ஷீஆ இஸ்லாமியப் பிரிவு – ஒரு சுருக்கமான அறிமுகம்

Introduction to Shia Islamic Sects

(Brief History, Shia in the World and Shia in Sri Lanka)

 

ஷீஆ இயக்கத்தின் தோற்றம்
(ஷீஆ சிந்தனை ஒரு இயக்கமாக உருவெடுத்தல்)

இஸ்லாம் மார்க்கத்தில் சமூக மற்றும் அரசியல் காரணமாக ஏற்பட்ட பிளவின் அடிப்படையில் முதலாவதாக தோன்றிய பிரிவுகள் 1. சுன்னி 2. ஷீஆ 3. கவாரிஜ் ஆகிய மூன்றுமாகும். இது கி.பி 657 இல் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்ட ‘சிஃப்பீன்’ எனும் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பிளவு ஏட்டது. இந்த யுத்தத்திற்கு முன், முஸ்லிம்கள் ‘இயக்கம்’ என்று இன்று அழைக்கப்படுவதைப் போன்றதொரு நடைமுறையில் தனியான பள்ளிவாயல்கள், மையவாடிகள், சிந்தனை வேறுபாடுகளுக்காக சண்டையிடுதல் போன்ற இயக்கப் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை. அப்போது, அரசியல் முரண்பாடுகளும், சிந்தனை முரண்பாடுகளும் இருந்த போதிலும், அவை சமூகத்தில் இயக்கமாக தோன்றியிருக்கவில்லை. அவ்வாறே, ‘அப்துல்லாஹ் இப்னு சபா’ என்பவனால் ஷீஆ இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்ற சுன்னிகளின் கருத்தும் கற்பனையாதும், கட்டுக்கதையானதுமாகும்.இது குறித்து பல்வேறு சுன்னி அறிஞர்களே ஆய்வுகளை மேற்கொண்டு அதனை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்பது கவனத்திற்கொள்ள வேண்டியது.

‘சிப்பீன்’ யுத்தம்

கி.பி. 632 இல் முஹம்மது நபிகளார் (ஸல்) காலமானார்கள். அவர்கள் உருவாக்கியிருந்த ‘இஸ்லாமியப் பேரரசு’ இன்றைய அறபு தேசங்கங்களை ஒன்றிணைத்ததாக இருந்தது. அவரையடுத்து, கி.பி. 632-634 வரையில் அபூபக்கர் ரழியும், கி.பி. 634-647 வரையில் உமர் ரழியும், கி.பி 647-656 வரையில் உஸ்மான் ரழியும், கி.பி 656-661 வரையில் அலீ ரழியும் இஸ்லாமியப் பேரரசை ஆண்டனர்.

இன்றைய சிரியாவும் அப்போதைய இஸ்லாமிய பேரரசின் கீழ் இருந்தது. அப்போது முஆவியா ரழி சிரியாவின் ஆளுனராக இருந்தார். கி.பி. 656 இல் அலீ ரழி இஸ்லாமியப் பேரரசுக்கு தலைவராக ஆனார். என்றாலும், முஆவியா ரழி அதனை ஏற்றுக்கொள்ளாது. தன்னை இஸ்லாமியப் பேரரசுக்கு தலைவர் என்று அறிவித்தார். (இஸ்லாமிய பேரரசின் தலைவரை சுன்னி முஸ்லிம்கள் ‘கலீபா’ என்ற சொல்லால் அழைப்பார்கள்). இம்முரண்பாட்டால் அலீ ரழிக்கும், முஆவியா ரழிக்கும் இடையில் கி.பி. 657 இல் வடசிரியாவின் ‘சிஃப்பீன்’ எனும் இடத்தில் வைத்து யுத்தம் நடைபெற்றது.

