Fifth Anniversary Commemoration of the Wahhabi terrorist attack on Masjid Sayyidina Muhammad (pbuh) Shia mosque in Sri Lanka
கல்குடா நிருபர் –
‘வஹ்ஹாபிஸப் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்’ என்ற தொனிப்பொருளில் மஸ்ஜிதே செய்யிதினா முஹம்மத் (ஸல்) பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஜந்தாவது ஆண்டு நிறைவினை நினைவு கூறும் முகமாக ‘கருப்பு வெள்ளி நாள்’ நினைவேந்தல் நிகழ்வு கடந்த 16.04.2022 வெள்ளிக்கிழமை பி.ப 5.30 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு கல்குடா தொகுதியில், மீராவோடை ஆலீம் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதே செய்தினா முஹம்மத் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இப்பள்ளிவாயலை முகாமைத்துவப்படுத்துகின்ற ஹுசைனிய்யா இஸ்லாமியக் கல்வி கலாச்சார மேம்பாட்டு நிலையத்தின் தலைவர் மதிப்புக்குரிய அஷ்ஷேய்க் ஏ.எல்.மர்சூக் (மன்பஈ) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதிப்புக்குரிய மௌலவி ஜே.அஸ்ரப் அலி ஆசிரியர் கலந்து கொண்டு விசேட உரையாற்றினார்.
துவா பிரார்த்தனை இடம்பெற்றதுடன் பள்ளிவாயல் தாக்கப்பட்டமை அதனால் ஏற்பட்ட சொத்து சேதம், உயிர் ஆபத்து மற்றும் சந்தேக நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விசேட உரைகள் இடம்பெற்றதுடன் இனிமேலும், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற வாய்ப்பளிக்கக் கூடாது என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
மஸ்ஜிதே செய்யிதினா முஹம்மத் (ஸல்) பள்ளிவாயலானது இலங்கையின் பாரம்பரிய ஷீஆ முஸ்லிம்களுக்குரிய வணக்கஸ்த்தலமாகும்.
இது கடந்த 2017.06.08 ஆம் திகதி (புனித ரமழான் மாதத்தின் பதிமூன்றாம் நாள், வெள்ளி இரவு) அன்று குர்ஆன் மஜ்லிஸில் கலந்துகொண்ட முஸ்லிம்களின் மீது கல்குடா வஹ்ஹாபிஸக் குண்டர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பள்ளிவாயலும் உடைக்கப்பட்டதுடன், வணக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் சிலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தினை நினைவு கூறும் முகமாக வருடா வருடம், இவ் நிகழ்வு மஸ்ஜிதே செய்யிதினா முஹம்மத் (ஸல்) பள்ளிவாயல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இறுதியில் இப்தார் நிகழ்வும், தொழுகையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு, பயங்கரவாதத்திற்கு எதிரான தமது ஐக்கியத்தினை வெளிப்படுத்தினர்.
Other Sources: www.beetamil.com/2022/04/blog-post_16.html www.minnal24.com/?p=71716 www.facebook.com/askmediadannews/videos/574440780337383