நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் 23 வருடகால அயராத உழைப்பின் பயனாக இஸ்லாமிய சாம்ராஜ்யம் இப்பூமியில் கட்டியெழுப்பப்பட்டு, இறையாட்சி நிலைநாட்டப்பட்டது. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹு தஆலாவின் இறுதித்தூதர் என்றவகையில் அவர்கள் போதித்த மார்க்கமே இறுதி மார்க்கமாகும்.
இதனால், நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் நான்கு பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர்களாகக் காணப்பட்டு, அந்நிலையிலேயே வபாத்தானார்கள். அவைகளாவன:
• புதிதாகத் தோற்றம் பெற்ற இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த ரோம், பாரசீகம் போன்ற பேரரசுகள், முஸ்லிம் சமூகத்தினுள் ஊடுருவியிருந்த முனாஃபிகீன்கள் மற்றும் யூத-கிறிஸ்தவ சதிகள் ஆகிய மூன்று சவால்களிலிருந்து இஸ்லாத்தைப் பாதுகாத்தல்.
• புனித அல்-குர்ஆனை காலத்தேவைக்கேற்ப மனித சமுதாயத்திற்கு வியாக்கியானம் செய்து, நடைமுறைப்படுத்தல்.
• இறுதிநாள்வரை சகலவித திரிபுகளிலுமிருந்;தும், இஸ்லாத்தின் தூய்மையைப் பாதுகாத்தல்.
• எதிர்காலத்தில் இஸ்லாம் சந்திக்கின்ற சவால்களை கண்டறிந்து, அவை தொடர்பாக எழுகின்ற ஐயங்களுக்குப் பதிலளித்தல்.
நபியவர்கள் உயிரோடிருந்த காலப்பகுதியில் இவ்விடயங்களை மேற்கொள்வதற்கு வேறெவரின்பாலும் தேவை இருக்கவில்லை. நபியவர்களே அப்பொறுப்புகளை சம்பூரணமாக நிறைவேற்றி வந்தார்கள். ஆனால் அவர்களின் வபாத்திற்குப்பின் குறித்த பொறுப்புகளை சம்பூரணமாக நிறைவேற்றுவதற்கு, நபியவர்களால் யாரும் பொறுப்பாக்கப்பட்டாரா? அல்லது நபியவர்கள் இப்பொறுப்புகளுக்கு யாரையும் நியமிக்காமலேயே தமது சமூகத்தை, தலைமைத்துவமின்றி விட்டுச் சென்றார்களா? எனும் வினா எழுகிறது.
இவ்வெற்றிடத்திற்கு எவரையும் நியமிக்காமலேயே நபியவர்கள் வபாத்தானார்கள் என அஹ்லுஸ் ஸுன்னாக்கள் கருதுகின்றனர்.
நபியவர்கள் இல்லாத காலப்பகுதியில் நபியவர்களின் இவ்வெற்றிடத்தை நிரப்பி, அவர்கள் கொண்டுவந்த அல்குர்ஆனை, அவர்களின் விளக்கப்படியே வியாக்கியானம் செய்து, மார்க்கத்தை அவர்கள் போதித்தபடியே எவ்வித கூட்டல்-குறைத்தலின்றி எதிர்கால சமுதாயத்திற்கு, கியாமத் நாள் வரைக்கும் போதிக்க, நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாக, அவர்களது உறவுகளில், மிகவும் நெருக்கமான, அல்லாஹ் தஆலாவினால் பரிசுத்தப்படுத்தப்பட்ட ‘அஹ்லுல்பைத்து’க்கள் நியமிக்கப்பட்டனர் என்பதாக ஷீஆமுஸ்லிம்கள் நம்புகின்றனர்.
இந்நம்பிக்கைக்கு ஆதாரமாக பின்வரும் நபிமொழிகளில் சிலதை குறிப்பிடமுடியும்.
عن زيد بن أرقم (رض) ،قال قام رسول الله صلى الله عليه وسلم يوما فينا خطيبا بماء يدعى خما بين مكة والمدينة فحمد الله وأثنى عليه ووعظ وذكر ثم قال أما بعد ألا أيها الناس فإنما أنا بشر يوشك أن يأتي رسول ربي فأجيب وأنا تارك فيكم ثقلين أولهما كتاب الله فيه الهدى والنور فخذوا بكتاب الله واستمسكوا به فحث على كتاب الله ورغب فيه ثم قال وأهل بيتي أذكركم الله في أهل بيتي أذكركم الله في أهل بيتي أذكركم الله في أهل بيتي.
