இமாம் ரிழா (அலை) அவர்களின் பிறப்பு, இமாமத், நற்குணமும் நன்னடத்தையும்

Birth, Imamat, virtue and good conduct of Imam Reza (A.S)

பிறப்பு

இமாம் றிழா அலைஹிஸ் ஸலாம் ஹிஜ்ரி 148ல் பதினோராம் மாதம் பதினோராம் நாள் மதீனாவில், இமாம் மூஸா இப்னு ஜஃபர் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வீட்டில் பிறந்தார்கள்.

அவரது இயற் பெயர் அலீ. றிழா எனப் பிரசித்தமாகி இருந்தார் அன்னாரின் தாயாரின் பெயர் நஜ்மா. அவர் ஈமான், இறையச்சம், அறிவு போன்றவைகளில் மிக பிரசித்தி பெற்ற பெணமனியாக அவர் திகழ்ந்தார்.

பொதுவாக இமாம்கள் அனைவரும் சிறந்த தந்தையர்களின் வழித்தோன்றல்களில் உதித்து சிறப்புகள் பல கொண்ட தாயார்களின் மடிகளில் வைத்து பயிற்றுவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இமாமத்

இமாம் றிழா அலைஹிஸ் ஸலாம் ஹிஜ்ரி 183இல் தமது தந்தை இமாம் காழிம் அலைஹிஸ் ஸலாம்; ஹாரூனின் சிறையில் வைத்து ஷஹீதாக்கப் பட்டதன் பின்பு தமது 35ஆவது வயதில் உம்மத்தை நேர்வழியில் செலுத்துகின்ற இமாமத் எனும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களது இமாமத்தும் ஏனைய மஃசூமீன்களின் இமாமத்தைப் போன்று நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி குறிப்பின்படியும் இமாம் காழிமின் அலைஹிஸ் ஸலாம் முன்னறிவிப்புடனும் இடம்பெற்றது.

இமாம் காழிம் அலைஹிஸ் ஸலாம் சிறைப்பட்டுச் செல்வதற்கு முன், தமக்குப் பிறகு உம்மத்தினர் வழிகேட்டில் சென்று நரகின் படுகுழியில் விழ விடாமல் தடுத்து அவர்களை நேர்வழியின் பாலும் உண்மையின் பாலும் வழிநடாத்தும் இமாம் யாரென சொல்லியிருந்தார்கள்.

மஹ்ஸூமீ கூறுகின்றார்:

இமாம் காழிம் அலைஹிஸ் ஸலாம் நம்மை அழைத்து, எதற்காக அழைத்தேன் தெரியுமா?   என்று கேட்டார்கள்.

தெரியாது   என்று நாம் கூறினேன்.

இமாம் றிழாவைச் -அலைஹிஸ் ஸலாம) சுட்டிக் காட்டி இந்த மகன் எனக்குப் பிறகு எனது பிரதிநிதியாகும் என்பதற்கு சாட்சியாக இருந்துகொள்ளுங்கள்   என்றார்கள்.

யசீத் இப்னு சலீத் கூறுகின்றார்:

நான் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்ற போது வழியில் ஓரிடத்தில் இமாம் காழிமைச் -அலைஹிஸ் ஸலாம்- சந்தித்தேன்.

அப்போது அவர்களிடம், இவ்விடத்தை அறிவீர்களா?   என வினவினேன். அவர் ஆம்   என்றுவிட்டு, உமக்கும் இவ்விடத்தைத் தெரியுமா?   என்று கேட்டனர்.

ஆம்   என்ற நான், ஒரு நாள் நானும் என் தந்தையும் இவ்விடத்தில் தங்களையும் தங்கள் தந்தை இமாம் சாதிக்கையும் அலைஹிஸ் ஸலாம் சந்தித்தோம். அவ்வேளையில் தங்களது ஏனைய சகோதரர்களும் தங்களுடன் இருந்தனர்.

