ஹஸரத் இமாம் அலி அலைஹிஸ்ஸலாம்

History of Imam Ali (AS)

 

பிறப்பு

அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபும் இன்னும் சிலருமாக நாம் இறையில்லமாகிய கஃபாவுக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்தோம்.(1) பாத்திமா பின்த் அஸத், கஃபா நோக்கி வந்ததைக் கண்டோம். கஃபாவுக்கு அருகில் நின்று இப்படிச் சொல்லலானார்: இறைவா! உன்னையும் உனது தூதுவர்களையும் உனது வேதங்க ளையும் நான் முழுமையாக விசுவாசிக்கிறேன். எமது பாட்டனாரான ஹஸ்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது போதனைகளை உண்மையென நம்புகின்றேன். அவரையும் என் கர்ப்பத்திலுள்ள இந்தச் சிசுவையும் பிரமாணமாக வைத்து உன்னை வேண்டுகிறேன் இறைவா! இக் குழந்தையின் பிறப்பை எனக்கு இலகு வானதாக ஆக்குவாயாக.

அந்தக் கணத்தில் தான் அந்த அற்புதம் நடந்தது. நாம் எல்லோரும் வியப்போடு அக்காட்சியைக் கண்ணுற்றோம். ஹஸ்ரத் பாத்திமாவின் முன்னால் கஃபாவின் சுவர் பிளந்து விலகியது. ஏற்பட்ட இடைவெளியூடாக ஹஸ்ரத் பாத்திமா கஃபாவின் உள்ளே நுழைய பிளவுபட்ட சுவர் மீண்டும் முன்னர் இருந்தபடியே மூடிக் கொண்டது.(2)

பயந்துபோன நாம் கஃபாவைத் திறப்பதற்கு பலமுறை முயன்றோம். எனினும் அது திறந்து கொடுக்க வில்லை. இறை நாட்டத்தின் பிரகாரம் தான் இவ்வாறு நடப்பதாக நாம் புரிந்து கொண்டோம். நான்கு நாட்கள் கழிந்து அப்பெண்மணி கஃபாவில் இருந்து வெளியே வந்தார். அவரது கையில் அழகு பொங்கும் குழந்தை யொன்றை வைத்திருந்தார். இந்தக்  குழந்தைக்கு அலீ எனப் பெயரிடுங்கள் என்று அசரீரியில் சொல்லக் கேட்டேன் என்றார்.(3)

யானை வருடம் முப்பதாவது ஆண்டு. (ஹி.மு.23) றஜப் மாதம் 13ம் நாள் வெள்ளிக் கிழமை இந்த ஜனனம் இடம்பெற்றது.(4)

இறைதூதரின் மடியில் . . .

தன் சிறுவயது எப்படிக் கழிந்தது என்பதை இமாம் அவர்கள் இப்படி விபரிக்கிறார்கள்.

நான் சிறு குழந்தையாக இருந்த போது நபியவர்கள் என்னை தமது மடியில் இருத்திக்கொள்வார். நெஞ்சில் தூக்கி வைத்துக் கொஞ்சி விளையாடுவார். உணவுப் பொருட்களைத் தம் புனித வாயால் மென்று எனக்கு ஊட்டிவிடுவார். அவரின் உடம்பில் இருந்து கமழும் நறுமணத்தில் என் உடல் குளிர்ந்துவிடும். எனது பேச்சில் பொய்யையோ, செயற்பாடுகளில் தவறையோ அறிவீனத்தையோ கலக்க விடவில்லை.

பால் குடிமறந்த காலத்திலிருந்தே நபியவர்களோடு இருக்கவென விண்ணவர்களில் மிகப்பெரியவரை இறைவன் சாட்டி வைத்திருந்தான். பெரியவரானதும் உலக மக்களில் அதிசிறந்தவராக, மிகப் புனிதமானவராக ஆகுவதற்கு வழிவகுக்கவே இந்த ஏற்பாடு. நானோ தாயிடமிருந்து பால் குடிக்கின்ற காலத்தில் இருந்தே நபியவர்களின் அரவணைப்பில் வளர்ந்தேன்.

அவரைப் பின்பற்றியே செயற்படுமாறு தாயார் என்னை நாளாந்தம் பணித்துவந்தார். ஒவ்வொரு வருடமும் ஹிறாக் குகைக்குப் போய்வந்தார். அப்போதெல்லாம் என்னைத் தவிர யாரும் அவரைக் கண்டதில்லை.

எந்த வீட்டிலும் இஸ்ஸாத்தின் ஒளி பிரகாசிக்காத அந்த ஆரம்ப நாட்களில், நபியவர்களும் அன்னை கதீஜாவும் மட்டுமே முஸ்லிம்களாக இருந்த போது  நான் மூன்றாவது முஸ்லிமாக இருந்து வஹீயினதும் இறைதூதினதும் பேரொளியைக் கண்ணுற்றேன், நபித்துவத்தின் நறுமணத்தை  நுகர்ந்தேன்.

நபித்துவம் கிடைக்கப் பெற்று சுமார் மூன்று வருடங்கள் வரை பகிரங்கமாக இஸ்லாத்தைப் போதிப்ப தற்கான ஆணை நபியவர்களுக்குக் கிடைக்கவில்லை. இக்காலப் பிரிவில் சிலர் விசுவாசம் கொண்டனர். அவர்களுள் முதலாவது ஆண் ஹஸ்ரத் அலீ ஆவார்.(5)

உமது  நெருங்கிய உறவுக்காரர்களையும் எச்சரிப்பீராக(6) என்ற இறையாணை கிடைக்கப்பட்டதன் பின்னர் நபியவர்களின் பணிப்பின் பேரில், தமது குடும்பத்தைச் சேர்ந்த நாற்பது பேரை விருந்துக்கு அழைத்தார் அலீ. அபூலஹப், அப்பாஸ், ஹம்ஸா போன்ற பலரும் அங்கு சமுகம் தந்திருந்தனர். அலீ தயாரித்த உணவு ஒருவருக்குக் கூட போதுமானதாக இருக்கவில்லை. எனினும் இறை அருளால் விருந்துக்கு வந்த அனைவரும் வயிறாற உணவுண்ட பின்னரும் தயாரித்த உணவில் சிற்றளவும் குறையவில்லை. அவர்களுக்கு இஸ்லாமின் அழைப்பை முன்வைக்கவே நபியவர்களின் இந்த ஏற்பாடு. முஹம்மத் உங்களையெல்லாம் மயக்கிப் போட்டு விட்டார்|| என அபூலஹப் கூறவும் ஒவ்வொருவராக எழுந்து செல்லலாயினர். விருந்து அத்துடன் முடிவுற்றது.

மீண்டும் ஒரு முறை இதேபோன்று விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதே விதமான விருந்தாளிகள். அதேவிதமாக விருந்து முடிய நபியவர்கள் பேசலானார்கள். அப்துல் முத்தலிபின் குடும்ப அங்கத்தவர்களே. நான் தாங்களுக்குக் கொண்டுவந்துள்ளது போன்ற ஒரு செய்தியை எந்த அரபு இளைஞனும் கொண்டு வரவில்லை. இந்த உலகிலும் மறுவுலகிலும் வெற்றி பற்றிய நற்செய்தியைக் கொண்டுவந்துள்ளேன். உங்களையெல்லாம் இறைவனின் பக்கம் அழைக்குமாறு அவன் எனக்கு கட்டளையிட்டுள்ளான். ஆகவே, உங்களில் எவர் எனக்கு இப்பணியில் உதவியும் ஒத்தாசையும் வழங்குகிறாரோ அவர் எனது சகோதரராகவும் வாரிசாகவும் எனது பிரதிநியாகவும் இருப்பார்.