சைதிப்னு அர்கம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்:
ஒருமுறை நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிற்கும், மதீனாவிற்கும் இடையிலுள்ள கதீர்கும்; எனும் நீரூற்றடியில் நின்று குத்பா பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தினார்கள். அதில் அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து, (மக்களுக்கு) உபதேசம் புரிந்துவிட்டு, இவ்வாறு கூறினார்கள்:
‘மனிதர்களே…! நிச்சயமாக நான் ஒரு மனிதனாவேன். எனது இறைவனின் தூதர்(மலகுல் மௌத்) என்னிடம் வந்து நான் அவரின் அழைப்பிற்கு பதிலளிக்கும் நேரம் நெருங்கி விட்டது. நான் உங்களுக்கு பெறுமதிமிக்க இரு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். அதில் முதலாவது ஒளியும், நேர்வழியுமிக்க இறைவனின் வேதமாகும். இறைவனின் அவ்வேதத்தை பின்பற்றி நடங்கள். இன்னும் அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.’
அல்லாஹ்வின் வேதத்தை வலியுறுத்திக் கூறிய பிறகு நபியவர்கள் தொடர்ந்து இவ்வாறு கூறினார்கள்:
‘(இரண்டாவது) எனது அஹ்லுல்பைத்தினராவர். எனது அஹ்லுல்பைத்தினர் விடயத்தில் நான் உங்களுக்கு அல்லாஹ்வை ஞாபகமூட்டுகிறேன். எனது அஹ்லுல்பைத்தினர் விடயத்தில் நான் உங்களுக்கு அல்லாஹ்வை ஞாபகமூட்டுகிறேன். எனது அஹ்லுல்பைத்தினர் விடயத்தில் நான் உங்களுக்கு அல்லாஹ்வை ஞாபகமூட்டுகிறேன்.’ (மூன்று முறை கூறினார்கள்).
(ஸஹீஹ் முஸ்லிம் 7: 122)
மற்றொரு இடத்தில் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்;கள்:
إنّي تاركٌ فيكُم الثَقَلَيْن كتابَ الله وَعِتْرَتي أهلَ بَيْتي ما إِنْ تَمَسَّكْتُمْ بهما لَنْ تَضلُّوا أبَداً وإنّهما لَنْ يَفْتَرِقا حَتى يَرِدا عَلَيّ الحَوْضَ َ.
நான் உங்கள் மத்தியில் பெறுமதிமிக்க இரு விடயங்களை விட்டுச்செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள். அது அல்லாஹ்வுடைய வேதமும், எனது குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்துமாகும். இவ்விரண்டும் ஹவ்ழ் (எனும் சுவனத்தின் நீர்த் தடாகத்தில் நீர் அருந்த) என்னிடம் வரும்வரை ஒன்றையொன்று பிரியமாட்டாது.
(திர்மிதி 2:307ளூ தாரமீ 2:432ளூ முஸ்னத் அஹமத் 3:14,17,26,59; ஹாகிம் 3:109)
அஹ்லுல்பைத்தினர் இமாமத் எனும் இப்பாரிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டோர் என்பதை குறித்த ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.
நபியவர்களின் வபாத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ ஓரிறைக் கொள்கையை நம்பிவாழ்ந்த சமூகம் இத்தகைய தலைமைத்துவமின்றி இருக்க முடியாது என்பது குர்ஆன் மற்றும் ஹதீஸின் வாக்காகும்.
