صفات الشیعة ج ۱، ص ۲
عنوان باب : [النص] > [الحديث الأول]
معصوم : امام صادق (علیه السلام)
قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ اَلْمُتَوَكِّلِ رَحِمَهُ اَللَّهُ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى اَلْعَطَّارُ اَلْكُوفِيُّ عَنْ أَبِيهِ عَنْ مُوسَى بْنِ عِمْرَانَ اَلنَّخَعِيِّ عَنْ عَمِّهِ اَلْحُسَيْنِ بْنِ زَيْدٍ اَلنَّوْفَلِيِّ عَنْ عَلِيِّ بْنِ سَالِمٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بَصِيرٍ قَالَ قَالَ اَلصَّادِقُ عَلَيْهِ السَّلامُ :
شِيعَتُنَا أَهْلُ اَلْوَرَعِ وَ اَلاِجْتِهَادِ وَ أَهْلُ اَلْوَفَاءِ وَ اَلْأَمَانَةِ وَ أَهْلُ اَلزُّهْدِ وَ اَلْعِبَادَةِ أَصْحَابُ إِحْدَى وَ خَمْسِينَ رَكْعَةً فِي اَلْيَوْمِ وَ اَللَّيْلَةِ اَلْقَائِمُونَ بِاللَّيْلِ اَلصَّائِمُونَ بِالنَّهَارِ يُزَكُّونَ أَمْوَالَهُمْ وَ يَحُجُّونَ اَلْبَيْتَ وَ يَجْتَنِبُونَ كُلَّ مُحَرَّمٍ.
இமாம் ஜஃபர் ஸாதிக் அலை அவர்கள் கூறினார்கள்:
” எங்களைப் பின்பற்றும் ஷீஆக்கள் யாரெனில் ; பேணுதலானவர்கள் , நல்ல காரியங்கள் செய்வதில் அதிக ஈடுபாடு உடையவர்கள் , வாக்களித்தால் அதனைக் கடைப்பிடிப்பவர்கள் , நம்பிக்கையாக சென்ன அல்லது கொடுத்த விடயங்களைப் (அமானத்தினை) பாதுகாப்பவர்கள் , உலகப் பற்றற்றவர்கள் , வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் , ஒரு நாளைக்கு ஐம்பத்தியோரு ரக்அத்துக்கள் தொழக்கூடியவர்கள் , இரவில் நின்று வணங்குபவர்கள் , பகலில் நோன்பு நோற்பவர்கள் , அவர்களுடைய சொத்திலிருந்து ஸகாத் கொடுப்பவர்கள் , இறைஇல்லத்தினை ஹஜ் செய்பவர்கள் மேலும் இறைவன் தடுத்த விடயங்களைத் தடுத்து நடப்பவர்கள் ஆவார்கள் “.
( ஸிபாதுஷ் ஷீஆ : பாகம் 01, பக்கம் 02)
01.வரஃ(பேணுதல்) :
வரஃ எனப்படும்
பேணுதல் என்பது மனிதனை அவன் ஓர் பூரண மனிதனாக மாறுவதற்கு உதவும் ஓர் நிலையாகும். அது தக்வா எனப்படும் இறையச்சத்தினை விட உயர்ந்த ஓர் அந்தஸ்தாகும். யார் ஒருவர் பேணுதல் எனும் நிலையை அடைகின்றாரோ அவர் சந்தேகங்கள் , ஏன் சில நேரங்களில் பாவங்களில் சென்றடையும் சில அனுமதிக்கப்பட்ட விடயங்களையும் தவிர்ந்து கொள்வார்.
இஸ்லாமிய அறிஞர்கள் பேணுதல் என்பதற்கு சில படித்தரங்களை வகுத்துள்ளனர் : இறைஞானிகளின் பேணுதல் , நல்லோரின் பேணுதல் , இறையச்சமுடையோரின் பேணுதல் என்பன அவற்றில் உள்ளவையாகும்.