இந்த யுத்தம் இறுதியில் முடிவின்றி இடைநிறுத்தப்பட்டது. இரு படையிலிருந்தும் சுமார் 70,000 பேர் கொல்லப்பட்டனர். இப்பிரச்சினைக்கு குர்ஆனைக் கொண்டு தீர்ப்பைத் தேடாமல் பொது உடன்படிக்கையின்பால் சென்று யுத்தத்தை நிறுத்தியதை விரும்பாத ஒரு குழுவினர் அலீ ரழியின் படையிலிருந்து வெளியேறிச் சென்றனர். இவ்வாறு வெளியேறிச் சென்றோர் ‘கவாரிஜ்’ என்று (அதாவது வெளியேறியோர் எனும் சொல்லால்) அழைக்கப்பட்டனர். இந்தவகையில் பின்வருமாறு மூன்று வகையான பிரிவினர் இஸ்லாத்தில் தோன்றினர்.

1. சுன்னி (அல்லது அஹ்லுல் சுன்னா வல் ஜமாஅத்) – முஆவியா ரழியின் படையில் பங்குகொண்டவர்களும், அவரது ஆதரவாளர்களும்.

2. ஷீஆ (அல்லது ஷீஅது அலீ: அலீயை ஆதரிப்போர் என்பது பொருள்) – அலீ ரழியின் படையில் பங்குகொண்டவர்களும், அவரது ஆதரவாளர்களும்.

3. கவாரிஜ் (அல்லது காரிஜ் என்று அழைக்கப்படும் இவர்கள் இன்று ஓமான் நாட்டில் மாத்திரம் இருக்கிறார்கள். தற்போது ‘இபாழிய்யா’ என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.) – அலீ ரழியில் படையிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள். இவர்கள் அலீ ரழிக்கும், முஆவியா ரழிக்கும் எதிராக மாறியோர்.

ஷீஆ சிந்தனையின் தோற்றம்
(ஷீஆ இயக்கம் உருவெடுப்பதற்கு முன்னரான ஷீஆ சிந்தனையின் தோற்றம்)

1. கிலாஃபத் மற்றும் கலீஃபா பற்றிய எண்ணக்கரு

கிலாஃபத் மற்றும் கலீஃபா ஆகிய விடயத்தில் சுன்னிகளைப்போல் அல்லாது, வேறுபட்ட விளக்கத்தை ஷீஆக்கள் கொண்டுள்ளனர். இந்த வேறுபாடுதான், சிந்தனை ரீதியாக ஷீஆ – சுன்னி முஸ்லிம்கள் வேறுபடுவதற்கு அடிப்படைக் காரணமாகிறது. இந்த வேறுபாட்டை பின்வருமாறு பார்க்கலாம்.

சுன்னி ஷீஆ
கிலாஃபத் என்பது இஸ்லாமிய அரசாகும். கிலாஃபத் என்பது இறைவனின் ஆன்மீகப் பிரதிநிதித்துவமாகும்.
கலீஃபா என்பவர் இஸ்லாமிய அரசின் தலைவர் ஆவார். கலீஃபா என்பவர் இறைவனின் ஆன்மீகப் பிரதிநிதி ஆவார்.
கலீஃபா மக்களால் தெரிவு செய்யப்படலாம் அல்லது ஒரு போரில் வெற்றிபெறுபவர் கலீஃபாவாக ஆகலாம். இறைவனின் ஆன்மீகப் பிரதிநிதி எனும் பொருளில் கலீஃபாவை மக்கள் தெரிவு செய்ய முடியாது. இறைவனால் தெரிவுசெய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டவர்கள் மாத்திரம்தான் கலீஃபாவாக இருக்க முடியும்.
இதனால், மக்களால் தெரிவு செய்யப்படுவோர் ஆட்சிசெலுத்தும் மரபு நீங்கி, போரில் வெற்றிபெற்றோர் ஆட்சிசெலுத்தும் முறை முஸ்லிம்கள் மத்தியில் தோன்றியது. உமையாக்கள், அப்பாஸியர், உஸ்மானியர் ஆகியோர் போரின் மூலம் ஆட்சியை கைப்பற்றி ஆண்டவர்கள். இவ்வாறு இறைவனால் அறிவிக்கப்பட்ட ஆன்மீகப் பிரதிநிதி இல்லாதபட்சத்தில், சமூகத்தில் அரசியல்தேவை ஏற்பட்டால் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர் மட்டுமே ஆட்சிசெலுத்த முடியும். மாறாக, போரின் மூலமாக மக்களை ஆளமுடியாது.
இதற்கு உதாரணமாக சஊதி அரேபியாவைக் குறிப்பிடலாம். இன்றைய சஊதி அரேபியாவில் ஆட்சியாளர் கலீஃபா என்று அழைக்கப்படுகிறார். ஆனால், அவர் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. இதற்கு உதாரணமாக ஈரானைக் குறிப்பிடலாம். இறைவனால் அறிவிக்கப்பட்ட ஆன்மீகப் பிரதிநிதியான கலீஃபா இல்லாத காரணத்தால், ஈரானில் ஜனநாயகத் தேர்தலின் மூலமாக ஜனாதிபதி செய்யப்படுகிறார். அவரை யாரும் கலீஃபா என்று அழைப்பதில்லை.

