வாழும் நிலம் எல்லாம் கர்பலா… சூரியன் உதிக்கும் நாளெல்லாம் ஆஷூறா… (கவிதை)

வெட்கம் கெட்ட
அந்த யூப்பிரடீஸ் நதி இன்னுமா ஓடிக் கொண்டிருக்கிறது?

பாதிமாவின் பாலகன்
நம் இமாம்
ஹூஸைனுக்கு நீர்புகட்ட மறுத்த அந்த அகாேர நதி இன்னுமா ஓடிக் கொண்டிருக்கிறது?

டமஸ்கஸின் டாம்பீக டம்பத்தின்
பறை ஓசையில் மயங்கிக் கிடந்ததா அந்த மடச்சமூகம்?

பெருமானாரின் ஆருயிர் ஸைனபை கர்பலாவின் பாலை மணலில் இருந்து சிரியாவின் ஆடம்பர
மாளிகைவரை விலங்கிட்டு
அழைத்துச் செல்ல அநுமதித்தபாேதே
ரஹ்மத்தின் வாசலுக்கும் அவர்கள் விலங்கிட்டுக் கொண்டார்கள்.

யா இமாம்!
உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!

உங்களுக்காக நான் சொட்டிய சில கண்ணீர்த்
துளிகளால்
எனது ஈமானிய இருதயத்தை அழுத்தமாய்க் கழுவிக் கொள்கிறேன்.

உங்களை இழந்த சோகத்தில் அழுது புலம்பிய ஒரே காரணத்திற்காய் வெள்ளைநிறக் குதிரைகளை இன்னும் இன்னும் நேசிக்கிறேன்.

நீங்கள் நமது உயிரிலும் மேலான ரஹ்மத்துல் ஆலமீன் நமக்களித்த வற்றாத ஜீவநதி.

உங்களுக்கு நீர் புகட்ட மறுத்தவர்கள் நாளை ஹவ்ழுல் கௌதரில் நீர்புகட்ட மறுக்கப்படும்
பாேது புரிந்து கொள்ளட்டும் யார் நிஜத்தில் தோற்கடிப்பட்டார்கள் என்பதை.

நீங்கள் கற்றுத்தந்த கர்பலா காவியம் எமது ஈாமானை ஈரமாக
வைத்திருக்க
நீங்கள் செய்த தியாகமேயன்றி வேறேதுமில்லை.

பத்ரில் களமாடி உஹதில் நம்
பெருமானாரின் உயிர்காக்க உக்கிரமாய்ப் போராடி
கந்தக்கில் அம்ர் இப்னு
அப்துவுத்தை வீழ்த்திப் புழுதி கிளப்பி
கைபரில் மஹ்ரபை மாய்த்து வெற்றிவாகை சூடி
கண்மணி நாயகத்தின் கொடியை இம்மையிலும் மறுமையிலும் உயர்த்திப்
பிடிக்கும்
பேறு பெற்ற
நம் உயிருக்கு உயிரான அல்லாஹ்வின் சிங்கமான ஹைதரின் வாரிசல்லவா நீங்கள்!

அநீதியைக் கண்டு சிங்கம் கர்ஜிக்காமல் முனாபிக்குகளைப்
போல் மூலைக்குள் முடங்கிவிட்டு
ஊளையிட்டுக் கிடக்குமா?

யஸீதின்
அயாேக்கியத்
தனத்தை
அதட்டிக் கேட்ட இந்த உம்மத்தின் ஆண்மகன் அல்லவா நீங்கள்?

உங்கள் கர்ஜனையில் பிழை காணும் ஈனப்பிறவிகளை இன்னும் இங்கே ஐநிலந்தாேறும் காண்கிறேன்.

உங்கள் கர்பலா விஜயத்தை மழுங்கடிக்கும் நயவஞ்சகத்தின் உருவங்களை தினம் தாேறும்தான் தரிசிக்கிறேன்.

உங்கள் பெயரை உச்சரிப்பதே
சர்ச்சை போலாக்கிய சூக்குமத்தைக் கண்டு புருவமுயர்த்திப் பார்க்கிறேன்.

வரலாற்றில் உங்கள் கதாபாத்திரத்தை சர்ச்சை என்று முரசு கொட்டுவதற்குப்
பின்னால்தான் முனாபிக்
தனத்தின் நிழல் உலக தாதாக்கள் சாம்ராஜ்யம் அமைக்கிறார்கள்.

இறுதி நாள்வரை வாழப் போகும் நயவஞ்சகர்கள் சாத்தானி்ன் வேதங்களை வசனித்துக் கொண்டுதானே இருப்பார்கள்….?

காட்டிக் கொடுப்பதைத்
தொழிலாகக் கொண்ட
ஊளையிட மட்டுமே தெரிந்த மனித மிருகங்கள் உங்களை
வசை பாடும்
பாேதுதான் புரிகிறது
உண்மை விசுவாசிக்கு …..

“வாழும் நிலம் எல்லாம் கர்பலா…
சூரியன் உதிக்கும் நாளெல்லாம் ஆஷூறா….. “

எனும் பேருண்மை பற்றி.

Scroll to Top
Scroll to Top