ஹதீஸ்களின் பிரகாரம் பேணுதலைக் கடைப்பிடிக்கும் ஒருவருக்கு ஏற்படும் நன்மைகள் என சில விடயங்களை இங்கு பார்க்கலாம் ; அவரது ஈமான் உறுதிநிலைஅடையும் , இறைவன் தடுத்த விடயங்கள் மற்றும் வெறுக்கத்தக்க விடயங்களையும் தவிர்ந்திருப்பார் , அஹ்லுல்பைத்தினரின் உதவியாளராக இருப்பார் , அனைத்தினையும் விட முக்கியமாக யகீன் எனப்படும் மெய்ஞானத்தின் படித்தரத்தினை அடைந்துகொள்வார்.
இவ்வாறான ஓர் உயர்ந்த படித்தரமே பேணுதல் எனப்படும் வரஃ ஆகும் .
02.அல்-இஜ்திகாத்:
அதிகம் முயற்சிசெய்தல் , விடாமுயற்சி என்று பொருள்படும். இங்கு நன்மைகள் செய்வதற்கு முந்திக்கொள்பவர்களைக் குறிக்கின்றது.
இறைவன் அல்-குர்ஆனில் சூரா பகரா :148 ஆம் வசனத்தில் இவ்வாறு கூறுகின்றான் :
وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّيْهَا فَاسْتَبِقُوا الْخَيْرٰتِؔ اَيْنَ مَا تَكُوْنُوْا يَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِيْعًا اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
(விசுவாசங்கொண்டேரே!) ஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு. அவரவர் அதன் பக்கம் திரும்புபவராக உள்ளார். ஆகவே, (அவைகளில்) நன்மையானவற்றிற்கு நீங்கள் முந்திக் கொள்ளுங்கள், நீங்கள் எங்கிருந்தபோதிலும், (இதன்மூலம்) உங்கள் யாவரையும் அல்லாஹ் கொண்டுவருவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் : 2:148)
இறைவிசுவாசிகளின் பண்புகளில் ஒன்றாக இருக்கவேண்டும் என்று இறைவன் அவர்களுக்கு கட்டளையிடுவது நல்லவிடயங்கள் செய்வதில் முந்திக்கொள்ளுங்கள் என்பதாகும். இதனையே இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் , அவர்களைப் பின்பற்றும் ஷீஆக்களின் இரண்டாம் பண்பாக நலவு செய்யும் விடயங்களில் முயற்சிப்பவர்கள் என்று கூறியுள்ளார்கள்.
அல்-குர்ஆனில் ஐம்பதற்கு மேற்பட்ட இடங்களில் நம்பிக்கைகொள்ளல் என்ற ஓர் விடயம் கூறப்பட்டால் அதைத்தொடர்ந்து வரும் இறைகூற்றாக அமைவது நற்காரியங்களை செய்தல் என்பதாகும்.
உதாரணத்திற்கு சில இறைவசனங்களை இங்கு நோக்குவோம் :
وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
இன்னும் விசுவாசங்கொண்டு நற்காரியங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் _ அவர்கள் சுவனவாசிகள்; அதில் அவர்கள் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்.
(அல்குர்ஆன் : 2:82)
وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ
(உண்மையாகவே) விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கின்றார்களே, அத்தகையோர் -அவர்களுக்கு பாவமன்னிப்பும் மகத்தான (நற்)கூலியும் உண்டு, என அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:9)
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوْبٰى لَهُمْ وَحُسْنُ مَاٰبٍ
விசுவாசங்கொண்டு நற்காரியங்களையும் செய்து வருகிறார்களே, அத்தகையோர், அவர்களுக்கு நல்வாழ்க்கையுண்டு, மேலும், நல்ல இருப்பிடமும் உண்டு.
(அல்குர்ஆன் : 13:29)
மேலே எடுத்துக்காட்டாக இங்கு முன்வைக்கப்பட்ட இறைவசனங்களை நோக்கின் ஓர் விடயத்தினை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அது என்னவெனில் நம்பிக்கைகொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கான நிரந்தர இடம் சுவனமாகும். அதேபோல் அவர்கள் பாவங்கள் செய்திருந்தால் அப்பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என்பதுமாகும்.