ஷீஆ நம்பிக்கையின்படி, முஹம்மது நபிகளார் (ஸல்) அவர்கள் வாழும்போதே அலீ ரழியை தனக்குப் பின்னர் இறைவனால் அறிவிக்கப்பட்ட ஆன்மீகப் பிரதிநிதி அதாவது கலீஃபா என்று அறிவித்திருந்தார்கள். அவ்வாறே, அலீ ரழியின் ஆதரவாளர்கள் (ஷீஅது அலீ: அலியைப் பின்பற்றுவோர்) சுபீட்சம் பெற்றவர்கள் என்றும் அறிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், கி.பி. 632 இல் முஹம்மது நபிகளார் (ஸல்) காலமானபோது, அவருக்கு அடுத்தபடியான பிரதிநிதியைத் தெரிவுசெய்வதில் முஸ்லிம் சமுதாயத்தில் கருத்து முரண்பாடு தோன்றியது. அலீ ரழிதான் அடுத்த இறைவனால் அறிவிக்கப்பட்ட ஆன்மீகப் பிரதிநிதி என்ற முஹம்மது நபிகளாரின் வழிகாட்டலைப் புறக்கணித்துவிட்டு, இறைவனின் ஆன்மீகப் பிரதிநிதியான அலீ ரழி இருக்கும்போதே, அரசியல் தலைமைத்துவத்தை ஒரு குழுவினர் அபூபக்கர் ரழிக்கு கொடுத்துவிட்டு, அவரை கலீஃபா என்று அறிவித்துவிட்டனர். இதனால், ‘கிலாஃபத்’ பற்றிய விடயத்தில் கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் ஷீஆ – சுன்னி முஸ்லிம்கள் மத்தியில் முரண்பாடு தோன்றியது. இதனால், கிலாஃபத் என்றால் இஸ்லாமிய அரசு என்ற கருத்து சுன்னி முஸ்லிம்கள் மத்தியில் நிலவத்தொடங்கியது.

2. கிலாஃபத் பற்றிய ஷீஆ வாதம்

‘கலீஃபா’ என்ற வார்த்தை ‘கலீஃபதுல்லாஹ்’ என்ற வார்த்தையின் சுருக்கமான வடிவமாகும். அந்த அறபு வார்த்தைக்குப் பொருள், ‘அல்லாஹ்வின் பிரதிநிதி’ என்பதாகும். ‘கலீஃபா’ என்ற வார்த்தை திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டதாகும். கலீஃபா என்று முதலாவதாக அறிவிக்கப்பட்டவர் ஹஸரத் ஆதம் (அலை) அவர்கள் ஆவார்கள். அவர்தான் முதல் மனிதனும், அல்லாஹ்வின் முதல் பிரதிநிதியும் (கலீஃபாவும்) ஆவார்கள்.

