்டு தடுத்தனர். இந்நேரத்தில் அப்படையைச்சேர்ந்த ஒரு சண்டாளன், இமாம் ஹுசைனை நோக்கி அம்பொன்றை எய்து, அவருடைய திருமுகத்தின் வாய்ப் பகுதியைக் காயப்படுத்தினான். இமாம் தனது கரத்தினால் அவ்வம்பை பிடுங்கியெடுத்து, வழிந்தோடிய உதிரத்தை கையிலெடுத்து வானைநோக்கி வீசியவராக அக்கயவனுக்கு சாபமிட்டார். இத்தருணத்தில் எதிரிகள் ஹஸரத் அப்பாஸ் அவர்களை இமாம் ஹுஸைனை விட்டும் பிரித்து முற்றுகையிட்டு தாக்கினர். அப்பாஸ் அவர்கள் தனிமையிலிருந்து கொண்டு எதிரிகளின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடினார். எதிரிகளால் அவர்களின் கண்களில் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் மற்றும் மேனியில் ஏற்படுத்தப்பட்ட வெட்டுக் காயங்கள் காரணமாக அவ்விடத்தை விட்டும் நகர்வதற்கு முடியாதவாறு அங்கேயே உயிரைத் துறந்தார்.

வரலாற்றாசிரியர் பலாதிரீ அவர்களின் அறிவிப்புக்கமைய ஹர்மலா என்ற சண்டாளனும், அவனது சகபடையாட்களும் அவரது மேனியை கால்களால் மிதித்து வதைத்தனர். துபைல் தாயி என்பவன் அவரது ஆடையை புனித உடலைவிட்டும் நீக்கி அவமானப்படுத்தினான்.

அபுல் பரஜ் இஸ்பஹானியின் அறிவிப்புக்கமைய ‘அப்பாஸை கொலை செய்தவனின் முகம் கறுப்பாகிப்போனது. சுஜூதின் தடங்கள் பதிந்திருந்த பனீஹாஷிம் வாலிபனைக் கொன்றதன் காரணத்தினாலே இவ்வாறு நிகழ்ந்தது’ என்கிறார்.

3.ஜஃபர் பின் அலீ (அலை)

இமாம் அலீ (அலை) அவர்களுக்கும், ஹஸரத் உம்முல் பனீன் அவர்களுக்கும் பிறந்த இரண்டாவது மகன் ஹஸரத் ஜஃபர் ஆவார். கர்பலாப்போரில் 25 வயதுடையவராக காணப்பட்டார். ஹவ்லீ பின் யசீத் அஸ்பஹீ என்பவனால் கொலை செய்யப்பட்டார்;.

4.அப்துல்லாஹ் பின் அலீ (அலை)

இமாம் அலீ (அலை) அவர்களுக்கும், ஹஸரத் உம்முல் பனீன் அவர்களுக்கும் பிறந்த மூன்றாவது மகன் ஹஸரத் அப்துல்லாஹ் ஆவார். கர்பலாப்போரில் 19 வயதுடையவராகக் காணப்பட்டார். ஹானி பின் தத்பீத் ஹழ்ரமீ என்பவனால் கொல்லப்பட்டார். அன்னாரின் புனித தலை, மேனியை விட்டும் வேறாக்கப்பட்டது.

5.ஹஸரத் உஸ்மான் பின் அலீ (அலை)

இமாம் அலீ அவர்களுக்கும், ஹஸரத் உம்முல் பனீன் அவர்களுக்கும் பிறந்த மற்றொரு மகன் ஹஸரத் உஸ்மான் ஆவார். கர்பலாப்போரில் இமாம் ஹுஸைனுக்கு ஆதரவாகப் போரிட்டார். கௌலி பின் யசீத் அஸ்பஹீ என்பவன் இவரை கொலை செய்து, அவரின் சிரத்தை மேனியை விட்டும் வேறாக்கி உமர் பின் ஸஃத் என்ற மற்றொரு எதிரணியின் தளபதியிடம் கொண்டு சென்று, இக்காரியத்தைப் புரிந்தமைக்காக அன்பளிப்பு வேண்டினான். அதற்கு உமர் பின் ஸஃத் ‘அந்த அன்பளிப்பை உனது தளபதியான உபைதுல்லாஹ் பின் சியாதிடம் பெற்றுக் கொள்’ என்றான். ஹஸரத் உஸ்மான் பின் அலீ அவர்கள், இமாம் ஹுஸைன் மீது மிகவும் பிரியமுள்ளவராக இருந்ததனால் போர்க்களத்தில் இமாம் ஹுஸைன் செல்லும் இடமெல்லாம் இவரும் பின்தொடர்ந்து சென்று, இமாமைப் பாதுகாப்பதற்கு முயன்றார். ஈற்றில், அந்நிலையிலேயே கொல்லப்பட்டார்.

