Do not think that good deeds are too much!
🔰 இமாம் மூஸா அல்காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்:
لا تَستَکثِرُوا کَثیرَ الخَیرِ، وَ لا تَستَقِلّوا قَلیلَ الذُّنوبِ، فَاِنَّ قَلیلَ الذُّنُوبِ یَجتَمِعُ حَتّی یَکُونَ کَثیرًا
🗣️ “நற்செயலினை அதிகமானது என்று நினைத்துவிடாதீர்கள், சிறு பாவங்களையும் குறைவானது என்றும் கருதிவிடாதீர்கள் ; ஏனெனில் சிறுபாவங்கள் எல்லாம் ஒன்றிணைந்து பெரும் பாவங்களாகவும் மிக அதிகமான பாவங்களாகவும் மாறக்கூடும்”.
📚அல்-காபி: பாகம் 02, பக்கம் 287.
✍️ *ஹதீஸ் விளக்கவுரை*
ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள் ஓர் பிரயாணத்தில் பாலைவனத்தில் வைத்து தனது தோழர்களிடம் கூறினார்கள் :
” அனைவரும் சென்று தங்களுக்கு கிடைக்கக் கூடிய விறகுகள் , மரக்குச்சிகள் அனைத்தினையும் எடுத்துவாருங்கள் ” என்று கட்டளையிட்டார்கள். அனைத்துத் தோழர்களும் தங்களுக்குக் கிடைத்த விறகுகளையும் சிறு குச்சிகளையும் எடுத்து வந்ததும் அவை அனைத்தினையும் ஓர் இடத்தில் ஒன்று சேர்த்தார்கள்.அவை மிகப் பெரும் விறகுக் குவியலாக மாறியது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
” பாவங்களும் இது போன்றே ஒன்றுசேரக்கூடியவை”.
மேலும் கூறினார்கள்: ” சிறு பாவங்களையும் தவிர்ந்து கொள்ளுங்கள் ; ஏனெனில் அனைத்து விடயங்கள் பற்றியும் கேள்விகேட்கப்படுவீர்கள்”.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள் இதன் மூலம் சிறுபாவங்களையும் சிறியது தானே என்று அலட்சியமாய் இருந்து விடாதீர்கள் என தனது தோழர்களுக்கு பாடம் புகட்டியுள்ளார்கள்.
‘சிறு துளி பெரும் வெள்ளம் ‘ என்பது போல் …..
மறுபுறம் நல்ல விடயங்களையும் அதிகமானது என்று எண்ணிவிடக்கூடாது; சில வேலை நாம் செய்த நற்செயல்களை இறைவன் அங்கீகரிக்காமல் விடலாம்.
சில வேலை பாவம் எனும் நெருப்பு எமது நற்செயல்களை எரித்து சாம்பலாக்கிடலாம். நற்செயல் செய்து விட்டோம் என்ற அகங்காரம் எமது நற்செயலினை இறைவனிடம் பெறுமதியற்றதாக மாற்றிவிடும்.
🕋 ولَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ
🗣️ “(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
📖அல்குர்ஆன் 31:18.
பாவங்களிலிருந்து விடுபடவும் வேண்டும், அதே போல் நற்செயல்களையும் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
நற்செயல்களுக்கு நற்கூலிகளை எதிர்பார்த்து நம்பிக்கையோடு இருப்பது போல், பாவங்களுக்கும் கிடைக்கப் போகும் தண்டனைகளை நினைத்து அச்சம் கொள்ளவும் வேண்டும்.
🕋 فمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ
🗣️ எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
📖அல்குர்ஆன் 99:7.
🕋 ومَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ
🗣️ அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
📖அல்குர்ஆன் : 99:8.