ஹஸரத் ஆதம் (அலை) அவர்களும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் ஆகியோரைத் தவிர பூமியில் வேறு எந்தவொரு மனிதர்களும் அப்போது வாழவில்லை. ஹஸரத் ஆதம் (அலை) அவர்களுடைய குடும்பம் மட்டுமே பூமியில் மனிதர்களாக இருந்தார்கள். அப்போது, சமூகத்தின் மிகச்சிறிய அலகான ‘குடும்பம்’ என்பதற்கு அப்பால், ஒரு ஆட்சியை நிறுவுதற்கான அரசியல் கூறான ‘சமூகம்’ என்பது இருக்கவில்லை. எனவே, ஹஸரத் ஆதம் (அலை) ஒரு ஆட்சியாளராக, அரசியல்வாதியாக, மன்னராக இருக்கவில்லை. மாறாக, ஒரு தந்தையாக இருந்தார். அதேநேரம், அல்லாஹு தஆலா அவரை தன்னுடைய கலீஃபா (பிரதிநிதி) என்று அறிவித்தான். எனவே, ‘கலீஃபா’ என்ற சொல், ஆட்சியாளர் என்ற பொருளில் அமையாது என்பதை விளங்கிக்கொள்ளலாம். மாறாக, இறைவனின் ஆன்மீகப் பிரதிநிதி என்ற பொருளில் மட்டும்தான் அமைய முடியும்.

இந்தவகையில், அல்லாஹ்வின் பிரதிநிதியை மக்களால் தெரிவுசெய்ய முடியாது. தன்னுடைய பிரதிநிதியை அல்லாஹ்தான் அறிவிக்க வேண்டும். அவரைத்தான் மக்கள் கலீஃபாவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, மாறாக மக்கள் அல்லாஹ்வின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க முடியாது. அப்படி மக்கள் ஒருவரை பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தால், அவர் மக்கள் பிரதிநிதியாக மட்டும் இருப்பாரே தவிற, இறைவனின் பிரதிநிதியாக மாறிவிட முடியாது. யார் தன்னுடைய பிரதிநிதியாக இருப்பதற்குத் தகுதியானவர் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த விடயமாகும். எனவே அப்படியான ஒருவரைத் தெரிவுசெய்வதும் அவன் மட்டுமே.

இதன்படி, கி.பி. 632 இல் முஹம்மது நபிகளார் (ஸல்) காலமானபோது, அவருக்கு அடுத்தபடியான பிரதிநிதியைத் தெரிவுசெய்வதில் முஸ்லிம் சமுதாயத்தில் கருத்து முரண்பாடு தோன்றியபோது ஒரு குழுவினர் அபூபக்கர் ரழியைத் தெரிவு செய்தனர். இது மக்கள் தெரிவு செய்ததாகும். எனவே, மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர், ‘கலீஃபதுல்லாஹ்’ எனும் அல்லாஹ்வின் பிரதிநிதியாக மாறிவிட முடியாது. எனவே இது ஒரு தவறான தெரிவாகும். அப்போதிருந்த உண்மையான ‘கலீஃபதுல்லாஹ்’ அலீ ரழிதான். அவர்தான் அல்லாஹ்வின் பிரதிநிதியாக முஹம்மது நபிகளாரின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தார். எனவே, அல்லாஹ்வின் பிரதிநிதி இருக்கும் போது, வேறு ஒருவரை கலீஃபாவாகத் தெரிவுசெய்ய முடியாது.

இதனால்தான், முஸ்லிம்களை ஆண்ட ஆட்சியாளர்களிடம் காணப்பட்ட ஆன்மீக மற்றும் ஒழுக்க ரீதியான வீழ்ச்சிகள் காரணமாக ஆன்மீக தலைமைத்துவத்தையும், அரசியல் தலைமைத்துவத்தை வேறுபடுத்தி விளங்கிக்கொள்ளும் வகையில் ஆன்மீக தலைமைத்துவத்தை இமாமத் (இமாம்) என்ற சொல்லாலும், அரசியல் தலைமைத்துவத்தை கிலாஃபத் (கலீஃபா) என்ற சொல்லாலும் சுன்னி முஸ்லிம்கள் அழைக்கின்றனர்.
ஆனால், ஷீஆ முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் இமாம் மற்றும் கலீஃபா என்பது இரண்டு ஒன்றுதான். அது மக்களை வழிநடாத்துவதற்காக இறைவனின் புறத்திலிருந்து நியமிக்கப்பட்ட இறைவனின் பிரதிநிதியாகும்.