6.அபூபக்கர் பின் அலீ (அலை)

அபூபக்கர், இமாம் அலீ (அலை) அவர்களின் மற்றுமொரு புதல்வராவார். கர்பலாப்போரில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களுக்கு உருதுணையாக நின்று அக்களத்திலேயே உயிரைத் துறந்தார். இமாம் பாக்கிர் (அலை) அவர்களின் அறிவிப்புக்கமைய ஹம்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு சண்டாளனால் கொல்லப்பட்டார்.

7.முஹம்மத் அஸ்கர் பின் அலீ (அலை)

இமாம் அலீ (அலை) அவர்களின் மற்றுமொரு மகனாகிய முஹம்மத் அஸ்கர் அவர்களும், கர்பலாக்களத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒருவராக இருக்கிறார்.

8.அலீ அக்பர் பின் ஹுசைன் பின் அலீ (அலை)

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களுக்கும், உம்முலைலி அம்மையாருக்கும் பிறந்தவர்தான் ஹஸரத் அலீ அக்பர் அவர்கள். அபூ மிக்னப், பலாதிரி, தீனவரி போன்றோரின் அறிவிப்புக்கமைய கர்பலாக்களத்திலே உயிரைத் துறந்த, பெருமானார் (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த முதலாவது ஷஹீத் அலீ அக்பர் ஆவார். தபகாத் பின் ஸஃத் எனும் வரலாற்று நூலின்படி ஹஸரத் அலீ அக்பர் தாய்வழியாக அபூசுப்யானின் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால் கர்பலாப்போரின் போது ஒரு சண்டாளன், அலீ அக்பரை அழைத்து ‘நீர் அபூசுப்யானின் சொந்தக்காரராக இருக்கிறீர். யசீதின் உறவினராக இருக்கிறீர். நீர் விரும்பினால் உமக்கு நான் அபயமளிக்கிறேன். நீர் ஹுஸைனை விட்டும் விலகிவிடு’ என்றான். அதற்கு அலீ அக்பர் அவர்கள், ‘அபூசுப்யானின் உறவை விட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உறவே எனக்கு மிகவும் முக்கியமானது’ என்றார். அதன் பிறகு எதிரிகளை நோக்கிச் சென்று போரிடலானார். மிகவும் வீரியமான போராட்டத்தின் பிறகு, தனது தந்தையை நோக்கி வந்தார். தந்தையின் அருகில் வந்ததும், முர்ரத் பின் நுஃமான் பின் முன்திர் என்பவனால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டார். இதனைப் பார்த்த இமாமவர்;கள் வேதனைப்பட்டவர்;களாக, ‘உன்னைக் கொன்ற இந்த சமூகத்திற்குக் கேடுதான்’ எனக்கூறி, தனது பாசமிக்க மகனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். அந்நிலையிலேயே அலீ அக்பரும் ஷஹீதானார். இதனைக் கண்ணுற்ற பீபீ சைனப் அவர்கள் கூடாரத்தை விட்டும் வெளியேறி, ஓடோடி வந்து ஓங்கி உயர்ந்த குரலில் ‘எனது சகோதரரின் அருமைப் புதல்வரே! எனது சகோதரரின் அருமைப் புதல்வரே! எனக்கதறியழுது, அலீ அக்பரின் ஜனாசாவை அணைத்துக் கொண்டார்.

