காஸாவில் நடக்கும் அநியாயங்களை புறக்கணிப்பதை உலகம் எப்போது நிறுத்தும்?

When will the world stop ignoring 

what is happening in Gaza?

உலகம் தொடர்ந்து நம் நிலைமையை ‘இயல்பானது’ என்று கருதினால், காலம் கடந்துவிட்டது என்பதை விரைவில் உணரும்

வழங்கியவர் மஜீத் அபுசலாமா

எனது குடும்பத்துக்கும், காஸா மக்களுக்கும் எப்போதும் போலவே கடந்த மாதமும் கொடூரமானது. கிட்டத்தட்ட முடிவடையாத பூகம்பத்தின் மையப்பகுதியில் நாங்கள் சிக்கிக்கொண்டதைப் போல இஸ்ரேல் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் குண்டுவீச்சு நடத்தியது. வெடிப்புகள், சில நேரங்களில் எங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், மிகவும் சத்தமாக இருந்தன, என் இரண்டு வயது மருமகளுக்கு இரவில் தூங்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவள் பெரிய சத்தம் ஒன்று கேட்கும்போது, அவள் பொம்மைகளை இஸ்ரேலின் குண்டுகளிலிருந்து பாதுகாப்பது போல விரைவாக அவளைச் சுற்றி சேகரித்தாள்.

கடந்த மாதம் உண்மையில் கொடூரமானது, ஆனால் அது எந்த வகையிலும் அசாதாரணமானது அல்ல. இஸ்ரேலின் வீரர்கள், போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் துப்பாக்கி கப்பல்கள் பல தசாப்தங்களாக காஸா மக்களை தவறாமல் துன்புறுத்துகின்றன, அச்சுறுத்துகின்றன, கொலை செய்கின்றன. இஸ்ரேலின் தாக்குதல்கள் காஸாவில் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாகும். உயிர்வாழ்வதற்கும், ஒரு சாதாரண வாழ்க்கையை ஒத்த ஒன்றை நடத்துவதற்கும், நம்மீது ஏற்படுத்தப்படும் வன்முறைகளை சாதாரணமாக ஏற்றுக்கொள்வதைத் தவிர காஸா மக்களுக்கு வேறு வழியில்லை.

காஸாவில் வளர்ந்த நான் எப்போதும் அவசர நிலையை உணர்ந்தவனாகவே இருந்தேன். 2008, 2009, 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் காஸா மீதான தாக்குதல்களின் போது செய்ததைப் போல, எனது குடும்பம் எப்போதுமே மோசமான நிலைக்குத் தயாராக இருந்தது, ஏனெனில் மோசமான இஸ்ரேலிய மிருகங்கள் எந்த நேரத்திலும் எங்கள் கதவைத் தட்டலாம். ஒரு குழந்தையாக, ஒவ்வொருவரும் பயத்தில் வாழ்வதை நான் அறிவேன் எந்த ஒரு நாளும் சாதாரணமாக இருந்ததில்லை. என் இதயத்தில், அன்றாட கொடூரங்கள் இயல்பாக்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அவற்றை நான் நிராகரித்தேன், ஏனென்றால் என் மனிதநேய தொடர்பை இழக்க நான் விரும்பவில்லை. ஆயினும்கூட, நான் பிறந்த நிலைமை மற்றும் என் சுற்றுப்புறங்களுடன் தான் நான் வாழ வேண்டியிருந்தது.

இப்போது, என் மருமகளும் சரி, காஸாவில் இஸ்ரேலிய முற்றுகையின் கீழ் வாழும் ஆயிரக்கணக்கான பிற குழந்தைகளும் சரி, அதே அச்சங்களுடனும், தொடர்ச்சியான அவசரகால அபாய உணர்வுகளுடனேயே வளர்ந்து வருகின்றனர். அவர்கள் வெடிகுண்டுகளின் சத்தத்தின் மூலம் தூங்க முயற்சிக்கும்போது, மற்றும் அவர்களின் பொம்மைகளை கதவுக்கு வெளியே இருக்கும் கொடூரங்களிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கும் போது, எந்தவொரு குழந்தையும் ஒரு வன்முறை யதார்த்தத்தை அவர்கள் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் தான் உலகம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 20ஆம் திகதியை சர்வதேச சிறுவர் தினமாக அனுஷ்டித்துக்கொண்டிருக்கிறது.)