குறிப்பு: இன்று ஷீஆக்கள் தங்களுடைய ‘கிலாஃபத், கலீஃபா’ பற்றிய சிந்தனையை, சுன்னிகளின் சிந்தனையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக ‘இமாமத், இமாம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதால், இனி ‘கலீஃபா’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘இமாம்’ என்ற சொல்லையே இங்கு நாம் பயன்படுத்துகிறோம். இமாம் என்றால் கலீஃபா என்பதே பொருள். அதாவது இறைவனின் பிரதிநிதியாகும்.

ஷீஆ இயக்கங்கள்

தற்போது நடைமுறையில் இருக்கும் ஷீஆ இயக்கங்கள் மூன்றாகும்.

1. சைதிய்யா

2. இஸ்மாயிலிய்யா

3. இமாமிய்யா (வேறு பெயர்கள் இஸ்னா அஷரிய்யா அல்லது ஜஃபரிய்யா)

அடிப்படை வேறுபாடுகள்

இவை மூன்றும் இறைவனால் தன்னுடைய பிரதிநிதி (கலீஃபா அல்லது இமாம்) என்று அறிமுகப்படுத்தப்பட்டோர் யார் என்பதில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் பிரிந்தவையாகும். இமாம் என்பவர் பரம்பரை வழியாக மகன், மகனின் மகன் என்று தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

1.இமாம்கள் தொடர்பில் வேறுபாடுகள்

சைதிய்யா இஸ்மாயிலிய்யா இமாமிய்யா
இமாம்கள் பலர் உள்ளனர்.
1-இமாம் அலீ
2-இமாம் ஹஸன்
3-இமாம் ஹுசைன்
4-இமாம் சஜ்ஜாத்
5-இமாம் சைத் இப்னு அலி
(5வது இமாம் தொடர்பில் இமாமிய்யாக்களோடு முரண்பட்டு ஒரு பிரிவாக மாறினர். 100க்கும் அதிகமானோரை இமாம்களாக ஏற்றிருந்தனர். தற்போது இமாம் யாரும் இல்லை.)
இமாம்கள் பலர் உள்ளனர்.
1-இமாம் அலீ
2-இமாம் ஹஸன்
3-இமாம் ஹுசைன்
4-இமாம் சஜ்ஜாத்
5-இமாம் பாக்கிர்
6-இமாம் ஜஃபர் சாதிக்
7-இமாம் இஸ்மாயீல்
(7வது இமாம் தொடர்பில் இமாமியாக்களோடு முரண்பட்டு ஒரு பிரிவாக மாறினர். 100க்கும் அதிகமானோரை இமாம்களாக ஏற்றிருந்தனர். தற்போது இமாம் யாரும் இல்லை.)
இமாம்கள் பன்னிருவர் மட்டுமே.
1-இமாம் அலீ
2-இமாம் ஹஸன்
3-இமாம் ஹுசைன்
4-இமாம் சஜ்ஜாத்
5-இமாம் பாக்கிர்
6-இமாம் ஜஃபர் சாதிக்
7-இமாம் காழிம்
8-இமாம் ரிழா
9-இமாம் தகி
10-இமாம் நகி
11-இமாம் அஸ்கரி
12-இமாம் மஹ்தி
(இத்தொடர் இத்துடன் நிறைவுபெற்றுவிட்டது)

2.வாழும் இடங்கள்

சைதிய்யா இஸ்மாயிலிய்யா இமாமிய்யா
அதிகமானோர் யமன் நாட்டிலும், கணிசமானோர் ஓமானிலும் வாழ்கின்றனர். அதிகமானோர் ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிலும், கணிசமானோர் ஐரோப்பியாவிலும், ஆப்ரிக்க நாடுகளிலும் வாழ்கின்றனர்.
இலங்கையிலும் கணிசமானோர் வாழ்கின்றனர்.
ஈரான், ஈராக் மற்றும் பஹ்ரைனில் பெரும்பான்மையாகவும், ஏனைய அறபு நாடுகளில் இரண்டாம் சிறுபான்மையினராகவும், ஏனை உலக நாடுகளில் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.
இலங்கையிலும் கணிசமானோர் வாழ்கின்றனர்.