அல்லாஹு தஆலா தனது அருள் மறையில் இவ்வாறு கூறுகிறான்:
يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُوْلَـئِكَ يَقْرَؤُونَ كِتَابَهُمْ وَلاَ يُظْلَمُونَ فَتِيلا
(நபியே) நாம் எல்லா மக்களையும் அவர்களுடைய இமாம்களுடன் (தலைவர்களுடன்) அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக அந்நாளில்) எவருடைய செயலேடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ அவர்கள் தம் செயலேடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள். இன்னும் அவர்கள் அணுவளவும் அநீதிக்குள்ளாக மாட்டார்கள். (17:71)
மேலும் குர்ஆன் கூறுகையில்,
وَيَقُولُ الَّذِينَ كَفَرُواْ لَوْلآ أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ إِنَّمَا أَنتَ مُنذِرٌ وَلِكُلِّ قَوْمٍ هَادٍ
இன்னும் இந்நிராகரிப்போர், (நபியே உம்மைப்பற்றி) அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா? என்று கூறுகிறார்கள். நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர். மேலும் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு ஹாதி (நேர்வழிகாட்டி) இருக்கிறார். (13:07)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்; அருளினார்கள்:
من مات ولم یعرف امام زمانه مات میتة جاهلیة
எவர் தனது காலத்திற்குரிய இமாமை (தலைவரை) அறியாமல் மரணிக்கிறாரோ, அவர் ஜாஹிலிய்யா காலத்தில் மரணித்தவராவார்.
(முஸ்னத் அஹமத்)
இவைகளின் அடிப்படையிலே நாயகம் (ஸல்) அவர்கள், தனக்குப் பின்னர் வருகை தரப்போகும் ஒவ்வொரு காலத்திற்குமுரிய இமாம்களை தமது உம்மத்தின் தலைவர்களாகவும், தமது பிரதிநிதிகளாகவும் நியமித்தார்கள்.
இஸ்லாமிய சன்மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை வழிநடாத்த, நபியவர்களின் மூலம் அஹ்லுல்பைத்தைச் சேர்ந்த 12 இமாம்கள் இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒருவரின்பின் ஒருவராக, ஒவ்வொரு காலத்திற்கும் சமூகத்தின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்று அவர்களை வழிநடாத்துவார்கள் என்று மேற்கூறிய ஆதாரங்களின்படி ஷீஆமுஸ்லிம்கள் நம்புகின்றனர்.
இதனை நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
لايزال الاسلام عزيزأ الي اثني عشر خليفة کلهم من قريش
பன்னிரண்டு கலீபாக்கள் (இறைப்பிரதிநிதிகள் தோன்றி) உள்ளவரை இஸ்லாம் நீடித்திருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷி வம்சத்தைச் சேர்ந்தோர்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் கிதாபுல் இமாரா)
عن جابر بن سمرة قال: سمعت رسولالله صلیاللهعلیه وسلم یقول: «لایزال الاسلام عزیزاً إلی اثنیعشر خلیفة» ثم قال کلمة لم أفهمها، فقلت لأبی فقال: کلهم من قریش.
ஜாபிருப்னு சமுரா அவர்கள் அறிவிக்கிறார்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற, நான் செவியுற்றேன். அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். பன்னிரண்டு கலீபாக்கள் (தோன்றி, அவர்கள்) உள்ளவரை இஸ்லாம் நிலைத்திருக்கும் – பின்னர் நபியவர்கள் கூறிய ஒரு வார்த்தை எனக்குக் கேட்கவில்லை. அதனை என் தந்தையிடம் வினவியதற்கு, ‘அவர்கள் அனைவரும் குறைஷி வம்சத்தைச் சேர்ந்தவர்கள்’ என்று (நபியவர்கள் குறிப்பிட்டதாக) அவர் குறிப்பிட்டார்.
(ஸஹீஹுல் புகாரி, கிதாபுல் அஹ்காம், பாபுல் இஸ்திக்லாப்)
குறிப்பிடப்பட்ட திருமறை வசனங்களுக்கமைய ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு இமாம் (ஆன்மீகத்தலைவர்) இருப்பார் என்பதும், மேற்குறித்த நபிமொழிகளுக்கமைய 12 இமாம்கள் இஸ்லாமிய உம்மத்தை வழிநடாத்த நியமிக்கப்பட்டனர் என்பதும் ஷீஆ-இஸ்லாமிய நம்பிக்கைக்கு வலுச்சேர்ப்பதாக உள்ளன.