என் தந்தை இமாம் சாதிக்கிடம் நீங்கள் அனைவரும் எமது வழிகாட்டிகளாவீர்கள். நாம் அனைவரும் மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும். ஆதலால் நான் மற்றவர்களை வழிகேட்டிலிருந்து நேர்வழிப்படுத்துவதற்காக எனக்கு சில விடயங்களைச் சொல்லுங்கள்   என்றார்கள்.

இமாம் சாதிக் அலைஹிஸ் ஸலாம் சொன்னார்கள்: அபூஅம்மாரே! இவர்கள் எனது பிள்ளைகளாகும். (பின் இமாம் காழிமை நோக்கி) அவர்களில் பெரியவர் இவராகும். இவரில் நீதி வழங்கும் தகுதி, விளக்கம், மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் நிறைந்திருக்கின்றன. மனிதர்களுக்குத் தேவையானதை நன்கறிந்தவர். மேலும், மனிதர்கள் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் ஆன்மீக, இலௌகீக விடயங்களில் பூரண அறிவு கொண்டவர். சிறந்த நன்னடத்தையுடையவர். அவர் இறைவனது நேசர் ஆவார்   என்றார்கள்.

அப்போது நான் இமாம் காழிமிடம் -அலைஹிஸ் ஸலாம்- ‘தாங்களும் தங்கள் தந்தையார் போன்று தங்களுக்குப் பிறகுள்ள இமாமை எமக்கு அறிவியுங்கள்’ என்றேன்.

‘இமாமத் இறைவனது ஏவலாகும். இமாம் இறைவனதும் இறைத்தூதரதும் புறத்திலிருந்து தெரிவு செய்யப்படுகின்றார்’ என்ற இமாமத்தைப் பற்றிய சிறுவிளக்கத்தின் பின் இமாம் காழிம் சொன்னார்கள்: எனக்குப் பிறகு இமாமத்தெனும் பொறுப்பு முதலாவதும் நான்காவதும் இமாம்களின் பெயரைக் (அலீ) கொண்ட எனது மகன் அலீயை வந்தடையும் என்றார்கள். 

அக்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் அரசர்களாக மோசமானவர்களே இருந்ததினால் இமாம் காழிம் தமது உரையின் இறுதியில் சொன்னார்கள்: யசீதே! உனக்குச் சொல்லப்பட்டது, அனைத்தும் உன்னிடத்தில் அமானிதத்தைப் போன்று பாதுகாப்பாக இருக்கட்டும். அதை நீ எவர்களையெல்லாம் உண்மையான நம்பிக்கையாளர்கள் என்று அறிவீரோ அவர்களைத் தவிர வேறு எவருக்கும் சொல்ல வேண்டாம்   என்றார்கள்.

யசீத் இப்னு சலீத் சொல்கிறார்: இமாம் மூஸா இப்னு ஜஃபர் அலைஹிஸ் ஸலாம் ஷஹீதானபின் நான் இமாம் ரிழாவிடம் வந்தேன். அப்போது இமாம் என்னிடம், யசீதே! உம்ராவிற்குச் செல்வோம் வருகின்றீரா?   என்று கேட்டார்கள்.

நானும் தங்கள் விருப்பம் போல் ஆகட்டும்   என்று விட்டு, மன்னிக்க வேண்டும். துற்போதைக்கு என்னிடம் பிரயாணச் செலவு இல்லை   என்றேன்.

அதற்கு இமாம், நான் அதைத் தருகின்றேன்   என்றார்கள். பின் நானும் இமாம் ரிழாவும் மக்காவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது வழியில் முன்பு இமாம் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம், இமாம் மூஸா இப்னு ஜஃபர் அலைஹிஸ் ஸலாம் இருவரையும் சந்தித்த இடத்தை அடைந்தோம்.

அப்போது நான் மூஸா இப்னு ஜஃபர் அலைஹிஸ் ஸலாம் சந்தித்ததையும் அவர்கள் கூறிய அனைத்து விடயங்களையும் இமாம் ரிழாவுக்குச் சொன்னேன்.