நபியவர்கள் தொடர்ந்து சொன்னார்கள். இவர் எனது சகோதரனும் வாரிசும் பிரதிநிதியும் ஆவார். அவரது பேச்சைச் செவிமடுங்கள். அவரது கட்டளையை ஏற்றுக்கொள்ளுங்கள்(7)

ஹிஜ்ரத்   இரவில்…     

இஸ்லாம் பரவத் தொடங்கியதும் குறை’pத் தலைவர்கள் நபியவர்களை ஓர் அச்சுறுத்தலாகக் கருதலாயினர்;. எனவே, தாருன்னத்வா எனுமிடத்தில் கூடிய அவர்கள் நபி பெருமானைக் கொலைசெய்வதற்கு தீர்மானித்தார்கள். அதன்படி ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும் ஒவ்வொருவர் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் இரவோடிரவாக நபியவர்கள் வீட்டில் நுழைந்து அவரைக் கொலை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்றிரவு அங்கு தூங்கக் கூடாதெனவும் இரவோடிரவாக ஹிஜ்ரத் செல்லுமாறும் நபியவர்களுக்கு இறைகட்டளை கிடைத்தது. அலீயிடம் இவ்விடயத்தை அறிவித்த நபியவர்கள். அன்றிரவு தமது படுக்கையில் நித்திரை கொள்ளுமாறு அலீயிடம் கேட்டுக் கொண்டார். பார்ப்பவர்கள் நபியவர்கள் தூங்குவதாக நினைத்துக் கொள்வதாகவே இந்த ஏற்பாடு. நபியவர்களின் பாதுகாப்பையே முக்கியமாகக் கருதிய ஹஸ்ரத் அலீ இந்த அபாயகரமான பணியை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள். இத்தியாகச் செயலைப்பற்றி குர்ஆனில் அல்லாஹ் புகழ்ந்து கூறுகிறான். அல்லாஹ்வின் திருப்திக்காகவென தம்மையே அர்ப்பணித்துக் கொள்வோரும் மனிதர்களுள் உள்ளனர். அல்லாஹ் அடியார்கள் மீது கனிவுள்ளவன்.(8)

மக்காவின் இருளில் கொலைஞர்கள் நபியவர்களின் வீட்டை முற்றுகையிட்டனர். சூரா யாஸீன் வசனங்கள் சிலவற்றை ஓதிய வண்ணம் வெளியே வந்த நபியவர்கள். ஸவ்ர் குகையை நோக்கிய தனது பயணத்தை விரைவாக ஆரம்பித்தார்கள்.

உருவிய வாளுடன் திடீர்த் தாக்குதலுக்குத் தாயாராகி உள்ளே பாய்ந்தனர் கொiலைஞர்கள். படுக்கையில் இருந்து அலீ எமுந்து நின்றதைப் பார்த்து திடுக்கிட்டனர்.

முஹம்மத் எங்கே? எனகர்ஜித்தனர் அவரை பாதுகாப்பதே பணியெனக் கொண்ட அலீ விடை சொல்லுவாரா ?

ஆத்திரம் கொண்ட கொலைஞர்கள் அலீயை கஃபா வரை இழுத்து வந்தனர். சிறிது நேரம் வைத்திருந்து விட்டு பின்னர் விட்டுவிட்டனர்.(9)

நபியவர்களின் நம்பிக்கைக்குரியவர்

நம்பிக்கைக்குரியவர் என எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹீ) அவர்கள். குறைஷிகள் தமது அமானிதங்களை அவரிடமே கொடுத்துவைத்தனர். மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்ய வேண்டி ஏற்பட்டபோது, ஹஸரத் அலீயைத் தவிர நம்பிக்கைக்குரியவரை நபிகளார் காணவில்லை. ஆகவே அமானிதங்களையும் கடன்களையும் உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு. குடும்பப் பெண்களை உடன் அழைத்துக்கொண்டு மதீனாவுக்கு வரும் பொறுப்பு அலீயிடம் தரப்பட்டது.

நபியவர்கள் கூறியதன் பிரகாரம் கடமைகளை நிறைவேற்றிய ஹஸ்ரத் அலீ. தமது தாயார் (பாத்திமா). நபிகளாரின் மகளார் (பாத்திமா). ஸுபைரின் மகள் (பாத்திமா) மற்றும் குடும்பப் பெண்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மதீனா நோக்கிப் புறப்பட்டார். வழியில் வழிமறித்த எதிரிகள் எட்டுப் பேரை போரிட்டுத் தூரத்தியடித்தார். இறுதியில் மதீனாவைச் சென்றடைந்த போது நபியவர்கள் அலீயை தம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.(10)

பெரும் தியாகி

இஸ்லாம் வாழ்வையும் சமாதானத்தையும் போதிக்கின்றதே அன்றி அழிவையும் கொலையையும் ஆதரிக்க வில்லை. அனியாயமாக எந்த மனித உயிரையும் கொலை செய்வோர் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இஸ்லாத் தின் சர்வ வியாபகத் தன்மையைப் பொறுத்தமட்டில் அது உலகளாவிய ஒரு சமயம். அதன் பால் மனிதர்கள் எவரும் நுழைவதற்கு வாய்ப்பு செய்து தரப்பட வேண்டும். அதனால். ஏனையவர்களுக்கு இதன் செய்தியை எத்தி வைக்கவேண்டிய தேவை உண்டு.

இந்த அடிப்படையில் இம் மார்க்கத்தை ஏற்பதாலும் அதனை எத்திவைப்பதா லும் தனக்கு அபாயம் நேருவ தைக் காணும் எவரும்; அதனை எதிர்த்து நிற்பார் என்பது தெளிவு. இஸ்லாத்தின் மீது வன்முறையைக் கையாளுபவர்களுடன் போரிடுவதற்கு இஸ்லாமிய சட்டம் அனுமதி வழங்குகிறது.

அனியாயக்காரர்கள் அடாவடித்தனமாக ஆக்கிரமிக் கும்போது எதிர்த்து நின்று பாதுகாத்துக் கொள்வதை அறிவும் நியாயமாகவே கருதும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவது ஜிஹாதின் ஒரு கிளையாகும். இதனை நீதியும் அறிவும் மனித இயல்பும் அங்கீகரிக்கும்.

நபியவர்கள்(ஸல்) நிகழ்த்திய போர்கள் அனைத்தும் இவ்விதத்திலான தற்காப்புப் போர்களாகும். இந்தப் போர்களில் அதிகமானவற்றில் ஹஸ்ரத் அலீ கலந்து கொண்டார். அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அவர் அஞ்சியதில்லை.

போர்க்களத்தில் இறங்கினாலோ அலீ கர்ஜிக்கும் சிங்கமாவார். சூறாவளியாய்ச் சுழன்று வருவார். கொடியை ஏந்தி முன்செல்லும் அஞ்சாநெஞ்சன். எதிரிச் சேனையோ அலீயைக் கண்டாலே நிலை குலைந்து விடும். புறமுதுக்கு காட்டுவது கிடையாது என்பதால் முதுகுப் புறமாகவும் கவசம் அணியும் தேவை இல்லாதவர். அவரது வாள் வீச்சில் தலை தப்பியோர் கிடையாது. அலீயின் வாள் ஒரு முறை தான் இறங்கும். இரண்டா வது முறை ஒங்கும் தேவையே இருக்காது. அவரது வீர வரலாற்றில் சில சம்பவங்களை நோக்குவோம்.

கந்தக் யுத்தத்தில்….

எதிரிகளின் பல்வேறு குழுக்களும் ஒன்று சேர்ந்து ஒரேயடியாக மதீனாவைத் தாக்கி இஸ்லாமிய சமூகத்தை கணப்பொழுதில் அழித்து விடுவது என கங்கணம் கட்டினர்.

