Omar Khayyam
a Persian polymath, philosopher, and great poet
பாரசீக கவிதை இலக்கியத்திற்கு அளப்பரிய பங்களிப்புகளை நல்கியுள்ள உமர் கய்யாமின் படைப்புகள் உலக இலக்கியத்துறைக்கு அதிகம் பங்காற்றியுள்ளன. இவரது கவிதைகள் 70 இற்கும் மேற்பட்ட மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இவர் உலகப் புகழ்பெற்ற கவிஞராக விளங்குகின்ற அதேவேளை பதினோராம் நூற்றாண்டின் கணிதவியலாளராகவும் வானியலாளராகவும் பாரசீகத்தில் திகழ்ந்துள்ளார்.
அவர் கவிதை இலக்கியத்திற்கும், கணிதவியல் மற்றும் வானியல் துறைகளுக்கும் அளித்துள்ள பங்களிப்புகள் இன்றும் உயிரோட்டம் மிக்கவையாகவே உள்ளன. உமர் கய்யாம் 1048 மே 18 அன்று வடக்கு பாரசீகத்தின் நைஷாபூரின் வர்த்தக நகரத்தில் பிறந்தார். இன்று இந்நகரம் ஈரான் நாட்டில் உள்ளது. உமரின் தந்தை இப்ராஹிம் கய்யாமி ஆவார். அவர் ஒரு செல்வந்த மருத்துவர்.
ஷேக் முஹம்மது மன்சூரி என்ற அறிஞரிடம் தமது ஆரம்பக் கல்வியை உமர் கய்யாம் பெற்றார். அவர் இயற்கணிதம் மற்றும் வடிவியலைக் கற்பிப்பதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். உமர் கய்யாமின் மிகவும் பிரபலமான ‘இயற்கணித சிக்கல்களுக்கான தீர்வு’ என்ற படைப்பை அவர் 1070 இல் நிறைவு செய்தார். இதில் அடிப்படை இயற்கணிதக் கொள்கைகளை அவர் வகுத்திருந்தார். 1077 இல் கய்யாம் எழுதிய மற்றொரு பெரிய படைப்பு, ‘ஷார்ஹ் மா அஷ்கலா மின் முசாதராத் கிதாப் உக்லிடிஸ்’ அதாவது ‘யூக்லிட்டின் போஸ்டுலேட்டுகளில் உள்ள சிரமங்களின் விளக்கங்கள்’ என்ற நூலாகும்.
ஆறு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஜியோர்டானோ விட்டேல் என்ற ஒரு இத்தாலிய கணிதவியலாளர் கய்யாமின் கோட்பாட்டில் மேலும் விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். ‘எண்கணித சிக்கல்கள்’ என அழைக்கப்படும் கய்யாமின் மற்ற புத்தகம், இசை மற்றும் இயற்கணிதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மஷ்ஹத் நகரிலுள்ள இமாம் ரிஸா பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியப் பேராசிரியர் ெடாக்டர் மரியம் கோஹெஸ்தான உமர் கய்யாம் குறித்து ஈரானிய செய்தி நிறுவனமான ‘இர்னா’ வுக்கு அளித்த பேட்டியில் , ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘ருபையாத்’ அல்லது வசனங்களைத் தந்த ஒரு சிறந்த கவிஞர்’ என்று குறிப்பிட்டார்.
கவித்துவத்துக்கு அப்பால் உமர் கய்யாம் ஒரு திறமையான தத்துவஞானியாக விளங்கினார். இவரது சிந்தனைத் தாக்கத்தில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.இவர் தனது இளம் வயதிலேயே மருத்துவம் கற்றார்.அதன் மூலம் அவர் மருத்துவ அறிவியலை நன்கு பெற்று இருந்தார்.
