ஏழாம் அமர்வு – தொடர் 05

(நபிமார்களை விடவும் அலீ சிறந்தவரா? என்ற வாதத்தின் தொடரும், அதிசிறப்பின் அடிப்படையில் கிலாஃபத்திற்கு அவரே தகுதியானவர் என்ற வாதமும்)

‘ஹதீஸுத் தஷ்பீஹ்’ எனும் உவமை ஹதீஸ் பற்றி கஞ்ஜி ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் விளக்கம்

சுன்னி இமாம் ஷேய்க் அல்-ஃபகீஹ் முஹத்திஸுஷ் ஷாம் சத்ருல் ஹுஃப்பாழ் முஹம்மது பின் யூசுஃப் கஞ்ஜி அல்-ஷாஃபியீ (ரஹ்) அவர்கள், இந்த ஹதீஸை பதிவுசெய்துவிட்டு, அதைப் பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வஸ்துவினுடைய அறிவையும், பண்புகளையும் ஹஸரத் ஆதமுக்கு இறைவன் கற்றுக்கொடுத்திருந்தான் என்பதன் அடிப்படையில்தான் இமாம் அலீ (அலை) அவர்களை ஹஸரத் ஆதம் (அலை) அவர்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து சூறதுல் பகராவில், ‘ஆதமுக்கு எல்லாவற்றினுடைய அறிவையும் கற்றுக்கொடுத்தான்’ (02:31) என்று அல்லாஹு தஆலா குறிப்பிடுகிறான்.

وَ عَلَّمَ آدَمَ الْأَسْماءَ کُلَّها

அவ்வாறே, இமாம் அலீ (அலை) அவர்களுக்கு அதைப் பற்றிய அறிவும், தெளிவும், அதன் பொருளை ஊகித்தறியும் திறனும் இருந்தே ஒழிய எந்தவொரு விஷயமும், நிகழ்வும், சம்பவும் கிடையாது. இப்படியான தெய்வீக அறிவின் மூலம் தான் ஹஸரத் ஆதம் (அலை) அவர்கள் கிலாஃபத் எனும் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டார்கள். இது பற்றி சூறதுல் பகராவில், ‘நிச்சயமாக பூமியில் நான் கலீஃபாவை நியமிக்கப்போகிறேன்’ (02:30) என்பதாக அல்லாஹு தஆலா குறிப்பிடுகிறான்.

إِنِّی جاعِلٌ فِی الْأَرْضِ خَلِیفَهً

எனவே, ஹஸரத் ஆதம் (அலை) அவர்களுடைய அறிவுக்கு இமாம் அலீ (அலை) அவர்கள் ஒப்பிடப்படுவதன் அடிப்படையில்தான், அந்த அறிவே ஹஸரத் ஆதம் (அலை) மலக்குகளை விட சிறந்தவராகவும், உயர்ந்தவராகவும், கலீஃபா பதவிக்கு தகுதியானவராகவும் ஆகுவதற்கு காரணமாக இருந்ததால், இப்படியான அறிவைக்கொண்ட இமாம் அலீ (அலை) அவர்களும் எல்லாப் படைப்புகளை விடவும் உயர்ந்தவராகவும், இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பிறகு கிலாஃபத் பதவிக்குத் தகுதியானவராகவும் திகழ்கிறார்கள் என்பதை ஒவ்வொரு மனிதரும் புரிந்துகொள்வார்கள்.

மேலும், இமாம் அலீ (அலை) அவர்கள் ஹஸரத் நூஹ் (அலை) அவர்களோடு ஒப்பிடப்படுவதற்குக் காரணம், காஃபிர்கள் விடயத்தில் கடுமையானவராகவும், நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் கருணையாளராகவும் காணப்பட்டார்கள். இவ்வாறுதான், அல்லாஹு தஆலா, ‘அவரோடு இருப்பவர்கள் காஃபிர்களோடு கடுமையானவர்களாகவும், தங்களுக்கு மத்தியில் இரக்கமுடையோராகவும் இருக்கிறார்கள்’ என்று கூறியதன் மூலமாக இமாம் அலீ (அலை) அவர்களின் பண்பைக் குறிப்பிடுகிறான்.

