முதன் முதலில் மனிதன் அண்ணாந்து பார்த்தபோதே வானியல் பிறந்துவிட்டது. வானியலை, “புரதானமான இயற்கை விஞ்ஞானம்” என்பார்கள். இரவில் நட்சத்திரங்கள் ஓடுவதையும் நிலவையும் பார்த்துப் புனையப்பட்ட கதைகள் உலகின் பழைய நாகரிகங்கள் அனைத்திலும் உண்டு.
முறையாக வானியலைப் படிப்பதற்கு முன்பே இவ்வகைக் கதைகள் எங்கும் பரவின. நிலவில் பாட்டி உட்கார்ந்திருந்த கதை, நிலவைப் பாம்பு விழுங்கிய கதை எல்லாம் நாமும் கேட்டுத்தானே வளர்ந்தோம். பழங்காலக் கட்டடக் கலைகளிலும் கதைகளிலும் வானியலின் தாக்கம் இருந்திருக்கிறது.
வானியல் கண்டுபிடிப்புகளின் உச்சம் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு ஓராயிரம் வருடங்கள் முன்னதாகவே வேறோர் இடத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது என்பது ஆச்சரியமான உண்மை!
ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஆறாம் நூற்றாண்டில் ஐரோப்பா “இருண்ட காலத்தில்” (கி.பி 500-1300) நுழைந்து கொண்டிருந்தது. அறிவியலும் புதிய கண்டுபிடிப்புகளும் தேவாலயங்களுக்கு எதிராக இருந்ததால் தண்டிக்கப்பட்டன. அறிவு உறங்கிற்று. கல்வி அரிதானது. மூட நம்பிக்கைகள் புது அவதாரம் எடுத்து மகிமைப் படுத்தப்பட்டன. அதனால்தான் இக்காலத்தை ஐரோப்பாவின் இருண்டகாலம் என்கிறது வரலாறு!!
இருண்ட காலத்தில் ஐரோப்பா “நித்திரை” கொண்டிருந்த பொழுது, ஸ்பெயினிலிருந்து எகிப்து மற்றும் சீனாவின் பகுதிவரை நீண்டு கிடந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் தனது “பொற்காலத்தில்” நுழைந்து கொண்டிருந்தது. இராக்கிலும், ஈரானிலும் வானியலும் விண்வெளியும் முஸ்லிம் அறிஞர்களுக்கு உவகையூட்டுவதாக இருந்தன. அக்கால கட்டத்தில் (கி.பி 800) விண்வெளி பற்றிக் கிடைத்த ஒரே ஆவணம் முதல் நூற்றாண்டில் கிரேக்கத்தில் எழுதப்பட்ட டாலமி(Ptolomy)யின் அல்மேகஸ்ட் (Almagest) மட்டுமே. இந்நூல் இன்றுவரை அறிஞர்கள் மத்தியில் பழங்கால அறிவியலிற்குச் சான்றாதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. டாலமிக் கோட்பாடு என்பது பூமியை மையப்படுத்தி மற்ற கோள்கள் சுற்றிக் கொண்டுவருவதாக இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்தானே. டாலமியின் கோட்பாடு, சுமார் எழுநூறு ஆண்டுகாலம் கழித்து எண்ணூறுகளில் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டு முஸ்லிம் அறிஞர்களின் ஆய்வுக்கு உள்ளானது.
முதன் முதலாக டாலமியின் கோட்பாட்டில் இருந்த குறைகளைச் சுட்டிக் காட்டி நிவர்த்தி செய்ய முற்பட்டவர் எகிப்தின் அஹ்மது இப்னு யூஸுஃப் ஆவார். கோள்களின் இயக்கங்களையும் அவற்றின் சுற்றுப் பாதைகளையும் கணக்கிட்டு, பூமியின் சுழலும் அச்சில் ஒவ்வொரு எழுபது வருடங்களுக்கும் ஒரு பாகை( 1 – Degree) மாற்றம் வருவதைக் கண்டறிந்தார் இப்னு யூஸுஃப். டாலமி இதை நூறு வருடங்கள் என்று பிழையாகக் குறித்திருந்தார். பத்தாவது நூற்றாண்டுவரை பூமியைச் சுற்றியே மற்ற கிரகங்கள் இயங்குகின்றன என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். இப்னு யூஸுஃப் மற்றும் இப்னுல்-ஷாத்திரின் கண்டுபிடிப்பு, அன்றிருந்த வானியலின் கூற்றுகளை அடியோடு மாற்றி நவீன வானியலுக்கு அடித்தளமிட்டது. பதினாறாம் நூற்றாண்டின் நிக்கோலஸ் கொப்பர்நிகசின் சூரிய மையக் கோட்பாடு (Heliocentrism) இவ்விரு முஸ்லிம் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளின் மீது கட்டமைக்கப்பட்டதே.
