சூறா அல்-ஃபாத்திஹா
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்)
‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம்
சூறா அல்-பராஅத் தவிர்ந்த, ஏனைய அனைத்து சூறாக்கள் போலவே, இந்த சூறா அல்-ஃபாத்திஹாவும், அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகிறது. சூறா அல்-பராஅத் ‘பிஸ்மில்லாஹ்…’ எனும் இப்பெரும் வாக்கியத்துடன் தொடங்காமைக்குக் காரணம், பிஸ்மில்லாஹ் என்பது கருணை, இரக்கம், அக்கறை ஆகியவற்றை சுட்டி நிற்கிறது. அதேநேரம், சூறா அல்-பராஅத்தின் முதல் வசனங்கள் கோபம், ஆதிக்கம், பழிவாங்கல், புறக்கணிப்பு மற்றும் வெறுத்து ஒதுக்குதல் ஆகியவற்றைச் சுட்டி நிற்கிறது. அதனால், சூறா அல்-பராஅத் ஆனது, பிஸ்மில்லாஹ் என்ற வாக்கியத்துடன் தொடங்குவது ஏற்புடையதன்று. திருக்குர்ஆனுக்கு விரிவுரை வழங்கும் தொடரிலே சூறா அல்-பராஅத்தை எட்டும்போது, அதைப் பற்றி நாம் அதிகம் பேசலாம்.
திருக்குர்ஆனின் சூறாக்கள் உட்பட இஸ்லாத்திலுள்ள ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு அசைவும், செயலும் ஏன் இறைவனின் பெயரால் தொடங்குகிறது? இறைவனின் பெயரில் தொடங்குவதானது இக்காரியத்தின், இவ்வார்த்தையின் நோக்குதிசையையும், எதனுடன் இணைக்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
அவ்வாறுதான், ஏனையோரின், ஏனையவற்றின் பெயரால் தொடங்குவதும் இதே தனித்தவத்தையே கொண்டிருக்கும். நீங்கள் இறைவனின் பெயரால் ஒன்றைத் தொடங்கும்போது, இது இறைவனோடு தொடர்புடையது என்பதை உணர்த்துகிறீர்கள். அவ்வாறே, இக்காரியம் மீளுவதும் இறைவனின் பாலானது. அதாவது, இக்காரியத்தின் நோக்குதிசை இறைவனின் பால் உள்ளது என்பதை உணர்த்துகிறீர்கள்.
நீங்கள் ஜோதிமிகு வார்த்தைகளின் தொகுப்பாகிய ஒரு சூறாவை இறைவனின் பெயரால் தொடங்கும்போது, இந்த வார்த்தையானது இறைவனோடு தொடர்புடையதாகவும், இறைவனை நோக்கியதாகவும். இறைவனை அறிந்துகொள்ளும் நோக்கிலும் அமைந்துவிடுகிறது.
‘பிஸ்மில்லாஹ்’ என்ற சொற்றொடரில் உள்ள ‘பா’ என்பது பாரசீக மொழியில் கிட்டத்தட்ட அதே அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் அதே வார்த்தையான ‘பா’ (கொண்டு, ஆல்) என்ற உருபாக உள்ளது. அவ்வாறுதான் ‘இஸ்ம்’ என்பது பெயர் என்பதைக் குறிக்கிறது. ‘பிஸ்மில்லாஹ்’ என்றால் அல்லாஹ்வின் பெயரால் என்பது அர்த்தம். அதாவது, இந்தப் பெயரால் உதவிநாடுவதன் மூலம், இந்தப் பெயரோடு பிணைப்பை ஏற்படுத்துவதனால், இந்தப் பெயரைக் கவனத்திற்கொண்டு (ஆரம்பிக்கிறேன்) என்பதாக இது அமைகிறது.
அல்லாஹ் என்பது இறைவனின் பெயர். சிலர், ‘அல்லாஹ்’ என்ற பதம் ‘அல்-இலாஹ்’ அதாவது ‘இலாஹ்’ என்ற பதத்தில் ‘அலிஃப்’ மற்றும் ‘லாம்’ என்ற ஆளறி உருபுகள் (ஹுரூஃபுத் தஃரீஃப்) வந்துள்ளன என்று கருதுகின்றனர். இதன்;படி, அல்-இலாஹ் என்றால் வணக்கத்துக்குரியன் என்பது பொருள்.
அவன் எல்லா உள்ளங்களையும் உயிர்களையும் தன்பால் கவர்ந்து ஈர்த்துக்கொண்ட ஒருவனாக இருக்கிறான். இவ்வாறு வானம், பூமி மற்றும் எல்லா வஸ்துகளையும் படைத்தவனாக அறியப்படும் ‘வணக்கத்துக்குரியவன்’ என்று பொருள் தருகின்ற ‘அல்-இலாஹ்’ என்ற சொல், படிப்படியாக ஒன்றிணைந்து, இரண்டறக் கலந்து ‘அல்லாஹ்’ என்று ஆகிவிட்டது.
எனினும், சிலரின் கருத்துப்படி, ‘அல்லாஹ்’ என்ற சொல் ‘அல்-இலாஹ்’ என்ற சொல்லிலிருந்து மருவியதல்ல. மாறாக, ‘அல்லாஹ்’ என்ற வார்த்தை இறைவனான அந்தப் படைப்பாளனின் பரிசுத்த சுயத்திற்கு இடுகுறிப் பெயராகவே வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இறைவனுக்கு நாம் வழங்குகின்ற பெயர்கள் அவனையே சான்றாகக் கொண்டுள்ள இறைவனின் பண்புகளாக உள்ளன. இந்தவகையில், ‘அல்லாஹ்’ என்பது இறைவனின் பெயராகும். எனவே, ‘பிஸ்மில்லாஹ்…’ என்றால் ‘… இறைவனின் பெயரால்’ என்பதே அர்த்தமாகும்.