இமாம் ஹுஸைனின் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள்

எம்.அஜ்மீர்

விலங்கினத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் மனிதன், தான் கொண்டிருக்கும் பகுத்தறிவு எனும் விஷேடத்துவத்தின் மூலமாக ஏனைய விலங்குகளிலிருந்து தனித்துவத்தைப் பெறுகிறான். பகுத்தறிவு, சமூகவிலங்குகளைப் போன்று, தனியன்கள் பல ஒன்றாக இணைந்து, கூட்டாக வாழ்வதிலே மனிதனுக்கு வழிகாட்டுகிறது. தனித்துவாழும் ஏனைய விலங்குகளைப் போன்று, சமூகப் பிரவேசமின்றி வாழ்வதற்கு மனிதனால் முடியாது என்பதை, அதுவே எமக்கு உணர்த்துகிறது.

சமூகவிலங்காக இருக்கும் ஒரு மனிதன், பிறமனிதர்களோடு ஒட்டிவாழும் போதே, அவர்களுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டு, நல்லுறவுகள் வளர்கின்றன. தனியன், குடும்பம், சமூகம் என மனிதனின் படிமுறைவளர்ச்சியை, முதல் மனிதனின் உருவாக்கத்திருந்தே எம்மால் அவதானிக்க முடிகிறது. இவ்வாறு, தனிநபர்களால் அமையப்பெற்ற சமூக கட்டமைப்பிலே வாழ்வதற்குக் கடமைப்பட்ட மனிதன், எவ்வாறு வாழவேண்டும் என்ற வழிகாட்டலை வழங்குவதே இறைவேதங்கள், இறைத்தூதர்கள், அவர்களது பிரதிநிதிகள் ஆகியோரின் தெய்வீகக் கடமையாக இருக்கிறது.

இக்கடமையை நிறைவு செய்தோரின் தொடரிலே, இறுதித் தூதர் முகம்மது (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் இமாமத் எனும் இஸ்லாமியத் தலைமைத்துவத்திற்கு தம்மால் அறிமுகப்படுத்தப்பட்ட இமாம்களில் ஒருவராக இமாம் ஹுஸைன் (அலை) திகழ்கிறார். அவருடைய போதனைகளில் சமூக சீர்திருத்தமும், மேன்பாடும் குறித்து வந்துள்ள சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

இறைபக்தியும், மறுமை பற்றிய சிந்தனையும்

இமாம் தமது போதனைகளிலே, சமூக மேம்பாட்டிற்குரிய முதன்மையான நிபந்தனையாக ‘தக்வா’ எனும் இறைபக்தியைக் குறிப்பிடுகிறார். ‘தக்வா’ எனும் இறைபக்தியைக் கடைப்பிடித்து வருவதோடு, மறுமையை நினைவுகூர்ந்து செயற்படுமாறும் இமாமின் போதனைகள் அமைந்துள்ளன. திருக்குர்ஆனின் பார்வையிலும் கூட, பயபக்தியுடையோரே வெற்றியாளர்கள் (78:31) என்பதையும், இவ்வேதம் அவர்களுக்கே வழிகாட்டும் (02:02) என்பதையும் காணலாம்.

‘தக்வா’ எனும் இறைபக்தியானது, ‘இறைவன் செய்யுமாறு கட்டளையிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதும், தவிர்ந்து கொள்ளுமாறு கூறிய விடயங்களை தவிர்ந்து நடப்பதுமாகும்’. எனவே, ஒருவர் இறையச்சம் கொண்டவராக இருந்தால், தனது மனோயிச்சையின் பிரகாரம் செயற்பட்டு சமூக சீர்குலைவுக்கு வழிவகுப்பவராக ஒருபோதும் இருக்கமாட்டார். அவ்வாறே, ஒருவர் மறுமையின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தால், மறுமையிலே குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை தனது மனக்கண் முன்னே நிறுத்தி, தான் செய்யும் தவறுகளைத் தவிர்ந்துகொண்டு, நற்செயல்களுக்கான மறுமையின் வெகுமதிகளை எதிர்பார்க்கக்கூடிய ஒரு சிறந்த மனிதராக சமூகத்தில் செயற்படுவார்.

மரணம் குறித்த விளிப்புணர்வும், ஆரோக்கிய வாழ்வும்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களுடைய போதனைகளிலே சமூக மேம்பாட்டிற்கான மற்றொரு பரிந்துரையாக, மரணம் குறித்து விளிப்புணர்வோடு இருப்பதையும், மரணத்திற்குமுன் இவ்வுலகிலே குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் வாழும் மனிதன் தனது ஆரோக்கியத்தை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதையும் பரிந்துரைத்துள்ளார். இமாம், மரணத்திற்குப் பின்னரான மண்ணறை வாழ்வைப் பற்றி குறிப்பிடுகையில், ‘அங்கே தனிமையும், இருளும் சூழ்ந்து கொள்ளும் நிலையிலே, தன்னால் புரியப்பட்ட நற்செயல்களே அவனுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காய் அமைந்திருக்கும்’ என்பதாகக் கூறியுள்ளார். (துஹ்புல் உகூல், பக் 229)

ஒவ்வொரு மனிதனும், தான் செய்த இவ்வுலக செயற்பாடுகளின் மூலமே மரணத்தையடுத்து அமையப்போகும் சிறந்த வாழ்வுக்கான பாதையை அமைத்துக் கொள்கிறான். இவ்வுலகினை ஓர் விளைநிலமாக உருவகிக்கும் இமாமின் போதனைகள், மறுமை வாழ்க்கைக்காக அதனைச் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழும்படி போதித்து வந்துள்ளன. இதனை உறுதிசெய்வதாக, இவ்வுலகவாழ்வை உரிய காலப்பகுதியிலே சரிவரப் பயன்படுத்திக்கொள்ளாதோர் நஷ்டவாலிகளே என திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது (06:158).