மேலும் ஷீஆ-இஸ்லாமிய நம்பிக்கைப்படி நபியவர்;களால் நியமிக்கப்பட்ட இமாம்கள் அல்லது அந்த இமாம்கள் மூலம் நேரடியாக அல்லது பொதுநிபந்தனைகளின்படி நிர்ணயிக்கப்படும் முஜ்தஹிதுகள் (மார்க்க சட்டவியலாளர்கள்) முதலானோரையன்றி, வேறு எவரும் மார்க்கத் தீர்ப்புகளை மக்களுக்கு எடுத்துக்கூற அனுமதிக்கப்படமாட்டார்கள்;. நபியவர்களால் நியமிக்கப்பட்ட இமாம்கள், நபியவர்கள் போதித்ததை உள்ளபடி மக்களுக்கு எடுத்துக்கூறும் பொறுப்பைச் சுமந்தவர்களாக இருக்கிறார்கள். அதேநேரம், நபியவர்களின் மார்க்கத்தை எவ்வித திரிபும், மாற்றமும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் பாதுகாவலர்களாகவும் செயற்படுவார்கள்.
ஷீஆமுஸ்லிம்களின் ஆறாவது ஆன்மீகத்தலைவர் இமாம் ஸாதிக் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் கூறுகிறார்கள்:
لاتقبلواعلیناحدیثنا إلاماوافق القرآن والسنة أو تجدون معه شاهدا من احادیثنا المتقدمة… ولاتقبلواعلینا ماخالف قول ربنا تعالی وسنة نبینا محمد(ص) فإنا إذاحدثنا قلنا قال الله عزوجل وقال رسول الله (ص)
குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் அமைவாக இருக்கின்ற எமது கருத்தைத் தவிர, அல்லது அதனை அத்தாட்சிப்படுத்தும் எமது முன்னைய கூற்றுக்களில் சான்று இருந்தாலே தவிர வேறெதனையும் எம்மிடமிருந்து நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். மேலும், எமது இரட்சகனின் சொல்லுக்கு மாற்றமாகவோ, எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமாகவோ அமையும் எமது எந்த விடயத்தையும் நீங்கள் அங்கீகரிக்கவும் வேண்டாம். நிச்சயமாக நாங்கள் எதைச் சொல்வதாக இருந்தாலும், கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான், இறைத்தூதர் கூறுகிறார்கள் என்று (அவர்கள் கூறியவற்றையே நாம்) கூறுகிறோம்.
(ரிஜாலுல் கஷ்ஷீ, பக்:223 ஹதீஸ்:401)
மற்றொரு அறிவிப்பில் இமாம் ஸாதிக் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:
إنا عن الله وعن رسوله نحدث ولا نقول قال فلان وفلان فیتناقض کلامنا إن کلام آخرنا مثل کلام أولنا وکلام أولنا مصداق لکلام آخرنا وإذا أتاکم من یحدثکم بخلاف ذالک فردوه علیه
நிச்சயமாக இறைவனும், அனது தூதரும் கூறியவற்றையே நாமும் கூறுகிறோம். எமது கருத்துக்கள் ஒன்றோடொன்று முரண்படும் வகையில், அவரிவர் சொன்னதாக நாம் எதனையும் கூறுவதில்லை. நிச்சயமாக எம்மில் இறுதியானவரின் கூற்றானது, எம்மில் முதலாம் நபரின் கூற்று போன்றே (முன்பின் முரண்படாது) இருக்கும். எம்மில் முதலாம் நபரின் கூற்று, எம்மில் இறுதியானவரின் கூற்றை மெய்ப்பிப்பதாகவே இருக்கும். (இதனால்) இதற்கு மாற்றமாக எவர் (எம்மிடமிருந்து) எதைக்கூறினாலும் அதனை மறுத்துவிடுங்கள்
(ரிஜாலுல் கஷ்ஷீ, பக்:223 ஹதீஸ்:402)
மார்க்கத்தில் எழும் பிரச்சினைகளுக்கு, குர்ஆன் கூறும் சரியான தீர்வு என்ன? அவைபற்றி நபிவர்களின் வழிமுறை என்ன சொல்கிறது? என்பதை ஒரு முஸ்லிம் தெளிவாக அறிந்து, இறைவனின் எதிர்பார்ப்புக்கமைய நடந்துகொள்ள விரும்பினால், அவற்றை மேற்குறிப்பிட்ட இமாம்கள் ஊடாக மாத்திரமே அறிந்து செயற்படுவதற்குக் கடமைப்பட்டுள்ளார். நபியவர்கள் இல்லாத காலத்தில், அவர்களின் மார்க்கத்தை மக்களுக்குத் தெளிவு படுத்த, உத்தியோகபூர்வமாக நபியவர்களால் நிர்ணயிக்கப்பட்ட இமாம்களின் வழியினூடாக அன்றி, வேறெவரிடத்திலேயும் நபிவழியைத் தேடமுனைந்தால், அது மனிதனை சரியான பாதைக்கு இட்டுச் செல்லாது என்பது ஷீஆ-இஸ்லாத்தின் நம்பிக்கையாகும்.