சமீபத்திய ஆண்டுகளில், இஸ்ரேல் வெடிகுண்டு வீசவோ, துப்பாக்கிச் சூடு நடத்தவோ அல்லது உடல் ரீதியாக படையெடுக்கவோ இல்லாத ஒரு நாள் கூட இல்லை. காஸா புவியின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒன்று மட்டுமல்ல, 13 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றுகையிடப்பட்ட இடமாகும். சாதாரண மனித வாழ்க்கைக்குத் அவசியமான அடிப்படைகளின் பெரிய பற்றாக்குறையுடன் பெருந்தொகையான மக்கள் இங்கு வாழ்கின்றனர்.

இஸ்ரேலின் காலனித்துவ உள்கட்டமைப்பு நமக்கு மேலேயுள்ள வானத்தையும், நம்மைச் சுற்றியுள்ள நிலத்தையும் கடலையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் அதன் மேலாதிக்க சக்தியைக் காண்பிப்பதற்காக எமக்கு மிக நெருக்கமான பிரத்தியேக இடங்களுக்குள் அத்துமீறி ஊடுருவிச் செல்லும். காஸாவில், நீங்கள் எங்கு பார்த்தாலும், அடக்குமுறை, நகர்ப்புற காவலர்கள் – எல்லை வேலிகள், தடுப்பு சுவர்கள், கவச லாரிகள், போர் விமானங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் ஆகியவை நாம் வாழும் நிலப்பரப்பை வடிவமைக்கின்றன. நீங்கள் வீட்டில் இருக்கும்போது கூட, இராணுவ ட்ரோன்களின் சத்தம் நீங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும். எந்த நேரத்திலும் நீங்கள் தாக்கப்படலாம் என்ற அச்ச உணர்வுடனேயே மக்களை வைத்திருப்பர்.

எமது ஆக்கிரமிப்பின் கீழ்தான் காஸா உள்ளது என்று பாலஸ்தீனியர்களை நம்பச்செய்ய, அதன் இருப்பை தொடர்ந்து நினைவுபடுத்த இஸ்ரேல் ஒரு தொடர்ச்சியான முயற்சியை மேற்கொள்கிறது என்று நான் நம்புகிறேன். அதன் ஆக்கிரமிப்பை மிகவும் புலப்படுத்துவதன் மூலமும், அது நம்மீது வைத்திருக்கும் அடக்குமுறை சக்தி மிகவும் வெளிப்படையானதாலும், அது எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது: நாங்கள் உங்களை ஒருபோதும் சாதாரண மனிதர்களாக, சுதந்திர வாழ்க்கையை வாழ அனுமதிக்க மாட்டோம் என்ற செய்தியே அது.

இஸ்ரேலைப் பொறுத்தவரை, காஸா என்பது இரண்டு மில்லியன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கும் இடம் அல்ல, அப்பிரதேசத்தை ஒரு “எதிரிகளைக்கொண்ட” – அன்னிய இடம் ஒன்றுபோலவே நடத்துகிறது. அதன் மக்கள் மனித கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கு தகுதியற்றவர்கள் என்பது அவர்களது கருத்து. ஆனால் இஸ்ரேலின் பிரச்சார இயந்திரம், உலகெங்கிலும் உள்ள அதன் நட்பு நாடுகளின் உதவியுடன், காஸா மக்களை மனிதநேயமற்ற முறையில் நடத்துவதற்கும், அவர்களை மோசமான வன்முறை “தீவிரவாதிகள்” என்று முத்திரை குத்துவதற்கும் பயன்படுத்துவதோடு, இஸ்ரேலின் கொடுமையான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை “மனிதாபிமானம்” மற்றும் “நாகரிகம்” என்ற கருத்தை உருவாக்குவதற்கும் அயராது உழைக்கிறது.