நற்குணமும் நன்னடத்தையும்

எமது இமாம்கள் மக்களுக்கு மத்தியில் மக்களுடன் வாழ்ந்தார்கள். தம் செயல்களின் மூலமாக அவர்களுக்கு வாழ்க்கையெனும் பாடத்தைப் புகட்டினார்கள். அவர்கள் இமாமத் எனும் பதவியால் மக்களை விட உயர்ந்தவர்கள், பூமியில் இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதனால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள். தம்மை மக்களை விட்டும் ஒதுக்கிக் கொள்ளவில்லை. அடக்குமுறை ஆட்சியாளர்களைப் போன்று எதனையும் தமக்கென சொந்தமாக்கிக் கொள்ளவுமில்லை ஒருபோதும் அவர்கள் மக்களை அடிமைகளாக்கவோ, இழிவுபடுத்தவோ இல்லை.

இப்ராஹீம் இப்னு அப்பாஸ் சொல்கின்றார்:

இமாம் ரிழாவை தன் பேச்சில் மற்றவர்களைப் புறக்கணித்ததாகவோ ஒருவருடைய பேச்சு முடிவடையும் முன் துண்டித்ததையோ நான் எங்கும் எப்போதும் காணவில்லை.

மேலும் ஒருவருடைய தேவையை தம்மால் நிவர்த்தி செய்ய முடியுமாயின், ஒருபோதும் அதனை நிராகரிக்காது நிவர்த்தி செய்து வந்தார்கள். மற்றவர்களுக்கு மத்தியில் தம் கால்களை நீட்டி அமர மாட்டார்கள். ஒருபோதும் அவர்கள் தம் பணியாட்களுக்கு ஏசியதாகவோ, துன்பமடையும் வார்த்தைகளைக் கூறியதாகவோ இதுவரை எவரும் கூற நான் கேட்கவில்லை. அவர்களின் சிரிப்பு எப்போதும் புன்முறுவலாகவே இருந்தது.

சாப்பிடும் நேரம் வந்ததும் காவலாளி, இடையன் உட்பட வீட்டார் அனைவரையும் அழைத்து அவர்களுடன் உணவு உண்ணுவார்கள். இரவு வேளைகளில் சிறிது நேரம் தூங்குவார்கள். அதிகமாக விழித்திருந்து இறைவணக்கத்தில் ஈடுபடுவார்கள். அதிகமாக நோன்பும் நோற்பார்கள். குறிப்பாக மாதாந்தம் மூன்று நோன்பை விடாது நோற்று வந்தார்கள்.

நல்ல காரியங்களில் ஈடுபடல், மறைவாக உதவுதல் போன்றவை அவர்களிடம் நிறைந்து காணப்பட்டன. கூடுதலாக இருண்ட இரவு நேரங்களில் ஏழைகளுக்கு உதவி செய்து வந்தார்கள்.

முஹம்மத் இப்னு அபு உப்பாத் கூறுகிறார்:

இமாம் கோடை காலத்தில் தூங்குவதற்கு ஓலையினால் பின்னப்பட்ட பாயையும் மாரி காலத்தில் கம்பளியால் ஆன விரிப்iயும் உபயோகித்து வந்தார்கள். வீட்டில் அவர்களின் ஆடை மிகவும் சாதாரணமாக இருந்தது. பொதுவான சபைகளுக்குப் போகும் போது அதற்குகந்த பொருத்தமான ஆடையை அணிந்து தம்மை அழகுபடுத்திக் கொள்வார்கள்.

ஒரு நாள் இரவு இமாமின் வீட்டில் விருந்தாளி ஒருவர் தங்கினார். இமாமுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு மத்தியில் இருந்த விளக்கு மங்கியது. அதை சரிப்படுத்த விருந்தாளி தன் கையை நீட்டிய போது, இமாம் அதனைத் தடுத்து தம் கையால் அதனை சரிபடுத்தி விட்டுச் சொன்னார்கள். நாங்கள் எமது விருந்தாளிகளிடம் வேலை வாங்கும் கூட்டத்தினர் அல்ல.