அல்-குர்ஆனில் இறைவன் நற்கருமங்கள் பாவங்களை நீக்குகின்றன என்றும்
… إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ….(11:114)
நம்பிக்கைகொண்டு , நற்கருமங்கள் செய்வோரின் பாவங்களை இறைவன் நன்மைகளாக மாற்றுகின்றான் என்றும்
إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰٓئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا (25:70)
கூறுகின்றான்.
எனவே, அல்-குர்ஆனின் இறைவசனங்களையும் இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஹதீஸினையும் வைத்து நாம் ஓர் முடிவிற்கு வர முடியும் ; அது என்னவெனில் அஹ்லுல்பைத்தினரை உண்மையாக பின்பற்றும் மேற்கூறப்பட்ட பண்புடைய ஷீஆக்கள் எவ்வித சந்தேகமுமின்றி சுவனவாசிகளாகும். நாமும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்துகொள்ள அல்லாஹ் தஆலா அஹ்லுல்பைத்தினரின் பொருட்டால் அருள்புரிவானாக! இலாஹீ ஆமீன்.
03.அஹ்லுல் வபா :
வாக்களித்தால் அதனை நிறைவேற்றுபவர்கள் என்று பொருள்படும்.
தங்களைப் பின்பற்றும் சமூகத்தின் மூன்றாம் பண்பாக இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களினால் முன்வைக்கப்படும் விடயமே வாக்களித்தால் அதனை நிறைவேற்றுவார்கள் என்பதாகும்.
அல்குர்ஆனில் நாம் பல இடங்களில் இதனை ஓர் இறைகட்டளையாகக் காணலாம் . இது மூஃமின்களின் பண்பாக அமையவேண்டும் என்றே இறைவன் இதனைக் கூறுகின்றான் .ஓர் உதாரணத்திற்காக கீழ் வரும் அல்குர்ஆன் வசனத்தினை நோக்குவோம்.
وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ وَاَوْفُوْا بِالْعَهْدِ اِنَّ الْعَهْدَ كَانَ مَسْــــٴُـوْلًا
மேலும், (விசுவாசங்கொண்டோரே! அநாதையின் செல்வத்திற்கு – அவர் தன் பருவ வயதை எய்தும் வரையில் எது அழகிய முறையோ அதைத் தவிர – (வேறு வழியில் அதை அனுபவிக்க) நீங்கள் நெருங்காதீர்கள், இன்னும், வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள், (ஏனெனில்) நிச்சயமாக வாக்குறுதி (மறுமையில்) விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கின்றது.
(அல்குர்ஆன் : 17:34)
இவ்வசனத்தில் இறைவன் வாக்குறுதியினை நிறைவேற்றும் படியும் அது பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் என்றும் கூறுகின்றான்.
வாக்குறுதியினை நிறைவேற்றுதல் என்பது இறைவனுடைய பண்புகளில் ஒன்றாகும். அந்த உயரிய பரிபூரணமான பண்பு தனது படைப்புக்களிடமும் இருக்க வேண்டும் என்பதே இவ்விறைக் கட்டளையின் வெளிப்பாடாகும்.
ரமழான் மாதத்தில் லைலத்துல் கத்ர் இரவுகளில் நாம் அனைவரும் ஓதக்கூடிய ஓர் துஆதான் துஆ ஜௌஸன் கபீர் என்பதாகும். அத்துஆவில் இறைவனுடைய பெயர்களில் ஒன்றாக வாக்களித்தால் நிறைவேற்றுபவன் என்று வந்துள்ளது.
يا كافي يا شافي يا وافي
يا مُعافي
மனிதன் என்பவன் இறைவனின் படைப்பில் மிக உயர்ந்த படைப்பாகும். மனிதன் இறைவனுடைய பண்புகளின் வெளிப்பாடாக, அதன் விம்பமாக உள்ளான். இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தங்களைப் பின்பற்றும் ஷீஆக்கள் இறைவனின் பண்புகளில் , இறைவனின் பெயர்களில் ஒன்றாக விளங்கும் வாக்குறுதியினை நிறைவேற்றுபவன் என்ற பண்பின் விம்பமாக அமையவேண்டும் என்பதற்காகவே ஷீஆக்களின் பண்பாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
04.அஹ்லுல் அமானா :
நம்பிக்கையாக கொடுத்த அல்லது சொன்ன விடயத்தினை பாதுகாத்து உரியவரிடம் மீண்டும் கொடுக்கும் ஓர் உயரிய பண்பாகும்.