ஸல்மான் பார்ஸியின் ஆலோசனையின் பிரகாரம் இறை தூதர் (ஸல்) அவர்கள். மதீனாவைச் சுற்றி அகழி அமைக்குமாறு கட்டளையிட்டார்கள்.

இரண்டு படைகளும் நேருக்கு நேர் முகம் பார்த்த படி தயார் நிலையில் நின்றன. புகழ்பெற்ற அரபு வீரர் எழுபது வயது நிரம்பிய அம்ர் இப்னு அப்து வுத் எதிர்ப் புறமிருந்து அறைகூவல் விடுத்தான். அலீ சில எட்டுக்கள் முன்னே சென்றதைக் கண்டதும் அம்ர் கத்தினான். திரும்பிப்போ. உன்னை கொலை செய்ய நான் விரும்பவில்லை.

குறைஷிகளில் யாராவது ஏதாவது இரண்டு  தேவைகளை உம்மிடம் கேட்டால் அதில் ஒன்றை நிறைவேற்றுவதாக நீர் கடவுளுக்கு வாக்குக் கொடுத்தீர் அல்லவா? அலீ  கர்ஜித்தார்.

ஆம். உன் தேவை என்ன?

முதலாவது, இஸ்லாத்தின் பக்கம் வருமாறு அழைக்கிறேன். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விசுவாசியும்.

அவை எனக்கு அவசியமில்லாதவை.

அப்படியெனின் போரிட வாரும்.

நீ திரும்பிச்செல். உன் தந்தை எனக்கு நன்கு அறிமுகமான நண்பராக இருந்தார். என் கையால் உன்னைக் கொலை செய்ய நான் விரும்பவில்லை.

நான் அப்படியன்று. இறைவன் மீது சத்தியமாக, நீர் சத்தியத்திற்கு எதிரியான பின்னர் உம்மைக் கொலை செய்ய மிகவும் விரும்புகிறேன்.

அம்ர், குதிரையிலிருந்து இறங்கி முன்னே வந்தார். அலீயை நோக்கி ஓங்கிய வாளை வேகமாக வீசினார். அலீ தம் கேடயத்தால் தாங்கிப் பிடித்த வண்ணம் மறுகையால் ஓங்கிய வாள் வீச்சில்; அம்ர் கீழே சரிந்தார். அம்ர் கொலையுண்டதைக் கண்ட ஏனையவர்கள் தலை தெறிக்க ஒடலாயினர்.(11)

வெற்றியோடு திரும்பிய ஹஸ்ரத் அலீயை வரவேற்றார் நபிnருமானார். நல்ல காரியம் செய்தீர்கள், அலீ. இஸ்லாமிய சமுகத்தின் நற்பணிகளில் அதிசிறந்த காரியத்தை நீங்கள் ஆற்றியுள்ளீர்கள். ஏனெனில் இதன் விளைவாக இறைமறுப்பாளர்களுக்கு இழிவைத் தவிர எதுவும் மிஞ்சவில்லை. முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் எங்கும் கண்ணியமே அவர்களுக்குக் கிட்டும்.(12)

கைபர் களத்தில்..

யூதர்களின் கோட்டையான கைபரில் இருந்து இஸ்லாத்துக்கு எதிரான போர் முழக்கம் கேட்ட போது அங்கு விரைந்தது முஸ்லிம் படை. கண்களில் ஏற்பட வருத்தம் காரணமாக ஹஸ்ரத் அலீயால் இப்போரில் கலந்துகொள்ள முடியவில்லை. முஸ்லிம்களின் கொடியை ஹஸ்ரத் அபூபக்கரிடம் கொடுத்தார் நபிபெருமான். முஹாஜிரீன்கள் சிலருடன் கைபர் நோக்கிச் சென்ற அபூபக்கர் வெற்றியடையாமல் திரும்பினார். அடுத்த நாள் கொடியேந்திச் சென்ற உமரும் வெற்றியின்றியே திரும்பினார். இந்தப் போர் பற்றிய ஐயமும் அச்சமும் தோன்றலாயிற்று.

அலீயை அழைத்து வாருங்கள்|| நபிகளார் கட்டளையிட்டார். அவருக்கு கண் வருத்தம் ஏற்பட்டிருக்கிறது|| நபியிடம் கூறப்பட்டது. பரவாயில்லை, அழைத்து வாருங்கள். அவரை அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்புகின்றனர். அவரும் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நேசிக்கின்றவர்.

 ஹஸ்ரத் அலீ அழைத்து வரப்பட்டார்.

சுகயீனம் என்ன அலீ?

கண்ணிலும் தலையிலும் கடும் வலி, இறைதூதரே.

நபிபெருமான் அவருக்காக துஆ செய்தார். தமது புனித உமிழ் நீரால் அலீயின் கண்ணிலும் தலையிலும் தடவினார். வலி நீங்கியது. அலீ எமுந்து நின்றார்.

வெள்ளை நிறக்கொடியை ஏந்தி நின்ற அலீயைத் தட்டிக் கொடுத்தார். ஜிப்ரீலும் கூட உம்முடன் இருப்பார். உமக்கு வெற்றி நிச்சயம். அவர்களது நெஞ்சில் இறைவன் அச்சத்தை விதைத்துள்ளான். அவர்களை வெற்றிகொள்பவரின் பெயர் எலியா (அலீ) என அவர்களது வேத நூலில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, அங்கு சென்றதும் நான் அலீ வந்துள்ளேன் என்று பறைசாற்றும். எதிரிகள் இழிவடைவது நிச்சயம்..

களம் நோக்கி விரைந்தார் அலீ. மர்ஹப் எனப் பெயரிய யஹூதிய தலைவரோடு முதலில் மோத வேண்டியிருந்தது. ஆரம்ப பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்ட பின் ஹஸ்ரத் அலீயின் வாளுக்கு இரையானார் மர்ஹப். இதனைக் கண்ட ஏனையோர் கோட்டைக்குள் ஓடிச்சென்று கதவை மூடிக்கொண்டனர். தளராத அலீ கோட்டை வாசலில் வந்து நின்றார். அதற்கு இடப்பட் டிருந்த கதவை மூடுவதற்கு மட்டும் இருபது பேர் தேவை. அலீ ஒற்றைக் கையால் கதவைப் பெயர்த்தெடுத்து கோட்டையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கால்வாயின் மீது பாலமாகப் போட்டார். முஸ்லிம் சேனை அதன் மீது நடந்து கோட்டையில் புகுந்து வெற்றி கொண்டனர்.(13)

 அறிவுக்கு அலீ

நபிபெருமான் அருளியதாக இப்னு அப்பாஸ் அறிவிக்கிறார். எனது உம்மத்தில் அறிவில் அதி சிறந்தவரும் நீதியில் எல்லோரையும் மிகைத்தவரும் அலீ ஆவார்.

நான் அறிவின் பட்டணம் எனின் அதன் நுழை வாயில் தான் அலீ. அறிவைத் தேட விரும்புபவர்கள் அலீயிடமிருந்து அதனைப் பெற்றுக்கொள்ளட்டும். – இது மற்றொரு நபிமொழி.

இப்னு மஸ்ஊத் அறிவிக்கிறார். ஒரு முறை நபியவர்கள் அலீயை தனியாக அழைத்துச் சென்று உரையாடினார். திரும்பி வந்த போது, என்ன கதைத்தீர்கள்? என அலீயிடம் வினவினேன். அதற்கு அலீ சொன்னார்;: நபிகளார் அறிவின் ஆயிரம் வாசல்களை எனக்குத் திறந்து கொடுத்தார். அவை ஒவ்வொன்றில் இருந்தும் மேலும் ஆயிரம் கதவுகள் திறக்கின்றன.

