பொறுமை கொள்வோம்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:
‘உங்களால் முடியுமானால் உறுதியோடு பொறுமையாக ஓர் செயலில் ஈடுபடுங்கள். உங்களால் முடியாதென்றால் பொறுமையாக இருந்துகொள்ளுங்கள். பொறுமையாக இருப்பதன் மூலம் நீங்கள் அறியாத பல நலவுகளைக் கண்டுகொள்வீர்கள். மேலும் அறிந்து கொள்ளுங்கள் வெற்றியானது பொறுமையோடே இருக்கிறது. இன்பம், துன்பத்தை பின்தொடர்ந்தே உள்ளது. இலகுவான விடயங்கள் கடினத்தினை பின்தொடர்ந்தே உள்ளன. நிச்சயமாக ஒவ்வொரு கடினத்திற்குப் பின்னர் இலகுவான விடயங்கள் உள்ளன.’
(மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ்: பாகம் 4 பக்கம் 413)
சில நேரங்களில் மனிதன் பொறுமையினை பேணுகிறான். இப்பொறுமை ஓர் இழப்பின் மீதோ அல்லது இறை வழிபாட்டிற்காகவோ அல்லது பாவங்களிலிருந்து தன்னை தடுத்துக் கொள்வதற்காகவோ அமைந்திருக்கிறது. இவை பொறுமையின் வகைகளாகும்.
மனிதன் தன்னம்பிக்கையோடு பொறுமைகாத்தால், உதாரணமாக ஓர் இழப்பை சந்திக்க நேரிட்டால் அதனை பொறுமையோடு ஏற்றுக்கொண்டு, இது இறைவனின் சோதனையாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறான பொறுமை அம்மனிதனுக்கு சிறந்ததோர் விடயமாகும். அல்லது இறைவனை வழிப்படும் விடயத்தில், இறைவனை நெருங்கும் நோக்கோடு ஓர் வழிபாட்டில் ஈடுபட வேண்டும். இதுவும் பொறுமையின் ஓர் வகையாகும்.
மூன்றாவது அம்சமே பாவங்கள் செய்யாமல் இருப்பதை விட்டும் பொறுமை காப்பதாகும். ஷைத்தான் மற்றும் மனோஇச்சைகளுக்கு எதிராக முகம் கொடுத்து பாவச்செயல்களிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள பொறுமையைக் கடைப்பிடிப்பதாகும்.
சில நேரங்களில் மனிதன் பொறுமையைக் கையாளுகிறான். என்றாலும், அவனுக்கு அப்பொறுமையின் பயனை சரியாக ஊகித்தறிய முடியாமல் போகலாம். இதற்காகவே, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘நிச்சயமாக பொறுமையில் நீங்கள் அறியாத பல்வேறு நலவுகளைக் கண்டுகொள்வீர்கள்’
ஆன்மீகத் தலைவர் இமாம் செய்யித் அலீ காமினீ அவர்களின் உரையிலிருந்து…