தங்களைப் பின்பற்றும் ஷீஆக்களின் நான்காம் பண்பாக இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இதனைக் கூறியுள்ளார்கள்.
அமானத் எனப்படும் நம்பிக்கத்தன்மையினை நாம் ஹதீஸ்களில் பல இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. சில எடுத்துக்காட்டுதலுக்காக
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள் இறை விசுவாசிகளின் பண்புகளில் ஒன்றாக இதனைக் கூறியுள்ளார்கள். அதேபோன்று இமாம் அலீ பின் ஹுஸைன் ஸஜ்ஜாத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் : “எனது தந்தை இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கொலைசெய்யப் பயன்படுத்திய வாளினை என்னிடம் அமானத்தாக தந்தால் , அதைப் பாதுகாத்து உரியவரிடம் நான் ஒப்படைப்பேன் “.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன்பே , நபியவர்கள் அல்-அமீன்: நம்பிக்கைக்குரியவர் என்று சிறப்புப்பெயர் பெற்றிருந்தார். நபியவர்களின் நபித்துவத்தினை அங்கீகரிக்காதவர்கள் கூட நபியவர்களை அமீன் என்றே கூறினார்கள். அவர்களிடம் தங்களது பொருட்களை பாதுகாப்பிற்காக கொடுத்தும் வைத்திருந்தார்கள். நபியவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்லும் பொழுது அந்த அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொருப்பினை இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் விட்டிருப்பதினை நாம் வரலாற்றில் காணலாம்.
அமானத் இரு வகைப்படும்:
- உடமைகளை அதற்கு உரியவர் பிறரிடம் பாதுகாக்க ஒப்படைத்தல் .
02.மார்க்க ரீதியான அமானத் : உடமைக்கு சொந்தக்காரர் அதை பாதுகாக்க ஒப்படைக்கவில்லை. மாறாக எதேர்ச்சையாக அது பிறரிடம் செலுவதாகும்.
உதாரணமாக நாம் கடையில் பணம் கொடுத்து ஓர் பிரயாணப்பையினை வாங்குகின்றோம் , அதை வீட்டே வந்து திறந்து பார்க்கின்ற பொழுது அதனுள் கடைக்காரரின் பணம் உள்ளது ; அதனை உரியவரிடம் ஒப்படைப்பது எமது கடமையாகும். ஏனெனில் இந்த அமானத்தினை இறைவன் எம்மீது கடமையாக்கியுள்ளான்.
அதேபோன்று வீதியில் ஓர் பொருளினை நாம் கண்டெடுக்கின்றோம் ; அதனை உரியவரிடம் ஒப்படைக்கவேண்டியது எமது கடமையாகும்.
இவ்விரு அமானத்தினையும் சரிவரப் பாதுகாத்து உரியவரிடம் கொடுக்கவேண்டியது எமது கடமையாகும். அமானத்திற்கு பங்கம் வராமல் பாதுகாப்பது கடமையாகும். அதற்கு பங்கம் விளைவிப்பது தடுக்கப்பட்ட ஹராமான விடயமாகும். அமானத்தினை பாதுகாப்பதில் நாம் குறைகளை விட்டிருப்பின் அந்த அமானத்தினை சரிவர ஒப்படைக்கவேண்டும் அதற்கு நாமே பொருப்பாகும்; மாற்றமாக நாம் எமது அனைத்து சக்தியினையும் பயன் படுத்தி அதனை பாதுகாத்தும் எம்மை மீறி அமானத்திற்கு பங்கம் விளைந்தால் அதற்கு நாம் பொருப்பல்ல.
وَاِنْ كُنْتُمْ عَلٰى سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِى اؤْتُمِنَ اَمَانَـتَهٗ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَّكْتُمْهَا فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗ وَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ
இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் – எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது – இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.
(அல்குர்ஆன் : 2:283)
இவை பொருட்கள் பற்றிய பார்வையாகும்.
