கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே…

கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே..
(அஹ்லுல் சுன்ன அறிஞரின் பார்வையில்)

கர்பலா என்றதும் முஃமின்களின் கண்கள் குளமாகும். ஏனெனில் இஸ்லாத்தை முழுமைப்படுத்திய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்குடும்பத்தினர் இஸ்லாமிய அரசியலுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த ஒரு சுதந்திர தினமாக (கர்பலா தினம்) திகழ்கிறது.
 
அல்லாமா இக்பால் அவர்கள் ஹள்ரத் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களைப் பற்றிக் கூறும்போது….
 சுதந்திரம் எனும் செடிக்கு இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் தண்ணீரை அல்ல, தமது உதிரத்தை ஊற்றி வளர்த்தார்கள் என்று கூறினார்.
 
இந்தியா சுதந்திரம் பெறுவதற்குப் பாடுபட்ட முக்கிய தலைவர்களை (காந்தி, நேரு, ஜின்னா, நேதாஜி, அலீ சகோதரர்கள், மாப்பிள்ளாமார்கள் போன்றவர்களை) மறக்காத இந்த தேசத்தைப் போல் இஸ்லாமியர்களுக்கு பல ஷைத்தான்களிடமிருந்து சுதந்திரம் வாங்கித் தந்தார்கள் அண்ணலாரின் அருமைக் குடும்பத்தினர். அவர்களை ம(றை)றப்பதுதான் மார்க்கமா? (அல்லது) நியாயமா?
 
1400 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஓர் இரத்த சரித்திரம்தான் கர்பலா. இது ஒரு சோக நிகழ்வு. சத்தியமும், அசத்தியமும் மோதிக் கொண்ட நாள் அது. அதில் நடந்த உண்மை என்ன? என்பது பலராலும் மறைக்கப்பட்ட ஒரு புதிராக அமைந்து உள்ளது. உலக முஸ்லிம்களில் பலருக்கும் கர்பலா என்றால் என்ன? என்பது தெரியாது.  காரணம் சில ஆலிம்கள்தாம் கர்பலாவைப் பற்றிப் பேசுகிறார்கள். பலர் பேசத் தயங்குகிறார்கள். உண்மையைச் சொல்வதில் என்ன தயக்கம் இருக்கிறது? கர்பலா இஸ்லாமிய அரசியல் சுதந்திரத்திற்காக நடைபெற்ற போர். ஹிஜ்ரி 61 முஹர்ரம் பிறை 10ஆம் நாள் நடைபெற்றது. இந்தப் போர் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் வேதனையையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 
 
இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 4 இல் ஷ­ஃபான் மாதம் சுவனத்துத் தலைவிக்கும், துல் ஃபிகார் வாளுடையார்  ஹள்ரத் அலீ (ரலி) அரிமாவிற்கும் பிறந்தார்கள். ஹிஜ்ரி 11 வரை இஸ்லாமிய ஆட்சி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வந்தது. அதன் பிறகு 4 கலீபாக்களின் ஆட்சிக் காலமும் சிறப்பாக நடைபெற்றது. அவர்களின் பின் இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் ஆட்சி செய்தார்கள். கவர்னராக இருந்த முஆவியா (ரலி) ஆட்சிக்கு உரிமை கோரிப் போராடியதால் அவர்களுடன் சண்டை செய்வதன் மூலம் முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டையிடுவதை விரும்பாத ஹஸன் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 41 ல் ரபீஉல் அவ்வல் பிறை 5 இல் பதவியை  முஆவியா (ரலி) அவர்களுக்கு 5 நிபந்தனைகளுடன் விட்டுக் கொடுத்தார்கள்.
 
1. மக்களை சுதந்திரமாக வாழ விட வேண்டும்.
2. ஹள்ரத் அலீ (ரலி) அவர்களது குடும்பத்தினர்களுக்கு எந்நிலையிலும் ஆபத்து கொடுக்காமலிருக்க வேண்டும்.
3. ஹள்ரத் அலீ (ரலி) அவர்களை மிம்பரில் திட்டுவதை நிறுத்த வேண்டும்.
4. தம்மை அமீருல் முஃமினீன் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது.
5. தமக்குக் பின் ஆட்சியில் வாரிசை விட்டுச் செல்லக் கூடாது. மக்கள் தாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் பதவியை விட்டுக் கொடுத்தார்கள்.  அதன் பிறகு ஹிஜ்ரி 50 இல் துரோகிகளால் நஞ்சூட்டப்பட்டு ஷ­ஹீதானார்கள்.  முஆவியா (ரலி) அவர்கள் இமாம் ஹஸன் (ரலி) அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக தனது கிலாபத் பதவியில் யஜீதை அமர வைத்து விட்டார்கள்.
 