சாதாரண மார்க்க அறிஞர்கள் குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஏனைய மூலாதாரங்களை வைத்து எடுக்கும் எந்தத் தீர்ப்புகளும், விளக்கங்களும், நபியவர்களது சுன்னாவையும் குர்ஆனின் கருத்தாக்கத்தையும் முழுமையாகத் தழுவியன என்ற உத்தரவாதத்தைக் கொண்டதாக அமையுமா? என்பது ஐயத்திற்கிடமானதே. அண்மைக்கால நிகழ்வுகளை அவதானிக்கும் போது ஒவ்வொரு பிரிவும் தாமே சத்தியத்தில் இருப்பதாகவும், நபியவர்களின் சுன்னாவைத் தாமே யதார்த்தமாகப் பின்பற்றுவதாகவும் கூறி, பிறர் அசத்தியத்திலும், வழிகேட்டிலும் இருப்பதாகக் கருதுகின்றனர்.
இங்கு நபியவர்களின் சுன்னாவை யதார்த்தத்தமாகப் பின்பற்றுவோர் யார்? என வினா எழுப்பப்படுகின்றபோது மார்க்கத்தின் ஆழ அகலத்தை முழுமையாகத் தெரியாதவர் எவரும் குர்ஆன், ஹதீஸை சரியாகப் புரிந்து கொள்வார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. நபிகளாரின் மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துக் கூற அவர்களால் நியமிக்கப்படாத இமாம்கள், முஃப்திகள,; உலமாக்கள் மற்றும் முஜ்தஹிதுகளின் மார்க்க விளக்கங்களையும், தீர்ப்புகளையும் ஏற்றுப் பின்பற்றுவது, மறுமையில் மனிதனை பாதுகாக்கும் என உறுதியாகக் கூறமுடியாது.
ஏனெனில் இத்தகையோர், தவறிழைக்கக்கூடிய சாதாரண மனிதர்கள் என்ற காரணத்தினால் மார்க்க விடயங்களில் இவர்களது இஜ்திஹாத் முயற்சி ஆழங்குன்றி, இவர்களால் வெளியிடப்படும் ஃபத்வாக்கள், விளக்கங்கள் முழுமையற்று விடலாம் அல்லது பிழைத்துவிடலாம். இன்று முஸ்லிம் சமூகத்தில் மார்க்க அறிஞர்களாகக் கருதப்படுவோர், மார்க்கத்தைப் பற்றிய விரிவான பார்வையைக் கொண்டில்லாமலும், மட்டுப்படுத்தப்பட்ட ஹதீஸ்களை மாத்திரம் கண்டுகொண்டும் பத்வாக்களை வழங்குவதும், பின்னர் அதனை திருத்திக்கொண்டு மீளப்பெற்றுக் கொள்வதுமான துரதிஷ்ட நிலைகள், இவற்றுக்குச் சான்றுகளாகும்.
இதன்தொடரில், தமிழ் இஸ்லாமிய உலகில் அண்மைக்காலமாக அறிஞரெனப் பேசப்பட்டு வந்த தமிழ் நாட்டைச்சேர்ந்த ஒருவர், நெஞ்சில் தக்பீர் கட்டுதல், விரலசைத்தல், பெண்கள் சியாரத்திற்கு செல்லுதல், ஸகாத் கொடுத்தல் போன்ற அம்சங்களில் ஃபத்வாக்களை வழங்கி பின்னர் அவற்றில் மாற்றமிருப்பதாகக் கூறி, அவற்றை வாபஸ் பெற்றுவிட்டதாக அறிவித்திருந்தார்.
குர்ஆன், ஹதீஸைப் பற்றிய ஆழ்ந்தறிவில்லாமல், மார்க்;கத்தை விளங்கி மக்களுக்கு ஃபத்வா வழங்கும் அதிகாரத்தை நபியவர்களிடமிருந்தோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்ட அஹ்லுல்பைத் இமாம்களிடமிருந்தோ பெறாத முஃப்திகளுக்கும் இமாம்களுக்கும் கட்டுப்படுதல், மனிதனை நபிகளாரின் சரியான சுன்னாவை விட்டும் வழிதவறச் செய்துவிடும் என்பதை மனதிற்கொள்ள வேண்டும்.