ஹஸரத் அலீ, ஒரு முறை மிம்பரில் ஏறி நின்று கூறினார். மக்களே, நான் உங்களிடமிருந்து சென்றுவிட முன்னர் என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில் சென்று போனவர்களினதும் வரவுள்ளவர் களினதும் அறிவு என்னிடம் இருக்கிறது. அல்லாஹ்வின்  மீது சத்தியமாக, நீதி வழங்க வேண்டி ஏற்பட்டால் யஹூதிகளுக்கு அவர்களது வேத நூலையும் நஸாராக்களுக்கு அவர்களது வேதநூலைக் கொண்டும் ஸபூர் வேதத்தினருக்கு அவ்வேதப் பிரகாரமும் குர்ஆனின் மக்களுக்கு குர்ஆனைக் கொண்டும் தீர்ப்பு வழங்குவேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, குர்ஆனைப் பற்றியும் அதன் விளக்கம் பற்றியுமான அறிவு ஏனைய எல்லோரையம் விட என்னிடம் இருக்கிறது.

மேலும் ஒரு முறை இவ்வாறு கூறினார்கள். என்னை இழந்துவிட முன்னர் என்னைக் கேளுங்கள். புனித குர்ஆனின் ஒவ்வொரு ஆயத்துகளைப் பற்றியும் விசாரித்தால் அவற்றுக்கு நான் பதில் தருவேன். அவை அருளப்பட்ட காலம், பின்னணி, யாரைப் பற்றி எது பற்றி என்பன போன்ற விளக்கங்களையும் நாஸிக், மன்ஸூக், பொதுவனதா, சிறப்பானதா, முஹ்கம், முதஷாபிஹ் மற்றும் மக்கீ, மதனீ போன்ற விபரங்களையும் வழங்க முடியும்.(14)

நபிக்குப் பின் தலைவராக

ஹஸ்ரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களது சிறப்புகளின் அடிப்படையில் தமக்கும் பின்னர் முஸ்லிம் உம்மத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கின்ற பிரதிநிதி யாக அன்னாரை பகிரங்கமாக அறிவிக்குமாறு நபியவர் களுக்கு இறைவன் கட்டளை இட்டான். நபிகளார் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்விடயம் பற்றி எடுத்துக் கூறினார்கள். ‘கதீர் ஹும்’ எனுமிடத்திலும் அவ்வாறே செய்தார்கள்.

ஹிஜ்ரி பத்தாம் ஆண்டில் நபி பெருமான் அவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா நகருக்குப் பயணம் மேற்கொண்டார். இப் பிரயாணத்தின் போது நபியவர்களுடன் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் கலந்து கொண்டதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டுத் திரும்பி வரும் வழியில், துல் ஹஜ் 17ம் நாள் ‘கதீர் ஹும்’ எனப்படும் வரண்ட நிலப் பரப்பை அடைந்தனர். தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டு எல்லோரும் சேர்ந்து தொழுகை நடத்தினர்.

வசதியாக அமருவதற்காக ஒட்டகத்தின் மீது வைக்கப்படும் ஆசனங்கள் பலவற்றை வைத்து உயர்ந்த ஓர் இடம் தயாரிக்கப்பட்டது. அதன் மீது ஏறி நின்ற கோமான் நபியவர்கள், இறைவனைப் புகழ்ந்த பின் பேசலானார்கள்.

நானும் நீங்களும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆவோம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

எமக்கு மார்க்கத்தை எத்திவைத்தீர்கள். அதற்காக சொல்லொணாத் தியாகங்களை மேற்கொண்டீர்கள் என நாம் சாட்சியம் கூறுகிறோம். அல்லாஹ் தங்களுக்கு மிகச்சிறந்த நற்கூலி தருவான். -மக்கள் உரக்கக் கூறினர்.

ஒரே இறைவனைப் பற்றியும் அவனது அடியாரும் தூதருமாகிய இந்த முஹம்மத் (ஸல்) பற்றியும் சாட்சியம் சொல்வீர்களா? சுவர்க்கம், நரகம், மரணம், மீள எழுப்பப்படல், மறுமை வாழ்வு என்பன பற்றி நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்களா?

ஆம் நாம் பிரமாணம் அளிக்கிறோம். இறைவா, நீயும் சாட்சியாக இரு. பின்னர் மக்கள் பக்கம் திரும்பி மீண்டும் சொன்னார்கள். மக்களே! நானும் நீங்களும் ஹவ்ழுல் கவ்ஸருக்குப் பக்கத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வோம். எனக்குப் பிறகு நான் விட்டுச் செல்லும் இரண்டு செல்வங்களை நீங்கள் எவ்வாறு மதிப்பீர்கள்.

இறைதூதரே, அவையிரண்டும் எவை?

அல்லாஹ்வின் வேதமும்,  எனது குடும்பத்தினரும். கவ்ஸருக்கு அருகில் என்னை வந்து அடையும் வரையில் இவை இரண்டும் ஒன்றையொன்று பிரியமாட்டா என இறைவன் எனக்கு அறிவித்துள்ளான். அவற்றை நீங்கள் விட்டு விடாதீர்கள். அப்படி விட்டு விட்டால் அது உங்கள் அழிவும் வழிகேடுமாகும்.

பின்னர் ஹஸ்ரத் அலீயின் கைகளை உயர்த்திப் பிடித்தார்கள். மக்கள் எல்லோரும் அவரை சரியாகக் காணும் விதத்தில் நின்றார்கள். பின்னர் சொன்னார்கள்:

மக்களே, விசுவாசிகளுக்கு தம்மை விடச் சிறந்தவரும் முதன்மையானவரும் யார்?

அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்.

என் மீதான விலாயத் அல்லாஹ்விடம் உண்டு. மூமின்களில் சிறந்தவராகிய எனக்கு அவர்கள் மீது விலாயத் கொடுக்கப் பட்டுள்ளது. நான் யாருக்குத் தலைவராக இருக்கிறேனோ, அவருக்கு இதோ, இந்த அலீயும் தலைவராக இருப்பார். இறைவா, அவரது நண்பர்களை நேசிப்பாயாக. அவரது எதிரிகளுக்கு நீயும் எதிரியாக இருப்பாயாக. அவருக்கு உதவுவோருக்கு உதவி செய்வாயாக. அவரோடு போர் புரிவோரை நீ தண்டிப்பாயாக… இங்கு உள்ளவர்கள், இங்கு இல்லாத வர்களுக்கு அறிவித்து விடுங்கள்.

மனிதர்கள் அவ்விடத்தில் இருந்து கலைந்து செல்வதற்கு முன்னரே பின்வரும் குர்ஆன் வசனம் அருளப்பட்டது.

இன்றைய நாளில், உங்களுக்கு உங்கள்  மார்க்கத்தைப் பரிபூரணப்படுத்தி விட்டேன். என் அருட்கொடைகளை நிறைவு செய்துவிட்டேன். உங்களுக்கென, இஸ்;லாத்தை மார்க்கமாக அங்கீகரித்துக் கொண்டேன்.|| (அல்குர்ஆன் 5:3) (15)

சமத்துவம்

இஸ்லாமிய ஆட்சி இமாம் அலீயின் பொறுப்பில் வரப்பெற்ற போது, மிம்பரில் ஏறி நின்றார். அல்லாஹ்வைப் புகழ்ந்த பின் உரையாற்றினார்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக, மதீனாவில் ஓர் ஈச்சை மரமாவது என்னிடம் இருக்கும் வரை, பைத்துல் மால் பொதுப் பணத்தில் இருந்து எதனையும் எடுக்க மாட்டேன். முஸ்லிம்களுக்குச் சொந்தமான அந் நிதியில் இருந்து எனக்கென்று ஒரு பங்கை எடுக்காத நான் ஏனைய யாருக்கும் அதனைக் கொடுத்து விடுவேன் என்று நீங்கள் நினைக்கலாமா?