பிரிதொரு அறிவிப்பின்படி, கர்பலாப்போரின் போது ஹஸரத் அலீ அக்பர் அவர்களுக்கு 18 வயதாகும். எதிரிகளின் அநீதியையும், அக்கிரமத்தையும் கண்ணுற்ற ஹஸரத் அலீ அக்பர் இமாம் ஹுஸைனின் அனுமதியைப் பெற்று போர்க்களத்தில் குதித்தார். அவர் போர்க்களம் நோக்கி செல்வதைக் கண்ணுற்ற இமாமவர்கள் ‘இறைவா! நீ சாட்சியாக இரு! இச்சமூகத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் போர்க்களம் செல்கிறார். அவர் உடலாலும், குணத்தாலும், பேச்சாலும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஒப்பானவர்’ என்றார். போர்க்களத்தில் குதித்த அலீ அக்பர் அவர்கள் மிகக் கடுமையாகப் போரிட்டார். பல்வேறு வெட்டுக் காயங்களுக்கு இலக்கான அலீ அக்பர் தந்தையை நோக்கி வந்து ‘தந்தையே! தாகம் என்னை வாட்டி வதைத்திறது’ என்றார். இமாமுக்கு அழுகையே வந்து விட்டது ‘அன்பு மகனே! சற்று பொறுமைகொள். இன்னும் சொற்ப நேரத்தில் உன் பாட்டனார் (இறைத்தூதர்) ஸல்லல்லாஹு அலைஹி வஆலீஹி வசல்லம் அவர்களின் புனித கரத்தினால் தண்ணீரை அருந்தப் போகிறீர்’ என்றார். தொடர்ந்து தாக்கிய சண்டாளர்கள் ஹஸரத் அலீ அக்பர் அவர்களை கொலை செய்துவிட்டனர்.

9.அப்துல்லாஹ் பின் ஹஸன் பின் அலீ (அலை)

இமாம் ஹஸன் (அலை) அவர்களின் மகனான இவர் தனது சிறிய தந்தைக்கு உதவுவதற்காக கர்பலாப்போரில் கலந்து கொண்டு, தன்னுயிரை தியாகம் செய்தார். இமாம் பாக்கிர் (அலை) அவர்களின் அறிவிப்புக்கமைய ஹர்மலா பின் காஹில் என்பனே இவர்களை கொலை செய்திருந்தான்.

10.ஜஃபர் பின் ஹஸன் பின் அலீ (அலீ)

இமாம் ஹஸன் (அலை) அவர்களின் இன்னுமொரு குமாரரான இவர், கர்பலாப்போரில் பங்கு கொண்டு ஷஹீதானார்.

11.அபூபக்கர் பின் ஹஸன் பின் அலீ (அலை)

இமாம் ஹஸன் (அலை) அவர்களின் மகனான இவர்;, அப்துல்லாஹ் பின் உக்பதுல் கனவீ என்பவனால் கர்பலாப்போரில் கொல்லப்பட்டார். இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் தமது மகளார் சகீனாவுக்கு இவரை திருமண செய்து வைத்திருந்தார்.

12.அப்துல்லாஹ் பின் ஹுஸைன் (அலை)

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் மகனான இவர் அலீ அஸ்கர் என்றும் அழைக்கப்படுகிறார். இப்னு அஃசம் என்பவரின் அறிவிப்புக்கமைய இமாம் ஹுஸைனின் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, இருவர் மாத்திரம் எஞ்சியிருந்த வேளையில் இமாமவர்கள் பெண்கள், பிள்ளைகள் இருந்த கூடாரத்தை நோக்கி வந்து, ‘எனது பாலகரைத் தாருங்கள் அவரை முத்தமிட்டு பிரியாவிடை செய்யப் போகிறேன்’ எனக்கூறினார். தனது மகனை ஏந்திக் கொண்டபடி எதிரிகளைப் பார்;த்து ‘எனக்கு இரக்கம் காட்டாவிடினும், இப்பச்சிளம் பாலகருக்கு இரங்குங்கள்’ என்றார்கள். அதற்கு, ஹர்மலா என்ற சண்டாளன் நஞ்சு கலந்த அம்பினால் அப்பாலகரைத் தாக்கினான். கழுத்தில் பாய்ந்த அம்பு இரத்தத்தை வீறிட்டுப்பாயச் செய்தது. அப்பாலகரின் உதிரத்தை தாங்கிப்பிடித்து வானத்தை நோக்கி வீசி ‘இறைவா! இத்தியாகத்தை ஏற்றுக் கொள்வாயாக! இவருக்கு அநீதியிழைத்தவரை சபிப்பாயாக’ எனப் பிரார்த்தித்தார்.