இலங்கையில் ஷீஆ முஸ்லிம்கள்

எவ்வாறு அல்லது ஏன் இலங்கைக்கு ஷீஆ முஸ்லிம்கள் வந்தார்கள்? என்ற கேள்விக்கு ஒரே பதில்தான் உண்டு. உமையாக்களின் ஆட்சியில் முஹம்மது நபிகளாரின் குடுபம்பத்தினருக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும் எதிரான இடம்பெற்ற கொலை அச்சுறுத்தல்களின் காரணமாக தங்களுக்கு பாதுகாப்பான இடங்களைத் தேடி தூர தேசங்களுக்கு பயணித்தமையாகும். கி.பி 661 தொடக்கம் கி.பி. 750 வரையில் இஸ்லாமிய சாம்ராஜியத்தை உமையா வம்சத்தினர் ஆண்டனர். இவர்களது ஆட்சியில் சிறுபான்மையினராக இருந்த முஹம்மது நபிகளாரின் பரம்பரையினரும், அவர்களது ஆதரவாளர்களான ஷீஆ முஸ்லிம்களும் உமையாக்களின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகினர். தங்களுக்கு ஏற்பட்ட உயிர் ஆபத்துக்களின் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அவ்வாறு வந்த சிலர் கிழக்காசிய நாடுகளுக்கு குடியேறி, பின்னர் ஜாவா தீவுகளுக்கும், அங்கிருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கும் குடியேறினர்.

காலியில், அங்குள்ள சிங்களவர்களால் ‘ஜாகொசைன்’ பள்ளி என்று அழைக்கப்படும் ‘யா ஹுசைன் பள்ளிவாயல்’ ஷீஆ முஸ்லிம்களால் நிறுவப்பட்டதாகும். இதன் வரலாறு திட்டவட்டமாக கூறமுடியாதளவுக்கு மிகவும் பழமைவாய்ந்ததாகும். ஷீஆ முஸ்லிம்களிடத்தில் முஹம்மது நபிகளாரின் பேரரான இமாம் ஹுசைன் அவர்கள் மரணித்த தினத்தை முன்னிட்டு துக்கம் அனுஷ்டிக்கின்ற ஒரு பாரம்பரியம் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடல்வழியாக காலியை வந்தடைந்த பாரசீக ஷீஆ மாலுமிகள் கடலோரத்தில் வைத்து ‘யாஹுசைன்’ ‘யாஹுசைன்’ என்று குரலெழுப்பிக்கொண்டு துக்கம் அனுஷ்டித்துள்ளனர். இதன் நினைவாக அங்கே ‘யாஹுசைன்’ என்ற பெயரில் பள்ளிவாயல் ஒன்று நிறுவப்பட்டு, அது சிங்களர் மத்தியில் ‘ஜாகொசைன்’ என்ற பெயரில் பிரபல்யம் அடைந்துள்ளது. ஆனால், பின்னர் அது சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாயலாக மாற்றப்பட்டு, அன்மைய காலங்களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வஹ்ஹாபிச பிரச்சாரங்களால், ‘யாஹுசைன்’ என்பது ஷிர்க்கான வார்த்தையாகும் எனவே அதன் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று, தற்போது ‘மஸ்ஜிதுல் ஹுசைன்’ என்ற பெயரில் பெயர் மாற்றப்பட்டு இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே, ஈரானின் குராஸான் மாகாணத்திலிருந்து பல்வேறு இறைநேசர்கள் இலங்கைக்கு வந்து குடியேறி வாழ்ந்து மரணித்துள்ளனர். இவர்களுக்காக இலங்கையில் பல்வேறு மக்பராக்கள் கட்டப்பட்டுள்ளது. ‘குராஸானி அவ்லியாக்கள்’ என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். குராஸானில் வாழ்ந்து மரணித்து, அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஷீஆக்களின் எட்டாவது இமாமான ‘இமாம் ரிழா’ அவர்களின் தொடர்பைக் கொண்டவர்களாக குராஸானி அவ்லியாக்களும், பல சூஃபி தரீக்காக்களின் சில்சிலாக்களும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு குடியேறிய ஷீஆ முஸ்லிம்கள் பாரம்பரிய இஸ்லாமிய நடைமுறைகள் பலவற்றைக் கொண்டிருந்தனர். அவை அனைத்தும் ஷீஆ நடைமுறையாக இருந்தது. பின்னர், தென்னிந்தியாவிலிருந்து வந்த சுன்னி முஸ்லிம்களின் சிந்தனை தாக்கத்தினால் இவர்களில் பெரும்பான்மையானோர் சுன்னிகளாக மாறிப்போயினர். என்றாலும் ஷீஆப் பாரம்பரிய நடைமுறைகளை அவர்கள் கைவிடவில்லை. அவ்வாறே ஷீஆ இஸ்லாமிய சிந்தனைகளை மீளவும் போதிப்பதற்கான சாத்தியங்களும் இருக்கவில்லை.