அகீல் எழுந்து நின்று குறுக்கிட்டார். அப்படியெனின் மதீனாவில் வசிக்கின்ற கறுப்பர்களின் தரத்துக்கு எம்மையும் கணிக்கின்றீர்களா?

இமாம் சொன்னார்: உட்காரும் சகோதரரே, இங்கு பேசுவதற்கு உம்மைத் தவிர யாரும் இல்லையா? ஈமான், தக்வா என்ற சிறப்பம்சங்களால் அன்றி அந்தக் கறுப்பர்களை விட நீர் சிறப்பாக மாட்டீர்.(16)

இன்னும் சிலர் அவரிடம் வந்து இவ்வாறு ஆலோசனை கூறினார்கள்: அமீருல் முஃமினீனே, ஆரம்பத்தில், தங்களது ஆட்சி நன்கு காலூன்றும் வரை போர் வீரர்களுக்கு பைத்துல் மாலில் இருந்து அதிக தொகை தாருங்கள். பின்னர் தாங்கள் சொல்வது போன்று எல்லோர் மத்தியிலும் சமமாகப் பகிரலாம். இது நல்லதில்லையா?

இமாம் அவர்களது பதில் மிகத் திட்டவட்டமாக இருந்து. என்னஅநியாயம்! எனது அரசின் அத்திவாரம் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைப்பதன் மூலம் தான் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நீங்கள் என்னைக் கேட்கிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக இத்தகைய ஒரு காரியத்தை நான் செய்யவே மாட்டேன்.(17)

நீதி

ஹஸ்ரத் அலீ இப்னு அபீ தாலிப் அவர்களது மறைவுக்குப் பின்னர் ஒரு முறை அம்மாரின்  சகோதரியான ஹம்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஸவ்தா முஅவியாவைக் காண வந்தார்.

ஸிப்பீன் யுத்தத்தின் போது ஹஸ்ரத் அலீயின் பக்கமிருந்து அவரது படையினருக்கு ஸவ்தா ஆற்றிய பணிகள் முஆவியாவின் நினைவில் தோன்றவே, அதற்காக ஸவ்தாவைக் கடுமையாகக் கண்டித்தார். பின்னர் விசாரித்தார்:

சரி, நீர் எதற்காக இங்கு வந்தீர்?

முஆவியாவே, எமது உரிமைகளைப் பறித்ததற்காக அல்லாஹ் உம்மை நிச்சயம் விசாரிப்பான். எமக்கென சில அதிகாரிகளை அனுப்பி வைத்திருக்கிறீர். மக்களை ஏதோ பழுத்த வேளாண்மையாகக் கருதி அறுவடை செய்கிறார்கள். பததெரன மிதிக்கிறார்கள். மரணத்தின் சுவையை எமக்குத் தர முனைகிறார்கள். பிஸ்ர் இப்னு அர்தாத் என்பவரை அனுப்பி வைத்திருக்கிறீர். அவரோ எங்கள் மக்களைச் கொலை செய்கிறார். எமது சொத்துக்களைப் பறிமுதல் செய்கிறார். மத்திய அரசுக்கு நாம் கட்டுப்பட வில்லையெனில் இன்று வரை கண்ணியமும் பலமும் உள்ளவர்களாக இருந்திருப்போம். அவரை நீர் பதவி நீக்கம் செய்வீராயின் எவ்வளவு நல்லது. இல்லாவிடின் நாம் கிளர்ச்சி செய்வோம்.

கடுமையாகக் கோபமுற்ற முஆவியா, உமது கோத்திரத்தைச் சொல்லி எம்மைப் பயங்காட்ட முனைகிறீரோ? உம்மை மிக மோசமான நிலையில் அதே பிஸ்ரிடம் நான் அனுப்பி வைக்கிறேன். அவருக்கு எது சரியெனப் படுகிறதோ அதை உமக்குத் தரட்டும் என கர்ஜித்தார்.

ஸவ்தா பேசவில்லை. அவளது நினைவுத் திரையில்  பழைய நினைவுகள் நிழலாடின. சில கவிதையடிகள் அவளது வாயிலிருந்து ஒலித்தன. அந்த ஆத்மாவின் மீது இறைவனின் அருள் உண்டாகட்டும். அவரது மரணத் தோடு, மண்ணறையில் அடக்கப்பட்ட போது நீதியும் நியாயமும் கூட மண்ணில் புதையுண்டு போனது. நேர்மையும் சத்தியமும் அவரோடு ஒன்றியிருந்தன. சத்தியத்துக்குப் பதிலாக எதனையும் அவர் ஏற்கவில்லை. ஈமானும் உண்மையும் அவரைப் பொறுத்தவரை இரண்டறக் கலந்த அம்சங்கள்.

அது யாரைப் பற்றிய கவிதை? முஆவியா கேட்க ஸவ்தா சொன்னார்: அது ஹஸ்ரத் அலீ இப்னு அபூ தாலிப் அலைஹிஸ் ஸலாம் பற்றியது. எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ஒரு முறை நான் அவரிடம் சென்றிருந்தேன். ஸக்காத் சேகரிப்பவர்களின் அநியாயங்கள் முறையிடவே நான் சென்றேன். நான் போய்ச்சேர அவரோ தொழுகைக்குத் தயாராக நின்றிருந்தார். என்னைக் கண்டதும் தொழுகையில் ஈடுபடாமல், ஏதாவது தேவையாக வந்தீரா? என மலர்ந்த முகத்தோடு அன்பொழுக விசாரித்தார். ஆம் எனப் பதில் அளித்த நான் விடயத்தை அவரிடம் விபரித்துச் சொன்னேன். தொழுகைக்காக நின்றிருந்த வண்ணமே, அவர் அழத் தொடங்கினார். பின்னர் இப்படி இரைஞ்சினார்;. இறைவா! உன் அடியார்களுக்கு துன்பம் இழைக்குமாறு நான் எவருக்கும் கட்டளையிடவில்லை. அதற்கு நீயே சாட்சி. பின்னர், உடனடியாக தோல் துண்டொன்றில் கடிதம் ஒன்றை எமுதினார். இறை நாமத்தில் துவங்கி, ஒரு குர்ஆன் வசனத்தையும் எழுதி பின்வருமாறு எழுதினார்: இக்கடிதத்தைக் கண்டதும், இங்கு வரத்தயாராகவும. நான் இங்கிருந்து ஒருவரை அனுப்பியதும் எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டியது…. கடிதத்தை என் கையிலேயே தந்தார். அதை உறையில் இடவோ முத்திரையிடவோ இல்லை. அதனை குறிப்பிட்ட  அதிகாரியிடம் சேர்ப்பித்தேன். அவர் பதவி நீக்கம் செய்யப் பட்டு, எம்மை விட்டுப் போய்விட்டார்.