அதேசமயம் முஸ்லிம் அறிஞர்களால் முன்னெடுக்கப்பட்ட கணிதக் கண்டுபிடிப்புகள் வானியல் ஆராய்ச்சிக்குத் துணை போயின. அல்ஜிப்ரா மற்றும் கோளகக் கோணவியல் ஆகியனவற்றின் வருகை, நட்சத்திரங்களுக்கு ஆராய்ச்சியை நகர்த்தியது. “இந்தக் காலகட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அல்லாமல், ஏராளமான ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புக்களுமாகப் பரந்து கிடந்தன”(1).
எட்டாவது நூற்றாண்டில் கலீஃபா மஅமுன் அல்ரஷீத் ஆட்சிக்காலத்தில் பக்தாதில், உலகின் முதல் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. அதே கால அளவில் ஈரானிலும் பின்னர் இராக்கிலும் அடுத்தடுத்து ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தொலைநோக்கி (Telescope) அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. பூமியிலிருந்து சூரியனின் தொலைவு, கோணம், நட்சத்திரங்ககளின் இயக்கம், மற்றும் கோள்களின் இருப்பிடம் போன்றவற்றை ஆராய்வதற்கு அதற்கென்றே பிரத்யேக கருவிகளை கோணமானிகளை முஸ்லிம் வானியல் வல்லுநர்கள் வடிவமைத்தனர். அவற்றுள் சில நாற்பது மீட்டர் விசாலமனாதாகக்கூட இருந்தன(2).
கி.பி 964இல், அப்துர்ரஹ்மான் அல்ஸூஃபி எழுதிய, ‘நிலையான நட்சத்திரங்கள் (kitab suwar al-kawakib)’ என்ற நூல் விண்மீன் கூட்டங்களுக்குச் சித்திர வடிவு கொடுத்து, வகைப்படுத்திய முதல் நூலாகும். விண்மீன்களின் இருப்பிடம், பிரகாசம், தொலைவு, நிறம் போன்ற விபரங்களை தொகுக்கும் முதல் ஆவணமாக அந்நூல் திகழ்கிறது.
பூமியிலிருந்து இரண்டரை மில்லியியன் ஒளி வருடங்கள் தொலைவில் இருக்கும் நமது “அண்மை” அண்டமான Andromeda galaxyஐக் கண்டுபிடித்து விளக்கமளித்ததும் அப்துர்ரஹ்மான் அல்ஸூஃபி ஆவார். இரண்டு சிறிய அளவிலான அண்டங்கள் Magellanic Clouds பற்றிச் குறிப்பிட்டதும் அறிஞர் ஸூஃபி தான்.
பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாசிருத்தீன் அல்தூஸி எழுதிய அறிவியல் ஆக்கங்களின் எண்ணிக்கை நூற்றைம்பது. புகழ்பெற்ற தூஸி சுழலிரட்டை(Tusi Couple)யைக் கண்டுபிடித்தவர் இவர். விண்வெளிப் பொருட்களின் இயக்கங்களை விவரிக்கும் இக் கோட்பாடு பின்னாளில் கொப்பர்நிகசின் தியரியை விளக்குவதற்கு எளிதாயிற்று.