மேற்குறித்த பிழையான முறைகளில் நபிவழியைத் தேடமுனைதல், பிழையான அணுகுமுறை என்பதில் தெளிவைப் பெற்றுள்ள ஷீஆமுஸ்லிம்கள், இதற்காகவே நபியவர்கள் தமக்குப்பின், தம்வழிமுறையை மக்களுக்குப் பிழையின்றி எடுத்துக்கூறவும், அவர்களை இஸ்லாமியப் பாதையில் சரியாக வழிநடாத்தவும் உத்தியோகபூர்வமான பன்னிரு இமாம்களை நியமித்தார்கள் என்ற தத்துவத்தைப் புரிந்து கொண்டார்கள். இதற்காவே, அஹ்லுல்பைத் இமாம்கள் சமூகத்தை வழிநடாத்துவதற்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும், உபதேசங்களையும் நபியவர்கள், ஹஸரத் அலீ அலைஹிஸ்ஸலாம் ஊடாக இவர்களுக்கு வழங்கிவிட்டுத்தான் வபாத்தானார்கள் என்றும் நம்புகிறார்கள். (நான் அறிவின் பட்டினம். அதன் தலைவாயில் அலீ என்ற நபிமொழியைக் கருத்திற்கொள்ளவும்).
ஒருமனிதன் இன்னொரு மனிதனின் உடலில் தோற்றுவிக்கும் ஒரு சிறிய கீறலுக்கான அபராதம் என்னவென்ற மிகச் சிறிய விடயம் முதல் ஒரு அரசை நிருவகிக்கும் வழிமுறை வரைக்குமான பல்வேறு விடயங்கள், எதிர்காலத்தில் உலக அறிவியல் வளர்ச்சியினால் இஸ்லாம் எதிர்நோக்கவிருக்கும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய விடயங்கள் முதலானவற்றை நபி (ஸல்) அவர்கள் தமது அஹ்லுல்பைத் இமாம்களுக்குப் போதித்தார்கள் என்பது ஷீஆ-இஸ்லாத்தின் நம்பிக்கையாகும்.
நபியவர்கள் தமது சமூகத்தின் எதிர்கால தலைமைத்துவத்தைக் கருத்திற்கொண்டு அஹ்லுல்பைத் இமாம்களில் முதலானவரான இமாம் அலி (அலை) அவர்களை அறிவு, ஆன்மீகம் மற்றும் ஆளுமை ரீதியாக நன்கு பயிற்றுவித்தார்கள். இதனால் இமாம் அலி (அலை) அவர்கள் அறிவிலும், ஆளுமையிலும் நிகரற்றவராகத் திகழ்ந்தார்கள். அவர்களின் அறிவாற்றலைப் புலப்படுத்தக் கூடியதாக நஹ்ஜூல் பலாகா எனும் அற்புதநூல் காணப்படுகிறது.
இமாம் அலி (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து கற்றவைகளை தமக்குப்பின் இமாமாகத் திகழ்ந்த இமாம் ஹஸன் (அலை) அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். இமாம் ஹஸன் (அலை) அவர்கள் தமக்குப்பின் வந்த இமாமுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். இவ்வாறு ஒவ்வொரு இமாமும் தமக்குப்பின் தோன்றிய இமாமுக்கு அவற்றைக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். (இதனால்தான், அஹ்லுல்சுன்னா இமாம்களைப் போன்று அல்லாது, தமக்குரிய விசேட உஸ்தாத்மார் அல்லது குத்புகள் இவர்களுக்குக் கிடையாது என்பதையும், தந்தைவழியாக தமது ஆன்மீக அறிவுச்சொத்தை அடைந்துகொண்டார்கள் என்பதையும் கருத்திற்கொள்ளவும்).
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனக்குப்பின் இஸ்லாமிய உம்மத்தை வழிநடாத்துவதற்கு தமது பிரதிநிதிகளாக பன்னிரு இமாம்களைக் கருத்திற்கொண்டு அவர்களின் பெயர்களை தெளிவாக அறிவித்தார்கள். இவ்விடயத்தை பின்வரும் ஹதீஸ் பறை சாட்டுகிறது.