ஒருமுறை இமாம் பொதுக் குறியலறைக்குச் சென்றிருந்தார். இமாமை அறிமுகமில்லாத ஒருவர், தன் உடம்பிலுள்ள அழுக்குகளைத் தேய்த்து நீக்கி விடுமாறு இமாமிடம் வேண்டினார். இமாமும் அவ்வாறே செய்தார்கள்.

அப்போது அங்கிருந்தவர்கள், அம்மனிதருக்கு இமாமைப் பற்றி அறிவிக்க, அவர் வெட்கித் தலைகுனிந்தவராக இமாமிடம் மன்னிப்புக் கோரினார், இமாமோ அதைக் கவனிக்காது தம் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வேலை முடிந்ததும் ஒன்றும் நடக்காதது போல் அம்மனிதருக்கு ஆறுதல் கூறினார்கள்.8

ஒரு மனிதர் இமாம் ரிழாவை நோக்கி, இறைவன் மீது ஆணையாக இப்பூமியில் தங்களைப் போன்ற சிறந்த தந்தையில்லை   என்று கூறினார். இமாம் அவருக்கு தக்வாவை உபதேசித்து தம் அனைத்து விடயங்களிலும் இறைவனை முன்னிறுத்திக் கொள்ளுமாறு உபதேசம் செய்தார்கள்.

பல்ஹு நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூறுகின்றார்:

ஒருமுறை நான் குராசானை நோக்கி இமாமுடன் பிரயாணம் சென்றேன். ஒரு நாள் இமாம், தம்முடன் இருந்த கறுப்பர்கள் உட்பட அனைத்து பணியாளர்களையும் தம்முடன் இருந்து உணவு உண்ணுமாறு அழைத்தார்கள்.

அப்போது நான் இமாமை நோக்கி, அவர்கள் வேறாக இருந்து உண்டால் நன்றாக இருக்குமே   என்று கூற, இமாம் என்னை அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டு, நாம் அனைவரது இறைவனும் ஒருவனே. அனைவரது தந்தையும் ஒருவரே. ஒவ்வொருவரது கூலியும் அவர்களது நற்கருமங்களுக்கு ஏற்றதாகும்   என்று கூறினார்கள்.

இமாமின் பணியாட்களில் ஒருவரான யாசிர் கூறுகின்றார்:

இமாம் ரிழா எங்களை நோக்கி, நீங்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் போது நான் உங்களை அழைத்தால், நீங்கள் சாப்பிட்டு முடியும் வரை எழுந்து விடாதீர்கள்   என்றார்கள்.

பல தடவைகள் நாங்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் போது இமாம் எங்களை அழைப்பார்கள். ‘சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்’ என அவர்களுக்குக் கூறப்பட்டதும் ‘முடித்து விட்டு வாருங்கள்’ என்று கூறுவார்கள்.

ஒருமுறை ஒருவர் இமாமிடம் வந்து ஸலாம் கூறிவிட்டுச் சொன்னார்: நான் தங்களையும் தங்கள் தந்தையர், மூதாதையர்களையும் நேசிக்கும் ஒருவன். இப்போது நான் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு வருகின்றேன். ஆனால் எனது பணம் அனைத்தும் முடிந்து விட்டது. எனக்கு நீங்கள் உதவி செய்ய விரும்பினால், எனது ஊரைப் போய்ச் சேர்வதற்காக சிறு தொகைப் பணம் தாருங்கள்   என்றும், நான் எனது ஊரில் ஏழையானவன் அல்ல. ஆனால், இப்போது தேவையானவனாக உள்ளேன். தாங்கள் எனக்குக் கொடுப்பதைப் போன்றதொரு பங்கை அங்கு நான் ஸதகா செய்வேன்   என்றும் கூறினார்.

இதைக் கேட்ட இமாம் எழுந்து வேறொரு அறைக்குச் சென்று இருநூறு தீனார்களை எடுத்து, கதவுக்கு மேலால் தம் கையை நீட்டிச் சொன்னார்கள். இந்த இருநூறு தீனார்களையும் எடுத்து உங்கள் பிரயாணத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள். ஊரை அடைந்ததும் இது போன்றதொரு பங்கை என் தரப்பிலிருந்து சதகா செய்வது அவசியமில்லை   என்றார்கள்.