யஜீத் பகிரங்கமாகவே இஸ்லாமிய விரோதச் செயல்களில் ஈடுபடலானான்.  தாயின் சகோதரிகளைத் திருமணம் செய்தல், மது அருந்துதல், மதுவை ஹலாலாக்குதல், ஆயிரம் மதீனப் பெண்களைக் கற்பழிக்கச் செய்தது. இவை போன்ற ஈனத்தனமானச் செயல்களில் ஈடுபட்டான். இவனுடைய அனாச்சாரத்தைக் கண்ணுற்ற இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் யஜீதை வெறுத்தே வந்தார்கள். தந்தையின் பதவியில் அமர்ந்த சண்டாளன் யஜீது தனக்கு பைஅத் செய்யுமாறு ஹுஸைன் (ரலி) அவர்களுக்குக் கூறினான். இதனை இமாமவர்கள் மறுத்தார்கள். இதனை அறிந்த  கூபா வாசிகள் 12000 மடல்களை வரைந்து இமாம் அவர்களை கூபாவிற்கு அழைத்தனர். 
 
கூபா வாசிகளின் அழைப்பை ஏற்ற இமாம் தங்களது குடும்பத்தினரை மட்டும் அழைத்துக் கொண்டு கூபாவின் பக்கம் சென்றார்கள். செல்லும் வழியில் சண்டாளன் யஜீதின் கூலிப்படையைச் சேர்ந்த கயவர்கள் கர்பலா என்னுமிடத்தில் இமாம் அவர்களை முற்றுகையிட்டனர். நாளை மறுமையில் யார் நமக்கு சுவனத்தில் ஹவ்ளுல் கவ்ஸரில் நீர் தருவார்களோ, அவர்களுக்கு சொட்டு நீர் கூடக் கொடுக்காமல் சித்ரவதை செய்தனர். அந்த இடத்தில் தான் போர் நடைபெற்றது. அதில் பல அஹ்லுபைத்தினர்கள் ­ஷஹீதாக்கப்பட்டார்கள்.
 
இச்சமூகத்தில் யாரை நேசிப்பது ஈமான் என்று  கூறப்பட்டதோ,  யார்மீது தொழுகையில் ஸலவாத் ஓதப்படுகிறதோ, யார் இவ்வுலகிற்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்தார்களோ அந்தப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தினரை எதிர்த்த கூட்டம் தான் யஜீதின் கூட்டம். ஆனால் இன்றைய சில ஆசாமிகள் கர்பலா ஓர் அரசியல் நிகழ்வு. இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் பதவிக்
 
காகப் போர் புரிந்து ஷ­ஹீதானார்கள் என்று நாகூசாமல் கூறித் திரிகின்றனர். ஹுஸைன் (ரலி) அவர்கள் ஆட்சியைப் பிடிக்க நினைத்தால் மதீனாவிலிருந்தே பிடித்திருப்பார்கள். ஆட்சிக்கு ஆசைப் பட்டிருந்தால் முஸ்லிம்களை ஒன்று திரட்டி பல போர் வீரர்களை அழைத்துச் சென்று பிடித்து இருப்பார்கள். ஆனால் ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்கள் குடும்பப் பெண்கள், குழந்தைகளை அழைத்துச் செல்வார்களா? இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் தங்கள் அஹ்லபைத்தாரை ஏன் அழைத்துச் சென்றார்கள்? ஆட்சிக்காகவல்ல; மார்க்கத்தின் ஜனநாயக அரசியல் சுதந்திரத்திற்காகதான். இந்த சுதந்திர யுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பெருமானாரின் உயிர்போன்ற பேரக் குழந்தைகள். 
 
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்தப் போரிலாவது சிறு பிள்ளைகளைக் கொலை செய்திருப்பார்களா? கொலை செய்யச் சொல்லி இருப்பார்களா? சிறுவர்களைக் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். ஆனால் யஜீதியப் படையினர்கள் பச்சிளங்குழந்தை முதல் சிறியவர் வரை உள்ளவர்களைக் கொலை செய்தார்கள்.
 