நஃதல் எனும் பெயருடைய மனிதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இறைவனின் ஏகத்துவம் பற்றியும், நாயகத்தின் வபாஅத்திற்குப் பிறகு தோன்றவிருக்கும் பிரதிநிதிகள் பற்றியும் வினவினார். அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள், இறைவனின் ஏகத்துவத்தைப் பற்றி விளக்கிவிட்டு, இமாம்களின் பெயர்களை ஒன்றன்பின் ஒன்றாக பின்வருமாறு கூறினார்கள்.
اِنَّ وَصِيِّي عَلِىُّ بْنُ اَبِي طَالِبْ وَبَعْدَهُ سِبْطَايِي الْحَسَنُ وَالْحُسَيْنُ تَلَوْهُ تِسْعَةُ اَئِمَّةٍ مِنْ صُلْبِ الْحُسَيْنِ قَالَ نَعْثَلُ يَامُحَمَّدُ فَسَمِّهِمْ لِي قَالَ(ص): اِذَا مَضَي الْحُسَيْنُ فَابْنُهُ عَلِىٌّ فَاِذَا مَضَي عَلِىٌّ فَابْنُهُ مُحَمَّدٌ فَاِذَا مَضَي مُحَمَّدٌ فَابْنُهُ جَعْفَرُ فَاِذَا مَضَي جَعْفَرُ فَابْنُهُ مُوْسَي فَاِذَا مَضَي مُوْسَي فَابْنُهُ عَلِىٌّ فَاِذَا مَضَي عَلِىٌّ فَابْنُهُ مُحَمَّدٌ فَاِذَا مَضَي مُحَمَّدٌ فَابْنُهُ عَلِىٌّ فَاِذَا مَضَي عَلِىٌّ فَابْنُهُ الْحَسَنُ فَاِذَا مَضَي الْحَسَنُ فَابْنُهُ الْحُجَّةُ مُحَمَّدٌ الْمَهْدِي فَهؤُلاَءِ اثْنَا عَشَرَ .
எனது பிரதிநிதி அலி இப்னு அபீதாலிப், அவருக்குப்பின் எனது பேரர்களான ஹஸன், ஹுஸைன் ஆகியோராவர். அதன் பின் ஹுஸைனின் வழித்தோன்றலிலிருந்து ஒன்பது இமாம்கள் தோன்றுவர் என நாயகம் (ஸல்) அவர்கள் கூற, அவர்களின் பெயர்களையும் குறிப்பிடுமாறு அம்மனிதர் வேண்டியதற்கு நபியவர்கள் ஹுஸைனின் காலம் முடிந்த பிறகு அவரது மகன் அலியும் (இமாம் ஸஜ்ஜாத்), அலிக்குப்பின் அவரது மகன் முஹம்மதும் (இமாம் பாக்கிர்) முஹம்மதிற்குப்; பின் அவரது மகன் ஜஃபரும் (இமாம் ஜஃபர் ஸாதிக்), ஜஃபருக்குப்பின் அவரது மகன் மூஸாவும் (இமாம் காழிம்), மூஸாவுக்குப் பிறகு அவரது மகன் அலியும்(இமாம் ரிழா), அலிக்குப் பிறகு அவரது மகன் முஹம்மதும் (இமாம் ஜவாத்), முஹம்மதுக்குப் பிறகு அவரது மகன் அலியும் (இமாம் ஹாதீ), அலிக்குப் பிறகு அவரது மகன் ஹஸனும் (இமாம் அஸ்கரீ), ஹஸனுக்குப் பிறகு அவரது மகன் முஹம்மத் மஹ்தியும் ஆவார்கள். இவர்களே அப்பன்னிரண்டு பேர் (இமாம்கள்) ஆவார்கள் என பதிலளித்தார்கள்.
(யனாஃபீஉல் மவத்தா-ஹனஃபீ கன்தூஸீ, பக்கம்-441)
ஆகவே, அல்லாஹு தஆலாவுடைய அல்-குர்ஆனை சரியாக விளங்கிக்கொள்ளவும், நபி (ஸல்) அவர்களின் சுன்னா வழிமுறையை சரியாக அடைந்துகொள்ளவும் முனையும் ஒவ்வொருவரும், நபிகளாரின் ‘அஹ்லுல்பைத்’ ஆகிய பரிசுத்தக் குடும்பத்தின் ஊடாகப் பயணிப்பதே மிகச்சரியானதாகும்.