நேர்வழிகாட்டும் வழிகாட்டியான அல்குர்ஆனின் பார்வையில் எமது உணவிலும், எமது பொருளாதாரத்திலும் அபிவிருத்தியினை ஏற்படுத்தும் பல விடயங்கள் உள்ளன.
நன்றி செலுத்துதல்
அத்தியாயம் இப்ராஹீமின் ஏழாவது வசனத்தில் இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:
وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ وَلَٮِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِىْ لَشَدِيْدٌ
“(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).
அல்குர்ஆன் 14:7
இறையச்சம் எனப்படும் தக்வாவும் இறைவன் மீது பொருப்புச் சாட்டும் தவக்குலும்
அத்தியாயம் தலாக்கின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வசனங்களில் இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:
…وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ
…. எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.
அல்குர்ஆன் 65:2
وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا
அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் – திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.
அல்குர்ஆன் 65:3
இஸ்திஃபார் எனப்படும் பாவ மன்னிப்பு
இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுதல் எமக்கு பல விதமான பலன்களை தருகின்றது .அதில் ஒன்றே பொருளாதாரத்தில் அபிவிருத்தியாகும். இது பற்றி இறைவன் அத்தியாயம் நூஹில் பத்தாம், பதினென்றாம் மற்றும் பதின்ரெண்டாம் வசனங்களில் இவ்வாறு கூறுகின்றான்:
فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۙ
மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன்.
அல்குர்ஆன் 71:10
يُّرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا ۙ
“(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.
அல்குர்ஆன் 71:11
وَّيُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَيَجْعَلْ لَّـكُمْ جَنّٰتٍ وَّيَجْعَلْ لَّـكُمْ اَنْهٰرًا
“அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.
அல்குர்ஆன் 71:12
திருமணம்
சமூக கட்டமைப்பின் முக்கிய அமைப்பான திருமணம் என்பது மனித வாழ்வில் அபிவிருத்தியினை ஏற்படுத்தும் ஓர் விடயம் என இறைவன் அல்குர்ஆனில் கூறியுள்ளான். ஆனால், இன்று வறுமைக்குப் பயந்து அதிகமான இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளாமலும் , அதேபோன்று அவர்களின் வறுமை நிலைகண்டு அவர்களுக்கு தங்கள் பிள்ளைகளை திருமணம் செய்து வைக்காத பெற்றோர்களையும் நாம் சமூகத்தில் அதிகமாக காண முடிகின்றது. இதற்கு காரணம் இறைவனின் கூற்றை நம்பாது, சடவாதத்தினை சார்ந்திருப்பதாகும்.
இறைவன் அத்தியாயம் நூரின் முப்பத்திரண்டாம் வசனத்தில இவ்வாறு கூறுகின்றான்:
وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ
இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 24:32
அதேபோன்று நன்றியின்மை, வீண்விரயம், பலவீனமானோருக்கு உதவாமை, பாவங்களில் ஈடுபடுதல் போன்ற காரணங்களினால் எமது வாழ்வில் இருக்கும் அபிவிருத்தி மீளப் பெறப்பட்டு , இறை அருளிலிருந்து எம்மை தூரப் படுத்தும் காரணிகளாக உள்ளன.
இவ்விடயம் அத்தியாயம் நஹ்லில் நூற்றி பன்னிரெண்டாம் வசனத்தில் ஒரு படிப்பினை கதை வடிவில் கூறப்பட்டுள்ளது:
وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَٮِٕنَّةً يَّاْتِيْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُـوْعِ وَالْخَـوْفِ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ
மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன – ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.
அல்குர்ஆன்16:112