6 மாதக் குழந்தை இமாம் அலீ அஸ்கர் (ரலி) அவர்களை இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் கொஞ்சிக் கொண்டிருந்த போது முகீதுந் நூர் என்ற இப்லீஸ், அலீ அஸ்கர் (ரலி) அவர்களது தொண்டைக் குழியில் அம்பை எய்தினான். இமாம் அலி அஸ்கர் ­ஹீதானார்கள். அதே போன்று மற்றொரு பச்சிளங்குழந்தை அபூபக்ர் (ரலி) அவர்களையும் ஹூர்முளா என்ற கொடியவன் அம்பால் தாக்கினான். இமாம் அபூபக்கர் (ரலி) அவர்கள் ­ஷஹீதானார்கள். 
 
இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் ஆட்சிக்காகச் சென்றிருந்தால் சிறிய குழந்தைகளையும் சிறுவர்களையும் அழைத்துச் சென்றிருப்பார்களா? கர்பலா என்பது இஸ்லாத்தை உயிர்ப்பிக்க நடந்ததே தவிர ஆட்சிக்கோ, பதவிக்கோ அல்ல.  பதவிக்காக சென்றிருந்தால் அலீ அஸ்கர் (6 மாதக் குழந்தை) அப்துல்லா (ஒரு வயதுக் குழந்தை), காஸிம் (9 வயதுக் குழந்தை), முஹம்மது (11 வயதுக் குழந்தை), அவ்ன் (13 வயது), அலீ அக்பர் (18 வயது) போன்றவர்களை ­ஷஹீதாக்கி இருப்பார்களா? உயிர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்று விட்டால் குழந்தை என்ன? வாலிபர் என்ன? என்றவாறு அல்லாஹ்வின் பாதையில் சுதந்திரத்திற்காக தமது உயிரையும், தமது குடும்பத்தாரின் உயிரையும் தியாகம் செய்தார்கள். இமாம் ஹுஸைன் (ரலி) என்பது தான் உண்மையிலும் உண்மை.  இவ்வாறு பல குழந்தைகளைக் கொன்ற வெறியர்களுக்கு சிபாரிசு செய்யும் சிலர் யஜீதின் படை வாரிசுகளே என்பதில் ஐயமில்லை, யஜீதை நல்லவன் எனச் சொல்லி ஹுஸைன் (ரலி) அவர்கள் மீது குறை கூறித் திரிபவர்கள் எப்படி முஃமினாக இருக்க முடியும்?
 
யஜீதை வஹ்ஹாபிகளும், தேவ் பந்திகளும் தாம் தாபிஈ என்றுகூறி திட்டக்கூடாது என்றும் கூறுகின்றனர். 
யஜீதின் நிலை:
 
பனூ உமய்யாவைச் சேர்ந்த யஜீத் என்பவன் தான் முதன் முதலில் எனது சுன்னத்திற்கு மாறு செய்வான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: தாரீகுல் குலஃபா – 208)
 
2. யஜீத் தனது காலத்தில் இசையில், மது அருந்துவதில், பாடல் பாடுவதில், சிறுவர்களை, பாடும் பெண்களை, மற்றும் நாய்களை தன் அருகில் வைத்ததிலும், பெரிய கொம்புகள் கொண்ட செம்மறி ஆடுகள், மாடுகள், குரங்குகளுக்கு மத்தியில் மணம் முடித்து வைப்பதில் பிரபல்யமானவனாக இருந்தான். அவனுடைய ஒவ்வொரு ஃபஜ்ரும் மது போதையில் தான் உதயமாகும். குரங்குகளுக்கும் சிறுவர்களுக்கும் தங்கத்தால் தொப்பியை அணிவிப்பான். குதிரைகளுக்கு மத்தியில் ஓட்டப் பந்தயம் வைப்பான். ஏதாவது ஒரு குரங்கு மரணமடைந்தால் துக்கம் கொள்வான். 
 