13.காசிம் பின் ஹஸன் பின் அலீ (அலை)

இமாம் ஹஸன் (அலை) அவர்களின் புதல்வரான ஹஸரத் காசிம் அவர்கள் கர்பலாப்போரில் சயீத் பின் அம்ர் இஸ்தீ என்ற பனீ உமையா சண்டாளனினால் கொல்லப்பட்டார். தபகாத் இப்னு ஸஃது அவர்களின் பதிவுக்கமைய ஹஸரத் காசிம் ஒரு சிறுவராக இருந்தார். நீண்ட ஆடை அணிந்திருந்த அவர்கள் இரு கால்களிலும் பாதணி அணிந்திருந்தார். அதன் இடப்புறப் பாதணியின் பட்டிகள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த நிலையில் காணப்பட்டார். அம்ர் பின் சயீத் இஸ்தீ எனும் வம்பன் பலமாக அவரைத் தாக்கினான். அதன் காரணமாக மண்ணில் வீழ்ந்த அவர், தனது சிறிய தந்தையை உதவிக்கு அழைத்தார். இமாம் அவர்கள் விரைந்து வந்து, அம்ரை நோக்கி வாளை வீசி அவனது கையைத் துண்டித்தார். அம்ரைக் காப்பாற்ற வந்த யசீதியர்கள், இமாமை நோக்கித் தாக்கினர். குதிரைப் படையினரின் தாக்குதல்களில் சிக்குண்ட அம்ர் அவ்விடத்திலேயே உயிரிழந்தான். காசிமை மடியில் ஏந்திய இமாமவர்கள் ‘உனது சிறிய தந்தையை நீ உதவிக்கழைத்தும் உனக்கு உதவ முடியாமல் போனது பரிதாபமே’ என்றார். பின்னர், இமாமின் வேண்டுகோளுக்கிணங்க ஹஸரத் காசிமை ஹஸரத் அலீ அக்பர் அவர்களுக்கருகில் தூக்கி அமர்த்தி வைத்தார்.

14.அவ்ன் பின் அப்தில்லாஹ் பின் ஜஃபர் பின் அபீதாலிப்

ஹஸரத் அபூதாலிப் அவர்களின் மகன் ஹஸரத் ஜஃபர் தய்யார் அவர்களின் பேரரான அவ்ன் என்பவர், இமாம் ஹுசைனுக்கு உதவிக்கரம் நீட்டிய மற்றுமொரு பனீ ஹாஷிமி ஆவார். இவரும் கர்பலாக்களத்திலே ஷஹாதத்தை அடைந்தார்.

15.முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் ஜஃபர் பின் அபீதாலிப்

தபகாது இப்னு ஸஃத் எனும் வரலாற்று நூலின் பதிவுக்கமைய அப்துல்லாஹ் பின் ஜஃபர் அவர்களின் இரு பிள்ளைகளும் அப்துல்லாஹ் பின் குத்பதுத்தாயீ என்ற மனிதனின் மனைவியிடம் தஞ்சம் புகுந்தனர். உமர் பின் ஸஃத் என்ற சண்டாளனின் பிரகடனத்திற்கமைய இமாம் ஹுஸைனின் குடும்பத்தினருடைய தலைகளைக் கொண்டு வருபவர்களுக்கு, ஒரு தலைக்கு ஆயிரம் திர்ஹங்கள் சன்மானமாக வழங்கப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டது. இப்பணத்திற்கு ஆசைப்பட்டிருந்த அப்துல்லாஹ் பின் குத் பதுத்தாயீ தன்வீட்டுக்குச் சென்றான். வீட்டுக்கு வந்ததும் அவனது மனைவி அவனைப்பார்;த்து ‘எமது வீட்டுக்கு இரு குழந்தைகள் தஞ்சம் கோரி வந்துள்ளனர். இவ்விருவருக்கும் கருணைகாட்டி, இவர்;களின் குடும்பத்தினரோடு இவர்;களை மதீனாவுக்குச் சென்று சேர்த்து விடமாட்டீரா?’ என வினவினாள். அதற்கு, அவன் ‘ஆம்! நிச்சயம் அப்படியே செய்கிறேன். அவ்விருவரையும் காண்பியும்’ என்றான். இவனது வார்த்தையை நம்பிய அவனது மனைவி, இரு குழந்தைகளையும் அவனிடம் ஒப்படைத்தாள். அவன் மறுகணமே அவ்விருவரின் தலைகளைக் கொய்து கூஃபா கவர்;னரான உபைதுல்லாஹ்விடம் கொண்டு சென்றான். இவ்விரு குழந்தைகளும் ஹாஷிம் குலத்து நபிகளாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