இந்தக் கதையைக் கேட்ட முஆவியாவிடமிருந்து உடனடியாகவே கட்டளை பிறந்தது: இவர் என்ன வேண்டுகிறாரோ இதை எழுதிக் கொடுத்துவிடுங்கள்.(18)

மூன்று கலீபாக்களுடனும்

நபிபெருமானாரின் கருணைக் கண்கள் இவ்வுலகை விட்டும் மூடிக்கொண்டன. ஒளிர் விட்ட ஒரு சூரியன் மனிதப் பார்வையிலிருந்து மறைந்து சென்றது. கருணை அறியா சில நெஞ்சங்கள் ஸகீபா பனீஸாயிதாவில் ஒன்று கூடின. இறைகட்டளைப் பிரகாரம் நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் அலீ (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை தமக்குப் பிறகு தலைவராக நியமித்துச் சென்றது இருக்க, அரசுப் பொறுப்பை ஹஸ்ரத் அபூ பக்கர் இப்னு குஹாபாவுக்கு கையளித்தனர்;. அவரைத் தொடர்ந்து ஹஸ்ரத் உமரும் அவருக்கு பின்னர் ஹஸ்ரத் உதுமானும் கிலாபத்துக்கு வந்தனர். ஏறத்தாழ ஒரே மாதிரியான திட்டமிடலுடன் அனைத்தும் நிறைவேறின. நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் சுமார் 25 வருட காலம் கிலாபத் இவர்களிடம் இருந்து வந்தது. இந்த நீண்ட காலப் பிரிவில், நபிகள் பெருமானின் நியமிக்கப்பட்ட பிரதிநிதியும் இஸ்லாமிய அரசின் உண்மை உரிமையாளரும் சமயத்தின் ஒரேயொரு பரிபூரண அறிஞனும் நீதியின் தலைவருமாகிய ஹஸ்ரத் அலீ இப்னு அபூ தாலிப் (அலைஹிஸ்ஸலாம்) பெறுமையோடு வீட்டில் அடங்கியிருந்தார். மனித வரலாற்றின் மிகச் சோகமான சம்பவம் இது, வேற்று மதங்களைச் சேர்ந்தோரும் மத நம்பிக்கையே அற்ற சிலரும் கூட, இஸ்லாத்துக்காகவென ஹஸ்ரத் அலீ அவர்கள் தூய்மையோடு புரிந்த தியாகங்களையும் பணிகளையும் அவரது வீரத்தையும் ஞானத்தையும் அவரது நேர்மையையும் நீதியையும் அறிந்து, இஸ்லாமிய  சமூகத்துக்கு ஏற்பட்ட இப்பேரிழப்பைக் கண்டு வருத்தம் கொண்டார்கள.; நியாயம் விரும்பிய முஸ்லிம்களும் அலீயின் நேசர்களும் எத்தகைய உணர்வைப் பெற்றிருப்பார்கள். இந்த நிகழ்வால் அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்வும் கவலையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு கிலாபத்துக்கு வந்த அபூபக்ர், ஹிஜ்ரி 13ம் ஆண்டு தமது 63ம் வயதில் வபாத் தானார். அவரது கிலாபத், இரண்டு வருடம் 3மாதமும் பத்து நாட்களாகும்.(19)

அவரையடுத்து கலீபாவாகிய உமர், ஹிஜ்ரி 23, துல் ஹஜ் மாதக் கடைசிப் பகுதியில் அபூ லுஃலுஃ என்பவரால் கொலைசெய்யப்பட்டார். அன்னாரது கிலாபத் காலம் பத்து வருடம்  6மாதம்  4 நாட்களாகும்.(20)

ஹஸ்ரத் உமர் தமக்குப் பின்னர் கலீபாவைத் தெரிவு செய்ய ஆலோசனைக் குழுவொன்றை அறிமுகப்படுத்தினார். அக்குழுவின் ஆலோசனையில் உதுமான் இப்னு அப்பான் தெரிவு செய்யப்பட்டார். ஹிஜ்ரி 24, முஹர்ரம் மாத முற்பகுதியில் கிலாபத்தை ஏற்றார். நீதி வழுவிய காரணத்தால் ஹிஜ்ரி 35 துல்ஹஜ் மாதத்தில் சில முஸ்லிம் தீவிராதிகளால் கொலை செய்யப்பட்டார். ஏறத் தாழ 12 வருடங்கள் அவரது கிலாபத் நீடித்தது.(21)

நபி பெருமான் (ஸல்) அவர்களது மறைவுக்குப் பின்னர், ஹஸரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தமது உரிமை பறிக்கப்பட்ட அக்கிரமத்துக்கு முன்னால் எழுந்து நின்று தனது எதிர்ப்பைப் புலப்படுத்தினார்;. இஸ்லாத்தின் உயரிய நலன்கள் இடமளித்த அளவுக்கு, தம்மால் சக்திக்கு உட்பட்ட வகையில் தமது பேச்சுக்களின் போதும் கருத்துத் தெரிவிக்கக் கிடைத்த சந்தர்ப்பங்களிலும், கிலாபத் தம்மிடமிருந்து பறிமுதல் செய்யப் பட்டுள்ள விடயத்தை மக்களுக்குத் தெளிவு படுத்தத் தவறவில்லை. இஸ்லாத்தில் அதியுயர் பெண்மணியாகக் கருதப்படுகின்ற அண்ணலாரின் கண்மணி அன்னை பாத்திமா ஸலாமுல்லாஹி அலைஹாவும் தமது கணவரான ஹஸ்ரத் அலீயுடன் இவ்விடயத்தில் முழுமையாக ஒத்துழைத்தார்கள்.

சல்மான், அபூதர், மிக்தாத், அம்மார் யாசிர் போன்ற முக்கிய ஸஹாபிகள் சிலரும் தமது உணர்ச்சி பொங்கும் பேச்சுக்களில் இப்போக்கை விமர்சித்தனர். நபிகளாருக்குப் பின்னர் ஹஸரத் அலீயிடம் சேர வேண்டிய உரிமை பறிக்கப் பட்டுள்ளமையை சுட்டிக் காட்டினர். ஆயினும், ஹஸ்ரத் அலீயோ, ஒரு போராட்டம் நடாத்தி உள்வீட்டில் குழப்பம் ஏற்படுத்த விரும்பவில்லை. இஸ்லாம் உலகில் அப்போதுதான் வளரத் தொடங்கியிருந்தது, சரியாகக் வேரூன்றாத பருவம். இக்காலக்ட்டத்தில் உள் பிரச்சினைகளால் இஸ்லாத்ததுக்கு பாதிப்பன்றி நன்மை ஏற்படாது என்பது திண்ணம். நபியவர்கள் பட்ட கஷ்டங்களும் அனுபவித்த துன்பங்களும் தியாகங்களும் பாழ் பட்டுப் போகும் எனக் கருதினர். ஆகவே கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் இஸ்லாத்தின் உயர்வும் சிறப்பும் கருதி வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கி வந்தார்கள். இரண்டாவது கலீபா உமர், பல முறை ‘லவ்லா அலீ லஹலக உமர்’ -அலீயின்றேல் உமர் அழிந்திருப்பார்- எனக் கூறியமை இதற்கு நல்ல சான்றாகும்.

மார்க்கப் பிரச்சினையாகட்டும்,சிக்கலான அரசியல் பிரச்சினையாகட்டும் எதுவாயினும் தெளிவான வழிகாட்டல் தேவைப்பட்ட போதெல்லாம் இம்மாபெரும் மகானின் பேரறிவை அங்கீகரித்தனர். இதோ சில சம்பவங்கள்:

ஹஸரத் அபூபக்ரின் ஆட்சியின் போது

அபூபக்ரின் அவைக்கு வந்த சில யஹூதி அறிஞர்கள் அவரிடம் சில கேள்விகளைத் தொடுத்தனர். இந்த உம்மத்துக்கு நபிகளாரின் பிரதிநிதி நீங்கள் அல்லவா? நபியின் மறைவுக்குப் பின் சமூகத்தை வழிநடாத்த வருபவர் மக்களின் அதிசிறந்த அறிவாளி தான் என்று எமது கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளது. ஆகவே எமது வினாவுக்கு விடை தருவீராக. இறைவன் வானத்தில் இருக்கிறானா? அல்லது பூமியில் இருக்கின்றானா?