(நூல்: பிதாயா வன்னிஹாயா பக்கம் 8 / பக்கம் 236) 
 
3. இமாம் இப்னு ஹன்ழலா (ரலி) அறிவிக்கிறார்கள்
 
அல்லாஹ் மீது ஆணையாக நாங்கள் யஜீதுக்கு எதிராக கிளர்ச்சி ஏன் செய்தோம்? என்றால் யஜீதின் அட்டூழியங்களால் எங்கள் மீது வானத்திலிருந்து கற்கள் எறியப்படும் என்ற காரணத்தில் தான். ஏனென்றால் அவன் ஒரே சமயத்தில் தாய்களையும் மகள்களையும், சகோதரிகளையும் மணம் செய்யக் கூடியவனாக இருந்தான். இன்னும் மதுஅருந்துபவனாகவும், தொழுகையை விடக் கூடியவனாகவும் இருந்தான்.
 (தாரீஹுல் குலஃபா 209 ம் பக்கம்)
 
இவ்வளவு இழிவான செயல்களைச் செய்த யஜீதை வஹ்ஹாபிகள் நல்லவனாகச் சித்தரித்து இஸ்லாத்திற்குப் பாடுபட்ட ஹுஸைன் (ரலி) அவர்களைத் தரக்குறைவாகப் பேசி வருகின்றனர். வஹ்ஹாபிகளின் நிலையும் யஜீதின் நிலை போன்றுதான் இழிவாக அமையும்.
 

யஜீத் முஸ்லிமா?

 
எவனொருவன் ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்தானோ அவனுடைய கூலி நரகம் தான். அதிலே அவன் நிரந்தரமாக இருப்பான். அல்லாஹ் அவன் மீது கடுங்கோபங் கொள்கிறான். (4:93)
 
 யஜீத் காபிரா? முஸ்லிமா? என்பதில் உலமாக்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. 
 
மதுவை ஹலால் என்று சொன்னதாலும், இமாம் ஹுஸைன் (ரலி) மற்றும் அவர்களது குடும்பத்தினர்களைக் கொலை செய்து பத்ரு யுத்தத்தில் குரைஷிகளின் தலைவர்கள் மற்றும் எனது முன்னோர்களின் கொலைக்கு இவர்களிடம் பழி வாங்கிவிட்டேன்.
 
(கர்பலா முடிந்ததும் யஜீது ஆனந்தத்துடன் பாடிய பாடலின் வரி இது) என்று யஜீது சொன்னதால் அவனை காபிர் என்று சொல்லலாம்.
 
(நூல் : ­ரஹ் ஃபிக்ஹூ அக்பர் பக்கம் 88)
 
கர்பலா முடிந்ததும் யஜீது மதீனாவை நோக்கிப் படையெடுத்து மதீனாவாசிகளுக்கும், யஜீதுக்கும் கடுமையான போர் நடைபெற்றது. இதில் மதீனாவிலுள்ளவர்கள் எவருமே தப்பவில்லை. அதிகமான ஸஹாபாக்களும்  ஏனையவர்களும் இந்தப் போரில் ஷ­ஹீதானார்கள். மதீனா முனவ்வராவும் சூறையாடப்பட்டது. இன்னும் 1000 கன்னிப்பெண்கள் யஜீதியப் படைகளால் கற்பழிக்கப் பட்டனர். 
 
(நூல்: தாரீஹுல் குலஃபா பக்கம் 209)
 
இவை போன்ற செயல்களிலும் (ஸஹாபாக்கள் பலரைக் கொலை செய்தும், 1000 பெண்களின் கற்பை சூறையாடி வாழ்க்கையைக் கெடுத்தும், மதீனாவைக் களங்கம் செய்தும்) ஈடுபட்டு, பல கொடுமைகளையும் ஹராமான செயல்களையும் செய்த யஜீதை பல உலமாக்கள் காபிர் என்றே சொல்லலாம் என்றார்கள்.  அவனுடைய செயலும் காபிரின் செயலாகவே இருந்தது. ஆனால் அவனைத் திட்டக்கூடாது என்று சொல்கிறார்கள். அல்லாஹ்வும் ரஸூலும் அவனைத் திட்டும் போது நாம் திட்டுவதில் என்ன தவறு இருக்கிறது?
 
யஜீதைத் திட்டுவது பற்றி இமாம் அஹ்மது (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அல்லாஹ் எவனை சபிக்கின்றானோ அவனை நான் சபிக்காமல் இருப்பேனா? என்று கேட்டார்கள்.
 
 (நூல்:பிதாயா வந்நிஹாயா)
 

அஹ்லுல் பைத்தினர்களை கோபித்தாலே என்ன தண்டனை பாருங்கள்?