சமூக முக்கியஸ்தர்களின் பங்களிப்புகள்

ஒரு சமூகம் அபிவிருத்தியையும், மேம்பாட்டையும் அடைவதற்கு, அச்சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்களும், சமூகப் பிரதிநிதிகளும் திறன்பட செயலாற்ற வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அச்சமூகம் மிக இலகுவாகவே அழிவுப் பாதைக்குத் தள்ளப்பட்டுவிடும். இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் போதனைகளை நோக்கும்போது, இவ்வுண்மை புலப்படுகிறது. ‘வயது முதிர்ந்த, அனுபவசாலிகளிடம் காணப்படும் குழப்பநிலை மிகவும் ஆபத்தானது. மேலும், ஆட்சியாளர்களிடத்திலே கோபம், சமூகப் பெரியாரிடத்திலே பொய், அறிஞர்களிடத்திலே அறிவைப் போதிப்பதில் உலோபித்தனம் ஆகியவை ஒரு சமூகத்தின் அழிவுக்கான அடையாளங்கள்’ என்பதாக இமாம் ஹுஸைன் (அலை), குறிப்பிட்டுள்ளார். (பிஹாருல் அன்வார், பா 36, பக் 384)

நாவடக்கமும், கடமையறிந்து ஏற்றலும்

‘நாவடக்கம்’ எனும் நாவினை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதும், அதன் மூலம் பிறருக்கு நலவைப் புரிவதும் சமூக உயர்வுக்கும், தனிமனித உயர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதாக இமாம் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், சம்மந்தமில்லாத விடயங்களை தனது தோள்களில் சுமப்பது மிகவும் ஆபத்தானது என்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். (முஷ்தத்ரகுல் வஸாயில், பா 9, பக் 24)

இறைநினைவுடன் துயிலெழுதல்

ஒரு மனிதன் அதிகாலையில் துயிலெழுந்தவுடன், தனது அன்றாட காரியங்களை தொடங்குவதற்கான சிறந்த வழிமுறைகளை இமாம் மிகத்தெளிவாகக் கூறியுள்ளதைக் காணமுடிகிறது. ஒருவர், இமாம் ஹுஸைன் (அலை) அவர்களிடம் ‘நீங்கள் எவ்வாறு இன்றைய காலைப் பொழுதைத் தொடங்கினீர்கள்’ என்பதாக வினவியதற்கு பதிலளிக்கையில் இமாம், ‘எனது இறைவனும், படைப்பாளனும், இரட்சகனுமான அல்லாஹு தஆலா, எனக்கு மேலே என்னை அவதானித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவனாகவும், என் கண்முன்னே நரகத்தை நேரில் கண்டவனைப் போன்றும், மரணமோ எனது வரவுக்காக காத்திருப்பதைப் போன்றும், இறைவனுடைய கேள்வி கணக்கு என்னை சூழ்ந்து கொண்டிருப்பதை அவதானித்தவனாகவும் எனது காலைப்பொழுதை தொடங்கி வைத்தேன்’ என்றார்.

இதன்தொடரில் மேலும் குறிப்பிடுகையில், ‘என் மனதிற்கு பிடித்தவற்றை செய்வதற்கோ, நான் வெறுக்கும் விடயங்களை தடுத்துக் கொள்வதற்கோ உரிய விஷேட சக்தி எனக்கில்லை என்பதை புரிந்து கொண்டவனாகவே எனது அன்றாட காரியங்களை ஆரம்பிக்கிறேன். எனது செயற்பாடுகள் அனைத்தும் (அல்லாஹு தஆலா ஆகிய) தான் அல்லாத ஒருவனின் கையிலிருப்பதைப் புரிந்து கொண்டேன். அவன் விரும்பினால் என்னை மன்னிப்பான்;. அவன் விரும்பினால் என்னைத் தண்டிப்பான். என்னை விடவும், இறைவனிடம் அதிக தேவையுள்ள ஒருவரையும் நான் கண்டுகொள்ளவில்லை’ என்பதாக இமாம் கூறினார். (மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ், பா 4, பக் 404)

ஒருவர் இப்போதனைகளை நன்றாக உள்வாங்கிக் கொண்டு, தனது அன்றாட காரியங்களைத் தொடங்குவாராக இருந்தால், பிறருக்கு அநியாயம் செய்பவராகவோ அல்லது சமூகத்தில் தீங்கு விளைவிப்பவராகவோ ஒருபோதும் இருக்கமாட்டார் என்பது உறுதி.

எனவே, மேலே பகிர்ந்துகொண்ட சமூக மேம்பாட்டிற்கான இமாமுடைய போதனைகளை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும், குறிப்பாக அஹ்லுல்பைத் நேசர் சமூகமும் கடைப்பிடித்து ஒழுகுவதனூடாக, இஸ்லாம் வலியுறுத்தும் சமூக கட்டமைப்பையும், ஒழுங்கையும் உருவாக்கி, அதன் பயன்களை அடைந்துகொள்வோம். இதற்கு, அல்லாஹு தஆலாவே போதுமானவன்.

தொடர்புகளுக்கு:

info@peace.lk


Facebook


Twitter


Google-plus


Instagram


Dribbble


Youtube

Scroll to Top
Scroll to Top