وَ الَّذِینَ مَعَهُ أَشِدّاءُ عَلَی الْکُفّارِ رُحَماءُ بَیْنَهُمْ

நான் முன்பு கூறியது போல, இமாம் அலீ (அலை) அவர்களின் பண்பை குறிப்பிட்டு அருளப்பட்ட இந்த வசனமும் மேற்படி வாதத்திற்கான சான்றாக இருக்கிறது.

இவ்வாறுதான், ஹஸரத் நூஹ் (அலை) அவர்கள் காஃபிர்களின் விடயத்தில் மிகவும் கடுமையானவராகக் காணப்பட்டார். இது பற்றி குர்ஆனில், ‘மேலும், ஹஸரத் நூஹ் (அலை), என் இறைவா! இப் பூமியின் மீது காஃபிர்கள் எவரையும் வசித்திருக்க விட்டுவிடாதே’ (71:26) என்று கூறினார்.

وَ قالَ نُوحٌ رَبِّ لا تَذَرْ عَلَی الْأَرْضِ مِنَ الْکافِرِینَ دَیّاراً

மேலும், இமாம் அலீ (அலை) அவர்கள் ஹஸரத் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய இரக்க குணத்தோடு ஒப்பிடப்படுவதற்குக் காரணம், குர்ஆனில் ‘நிச்சயமாக ஹஸரத் இப்ராஹீம் (அலை) மிகவும் பொறுமையாளரும், இரக்கமுள்ளவரும் ஆவார்’ (09:114) என்று அவருடைய இரக்க குணத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

إِنَّ إِبْراهِیمَ لَأَوّاهٌ حَلِیمٌ

இப்படியான ஒப்புமைகளும், உருவகங்களும் இமாம் அலீ (அலை) அவர்கள் நபிமார்களின் ஒழுக்கநெறிகளைக்கொண்ட பண்பாளர் என்பதையும், இறைவனால் பரிசுத்தப்படுத்தப்பட்டோரின் பண்புகளைக் கொண்டு வருணிக்கப்பட்டவர் என்பதையும் புலப்படுத்துகின்றன.

எனவே, அன்பர்களே, நீங்கள் கொஞ்சம் நியாயமாகப் பார்த்தீர்களேயானால், ஷீஆ மற்றும் சன்னி கிரந்தங்களில் வந்துள்ள இந்த ஒப்புமை ஹதீஸின் உள்ளடக்கத்திலிருந்து, அமீருல் முஃமினீன் இமாம் அலீ (அலை) அவர்கள் மிக உயர்வான பண்புகள் அனைத்தையும் பெற்றிருப்பதோடு, அவருடைய ஒவ்வொரு பண்பும் நபிமார்களின் மிகச்சிறந்த பண்புகளை ஒத்திருக்கின்றன, இதனால் பொதுவிதியின்படி நபிமார்கள் பெற்றுள்ள உயரிய அந்தஸ்தில் அவர் காணப்பட வேண்டும் என்ற கருத்தை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், இந்த ஒப்புமை ஹதீஸ், இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர ஏனைய பெரும் நபிமார்களை விடவும் இமாம் அலீ (அலை) அவர்கள் மேலானவர் என்பதற்கு மற்றொரு சான்றாகும். ஏனெனில், அவர் பெரும் நபிமார்களில் ஒவ்வொருவரோடும், அவர்களுக்குரிய விசேட சிறப்புப் பண்புகளில் சமமானவராக இருக்கும் போது, ஏனையோரின் நல்லொழுக்கத்திலும் சிறப்புப் பண்புகளிலும் கூட அவர் தனித்துவம் பெற்றிருக்கும் போது, அவர் அனைத்து நபிமார்களை விடவும் சிறந்தவராக அவசியம் இருந்தாக வேண்டும்.

சுன்னி அறிஞர் ஷேய்க் முஹம்மது இப்னு தல்ஹா அல்-ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் மேற்படி ஹதீஸை மேற்கோள் காட்டி மதாலிபுல் சுஆல் எனும் நூலில் இதே அர்த்தத்தைக் குறிப்பிட்டுவிட்டு, பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்.
நபி (ஸல்) அவர்கள், இந்த ஹதீஸின் மூலமாக ஹஸரத் ஆதம் (அலை) உடைய அறிவைப் போன்ற அறிவும், ஹஸரத் நூஹ் (அலை) உடைய உள்ளச்சத்தைப் போன்ற உள்ளச்சமும், ஹஸரத் இப்றாஹீம் (அலை) உடைய அன்பைப் போன்ற அன்பும், ஹஸரதம் மூஸா (அலை) உடைய மகத்துவத்தைப் போன்ற மகத்துவமும், ஹஸரதம் ஈஸா (அலை) உடைய வழிபாட்டைப் போன்ற வணக்கவழிபாடும் இமாம் அலீ (அலை) அவர்களுக்கு இருப்பதை உறுதி செய்துள்ளார்கள்.