அம்மனிதரோ தீனார்களைப் பெற்றுச் சென்ற பின் இமாம் அவ்வறையிலிருந்து தமது இடத்திற்கு வந்தார்கள். அப்போது தோழர்கள் இமாமே! அம்மனிதர் தங்களிடமிருந்து தீனார்களைப் பெறும் போது அவர் தங்களைக் காணக்கூடாது என்பதற்காகவா இவ்வாறு செய்தீர்கள்?   எனக் கேட்டனர்.

அதற்கு இமாம், அம்மனிதர் தனக்குத் தேவையானதைக் கேட்டுப் பெறும் போது அவர் வெட்கப்படுவதை நான் பார்க்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்   என்றார்கள்.

இமாம்கள் தம் தோழர்களைப் பயிற்றுவிப்பதிலும் அவர்களுக்கு நேர்வழியைக் காண்பிப்பதிலும் ஈடுபாடு காண்பித்ததோடு, போதிப்பதோடு மாத்திரம் நின்று விடாமல், அவர்களது நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணித்தும் வந்தார்கள். அவர்களின் வாழ்வில் பிழையொன்று குறுக்கிடும் போது அதை பிழையெனக் கூறி தங்களையும் தம் எதிர்கால சந்ததியினரையும் அதிலிருந்து மீளுவதற்கான வழிமுறைகளை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.

இமாம் ரிழாவின் சீடர்களில் ஒருவரான சுலைமான் அல் ஜஃபரி கூறுகின்றார்:  நான் சில தேவைகளுக்காக இமாமிடம் சென்றிருந்தேன் என் விடயம்  முடிந்து வீடு செல்ல அனுமதி கேட்ட போது இமாம் என்னைத் தம் வீட்டில் தங்குமாறு பணித்தார்கள்.

பின்னர் இமாம் என்னை அழைத்ததன் பிரகாரம் அன்னாரோடு வீட்டை நோக்கை நடந்து சென்றோம். அது மாலை நேரம். வழியில் இமாமுடைய பணியாட்கள் கட்டட வேலையொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையில் ஒரு புதியவரும் காணப்பட்டார்.

அப்போது இமாம் யார் அவர்?   என வினவ, அவர் எமது கூலிக்காரர். வேலை முடிந்ததும் அவருக்கு ஏதாவது கொடுப்போம்   என்று அவர்கள் கூறினர்.

இமாம், அவரது கூலியைப் பேசித் தீர்மானித்தீர்களா?   என வினவ, இல்லை. எவ்வளவு கொடுத்தாலும் அவர் ஏற்றுக் கொள்வார்   எனன்றனர்.

இதைக் கேட்டதும் இமாம் ஆச்சரியமும் கோபமும் அடைந்தார்கள். கோபப்பட வேண்டாம்   என்று நான் அவர்களுக்குக் கூறினேன். அதற்கவர்கள்:

எந்தவொரு தொழிலாளியையும் அவரது கூலியை நிர்ணயிக்காது வேலைக்கு அமர்த்த வேண்டாம் என பல தடவைகள் நான் இவர்களுக்குக் கூறியுள்ளேன். எவ்வித முன் பேச்சுமின்றி ஒருவரை வேலைக்கு அழைத்து, இறுதியில், கொடுக்கும் கூலியை விட மூன்று மடங்கு அதிகமாகக் கொடுத்தாலும் கூலி குறைவாகக் கொடுத்ததாகவே அவர் நினைப்பார். மாறாக அவருடன் பேசி கூலியை நிர்ணயித்த பின் இறுதியில் அதைக் கொடுத்தால், உடன்படிக்கையின் பிரகாரம் செய்ததையிட்டு அவர் சந்தோஷப்படுவார். அத்தோடு, இறுதியில் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாகக் கொடுத்தால், பேசியதை விட அதிகமாகக் கொடுத்ததையிட்டு அவர் தனது நன்றியைத் தெரிவிப்பார்   என்று கூறினார்கள்.