அடுத்ததாக உள்ள விடயமே அமானத்தாக ஒருவரிடம் ஒப்படைக்கும் படி கூறப்படும் எழுத்துவடிவங்கள் . அதனை வாசிக்காமல் உரியவரிடம் கொடுக்கச்சொன்னால் அதை நாம் வாசிப்பது ஹராம் ஆகும்.
இது போன்றுதான் கூறப்படும் வார்த்தைகளும்.
இறைவன் அல்குர்ஆனில் நபிமார்களை அமீன் (நம்பிக்கையாளர்) என்று அறிமுகம் செய்துவைக்கின்றான்.
اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ
நிச்சயமாக நான் உங்களுக்கு (இறைவனால்) அனுப்பப் பெற்ற நம்பிக்கைக்குரிய தூதன் ஆவேன்.
(அல்குர்ஆன் : 26:107)
அதேபோல் ,எமக்கு இறைவனால் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களும் அமானத்தாகும். எமது உடல் உறுப்புக்கள் , எமக்கு வழங்கப்பட்டிருக்கும் உறவுகள் , எம்மைச் சுற்றியுள்ள அருட்கொடைகள் அனைத்தும் அமானிதங்கள் ஆகும். அவற்றை உரிய முறையில் பயன்படுத்தி , பாதுகாத்து அதை எம்மிடம் பாதுகாப்பாக தந்தவனிடம் கொடுத்துவிடவேண்டும். இல்லை என்றால் அவை மறுமையில் நாம் அவற்றை தவறாகப் பயன்படுத்தியது பற்றி இறைவனிடம் முறையிடும்.
اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
(அல்குர்ஆன் : 36:65)
کُلُّکُم راعٍ وَ کُلُّکُم مَسئولٌ فَالاِمام راعٍ وَ هُوَ مَسئولٌ و الرَّجُلُ راعٍ عَلی اَهلِه وَ هُوَ مَسئُولٌ وَ المَرئَةُ راعِیَةٌ عَلی بَیتِ زَوجِها وَ عَلی وُلدِه فَکُلُّکُم مَسئوُلٌ عَن رعیته.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
” நீங்கள் அனைவரும் எதன்மீது பொறுப்புதாரியாக நியமிக்கப்பட்டுள்ளீரோ அது மீது பொறுப்பாளி ஆவீர்கள். தலைவர் சமூகத்தின் பொறுப்பாளி ஆவார். ஆண் குடும்பத்தின் பொறுப்பாளி , பெண் வீட்டினதும் குழந்தைகளினதும் பொறுப்பாளி ஆவாள். உங்களுக்கு சுமத்தப்பட்டிருக்கும் பொறுப்புக்கள் பற்றி உங்களிடம் கேட்கப்படும்”.
இறைவனின் உதவியினால் எமக்களிக்கப்பட்டிருக்கும் அமானிதங்களை சரிவரப் பயன்படுத்தி அதனை மீண்டும் வழங்கிய அவனிடமே ஒப்படைக்க முயற்சி செய்வோமாக!.
05.அஹ்லுஸ்ஸுஹ்த்:
உலகத்தின் மீது பற்றற்றவர்களாக இருப்பவர்கள் என்று பொருள்படும்.
இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களைப்பின்பற்றும் ஷீஆக்களின் ஐந்தாம் பண்பாக கூறியுள்ளது உலகத்தின் மீது அவர்களுக்கு ஆசை இருக்காது என்பதாகும். அவ்வாசை பொருள் ஆசை , பண ஆசை , பதவி ஆசை என்று எதுவாகவும் இருக்கலாம்.
இங்கு நாம் துறவரத்திற்கும் ஸுஹ்த் என அழைக்கப்படும் உலக பற்றற்ற தன்மைக்கும் இடையிலான வேறுபாட்டினை சரிவர புரிந்துகொள்ள வேண்டும். துறவரம் என்பது அனைத்தினையும் துறந்து வாழும் வாழ்க்கையாகும். இஸ்லாம் அதனை தடுத்துள்ளது. ஆனால் , இதற்கு மாற்றமாக ஸுஹ்தினை இஸ்லாம் கடைப்பிடிக்கும் படி வேண்டுகின்றது.