மேலும், அவர் குறிப்பிடுகையில், ரிஸாலத்தைப் பெற்ற நபிமார்களின் மேற்கூறிய பண்புகளோடு ஒப்பிட்டுக் கூறிய விதத்தில் இப்பண்புகள் இமாம் அலீ (அலை) அவர்களை மிகவும் உயர்வான அந்தஸ்திற்கு இட்டுச் சென்றுள்ளது என்பதாக கூறியுள்ளார்.

و تعلوا هذه الصفات الی اوج العلی حیث شبّهها بهؤلاء الانبیاء المرسلین من الصفات المذکورة

இமாம் அலீ (அலை) அவர்களைத் தவிர, முந்திய சமுதாயங்களில் ஏனைய ஸஹாபாக்கள், தாபியீன்கள் அல்லது அவர்கள் அல்லாதோரில் இப்பெரும் நபிமார்களின் நற்பண்புகளை, புகழுக்குரிய ஒழுக்கநெறிகளை முழுமையாகப் பெற்றிருந்த எவரையாவது கண்டுகொள்ள முடியுமா? அதேநேரம், தங்களுடைய பெரும் சுன்னி அறிஞர்களாலேயே இவ்விடயம் ஒப்புக்கொள்ளப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஷேய்க் சுலைமான் பல்கி ஹனஃபி (ரஹ்) அவர்கள் யனாபீஉல் மவத்தா கிரந்தத்தின் 40வது அத்தியாயத்திலே மனாகிபுல் குவாரஸ்மியில் முஹம்மது இப்னு மன்சூர் என்பவரிடமிருந்து பின்வரும் விடயத்தை பதிவு செய்கிறார். (அஹ்லுல் சுன்னாக்களில் ஹம்பலி மத்ஹப்பினரின் இமாமான) இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறக்கேட்டேன்: இமாம் அலீ இப்னு அபூ தாலிப் (அலை) அவர்களுக்கு இருக்கின்ற சிறப்பைப் போன்றதான எந்தவொரு சிறப்புகளும் ஸஹாபாக்களில் எந்தவொருவருக்கும் குறிப்பிட்டு வரவில்லை என்பதாக அவர் குறிப்பிட்டார்கள்.

ما جاء لاحد من الصحابه من الفضائل مثل ما لعلیّ بن أبی طالب

முஹம்மது இப்னு யூசுப் கஞ்ஜி அல்-ஷாபியீ (ரஹ்) அவர்கள், கிஃபாயதுத் தாலிப் கிரந்தத்தின் 2வது அத்தியாயத்திலே முஹம்மத் இப்னு மன்சூர் தூஸி என்பவரிடமிருந்து பின்வரும் விடயத்தை பதிவு செய்துள்ளார். இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: இமாம் அலீ இப்னு அபு தாலிப் (அலை) அவர்களுக்கு குறிப்பிட்டு வந்துள்ள சிறப்புக்கள் எதுவும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் எவருக்கும் குறிப்பிட்டு வரவில்லை.

ما جاء لاحد من اصحاب رسول اللّه ما جاء لعلیّ بن أبی طالب

அமீருல் முஃமினீன் இமாம் அலீ (அலை) அவர்களின் அதிசிறப்பு பற்றிய கருத்துக்கள் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களுக்கு மாத்திரம் உரியதல்ல. மாறாக, தங்களின் நேர்மையான சுன்னி அறிஞர்களில் பெரும்பாலானவர்கள் இக்கருத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இப்னு அபில் ஹதீத் முஃதாஸிலி அவர்கள், தமக்குரிய ஷரஹு நஹ்ஜில் பலாகா நூலின் முதலாம் பாகம், 46வது பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள். நிச்சயமாக இமாம் அலீ (அலை) கிலாஃபத்திற்கு தகுதியானவராக காணப்பட்டார்கள். இது ரிவாயத்தின் அடிப்படையில் மாத்திரமல்ல. மாறாக, அதிசிறப்பைப் பெற்றமையின் அடிப்படையிலும் தான். நிச்சயமாக அவர், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு மனிதர்களில் மிகச்சிறந்தவராகவும், எல்லா முஸ்லிம்களை விடவும் கிலாஃபத்திற்குத் தகுதியானவராகவும் இருக்கிறார்கள்.