நிச்சயமாக, உண்மை நிலை மிகவும் வித்தியாசமானது. எங்களை அச்சுறுத்தி அமைதிப்படுத்த இஸ்ரேல் முயற்சித்த போதிலும், காஸா மக்களான நாங்கள் எம்மைப்பற்றி ஆக்கிரமிப்பாளர் கதை கூற அனுமதிப்பதில்லை. நாங்கள் எங்கள் அச்சங்கள், பாதிப்புகள் மற்றும் விரக்திகளை எதிர்ப்பாக மாற்றி, நமது சோகமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தவும், எங்கள் உரிமைகளை கோருவதற்கும், எங்கள் ஒடுக்குமுறையாளர்களை அவமானப்படுத்துவதற்கும் எங்களால் முடிந்த எல்லா வழிகளிலும் உலகை அடைகிறோம்.

காஸாவிலும் மேலும் உலகெங்கிலும் பறந்து வாழும் பல காஸா மக்களை போலவே, நானும் இஸ்ரேலின் காலனித்துவ கொள்கைகளுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் செலவிட்டேன். நீதி மற்றும் சுதந்திரத்திற்கான பாலஸ்தீனிய போராட்டத்தில் நான் முன்னணியில் இருந்து வருகிறேன். முதலில் காஸாவிலும், பின்னர் ஜெர்மனியிலும் உள்ள எனது அகதி முகாமில். நான் தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகளுக்காக அச்சுறுத்தப்பட்டேன், துன்புறுத்தப்பட்டேன், மிரட்டப்பட்டேன், சுடப்பட்டேன். ஆனால் நான் ஒருபோதும் எனது போராட்டத்தைக் கைவிடவில்லை, ஏனென்றால் எனக்கும், எனது குடும்பத்திற்கும், என் அன்புக்குரிய காஸாவின் எதிர்காலம் ஒரு காலனித்துவமயமாக்கப்பட்ட எதிர்காலமாக இருப்பதை நிராகரிப்பதற்கான ஒரே வழி எதிர்ப்புதான் என்று எனக்குத் தெரியும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, உலகம் நாம் சொல்வதைக் கேட்க ஆர்வம் காட்டவில்லை. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்கள் பத்திரிகையாளர்கள், ஐ.நா. அறிக்கையாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களால் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும்கூட, பெரும்பாலான உலக அரசாங்கங்கள் இன்றுவரை இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க பெரிதாக எதுவும் செய்யவில்லை. சிலர் இஸ்ரேலை “கண்டிக்க” வெற்று அறிக்கைகளை வெளியிட்டனர், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அதன் தாக்குதல்களை நிறுத்துமாறு பேச்சளவில் “வற்புறுத்துகிறார்கள்”, ஆனால் அதேநேரம் இஸ்ரேலுக்கு இராஜதந்திர, அரசியல் மற்றும் இராணுவ ஆதரவைத் தொடர்ந்து வழங்கினர். மேலும் சிலர் எதுவுமே நடக்காதது போல முற்றிலும் அமைதியாக இருப்பதை தேர்ந்தெடுத்து, மேலும் சிலர் எமக்கு இழைக்கப்படும் அநியாயம் தொடர்பாக கண்மூடித்தனமாகத் இருந்தனர், இவை அனைத்தும் தார்மீக துரோகமாகும். (இந்த துரோகிகளின் பட்டியலில் இப்போது சில அரபு தலைவர்களும் இணைந்திருப்பது பெரும் வேதனைக்குரிய விடயமாகும்).