 
யார் எனது அஹ்லுல்பைத் (குடும்பத்)தினர் மீது கோபங் கொண்டாரோ, அவர் கலிமா (அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு) சொல்லியிருந்தும் அல்லாஹ் அவரை மறுமையில் யஹூதியாக எழுப்புவான். 
 
(நூல் : தப்ரானி 4014)
 
யார் எனது குடும்பத்திற்கு நோவினை செய்தாரோ அவர் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். 
 
(நூல் : கன்ஜுல் உம்மால் 103/12)
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: அல்லாஹ் மீது சத்தியமாக எவன் என்னுடைய அஹ்லுபைத் (குடும்பத்)தினரை கோபங் கொண்டானோ அவனை அல்லாஹ் நரகத்தில் நுழையச் செய்வான். (நூல் : ஹாகிம் 4717
 (இப்னு ஹிப்பான்)
 

அல்லாஹ் கீழ்க்கண்டவர்களுக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கியுள்ளான்:

 
1) அஹ்லுல் பைத்தினர்களுக்கு மோசடி செய்தவர்.
2) அஹ்லுல் பைத்தினர்களைக் கொலை செய்தவர்.
3) அஹ்லுல் பைத்தினர்களைத் திட்டியவர்.
4) அஹ்லுல் பைத்தினர்களுக்கு எதிராக உதவி செய்தவர்.
ஆகியவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கியுள்ளான். 
(நூல் : குர்துபி 16/16)
 
மேற்கூறப்பட்ட ஹதீஸ்களைப் போன்று பல ஹதீஸ்கள் அஹ்லுல் பைத்தினர்களின் சிறப்பைப் பற்றி வந்துள்ளது. அஹ்லுல் பைத்தினர்களைக்  கோபித்தவனுக்கு நரகம் எனில் கொலை செய்து துன்புறுத்திய யஜீதிற்கும் அவனது படைகளுக்கு எந்நிலை? யஜீதிற்கு சிபாரிசு செய்தவர்களது நிலை என்ன?
 
எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தினரை நேசிப்பது நமது கடமை (42:23) ல் இறைவன் கூறுகிறான். 
 
இப்படிப்பட்ட அஹ்லுல் பைத்தினர்களைப் பற்றியும் ஒவ்வொரு பள்ளிவாசலிலும், மேடைகளிலும் பேசப்பட வேண்டும். அவர்களின் தியாகத்தை நினைவு கூற வேண்டும். இது நமது கடமை. இன்றும் அஹ்லுல் பைத்தினர்களை இழிவாகப் பேசுபவன் மற்றும் யஜீதுக்கு சிபாரிசு செய்பவன் அனைவருக்கும் நரகத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்வதும் நமது கடமையாக இருக்கிறது.
 
இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களுக்காக கண்ணீர் விடுவது:
 
எவரெல்லாம் கஷ்டங்களையும், துன்பங்களையும் நினைவு கூர்ந்து எனக்காக கண்ணீர் விடுகிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் இடமளிப்பான். இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள். அறிவிப்பு (இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்) ஹள்ரத் உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
 
ஹுஸைன் (ரலி) அவர்களது ஷ­ஹாதத்திற்குப் பின் அவர்களுக்காக ஜின் வர்க்கத்தினர் துக்கம் அனுஷ்டிப்பதை நான் செவியுற்றேன் என்றார்கள். (நூல் : தப்ரானி, அஹ்மத்)
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாருக்காக கண்ணீர் விட்டார்களோ அவர்களுக்காக நாமும் கண்ணீர் விடுவது மிகச் சிறந்த ஒரு வழிமுறையாகும்.
 
யா அல்லாஹ்! எங்களை அஹ்லுல் பைத்தினர்களை நேசித்துப் பின்பற்றக் கூடியவர்களாக ஆக்குவாயாக. இன்னும் மறுமையில் அஹ்லுல் பைத்தினர்களுடன் எங்களை எழுப்புவாயாக!
 
யா அல்லாஹ் அஹ்லுல் பைத்துகளை நேசிக்காதவர்களையும் குறை கூறுபவர்களையும் மறுமையில் யஜீதுடன் எழுப்புவாயாக! ஆமீன்.
 
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
 
ஆக்கம்:  உமர்  யாஸீனிய், ஹக்கிய்யுல் காதிரிய்
Source: https://www.yaseenis.com/blogs/post/Kangal-Kulamaaguthammaa-Karbalaavai-Ninaikkaiyilea/
Scroll to Top
Scroll to Top