இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்கள் கூறினார்கள்:
இறைவன் ஒருவரை, பாவமான இழிநிலையிலிருந்து வெளியேற்ற விரும்பினால் அவரை ‘தக்வா’ எனும் கண்ணியமான நிலைக்குள் நுழைவித்து விடுகிறான். மேலும், பணம் மற்றும் பொருளின்பால் தேவையற்றவராக அவரை மாற்றி விடுகிறான். அவ்வாறே, அவருக்கு உறவுகளில்லாத போதும்கூட கண்ணியத்தையும், துணையில்லாத போதும்கூட மன அமைதியினையும் அவருக்கு வழங்குகின்றான்.
(மன்லா யஹ்லுருஹுல் பகீஹ்: பாகம் 04, பக்கம் 410)
ஆன்மீகத்தலைவர் இமாம் காமினியின் விளக்கவுரையிலிருந்து…
பாவம் என்பதே இழிநிலைதான். அதிலும், இறைவனின் அருட்கொடைகளைப் பயன்படுத்திக்கொண்டு அவனுக்கு மாறுசெய்தல் மிகப் பெரும் இழிநிலையாக இருக்கிறது.
மனிதனுடைய கண்ணியமானது, இறைவனை வணங்குவதில் தங்கியிருக்கிறது. அவனது கட்டளைகளுக்கு மாறுசெய்யாமல் அவனை வழிப்படுவதிலே இருக்கிறது.
மனிதன், பாவம் செய்துவிட்டு தான் இழிநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதை உணராமல் இருப்பதற்கான காரணமானது, இறைவன் பற்றிய சரியான மெய்ஞ்ஞான அறிவில்லாமையாகும். பாவம் என்பது, தன்னை அனைத்துவிதமான நல்ல காரியங்களிலிருந்தும் தூரப்படுத்திவிடும் செயலாகும். பாவத்தின் எதார்த்தம் என்னவெனில், அனைத்து அருட்கொடைகளையும் வழங்கும் இறைவனுக்கு மாறுசெய்வதாகும். இதுவே உண்மையான இழிநிலையாகும். பாவச்செயலானது, ஓர் இழிநிலையாகும் என்பதை மனிதன் உணர்ந்துகொள்வதுதான், உண்மையான உயர்ந்த மெய்ஞ்ஞானமாகும்.
பாவத்தின் எதிர்நிலைதான் தக்வாவாகும். தக்வாவென்பது பாவத்திலிருந்து தூரமாதலாகும்;, அதாவது, இறைவனின் ஏவல், விலக்கல்களைக் கடைப்படித்து ஒழுகுதலாகும்.
பாவங்களிலிருந்து மீண்டு இறைவன்பால் செல்வது அனைத்து நலவுகளையும் எமக்கு பெற்றுத்தரும் செயலாகும். யாரொருவர் இறைவன்பால் செல்கிறாரோ அவர் கண்ணியத்தினை நோக்கியே நடைபோடுகிறார். எனவே, தக்வா கண்ணியத்தைக் கொடுப்பதாகும். எவர் பாவங்களிலிருந்து மீண்டு தக்வாவினைக் கடைப்பிடிப்பவராக இருப்பாரோ, இறைவன் அவருக்கு அனைத்துவித உலகப் பற்றுக்களிலிருந்தும் விடுதலையளிக்கிறான். அவரை அனைத்திலிருந்தும் தேவையற்றவராக மாற்றிவிடுகிறான்.
அதிகமான பண வசதிகள் இருந்தால் மட்டும் ஒருவர் தேவையற்றவராக மாறிவிடமுடியாது. சிலர் அதிகமான பண வசதிகளைப் பெற்றிருந்தும் கூட தேவையற்றவர்களாக இல்லை. எப்போதும் தனக்கு அது தேவை, இது தேவை என எப்போதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.
எவ்வாறு குடும்பம் என்பது, தனது உறவினர்களுக்கு பிறரினால் ஏற்படும் தீங்குகளைத் தடுக்கும் ஓர் சமூக அமைப்பாக இருக்கிறதோ, அவ்வாறே தக்வாவைப் பேணும் ஒருவருக்கு, அவரை நோக்கிவரும் அனைத்துவித தீங்குகளையும் தக்வா ஓர் குடும்ப அங்கத்தவர்போல் முன்நின்று, பாதுகாக்கிறது.
தொடர்புகளுக்கு:
info@peace.lk
Facebook
Twitter
Google-plus
Instagram
Dribbble
Youtube