இறைவன் வானத்தில் அர்’pன் மீது இருக்கிறான் என்றார் அபூபக்கர்.

அப்படியெனின் அவன் பூமியில் இல்லை என்கிறீர்கள். அதிலிருந்து தெரிய வருவது என்னவெனில் இறைவன் ஓரிடத்தில் இருக்கிறான். இன்னோர் இடத்தில் இல்லை என்பதுதானே|-வந்தவர்கள் கேட்டனர்.

இது நிராகரிப்போரின் கூற்று. தயவு செய்து ஓடி விடுங்கள். இல்லையேல் மறுவுலகத்துக்கு அனுப்பக் கட்டளையிடுவேன்.-அபூபக்ரின் பதில் அது.

அவர்கள் திரும்பிச் சென்றனர். இஸ்லாம் பற்றி விநோதமாகப் பேசலாயினர்;. அவர்களுள் ஒருவரை ஹஸ்ரத் அலீ சந்தித்தார். அப்போது சொன்னார்: நீங்கள் கேள்வி கேட்டதும் உங்களுக்குக் கிடைத்த பதிலும் எனக்குத் தெரியும். இடம் என்பது இறைவனின் வெளிப்பாடாகும். அவனுக்கு இடம் என்பது கிடையாது. இடத்துக்குள் கட்டுப்படுவதை விட்டும் அவன் அதி உயர்ந்தவன். அவன் எந்த இடத்திலும் உள்ளவன். தொடர்பு கொள்ள வசதியாக மிக அருகில் இருக்கிறான். அவன் எல்லாவற்றையும் பற்றிய பூரண அறிவையும் கொண்டவன்.

யஹூதியின் மனமாற்றத்துக்கு இந்தப் பதில் போதுமானதாக இருந்தது. நபிகளாருக்குப் பிறகு தலைமைப் பொறுப்புக்கு மிகப் பொருத்தமானவர் நீர்தான் வேறுயாருமல்ல என்றார் யஹூதி.(22)

ஹஸரத் உமரின் ஆட்சியின் போது

குதாமா இப்னு மழ்ஊன் என்பவர் மதுபானம் அருந்திய வழக்கு வந்தது. எண்பது கசையடிகள் அவருக்குத் தண்டனையாக நியமித்தார் உமர். குதாமா அதனை மறுதலித்து வாதிட்டான்: எனக்கு கசையடி கொடுக்க வேண்டிய கடமை இல்லை ஏனெனில், இறையச்சத்துடன் விசுவாசம் கொண்டு நற்காரியம் புரிவோர் உட்கொள்பவை விடயத்தில் குற்றம் இல்லை(23) என அல்லாஹ்  கூறியிருக்கிறான்.

ஹஸ்ரத் உமர்  ஹத்தை வழங்காமல் அவனை விட்டுவிட்டார். இந்தச் செய்தி ஹஸ்ரத் அலீயை எட்டவே உமரின் சபைக்கு வந்தார். ஏன் இறைசட்டத்தை நிறைவேற்றாமல் விட்டு விட்டீர்? என உமரிடம் வினாவினார். உமர் குர்ஆன் ஆயத்தை ஓதிய விடயத்தைச் சொன்னார்.

இமாம் விடயத்தை விளக்கிக் காட்டினார். குதாமா இந்த புனித வாக்கியத்தில் சொல்லப்படும் விஷயங்களுக்கு உட்பட்டவர் அல்ல. ஏனெனில், அல்லாஹ் மீது விசுவாசங் கொண்டு நற்காரியங்கள் புரிவோர் ஒருபோதும் ஹறாமான எதையும் ஹலாலாகக் கருத மாட்டார்கள். குதாமாவை உடனே அழையுங்கள். தவ்பா செய்தால் குறிப்பிட்ட கசையடியை அவனுக்கு நிறைவேற்றுங்கள். இல்லாவிட்டால், அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படல் வேண்டும். ஏனெனில், மதுபானம் அருந்துவது ஹறாம் என்பதை மறுத்ததால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டான்.

குதாமாவுக்கு விஷயம் எட்டவே அவசர அவசரமாக வந்து தவ்பா செய்தார். கசையடி எத்தனைகொடுப்பது?|| உமர் வினவ எண்பது என்றார் ஹஸ்ரத் அலீ.(24)

ஹஸரத் உதுமானின் காலத்தில்

அல்லாமா மஜ்லிஸீ, பின்வரும் சம்பவத்தை க’hப், ஸஃலபீ மற்றும் நாற்பது மூலங்களில் இருந்து தொகுத்துத் தந்துள்ளார்.

உதுமானின் கிலாபத்தின் போது ஒரு பெண் திருமணம் செய்து ஆறு மாத்த்தில் குழந்தை ஈன்றாள். இக்குழந்தை திருமணம் செய்த கணவனுக்குரியதன்று, விபசாரத்தின் மூலம் பெற்றதாய் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்த உதுமான், பெண்ணைக் கல்லெறிந்து கொல்லக் கட்டளையிட்டார்.

இத்தீர்ப்பை ஆட்சேபித்த ஹஸ்ரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இப்பெண் நிரபராதி என்பதை குர்ஆனில் இருந்தே நிரூபிக்கலாம் என்றார். குழந்தையைச் சுமப்பதும் பால் கொடுப்பதும் முப்பது மாதங்கள்(25) எனக் கூறும் இறைவன் பிரிதோரிடத்தில் பால் கொடுப்பதற்கான மொத்த காலம் இரண்டு வருடங்கள்(26) என விளக்குகிறான். இரண்டு வருடங்கள் அதாவது 24 மாதங்கள் பால் கொடுப்பதற்கு ஒதுக்கப்பட எஞ்சிய ஆறு மாதங்கள் தான் கர்ப்பகாலம் எனத் தெளிவாகிறது. எனவே, ஒரு பெண் ஒரு குழந்தையை ஆறு மாதமே சுமந்தும் பெறலாம். எனவே இப்பெண் குற்றமற்றவள் என்றார் இமாம். அப்பாவியான அப்பெண் விடுதலை செய்யப்பட்டாள்.(27)

மேற்படி இரு குர்ஆன் வசனங்களை அடிப்படையாகக் கொண்டு, அறிஞர்களும் புகஹாக்களும் ஆகக் குறைந்த கர்ப்பகாலம் ஆறு மாதம் எனக் கணித்துள்ளனர். அதனை விடக் குறைந்த காலத்தில் சட்டபூர்வ பிதா வின் மூலம் உருவாகும் குழந்தை பிறக்க முடியாது எனவும் அவர்கள் கருதுவர்.

மறைவு

அது ஹிஜ்ரி  40ம்  வருடம். மக்காவில் இருந்த சில காரிஜிகள் அலீயையும் முஆவியாவையும் அம்ரிப்னுல் ஆஸையும் முறையே கூபாவிலும் ஷாமிலும் மிஸ்ரிலும் ஒரே நாளில் தீர்த்துக் கட்டுவதென திட்டம் தீட்டினர். அதன் பிரகாரம் றமழான் பத்தொன்பதாம் இரவில் இத்திட்டத்தை நிறைவேற்றத் தீர்மானமாகியது. அலீயைக் கொலை செய்ய அப்துர்ரஹ்மான் முல்ஜம் என்பவனும் ஹஜ்ஜாஜ் இப்னு அப்துல்லாஹ் ஸுரைமீ முஆவியாவைக் கொலை செய்யவும் அம்ரிப்னுல் ஆஸைக் கொலை செய்ய அம்ருப்னு பக்ர் தமீமியும் தெரிவாகினர்.