இமாமின் மிக நெருங்கிய தோழர்களில் ஒருவரான அஹ்மத் இப்னு அபிநஸ்ர் பஸந்தி அறிவிக்கின்றார்:

நானும் வேறு மூன்று பேரும் இமாமிடம் சென்று சில மணிநேரம் அவர்களுடன் உரையாடினோம். பின் நாம் இருப்பிடங்களுக்குச் செல்ல எழுந்த போது, இமாம் என்னை நோக்கி ‘அஹ்மதே! நீர் கொஞ்சம் இருப்பீராக’ என்றார்கள்.

என்னுடன் இருந்தவர்கள் சென்றுவிட்டனர். நான் இமாமிடம்  இருந்தேன். என்னிடம் இருந்த கேள்விகளுக்கெல்லாம் இமாமிடமிருந்து பதில்களைப் பெற்றுக் கொண்டேன்.

இரவின் ஒரு பகுதி கழிந்தது. விடைபெறுவதற்காக எழுந்த போது போகின்றீரா? அல்லது இங்கு தங்குகின்றீரா?   எனக் கேட்டார்கள். நான், அனைத்தும் தங்கள் சித்தம். போ என்றால் போகிறேன். இரு என்றால் இருக்கிறேன்   என்று கூறினேன்.

இமாம் என்னைத் தங்குமாறு பணித்து ஓர் இடத்தை சுட்டிக் காட்டி இங்கே தூங்கலாம்  எனக் கூறி விட்டு தமது அறைக்குச் சென்றார்கள்.

நான் மகிழ்ச்சியின் காரணத்தால் சுஜூதுக்குச் சென்று, இந்த நபிகளாரின் பரம்பரையில் உதித்த அல்லாஹ்வின் அத்தாட்சிக்கு பணிவிடை செய்வதற்காக பலர் வந்தும் என்னை விரும்பித் தேர்ந்தெடுத்ததற்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றேன்   என்று பிரார்த்தித்தேன்,

சஜ்தாவிலிருந்து எழும்பு முன் இமாம் மீண்டும் வந்திருப்பதை உணர்ந்து திடீரென சுஜூதிலிருந்து எழுந்தேன். அப்போது , இமாம் என் கையைப் பிடித்து மெதுவாக அழுத்தி விட்டுச் சொன்னார்கள்:

அஹ்மதே! அமீருல் முஃமினீன் அலீ தம் நெருங்கிய தோழர்களில் ஒருவரான சஃசஆ இப்னு சௌஹான் என்பவரை நோய் விசாரிக்கச் சென்றார் அவர் அமீருல் முஃமினீனைக் கண்டதும் எழுந்து நிற்க முயற்சி செய்தார்.

அப்போது அமீருல் முஃமினீன் சஃசஆவை நோக்கி, நான் உம்மை சந்திக்க வந்ததற்காக நீர் மற்றவர்களிடம் பெருமையடித்துக் கொள்ள வேண்டாம். அதாவது நான் உனனைப் பார்க்க வந்தேன் என்பதற்காக மற்றவர்களை விட நீர் உயர்ந்தவர் ஆக முடியாது. எனவே, இறைவனைப் பயந்து கொள். அவனுக்கு அடிபணிந்து வாழ்ந்தால், அவன் உமக்கு உயர்ந்த அந்தஸ்து பதவிகளைத் தருவான்  என்று கூறினார்கள்.

எந்தவொரு காரணியும் சிறந்த நற்கருமங்களின் இடத்தை அடையமாட்டாது என்பதை தமது சொல் செயலின் மூலமாக இமாம் அலீ அம்மனிதருக்குப் போதித்தார். அத்தோடு நாம் எந்தச் செயலுக்காகவும் ஒருபோதும் பெருமையடிக்கக் கூடாது. அது நாம் இமாமின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்றிருந்தாலும் சரியே. ஒருபோதும் நாம் அதன் மூலம் மற்றவர்களை விட சிறந்தவர்களாகவும் கருத முடியாது.

பரிசுத்தவான்களின் வரலாறு எனும் நூலிலிருந்து…

Scroll to Top
Scroll to Top