மனிதக் கண்பார்வை பற்றி முழு உலகமும் நம்பிக் கொண்டிருந்த தவறான கருத்தாக்கத்தை மாற்றியமைத்து, “பார்வையைப்” பற்றி இவ்வுலகம் உலகம் சரியாகப் புரிந்து கொள்ளச் செய்தவர் ஆடியியலின் தந்தை இப்னுல் ஹைதம். நூற்றாண்டுகளாக அறிஞர்கள் – டாலமி உட்பட – நமது கண்கள், பார்க்கும் பொருளை நோக்கி ஒளியை ‘உமிழ்வதால்’தான் நம்மால் பார்க்க முடிகிறது என்றே நம்பிக் கொண்டிருந்தனர். இப்னுல் ஹைதம் அதை மறுத்து, ‘ஒளியானது நேர்கோட்டில் பயணித்து நமது கண்களை அடைகிறது’ என்ற தற்காலத்திய உண்மையைக் கண்டறிந்ததால் ஆடியியலின் தந்தை என பட்டம் பெற்றார். ஆடியியலைப் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கிரந்தம் ஆடியியல் நூல் (Book of optics – Kithab-Al – Manazir). முதல் கேமராவை வடிவமைத்ததும் இவ்வறிஞரே. இந்தக் கண்டுபிடிப்பு பின்னாட்களில் தொலைநோக்கிக்கான பயணத்தை நோக்கிச் சென்றது.
உலகின் முதல் விஞ்ஞானி யார் என்று கேட்டால் ஆர்கிமிடீஸ், அரிஸ்டாட்டில், டாவின்சி, சர்.ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், கலீலியோ கலீலி போன்ற பெயர்கள்தாமே ஞாபகத்திற்கு வரும்? அப்படித்தான் நமது பாடப் புத்தகங்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் பாருங்கள், பல பரிசுகளைத் தம் எழுத்திற்காக வென்ற அமெரிக்க எழுத்தாளர் ப்ராட்லீ ஸ்டீஃபன்ஸ் (Bradley Steffens) எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு ‘முதல் விஞ்ஞானி இப்னுல் ஹைதம் (Ibn Al-Haytham: First Scientist)’. ஆம், நூலின் தலைப்பே அப்படித்தான். சும்மா குருட்டாம்போக்காக எழுதவில்லை. இராக்கில் பிறந்த அறிஞர் இப்னுல் ஹைதம் மனித குலத்திற்கே முதல் விஞ்ஞானி என்பதை ஆதாரங்களுடன் தமது கூற்றை நிறுவுகிறார் ப்ராட்லீ ஸ்டீஃபன்ஸ்.
உலகிற்கு முதன் முதலாக, ‘ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி, படிப்படியாக எப்படிச் செய்யப்பட வேண்டும்?’ என்று வரையறுத்துக் கூறியவர் இப்னு ஹைதம் தான் என்றும், இவர் அடித்தளமிட்ட முறையில் நடக்கும் ஆராய்ச்சிகளே “அறிவியல்” என்றும் குறிப்பிடுகிறார் ஸ்டீஃபன்ஸ்.
“உண்மையைக் கண்டறிவது மட்டும் நோக்கமாகக் கொண்ட அறிவியல் ஆய்வாளனின் கடமை என்னவென்றால், அதுவரைப் படித்து தெரிந்தது எல்லாவற்றையுமே விரோதமாகப் பார்க்கவேண்டும். அதன் எல்லா பரிமாணங்களிலிருந்தும் தாக்குதல் தொடுக்க வேண்டும்” என்பது இப்னு ஹைதமின் புகழ்பெற்ற சொற்கள்.
இஸ்லாமிய உலகின் விண்வெளி ஆய்வாளர்களின் பங்களிப்புக்கு வானில் அண்ணாந்து பார்த்தால் தெரியும் பெரும்பாலான விண்மீன்களின் பெயர்கள் அரபியிலிருப்பதே சாட்சி !!!.
(‘‘விண்வெளி‘ ஆங்கில இதழில் வெளிவந்த கட்டுரையைத் தழுவி எழுதியவர்) அபூபிலால்
1. Jamil Ragep, professor of Islamic studies at McGill University
2. The first known mural sextant was constructed in Ray, Iran, by Abu-Mahmud al-Khujandi