உண்மயான பற்றற்ற தன்மை எது என கேட்கப்பட்டதற்கு இமாம் அமீருல்மூஃமினீன் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘உலக பற்றற்ற தன்மையை மறைத்து வாழ்வதாகும் ‘ என்றார்கள்.(நஹ்ஜுல் பலாாகா: ஹிக்மத் 28)
ஸுஹ்த் என்பது உலகத்தில் எதுவெல்லாம் எம்மை இறை ஞாபகத்திலிந்து தூரப்படுத்துகின்றதோ அவைகளில் இருந்து நாம் விலகியிருப்பதாகும். அத்தோடு மக்களிலிருந்து விலகியிருக்காமல் அவர்களோடே சேர்ந்தும் இருக்க வேண்டும். இதனையே இஸ்லாம் பாராட்டுகின்றது.
அல்குர்ஆன் ஸுஹ்தினை இவ்வாறு கூறுகின்றது :
لِّـكَيْلَا تَاْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰٮكُمْ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِۙ
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும்
(இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 57:23)
ஹதீஸ்களின் பிரகாரம் ஸுஹ்த் என்பது உலகத்தில் பற்றின்மை , வீண்விரயம் செய்யாமை, இறையருளை சரிவரப் பயன்படுத்துவது, இறையருள்களுக்கு நன்றி செலுத்தல், தடுத்தவிடயங்களைவிட்டும் தூரமாகியிருத்தல், கர்வமின்மை, பெருமையின்மை போன்ற பண்புகளை உள்ளடக்கியுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.(மீஸானுல் ஹிக்மா : பாகம் 05, பக்கம் 2227, 2228)
ஹதீஸ்களில் ஸுஹ்த் மூன்று வகையாக நோக்கப்படுகின்றது :
01.தடுக்கப்பட்ட ஹராம்களிலிருந்து விலகியிருத்தல்.
02.சந்தேகத்தினை உண்டாக்கும் விடயங்களை விட்டும் விலகியிருத்தல்.
03.ஆகுமாக்கப்பட்ட விடயங்களை விட்டும் விலகியிருத்தல்.(அல்-காபி: பாகம் 01, பக்கம் 68)
இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸுஹ்தினைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்கள்:
“அனைத்து நல்ல விடயங்களும் ஓர் வீட்டினுள் வைத்து பூட்டப்பட்டுள்ளது. அந்தவீட்டு நுழைவாயிலின் திறவுகோள் ஸுஹ்த்
ஆகும்”.(அல்-காபி: பாகம் 02, பக்கம் 128)
06.அஹ்லுல் இபாதா :
வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் என்று பொருட்படும்.
ஷீஆக்களின் ஆறாம் பண்பாக இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களினால் மும்மொழியப்பட்டிருப்பது இதுவாகும்.
மனிதனின் படைப்பு பற்றி இறைவன் அல்குர்ஆனில் கூறும் பொழுது
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
(அல்குர்ஆன் : 51:56)
என்கின்றான்.
عبد
என்ற அறபுப்பதத்திலிருந்து பெறப்பட்டதே عبادة ، يعبدون போன்ற சொல்லாடல்கள்.
عبد
என்றால் வணங்குதல் , வழிப்படுதல் போன்ற கருத்துக்களை கொண்டுள்ளது. அதேபோல் மற்றும் ஓர் வடிவில் அடிமை என்று பொருட்படும்.
எவ்வாரு இருப்பினும் தனது உரிமையாளர் எது கூறினாலும் எவ்வித கேள்விகளும் கேட்காமல் , ஏன் அந்த கேள்விகள் கேட்கும் எவ்வித உரிமையும் இல்லாமல் தனது விருப்பு , வெறுப்புக்களை அவ்விடயத்தில் கண்டுகொள்ளாமல் உரிமையாளர் எதைக் கூறினாரோ அதை செய்வதினேயே இந்த சொல் குறிகின்றது.