இந்நிலையில், சஊதி அறேபியாவிலிருந்து வந்த வஹ்ஹாபிய பிரச்சாரகர்கள் (தவ்ஹீத் ஜமாஅத்தினர்), இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பாரம்பரியமாக இருந்துவந்த நடைமுறைகள் ஷீஆ நடைமுறைகளாக இருப்பதாகும், அதனைப் பேணி வரும் சூஃபி முஸ்லிம்கள் சுன்னிகள் அல்ல, அவர்களும் ஷீஆக்கள்தான் என்பதாகவும் அன்மைக்காலமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஷீஆக்களின் பாரம்பரிய நடைமுறைகள்

1.சியாரத் (மண்ணரையை தரிசித்தல்)

2.கத்தம் (மரணித்தோருக்காக குர்ஆன் ஓதுதல்)

3.மரணித்தவருக்கான நாற்பதாம் நாள் நினைவு

4.நூறாவது நாள் கத்தம்

5.மவ்லூத் ஓதுல் (முஹம்மது நபிகளாருக்கும், அவரது குடும்பமான அஹ்லுல்பைத்தினருக்கும் அவர்களுடைய பிறப்பு மற்றும் இறப்பை முன்னிட்டு ஓதப்படுகிறது.)

6.முஹர்ரம் மாத துக்க அனுஷ்டானங்கள்

7.ஷஃபான் மாத 15வது நாளில் (விராத் எனும் பராஅத் நாள்) ரொட்டி சுட்டுக் கொடுத்தல் (இது இமாம் மஹ்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நிகழ்ந்து வருகிறது)

8.மீலாதுந்நபி

9.கொடியேற்றம் (யசீதுக்ககு எதிராக இமாம் ஹுசைன் ஏந்திய கொடியின் நினைவாக கொடியேற்றும் பாரம்பரியம் முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றியது.)

இதுபோன்ற இன்னும் பல பாரம்பரிய விடயங்கள் இலங்கையில் ஷீஆ முஸ்லிம்களுக்கும், சூஃபி முஸ்லிம்களுக்கும் இடையில் ஒற்றுமையான அம்சங்களாக உள்ளன.

இலங்கையிலுள்ள ஷீஆ பிரிவுகள்

இலங்கையில் இரு ஷீஆ பிரிவினர் உள்ளனர்.

1.இஸ்மாயிலிய்யா

2.இமாமிய்யா

1.இஸ்மாயிலிய்யா

இலங்கையிலுள்ள இஸ்மாயிலிய்யாக்கள் ‘தாவூதி போரா’ என்று அழைக்கப்படுகின்றனர். இன்று இஸ்மாயிலிய்யாக்கள் இரு பிரிவினர் மட்டுமே உள்ளனர்.

1. ஆகாகானிய்யா: இவர்கள் ஐரோப்பா நாடுகளில் உள்ளனர்.

2. போரா (போBஹ்ரா) இவர்கள் தாவூதி போரா என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆசிய நாடுகளில் குறிப்பாக, இந்தியாவில் பெருமளவிலும், கணிசமான அளவு பாகிஸ்தானிலும், சிறியளவில் இலங்கையிலும் உள்ளனர்.

இவர்கள் தங்களுடைய சர்வதேச மதத்தலைவராக, இந்தியாவிலுள்ள ‘செய்யிதினா முபழ்ழல் சைபுத்தீன்’ என்பரை ஏற்றுக்கொண்டுள்ளனர். மதக்கடமைகளை நிறைவேற்றுவதில் அவருடைய வழிகாட்டலின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றனர்.