இந்த நோக்கத்துக்காக இப்னு முல்ஜம் கூபா வந்தான். அவனது பயங்கர எண்ணம் பற்றி யாரும் அறிந்திக்கவில்லை. ஒரு காரிஜியின் வீட்டுக்குச் சென்றிருந்த இப்னு முல்ஜம் அங்கு கத்தாமா என்ற அழகிய பெண்ணைச் சந்தித்தான். அவள் மீது மையல் கொண்ட இப்னு முல்ஜம் அவளைத் திருமணம் செய்ய வேண்டி நின்றான். கத்தாமாவோ, தனக்கு மஹராக முப்பதினாயிரம் திர்ஹம் பணமும் ஓர் அடிமையும் தருவதோடு அலீயையும் கொன்று விட்டு வரவேண்டும் எனவும் நிபந்தனை விதித்தாள். அவளது சகோதரனும் தந்தையும் நஹ்ரவான் போரில் அலீயிடம் தோல்வியடைந்து மாண்டு போனதால் அலீ மீது ஆத்திரமுற்றிருந்தாள்.

நான் அதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன்||என தனது திட்டத்தை கத்தாமாவிடம் வெளியிட்டான். கத்தாமாவின் வேண்டுகோளால் இப்னு முல்ஜமின் உறுதி இரட்டிப்பாகியது.

அந்தக் கோர இரவு வந்தது. இப்னு முல்ஜம் தனது கையாட்கள் சிலருடம் கூபா மஸ்ஜிதில் காத்திருந்தான்.(28)

இந்த இரவுக்கு சுமார் முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னரே, றமழான் மாதத்தில் கொல்லப்படும் செய்தியை நபியவர்கள் ஹஸ்ரத் அலீயிடம் சொல்லியிருந்தார். ஹஸ்ரத் அலீயே இப்படி றிவாயத் செய்கிறார்:

றமழானின் சிறப்பு பற்றி அண்ணலார் அறிவுரை பகர்ந்து கொண்டிருந்தார். நான் அவரிடம்  கேட்டேன்:  அல்லாஹ்வின் தூதரே, இந்த மாதத்தில் செய்யத் தகுந்த அதிசிறந்த கருமம் என்னவோ?

பாவங்களிலிருந்து விலகிக் கொள்வது எனப் பதிலளித்து விட்டு வேதனை யோடு அழுதார்கள். இந்த மாதத்தில் தான் நான் ‘ஹீதாகுவதாகவும் எனக்கு அறிவித்தார்.(29)

இமாமின் நடவடிக்கைகளும் பேச்சுக்களும் கூட இம்மாதத்தில் தாம் கொல்லப்படுவதை அவர் அறிந்திருந்ததாகவே புரிய வைக்கிறது. அவ்வருடத்தில் இப்படியும் சொன்னார்: இம் முறை ஹஜ்ஜில் நான் உங்களுடன் இருக்கப் போவதில்லை.

நோன்பு துறக்கும் சமயத்தில், இப்தார் வேளையில் மிகக் குறைந்த அளவு உணவு சாப்பிடுகிறீர்களே, ஏன்? எனக் கேட்டதற்கு, வெறும் வயிற்றோடு இறைவனைச் சந்திக்க விரும்புகிறேன் என்றார்.(30)

அன்று இரவு யாரும் தூங்கவில்லை. அல்லாஹ் மீது சத்தியமாக, நான் பொய் சொல்லவில்லை. இன்று தான் அந்த இரவு என அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.(31)

அதிகாலை நேரமாகியது. மஸ்ஜிதுக்கு வந்தார் ஹஸ்ரத் அலீ. ஸுபஹுத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த போது கொடியோன் இப்னு முல்ஜமின் நஞ்சூட்டிய வாள் அன்னாரின் புனித தலையில் பாய்ந்தது. ஒரு சூரியன் சத்தியத்தின் மிஹ்ராபில் இரத்தம் பீறிட வீழ்ந்து கிடந்தது. இரண்டு நாட்களின் பின் ஹி. 40 றமழான் 21ல் நிரந்தரமாக மறைந்துசென்றது.(32)

அன்னாரது புனி உடல் நஜப் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று கோடிக் கணக்கான முஸ்லிம்களின் இதயங்கவர் பூமியாகத் திகழ்ந்து வருகிறது நஜப்.

இமாம் அலீ, எக்கணமும் இறை சிந்தனையோடு வாழ்ந்தவர். அந்தக் கொடுமை நடந்த போது கூட தொழுகையில் இருந்தவர். இப்னு முல்ஜம் இமாம் அவர்களின் பின்பக்கமாக இருந்து தன் வாளை வீசிய போது அன்னாரின் ஒளி பொருந்திய நெற்றியை அது பதம் பார்த்தது. கஃபாவின் ரட்சகன் மீது ஆணையாக, நான் வெற்றி பெற்று விட்டேன். இதுதான் அன்னாரின் அதரங்கள் முதன் முதலாக மொழிந்த வசனம்.

இரத்தம் தோய்ந்த நிலையில் இருந்த இமாம் அவர்களை வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள். ஷஹாதத்தைத் தழுவிய நாளில் கூட ஏனைய நாட்களில் போன்று மக்களின் நலன் பற்றிய சிந்தனையுடனே இருந்தார். இமாம் அலீக்குப் பிறகு இமாமத்துக்கு இமாம் ஹஸனும் பின்னர் இமாம் ஹுஸைனும் அவரது பரம்பரையில் வருவோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை பற்றி நபிபெருமானாரே சுட்டிக்காட்டியிருந்த போதிலும் அதனை உறுதி செய்யும் வகையில் தம் இறுதிக் கணங்களில் கூட மீண்டும் மக்களுக்கு நினைவு படுத்தினார்கள்.(33)

இறுதி நேர உபதேசம்:

தம் வாழ்வின் இறுதிப் பொழுதுகளில் தமது பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் பொதுவாக முஸ்லிம்களுக்கும் வஸீயத் நல்லுபதேசம் செய்தார்.

இறையச்சத்தோடு வாழ நான் உங்களுக்கு சிபார்சு செய்கிறேன். அதன் பிரகாரம் உங்கள் செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். எப்போதும் முஸ்லிம்கள் மத்தியில் சமாதானம் ஏற்படுத்துவது பற்றியே சிந்தியுங்கள்..

அனாதைகளை மறக்க வேண்டாம். அயலவர்களின் உரிமைகளை மதித்து நடவுங்கள்.

தொழுகை விடயத்தில் நான் உங்களை எச்சரிக் கிறேன். அது உங்கள் மார்க்கத்தைத் தாங்கி நிற்கும் தூண் ஆகும்.

சொல்லாலும் சொல்வத்தாலும் உயிராலும் இறை பாதையில் போராடுங்கள்.

ஒருவருக்கொருவர் நல்லுறவைப் பேணுங்கள். நல்லதை ஏவி தீயதை விலக்கும் பணியைக் கைவிடவேண்டாம். அப்படிக் கைவிடுவீர்களாயின் சமூகத்திலுள்ள இழியவர்கள் உங்களை ஆள வருவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு எதிராக எவ்வளவு பிரார்த்தித்தாலும் பலன் கிடைக்காது.(34)

இறைவனின் ஸலவாத்தும் நல்லோர் தூயோரின் நல் வாழ்த்தும் அப்புனிதர் மீது உண்டாவதாக.

     சிறப்போடு பிறந்தார்.

     சிறப்போடு வாழ்ந்தார்.

     சிறப்போடு இவ்வுலகைத் துறந்தார்.

Scroll to Top
Scroll to Top