இறைவனின் மிகச்சிறந்த படைப்பு , உம்மைப் படைக்கவில்லை எனில் எந்தப்படைப்பையும் படைத்திருக்க மாட்டேன் என்று இறைவனால் கூறப்பட்ட நபி முஹம்மது (ஸல்) அவர்களை நாம் இறைவனின் தூதர் என்று சாட்சி கூறும் போது , ஒவ்வொரு நாளும் எமது கடமையாக்கப்பட்ட ஐந்து நேரத்தொழுகைகளில் அவர் இறைவனின் அடிமை என்றும் சாட்சி கூறுகின்றோம்.
இறைவனுடைய அடிமையாக இருப்பதினையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விரும்பினார்கள். ஏனைய இறைநேசர்களினது விருப்பமும் அதுவே ஆகும். தன்னைப் பின்பற்றும் ஷீஆக்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இறைவணக்கத்தினைப் பற்றி அமீருல்மூஃமினீன் இமாம் அலீ (அலை) அவர்கள் கூறும் போது , இறை வணக்கத்தினை மூன்று வகையாகப் பிரித்து ; அதில் ஒரு சாரார் நரகத்தின் மீதுள்ள அச்சத்தின் காரணமாக இறைவனை வணங்குவதாகவும் அவர்களின் வணக்கத்தினை அடிமைகளின் வணக்கம் எனவும் , மற்றதோர் சாரார் சுவனத்தின் மீதான ஆசையின் காரணமாக இறைவனை வணங்குவதாகவும் அவர்களின் வணக்கத்தினை வியாபாரம் என்றும் , இன்னுமோர் சாரார் வணங்குவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனை அவர்கள் காணவில்லை என்பதற்காகவும் அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அவனை வணங்குவதாகவும் அதற்கு சுதந்திரமானவர்களின் வணக்கம் என்றும் அதுவே அனைத்து வணக்கங்களை விட சிறந்தது என்றும் கூறியுள்ளார்கள்.(துஹ்புல் உகூல்: பக்கம் 250)
இமாம் அலீ (அலை) அவர்கள் தான் எதற்காக இறைவனை வணங்குகின்றேன் என்பதினை இவ்வாறு கூறியுள்ளார்கள் :
الهی ما عبدتك خوفاً من نارك ولاطمعاً فی جنتك ولکن وجدّتك اهل للعبادة فعبدتك
,இறைவா ! நான் உனது நரகத்தின் மீதுள்ள பயதாதினாலோ , உனது சுவனத்தின் மீதான ஆசையினாலோ உன்னை வணங்கவில்லை; மாறாக வணங்கப்படுவதற்குரியவனாக உன்னைக் கண்டேன் அதன் காரணமாகவே உன்னை வணங்குகின்றேன்’ என்றார்கள்.
நாம் இம்மூன்று வகை வணக்கங்களில் எதை செய்தாலும் இறைவன் அங்கீகரிப்பான் என்பது ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக்கொள்கின்றோம். ஆனால் இவைகளில் மிகச்சிறந்ததை தெரிவு செய்து அதனை நடைமுறைப்படுத்த அஹ்லுல்பைத்தினரின் பொருட்டால் இறைவன் அருள்புரிவானாக! இலாஹி ஆமீன்.
07.ஒரு நாளைக்கு ஐம்பத்தியோரு ரக்அத் தொழுவார்கள்:
தங்களுடைய ஷீஆக்களின் பண்புகளில் ஒன்றாக இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியுள்ளது ஒரு நாளைக்கு 51 ரக்அத் தொழுவார்கள் என்பதாகும்.
இந்த ஐம்பத்தியோரு ரக்அத்தில் உள்ளடங்கும் தொழுகைகளின் விபரங்கள் :
. ஐவேளைத் தொழுகை:
சுபஹ் 02, ழுஹர் 04, அஸர் 04, மஃரிப்03, இஷா 04 = மொத்தம் 17 ரக்அத்துகள்.
.கடமையான ஐவேளைத் தொழுகைகளுக்கு முன், பின்னுள்ள நாபிலான தொழுகைகள் :
சுபஹ் தொழுகைக்கு முன்னர் 02 ரக்அத்
ழுஹர் தொழுகைக்கு முன்னர் எட்டு ரக்அத் கொண்ட நான்கு தொழுகைகள்.