இவர்களுடைய ஏழு கடமைகளாவன:

1-இமாமத் (தங்களுடைய இமாம்களை ஏற்றுக்கொள்ளல்),

2-தஹாரத் (உடல், உள சுத்தம் பேணுதல்),

3-நமாஸ் (நாளாந்தம் மூன்றுவேளை தொழுதல்),

4-ஸகாத் (மாதாந்த தொழில் இலாபத்தில் 12 வீதத்தை இமாம்களுக்கு வழங்குதல்),

5-ஸவ்ம் (ரமழானில் நோன்பு நோற்றல்),

6-ஹஜ் (மக்காவுக்குச் சென்று ஹஜ் செய்தல்),

7-ஜிஹாதுந்நப்ஸ் (மனதை தூய்மைப்படுதல், மனோயிச்சையுடன் போராடுதல்)

2.இமாமிய்யா

இமாமிய்யா ஷீஆ முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவுகள் கிடையாது. இவர்களுக்கு இஸ்னா அஷரிய்யா (பன்னிரு இமாம்களை பின்பற்றுவோர்) மற்றும் ஜஃபரிய்யா (இமாம் ஜஃபர் சாதிக்கை பின்பற்றுவோர்) எனும் பெயர்களும் உண்டு.

இலங்கையில் வாழும் இமாமிய்யா ஷீஆக்கள் ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் வாழும் இமாமிய்யா ஷீஆக்களோடு மதரீதியான தொடர்பைக் கொண்டவர்கள். என்றாலும் போரா ஷீஆக்கள் அணிவதைப்போன்ற விஷேடமான கலாச்சார ஆடைகள் கிடையாது. தோற்றத்தில் ஏனைய சுன்னி முஸ்லிம்களைப் போன்றே காணப்படுவர்.

இமாமிய்யா ஷீஆக்களுக்கு ஒரு முக்கியமான சர்வதேச தலைவர்கள் உள்ளனர். இருவரில் ஒருவரைப் பின்பற்றுவோராக இவர்கள் உள்ளனர். இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான இமாமிய்யா ஷீஆக்கள் ஈராக்கில் வாழுகின்ற ‘ஆயதுல்லாஹ் சீஸ்தானி’ என்பரை மதத்தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். இலங்கையில் வாழும் இமாமிய்யா ஷீஆக்கள் ஈரானிலுள்ள ‘ஆயதுல்லாஹ் செய்யித் அலி காமெனயி’ அவர்களை மதத்தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நம்பிக்கைக் கோட்பாடுகள்

1.தவ்ஹீத் (இறைவன் ஒருவன் என்று நம்புதல்)

2.அத்ல் (இறைவன் நீதியானவன். யாரையும் அநியாயமாக தண்டிக்கமாட்டான் என்று நம்புதல்)

3.நுபுவ்வத் (முஹம்மது நபிகளார் இறைவனுடைய இறுதித்தூதுவர். இறைவனிடமிருந்தே அல்குர்ஆனைப் பெற்றுத்தந்தார் என்று நம்புதல்)

4.இமாமத் (பன்னிரு இமாம்களை நம்புதல்)

5.மஆத் (மரணத்திற்குப் பிறகு சுவர்க்கம், நரகம் என்பன உண்டு என்று நம்புதல்)

வணக்கவழிபாட்டுக் கடமைகள்

1-தொழுகை

2-நோன்பு

3-கும்ஸ் (வணிக இலாபங்களில் ஐந்தில் ஒரு பங்கை இமாமுக்கு வழங்குதல்)

4-ஸகாத் (விவசாயம், தங்கம்-வெள்ளி மற்றும் கால்நடைகள் ஆகியவற்றின் மூலமாக வரும் இலாபங்களில் கணிசமான அளவு தேவையுடையோருக்கு வழங்குதல்)

5-ஹஜ்

6-நன்மையை ஏவி, தீயதைத் தடுத்தல்

7-இமாம்களின் விடயத்தில் விருப்பு-வெறுப்பு பேணுதல்

Scroll to Top
Scroll to Top