ஆனால் சர்வதேச சமூகம் தொடர்ந்து நமது அவலநிலையை புறக்கணிக்க முடியாது. 2020 க்குள் காஸா “வாழ்வதற்கு ஒவ்வாத இடம்” ஆக மாறும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.நா சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தது.. அப்போதிருந்து, காஸாவின் விரைவான சீரழிவை மாற்ற இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது மட்டுமல்லாமல், அதன் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. காஸா என்ற இந்த திறந்த சிறைச்சாலையை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மேற்கொண்ட முயற்சிகள் இன்னும் சிறிது காலம் வாழவைக்கும். கொரோனா வைரஸ் இப்போது காஸா முழுவதும் உள்ள அகதி முகாம்கள் மற்றும் சமூகங்கள் முழுவதும் பரவி வருவதால், உலகம் நம்முடைய துன்பங்கள் தொடர்பாக இன்னும் பாராமுகமாக, நடவடிக்கை எதுவும் எடுக்காது இனியும் காத்திருக்க முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று, பாலஸ்தீனியர்கள் “பேரழிவு” என்பதைக் குறிக்கும் நக்பா தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இது 1948 இல் பாலஸ்தீனத்தின் இன அழிப்பு மற்றும் பாலஸ்தீனிய சமுதாயத்தை முற்றிலுமாக அபகரித்த பேரழிவு நிலை ஒப்பந்தத்தை குறிக்கிறது.

இன்று, இஸ்ரேல் அதன் வழக்கமான இராணுவ தாக்குதல்கள், தினசரி குண்டுவெடிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு கண்காணிப்பு மூலம் இந்த பேரழிவு நிலையை தொடர்ந்து பராமரிக்க முயற்சிக்கிறது. அதன் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத தீர்வுக்கு எதிரான எமது அமைதியான போராட்டங்களை மிருகத்தனமாக அடக்குவதன் மூலம் இணக்கத்திற்கு நம்மை கட்டாயப்படுத்த முயற்சிக்கிறது. எங்களை “பயங்கரவாதிகள்” மற்றும் “காட்டுமிராண்டிகள்” என்று சித்தரிக்கும் ஊடக பிரச்சாரங்கள் மூலம் எமது குரல்களை அடக்க முயற்சிக்கிறது. அது அதனது மனித நேயத்தை மறந்து, சுதந்திரமாகவும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான எமது உரிமைக்காக போராடுவதை நிறுத்த முயற்சிக்கிறது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தை இவ்வளவு காலமாக பேரழிவு நிலையில் வைத்திருக்கிறது, இப்போது நமது நிலைமை “சாதாரணமானது” என்று உலகிற்கு காட்ட முயற்சிக்கிறது. ஆனால் நமது சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை அழிக்க இஸ்ரேல் தொடரும் முயற்சிகள் சாதாரணமான ஒன்றல்ல.

பாலஸ்தீனியர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி இஸ்ரேலின் காலனித்துவ கொள்கைகளை எதிர்த்து போராடுவார்கள், பின்னடைவின் மத்தியிலும் அழகிய போராட்ட கதைகளை உருவாக்குவார்கள். ஆனால் நிறவெறி தென்னாப்பிரிக்காவில் நடந்ததைப் போலவே, சர்வதேச சமூகத்தின் ஆதரவு இல்லாமல் சுதந்திரம், சமத்துவம் மற்றும் கௌரவமான நமது நீதியான, நியாயமான, தார்மீக போராட்டத்தை நாம் வெல்ல முடியாது.

இதனால்தான் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மீண்டும் மீண்டும் செய்துவரும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் அனுமதி மறுத்து அதனை தனிமைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். உலகம் தொடர்ந்து நம் நிலைமையை “இயல்பானது” என்று கருதி நடவடிக்கை எடுக்கத் தவறினால், விரைவில் அது காலம் கடந்துவிட்டது என்பதை உணர்ந்துகொள்ளும்.

https://www.aljazeera.com/indepth/opinion/world-stop-ignoring-happening-gaza-200908080221601.html?fbclid=IwAR3OC0EvnEMJF8qylONYrK9hnbVoYwP_lRLHA0xY–ePPpYolFkxWME40eo

தமிழில்: தாஹா முஸம்மில்

Scroll to Top
Scroll to Top