அஸர் தொழுகைக்கு முன்னர் எட்டு ரக்அத் கொண்ட நான்கு தொழுகைகள்.
மஃரிப் தொழுகைக்குப் பின்னரான நான்கு ரக்அத் கொண்ட இரண்டு தொழுகைகள்.
இஷா தொழுகைக்குப் பின்னரான இருந்தவாறு தொழும் இரண்டு ரக்அத் தொழுகை .இருந்து தொழுவதினால் ஒரு ரக்அத் ஆக கணிக்கப்படும்.
மொத்தமாக 23 நாபிலான தொழுகைகள்.
தஹஜ்ஜுத் தொழுகை :
இரவுத்தொழுகை எட்டு ரக்அத் கொண்ட நான்கு தொழுகைகள்.
இரண்டு ரக்அத் கொண்ட ஷபஃ தொழுகை.
ஒரு ரக்அத் வத்ர்(வித்ர்) தொழுகை.
மொத்தம் பதினோரு ரக்அத்கள்.
17+23+11=51.
ஐவேளைத் தொழுகை பற்றி இறைவன் இவ்வாறு கூறுகின்றான் :
اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْـفَجْرِ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا
(நபியே!) சூரியன் (உச்சியை விட்டுச்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (லுஹர், அஷர், மஃக்ரிப், இஷா நேரத்) தொழுகைகளை நிறைவேற்றுவீராக! ஃபஜ்ருத் தொழுகையையும் (நிறைவேற்றுவீராக!) இன்னும் நிச்சயமாக ஃபஜ்ருத் தொழுகையானது (இரவின் மலக்குகளும், பகலின் மலக்குகளும் ஒருமித்து) சமூகமளிக்கும் தொழுகையாக உள்ளது.
(அல்குர்ஆன் : 17:78)
நாபிலான தொழுகைகளின் சிறப்புக்களை ஹதீஸ்களின் மூலம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகின்றது . நாபிலான தொழுகைகளின் தத்துவம் பற்றி இமாம் பாக்கிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறும் போது ” எமது கடமையான தொழுகைகளிலுள்ள குறைகளை நாபிலான தொழுகைகளின் மூலம் நிவர்த்திசெய்யவே நாபிலான தொழுகைகளை தொழும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம் “.(வஸாயிலுஷ் ஷீஆ: பாகம் 04, பக்கம் 71)
இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறும் போது ” ஒரு மனிதன் இறை திருப்திக்காக வேண்டி இரண்டு ரக்அத் தொழுகையினைத் தொழுதால் இறைவன் இவ்விரண்டு ரக்அத் தொழுகைக்காக அவரை சுவனம் நுழைவிக்கின்றான்”.(வஸாயிலுஷ் ஷீஆ: பாகம் 04, பக்கம் 44)
இறைவன் ஹதீஸுல் குத்ஸியில் இவ்வாறு கூறுகின்றான் : ” எனது அடியான் நாபிலான தொழுகைகள் மூலம் எனது நெருக்கத்தினையும் நேசத்தினையும் பெற முயற்சிக்கின்றான் ; அவ்வாறு எனது நேசத்தினை அவன் பெற்றுக்கொண்டால் அவனது செவியாகிறேன் அதன் மூலம் அவன் கேட்பான் , அவனது கண் ஆகிறேன் அதன் மூலம் பார்ப்பான், அவனது நாவாகிறேன் அதன் மூலம் பேசுவான்…..” (அல்-காபி : பாகம் 02, பக்கம் 352)
அடுத்ததாக தஹஜ்ஜுத் தொழுகைபற்றி இறைவன் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:
وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ عَسٰۤى اَنْ يَّبْعَـثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا
தஹஜ்ஜத்து தொழுகை (உங்கள்மீது கடமையாக இல்லாவிடினும்) நீங்கள், நாபிலாக இரவில் ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வாருங்கள்! (இதன் அருளால் “மகாமே மஹ்மூத்” என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உங்கள் இறைவன் உங்களை அமர்த்தலாம்.
(அல்குர்ஆன் : 17:79)
இன்ஷாஅல்லாஹ் இறை உதவியோடு இவைகளை நிறைவேற்ற முயற்சி செய்வோமாக!