உமர் கய்யாம் தனது வாழ்நாளில் எந்தவொரு கவிதை நூலையும் வெளியிடவில்லை. அதனால் அவர் ஒரு விஞ்ஞானியாகவும் தத்துவஞானியாவும் தான் நன்கு அறியப்பட்டிருந்நதார். இன்று அவரது ‘ருபையாத்’ எனும் கவிதைகள் உலகில் மிகவும் பிரபல்யம் மிக்கதாக விளங்குகின்றது. இவரது ஆக்கங்களை ஆராய்ந்த முதல் ஆங்கில அறிஞரான தோமஸ் ஹைட் (1636_-1703), கய்யாமின் வாழ்க்கை மற்றும் படைப்புகளுக்காக நேரகாலத்தை அர்ப்பணித்தார், அதன் ஊடாக அவரது ‘ருபை’ எனும் நாலடிப் பாடல்களை லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தார்.
இதேவேளை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பாரசீக இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஃபிட்ஸ் ஜெரால்ட்(FitzGerald) உமர் கய்யாமின் ‘ருபையாத்’ கவிதைகளை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்தார். இதன் ஊடாக பிரித்தானியாவில் மாத்திரமல்லாமல் அமெரிக்காவில் கூட ருபையாத் கவிதைகளின் புகழ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவியது.
எட்வர்ட் ஹென்றி வின்ஃபீல்ட் (1836-_1922) எனும் பாரசீக இலக்கிய மொழிபெயர்ப்பாளர் கய்யாமின் ‘ருபையாத்’ கவிதைகளின் துல்லியமான மொழிபெயர்ப்பை வழங்கினார். இவர் கய்யாமின் 500 ருபையாத்களை மொழிபெயர்த்தார். ஆனால் ஃபிட்ஸ் ஜெரால்ட் 101 ருபையாத்கள் மாத்திரமே மொழிபெயர்த்திருந்தார். இந்த இரண்டு படைப்புகளுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவெனில், வின்ஃபீல்ட் பாரசீக கவிதை மரபு பிசகாமல் மொழிபெயர்த்திருப்பதாகும்.
இவ்வாறான சூழலில் 1892 இல் ‘கய்யாம் சங்கம்’ லண்டனில் நிறுவப்பட்டது. இது பிரிட்டிஷ் சிந்தனையாளர்களும் புத்திஜீவிகளும் ஒன்றுகூடும் மையமாக விளங்கியது. விக்டோரியன் எழுத்தாளர் எட்வர்ட் ஃபிட்ஸ் ஜெரால்ட் மற்றும் உமர் கய்யாமின் ருபையாத் கவிதைகளை நினைவுகூரும் வகையில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. லண்டனில் கய்யாம் சங்கம் பெற்றுக் கொண்ட வெற்றி ஜெர்மனி, நெதர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கய்யாம் சங்கங்களை நிறுவவும் வழிவகுத்தது. ருபையாத் கவிதைகளை நினைவுகூரும் வகையில் கய்யாம் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், நவம்பர் மாதங்களில் லண்டன் சங்கத்தில் ஒன்றுகூடுகின்றது.
அதேநேரம் உமர் கய்யாம் மேற்கத்திய இசையிலும் அதிகம் செல்வாக்கு செலுத்தியுள்ளார். கிரான்வில்லே பான்டோக் என்ற பிரிட்டிஷ் இசைக்கலைஞர், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவரது கவிதைகளால் ஈர்க்கப்பட்டு ‘உமர் கய்யாம்’ அல்பத்தை உருவாக்கினார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஜீன்-பாப்டிஸ்ட் நிக்கோலாய் என்பவர் கய்யாமின் ருபையாத் கவிதைகளை பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்த்தார். அதன் ஊடாக பிரெஞ்சு மக்கள் கய்யாமின் ருபையாத்துடன் நன்கு பரிச்சயமாகினர்
உமர் கய்யாமின் வாழ்க்கை மற்றும் அவரது படைப்புகளை கருவாகக் கொண்டு பல திரைப் படங்களை ஹொலிவுட் உருவாக்கியுள்ளது. தி கீப்பர்: தி லெஜண்ட் ஆஃப் உமர் கய்யாம் (The Keeper: The Legend of Omar Khayyam) 2005 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அவரது வாழ்க்கை திரைப்படம் ஆகும்.
இது தவிர, ஜீன் லாகூர் கய்யாமின் தத்துவத்தின் அடிப்படையில் ‘மாயை'(Illusion) என்ற புத்தகத்தை எழுதினார்.கய்யாம் ஒரு சிறந்த அறிவுஜீவி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.