16.முஸ்லிம் பின் அகீல் பின் அபீதாலிப்

இமாம் அலீ (அலை) அவர்களின் சகோதரர் அகீல் அவர்களின் மகனான ஹஸரத் முஸ்லிம் அவர்கள் இமாம் ஹுஸைன் அவர்களின் தூதுவராக கூஃபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்;. கூஃபாவாசிகளின் ஆதரவு கிடைக்காமையால் தனிமைப்படுத்தப்பட்டு உபைதுல்லாஹ் பின் சியாத் என்பவனின் கட்டளைக்கமைவாக ஹிஜ்ரி 60ம் வருடம் துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளில் கூபாவில் வைத்து கொல்லப்பட்டார்.

17.ஜஃபர் பின் அகீல் பின் அபீதாலிப்

இமாம் அலீ (அலை) அவர்களின் சகோதரரான அகீல் அவர்களின் மற்றொரு மகனான ஹஸரத் ஜஃபர் அவர்களும் கர்பலாக்களத்தில் உயிர்துறந்த தியாகியாகத் திகழ்கிறார்.

18.அப்துர் ரஹ்மான் பின் அகீல் பின் அபீதாலிப்

இமாம் அலீ (அலை) அவர்களின் சகோதரர் அகீல் அவர்களின் மற்றொரு மகனான ஹஸரத் அப்துர் ரஹ்மானும், இமாம் ஹுஸைனின் பாதையில் உயிர்நீத்த ஷஹீதாவார்.

19.அப்துல்லாஹ் அக்பர் பின் அகீல் பின் அபீதாலிப்

ஹஸரத் அபூதாலிப் அவர்களின் மகனான அகீல் அவர்களின் மற்றொரு மகனான அப்துல்லாஹ் அக்பர் அவர்களும், கர்பலாப்போரிலே இறைவனுக்காக தன்னையே அர்ப்பணித்த ஒருவராவார்.

20.அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பின் அகீல்

முஸ்லிம் பின் அகீல் அவர்களின் மகனான அப்துல்லாஹ் அசத்தியத்திற்கு, எதிராக நிகழ்ந்த கர்பலாப்போரில் கொல்லப்பட்ட ஒரு ஷஹீதாவார். எதிரிகளின் பலமான தாக்குதல்களுக்கு உள்ளான இவரின் மேனியிலிருந்து அம்பைப் பிடுங்கியபோது, அம்பின் முன்பகுதி உடைந்து உடலிலே சிக்கிக்கொண்டது என இவரின் சரிதையிலே எழுதப்பட்டுள்ளது.

21.முஹம்மத் பின் அகீல் பின் அபீதாலிப்

ஹஸரத் அகீலின் மகனான இவர், இமாம் ஹுஸைனோடு தன்னுரைத் துறந்தார்.

22.அபுல் ஹய்யாஜ்

இவர் ஒரு கவிஞரும் கூட. கர்பலாப்போரில் ஷஹீதானார்.

23.சுலைமான்

இமாம் ஹுஸைனின் பஸரா நகருக்குரிய தூதுவராக செயற்பட்ட இவர்;, உபைதுல்லாஹ் பின் சியாதின் கட்டளையின்படி படுகொலை செய்யப்பட்டார்.

24.மன்ஜஹ்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் பணியாளராக இருந்த இவர், இமாமுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்தார்.

25.அப்துல்லாஹ் பின் புக்தர்

இமாம் ஹுஸைனின் பால்குடிச் சகோதரரான இவர், கூஃபா நகரத்தில் வைத்து உயர்ந்த கட்டிடமொன்றிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தொடர்புகளுக்கு:

info@peace.lk


Facebook


Twitter


Google-plus


Instagram


Dribbble


Youtube

Scroll to Top
Scroll to Top