انّه علیه السّلام کان اولی بالامر و احقّ لا علی وجه النص بل علی وجه الافضلیّه فانّه افضل البشر بعد رسول اللّه و احقّ بالخلافه من جمیع المسلمین

உங்கள் முன்னிலையில் உலகத்தின் பெருமைமிக்க இறைவனின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். சற்று நிதானமாகச் சிந்தியுங்கள். எவ்வித சிந்தனையும், கிரகித்தலும் இன்றி, முன்னோரை – ஸலஃபுகளைப் பின்பற்றிச் செல்கின்ற மரபின் அடிப்படையில் இப்படியான பண்புகளையும், சிறப்புகளையும் பெற்றிராதோரை இச்சிறப்புகளைப் பெற்ற இமாம் அலீ (அலை) எனும் மிகப்பெரும் ஆளுமையை விடவும் முற்படுத்தியமை நியாயம் தானா? அரசியல் மற்றும் தரப்படுத்தல் விடயத்தில் உம்மத்தின் மிகச்சிறந்த ஒருவரை வீட்டில் முடக்கிவிட்டு, உண்மையில் சிறப்பில் பிந்தியோரை கிலாஃபத் எனும் விடயத்திற்கு தெரிவு செய்தமை தொடர்பில் முன்னோரின் சிந்தனை மற்றும் கிரகிப்பு பற்றி புத்திஜீவிகளும், சான்றோரும் நகைப்புறமாட்டார்களா? குறைந்தது கிலாஃபத் போன்ற மிகப்பெரும் விடயத்தில் கலந்தாலோசிப்பதற்காக வேண்டி இமாம் அலீ (அலை) அவர்களை ஸகீஃபாவில் பங்கெடுக்க அழைப்பு விடுத்திருக்கலாமே? (அவ்வாறு செய்யவில்லை). மாறாக, இப்பெரும் சிறப்புவாய்ந்தவரை முழுவதுமாக தவிர்த்து ஒதுக்கிக்கொண்டார்களே?! (அநியாயம் இல்லையா?).

ஹாபிழ் (சுன்னி அறிஞர்): நாம் நீதமற்றோரா? அல்லது எவ்வித சான்றும், காரணமும் இன்றி நபித்தோழர்கள் ஏனையோரை முற்படுத்தி, கிலாஃபத்தை எடுத்துக்கொண்டார்களா? உண்மையில் தாங்கள் எங்களை சிந்தனையற்றோர், அறியாதோர், கண்மூடித்தனமாக பின்பற்றுவோர் என்று நினைத்துக்கொண்டீர்களா? ‘இஜ்மா’ என்பதை விடவும் மேலானதாக எந்த ஆதாரம் இருக்க முடியும்? எல்லா ஸஹாபாக்களும், உம்மத்தும் ‘இஜ்மா’ எனும் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் ஹஸரத் அபூபக்கர் (ரழி) அவர்களை கிலாஃபத்திற்குத் தெரிவு செய்து, அவருக்குக் கட்டுப்பட்டுள்ளார்கள். இவ்விடயத்தில் இமாம் அலீ (அலை) அவர்களும் உட்பட.

(ஷீஆ அறிஞர் முன்வைத்த இவ்வாதத்தின்படி, அதாவது ரிவாயத்துகளின் அடிப்படையில் ஏனைய எல்லா ஸஹாபாக்களை விடவும் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் அதிசிறப்பு வாய்ந்தவராக இருக்கும் நிலையில் அவரை விடவும் சிறப்பில் பிந்தியோரை கிலாஃபத்திற்கு தெரிவுசெய்தமை சரியானதல்ல என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை புரிந்துகொண்ட சுன்னி அறிஞர் இவ்வாதத்தை திசைதிருப்பி வேறொரு கோணத்தில் கொண்டு செல்வதற்காக ‘இஜ்மா’ அடிப்படையில் அதை சரி காண்பதற்காக புதிய வாதத்தைத் தொடங்குவதைப் புரிந்துகொள்ள முடிகிறது). (தொடரும்…)

Scroll to Top
Scroll to Top